இந்த ஆண்டு (2005-06) பட்ஜெட்டை நிதியமைச்சர் சமர்ப்பித்த போதினிலே திருக்குறளும் தேனாக வந்து பாய்ந்தது காதினிலே என்று கூறுவோரும், இடதுசாரிகள் முன்வைத்த ஆலோசனைகளில் அழுத்திக் கூறிய கிராமப்புற வேலைவாய்ப்புகள், சமூக கட்டமைப்பை வளர்க்கும், கல்வி, சுகாதாரம் ஆகியவைகளுக்கு குறிப்பிட்டு நிதி ஒதுக்கியதை பாராட்டியோரும் இடதுசாரி கட்சிகளின் உணர்வை பிரதிபலிக்கும் குறளையும், அமர்த்தியா சென்னின்* கூற்றையும் ஓதியதை கேட்டு வரவேற்றோரும் பட்ஜெட் பழைய திசையிலே போகிறது அது மாறாமல் இந்த ஒதுக்கீடுகள் பலன் தராது என்று அழுத்தியே கூறுகின்றனர்.
நிதியமைச்சர் கூறிய குறள் சொல்வதென்ன?
“பிணியின்மை, செல்வம், விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ்வைந்து”
இதன் பொருள் ஒரு நாட்டிற்கு அழகு சேர்க்கும் ஐந்து என்னவென்றால், மக்கள் நோய் இல்லாதிருந்தல், மக்களிடம் செல்வம் (சிலரிடமல்ல), விளைபொருள், இன்பம், பாதுகாப்பு அதாவது ஏமம் ஆகிவைகளே
நமது நிதி அமைச்சர் சமர்ப்பித்த பட்ஜெட்டின் திசை இந்த ஐந்தையும் பெறும் நோக்கிலே இருக்கிறதா அல்லது பழைய பாதையான, அந்நிய, இந்திய சுரண்டும் கூட்டத்திற்கு சேவை செய்யும் பாதையிலே போகிறதா என்பதை பார்த்தால், நிபுணர்கள் கூறுவ தெல்லாம், இந்த பட்ஜெட் அபாயகரமான பாதையிலே முன்னைவிட அதிக தூரம் போய்விட்டது என்பதுதான்.
மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கிராமப்புற வேலை வாய்ப்பிற்கும், சுகாதாரத்திற்கும் கொஞ்சம் கூடுதல் ஒதுக்கியிருந்தாலும், ஏழை, நடுத்தர விவசாயிகளுக்கோ, விவசாய வளர்ச்சிக்கோ குறிப்பாக உணவுப் பாதுகாப்பிற்கோ இந்த பட்ஜெட் அக்கறை காட்டவில்லை. மேலும், வருவாய்க்கு உத்தரவாதம் செய்யாமல், செலவிடப் போவதாக கூறுவது வெறும் வாக்குறுதியாக போய்விடுமோ என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளனர்.
இவைகளை பார்த்தால் நிதி அமைச்சர் காதில்தான் தேனை பாய்ச்சினார்; நாக்கிலே தடவவில்லை என்றுதான் கூற முடிகிறது.
பட்ஜெட்டின் திசை மாறவில்லை என்பதற்கான பல அடையாளங்களை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றன.:
அவற்றில் சில:
- முதலாவதாக பெரிய, பெரிய நிறுவனங்களின் வருவாய்க்கு வரி குறைக்கப்படுகிறது. அதே நேரம் டீசல், பெட்ரோலுக்கு வரி விதித்திருப்பது தொத்து நோய் போல் பரவி எல்லா பொருட்களின் விலைகளை உயர்த்தி பணவீக்க நோயால் மக்கள் தவிப்பர்.
- வங்கிகளின் பாதுகாப்பிற்காகவும் அதில் பணம் போட்டிருப்பவர்களை பாதுகாக்கவும், பணப்புழக்கத்தை முறைப்படுத்தவும் சில கட்டுப்பாடுகளை அரசாங்க உத்திரவுப்படி ரிசர்வ் வங்கி விதித்திருந்தது.
