நேபாளில் அரும்பாக இருந்த ஜனநாயகத்தையும் முற்றிலுமாக தகர்த்துள்ளான் மன்னன் ஜயனேந்திரா. பிப்ரவரி 1, 2005 அன்று காலை 10.00 மணியளவில் சேர் பகதூர் த்யூபா அரசை சர்வாதிகாரமாக கலைத்து விட்டு, அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் எடுத்துக் கொண்டதோடு, நாட்டில் நெருக்கடி நிலையையும் அமல்படுத்தியுள்ளான். அரசியல் – பொருளாதாரம் – வன்முறை என மும்முனை தாக்குதலில் சிக்கித் தவிக்கும் நேபாள மக்களை, புதைகுழிக்கு அனுப்பும் செயலில் இறங்கியுள்ளான் ஜயனேந்திரா. இந்நடவடிக்கை, நாட்டின் ஆரோக்கியமான – ஜனநாயக ரீதியான வளர்ச்சிக்கு வழிவகுப்பதற்கு மாறாக, நிரந்தரமான குழப்பத்தையும், உள்நாட்டு கலகங்கள் அதிகரிப்பதற்கும், மக்களின் வாழ்வு சீர்குலைவதற்கும், ஏகாதிபத்திய தலையீட்டிற்குமே வழி வகுத்துள்ளது.
நெருக்கடி நிலை
நெருக்கடிநிலையை அமுல்படுத்திய ஜயனேந்திரா, பயங்கரவாத வன்முறைச் செயலில் ஈடுபடும் மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்கும் வரை மூன்று ஆண்டுகளுக்கு எமர்ஜென்சி நீடிக்கும் என்று அறிவித்துள்ளது ஜனநாயகத்தை நேசிக்கும் உலக மக்கள் மீதே தாக்குதலைத் தொடுத்தாற்போல் உள்ளது. ஏனெனில் இதே காரணத்தைச் சொல்லி இதற்கு முன்னால் எடுத்த நடவடிக்கைகள் பயனற்றுப் போனதே சாட்சியாக விளங்குகிறது.
நேபாள அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான, கருத்துச் சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை, பத்திரிக்கை சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், பேச்சுரிமை, சங்கம் அமைக்கும் உரிமை, நாட்டின் இதர பகுதிகளுக்குச் சுதந்திரமாக செல்லும் உரிமை, சொத்துரிமை என பல்வேறு முக்கிய ஷரத்துக்களை ரத்து செய்துள்ளான். இதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் கேள்விக்குள்ளாக்கி யுள்ளார் ஜயனேந்திரா.
நேபாளத்தின் அதிகாரத்தை முழுமையாக கையில் எடுத்துக் கொண்ட மன்னர், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களான கிரிஜா பிரசாத் கொய்ராலா, மாதவ் குமார் நேபாள் போன்றவர்களை கைது செய்து, வீட்டுச் சிறையில் அடைத்துள்ளார். மேலும் பல தலைவர்களை நேபாள் இராணுவ கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளார். அரசியல் கட்சிகளின் ஊழல் நடவடிக்கையை விசாரிக்க கமிஷன் ஒன்றையும் அமைத்துள்ளான். மன்னனை விட ஊழலும், ஊதாரித்தனமும் உள்ள ஒரு நபர் அங்கு இல்லை; மக்களை ஏமாற்றவே இந்த அறிவிப்பு. இது அரசியல் கட்சிகளை அப்பட்டமாக மிரட்டும், மக்களை திசை திருப்பும் நடவடிக்கையே தவிர வேறெதுவும் இல்லை.
மன்னராட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடுகின்ற மாணவர்களையும், மாணவர் இயக்கங்களையும் தடை செய்துள்ளதோடு, நூற்றுக்கணக்கான மாணவர்களை சிறையில் அடைத்துள்ளான். இதுமட்டுமின்றி நேபாளை உலகின் இதர பகுதிகளில் இருந்து அனைத்து வகையிலும் துண்டித்துள்ளான். இன்டர்நெட், இணையதளம், தொலைபேசி, தகவல் தொடர்பு என அனைத்து அம்சங்களையும் நிறுத்தி வைத்துள்ளான். நேபாளில் என்ன நிகழ்கிறது என்பதை அறிந்துக் கொள்வதற்குகூட முடியாத சூழலே இன்று நிலவுகிறது.
