காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத கொள்கையால் துன்புற்ற தமிழக மக்கள் 1967இல் திராவிட முன்னேற்ற கழகத்திடம் ஆட்சியை ஒப்படைத்தனர். அதன்பிறகு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. தி.மு.க., அதிமுக இவ்விரு கட்சிகளிடையே உள்ள பகைமையை அதிகம் விவரிக்க வேண்டியதில்லை. எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் இவ்விரு கட்சிகளிடையேயும் நெருங்கி ஆராய்ந்தால் மட்டுமே தெரியக்கூடிய சில ஒற்றுமைகள் உண்டு.
இருவருக்கும் பொரளாதார கொள்கையில் வேற்றுமை கிடையாது. வேறு சில ஒற்றுமைகளும் உண்டு. ஜனநாயக உரிமைகள் வழங்குவதில், காவல்துறையை பிரயோகிப்பதில் தடுப்புக் காவல் சட்டத்தை பயன்படுத்துவதில் ஒற்றுமைகள் இருப்பதையும் புலனாய்வு செய்தால் தெரியவரும். இக்கட்டுரை அவைகளை ஆய்வு செய்யவில்லை; கடந்த 38 வருடங்களில் மக்களின் பொருளாதார வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை பரிசீலிக்கிறது. ஒரே விதமான பொருளாதார கொள்கையின் தொடர்ச்சியால் மக்களுக்கு கிடைத்த நிகர பலன் என்ன என்பதையும் மதிப்பீடு செய்ய முயற்சிக்கிறது.
தமிழக மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இன்றும் கிராமப்புறத்தில் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி தொழில், காடுகள் ஆகியவைகளை ஆதாரமாக கொண்டு வாழ்கின்றனர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழக மக்கள் தொகையில் 56.14 சதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். மேற்குறிப்பிட்ட தொழில்களை பெரும்பாலும் நம்பி வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரமாக அமைந்த இந்த தொழில்களின் மொத்த உற்பத்தி 1960-61 மதிப்பீட்டின் படி மாநில மொத்த உற்பத்தியில் 43.51 சதமாக இருந்தது. இன்று 2002-03 மதிப்பீட்டின்படி 15.97 சதமாக குறைந்துள்ளது.
காடுகள், விவசாயமற்ற பயன்பாட்டு நிலங்கள், தரிசு நிலங்கள், இதர வகை நிலங்கள் போக மாநில மொத்த பரப்பளவில் பயிரிடும் நில அளவை மதிப்பிட கடந்த 25 ஆண்டுகளை உள்ளடக்கி மேற்கொண்ட ஓர் ஆய்வின் படி மாநிலத்தில் பயிரிடும் நில அளவு அபாயகரமாக குறைந்துள்ளது. இது 1979-80ம் ஆண்டில் மாநில மொத்த நிலப்பரப்பில் 48.15 சதமாக இருந்தது. 2002-03ல் 38.65 சதமாக குறைந்துள்ளது.
நிலச்சீர்திருத்தம் என்பது கிராம மக்களின் வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் போக்கி சமூக நீதி பெறுவதற்கான சூழல் உருவாகும் என்பதை இரு கட்சிகளும் ஏற்க மறுக்கும் கொள்கையாகவே இருப்பதால்தான், ஏழை விவசாயிகளுக்கு நிலம் விநியோகம் என்பது இன்றுவரை தொங்கலில் இருந்து வருகிறது. சமீப காலமாக நிலவுடைமையில் ஏகபோகம் உருவாகிட வழிவகுக்கும், அரசாங்க உத்திரவுகள், சட்ட திருத்தங்கள், தரிசு நிலத்தை ஒதுக்குதல், காட்டு நிலத்தை ஒதுக்குதல் ஆகியவை சத்தமில்லாமல் நடந்தேறி வருகிறது. இது கிராமப்புற வறுமைக்கும், நகர்புறத்தை நாடி மக்கள் சென்று சாக்கடையோரத்தில் குடியேற்ற நகரம் உருவாக்கிடவும் அடிப்படை காரணமாகிறது. இலவச மின்சாரம் கூட, சிறு, குறு விவசாயிகளை சுரண்டவே பயன்படுகிறது. கூட்டுறவு அமைப்புகள் கூட கிராமப் பெரும் புள்ளிகளின் வேட்டைக்காடானது. சிறு விவசாயிகளும், ஏழை விவசாயிகளும் விவசாயம் கட்டுபடியாகாமல் நிலங்களை தரிசாக்கிவிட்டு வாழ வழிதேடி இடம்மாறினர் என்பதுதான் சோகமான உண்மை. இதன் விளைவாகதான் பிரதானமாக பயிரிடும் நில அளவு குறைந்து வரும் போக்கு உள்ளது.
