அறிமுகம்
ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. சாதாரணமாக, மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி கடைசி தேதியில் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு ஒரு வாரம் அல்லது சில நாட்கள் முன்னதாக மக்களவை கூடுகிறது. அச்சமயம் மத்திய அரசின் நிதியமைச்சகத்தால் தயார் செய்யப்பட்ட நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
ஆய்வு அறிக்கை
மக்களவையில் அரசு தாக்கல் செய்யும் பொருளாதார ஆய்வு அறிக்கை நடப்பு ஆண்டில் நாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களையும் நிகழ்வுகளையும் ஆய்வு செய்து தற்போதைய நாட்டுப் பொரளாதா நிலை பற்றிய மதிப்பீட்டை அளிக்க வேண்டும். அதோடு, நடப்பு பொருளாதார பிரச்சினை தொடர்பான அரசின் கொள்கைகளையும் அவ்வறிக்கை முன்வைக்கும்.
இரண்டு பகுதிகளைக் கொண்ட ஆய்வு அறிக்கையின் முதல் பகுதி மேற்கூறிய ஆய்வு மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இரண்டாம் பகுதி இந்தியப் பொருளாதாரம் பற்றிய ஏராளமான புள்ளி விவரங்களை அட்டவணைகளாக அளிக்கும்.
அரசின் ஊதுகுழல்
அறிக்கையின் பெயர் பொருளாதார ஆய்வு அறிக்கை என்றாலும் கூட, இது பெரும்பாலும் உண்மையான, அறிவியல் பூர்வமான, ஆய்வு அறிக்கையாக அமைவதில்லை. மாறாக, ஆளும் அரசின் ஊதுகுழலாகவே இவ்வறிக்கை அமைகிறது. அதிலும், 1999 முதல் 2004 வரை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபொழுது, ஆய்வு அறிக்கை அப்பட்டமாகவே அரசு கொள்கைகளுக்கு முலாம் பூசும் வகையில் தெளிவு செய்யப்பட்ட சில விவரங்களை மட்டும் முன்னிறுத்தி எழுதப்பட்டது.
நடப்பு ஆண்டுக்கான ஆய்வு அறிக்கை அந்த அளவிற்கு அப்பட்டமாக இல்லாவிட்டாலும், பெருமளவிற்கு அரசின் உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகளுக்கு ஆதரவான வகையிலேயே எழுதப்பட்டுள்ளது. இருப்பினும், இன்றைய அரசியல் சூழ்நிலை காரணமாக, ஊரக வளர்ச்சி, வேளாண்மை, சமூகத்துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தையும் வேலை உத்தரவாதம் பிரச்சினை பற்றியும் எழுத வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
மெத்தனப் போக்கு
2004-05 ஆண்டில் இதுவரை உள்ள தகவல்களின்படி பார்த்தால் நாட்டின் மொத்த உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 6.9 சதமானம் என்று அரசு கணக்கிட்டுள்ளது. இவையனைத்தையும் கடந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 7 சதவீதம் என்றும் ஆய்வறிக்கை வாதாடுகிறது. மேலும் இந்த சாதனை தாராளமயக் கொள்கைகளின் வெற்றியே எனக் கருதுகிறது. உண்மை நிலை வேறு. 1990களில் நாட்டின் உற்பத்தி வளர்ச்சி விகிதங்களை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி, இந்தியாவில் வளர்ச்சி விகிதங்கள் ஒரே சீராக இருப்பதில்லை என்றும் ஏறுமுகம், இறங்குமுகம் என்ற சூழ்ச்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளது. அது மேலும் கூறியுள்ளது என்னவென்றால் 1990களில் இச்சூழற்சி அடிப்படையில் கணக்கிட்டால், சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 4.4 சதமானம் தான் என்பதாகும். உண்மை நிலைமை இப்படி இருக்கும் பொழுது, 2003-2004, 2005-05இல் 8 மாதங்கள் ஆகிய 20 மாதக் கணக்கை வைத்து அதிக 7 சதவீதம் வளர்ச்சி விகிதம் என்ற புதிய பொருளாதார வளர்ச்சிப் பாதையில் நாடு எட்டி விட்டது என்று கூறுவது மிகையானாலும் உண்மைக்குப் புறம்பானதும் ஆகும். மேலும் 2002-03ஆம் ஆண்டு வளர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருந்தது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். எப்படியாவது தாராளமயக் கொள்கைகளை நியாயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதுவது ஆய்வு அறிக்கைக்கு அழகல்ல.