பத்திரிகை சுதந்திரதிற்கு வாய்ப்பூட்டு
2001இல் ஜயனேந்திராவின் முதல் எமர்ஜென்சியின் போதே நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு, கடுமையான சித்தரவதைக்கு உள்ளானதையும், பலரை நேபாள் இராணுவமும், மாவோயிஸ்ட்டுகளும் சுட்டுக் கொன்ற செயல் சர்வதேச பத்திரிகையாளர்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. உலகிலேயே பத்திரிகை சுதந்திரத்தை அப்பட்டமாக மீறும் நாடாக நேபாள் திகழ்கிறது.
தற்போதும் இதே பாணியை கடைப்பிடித்துள்ளான் ஜயனேந்திரா: நூற்றுக்கனக்கான பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, முக்கிய பத்திரிகையாளர்களை அரண்மனைக்கு அழைத்து மன்னாராட்சிக்கு எதிராக எழுதும் பத்திரிகைகள் மீது வாய்ப்பூட்டு போட்டுள்ளதோடு, மன்ன ராட்சிக்கு எதிராக எந்தவிதமான செய்திகளையோ, கருத்துக் களையோ வெளியிடக்கூடாது என்று ஆணையிட்டுள்ளதோடு, கடுமையான சென்சாருக்கும், கண்காணிப்புக்கும் உள்ளாக்கி யுள்ளான். கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை முற்றிலுமாக கொலை செய்துள்ளான்.
சர்வதேச அளவில் கண்டனம்
மன்னரின் ஜனநாயக படுகொலையை கண்டித்து ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அண்ணான் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு, உடனடியாக நேபாளத்தில் ஜனநாயகத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துள்ளார்.
அதேபோல் இந்திய அரசும் இந்நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, மீண்டும் பலகட்சி ஜனநாயகத்திற்கு உயிரூட்டும் வரை நேபாளத்திற்கு எந்தவிதமான உதவியையும் வழங்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. அத்துடன் பங்களாதேஷில் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டில் பங்கேற்பதையும் ரத்து செய்து விட்டார் பிரதமர் மன்மோகன் சிங். இதன் மூலம் சார்க் மாநாடும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மன்னனுக்கு ஜனநாயகப் படுகொலை செய்யும் துணிச்சலை வழங்கிய அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஏகாதிபத்தியவாதிகளே, உலக மக்களின் அபிப்பிராயத்தை மதித்து உதட்டளவிலாவது அவனது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளதும் இந்த வகையில்தான்.
நேபாள் ஒரு பார்வை
கௌதம புத்தர் பிறந்த மண் நேபாள்; இரண்டு கோடியே 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான நேபாளின் எழிலுக்கு கட்டியம் கூறுவது இமயமலையும் அதன் உயர்ந்த சிகரங்களும்.
பிரேசிலுக்கு அடுத்தபடியாக நீர் வளத்தை தன்னகத்தே வைத்துள்ளதோடு, அதன் காலுக்கடியில் ஏராளமான கணிம வளத்தையும், இயற்கை வளத்தையும் கொண்டிருந்தாலும் நிலப்பிரபுத்துவ சக்திகளின் பிற்போக்குத் தன்மைகளாலும், நவீன முதலாளித்துவ தொழில் வளர்ச்சியின்மையினாலும் இவற்றை யெல்லாம் பயன்படுத்தி நேபாளிகளை முன்னேற்றகரமான வாழ்வுக்கு இட்டுச் செல்ல முடியவில்லை. ஏகாதிபத்திய ஆதிக்க சூழலை கணக்கில் கொள்ளாமல், சிறிய நாடுகளால்தான் ஆரோக்கியமான பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும் என்று வலியுறுத்தி வரும் பிற்போக்கு சித்தாந்தவாதிகளுக்கு நேபாளின் இன்றைய நிலையையே அவர்களுக்கு சமர்ப்பிக்கலாம்.