மாநிலத்தில் விவசாய உற்பத்தி விகிதம் 2002-03 மதிப்பீட்டின்படி (-) 13.92 சதமாக குறைந்துள்ளது. உணவு தானிய உற்பத்தி மிக அபாயகரமாக குறைந்துள்ளது. உணவு தானியம் பயிரிடும் நிலஅளவு 2001-02ல் 34.52 லட்சம் ஹெக்டேராக இருந்தது. இது 2002-03ல் 27.92 லட்சம் ஹெக்டேராக குறைந்தது. தமிழக மக்களின் பிரதான உணவான அரிசி உற்பத்தி கடந்த சில ஆண்டுகளில் அபாயகரமாக குறைந்துள்ளது. 2001-02ல் நெல் உற்பத்தி அரிசி கணக்கில் 65-84 லட்சம் டன். இது 2002-03ல் 35.77 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. பருத்தி 2001-02ல் சுமார் 2.30 லட்சம் பேல் உற்பத்தி செய்யப்பட்டது. இது 2002-03ல் 84 ஆயிரம் பேல்களாக குறைந்தது.
உலகமயமாக்கல் ஆதிக்கத்திற்குள் இந்திய பொருளாதாரம் சென்றுவிட்ட பிறகு விவசாயம் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. 1991 லிருந்து 2001க்குள் 10 ஆண்டுகளில் இந்தியாவில் உணவு தானியம் பயிரிட்டு வந்த 80 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் ஏற்றுமதிக் கேற்ற பணப்பயிர்கள் பயிரிடும் நிலங்களாக மாற்றப்பட்டதாக உத்சா பட்னாயக் குறிப்பிடுகிறார். இதில் தமிழகத்தின் பங்கு எவ்வளவு என்பதற்கு புள்ளி விபரம் இல்லாவிட்டாலும், இங்கும் உணவு தானியம் பயிரிடப்படும் நில அளவு குறைந்து வரும் போக்கே உள்ளது. அரசே நெல் பயிரிட வேண்டாம், பணப் பயிருக்கு, நீர் குறைவாக தேவைப்படும் விவசாயத்திற்கு மாற வலியுறுத்துவதை அறிவோம்.
இந்தியாவில் நபர் ஒன்றுக்கு உணவு உட்கொள்ளும் தானிய அளவு ஓர் ஆண்டுக்கு 155 கிலோவாக குறைந்துள்ளது. இது 30 லட்சம் பேரை பலி கொண்ட வங்க பஞ்சம் ஏற்பட்ட இரண்டாம் உலக யுத்த காலத்தில் நபர் ஒன்றுக்கு இருந்த அளவைவிட குறைவு என உத்சாபட்னாயக் ஒப்பிட்டு குறிப்பிடுகிறார். மற்ற நாடுகளில் நபர் ஒன்றுக்கு ஆண்டுக்கு உட்கொள்ளும் தானிய அளவு அதிகமாக உள்ளது. உதாரணமாக சீனா 325 கிலோ, மெக்சிகோ 375 கிலோ, ஐரோப்பிய நாடுகள் 650 கிலோ, அமெரிக்கா 850 கிலோ.
