தனி வாக்காளர் பட்டியல்-தொகுதி தலித் மக்களுக்கு விடுதலை தேடித் தராது


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது மாநில மாநாடு முக்கியமாக விவாதித்த பிரச்சினைகளில் ஒன்று, சாதிய ஒடுக்குமுறையையும், தீண்டாமையையும் ஒழித்துக் கட்டும் இயக்கத்தை நாடு தழுவிய முறையில் வலுவாக்குவது பற்றிய பிரச்சினையாகும்.

மார்க்சிஸ்ட்டுகள் நடத்திய இரட்டை கிளாஸ் ஒழிப்பு முதல் கோவில் நுழைவு வரை சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான இயக்கங்களின் பொதுவான அனுபவம் என்னவென்றால், தலித் அமைப்புகளும், பிற்படுத்தப்பட்ட சாதிகளை திரட்டும் அரசியல் இயக்கங்களும் ஒத்துழைப்பு நல்குவதில்லை என்பதுதான். மாறாக திசை திருப்பும் முழக்கங்களை முன்வைத்து, சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை வலுவிழக்கச் செய்கின்றனர் என்பதுதான். தலித் அமைப்புகளும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அமைப்புகளும் பா.ம.க. போன்ற அரசியல் கட்சிகளும் ஒரே மேடையில் தோன்றினாலும் உண்மை நிலை வோறக உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கோவில் நுழைவு போராட்டத்தை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு நடத்தியபொழுது; ஒத்துழைப்பு நல்கிய பா.ம.க. பெரும் புள்ளிகள், பின்னர் தலித் மக்களை தொந்திரவு செய்தனர். சாதி வேறுபாட்டை முரண்பாடாக்கி மோதவிட்டனர். தலித் விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்வதை தடுத்தனர். இதேபோல் பல மாவட்டங்களில் தலித் அமைப்புகளின் தலைவர்கள், தலித் மக்கள் உயர்ந்து விட்டால் தங்களது பிடிமானம் போய் விடும் என்று பயந்து திசை திருப்பும் வேலைகளில் ஈடுபட்ட நிகழ்வுகளும் அங்கே கவனத்திற்கு வந்தது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியினரை பற்றி அவதூறுகள் பொழிவது; பித்தலாட்ட பிரச்சாரம் செய்வது பற்றிய தகவல்களும் கிடைத்தன.

ஜனவரி 22, 2005 அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில், திருமாவளவன் நடத்திய நான்காம் வட்ட மேசை மாநாடு என்ற பெயரில் மாநாடு நடத்தி உருவாக்கிய தனி வாக்காளர் தொகுதி – இரட்டை வாக்குரிமை என்ற முழக்கம் பற்றியும் அங்கே விவாதிக்கப்பட்டது. தலித் அமைப்புகளோடும், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் அமைப்புகளோடும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக வறுமைக்கும், பலரக சுரண்டலுக்கும் ஆளான மக்களை ஒன்றுபடுத்தி போராட வைப்பதில் மார்க்சிஸ்ட்டுகள் இணைந்து நின்றாலும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான இயக்கத்தை வலுவிழக்கச் செய்யும் முழக்கத்தையோ, சாதி மோதலை உருவாக்கும் நடவடிக்கைகளையோ இந்த அமைப்புகள் தூக்கிப் பிடிக்குமானால், அதனை அம்பலப்படுத்துவது மார்க்சிஸ்ட்டுகளின் கடமையாகும் என்று மாநாடு முடிவிற்கு வந்தது.

அந்த வகையில் தனி வாக்காளர் தொகுதி – இரட்டை வாக்குரிமை என்ற முழக்கம் திசை திருப்பும், தலித் மக்களின் முன்னேற்றத்திற்கு தடைகள் ஏற்படுத்தும் முழக்கமாகும் என்ற முடிவிற்கு ஆழ்ந்த பரிசீலனைக்குப் பிறகு வந்தது.