நேபாளின் இன்றைய நிலைமை
46 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வசிக்கின்றனர். உலக நாடுகளில் கடுமையான வறுமைக்கு உள்ளாகியிருக்கும் 20 நாடுகளில் ஒன்றாக நேபாள் திகழ்வதாக ஐ.நா. சுட்டிக்காட்டுகிறது. வேலையின்மை விகிதம் 56 சதவீதம் உள்ளது. நிலப்பிரபுத்துவ – மன்னராட்சி முறையிலான நேபாளத்தில், நவீன தொழில் வளர்ச்சி என்பதோ, புதிய தொழில்களோ எட்டாத இடமாக திகழ்கிறது. அந்நாட்டின் பிரதான தொழில்களில் ஒன்றாக திகழ்வது சுற்றுலா. இமயமலையின் அழகை தன்னகத்தே கொண்டுள்ள நேபாள் உலக மக்களை ஈர்த்ததில் வியப்பில்லை. ஆனால், இன்றைக்கு இத்தொழிலில் பெரும் பின்னடைவுக்கு உள்ளாகி 27 சதவீதம் சரிந்துள்ளதால், இந்நாட்டிற்கு கிடைத்து வந்த அன்னிய செலாவணியிலும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் இராணுவச் செலவு போன்றவற்றால், ஒவ்வொரு ஆண்டும் நேபாள பட்ஜெட்டில் 60 சதவீதத்தை வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்த்தே திட்டமிடப்படுவதாக பிரண்ட்லைன் பத்திரிகை சுட்டிக்காட்டுகிறது.
1992இல் கம்பளித் தொழிலில் ஈடுபட்டு வந்த 5,50,000 பேரில் 2002ஆம் ஆண்டு வாக்கில் இது பாதியாக குறைந்து விட்டதாகவும், அதேபோல் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டிருந்த 70,000 பேர் கடுமையான பொருளாதார நெருக்கடியால் 35,000 ஆகி குறைந்து விட்டதாகவும், ஆண்டுக்கு 30,000 இளைஞர்கள் புதியதாக வேலையில்லா பட்டாளத்தில் இணைந்து வருவதாக உலக சோசலிச இணையதளம் பட்டியலிடுகிறது. மேலும் தற்போதைய பத்திரிக்கை – வானொலி – தொலைக்காட்சி தடைச் சட்டத்தின் விளைவாக 1000த்திற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் வேலையிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேபாளின் அரசியல் சட்டத்திலேயே இந்து மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவைப் போன்றே தாழ்த்தப்பட்ட – பழங்குடி மக்கள் கடைகோடிகளாகவும், நாயை விடக் கேவலமாக நடத்தப்படுவதாகவும் பல பத்திரிகைகள் படம் பிடித்துள்ளன. நேபாளின் இன்றைய முகத்தை சுருக்கமாக படம் பிடிக்க வேண்டும் என்றால் : வறுமை – சுதந்திரமின்மை – வன்முறை – சர்வாதிகாரம் – நிலையற்ற அரசியல் சூழல் இவைகளின் கதம்பமாக திகழ்வதே இன்றைய நேபாள்.
பிற்போக்கு மன்னராட்சிகளும் – நீடித்து வரும் குழப்பங்களும்
1846 இல் ரானாக்களின் ஆட்சி துவக்கியது முதல் ஜனநாயகத்திற்கான போராட்டமும், நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டம் ஒன்றுடன் ஒன்று இணைந்து நடைபெற்று வந்தது. இதன் விளைவாக ரானாக்களின் ஆட்சி மாற்றத்திற்கு உள்ளாகி, மன்னன் திரிபுவானின் ஆட்சி ஏற்பட்டபோது, இப்போராட்டம் மேலும் உச்சக் கட்டத்தை எட்டியது. 1955இல் மன்னன் திரிபுவனின் மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட மகேந்திராவின் ஆட்சிக்காலத்தில் நேபாள கம்யூனிஸ்ட்டுகளும், ஜனநாயகவாதிகளும் நடத்திய போராட்டத்தின் விளைவாக, 1959இல் பலகட்சி ஆட்சி முறையும் – சட்டப்படியான மன்னராட்சி முறையும் நேபாள அரசியல் சட்டத்தில் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், நேபாள காங்கிரஸ் கட்சியின் சார்பில் பி.பி. கொய்ராலா வெற்றி பெற்று நேபாளின் முதல் பிரதமரானார். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவ்வாட்சியை ஒரு வருடம் கூட நீடிக்கவிடவில்லை. பிற்போக்கு நிலப்பிரபுத்துவ சக்திகள் நேபாளின் பலகட்சி ஜனநாயகத்தை விரும்பவில்லை என்ற வர்க்க முரண்பாடே இதற்கு அடிப்படை காரணமாகும்.