கடந்த 38 வருடங்களில் கிராமப்புற விவசாயிகளின் வாழ்வில் வசந்தமே வீசவில்லை. மாறாக வெள்ளமும், வறட்சியும் வந்து அவர்களை இம்சித்தது என்றால் மிகையாகாது. தமிழகம் சங்க காலத்திலிருந்தே மழை நீரைத் தேக்கி சிறிய அளவிலான பாசன முறையை விரிவாக்கி அதை நம்பி இருந்த பண்பாடு கொண்டது. அதற்கு கடந்த 38 ஆண்டுகளில் போதுமான கவனம், செலுத்த வில்லை. அண்டை மாநிலங்களோடு நிதி நீர் தாவாக்களை காட்டியே இது கைவிடப்பட்டது. யார் மீது, யார் பழி போட்டாலும், உண்மை இதுதான்.
விவசாய துறையில் பொது முதலீடு அறவே நிறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற மேம்பாட்டிற்கான திட்ட ஒதுக்கீடுகள் பெரியளவில் குறைக்கப்பட்டன. வங்கி கடனுதவிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு அமைப்புகள் ஜனநாயகம் மறுக்கப்பட்டு சீரழிக்கப்பட்டன. விதைகள், உரம், பூச்சி கொல்லி மருந்து போன்ற இடுபொருட்கள் முழுதும் பன்னாட்டு நிறுவன ஆதிக்கத்தில் உள்ளன. இடுபொருட்களின் விலைகள். இந்த நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கேற்ப எந்த கட்டுபாடும் இன்றி நாள் தோறும் உயர்த்தப்படுகின்றன. விளைபொருட்கள் விலைகள் நாள் தோறும் குறைகின்றன. அரசு கொள்முதல், விலை நிர்ணயம் போன்ற விவசாயிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் அக்கரை காட்டப்படாமல் கைவிடப்பட்டு வருகின்றன. இலவசமின்சாரம் ஊசலாட்டத்தில் உள்ளது. பாசன நீர் தனியார்மய மாக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களிடம் விவசாயிகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் திசையை நோக்கி ஆட்சியாளர்களின் கொள்கை நிலைபாடுகள் வேகமாக நகர்கின்றன.
கிராமப்புற நெருக்கடியின் கோர முகம் விவசாயிகளின் தற்கொலைகளில் வெளிப்படுகிறது. இதுவரை இந்தியாவில் சுமார் 30,000 பேர் தற்கொலை செய்து மாண்டதாக பத்திரிக்கையாளர் சாய்நாத் மதிப்பிடுகிறார். இந்த எண்ணிக்கை சுனாமி பேரழிவில் இறந்தவர் எண்ணிக்கையை விட அதிகம். கடந்த மூன்றாண்டுகளில் அண்டை மாநிலம் ஆந்திராவில் மட்டும் 7,000 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கணக்கிட்டுள்ளனர். 2004ல் நடந்து முடிந்த ஆந்திர, கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் விவசாயிகள் தற்கொலைகள் மைய இடம் பிடித்தன. வெற்றி தோல்விகளை தீர்மானிக்க ஓரளவு காரணமாய் அமைந்தன. தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலைகள் பரவலாக நடைபெறுகின்றன. தமிழக ஊடகங்கள் இவற்றை முக்கியத்துவப்படுத்தவில்லை. சிவகாசி ஜெயலட்சுமி, சதுர்வேதி, ஜெயேந்திர சங்கராச்சாரியார் போன்றோரின் பாலியல் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து புலனாய்வு செய்தது போல் விவசாயிகள் தற்கொலைகளை ஊடகங்களால் புலனாய்வுக்கு உட்படுத்தவில்லை. மக்கள் இயக்கங்களும் இதில் போதிய கவனம் செலுத்தவில்லை. விளைவு தமிழக விவசாயிகள் தற்கொலைகள் சமூகப்பிரச்சனை யாக்கப் படாமல் குடும்ப துயரங்களாக மட்டுமே பதியப்பட்டு வருகின்றன.
