கேள்வியில் பிறந்த வரலாற்றுச் சித்திரம்


Guns Germs and Steel

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி பால் மயர்ஸ் இவ்வாறு கூறுகிறார். என்னுடைய நாட்டை வேறொரு நாடு கைப்பற்றி விட்டதாக வைத்துக் கொள்வோம். உடனே நாட்டை விட்டு வெளியேறியதாக வேண்டும். உடமைகள் அனைத்தையும் விட்டு விட்டுச் செல்ல வேண்டும். ஆனால் 7 அல்லது 8 புத்தகங்களை மட்டும் எடுத்துச் செல்ல முடியும். புத்தகங்களை தேர்வு செய்ய 5 நிமிடங்கள் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில் என்னுடைய பட்டியலில் முதலில் இடம் பெறுவதுஜேரட் டயமண்ட் எபதிய கன்ஸ் ஜெர்ம்ஸ் அண்ட் ஸ்டீல் என்கிற புத்தகமே. பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ள இப்புத்தகம் வரலாற்றை நவீன அறிவியல் துறைகளான மரபணுவியல், பரிணாம உயிரியல் மற்றும் புவியியல் ஆகியவற்றின் பின்னணியில் அலசி ஆராய்கிறது. இதுவரையில் நமக்கு அறிமுகமான உலக வரலாற்று நூல்கள் பலவும் ஐரோப்பா அல்லது ஆசியா அல்லது இவையிரண்டும் இணைந்த யுரேசியப் பகுதியை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டவை. மனித சமூகத்தின் துவக்க கால வரலாற்றில் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், தென் கிழக்கு ஆசியா ஆகியவற்றைப் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பது மிகக் குறைவே. மேலும் எழுத்து வடிவம் தோன்றிய சுமார் 5000 ஆண்டுகளுக்கு பிற்பட்ட வரலாற்றுக் காலத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மனித சமூகத்தின் மிக நீண்ட நெடிய பயணத்தில் இது ஒரு சிறிய பகுதியே. சில ஆயிரம் ஆண்டுகால வரலாறு மட்டுமே மனித சமூகத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளப் போதுமானதல்ல.

நவீன சமூகத்தின் வளர்ச்சிக்கான நாகரீகத்தின் தொட்டில்கள் என்பவை ஐரோப்பாவும், ஆசியாவும் இணைந்த யுரேசியாவில் ஏன் முதலில் தோன்றின? அரசுகள், நகரங்கள், உலோகக் கருவிகள், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு போன்றவை இங்கு ஏன் முதலில் தோன்ற வேண்டும்? பூர்வகுடிகள் வாழ்ந்து வந்த வட, தென் அமெரிக்கப் பகுதிகளிலும், மத்திய, தென் ஆப்பிரிக்க பகுதிகளிலும், பல்லாயிரம் அண்டுகளுக்கு முன்பே மனிதன் குடியேறிய ஆஸ்திரேலியாவிலும் ஏன் இவையெல்லாம் முதலில் தோன்றவில்லை? ஐரோப்பியர்களும், ஆரியர்களும் இவர்களை விட அறிவில் மேம்பட்டவர்களா? மேலும் கி.பி. 1400 வரை ஐரோப்பாவைக் காட்டிலும் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கிய சீனாவில் ஏன் முதலாளித்துவமும், தொழிற் புரட்சியும் உருவாகவில்லை? இதுபோன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியாக உருவாகியுள்ள நூல் துப்பாக்கிகளும், கிருமிகளும், இரும்பும் (Guns Germs And Steel) என்னும் இந்த நூல். உயிரியல் அல்லாத மரபணு ரீதியாக குறிப்பிட்டுச் சொல்லும் படியான எந்த வித சிறப்புத் தகுதியும் இல்லாத ஐரோப்பியர்களால் கடந்த 500 ஆண்டுகளாக உலகின் மீது எவ்வாறு ஆதிக்கம் செலுத்த முடிந்தது என்ற பிரதான கேள்வியை முன்வைத்து இனவாதக் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நவீன அறிவியல் துறைகளின் பின்புலத்தோடு ஜேரட் டயமண்ட் இந்தப் புத்தகத்தைப் படைத்துள்ளார். இவர் அமெரிக்க நாட்டில் பெரிதும் மதிக்கப்படும் பல்துறை அறிஞர். தற்சமயம் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் புவியியல் துறைப் பேராசிரியராக இருக்கும் இவர் இதற்கு முன்பு அங்கு மருத்துவக் கல்லூரியில் உடற் கூறியல் பேராசிரியராக பணியாற்றியவர். சுற்றுச் சூழலியல், அணுத்திரள் உயிரியல் மற்றும் பரிணாமக் கோட்பாடு உயிரியல் ஆகிய துறைகளிலும் ஆழ்ந்த புலமை படைத்தவர். ஆஸ்திரேலியாவிற்கு வடமேற்கே அமைந்துள்ள பாப்புவா நியூ கினியா தீவில் நீண்ட காலம் தங்கி அவர் மேற்கொண்ட ஆய்வுகளே இந் நூலை எழுத தன்னைத் தூண்டியதாக கூறுகிறார்.