திருமாவளவன் நடத்திய 4வது வட்ட மேசை மாநாடு நிறைவேற்றிய தீர்மானம் கூறுவதென்ன?

… இடஒதுக்கீடுகள் தனித் தொகுதி எனும் பெயரில் நடைமுறையில் உள்ளன. அவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை தாழ்த்தப்பட்டோர் அல்லாத பிற சமூகத்தினருக்கும் வழங்கப்பட்டிருப்பதால், உண்மையான பிரதிநிதித்துவம் இடம் பெற முடியாத நிலை உள்ளது. தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மீதான இழிவுகள் மற்றும் வன்கொடுமைகள்; பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், சொத்து சூறையாடல்கள் போன்ற சாதிய அடக்குமுறைகள் பற்றி இன்றைய கூட்டு வாக்காளர் தொகுதி முறையால் தாழ்த்துப்பட்டோரல்லாதரால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் வாய் திறக்கவே முடியவில்லை. இதனால் சமூக – பொருளாதார தளங்களில் மட்டுமின்றி அரசியல் தளத்திலும் தாழ்த்தப்பட்டோர் தலை நிமிர முடியாத கேடு தொடர்கிறது.

இந்நிலை மாற்றவே புரட்சியார் அம்பேத்கார், மாவீரன் ரெட்டை மலை சீனிவாசன் ஆகியோர் இலண்டன் வட்ட மேசை மாநாட்டில் வாதாடி, போராடி இரட்டை வாக்குரிமையுடன் தனிவாக்காளர் தொகுதி முறையை வென்றெடுத்தனர். ஆனால் இந்துக்கள் ஒற்றுமை எனும் பெயரில் காந்தியடிகள் மேற்கொண்ட உண்ணாநிலைப் போராட்டத்தால், அவ்வுரிமைகள் முறியடிக்கப்பட்டன. அத்துடன் அப்போது உருவான பூனா ஒப்பந்தமும் தற்போது நடைமுறையில் இல்லை.

தாழ்த்தப்பட்டோருக்கான உறுப்பினர்களை தாழ்த்தப்பட்டோர் மட்டுமே வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும். 1932 ஆகஸ்ட் 12 அன்று ஆங்கிலேயே அரசு பிற்பித்த ஆணையில் உள்ளதைப் போல் மீண்டும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு வழங்கிடும் வகையில் தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென இம்மாநாடு இந்தியப் பேரரசை வலியுறுத்துகிறது.

மேற்கண்ட தீர்மானத்தை மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரகடனம் செய்ததின் மூலம் திருமாவளவன், தலித் மக்களை தனிமைப்படுத்தும் வழியை உருவாக்க முயற்சிக்கிறார். அதற்காக வரலாற்றையும் பெருமளவிற்கு சிதைத்து விட்டார்.

1932ல் வட்டமேசை மாநாட்டில் நடந்தவைகளை திருமாவளவன் திரித்துக் கூறுகிறார்.

அன்று பிரிட்டன் நாட்டு பிரதமராய் இருந்த ரம்சே மாக்டோனால்டு முன்மொழிந்த தனிவாக்காளர் தொகுதி சூத்திரத்தை அம்பேத்காரும் ரெட்டைமலை சீனிவாசனும் வாதாடி, போராடி பெற்றதாக திருமாவளவன் சித்தரிக்கிறார். இது வரலாறல்ல.

மூன்றாவது வட்டமேசை மாநாட்டில் இந்தியாவிலிருந்து சென்ற தலைவர்களிடையே நிலவிய கருத்து வேறுபாட்டை புரிந்து கொண்ட பிரிட்டிஷ் பிரதமர், இந்த சூத்திரத்தை வழங்கினார். இதன் மூலம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏதேனும் ஒரு வடிவில் நீடிக்க வழி செய்யும் என்பதை உணர்ந்தே வழங்கினார்.