தாராளமயப் பார்வை
மொத்த உற்பத்தி வளர்ச்சி கடந்த 2 ஆண்டுகளில் முறையே 8.5 சதவீதம், 6.9 சதவீதம் என்பதோடு, தொழில்துறையும் வேகமாக வளர்ந்துள்ளதாக அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த நிதி ஆண்டு (2003-2004) ஏப்ரல் 3 நவம்பரில் 7.0 சதவீதம் ஆக இருந்த தொழில்துறை ஆண்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஏப்ரல் – ஜனவரி வரையில் 8.4 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. இதை சுட்டிக்காட்டி பெட்ரோலியும் விலை உயர்வு, சுனாமி, குறைந்த மழை ஆகிய அதிர்ச்சிகளையும் மீறி தொழில் வளர்ச்சி வேகமடைந்துள்ளது என்றும் இதற்குக் காரணம் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள்தான் என்றும் ஆய்வு அறிக்கை வாதிடுகிறது. இதுவும் மிகையானதும் தவறானதுமான வாதம் ஆகும். கடந்த பல ஆண்டுகளாக தொழில்துறை வளர்ச்சி என்ற இறக்கங்கள் நிறைந்தே காணப்படுகிறது. இதன் பலவீனங்களுக்கு, பொதுத்துறை முதலீடுகள் முடக்கப்பட்டிருப்பதும், அரசின் வரவு – செலவு முடக்கப்பட்டிருப்பதும், அரசின் வரவு – செலவு நெருக்கடி வளக்குறைப்பாலும் வரி ஏய்ப்பாலும் தாராளமய – தனியார்மய – உலகமய கொள்கைகளாலும் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதும முக்கிய காரணங்களாகும். உண்மையில், எல்.சி.ஜி. சீர்திருத்தங்களைத் தவிர்த்து, அரசு முன்முயற்சி எடுத்து, வளங்களை வரிகள் மூலம் திரட்டி, பொதுத்துறை முதலீடுகளை அதிகரித்திருந்தால், தொழில் வளர்ச்சி சீராகவும், சிறப்பாகவும் இருந்திருக்கும்.
வேளாண்துறை நெருக்கடி
நடப்பு நிதியாண்டில் வேளாண்துறை கடும் சரிவை சந்தித்துள்ளது. வேளாண்துறை வளர்ச்சி விகிதம் 1.1 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது. ஆய்வு அறிக்கை இச்சரிவு பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. வேளாண் வளர்ச்சி பற்றி ஒரு மெத்தனப் போக்குள்ளது. கடந்த சில ஆண்டுகளின் அனுபவமும் தொடரும் விவசாயிகள் தற்கொலைகளும், வேளாண்துறை மற்றும் ஊரகப் பொருளாதாரத்தின் நெருக்கடியை உணர்த்தியுள்ள போதிலும், அதன் தீவிரத்தன்மையை ஆய்வு அறிக்கை அழுத்தமாகப் பதிவு செய்யவில்லை. அது மட்டுமல்ல; எந்த சீர்திருத்தங்கள் விவசாயிகள் வாழ்க்கையைப் பாழாக்கியுள்ளனவோ அவையே வேளாண் நெருக்கடிக்குத் தீர்வு என்ற கருத்தை ஆய்வறிக்கை முன்வைக்கிறது. வேளாண்துறையில் சந்தைகளை வலுப்படுத்தி, கட்டுப்பாடுகளை அகற்றித்தான் வேளாண்துறை முன்னேற முடியும் என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது. ஆழமான வேளாண் நெருக்கடிக்கு எப்படி மைக்ரோ கிரெடிட் என்ற சிறு நிதி ஏற்பாடுகள் தீர்வாகவும், வங்கியமைப்பு எப்படித் தீர்வாகும்? இறக்குமதி – ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை நீக்கி விளை பொருள் விலையை வீழ்த்தி, மான்யங்களை வெட்டி இடுபொருள் விலைகளை உயர்த்தி, பொது முதலீட்டை வெட்டி வேளாண்துறை பெரும் சரிவுக்குள்ளாக்கப் பட்டுள்ளது. இதைச் சரி செய்ய தாராளமயக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டுமல்லவா? வேளாண்துறை வளர்ச்சிக்கு மின்சாரம், எரிசக்தி, போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகிய கட்டமைப்புத்துறைகளில் முதலீடு மிக அவசியம் என்று ஆய்வு அறிக்கை ஒத்துக் கொள்கிறது. ஆனால் இதைச் செய்ய பொதுத்துறை – தனியார்துறை பங்காளி முறை (பப்ளிக் – பிரைவேட் பார்ட்னர்ஷிப்) என்பதையே பரிந்துறைக்கிறது. பொதுவாக வேளாண் வளர்ச்சியை எல்.பி.ஜி. கொள்கைகள் மூலமே தான் சாதிக்க முடியும் என்ற கருத்தே ஆய்வு அறிக்கையில் அடிநாதமாக உள்ளது. மேலும் நாட்டில் உணவு உற்பத்தி மிகையாகி விட்டது என்றும் இனி பணப்பயிர்களுக்கு குறிப்பாக தோட்டப் பயிர்களுகும் பிற ஏற்றுமதி சந்தை சார்ந்த வேளாண்மைக்கும் – அதிக அழுத்தம்தரப்பட வேண்டும் என்றும் அறிக்கை முன்வைக்கும் வாதம் ஆபத்தானது. கடந்த 15 ஆண்டுகளில் உணவு தானிய உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை விடக் குறைவாகவே உள்ளது. இன்று அரசு கிடங்குகளில் 3 கோடி டன் உணவு தானியம் குவிந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் பொது விநியோக அமைப்பில் வழங்கும் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதும் பொது விநியோக முறை சுருங்கியிருப்பதும், கிராமங்களில் மக்களுக்கு வேலை வாய்ப்பு வருமானம் குறைந்திருப்பதுமே ஊரகப் பகுதியின் கடும் நெருக்கடி, அதற்கான காரணங்கள் பற்றிய புரிதல் ஆய்வு அறிக்கையில் இல்லை என்றே கூறலாம். கிராமங்களில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள், குறிப்பாக நலம் மற்றும் உற்பத்தி சொத்துக்களின் ஏகபோகக் குவிப்பு ஆகியவை ஆய்வு அறிக்கையின் பார்வையில் இல்லை என்பது வியப்பான செய்தியல்ல.
முன்னணி முதலாளித்துவ நாடுகள் அவர்களது வேளாண்மை துறைக்கு அளிக்கும் மான்யங்கள், ஏழை நாடுகளை பாதிப்பது பற்றியக்குறிப்பாகும். ஆய்வுஅறிக்கை இதனை உலக வர்த்தக அமைப்புக்கு உள்ளேயும், வெளியேயும் எப்படி எதிர் கொள்வது என்பது பற்றிய ஆலோசனைகள் எதையும் முன்வைக்கவில்லை. மாறாக, அறிக்கையின் பிரதான அழுத்தம் என்னவென்றால், மான்யங்களை குறைப்பதும் உற்பத்தித் திறனை உயர்த்திப் பன்னாட்டுப் போட்டியை சந்திப்பதும்தான் வேளாண்துறையில் நம்முன் உள்ள சாத்தியமான வழிமுறை என்பதே.
இந்தப் பார்வையை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.