கிராமப்புற நெருக்கடியின் மற்றொரு விளைவு இடம் பெயர்தல். உற்பத்தி பாதிப்பு, வறுமை, நெருக்கடி கிராம மக்களை குறிப்பாக விவசாய தொழிலாளர்கள், சிறு விவசாயிகளை நகரங்களை நோக்கி விரட்டுகிறது. நாட்டின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நகர்மயமாதல் விகித வேகம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் நகர்புற மக்கள் தொகை 90 லட்சமாக இருந்தது இது 2001 கணக்கின் படி 2 கோடியே 72 லட்சமாக உயர்ந்துள்ளது. தற்போது மாநில மக்கள் தொகையில் நகர்புற மக்கள் தொகை 43.86சதம். உலகமயமாக்கல் கொள்கைகள் அமுல்படுத்தப்பட்ட கடந்த பத்தாண்டுகளில் நகர்மயமாதல் மேலும் அதிகரித்துள்ளது. 1991-2001 ஆண்டுகளுக்கிடையில் கிராமப்புற மக்கள் தொகை 5.20சதம் குறைந்துள்ளது. நகர்புற மக்கள் தொகை 42.79 சதம் அதிகரித்துள்ளது.
நகர்மயமாதல் பொருளாதார வளர்ச்சியின் ஒரு பகுதி எனவும் வாதிடப்படுகிறது. நிலம் விவசாயம் தொடர்பான உற்பத்தியில் ஈடுபட்டு வந்த பெரும் பகுதி மக்கள் தொகை நகர்புறங்களில் பல் முனை வேலைகளில் திருப்பிவிடப்படுவதால் உற்பத்தி அதிகரிக்கும் என கருதப்படுகிறது. அமைப்புசார், அமைப்புசாரா துறைகளில் உற்பத்தி அதிகரிக்குமென வாதிடப்படுகிறது.
நகர்மயமாதலால் ஜாதீய ஓடுக்கு முறையின் தீவிரம் குறைவதாக கூறப்படுகிறது. நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் ஜாதிய ஒடுக்கு முறையிலிருந்து பெரும் பகுதி மக்கள் விடுவிக்கப்பட நகர்மயமாதல் உதவுவதாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் மிக வேகமாக நடந்தேறிவரும் நகர்மயமாதலின் சாதக பாதங்கள் போதிய அளவு அலசப்படவில்லை. இதனால் ஏற்படும் சமூகப் பொருளாதார விளைவுகளை பற்றி உரிய கவனத்துடன் ஆராயப்பட வில்லை.
வேகமான நகர்மயமாதல் மாநில உற்பத்தி பெருக்கத்தில் குறிப்பாக தொழில் உற்பத்தி பெருக்கத்தில் பிரதிபலிக்கவில்லை என்பதையே விவரங்கள் விளக்குகின்றன. 2002-03 மதிப்பீட்டின் படி மாநில மொத்த உற்பத்தியில் தொழில்துறை உற்பத்தி அளவு 29.71 சதம் மட்டுமே. இது ஆண்டுக்கு ஆண்டு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஜவுளிதுறையில் 2000-01ம் ஆண்டு 13.05 கோடி சதுர மீட்டர் துணி உற்பத்தி செய்யப்பட்டது. இது 2002-03ல் 7.75 கோடி சதுர மீட்டர் என சரிபாதியாக குறைந்தது. இதே காலத்தில் 18,000 மில் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். 11.64 சதவீத கைத்தறி நெசவாளர்களும், 4லட்சம் பவர்லூம்களும் உலகமயமாக்களை பின் பற்றும் ஆட்சியாளர்களின் கொள்கைகளால் அழிவின் விளிம்பில் நிற்கின்றன.
சர்கரை உற்பத்தி மாநிலத்தில் 2001-02ல் 18.39 லட்சம் டன் இது 2002-03 ல் 16.44 லட்சம் என 10.6 சதம் குறைந்தது. உரம் உற்பத்தி ஓர் ஆண்டில் 5.11 சதம் குறைந்தது.