இந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வழங்கிய சூத்திரப்படி முஸ்லீம்களுக்கும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கும் தனி வாக்காளர்கள் பட்டியல் உருவாக்கப்படும். பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் நிர்ணயிக்கப்படும். எங்கு இந்த வர்க்கத்தினர் அதிகமாக திரண்டு வாழ்கிறார்களோ அங்கு தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவர் இதுதான் பிரிட்டீஷ் பிரதமர் வழங்கிய சூத்திரம்.

இந்த சூத்திரத்தை அன்று யாரும் ஏற்கவில்லை. முஸ்லீம்கள் எதிர்த்தனர். காங்கிரஸ்காரர்களும் எதிர்த்தனர். தலீத் மக்களின் பிரதிநிதியான டாக்டர் அம்பேத்கர் மட்டும் எங்களது உரிமையை அங்கிகரிக்க மறுக்கிற பொழுது பிரிட்டீஷ் பிரதமர் சூத்திரத்தை ஏற்க தயார் என்றார். டாக்டர் அம்பேத்கார் இந்திய தலைவர்களை ஒற்றுமைப்படுத்த இவ்வாறு கூறினாரா? உண்மையிலேயே இதுதான் சரியான தீர்வு என்று கருதினாரா என்பதை வரலாற்று ஆசிரியர்களே தெளிவாக்கிட முடியும். ஆனால் இந்த அதிரடி அறிவிப்பால் இந்திய தலைவர்கள் கருத்து வேறுபாட்டை நீக்க விவாதிக்க தொடங்கினர். இதன் மூலம் அன்றைய தேதியில் பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது.

பூனா ஒப்பந்தம், பல வகையிலும் பிரிட்டீஷ் பிரதமர் வழங்கிய சூழ்ச்சி மிகு தீர்வை விட மிக, மிக மேலானது. வெள்ளை ஏகாதிபத்திய சூழ்ச்சிகளை மறைப்பதின் மூலம், அம்பேத்கார் வாதாடி, போராடி உருவாக்கிய பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை தமுக்கம் மைதான தீர்மானம் சிறுமைப்படுத்தி விட்டது.

பிரிட்டிஷ் பிரதமர் வழங்கிய சூத்திரப்படி, தலித் மக்களின் தனிவாக்காளர் பட்டியல், தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் என்பதற்கு மேல் எதுவுமில்லை. அரசாங்க பதவிகளில் கல்வியில் இடஒதுக்கீடு கிடையாது. அது பற்றி ரம்சே மாக்டோனால்டு சூத்திரம் மூச்சே விடவில்லை.

எண்ணிக்கையால் குறைவாக இருக்கும் தலித் பிரதிநிதிகளால் அரசியலில் நிர்ணயிக்கிற சக்தி ஆக முடியாத நிலை ஏற்படும். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சூத்திரத்தில் இருந்த பாதகங்களை உணர்ந்தே அம்பேத்கார் பூனா ஒப்பந்தத்தை ஏற்றார். அதன்படி தொகுதிகள் ரிசர்வ் செய்யப்படும், வாக்காளர் பட்டியல் பொதுவாக இருக்கும். கல்விக்கு நிதியுதவி, சலுகை, பதவிகளில் இடஒதுக்கீடு இவைகள் பிரிட்டீஷ் பிரதமர் வழங்கிய சூத்திரத்தில் இல்லாத புதிய அம்சங்கள். திருமாவளவன் தீர்மானம் காட்டுகிறபடி இந்த பூனா ஒப்பந்தம் இப்பொழுது முழுமையாக அமுலாகவில்லை என்பது வாஸ்தவமே. இடஒதுக்கீட்டில் கல்வியில், தனியார் துறையில் பூனா ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை. அதற்காக மார்க்சிஸ்ட்டுகள் போராடுகிறார்கள். ஆனால் திருமாவளவனோ பழைய பிரிட்டிஷ் பிரதமர் கூறியபடி தனி வாக்காளர் பட்டியல், தனி தொகுதி வேண்டும் என்பது புரட்டுகிற வேலையாகும்.