நியூ கினியாவைச் சேர்ந்த பழங்குடி சமூகத்தின் தலைவர்களில் ஒருவரான யாலி என்பவர் இவரை நோக்கி கேட்கும் ஒரு சாதாரணமான கேள்வியே ஒரு விரிந்த வரலாற்று நூலுக்கு களமாகிறது. வெள்ளையர்களான நீங்கள் ஏராளமான சரக்குகளை இங்கு கப்பல்களில் கொண்டு வந்து இறங்கும் போது கருப்பவர்களான எங்களிடம் அதுபோல் அனுப்புவதற்கு ஒரு கப்பல் நிறையக் கூட சரக்குப் பொருட்கள் இல்லையே ஏன்? என்கிற கேள்வி மிகச் சாதாரணமாகத் தோன்றினாலும், இதற்கான பதிலைத் தேடும் போது உருவானவைதான் ஏற்கனவே முதலில் குறிப்பிட்ட பல கேள்விகள். வரலாற்றின் மேலடுக்குகளில் மட்டும் தேடினால் இவற்றுக்கு விடை காண முடியாது. வெங்காயத்தை உரித்தால் வரும் அடுக்குகளைப் போல வரலாறும் வெவ்வேறு அடுக்குகளைக் கொண்டது. அதன் வெவ்வேறு அடுக்குகளில் நமக்கான உண்மைகளைத் தேடியலைய வேண்டியுள்ளது. வரலாறும் ஒரு வகையில் வெங்காயம் போன்றதுதான் என்கிறார் டயமண்ட்.

உலக வரலாற்றை சுமார் 13,000 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்தே பார்க்கத் துவங்குவதுதான் பல கேள்விகளுக்கு விடையளிக்க உதவும் என்கிறார் டயமண்ட். மனித இனத்திற்கு அதற்கு முன்பும் ஒரு வரலாறு உண்டு. சுமார் 50 லட்சம் ஆண்டுகளிலிருந்து மனித இனம் பரிணமித்த வரலாற்றுக் கால கட்டத்திலிருந்து பல உண்மைகளைத் தேடியலைய வேண்டியுள்ளது. உலகில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பனியுகம் முடிவுக்கு வந்த கால கட்டத்தில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் நவீன மனித இனம் குடியேறி விட்டது. சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் ஒரு சில இடங்களில் தோன்றி விட்டன. ஆயினும் பெரும் பகுதியினர் வேட்டை சமூகமாகவே வாழ்ந்து வந்தனர்.

உலகின் முதன் வேளாண் சமூகங்கள் தோன்றிய இடம் தென்மேற்கு ஆசியப் பகுதியாகும். ஜோர்டான், சிரியா, துருக்கி, ஈரான் ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கிய மலைகள் நிறைந்த வளைவான நிலப்பகுதி வளமான பிறை நிலாப் பகுதி என்றழைக்கப்படுகிறது. உலகின் முதல் விவசாயக் குடியிருப்பான ஜெரிகோ என்கிற இடமும் இங்குதான் உள்ளது. சுமார் 10,500 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதிகளில் காட்டுப் பயிர்களாக விளங்கிய ஒரு வகை கோதுமையும், பட்டானியும் வேளாண்மை உணவுப் பயிர்களாக மாறின. இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் சுயேச்சையாக அரிசியும், திணையும் உணவுப் பயிராக மாற்றப்பட்டது. இதற்கு சுமார் 66,000 ஆண்டுகளுக்குப் பிறகே அமெரிக்காவில் சோளமும், பீன்சும் உணவுப் பயிர்களாகின. ஆண்டஸ் மற்றும் சுமேசான் பகுதிகளில் உருளைக் கிழங்கு பயிரிடப்பட்டது. முதன் முதலாக உணவு உற்பத்திக்காக வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் உருவான தென் மேற்கு ஆசியாவிலும், சீனாவிலும் தான் முதன் முதலாக மனித இனத்தின் நிரந்தரக் குடியிருப்புகளும் பின்னர் அரசுகளும் முதலில் தோன்றின. வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றால் அதிகரித்த உணவு உற்பத்தி மக்கள் தொகையையும் பெருக்கியது. இத்தகைய மாறுதல்கள் முதலில் யுரேசியப் பகுதிகளில் ஏற்பட்டதற்கு காரணம் இயற்கையாக அமைந்த அனுகூலங்களே என்கிறார் ஜேரட் டயமண்ட்.

காடுகளில் விளைந்த 53 தானிய வகைகள் உணவுக்கு ஏற்றதாக அறியப்பட்டவை. இவற்றில் 43 யுரேசியப் பகுதிக்கு சொந்தமானவை. அது போல கால் நடைகளாக பழக்கப்படுத்தப்பட்ட 5 விலங்கினங்கள் முக்கியமானவை. செம்மறியாடு மேற்கு மற்றும் மத்திய ஆசியாவின் காடுகளிலிருந்து கால் நடையாக உருவாக்கப்பட்டது. வெள்ளாடு மேற்காசியாவிற்கு சொந்தமானது. பன்றி யுரேசியா, வட ஆப்பிரிக்காவில் காட்டிலிருந்து பிடிக்கப்பட்டு வீட்டு விலங்காக மாறியது. மாடு யுரேசியா மற்றும் வட ஆப்பிரிக்காவின் காடுகளிலிருந்து கால் நடையாக மாறியது. குதிரை தெற்கு ரஷ்யாவிலிருந்து பிற பகுதிகளுக்கு பரவியது.