வருடாந்தர ஆலைகள் கணக்கெடுப்பு மதிப்பீட்டின் படி 1998-99ல் தமிழகத்தில் மொத்தம் 20,478 ஆலைகள் இருந்தன 1999-2000த்தில் இவை 20,217 ஆக குறைந்தன. ஓர் ஆண்டில் 261 ஆலை மூடல்கள் மற்றும் ஆட் குறைப்பின் மூலம் 1.61 லட்சம் ஆலை தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 2000க்கு பிந்தைய ஆண்டுகளில் ஆலை மூடல் வேகம் அதிகரித்துள்ளது. தற்போது நிலமை மேலும் மோசமடைந்திருக்குமே தவிர மேம்பட வாய்ப்பே இல்லை.
தமிழகத்தில் சிறு தொழில்கள் மிக பெரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றன. தி.மு.க, அ.தி.மு.க அரசுகளின் பன்னாட்டு நிறுவன ஆதரவு நிலைபாடுகளால் சிறு தொழில்கள் பாதுகாப்பும் ஊக்கமும் இன்றி சந்தை போட்டியில் நிர்க்கதியாகவிடப்பட்டன. 2001-02 மத்திய அரசின் சிறு தொழில் நிறுவனங்கள் கணக்கெடுப்பு விவரப்படி தமிழகத்தில் 3.09 லட்சம் நிறுவனங்கள் சிறு தொழில்களாக பதிவு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் குறிப்பிட்ட கணக்கெடுப்பு காலத்தில் 1.68 லட்சம் மட்டுமே இயங்கி வந்தன. 1.41 லட்சம் மூடப்பட்டன. சிறுதொழில்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் 31.40 லட்சம் பேரில் சரிபாதிக்கு மேல் நிறுவனங்கள் மூடப்பட்டதால் வேலை இழந்துள்ளனர்.
தமிழகத்தில் அமைப்புசார் தொழிலாளர்கள் 2001-02 கணக்கு படி 25.16 லட்சம் 2001-03 ஓர் ஆண்டில் இது 24.02 ஆக குறைந்தது ஓய்வு, விருப்ப ஓய்வு, ஆலை மூடல்கள் மூலம் ஓர் ஆண்டில் மட்டும் 42,000 பொதுதுறை தொழிலாளர்களும், 72,000 தனியார்துறை அமைப்புசார் தொழிலாளர்களும் ஆகமொத்தம் 1.14 லட்சம் பேர் ஓர் ஆண்டில் வேலை இழந்துள்ளனர். போலீஸ் துறை தவிர மற்ற அரசுதுறைகள் அனைத்திலும் காலியிடங்களை நிரப்புவதற்கு தடை தமிழகத்தில் பதினைந்தாண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.
மாநிலத்தில் உள்ள மொத்தம் 34 வேலை வாய்ப்பகங்களில் 31 மார்ச் 2003ல் 52.31 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு செய்திருந்தனர். இவர்களில் பட்டபடிப்பு பட்டமேற்படிப்பு படித்தோர் 22 சதம் பேர்.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாநிலத்தின் உழைக்கும் மக்கள் தொகை 278.12 லட்சம். வேலை செய்யாதோர் 342.99 லட்சம் (பெண்கள், குழந்தைகள், வயதானோர் இதில் அடக்கம்) உழைக்கும் மக்களில் விவசாயிகள் 51.14 லட்சம் விவசாய தொழிலாளர்கள் 86.65 லட்சம் மற்றவர்கள் சுயதொழில், கட்டிட தொழில், தினகூலி என பலதரப்பட்ட முறைசாரா தொழில்களில் பணியாற்றுகின்றனர். தமிழக உழைக்கும் மக்களில் 92 சதம் பேர் முறைசாரா தொழில்களில் பணியாற்றிவருவதாக விவரங்கள் கூறுகின்றன.