அம்பேத்கார் அதைவிட உயர்வான ஒன்றை பெற்று தந்த பிறகு தமுக்கம் மைதான 4வது வட்ட மேசை மாநாடு இந்தியாவை நிரந்தரமாக ஆளநினைத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சி நிறைந்த சூத்திரத்தை முன்வைப்பது ஏனென்று விளங்கவில்லை? திருமாவளவன் வரலாறு தெரிந்துதான் பேசுகிறாரா என்பதை அவர்தான் விளக்கிட வேண்டும். ஏனெனில் 1932ல் ரம்சே மாக்டோனால்டு கூறிய இதே சூத்திரத்தைத்தான் தென் ஆப்பிரிக்க நிறவெறி அரசு 1953 பண்டுஸ்தான் சட்டம் இயற்றியது. தனித் தொகுதி தனி வாக்காளர் பட்டியல் என்று கருப்பு இன மக்களை தென்னாப்பிரிக்காவின் ஒரு மூலையில் ஒதுக்கித் தள்ளி விட்டது. அன்று ஏகாதிபத்தியவாதிகளே இந்தியாவை பாகிஸ்தான், இந்தியா என்று பிரிய சூழ்ச்சி செய்தனர். திருமாவளவனின் தமுக்கம் தீர்மானம் மேலும் துண்டாட வழிகோலுகிறது.

எல்லாவற்றையும் விட, இந்தியாவில் வேறு எந்தப் பகுதியிலும், தலித் அமைப்புகள் இதுவரை யோசிக்காத ஒன்றை தமிழ்நாட்டில் இருக்கும் சில தலித் தலைவர்கள் ஏராளமாக பணத்தை செலவழித்து மாநாடு நடத்தி முழங்குவதின் மர்மத்தை அவர் தான் துலக்க வேண்டும். போபலில் கூடிய தலித் அமைப்புகளின் மாநாடு விவாதிக்காத, வெள்ளை ஏகாதிபத்தியம் முன்வைத்த ஒரு சூத்திரத்தை திருமாவளவன் யாரை திருப்திபடுத்த முழக்கமாக்குகிறார் என்பது இப்பொழுது தெரியவில்லை. ஆனால் இந்த மோசமான தீர்வை அவர் திரும்பப் பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அவர் கருதுகிறபடி தலித் மக்கள் என்பது ஒரு சாதியல்ல; இனமல்ல; இன்றைய சமூகத்தின் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதி. அதனுடைய நவீன சிந்தனை இந்த பாடாவதியான சூத்திரத்தை ஏற்காது தூக்கி எறியும் என்பது திண்ணம்.

அனுபவங்கள் கூறுவதென்ன?

அம்பேத்காரும், காந்தியும் ஏற்றுக் கொண்ட பூனா ஒப்பந்தத்தோடு, மார்க்சிஸ்ட்டுகள் முன்வைக்கிற நிலவிநியோகமும், கறாராக பின்பற்றினால்தான் சாதிய ஒடுக்குமுறை ஒழியும். கிராமப்புற வறுமை ஒழியும் என்பதில் சந்தேகமில்லை.

மேற்குவங்கம், திரிபுரா, கேரள இடதுசாரி அரசு அம்பேத்கார் உருவாக்கிய புனா ஒப்பந்தத்தை கறாராக அமுல்படுத்துவதோடு நின்று விடவில்லை. நிலவிநியோகமும் செய்து கிராமப்புற மக்களை சுரண்டும் வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து பாதுகாப்பை பெற உத்திரவாதமளித்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை விரிவுபடுத்தியதன் மூலம் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், முன்னேறவும், ஆற்றல் மிகு சுதந்திர மக்களாக ஆகி வருகின்றனர்.

தலித் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியின் தலைவர்கள் தவறான பாதையில் செல்கிற பொழுது தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைப் பேணுகிற மார்க்சிஸ்ட்டுகள் சுட்டிக்காட்ட தயங்க மாட்டார்கள். இந்த படிப்பினையை மாநாட்டு பிரதிநிதிகள் தந்தனர் என்றாலும் மிகையாகாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s