வேளாண்மையின் வளர்ச்சிக்கு கால் நடைகளின் பங்கு மிக முக்கியமானது. நிலத்தைக் கீறி விதைகளை விதைப்பதற்கு பதில் விலங்குகளை ஏரில் பூட்டி உழுவது உணவு உற்பத்தியை அதிகரித்தது. மிக நீண்ட தூரம் பயணம் செய்து இடம் பெயர்ந்து உழவும் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் உதவின. மேலும் கூடுதலான புரதச் சத்தை விலங்குகளின் மாமிசத்திலிருந்தும், பாலிலிருந்தும் பெற முடிந்தது. வேளாமைக்கு ஏற்ற வகையில் காட்டுப் பயிர்களிலிருந்து உணவுப் பயிர்களை உருவாக்கியதும், காட்டில் திரிந்த விலங்குகளை வீட்டு விலங்குகளாகவும், கால் நடைகளாகவும் வசப்படுத்தியது. உணவு உற்பத்தியில் யுரேசியப் பகுதியில் வாழ்ந்த சமுகங்களில் மிகப்  பெரிய பாய்ச்சலை உருவாக்கியது. ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் விலங்குகள் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.

ஆப்பிரிக்காவின் காண்டா மிருகமும், வரிக் குதிரையும் ஆஸ்திரேலியாவின் கங்காருவும் மனிதன் பழக்கி வசப்படுத்த முடியாத விலங்குகளாகவே இன்று வரை உள்ளன. யானை கூட இன்னும் முழுமையாக வசப்படுத்த முடியாத ஒரு பிடிக்கப்பட்ட காட்டு விலங்குதான். அது எப்போது வேண்டுமானலும் அதன் இயற்கையான குணத்திற்கு மாறிவிடும் அபாயம் உண்டு. வீட்டு விலங்குகள் மற்றும் கால் நடைகள் என்பவை மனித இனம் தனக்கு ஏற்ற வகையில் உயரம், நிறம், பாலின் அளவு, இறைச்சியின் அளவு போன்றவற்றை செயற்கைத் தேர்வின் மூலம் உருவாக்கியதாகும். இன்றைய நாய்கள் அனைத்துமே செய்கைத் தேர்வின் மூலம் யுரேசியாவிலும், வட அமெரிக்காவிலும் தனித்தனியே ஓநாய்களிலிருந்து உருவாக்கப்பட்டவைதான். மேலும் மனித இனம் அமெரிக்க கண்டத்திற்கும், ஆஸ்திரேலியாவிற்கும், நியூசிலாந்திற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய போது அங்கு வீட்டு விலங்குகளாக பழக்கப்படுத்துவதற்கு ஏற்ற விலங்குகள் இருந்தன. ஆனால் அங்கு குடியேறிய மனிதர்கள் அவை அனைத்தையும் உணவிற்காக வேட்டையாடி அழித்து விடடனர். அமெரிக்க கண்டத்தில் பழக்குவதற்கு ஏற்ற விலங்கினமாக மிஞ்சியது லாமா என்ற சிறிய வகை ஒட்டகம் மட்டுமே எனவேதான் யுரேசியப் பகுதிகளில் சூழல் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புக்கான சூழல் பின்னர் அங்கு சுமேரிய, எகிப்திய, ரோமானிய, கிரேக்க, சிந்து சமவெளி, சீன நாகரீகங்களுக்கு வித்திட்டன.

விலங்குகள் பழக்கப்பட்டு அவை மனித சமூகத்தோடு இணைந்த போது அவை நோய்க்கிருமிகளையும் கொண்டு வந்து சேர்த்தன. வேளாண் சமூகம் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் இறந்தனர். வேட்டைச் சமூகத்திலிருந்து வேளாண்மைச் சமூகத்திற்கு மாறியபோது மனித இனம் பேரழிவுகளைச் சந்தித்தது. இத்தகைய நோய்க்கிருமிகளால்தான் உதாரணமாக கி.பி. 165 முதல் 180 வரை ரோமாபுரியில் பரவிய பெரியம்மை நோயில் பல லட்சக்கணக்கானவர்கள் மாண்டனர். பொதுவாக விலங்குகள் மூலம் பரவிய இத்தகைய தொற்று நோய்களுக்கு காரணமான கிருமிகள் நீடித்து வாழ மக்கள் ஒரே இடத்தில் திரளாக வாழ்வது ஒரு முன்தேவையாகும். வேளாண் சமூகத்தில் மக்கள் தொகைப் பெருக்கமும், ஒரே இடத்தில் திரளான மக்கள் குடியிருப்பும், விலங்குகளுடன் ஏற்பட்ட நெருங்கிய உறவும் பல வகையான தொற்று நோய்கள் உருவாகவும், பரவவும் வாய்ப்பளித்தன. எனினும் இத்தகைய கொடிய நோய்களில் தப்பிப் பிழைத்தவர்களிடம் இதற்கான நோய் எதிர்ப்புச் சக்தியும் உருவானது. எனவேதான் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு முதலில் உருவாக்கிய யுரேசியப் பகுதிகளில் இத்தகைய தொற்று நோய் எதிர்ப்புச் சக்திகளை மரபணு ரீதியாகப் பெற்ற மக்கள் சமூகம் உருவாகியது. ஆயினும் இவர்கள் இத்தகைய எதிர்ப்புச் சக்திகளை உடலில் பெற்றிராத மக்கள் சமூகத்தை தொடர்பு கொண்டபோது அந்தப் புதிய பகுதியில் இதுவரை அந்த நோய்களால் தாக்கப்படாத மக்கள் மாண்டனர். ஸ்பானியர்கள் அமெரிக்க கண்டத்தைச் சென்றடைந்த போது அவர்களுடன் ஏற்பட்ட போரில் மாண்ட செவ்விந்தியர்களைக் காட்டிலும் பல லட்சம் பேர் தொற்று நோயால் மடிந்தனர். உதாரணமாக ஹிஸ்பானியோலா என்ற அமெரிக்கப் பகுதியை ஸ்பானியர்கள் கி.பி. 1482ல் சென்றடைந்த போது அங்கிருந்த செவ்விந்தியர்களின் எண்ணிக்கை 80 லட்சம் கி.பி. 1535இல் ஒருவர் கூட பாக்கியின்றி தொற்று நோய்களால் அழிந்தனர்.

