மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கட்சியின் 18வது அகில இந்திய மாநாடு: நடைமுறை உத்தி குறித்து!


டெல்லியில் வருகிற 6 – 11, 2005 இல் நடைபெறவுள்ள கட்சியின் 18-வது அகில இந்திய மாநாட்டில் அரசியல் நகல் தீர்மானம் மற்றும் ஸ்தாபன அறிக்கை ஆகிய இரண்டு அறிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது. ஹைதராபாத்தில் 2002 இல் நடைபெற்ற கட்சியின் 17-வது அகில இந்திய மாநாட்டிற்குப் பிறகு நிகழ்ந்துள்ள அரசியல் – பொருளாதார நிலைமையை பரிசீலித்து, எதிர்கால அரசியல் அணுகுமுறையையும், எதிர்கால கடமைகளையும் உள்ளடக்கி அரசியல் தீர்மானத்தை மாநாடு நிறைவேற்ற உள்ளது. மேலும் 17வது மாநாடு நிறைவேற்றிய அரசியல் தீர்மானத்தை எவ்வாறு அமுலாக்கினோம்? உருவாகி வரும் அரசியல் சூழலில் கட்சி எவ்வாறு தலையிட்டது? அரசியல் தீர்மானத்தை அமுலாக்கிட நடைபெற்ற இயக்கங்கள், வர்க்க – வெகுஜன அமைப்புகள், கட்சியின் அரசியல் நிலைபாட்டில் நின்று மக்கள் பிரச்சினைகளில் நடத்திய இயக்கங்கள் போன்ற பல்வேறு அம்சங்களை மாநாடு பரிசீலிக்க இருக்கிறது. இத்தகைய அரசியல் – ஸ்தாபன அறிக்கையை மத்தியக்குழு சார்பில் மாநாட்டில்தான் விவாதத்திற்கு முன்வைப் பார்கள். மாநாட்டில் இரண்டு அறிக்கைகளையும் நிறைவேற்றி, இரண்டு தீர்மானங்களும் கட்சியின் சார்பில் வெளியிடப்படும். அந்த இரண்டு தீர்மானங்கள் எதிர்கால பணிகளுக்கு வழிகாட்டியாக அமையும்.

அரசியல் தீர்மானத்தின் நோக்கம் என்ன?

அரசியல் தீர்மானத்தின் சாரத்தை உள்வாங்கிட, அதனை அமுலாக்கிட கட்சி எடுத்த முயற்சியை விளக்குவது பொருத்தமாக இருக்கும்.

17-வது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய தீர்மானத்தில் முக்கியமான அரசியல் கடமைகள், தீர்மானத்தின் கடைசி பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பா.ஜ.க. தலைமையிலான அரசை வீழ்த்தி, ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக மாற்றுக்காக பாடுபடுவதுதான் கட்சி முன் உள்ள முக்கியமான எதிர்கால கடமையாகும். இதற்காக பரந்த அளவில் ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளை திரட்டிட வேண்டும்

மேற்கண்ட அரசியல் கடமையை நிறைவேற்றுகிற போது, இது இடதுசாரி – ஜனநாயக சக்திகளின் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் அளவிற்கு நமது பணி அமைய வேண்டும் என அத்தீர்மானம் கூறுகிறது.

  1. பாசிச பா.ஜ.க. அரசை வீழ்த்தும் கடமையை கடந்த மக்களவை தேர்தலில் நிறைவேற்றியுள்ளோம். மற்ற மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து இக்கடமையை நிறைவேற்றியிருக்கிறோம். இக்கடமையை நிறைவேற்றுவதில் இரண்டு விதமான உத்திகளை கட்சி கடைப்பிடித்துள்ளது.
  2. பாசிச தன்மை கொண்ட பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக அரசின் வகுப்புவாத, பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து, நமது கட்சியும் வெகுஜன அமைப்புகளும் அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் எண்ணற்ற இயக்கங்கள் நடத்தியுள்ளோம். மற்ற மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்தும் இயக்கங்கள் நடத்தி இருக்கிறோம். நாடு தழுவிய அளவில் சுயேச்சையாகவும், மற்ற அமைப்புகளுடன் இணைந்து கூட்டாகவும் நாம் நடத்திய இயக்கங்கள் மக்கள் மத்தியில் ஓரளவிற்கு தாக்கத்தை உருவாக்கியது.
  3. இப்பின்னணியில் தான் 14-வது மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்கி, பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியை தோற்கடித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை உருவாக்கி இருக்கிறோம். இதில் நமது கட்சியின் பங்கு மகத்தானதாகும்.

மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உருவான நாள் முதல், அதனுடைய வகுப்புவாத நடவடிக்கைகளை எதிர்த்தும், தாராளமய பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், நமது கட்சி சுயேச்சையாகவும் மற்ற இடதுசாரி – மதச்சார்பற்ற கட்சிகளோடு கூட்டாகவும், தொடர்ச்சியாக வலுவான பல இயக்கங்களை நடத்தினோம். மதச்சார்பற்ற – ஜனநாயக கட்சிகள் பல வகுப்புவாத பா.ஜ.க.வோடு சமரசம் செய்து கொண்டபோதும், காங்கிரஸ் கட்சி வகுப்புவாதத்தை எதிர்த்த இயக்கத்தில் சில நேரங்களில் ஊசலாடியபோதும், நாம் உறுதியாக போராடினோம். மேலும் பா.ஜ.க. அரசினுடைய தாராளமய பொருளாதாரக் கொள்கை அனைத்துப் பகுதி மக்களையும், கடுமையாக பாதித்தபோது, இதை எதிர்த்து நமது கட்சி மற்றும் நமது தலைமையிலான வெகுஜன அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தினோம். இத்தகைய இயக்கங்கள் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை உருவாக்கின. இப்பின்னணியில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை எதிர்த்து, அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தல் போராட்டத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றன.

தேர்தலுக்கு முன்பு வகுப்புவாதத்தை எதிர்த்தும், தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும் மற்ற இயக்கங்களோடு கூட்டு இயக்கம் நடத்தியதால் அக்கட்சிகளின் பின்னால் உள்ள மக்களில் ஒரு பகுதியினரையாவது நம் பக்கம் வென்றெடுக்க முடிந்துள்ளதா? இதைத்தான் வர்க்க சேர்க்கையில் மாற்றத்தை உருவாக்குவது என கூறுகிறோம்.

ஓராண்டில் அல்லது ஒரு இயக்கத்தில் மாற்றம் உருவாகாது. தொடர்ச்சியான முயற்சி தேவை.  வர்க்க சேர்க்கையில் மாற்றம் என்பது அடுத்தடுத்து நமது கட்சி மற்றும் இடதுசாரி ஜனநாயக சக்திகளின் பலம் அதிகரிக்க வேண்டும். இந்த சக்திகள் தீர்மானகரமான சக்தியாக மாற வேண்டும். இத்தகைய சக்திகளுக்கு நாளடைவில் நமது கட்சி தலைமை தாங்கிடும் நிலைமை உருவாகிட வேண்டும்.

இத்தகைய போராட்டத்தை நடத்திட, வர்க்க சேர்க்கையில் நமக்கு சாதகமான மாற்றத்தை உருவாக்கிட நாம் கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் நடைமுறை கொள்கையை உள்ளடக்கியதுதான் அரசியல் தீர்மானம். இந்த நோக்கத்தோடுதான் அரசியல் தீர்மானம் வரையப்படுகிறது, நிறைவேற்றப்படுகிறது.

  1. பா.ஜ.க. அரசை வீழ்த்துவது
  2. மதச்சார்பற்ற  – ஜனநாயக அரசை உருவாக்குவது
  3. பாராளுமன்றத்தில் இடதுசாரிகளின் பலத்தை அதிகரிப்பது

என்று  நமது கட்சி தீர்மானித்த மூன்று கடமைகளையும் நிறை வேற்றியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

14வது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான அரசு தோற்கடிப்பப்பட்டதோடு, இடதுசாரிகளின் ஆதரவோடு காங்கிர தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உருவாகி இருப்பதும் இந்திய அரசியலில் உருவாகியிருக்கும் புதிய சூழல்.

ஐ.மு.கூ. அரசின் பொருளாதார கொள்கையும் நமது அணுகுமுறையும்

தாராளமய பொருளாதார கொள்கையை ஐ.மு.கூ. அரசு அமுலாக்குகிறபோது அதை எதிர்த்து நாம் இயக்கம் நடத்துகிறோம். நம்முடைய எதிர்ப்பையும் கணக்கில் எடுக்காமல் ஐ.மு.கூ. அரசு தாராளமய பொருளாதார கொள்கையை அமுலாக்குவதால் மக்கள் மத்தியில் ஏற்படும் அதிருப்தி அரசுக்கு எதிராக திரும்புவதோடு, நம்மை பாதிக்காதா? அரசுக்கு எதிராக உருவாகும் அதிருப்தியை பா.ஜ.க. பயன்படுத்தாதா? பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக ஐ.மு.கூ. அரசை நாம் ஆதரிப்பது நம்முடைய ஆதரவு தளத்தை பாதிக்காதா? என்ற கேள்வி நியாயமே! இத்தகைய சூழலை எப்படி எதிர் கொள்வது? எத்தகைய நடைமுறை கொள்கையை கடைப்பிடிப்பது என்பது முக்கியமான அம்சம். 18வது அகில இந்திய மாநாட்டு அரசியல் நகல் தீர்மானத்தில் இத்தகைய பாதகமான சூழலை நமக்கு சாதகமாக எவ்வாறு மாற்றுவது என்ற அம்சம் பாரா 2.82 முதல் 2.85 வரையில் விளக்கப்பட்டுள்ளது.