1962ல் பரந்த அளவிலான நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு பதிலாக பஞ்சாயத்து வடிவிலான ஆட்சி முறைச் சட்டத்தை கொண்டு வந்தனர். இதனால் அனைத்து அதிகாரங்களும் மீண்டும் மன்னரிடமே குவிந்தது. 1972இல் மன்னர் மகேந்திராவின் மறைவும், அவரது மகன் பீரேந்திரா புதிய மன்னராக பதவி ஏற்ற பின்னணியில் நடைபெற்ற அரசியல் கிளர்ச்சிகளால் மீண்டும் 1980களில் அரசியல் கட்சிகளற்ற அடிப்படையில் நாடு தழுவிய தேர்தல் நடத்தப்பட்டது. இவ்வாட்சியும் அற்ப ஆயுளில் முடிந்தது.
இடைப்பட்ட 10 ஆண்டு காலத்தில் நேபாள அரசியலில் ஜனநாயகத்தை மீட்டிட நீண்ட நெடிய போராட்டத்தை நடத்திய கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் ஜனநாயக சக்திகளின் தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக 1991இல் நடைபெற்ற தேர்தலில் கிரிஜா பிரசாத் கொய்ராலா பிரதமராக தேர்வு செய்யப்பட்டார், 1994ல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த சூழலில், தோழர் மன்மோகன் அதிகாரி தலைமையில் நேபாளில் முதல் கம்யூனிஸ்ட் அரசு பொறுப்பேற்றது. நோபளத்தின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக நீண்ட நெடிய போராட்டங்களை நடத்திய கம்யூனிஸ்ட்டுகள் மக்கள் வாழ்வை மீட்டெடுக்க நிலச் சீர்திருத்தம் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். நிலப்பிரபுத்துவ சக்திகளும் – பிற்போக்கு நேபாள இராணுவமும் இவ்வரசை ஒரு வருடம் கூட நீடிக்க விடாமல் மன்னர் பிரேந்திராவால் சர்வாதிகாரமாக கலைக்கப்பட்டது.
ஜயனேந்திராவிடம் அதிகாரம்
2001 ஜூன் மாதத்தில் மன்னர் பீரேந்திரா மற்றும் அவரது குடும்பத்தினரை இளவரசர் திபேந்திரா சுட்டுக் கொன்றதோடு, தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக அறியப்படுகிறது. இது குறித்து பல்வேறு மர்மங்கள் நீடிக்கவே செய்கிறது. இதன் பின்னணியில் தற்போதைய மன்னன் ஜயனேந்திரா இருப்பாரோ என்ற சந்தேகம் கூட நேபாள மக்களுக்கு உண்டு. பீரேந்திராவின் மரணத்தையடுத்து புதிய மன்னராக ஜயனேந்திராவை பதவியில் அமர்த்தினர். இவரும் ஒரு கடைந்தெடுத்த பிற்போக்குவாதியே! இவர் பதவியேற்றவுடன் இந்து மத வழக்கப்படி ஒரு மாடு, ஒரு ஆடு, ஒரு வாத்து என்று பெரும் எண்ணிக்கையிலான உயிரினங்களை பலிக்கொடுத்த பரிகாரம் தேடிய செயல் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இரண்டு முறை எமர்ஜென்சியை நாட்டில் அமல்படுத்தி பிரபுத்துவ வர்க்கத்தின் பிதாமகனாக திகழ்கிறார்.
1991 முதல் 2002 வரை பல்வேறு அரசுகள் மாறி மாறி ஆட்சிப் பொறுப்பில் இருந்தன. இந்த 10 ஆண்டு காலத்தில் 6 பிரதமர்களை கண்ட நேபாள், 14 முறை ஆட்சி மாற்றங்களையும் சந்தித்துள்ளது. இரண்டு முறை எமர்ஜென்சி என தொடர்ந்து குழப்பமான அரசியல் சூழலை சந்தித்து வருகிறது.