வரலாற்றில் சமூக வளர்ச்சியை அல்லது வலியை தீர்மானித்த மற்றொரு அம்சம் மொழியின் எழுத்து வடிவம். உலகில் சுமேரியா, சீனா, எகிப்து, மெக்சிகோ ஆகிய பகுதிகளில் தனித்தனியே மொழிகளின் எழுத்து வடிவங்கள் தோன்றின. பின்னர் பிற பகுதிகளுக்கும் பரவின. நிலைத்து ஓரிடத்தில் வாழும் வேளாண் சமூகத்தில் உணவு உற்பத்தியும், அரசியல் நிர்வாக அமைப்புகளும் உருவான பிறகே மொழிக்கான எழுத்து வடிவத் தேவை உருவாகியது.

வேளாண்மையும், காட்டு விலங்குகளை பழக்கி வசப்படுத்தியதும், மொழியின் எழுத்து வடிவமும், மையப்படுத்தப்பட்ட அரசியல் நிர்வாக அமைப்புகளும் யுரேசியப் பகுதியில் தோன்றி விரைவில் அதன் பிற பகுதிகளுக்கும் பரவியதற்கான காரணம் அதன் இயற்கையான புவியியல் அமைப்பு என்கிறார் ஜே. டயமண்ட். ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்த யுரேசியப் பகுதியின் கிழக்கிலிருந்து மேற்கு வரை செல்லும் கிடைக் கோட்டுப் பகுதி கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பருவ நிலை கொண்டது. மிக நீண்ட பகுதியான இதில், தென்மேற்கு ஆசியாவிலிருந்து மேற்கு ஐரோப்பா வரையிலும், ஆசியாவின் கிழக்கெல்லை வரையிலும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பொருத்தமான பயிர் வகைகளும், கால் நடைகளும் பரவுவது மிகக் குறுகிய காலதில் அதாவது சில ஆயிரம் ஆண்டுகளுக்குள்ளேயே நடந்து முடிந்தது. ஆனால் ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கிழக்கிலிருந்து மேற்காக அல்லது கிடைக்கோட்டுப் பகுதியில் வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் பரவுவதற்கு குறுகலான புவி அமைப்பு தடையாக உள்ளது. இங்கு இத்தகைய பரவுதல் செங்கோட்டு நிலையில், அதாவது வடக்கிலிருந்து தெற்காக நிகழ்ந்தாக வேண்டும். இது புவி அமைப்பும், மாறுபட்ட பருவ நிலையும் தடையாக உள்ளன. எனவேதான் ஆப்பிரிக்க, அமெரிக்க கண்டங்களில் வேளாண் சமூகங்கள் பரவுவதும், அரசியல் நிர்வாக அமைப்புகள் உருவாவதும் மிகவும் பிற்காலத்திலேயே ஏற்பட்டன. இங்கு இரும்பின் பயன்பாடு ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்பே அறிமுகமானது. ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்க்க இயலாமல் மாயன் நாகரீகமும், அஸ்டெக் நாகரீகமும் அழிந்து போனதற்கு முக்கிய காரணம் ராணுவ பலத்தில், ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் அவர்கள் மிகவும் பின்தங்கியிருந்ததுதான். குதிரைகளின் பயன்பாடு, குறிப்பாக ராணுவத்தில் அதன் பயன் அவர்கள் அறியாத ஒன்று. மிக நிண்ட காலத்திற்குப் பிறகே ஐரோப்பியர்களிடமிருந்து தப்பியோடிய குதிரைகளைப் பிடித்து இனப்பெருக்கம் செய்து அவற்றை  செவ்விந்தியர்கள் பயன்படுத்தினர்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜித் தீவு மற்றும் பசிபிக் தீவுகளில் வாழ்ந்த மக்கள் மிகச் சமீபகாலம் வரை வேட்டைச் சமூகமாகவும், ஒரு சில பகுதிகளில் மட்டும் வேளாண் சமூகமாகவும் வாழ்ந்து வந்தனர். அங்கு உருவாகியுள்ள இனக்குழு சார்ந்த அரசியல் நிர்வாக அமைப்புகள் மிகச் சமீப காலத்தில் உருவானவையே. மேலாதிக்கத்திற்கான இனக்குழுக்களிடையிலான போர்களும், மையப்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்புகள் உருவானதும் சமீபகாலத்திலேயே வரலாறாக பதிவாகியுள்ளது. கடந்த 1300 ஆண்டுகளாக மனித சமூகத்தின் போக்கு மிக எளிமையான, சிறிய சமூக இனக்குழு அமைப்புகளை, சிக்கலான, வலுவான அரசியல் அமைப்புகள் வந்து மாற்றியமைப்பதாகவே உள்ளது. மக்கள் தொகை பெருக்கப் பெருக சமூக அமைப்புகள் சிறு குழுக்களாக இயங்க இயலாது. எனவே இயல்பாகவே இத்தகைய குழுக்கள் ஒன்றிணைந்து தங்களுக்குள் ஓர் ஒன்றிணைந்த அரசியல் நிர்வாக அமைப்பை உருவாக்கிக் கொள்கின்றன; அல்லது போர்கள் மூலம் வலுவான சமூகம் வலுக் குறைந்த சமூகத்தை தன்னுடன் இணைத்துக் கொள்கிறது; அல்லது கொன்றழிக்கிறது.