ஆட்சியாளர்களின் கொள்கைகளின் விளைவாக நாள்தோறும் அதிகரித்து வரும் கிராமப்புற நெருக்கடி கிராமபுற ஏழைகளை நகரங்களை நோக்கி இடம் பெயரசெய்கிறது. இவர்கள் நகர் புறங்களில் முறைசாரா தொழில்களில் ஈடுபடுகின்றனர். அதிவேக நகர்மயமாதல் தமிழக தொழில் உற்பத்தியை பெருக்கவில்லை என்பது தெளிவு. தொழில் நெருக்கடி ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. தொழில்துறை விரிவாக்கமின்றி உற்பத்தி பெருக்கமின்றி மக்கள் தொகை நகர்மயமாதல் நகர்புற நெருக்கடிகளை அதிகரிக்க செய்கிறது. குடிசை பகுதிகள் அதிகரித்தல், குடியிருப்பு இடநெருக்கடி, அடிப்படை வசதிகள் பற்றாக்குறை, போக்கு வரத்து நெரிசல், குற்ற செயல் அதிகரித்தல் என பல விளைவுகளை இது ஏற்படுத்துகிறது. நகர்புற ஏழைகளின் எண்ணிக்கை விபரீதமாக அதிகரிப்பதால் முறைசாரா தொழில்களில் கூலி மதிப்பு குறைகிறது. முறைசார் (Organaized) தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான போராட்டங்கள் பலகீனப்படுத்தப்பட்டு, கூட்டு பேரம் வலுவிழந்து விடுகிறது.
குடிசை பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் திட்டங்கள் கைவிடப்பட்டன. குடிசை மாற்றுவாரியம் அரசு நிதி ஒதுக்கீடு இன்றி, புதிய திட்டங்கள் எதுவும் இன்றி மூடு விழாவை நெருங்கி கொண்டிருக்கிறது. குடிசை மக்களை நடைபாதை வாசிகளாக அந்தஸ்து இறக்க செய்யும் அரசு திட்டங்கள் வேகமாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. முறை சாரா தொழிலாளர் நலதிட்டங்கள் செய்திதாள் விளம்பரங்களாக மட்டுமே மிஞ்சுகின்றன. நகர்புற ஏழைகளின் வாழ்கை நாள் தோறும் நரகமாக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் தகவல் தொழில் நுட்ப துறையில் அபரிமிதமாக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த துறை உள்ளிட்ட சேவைதுறை உற்பத்தி அளவு அதிகரித்துள்ளது. 2002-03 மதிப்பீட்டின் படி மாநில மொத்த உற்பத்தியில் சேவை துறை பங்கு 54.32 சதமாக அதிகரித்துள்ளது. விவசாய உற்பத்தி, தொழில் உற்பத்தி படுமோசமாக குறைந்துவிட்ட நிலையில் சேவைதுறை உற்பத்தி அளவு அதிகரித்தல் ஆரோக்கியமற்ற பொருளாதார வளர்ச்சி ஆகும். ஏனெனில் இது ஏற்றுமதியை நம்பியே வளர்ந்துள்ளது.
1993-94ல் தமிழகத்தில் 10 மென் பொருள் கம்பெனிகள் இருந்தன. இவற்றின் ஆண்டு ஏற்றுமதி ரூ 2.4 கோடியாக இருந்தது. 2002-03 இந்த கம்பெனிகளின் எண்ணிக்கை 934 உயர்ந்தது. ஆண்டு ஏற்றுமதி அளவு ரூ 6315.51 கோடியாக உயர்ந்தது. உலகமயத்தால் ஏற்பட்ட வளர்ச்சியைத் தவிர சமச்சீரான வளர்ச்சிக்கு தமிழகத்தில் உணர்வுபூர்வமான கொள்கையோ, நடைமுறையோ இல்லை!