மும்முனைப் போட்டி
நேபாள அரசியல் அதிகாரத்திற்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. 1. மன்னராட்சியை நம்பியிருக்கும் நிலப்பிரபுக்கள், அதிகார வர்க்க – வலதுசாரி சக்திகள், 2. பலகட்சி ஜனநாயகத்தை விரும்பும் சக்திகள், 3. மாவோயிஸ்ட்டுகள். நேபாள சமூகத்தில் நிலவும் உள்முரண் பாடுகளை மேற்கண்ட தன்மைகள் உணர்த்துகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசாக இருந்தாலும் அது மன்னரின் வர்க்க நலனை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையோடே செயல்படுவது, மற்றொன்று தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர்கள் மன்னரின் கைப்பாவையாக மாறுவதும், அதில் ஏதாவது சிறு முரண்பாடு ஏற்பட்டால் கூட கட்சிகளை உடைத்து மன்னரின் விசுவாசி ஒருவரை பிரதமராக மாற்றுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக நேபாள காங்கிரசை பொறுத்தவரையில் நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ சக்திகளின் நலனை காத்திட மன்னரோடு சமரசம் செய்துக் கொண்டு செயல்படும் அமைப்பு என்பதே. மேலும் பல கட்சி ஆட்சி முறையின் ஜனநாயக ரீதியான செயல்பாட்டை நேபாள் அரச இராணுவ தலைமையும் விரும்புவதில்லை. மேற்கண்ட நிலப்பிரபுத்துவ – ஏகாதிபத்திய – இராணுவ சக்திகளின் வர்க்க நலனை முன்னிறுத்தியே நேபாள அரசியல் சூழன்று வருகிறது.
நேபாளில் கம்யூனிஸ்ட்டுகள்
1949 இல் தோழர் புஷ்பா லால் முன்முயற்சியால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. கட்சியின் ஆரம்பகோல கோஷமாக மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டம் வாழ்க!, நிலங்களும், மலைகளும், காடுகளும், ஆறுகளும் எங்களுடையதே! ஏன் நாங்கள் அடிமைகளாக வாழவேண்டும்! என்ற முழக்கத்தோடு, நேபாள நாட்டின் தன்மைக்கேற்ப நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற அடிப்படையான கோஷத்தை முன்னிறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி நேபாள மக்களின் ஜனநாயக உரிமைகள் உட்பட இதர உரிமைகளுக்கான வர்க்கப் போராட்டத்தை துவங்கியது. 1954இல் நடைபெற்ற முதலாவது கட்சி காங்கிரசில் தோழர் மன்மோகன் அதிகாரி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப் பட்டார். அத்துடன் நேபாள தன்மைக்கேற்ப மார்க்சிஸம் – லெனினிசத்தை உறுதியாக ஏற்று அமலாக்குவதோடு எதிர்காலத்தில் ஒரு சோசலிச அரசை உருவாக்க வேண்டும் என்ற நீண்ட கால திட்டத்தின் அடிப்படையிலும், புரட்சியின் தற்போதைய கட்டத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது அவசியம் என்ற அடிப்படையில் பல கட்சி ஜனநாயகம் என்ற முழக்கத்தை முன்வைத்தது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியிலும் பல்வேறு தத்துவார்த்த – நடைமுறை தந்திரங்களில் முரண்பாடுகள் எழுந்தது; இதன் வளர்ச்சிப் போக்கிலும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் பல்வேறு பிரிவுகள் தோன்றின; மன்னராட்சியின் ஜனநாயக விரோத செயல்களே மீண்டும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒன்றிணைத்தது. மன்னராட்சி முறைக்கு வலுவூட்டி பஞ்சாயத்து ராஜ்முறையை எதிர்த்து பலபிரிவுகளாக பிரிந்து கிடந்த கம்யூனிஸ்ட்டுகள் ஒன்றுபட்டு போராடினர். இந்த போராட்ட ஒற்றுமை அவர்களை இணைத்தது. தற்போது நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) என்ற பெயரால் நேபாள மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கட்சியாக செயல்பட்டு வருகிறது. அதே சமயத்தில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) ஜனநாயக ரீதியான ஒன்றிணைந்த போராட்டங்களை தவிர்த்து, ஆயுதப் போராட்டத்தை 1996 முதல் துவக்கியுள்ளது. இவர்களது செயல்பாடுகளை பற்றியும் பரிசீலிப்போம். எப்போதெல்லாம் நேபாளத்தில் பல கட்சி ஆட்சி ஜனநாயக முறை செயல்பட்டதோ, அப்பொழுதுதான் ஜனநாயக சக்திகளான தொழிற்சங்கம், விவசாய சங்கம், மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள், பத்திரிக்கைகளின் வளர்ச்சி, கருத்துச் சுதந்திரம் என அனைத்தும் வளர்ச்சியுற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலில் மக்களின் பங்கெடுப்பு அதிகரித்தது. இவற்றையெல்லாம் மாவோயிஸ்ட்டுகள் இதை உணர மறுக்கிறார்கள்.
மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கைகள்
நேபாளத்தில் நிலவும் குழப்பமான சூழ்நிலை, மக்களை கவனிக்காதப் போக்கு, அரசியல் கட்சிகளின் உறுதியான முன்னேற்ற பார்வையின்மை ஆகியவை மாவோயிஸ்ட்டுகளுக்கு களமாக அமைந்துள்ளது. 1996-இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 205 இடங்களில் மாவோயிஸ்டுகள் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். மக்களால் நிராகரிக்கப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் பாராளுமன்ற அரசியலில் இருந்து விலகி, நேபாள மன்னராட்சிக்கு எதிராக ஆயுதப் புரட்சியை மேற்கொள்ளப் போவதாகக் கூறிக் கொண்டு பெரும் வன்முறையிலும், கலகத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நேபாளத்தில் 80 சதவீதத்தை மாவோயிஸ்டுகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மாவோயிஸ்ட்டு – மன்னர் – இராணுவம் இவர்களின் மோதலில், கடந்த 10 ஆண்டுகளில் 11,000ம் பேர் பலியாகியுள்ளனர்.மன்னர் விசுவாசமுள்ள இராணுவத்தின் மத்தியில் ஜனநாயக உணர்வு வளர இது தடை எனலாம்.
மாவோயிஸ்ட்டுகளின் எல்லையற்ற வன்முறை நடவடிக்கை நேபாள காங்கிரஸ் கட்சியையோ, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) தொண்டர்களையோ கூட விட்டு வைப்பதில்லை. கிராமப்புறத்தில் மக்களுக்காக கொள்கை ரீதியில் அயராது உறுதியுடன் போராடுபவர்களை அரசியல் எதிரிகளாக கருதி தீர்த்துக் கட்டுவதும் மாவோயிஸ்ட்டுகளின் முக்கிய அஜண்டாவாக இருக்கிறது.
இதே பாணியைத்தான் இந்தியாவில் உள்ள நக்சலைட்டு குழுக்கள் ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்வதும், மார்க்சிசம் – லெனினிசத்தை இந்தியச் சூழ்நிலைக்கேற்ப உறுதியாக அமலாக்கி வரும் மார்க்சிஸ்ட்டுகள் மீதும் இடதுசாரிகள் மீதும் மற்ற ஜனநாயக இயக்கங்கள் மீதும் தொடர்ச்சியான தாக்குதலை நடத்துவதோடு, சீர்குலைவுவாத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். நேபாள மாவோயிஸ்ட்டுகளால் கிராமப்புறங்களில் நிலவும் நிரந்தர அமைதியற்ற சூழ்நிலையால், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்வது தொடர் கதையாகியுள்ளது. இவர்களில் ஒரு பகுதியினர் அண்டை நாடுகளான இந்தியா, பூட்டான் என பல பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். வன்முறையையே புரட்சியாக கொண்ட மாவோயிஸ்ட்டுகளின் கலக பயங்கரவாத செயல்களால், நீடித்த அரசியல் குழப்பங்களும், ஜனநாயக சீர்குலைவும், மன்னர் – இராணுவ பிணைப்பை பலப்படுத்துவதற்கும், ஏகாதிபத்திய நாடுகளின் தலையீட்டிற்குமே உதவும்.