வரலாற்றில் முதன்மையான மையப்படுத்தப்பட்ட வலுவான அரசு நிர்வாக அமைப்பிற்கு சீனாவை உதாரணமாகக் கூற முடியும். கி.மு. 221ஆம் ஆண்டிலேயே சீனா ஓர் ஒன்றுபட்ட அரசியல் அமைப்பாக உருவாகி விட்டது. அங்கு உருவான எழுத்து முறை நாடு முழுவதற்கும்  ஒரே மாதிரியாக அமைந்தது. ஆனால் ஐரோப்பாவில் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட எழுத்து வடிவங்கள் உருவானது. இன்று 120 கோடி சீன பக்கங்களில் 80 கோடி மக்கள் மாண்டரின் மொழி பேசுகின்றனர். சுமார் 30 கோடிப் பேர் மாண்டரின் மொழிக்கு நெருக்கமான 7 வகை மொழிகளைப் பேசுகின்றனர். ஆயினும் இதையெல்லாம் வைத்து சீன மக்கள் அனைவரும் மரபணு ரீதியாக ஒரே வகையானவர்கள் என்று முடிவுக்கு வந்தால் அது தவறானது. வட பகுதியில் வாழும் சீனர்களும், தென் பகுதி வாழ் சீனர்களும் மரபணு ரீதியாக உருவத்திலும், நிறத்திலும், முக அமைப்பிலும் மாறுபட்டவர்கள். 40,000 ஆண்டுகளுக்கு முன்பே நியூ கினியா தீவில் மனிதர்கள் குடியேறி விட்டனர். அங்கு இன்றும் ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. இந்தோ – ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த 40 மொழிகளை மேற்கு ஆப்பிரிக்காவில் பேசுகிறார்கள். இதற்குப் பொருள் சீனாவில் மட்டும் ஆரம்பத்திலிருந்தே ஒரே மொழி மட்டும் இருந்தது என்பதல்ல; மற்ற மொழிகள் எல்லாம் கால வெள்ளத்தில் மறைந்து அங்கு மாண்டரின் மொழி நிலைத்து விட்டது என்பதே அதன் பொருள்.

உலகில் உள்ள கண்டப் பகுதிகளுக்கிடையிலான இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் வேறுபாடுகள் மனித சமூகத்தின் வளர்ச்சியை பாதித்தன. அவற்றில் முக்கியமான நான்கு அம்சங்களை ஜேரட் டயமண்ட் வகைப்படுத்துகிறார்.

முதலாவது, காடுகளில் விளைந்த பல்வேறு தாவர இனவகைகளைத் தேடியலைந்து உணவுப் பயிர்களை உருவாக்கியது காட்டு விலங்குகளிலிருந்து வீட்டு விலங்குகளையும், கால் நடைகளையும் உருவாக்கியது. இது உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்தது. உணவு உற்பத்தியில் நேரடியாக ஈடுபடாத சமூகத்தின் பல்வேறு வகையான வல்லுநர்களுக்கும், ராணுவத்திற்கு அளிப்பதற்கு உபரியாக உணவு உற்பத்தி தேவை. எனவேதான் சமூக ரீதியில் வர்க்கங்களாக பிரிக்கப்பட்ட, மையப்படுத்தப்பட்ட, பொருளாதார ரீதியில் சிக்கலான பல்வகைத் தன்மையுடன் கூடிய, சமூக அமைப்புகள், சிறிய இனக்குழு அமைப்புகளை விட உணவு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்தன. ஆயினும் எல்லா வகையான பயிர்களையும், விலங்குகளையும் வசப்படுத்த முடியவில்லை. ஒரு சிலதை மட்டுமே வசப்படுத்தப்பட்டன. இவை கண்ட அமைப்புகளுக்கு ஏற்ப மாறுபட்டன. மிக அதிகமான தாவர, விலங்கினங்களை பயன்படுத்தும் வகையில் யுரேசியா இயற்கையான அனுகூலங்களைப் பெற்றிருந்தது.