விவசாயம், தொழில், சேவை ஆகிய மூன்றுதுறையிலும் சமச்சீரான வளர்ச்சியே வலுவான பொருளாதார அடிப்படையாகும்.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அவரவர்கள் ஆட்சி காலத்தில் தகவல் தொடர்பு துறை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வசதிகள் ஏற்படுத்தி தருவதில் முதல் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டன. தென் சென்னை புறநகர பகுதிகள் முழுவதையும் இந்த கம்பெனிகள் ஆக்கிரமித்துள்ளன. டைடல் பார்க் 10லட்சம் சதுர அடி உள்ளளவில் கட்டி ஒதுக்கப்பட்டது. தற்போது டைடல் பார்க் 2, 15 லட்சம் சதுரஅடி உள்ளளவுடன் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது. தகவல் தொடர்பு துறையில் இந்திய பன்னாட்டு நிறுவனங்களான மூன்று பெரிய கம்பெனிகள் இன்ஃபோசிஸ், விப்ரோ, டாடா கன்சல்டென்சி சர்வீசஸ் விமிடெட். ஒவ்வொன்றும் 70 ஏக்கருக்கு அதிகமான நில பரப்பில் விரிவாக்கம் செய்ய தென் சென்னை புறநகரில் வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. சிறு சேரியில் 1000 ஏக்கரில், செங்கல்பட்டு அருகில் 1700 ஏக்கரில் தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை அருகில் சோழிங்கநல்லூரில் அறிவியல் தொழில்நுட்ப நகரம் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கோயம்புத்தூரில் தகவல் தொழில் நுட்ப இரண்டாம் மட்ட நகரங்களை அமைக்க நிலங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன. தகவல் தொடர்பு துறையில் பன்னாட்டு நிறுவனங் களாகவுள்ள இந்திய கம்பெனிகள் 10 இவை அனைத்தும் தமிழகத்தில் சென்னையில் இயங்குகின்றன.
வெளிநாட்டு உள்நாட்டு தகவல் தொடர்பு கம்பெனிகளுக்கான வசதிகள் வேண்டிய அளவு செய்துதரப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு நிறுவனங்கள் அமைந்துள்ள பழைய மாமல்லபுரம் சாலை இந்த நிறுவனங்களின் வாசல்படியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு மக்கள் பணத்தை பல நூறு கோடி செலவிட்டது. 2005ல் அடையார் மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை இந்த சாலை மேம்பாட்டிற்கு மட்டும் ரூ 200 கோடி ஒதுக்கப்பட்டு திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 50லட்சம் சதுர அடி அளவிற்கு இந்த நிறுவனங்களுக்கு அலுவலக இடவசதி ஏற்படுத்தி தர அரசு அறிவித்துள்ளது. 40,000 கிலோ மீட்டர் அளவிற்கு ஆப்டிக் ஃபைபர் கேபில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு துறை வளர்ச்சியின் மூலம் புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்த புதிய வேலைகளின் அளவு மிக குறைவு. தொழில் துறை உற்பத்தியில் ஏற்பட்டட பாதிப்பால் தமிழகத்தில் இஞ்சினியரிங் ஆலைகள், ஜவுளி ஆலைகள் இதர பாரம்பரிய ஆலைகளில் இழக்கப்பட்ட வேலைகளின் அளவுடன் ஒப்பிட்டால் இந்த புதிய வேலைகளின் அளவு மிக மிக குறைவானதே.
தகவல் தொடர்பு துறையில் ஏற்பட்ட புதிய வேலை வாய்ப்புகளில் சமூக நீதி அடியோடு மறுக்கப்படுகிறது. இந்த துறை கம்பெனிகள் முறையான படிப்புக்கு மேல் தங்கள் சொந்த தேர்வுகளின் மூலமே வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். தலித் மற்றும் பிற்படுத்தபட்டவர்கள் இந்த துறை ஊழியர்களில் மிக அரிதாகவே காண முடிகிறது. சமூக நீதி காவலர்கள் இந்த துறையில் இட ஒதுக்கீடு பற்றி மூச்சுவிட்டதில்லை.
அனைவருக்கும் வேலை, சமச்சீரான துறை வளர்ச்சி என்ற கொள்கை இல்லாததினால், தகவல் தொடர்புத்துறையில் பெருமளவு வசதிகளைப் பெற்று வளரும் அந்நிய முதலாளிகளிடம், இடஒதுக்கீடு பற்றி இவர்களால் பேச முடியவில்லை; விளைவு, தமிழ்நாடு அந்நிய முதலாளிகளின் வேட்டைக்காடாக ஆகி வருகிறது என்பதுதான்.