- இந்த பட்ஜெட் அவைகளை நீக்கி விட்டது. தனியார் வங்கிக்கும், மோசடி பைனான்ஸ் கம்பெனிக்கும் இருக்கும் வேறுபாட்டை இது நீக்கி விடுகிறது. இனி ஏழைகள், விவசாயிகள் வட்டியாலும் சுரண்டப்படுவர். அவர்கள் போட்ட பணத்திற்கு பாதுகாப்பில்லை.
- சுரங்கத் தொழிலை அந்நிய முதலாளிகள் சொந்தமாக்கி நடத்தலாம்.
- பென்ஷனும் ஒரு பிசினஸ், அந்த பிசினிஸை வெளி நாட்டவர்களும் புகுந்து நடத்தலாம்.
- கட்டிட நிர்மாணத்திலும் வெளிநாட்டு பகாசுர கம்பெனிகள் புகுந்து விளையாடலாம்.
- ஒருவர் பெரும் செல்வந்தராக பங்கு சந்தையில் விளையாடலாம் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
பெரிய நிறுவனங்களின் வருமான வரி குறைப்பால் பொருளாதார வளர்ச்சியே தடைபடும். ஒரு பக்கம், மத்திய, மாநில அரசுகள் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை உருவாக்கும் பணிகளுக்கு பணமில்லை என்று கையை விரிப்பதை காண்கிறேம்.
மறுபக்கம் கொழுத்த லாபத்தில் திரண்ட பணத்தை இந்த பெரு முதலாளிகள் கூட்டம் ஆக்கப்பூர்வமாக முதலீடு செய்வதில்லை. பங்கு சந்தை சூதாட்டத்திலே பணத்தை சூழல விடுகிறார்கள். இதனால் பணம் பெருகும். ஆனால் உண்மையான செல்வம் வளராது.
சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளில் சில ரூபாய்களை முடக்கிய பா.ஜ.க. தலைவர் பிரமோத் மகாஜன் குடும்பம் பலநூறு கோடிகளை, திரட்டிய மர்மம் வெளியே வந்தது. இந்த பட்ஜெட் இவ்வாறு ஊக வாணிபங்களில் ஈடுபடுவோருக்கு ஊக்கம் கொடுத்துள்ளது.
இன்னொரு அபாயம் என்னவென்றால் பட்ஜெட் அறிவிப்புகளை, குறிப்பாக செலவினங்களை பணமில்லை என்று கூறி அவைகளை கைவிடும் உரிமைக்கு அரசு சட்டமே போட்டு வைத்துள்ளளது. பற்றாக்குறை குறிப்பிட்ட எல்லையைத் தாண்டாமல் தடுக்க பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியைக் கூட செலவிடாமல் இருக்க இந்த எப்.ஆர்.எம்.பி. சட்டம் வழிவகுக்கிறது.
இந்த பட்ஜெட்டின் அபாயகரமான போக்கு விவசாயத்துறையை புறக்கணிப்பதுதான். உணவுப் பாதுகாப்பை பற்றி இந்த பட்ஜெட் துளிக்கூட கவலை கொள்ளவில்லை.
பொதுத்துறை பங்குகளை விற்கும் யோசனையை முன்வைக்காத பட்ஜெட் என்பதால் மகிழ்ச்சி அடையவும் முடியவில்லை. காரணம், நெறிப்படுத்த வேண்டிய நிதி மூலதனத்தை கோவில் காளை மாடு மாதிரி எல்லா வயல்களையும் மேய முழுச் சுதந்திரம் கொடுத்திருப்பதுதான்.
வரலாற்று ரீதியாக வளரும் அரசாங்க கடனுக்கு வட்டி, பாதுகாப்பு செலவு, ஆகிய இரண்டும் வருவாயில் பெரும் பகுதியை விழுங்குவதைப் பற்றி இந்தப் பட்ஜெட் அக்கறை காட்டியதாகவே தெரியவில்லை. மக்கள் நலனும் தேசப் பாதுகாப்பும், தேச ஒற்றுமையையும், அடிநாதமாக மாற பெரும் திரள் மக்களின் தலையீடு அவசியமாகும்.