நம்முடைய ஆதரவோடு ஐ.மு.கூ. அரசு நீடிக்கிறது என்ற சூழல் நமக்கு சாதகமானது. நம்முடைய ஆதரவு இல்லாமல் அரசு நீடிக்க முடியாது என்பது நம்மிடம் இருந்து மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு புதிய சூழலை உருவாக்கியுள்ளது. இதை எப்படி பயன் படுத்துவது? இந்த சாதகமான சூழலை பயன்படுத்தி அரசை நிர்ப்பந்தப்படுத்தி மக்களுக்கு ஏதாவது சலுகைகளை இடதுசாரிகள் பெற்றுத் தருவார்கள் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குவது நமக்கு பெருமை சேர்ப்பததற்கு பதிலாக, நம்முடைய மரியாதையை பாதிக்கும். மாறாக, பொருளாதார பிரச்சினைகளிலும் அரசியல் பிரச்சினைகளிலும் வலுவான மக்கள் இயக்கத்தை உருவாக்குவதற்கு இப்புதிய சூழலை பயன்படுத்திட வேண்டும்.

ஐ.மு.கூ. அரசு முன்வைக்கும் தாராளமய பொருளாதார கொள்கை ஒவ்வொன்றிற்கும் நமது மாற்று கொள்கையை முன்வைத்து விவாதிக்கிறோம். முதன் முறையாக நாம் வைக்கும் மாற்று கொள்கை என்ன என்பதை மக்கள் கூர்ந்து கவனிக்கும் சூழல் இன்றைக்கு உருவாகியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கொள்கையை எதிர்ப்பதோடு, நமது மாற்று பொருளாதார திட்டத்தை முன்வைத்திட வேண்டும்.

மேற்குவங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் நமது செல்வாக்கு எல்லைக்கு அப்பாற்பட்டு உள்ளவர்கள். அவர்களை பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் நாம் இயக்கம் நடத்துகிறபோது, தாராளமய பொருளாதார கொள்கைக்கு நாம் நமது மாற்று திட்டத்தை முன்வைக்கிறபோது, அவர்கள் மத்தியில் நம்முடைய அறைகூவலுக்கு வரவேற்பு இருக்கும். அவர்களை நமது இயக்கத்தின்பால் ஈர்த்திட முடியும்.

நமது கட்சிக்கும், வெகுஜன அமைப்புகளுக்கும் அப்பாற்பட்ட மக்களை எந்த அளவுக்கு நம்மால் திரட்ட முடியும், எந்த அளவுக்கு அவர்களை நம் பக்கம் கொண்டு வர முடியும் என்பதுதான் இன்று நம்முன் உள்ள முக்கியமான கேள்வி. இன்றுள்ள சாதகமான சூழலை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது வெற்றி அமையும்.

வகுப்புவாத பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி தோற்கடிக்கப் பட்டுள்ளது, கட்சி வளர்ச்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பை அளித்துள்ளது. பா.ஜ.க.வின் தோல்வி தானாகவே வர்க்க சேர்க்கையில் ஒரு மாற்றத்தை உருவாக்கி விடாது.

காங்கிரஸ் கட்சியின் வர்க்கத் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே ஐ.மு.கூ. அரசு ஒரு மாற்று திட்டத்தை முன்வைக்காது. இப்பின்னணியில் நம்முடைய தலையீடு, பரந்த மக்கள் மத்தியில் நாம் செல்ல வேண்டிய அவசியம், ஆகியவற்றை நாம் உணர வேணடும். இடதுசாரி சக்திகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள மரியாதையை பயன்படுத்தி, இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவாக அதிகமான மக்களை திரட்டிட முயற்சிக்க வேண்டும்.