தமிழகத்தின் ஆபத்தான பொருளாதார வளர்ச்சிக்கு மாநிலத்தை ஆண்ட தி.மு.க, அ.தி.மு.க மட்டும்தான் பொறுப்பா? மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ், பா.ஜ.க., இதர கட்சிகளுக்கு பொறுப்பில்லையா? கேள்விகள் நியாயமானவையே மத்திய ஆட்சியாளர்களின் கொள்கைகள்தான் அனைத்தையும் நிர்ணயிக்கும் சக்தி படைத்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் தி.மு.கவும் அ.தி.மு.கவும் தங்களின் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் பொருளாதார கொள்கை திட்டங்களுடன் மாறுபட்ட ஒரு நிகழ்வை கூட எடுத்துகாட்டாக கூட காண முடியவில்லை. இவர்கள் எதிர்கட்சிகளாக இருந்த காலத்திலும் மத்திய ஆட்சியாளர்களின் கொள்கைகளை ஆதரித்து வந்தனர். பல சந்தர்ப்பங்களில் இந்த இருகட்சிகளும் முக்கிய அமைச்சர்களாக மத்திய அரசில் பங்கெடுத்து வந்தனர்.
தி.மு.க துவக்கம் முதல் 1967ல் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வரை காங்கிரஸின் பொருளாதார கொள்கைகளுடன் மாறுபட்டிருந்தது. காங்கிரஸின் பெருமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சார்பை வெளிப்படையாக விமர்சித்து பிரச்சார இயக்கங்களும் நடத்தினர். காங்கிரசின் பொருளாதார கொள்கைகளின் பால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியும் தி.மு.க 1967 தேர்தலில் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. மாநில ஆட்சியை கைப் பற்றியதும் இந்த நிலை மாறியது. முற்றிலுமாக கைவிடப்பட்டது. அ.தி.மு.க துவக்கம் முதலே மத்திய ஆளும் கட்சிகளுடன் உறவாடிவந்தது. ஒரு சந்தர்ப்பத்திலும் முரண்பட்டதில்லை.
இந்திய பொருளாதாரத்தில் உலக மயமாக்கல் மாற்றங்கள் வேகமடைய துவங்கியது முதல் இந்த கட்சிகளின் தலைமை அன்னிய மூலதனத்தின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகளாக செயல்பட்டு வந்தனர். இதற்கு தேவையான உள் கட்டுமான மாற்றங்களை வசதிகளை செய்து தருவதில் போட்டா போட்டியுடன் முன்னணியில் நின்றனர். வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் இத்திசையை நோக்கியே அமைந்தன. 1991 முதல் 2003 வரை தமிழகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் 2487 ஒப்புதல் பெற்றன. இவற்றில் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் 598 மட்டுமே. மற்ற 1889 நிதித்துறையை சார்ந்தவை இந்த ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ. 24752/- கோடி.
இந்த ஒப்பந்தங்களினால் லாபம் எங்கு போய் குவியும் என்பது மர்மமாக இருந்தாலும், தமிழக மக்களுக்கு பலன் சேராது. வேலையில்லாத் திண்டாட்டம் போகாது. கிராமப்புற வறுமை ஒழியாது, குழந்தை உழைப்பும், கொத்தடிமை முறையுமே தமிழக ஏழைகளின் வாய்ப்பாக உள்ளது. கள்ளச் சாராயம், கொலை, கொள்ளை போன்ற சமூகக் கேடுகள் பொருளாதார வாழ்விற்கான மூலதாரங்களில் ஒன்றாக இருந்து வருவது ஒழியாது. மக்களின் பொருளாதார வாழ்வில் 40 ஆண்டுகளாக மாற்றம் இல்லை என்பது நிதர்சனமாக தெரிகிறது.
இப்பொழுது மக்கள் விரும்புவதெல்லாம் ஆளும் கட்சிகள் மாறினால் போதாது, அவர்களது கொள்கைகளும் மாற வேண்டும்; திராவிட இயக்கப் பற்றாளர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பிரச்சினை. லாவணி அரசியல் சந்தர்ப்பவாதிகளின் கை ஓங்க செய்யுமே தவிர, மக்களை ஈர்க்கும் மாற்றுக் கொள்கைகளை உருவாக்கிடாது!
க. மாதவ்