இரண்டாவது, வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் அதையொட்டிய மனிதக் குடியேற்றமும், யுரேசியாவின் கிழக்கு, மேற்கான கிடைக்கோட்டு அச்சு இதற்கு பெருமளவில் உதவியது. இங்கு புவியியல் தடைகளும் குறைவு. ஆனால் அமெரிக்க, ஆப்பிரிக்க கண்டங்களில் வடக்கு, தெற்கான செங்கோட்டு அச்சும், புவியியல் ரீதியான தடைகளும் மேற்சொன்ன அம்சங்களை பரவ தடைகளாக அமைந்தன.

மூன்றாவது, ஒரு கண்டப் பகுதியிலிருந்து மற்றொரு கண்டத்திற்கு இத்தகைய தொழில் நுட்பங்கள் பரவுவது. இதில் யுரேசியாவிலிருந்து 6000 ஆண்டுகளில் வட ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதி வரை கால் நடை வளர்ப்பும், வேளாண்மையும் பரவின. ஆனால் கடலால் தனியாகப் பிரிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவிற்குள் இத்தகைய பரவல் நிகழவில்லை. மேலும் அங்கு நிலவிய பருவ நிலையில், வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரிப்பு ஆகியவற்றுக்கு மட்டுமே உகந்ததாக இருந்தது. தண்ணீரால் பிரிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவிற்கு யுரேசியப் பகுதிகளிலிருந்து சென்றது டிஸ்கோ என்றழைக்கப்படும் நாயினம் மட்டுமே.

நான்காவது, கண்டங்களின் பரப்பளவும், மக்கள் தொகையும் பரந்த நிலப்பகுதியும், அதிகமான மக்கள் தொகையும் அதிகமான கண்டுப்பிடிப்புகளை ஊக்குவிக்கும் காரணிகளாகும். யுரேசியாவின் நிலப் பரப்பும், மக்கள் தொகையும் அதிகக் கண்டுப் பிடிப்புகளை ஊக்குவித்தன. ஆஸ்திரேலிலியாவிலும், நியூ கினியாவிலும், டாஸ்மேனியாவிலும் இத்தகைய சாதகமான அம்சங்கள் நிலவாத காரணத்தால் அங்கு கண்டுபிடிப்புகள் எதுவும் பெரியதாக நிகழவில்லை.

புவியியல் ரீதியாக இத்தகைய நிர்ணயிப்புகளை முன்வைப்பதன் மூலம் வரலாற்று அறிஞர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகக் கூடும் என்பதை டயமண்ட் உணர்ந்தே உள்ளார். மனிதர்களை தாவரங்கள், விலங்குகள் மற்றும் பருவநிலை ஆகியவற்றால் உருவாக்கப்படும் ரோபோக்களாக தான் பார்ப்பதாக விமர்சிக்கப்படுவதையும் எதிர்பார்க்கிறார். அவரைப் பொருத்தவரையில் மனிதர்களின் தேடல் முயற்சி உலகம் முழுவதற்கும் பொதுவானது. ஆனால் சூழ்நிலை சிலருக்கு அதிகமான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. அவ்வகையில் பூகோளச் சூழலையும் பார்க்க வேண்டும் என்கிறார்.

யாலி என்கிற இனக்குழுத் தலைவர் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் அளிப்பதற்காக இவ்வளவு தகவல்களை அளித்த பின்பும் ஒரு கேள்வி மிஞ்சுகிறது. அது யுரேசியாவின் தென் மேற்கு ஆசியா அல்லது சீனா அல்லது இந்தியா போன்ற காலனியாதிக்க சக்திகளாக மாறுவதற்கு பதிலாக ஐரோப்பா எவ்வாறு ஓர் காலனியாதிக்க சக்தியாக மாறியது? என்பது வரலாற்றில் 10,000 வருடங்களுக்கு முந்தைய ஐரோப்பா மிகவும் பின் தங்கிய பகுதியாகவே இருந்தது. கி.மு. 500இல் கிரேக்க நாகரீகம் துவங்குவது வரை இது நீடித்தது. கி.பி. 900 வரையில் ஐரோப்பாவில் பெரிய கண்டுபிடிப்புகள் எதுவும் நிகழவில்லை. கி.பி. 1000 முதல் 1450 வரை அறிவியலும், தொழில் நுட்பமும் இந்தியா முதல் வடக்கு ஆப்பிரிக்கா வரையிலான பகுதிக்குள் இஸ்லாமிய சமூகத்திலிருந்து நுழைந்தன. இதே கால கட்டத்தில் சீனாவும் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கியது.