அமெரிக்காவின் கழுகு கண்
தென்கிழக்கு ஆசியப் பகுதியில் அமைந்துள்ள நேபாள் யுத்த தந்திர ரீதியில் மிகவும் கேந்திரமான முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. அதன் இருபுறங்களிலும் இந்தியா – சீனா ஆகிய இரு பெரும் நாடுகள் அமைந்துள்ளதே இதற்கு காரணம்.
மத்திய கிழக்காசியாவை தன் கைக்கு கொண்டு வர முயற்சிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தங்களது ராஜியத்தை விரிவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நேபாள அரசுடன் அமெரிக்க பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரால் ஐந்து ஆண்டுக்கான ஒப்பந்தம் ஒன்றையும் செய்துக் கொண்டுள்ள தோடு, மாவோயிஸ்ட்டுகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலும் இணைத்துள்ளது. இப்பின்னணியில் தான் அமெரிக்க அரசு 2002இல் 20 மில்லியன் டாலர் இராணுவ உதவியை நோபளத்திற்கு வழங்கியதோடு, 5000 எம்-16 நவீன துப்பாக்கிகளையும், இதர இராணுவ கருவிகளையும் வழங்கியது.
இந்தியாவை பொறுத்தவரை மாவோயிஸ்ட்டுகளின் நடவடிக்கை என்பது நேபாளை மட்டும் பாதிக்கும் விஷயம் அல்ல; அவர்கள் இந்தியாவில் ஆந்திரா, பீகார், சட்டீஸ்கர் போன்ற பல்வேறு பகுதிகளை ஆதாரமாக வைத்து செயல்படுவதும், கலக – வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட அடிப்படையில் இந்திய அரசும் ரூ. 375 கோடி அளவிற்கு ஆயுதங்கள் வழங்கியுள்ளதோடு, ஹெலிகாப்டர் மற்றும் கன்னி வெடிகளை கண்டுபிடிக்கும் நவீன கருவிகள் உட்பட பல்வேறு உதவிகளையும் செய்துள்ளது. ஆனால், அமெரிக்கா மன்னனுக்கு ஆயுதம் கொடுக்கிறது; மேலும் மாவோயிஸ்ட்டுகளுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. போன்ற உளவு அமைப்புகள் ஆயுதங்களை கொடுக்கிறது மொத்தத்தில் மாவோயிஸ்ட்டுகளின் பாதை நேபாள மக்களை விடுவிக்கப் போவதில்லை.
பல கட்சி ஜனநாயகமே தீர்வு!
நேபாள மக்களின் மனநிலை குறித்து 2003ஆம் ஆண்டு திரிபுவன் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த குழுவினர், நேபாள அரசியல் அறிஞர் பேராசிரியர் கிருஷ்ணா ஹாச்சுத்து தலைமையில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட விரிவான சர்வே முடிவு குறிப்பிடத்தக்கது. நாட்டு மக்களில் 62 சதவீதம் பேர் பல கட்சி ஜனநாயகத்தை விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் மன்னராட்சிக்கு வெறும் 10 சதவீதத்தினர் மட்டுமே ஆதரவாக உள்ளனர். அந்நாட்டின் ஜனநாயகத்திற்காக தொடர்ந்து போராடி வரும் மக்களது நம்பிக்கையைப் பெற்ற ஐக்கிய மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கட்சி மற்றும் நேபாள காங்கிரஸ் உட்பட இதர அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளுடன் விரிந்த – பரந்த அளவிலான, முழுமையான ஜனநாயகப் பூர்வமான பேச்சு வார்த்தையை நடத்தி தீர்வு காண்பதே சரியான அரசியல் நடவடிக்கையாக அமையும்! நேபாள அரசியல் சட்டம் அனுமதித்துள்ள பலகட்சி ஜனநாயகத்தை உடனடியாக நிலை நாட்டுவதோடு, நிலச்சீர்திருத்தம் உட்பட ஆரோக்கியமான அரசியல் நடவடிக்கையை எடுப்பதன் மூலமே, நிச்சயமற்ற – நம்பிக்கையற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கிட முடியும். ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முழுமையாக செயல்பட வைப்பதன் மூலமே நேபாளத்திற்கு புத்துயிரூட்ட முடியும்.