பட்ஜெட் பற்றாக்குறை கட்டுப்படுத்தும் சட்டம்
ஆய்வு அறிக்கை அரசின் பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஃஎப்.ஆர்.பி.எம். ஆக்ட் என்ற சட்டத்தை வேதவாக்காக எடுத்துக் கொள்கிறது. .அதன்படி அரசின் பற்றாக்குறையைக் குறைத்தே ஆக வேண்டும் என்று மட்டுமல்ல, அதைக் குறைக்க வரிகளை உயர்த்தி அரசு வருவாயைப் பெருக்குவதன் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்பதே ஆய்வு அறிக்கையின் உள்ளார்ந்த வாதம். அறிக்கையின் பார்வை என்னவென்றால் அரசியல் என்பது புதிய பொருளாதாரப் பாதையில் தேவையற்ற தலையீடு, ஜனநாயகமும் தேர்தல்களும் ஒருவகையான நெருக்கடியை ஏற்படுத்தும் தொந்தரவுகள், சந்தைசார் பாதையே சரியான பாதை என்பதாகும்.
இருப்பினும், 2004ஆம் ஆண்டு மக்கள் அளித்த மாபெரும் தீர்ப்புக்குப்பின் உருவாகியுள்ள அரசியல் சூழலில் ஆய்வு அறிக்கையால் மக்கள் பிரச்சினைகளை முழுமையாக புறக்கணிக்க முடியவில்லை. அவ்வப்பொழுது, தேசீயக் குறைந்தபட்சம் பொதுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மக்களுக்குச் சாதகமான சில அம்சங்களையும் குறிப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் அறிக்கைக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அறிக்கையின் பெரும் பகுதி பங்குச் சந்தை செயல்பாடு, அன்னிய நிதி மூலதனம், அன்னிய உற்பத்தி மூலதனம் ஆகியவற்றின் அவசர அவசியத்தை முன்வைப்பதாகவே அமைந்துள்ளது.
உழைப்பாளி மக்களைப் பற்றி ஆய்வு அறிக்கையில் எங்கு குறிப்பிடப்படுகிறது, தொழில் உறவுச் சட்டங்கள் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளன, அவை மாற்றப்பட்டு, உழைப்பாளிகளை வீட்டுக்கு அனுப்பும் அதிகாரம் முதலாளிகளுக்கு முழுமையாகத் தரப்பட வேண்டும். அரசு இதில் தலையிடக் கூடாது. அப்படி செய்தால் தான் இந்திய முதலாளிகள் பன்னாட்டுச் சந்தையில் போட்டியிட முடியும் என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது. தெளிவான தொழிலாளி வர்க்க விரோதப் பார்வையை இங்கே காணலாம்.
ஆய்வு அறிக்கை ஒரு இரட்டைக் குதிரை சவாரி செய்ய முயல்கிறது. அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக, தேசீய குறைந்தபட்சப் பொதுத் திட்டம் பற்றியும் ஊரக வளர்ச்சி, வேளாண்துறை கட்டமைப்பு, கல்வி மற்றும் ஆரோக்கியத்துறைகளில் அரசு முதலீடு மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும், ஓரிரு இடங்களில் ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால், இவற்றைச் செய்வற்குத் தேவையான விவரங்களை எவ்வாறு அரசு திரட்டும் என்ற கேள்வி வரும் பொழுது, செல்வந்தர்கள், அன்னிய, இந்திய ஏகபோகங்கள் மீது உரிய வரிகளை விதித்து, கறாராக அவற்றை வசூல் செய்ய அரசு தயாராக இல்லை. மாறாக, ஆய்வு அறிக்கை கூறுவது என்னவென்றால், வரி விகிதங்களைக் குறைத்தாலே வரி ஏய்ப்பு குறைந்து வரி வசூல் உயர்ந்து விடும் என்பது தான். இது தவிர, வரி நிர்வாக அமைப்பை பின் ஆட்சி முறை மூலம் சரி செய்து விடலாம் என்ற கற்பனையையும் அறிக்கை முன்வைக்கிறது. இரட்டை குதிரை சவாரி செய்ய முயன்றாலும், ஆய்வு அறிக்கையின் இதயத் துடிப்பு தாரக மந்திரமும் புதிய தாராளவாதமாகவே உள்ளது.