மூன்றாவது மாற்றும் இன்றைய கடமையும்

ஐ.மு.கூ. அரசு கடைப்பிடிக்கக் கூடிய தாராளமய பொருளாதாரக் கொள்கையால் பாதிக்கக்கூடிய மக்களை எவ்வாறு திரட்டுவது என்பது பற்றியும், நமது கட்சிக்கு அப்பாற்பட்ட மக்களை திரட்டிட நமக்கு இருக்கும் வாய்ப்பு பற்றியும் மேலே பரிசீலித்தோம். மத்தியில் உள்ள கூட்டணி ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சி தலைமை தாங்குகிறது. பிரதான எதிர் கட்சியாக வகுப்புவாத பா.ஜ.க. உள்ளது. பா.ஜ.க. தோல்வியுற்றாலும் அக்கட்சி பலம் குறைந்திடவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மீண்டும் எழுந்திட பா.ஜ.க.வும், சங்பரிவார அமைப்புகளும் முயற்சிக்கும். இப்பின்னணியில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை பற்றி நகல் தீர்மானம் விளக்கியுள்ளது.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியை ஆதரிக்கிறோம். ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் நாம் ஐக்கிய முன்னணிக்கு செல்ல முடியாது. அதன் அடிப்படையில்தான் வெளியில் இருந்து ஐ.மு.கூ. அரசை ஆதரிக்கிறோம்.

காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற முறையில் இரு கட்சி முறை உருவாகும் அளவுக்கு இவைகள் பலமடைவதை நமது கட்சி எதிர்க்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத மற்றும் ஐ.மு.கூ.க்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளுடன் உறவு வைத்துக் கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். காங்கிரஸ் – பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகள் அல்லாத ஒரு மூன்றாவது மாற்று உடனடியாக உருவாக வாய்ப்பில்லை என்றாலும், எதிர்காலத்தில் இதற்கான சூழல் உருவாகிற போது அமைத்திட நாம் முயற்சிக்க வேண்டும் என நகல் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.

மூன்றாவது மாற்று பற்றி கடந்த கால அனுபவம் என்பது வேறு. காங்கிரஸ் அல்லாத பா.ஜ.க. அல்லாத மற்ற கட்சிகளைக் கொண்ட ஒரு ஆட்சி மத்தியில் இரண்டு முறை உருவானது. 1989ல் வி.பி.சிங் தலைமையிலும், 1996ல் தேவகவுடா தலைமையிலும் ஒரு மூன்றாவது அணி ஆட்சி அமைந்தது. இந்த இரண்டு அரசுகளையும் நாம் வெளியில் இருந்து ஆதரித்தோம். இந்த இரண்டு அரசிலும் காங்கிரசும் பங்கேற்கவில்லை, பா.ஜ.க.வும் பங்கேற்கவில்லை. இதைத்தான் பொதுவாக மூன்றாவது அணி என்று மக்கள் பார்த்தார்கள்.

ஆனால் இந்த இரண்டு ஆட்சிகளும் ஐந்து ஆண்டுகள் கூட முழுமையாக ஆட்சியில் நீடிக்க முடியவில்லை.

இடதுசாரி சக்திகள் பலமடையாத வரையில் இத்தகைய மூன்றாவது அணி தலைமையிலான அரசு ஸ்திரமாக நீடிக்க முடியாது என்று கல்கத்தாவில் நடைபெற்ற 16வது கட்சி காங்கிரஸ் கூறுகிறது.

மூன்றாவது மாற்று குறித்த கடந்த கால அனுபவத்தை பரிசீலித்த 17வது கட்சி காங்கிரஸ் இத்தகைய மாற்று என்பது ஒரு பொதுவான  திட்டத்தின் அடிப்படையில் உருவாக வேண்டும் என்று கூறியது. குறிப்பிட்ட தேர்தலுக்காக உருவாகும் கூட்டு என்பதற்கு மாறாக,  காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து. பொதுவான பிரச்சினைகளில் கூட்டான முறையில் இயக்கங்களையும்,  போராட்டங்களையும் நடத்துவதில் இருந்து மூன்றாவது மாற்று உருவாக்குவதற்கான செயல்முறைகள் துவங்கப்பட வேண்டுமென்று கூறுகிறது.

காங்கிரஸ் அல்லாத பா.ஜ.க. அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன் மக்கள் பிரச்சினைகளில் கூட்டு இயக்கத்திற்கு சென்றாலும், இயக்கங்கள் பல நடத்தினாலும் இக்கட்சிகளின் நிலைபாடுகளில் மாற்றம் ஏற்படாத வரை, ஒரு திட்டத்தின் அடிப்படையிலான மூன்றாவது மாற்று உருவாகாது. அப்படியென்றால் மதச்சார்பற்ற கட்சிகளின் நிலைபாடுகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா? இக்கட்சிகள் தற்பொழுது தாராளமய, தனியார்மய பொருளாதார கொள்யை ஆதரிக்கின்றன. இதில் மாற்றம் கொண்டுவர கட்சியின் வலுவான தலையீடு தேவைப்படுகிறது.