சீனாவும், தென் மேற்கு ஆசியாவும் ஏன் பின்தங்கி விட்டன? முதலில் ஐரோப்பாவின் எழுச்சிக்கு சில காரணங்களை குறிப்பிட முடியும். அங்கு ஏற்பட்ட வணிக வர்த்தகத்தின் வளர்ச்சி, முதலாளித்துவத்தின் தோற்றம், கண்டு பிடிப்புகளுக்கான உரிமைப் பாதுகாப்பு, முழுமையான சர்வாதிகாரமும், கடுமையான வரிச் சட்டங்களும் தோன்றாதது, கிரேக்க – யூத – கிறிஸ்துவ பாரம்பரியத்தின் எதையும் கேள்விக் குள்ளாக்கும் முறை போன்றவற்றைக் கூறலாம். இவையெல்லாம் முக்கியமான காரணங்களாக முன்வைக்கப்பட்டபோதும் அதிலிருந்து பிறக்கும் முக்கியமான கேள்விகள் இத்தகைய காரணங்கள் ஏன் ஐரோப்பாவில் தோன்ற வேண்டும்? சீனாவிலும், தென் மேற்கு ஆசியாவிலும் ஏன் தோன்றவில்லை? என்பவையாகும்.

உலகல் முதன் முதலாக வேளாண்மைச் சமூகம் உருவான தென் மேற்கு ஆசியாவின் வளமான பிறை நிலப் பகுதியில் இதற்கான காரணஙகளை தெளிவாகக் காண முடிகிறது. துவக்க காலத்தில் இங்கு உருவான பாபிலோன், அஸ்ஸிரியா, பெர்சியா ஆகிய அரசுகள் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் அலெக்ஸாண்டரின் படையெடுப்பிற்கு பின்பு வலுவிழந்தன. கி.மு. 2ஆம் நூற்றாண்டில் கிரிஸ் வலுவிழந்து ரோமப் பேரரசு வலுவடைந்தது. மேலும் வேளாண்மை துவங்கிய ஆரம்ப காலத்தில் மத்திய தரைக்கடல் பகுதியின் கிழக்காக அமைந்துள்ள இப்பகுதியில் அடர்ந்த காடுகள் இருந்தன. வேளாண் சாகுபடிக்காகவும், மரங்களுக்காகவும் இங்குள்ள காடுகள் மிக வேகமாக அழிக்கப்பட்டன. பின்னர் மழையின்றி இப்பகுதி ஒரு வறண்ட பாலைவனமாகி விட்டது. ஆனால் இங்கிருந்து பிறபகுதிகளுக்குச் சென்ற பயிர் வகைகளும், கால்நடைகளும், எழுத்து வடிவங்களும் மேற்கு ஐரோப்பாவை உணவு உற்பத்தியில் முன்னேற்றமடையச் செய்தன.

சீனாவைப் பொறுத்தவரையில் அதன் பரந்த பகுதியில் நடைபெற்ற உணவு உற்பத்தியும், அதையொட்டி அமைந்த பேரரசும் அதற்கு சாதகமான அம்சங்களாக இருந்தன. அங்கு பல்வேறு தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளும் உருவாயின. காகிதம், திசை காட்டும் கருவி, அச்சடித்தல் போன்றவற்றுடன் உலகின் மற்ற அரசுகளை மிஞ்சும் விதமாக கடல் மீது ஆதிக்கம் செலுத்த வல்ல கப்பற்படைகளை சீனா பெற்றிருந்தது. 15ஆம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் 400 அடி நீளம் கொண்ட நூற்றுக்கணக்கான கப்பல்களும் அதில் 28,000 பேர்கள் வரை பயணம் செய்யும் வசதியையும் பெற்றிருந்தது. அவை இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை வரை சென்று வந்தன. பிறகு ஏன் சீனக் கப்பல்கள் பசிபிக் பெருங் கடலைக் கடந்து அமெரிக்க கண்டத்தை அடையவில்லை? இதற்கு அச்சமயம் சீனப் பேரரசில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் முக்கிய காரணம் என்கிறார் ஜேரட் டயமண்ட். சீன அரசு அதிகார வர்க்கத்தின் இரண்டு குழுக்களிடையிலான அதிகாரப் போட்டியில் கடற் பயணம் முழுவதுமாக தடை செய்யப்பட்டது. ஒரு மிகப் பெரிய சாம்ராஜ்யத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவு சீனாவின் கடல் மீதான ஆதிக்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

ஆனால் ஐரோப்பாவில் இருந்த அரசியல் சூழல் காரணமாக கொலம்பசிற்கு ஐந்து முறை அவரது முயற்சிகளுக்கு தோல்விகள் கிடைத்தும் கடைசியாக ஸ்பெயின் நாடு மன்னரின் ஆதரவு கிடைத்தது. இந்தியாவைத் தேடத் துவங்கிய அவரது கடற் பயணம் அமெரிக்காவை கண்டடைவதில் முடிந்தது.

ஆனால் ஐரோப்பா 14 ஆம் நூற்றாண்டில் 500 அரசுகளாக உடைந்திருந்தது. 19ஆம் நூற்றாண்டில் அது 40 அரசுகளாக மாறியது. ஐரோப்பாவின் அரசியலும், பன்முகத்தன்மையும் அங்கு பல புதிய முயற்சிகளுக்கு வாய்ப்பளித்தது. அங்கு நிலவிய போட்டி புதிய கண்டு பிடிப்புகளை ஊக்குவித்தது. ஒரு முழுமையான ஐரோப்பிய சாம்ராஜ்யத்தை உருவாக்கும் நெப்போலியன், ஹிட்லர் போன்றவர்களது முயற்சி அங்கு வெற்றியடையவில்லை. பல்வேறு அரசுகள் அங்கு நிலவின. இதில் ஸ்பெயின், இங்கிலாந்து போன்றவை தங்களின் சாம்ராஜ்யத்தை அமெரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் விரிவுபடுத்தின.

வரலாற்றின் இத்தகைய மாற்றங்களோடு அவ்வப்போது தனிநபர்களும் அதன் திசை வழியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கியுள்ளனர். இதற்கு உதாரணமாக அலெக்சாண்டர், அகஸ்டஸ், சீசர், புத்தர், ஏசு, மார்ட்டின் லூதர், லெனின், முகம்து நபி, ஹிட்லர் ஆகியோரைக் கூற முடியும் என்கிறார் டயமண்ட். வரலாற்றில் அரசியல், கலாச்சார மாறுதல்களும், அதன் பின்னணியில் தனிநபர்களின் முடிவுகளும் அதன் திசை வழியில் மாறுதல்களை உருவாக்கியுள்ளன.

பொதுவாக வரலாற்றை அறிவியலின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதில்லை. ஆனால் கடந்த காலத்தைப் பற்றிய ஆய்வுகளில் வானியல், அழிந்து போன டைனோசர்கள் உள்ளது. அறிவியலின் பல்வேறுதுறை சார்ந்து மேற்கொள்ளப்படும் வரலாற்று ஆய்வுகளும் அறிவியலின் ஒரு பகுதியே என்பது ஜேரட் டயமண்டின் நிலை. கடந்த கால வரலாற்று ஆய்வுகள் நவீன உலகத்தை வடிவமைத்தவை எவை என்பதைப் புரிந்து கொள்ள உதவுவதோடு நமது எதிர்காலத்தையும் தீர்மானிக்க உதவும்.

சமுதாயத்தின் திசை வழியைத் தீர்மானிப்பதில் இயற்கைச் சூழல் மற்றும் புவியியல் அமைப்பிற்கு உள்ள பங்கை இப்புத்தகம் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. ஜேரட் டயமண்ட் ஒரு மார்க்சியர் அல்ல; ஆயினும் வரலாற்றைப் பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வு இயல்பாகவே பொருள் முதல்வாத அடிப்படையிலான அணுகுமுறைக்கு இட்டுச் செல்கிறது. உலக சமுதாயத்தின் 13,000 ஆண்டு கால வரலாற்றை ஆழ்ந்த பல ஆய்வுகளின் பின்னணியில் கூறும் இந்நூல் சமுதாய வரலாற்றை அறிவியல் அணுகுமுறையில் கூறும் முக்கியமான நூல் என்பதில் சந்தேகமில்லை.

Guns Germs and Steel

By Jared Diamond, Vintage Publication

Page. 480, Rs. 455/-

பின்குறிப்பு:

இந்த நூல் பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கும், இயற்கையின் புவியியல் வேறுபாட்டிற்கும், சமுதாய மாற்றத்திற்கும் உள்ள உறவினை ஆராய முற்படுகிறது. எல்லா வரலாற்று நிகழ்வுகளையும் பௌதிக, புவியியல், உயிரியல், ரசாயன விதிகளின் அடிப்படையில் விளக்க முற்படுவது சரியல்ல என்ற எச்சரிக்கையுடன் இதனை பார்க்க வேண்டும்.

எது முழு உண்மை என்ற சர்ச்சை, தத்துவம் சார்ந்தது; விஞ்ஞானம் அதனை காண உதவிடும். எல்லாவற்றையும் விஞ்ஞான விதிகளின் அடிப்படையில் விளக்கிட இயலாது. எல்லா இயக்கங்களையும் உள்ளடக்கிய ஒரு பொது விதியை கண்டு பிடிக்க முடியுமென E=MC2 என்று அணுவிற்குள் உள்ள இயக்கத்திற்கு சூத்திரம் கண்ட ஐன்ஸ்டின் நம்பினார். ஆராய்ச்சியும் செய்தார்; சாகிற வரை யோசித்துக் கொண்டே இருந்தார். இன்று வரை விஞ்ஞான உலகம் அப்படி ஒரு சூத்திரத்தை காண இயலவில்லை. அதுபோல்தான் விஞ்ஞான விதிகளை யோசித்து சமுக உறவுகளையோ, மாற்றங்களையோ விளக்க முற்படுவதாகும். மார்க்சிஸம் என்ற புரட்சிகர தத்துவத்தின் அடிப்படையில் தான் சமுதாய மாற்றங்களை விளக்கிட முடியும் என்பது மட்டுமல்ல, சமூதாய மாற்ற கண்டிட வழிமுறைகளையும் கண்டிட முடியும். பல, விஞ்ஞான தகவல்களை இது தருவதால் இந்த எச்சரிக்கையோடு ஜார்டு டயமண்ட் எழுதிய நூலை படிக்க வேண்டும்.