பிரம்மாண்டமான இயக்கங்களை உருவாக்குவதன் மூலமும், போராட்டங்களை நடத்துவதன் மூலம்தான் அரசியல் கட்சிகளின் கண்ணோட்டங்களிலும் தற்போதைய அணி சேர்க்கையிலும் மாற்றங்கள் கொண்டு வர முடியும். இத்தகைய இயக்கங்கள்  மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் பின்னால் திரண்டுள்ள மக்களின் மீது தாக்கங்களை ஏற்படுத்தி மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என தீர்மானம் கூறுகிறது.

இடதுசாரி கட்சிகள், மதச்சார்பற்ற மற்ற ஜனநாயக சக்திகள் கூட்டாக மக்கள் இயக்கத்தை உருவாக்குவது தற்போதைய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கூட்டணிகளில் மாற்றங்களை கொண்டுவரக்கூடிய திறவுகோலாக அமையும்.

இடதுசாரி ஒற்றுமை

மேற்கண்ட மாற்றத்தை உருவாக்கிட இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமையை பலப்படுத்திடுவது அவசியமாகிறது. ஐ.மு.கூ. அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு மாற்று திட்டத்தை இடதுசாரி கட்சிகள்தான் முன்வைத்துள்ளன. நமது கட்சி இடதுசாரி கட்சிகளுக்குள் பிரதானமான கட்சி என்ற அடிப்படையில் நான்கு இடதுசாரி கட்சிகளின் ஒற்றுமையை பலப்படுத்திடுவதோடு, இடதுசாரி எண்ணமுள்ள குழுக்களையும், தனிநபர்களையும் ஒரு பொதுவான மேடைக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் இடதுசாரி சக்திகளின் செல்வாக்குகளை அதிகப்படுத்திட முடியும்.

இடதுசாரி ஜனநாயக சக்திகள்

இடதுசாரி ஜனநாயக சக்திகள் என்பதற்கு நகல் தீர்மானம் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. இடதுசாரி ஜனநாயக சக்திகள் என்பது அரசியல் கட்சிகளை மட்டும் குறிப்பிடுவதல்ல; நம்முடன் கூட்டு இயக்கங்களுக்கு வரக்கூடிய அமைப்புகள், கட்சிகள், குழுக்கள், செல்வாக்கு வாய்ந்த தனிநபர்கள் ஆகியோரும் இடதுசாரி ஜனநாயக சக்திகள்தான். எத்தகைய கோரிக்கைகளை முன்வைத்து மக்களை திரட்ட வேண்டும் என்று நகல் தீர்மானத்தின் பாரா 2.107 (1) முதல் 8 வரை விளக்கப்பட்டுள்ளது.

இன்றைய முதலாளித்துவ நிலப்பிரபுத்து கொள்கைகளுக்கு உண்மையான மாற்று திட்டத்தை இடதுசாரி ஜனநாயக சக்திகள் தான் முன்வைக்கிறது. இத்திட்டத்தின் அடிப்படையில் மக்களை திரட்டிட திட்டமிட வேண்டும்.

கட்சியின் பாத்திரம்

மேற்கண்ட கடமைகளை நிறைவேற்றுவதில் கட்சிக்கு முக்கிய பாத்திரம் உள்ளது.

  • முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கட்சிகளுக்கு எதிராக இடதுசாரி மாற்றுத் திட்டத்தை முன்வைத்திடவேண்டும்.
  • அரசியல், சமூக, பொரளாதார, கலாச்சாரத்துறைகளில் நமது மாற்றுக் கண்ணோட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
  • இன்று சமூகத்தில் நிலவி வரும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சித்தாங்களுக்கு எதிராக தத்துவார்த்த போராட்டத்தை கட்சி நடத்திட வேண்டும்.

இத்தகைய கடமையை நிறைவேற்றிட கம்யூனிஸ்ட் ஸ்தாபன கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த ஒரு வலிமை மிக்க கட்சியைக் கட்டுவதும், இந்திய சமூகத்தில் நிலவும் பிரச்சினை களுக்கு மார்க்சியத்தை படைப்பாக்கத்துடன் பொருத்திப் பார்ப்பதும் ஒரு முக்கிய கடமையாகும்.



%d bloggers like this: