I 1 I – I 2 I – I 3 I – I 4 I – I 5 I
Download as PDF: ஜோசப் ஸ்டாலின் – என். நன்மாறன் PDF Book
“மீசையை முறுக்கு
விழித்த விழியில்மேலே ஏற்று
மேதினிக் கொளி செய்”
என்றார் பாவேந்தர் பாரதி தாசன். இந்த வரிகளுக்கு ஏற்ப முக வடிவம் தேடினால் தோழர் ஸ்டாலின் அவர்களின் திரு உருவம் முன் நிற்கும். அப்பெருமகனார் குறித்து இக்கட்டுரை வெளிவருகிறது.
ஐரோப்பாக் கண்டத்தில் கருங்கடல் உண்டு. காஸ்பியன் கடலும் உண்டு. இரண்டிற்கும் இடையில் உள்ள பகுதி தான் ‘காக்கேசியா’ என்பது இதன் தலைநகர் “டிப்ளிஸ்”, இதற்கு அருகில் உள்ள குக்கிராமம் தான் தோழர் ஸ்டாலின் அவர்களது முன்னோர் வசித்த கிராமம்.
தந்தை பெயர் விசரியோன். தாத்தா பெயர் ஐவன். தாத்தா பண்ணை அடிமை. தந்தை செருப்பு தைக்கும் தொழிலாளி. பண்ணை அடிமை என்றால் தற்போது புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்.
நில உடமையாளர்கள் தமது சொத்துக்களைக் கூறும்போது இவ்வளவு நிலம் உண்டு. இவ்வளவு மாடுகள் உண்டு, ஆடுகள் உண்டு என்பது போல் இவ்வளவு ஆட்கள் என்னிடம் அடிமைகளாக உள்ளனர் என்றும் கூறுவர். ஆடுகளையும் மாடுகளையும் விற்பது போல் அடிமைகளாக உள்ள மனிதர்களையும் விற்பதும் வாங்குவதும் உண்டு. இந்த நிலையில் படிப்படியான மாற்றம் வந்தது. இக்காலப் பகுதி நிலப்பிரபுத்துவ சமுதாயம் என்றும் அதில் நிலவிய பண்ணை அடிமைச் சமுதாயம் என்றும் அழைக்கப்பட்டது.
ஐரோப்பாக் கண்டத்தில் புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் மூலதனம் சிலரிடம் குவியத் துவங்கியதும் முதலாளித்துவ வளர்ச்சிக்கு உதவியது. நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கும் பண்ணை அடிமை முறைக்கும் எதிரான குரலும் ஓங்கி ஒலித்தது. அடிமைகள் மத்தியிலும் தாங்களும் மனிதர்களே என்ற உணர்வும் வலுவடைந்தது.
பண்ணை அடிமை முறை படிப்படியாகத் தகர்ந்தது. புதிய தொழிற்சாலைகள் தோன்றின. அவரவர் தமக்கு வாய்ப்புள்ள இடங்களை நோக்கிச் சென்றனர். அன்று இளைஞராக இருந்த ஸ்டாலினின் தந்தை தமக்குத் தெரிந்த செருப்புத் தைக்கும் தொழிலை மேற்கொள்ள தமது கிராமத்தை விட்டு காரி என்னும் ஊரை அடைந்தார். அவர்கள் பேசிய மொழி ஜார்ஜிய மொழி. இனம் ஜார்ஜிய இனம். காரி என்னும் ஜார்ஜியச் சொல்லுக்கு குன்று என்று பொருள்.
இப்பகுதியில் மக்களிடம் நேரடியாக செருப்புத் தைத்துப் பிழைத்து வந்த ஸ்டாலினின் தந்தை மிகவும் சிரமப்பட்டார். தொழில் சரியாக நடக்கவில்லை. மக்கள் தொழிற்சாலையில் தயாராகும் செருப்புக்களையே விரும்பினர்.
ஸ்டாலினின் தந்தையும் தாம் சுயமாகத் தைத்து விற்பதை விட ஏதேனும் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலைக்குச் சேர முடிவு செய்தார். காக்கேசியாவின் தலைநகர் ஆக இருந்த “டிப்ளிஸ்” என்னும் நகரை அடைந்தார். அங்கு இருந்த தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். இதே போன்று தான் பலரும் மாறினர்.
தனி ஒரு நிலப்பிரபுவிடம் இதுகாறும் உணவுக்காக அடிமையாக இருந்த நிலைமை மாறியது. தற்போது பணம் படைத்த முதலாளிகளிடம் கூலி பெறும் அடிமைகளாக மாறினர்.
உணவுக்கான அடிமை; தான் விரும்பியபடி எங்கும் செல்ல முடியாது. ஆனால், கூலி பெறும் அடிமை தனது உழைப்பை விற்க எங்கும் செல்லலாம். முன்பு அவன் பெயர் அடிமை. தற்போது தொழிலாளி அடிமைத் தனம் நீடித்தது. உரிமையாளர்களின் அணுகுமுறையில் மட்டும் மாறுதல் இருந்தது.
ஸ்டாலினின் தந்தை பிறரைப் போன்றே தானும் மாறினார். வேலைச்சுமை அதிகம். கூலிப் பணம் குறைவு. வாழ்க்கையை ஈடுசெய்ய முடியவில்லை. ஸ்டாலினின் தாய் குணவதி. பொறுமைசாலி அவர் பெயர் “எக்காட்டிரினா” குடும்பச் சுமையைத் தாங்க சலவைத் தொழிலை மேற்கொண்டார். அண்டை வீடுகளில் துணிகளை வாங்கி வெளுத்துத் தருவார். இதுபோக வீட்டு வேலைகளும் செய்வார். அதற்கான கூலியையும் பெற்றுக் கொள்வார்.
செருப்புத் தைக்கும் தொழிலாளி தந்தை. சலவை செய்வதும் வீட்டு வேலைகள் செய்வதுமான தாய் இவ்விருவருக்கும் நான்காவது மகனாகப் பிறந்தவர் தான் நமது தலைவர் உலகத் தொழிலாளி வர்க்கத்தின் போர்ப்படை நாயகர் தோழர் ஸ்டாலின்.
1879 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 21 ஆம் நாள் தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள். ஏற்கனவே, இவருக்கு முன்பு பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்துவிட்டன. இச்சோகத்தின் மத்தியில் பிறந்த மகனை நன்கு கவனித்தனர். “ஜோசப் விசரியானோவிச்” என்று பெயரிட்டனர். விசரியான் என்பது ஸ்டாலினின் தந்தை பெயர். விசரியான் மகன் ஜோசப் என்பது இதன் பொருள். ஸ்டாலினின் குழந்தைப் பருவம் மழலைத் தனத்துடன் கழிந்தது. அவர் பிறந்த பகுதி மலை சார்ந்த பகுதி. அதன் சிகரங்களில் இருந்து ஆறுகள் தோன்றிப் பாய்ந்து வந்தன. பனிக்கட்டி படர்ந்த ஆறுகளாக இருந்தன.
மகாகவி பாரதி பாடினாரே ‘வெள்ளிப் பனி மலை’ என்று அப்படிப்பட்ட பனிமலைச் சிகரங்கள் அவரது பார்வையை விசாலம் ஆக்கின. கூர்மைப்படுத்தின.
ஸ்டாலினை கவர்ந்த கதை
குழந்தைக் கதைகளும் அவரது செவியில் விழுந்து இதயம் நுழைந்து பக்குவப்படுத்தின. ஸ்டாலின் வசித்த பகுதி ஜார்ஜியப் பகுதி. மொழி ஜார்ஜிய மொழி. ஆயினும் கிரேக்க மொழிக் கதைகள் அப்பகுதியில் உலவி வந்தன. அவற்றில் ஒன்று பிரமித்தீயூஸ் பற்றிய கதை. பிரமித் தீயூஸ் என்பவன் மாவீரன். மனிதர்களின் நன்மைக்காக தேவலோகம் சென்று தீயைக் கொண்டு வர முயன்றவன். இதனால் தேவர்களின் கடவுளால் தண்டிக்கப்பட்டான். தண்டனை கடுமையானது. ஆனால் பிரமித்தீயூஸ் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்கிறான். தான் துன்பமடைந்தாலும் மக்கள் இன்பமடைவதை எண்ணி மகிழ்கிறான். இந்தக் கதை ஸ்டாலினை மிகவும் ஈர்த்தது. பிரமித்தீயூஸ் போன்றே தானும் பிறர் நன்மைக்காக வாழ வேண்டும். எத்தகைய இன்னல் நேர்ந்தாலும் ஏற்க வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.
முதல் மாணவன்
‘காரி’ என்னும் அவ்வூரில் இருந்த பள்ளி கிறித்துவ மதப்புரோகிதப் பள்ளி. பள்ளியில் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் பலபேர் பயின்றனர். மாணவர்கள் தமக்குள் ஒவ்வொருவர் குடும்பம் பற்றியும் விசாரிப்பதும் கலந்து கொள்வதும் உண்டு. தோழர் ஸ்டாலின் குடும்பம் பற்றி அறிந்ததும் சற்று ஏற்றத் தாழ்வாகவே நடந்து கொண்டனர். ஆயினும் ஸ்டாலின் சோர்ந்துவிடவில்லை. கவனமாகப் பயின்றார். தரமான மாணாக்கனாகத் திகழ்ந்தார். விளையாட்டு வீரராக இருந்தார். சிறந்த குரல் வளத்துடன் நல்ல பாடகர் ஆகத் திகழ்ந்தார். இவையனைத்தும் அப்பள்ளியில் அவரை முன்னிறுத்தின.
தந்தை மறைவு
1890 ஆம் ஆண்டு தந்தை மறைந்தார். அப்போது தோழர் ஸ்டாலின் வயது பத்து தான் ஆகியிருந்தது. குடும்ப வருவாய் குறைந்தது. தாயும் தந்தையும் சேர்ந்து பாடுபட்ட போதே கைக்கும் வாய்க்கும் போதாமல் தான் வாழ நேர்ந்தது. தற்போது அதிலும் குறைவு நேர்ந்த போது என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. படிப்பை தொடர்வதா? விடுவதா? என்பது முன்னின்றது. பத்து வயதுப் பாலகனுக்கு எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. தாய் ஊக்கப்படுத்தினார். படிப்பில் குறை வைக்காதே. முன்னிலும் கூடுதலாக நான் பாடுபடுகிறேன். தொடர்ந்து படி என்றார். ஸ்டாலினும் இன்னலை இதயத்தில் தாங்கிக் கல்வியில் கருத்தை ஊன்றி நன் மாணாக்கனாகப் பயிலத் துவங்கினார். கவலையும் இருந்தது. கல்வியும் தொடர்ந்தது.
மூத்த மாணவர்கள்
ஸ்டாலின் படித்த பள்ளியில் அறிவியலுக்கு விரோதமான மதக்கல்விக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டது. அதுவே ஆதிக்கம் செலுத்தியது. உயிர்கள் தாமாகத் தோன்றியவை அல்ல. படைக்கப்பட்டவை என்று கற்பிக்கப்பட்டது. ‘டார்வின்’ என்னும் அறிஞர், உயிர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றிய பரிணமாக் கோட்பாட்டை வெளியிட்டிருந்தார். ஸ்டாலினை விட மூத்த மாணவர்கள் மத்தியில் இக்கருத்திற்கு வரவேற்பு இருந்தது. ஸ்டாலினுக்கும் இக்கருத்து உடன்பாடானதாக இருந்தது. இரகசியமாக இதனைப் படித்து சக மாணவர்களுக்கும் விளக்கி வந்தார். மார்க்சியக் கருத்துக்களும் பரவி வந்தன. ஸ்டாலின் மனத்திலும் அது வேரூன்றத் துவங்கியது.
“ஆளும் வளரணும்
அறிவும் வளரணும்
அது தாண்டா வளர்ச்சி”
என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளுக்கு ஏற்ப ஸ்டாலின் அவர்களது வளர்ச்சி இருந்தது. ஏட்டுப் படிப்போடு நாட்டு நடப்புகளின் மீதும் அக்கறை இருந்தது. அன்றைய ருஷ்யாவை ஆண்டு வந்த ஜார் மன்னன் ருஷ்ய மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தான். ருஷ்யாவுடன் இணைந்திருந்த மற்றைய மக்களின் மொழிகளைப் புறக்கணித்தான். ஸ்டாலின் வாழ்ந்த ஜார்ஜிய மக்களின் ஜார்ஜிய மொழி புறக்கணிக்கப்பட்டது. இதனை எதிர்த்த ஜார்ஜிய மாணவர்கள் மொழிப் போரில் ஈடுபட்டனர். ஸ்டாலின் மனதிலும் இது நியாயம் என்று தோன்றியது.
ஜோசப் கோபா ஆகிறார்
அக்காலத்தில் மக்களிடம் உலவி வந்த கதை மாந்தர்களில் ‘கோபா’ என்னும் பெயர் கொண்ட தலைவன் வீரம், விவேகம், துன்பங்களை தாங்கும் திறம், மக்கள் படும் துயரங்களைப் போக்க முயலும் குணம், அதனால் விளையும் துன்பங்களைத் தாங்கி வெற்றி கொள்ளும் உரம் ஆகியவற்றைக் கொண்டு படைக்கப்பட்டிருந்தார். தோல்வியறியா வீரனாகவும் சித்தரிக்கப்பட்டான்.
துவக்கத்தில் பிரமித்தீயுஸ் கதை பற்றிக் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? தற்போது கோபா என்ற கதை மாந்தன் போல் தானும் விளங்க விரும்பினார். இனிமேல் என் பெயர் ‘கோபா’ என்றார். மற்ற மாணவர்களும் ஏற்றனர். ஆனால் பள்ளியில் பதிவேடுகளில் ஜோசப் என்ற பெயரே இருந்தது.
கல்லூரியில்
காரியில் இருந்த பள்ளியில் படிப்பு முடிந்தது. முதல் மாணவராகத் தேறினார். இதனால் ஊக்கத் தொகையும் கிடைத்தது. தாய் தமது மகன் கல்லூரியில் சேர்ந்து பயில விரும்பினார்.
அன்றைய காக்கேசியாவின் தலைநகராக இருந்த டிப்ளிஸ் என்னும் நகரில் தான் கல்லூரி இருந்தது. ஸ்டாலின் அங்கு சேர்ந்தார். ஆசிரியர் அனைவரும் பாதிரியார்கள். மத நூல்களே பாட நூல்கள். கணிதம் மற்றும் ரஷ்ய, கிரேக்க, லத்தீன் இலக்கிய வரலாறுகளும் கற்பிக்கப்பட்டன.
இம்மையை மறந்து மறுமையைப் போதிப்பதே அடிப்படைப் பாடம். மத குருமார்களை உருவாக்குவதே கல்லூரியின் நோக்கம். இவ்வுலக மாந்தரின் துன்பங்கள் ஆண்டவனால் அளிக்கப்படுபவை. அதை சகிப்பது நம் கடமை. அதற்குத் தேவை பொறுமை. இப்பிறவியை இப்படியே கழித்து விட்டால் அடுத்த பிறவியில் இன்பம் இருக்கும். சொர்க்க லோகத்தில் இடம் கிடைக்கும். இந்த லோகத்தில் சோகம் இருக்கலாம். பரலோகத்தில் சுகம் கிடைக்கும் என்றனர்.
ஸ்டாலின் இதனை ஏற்கவில்லை. வேறு வழியின்றிப் படித்தார். சகித்தார். டிப்ஸிஸ் நகரைச் சுற்றிலும் இருந்த பாட்டூம், பார்க்கூ ஆகிய நகரங்களிலும் டிப்ளிஸ் நகரிலும் தொழிற்சாலைகள் இருந்தன. கொடும் சுரண்டல் இருந்தது. இதனை எதிர்த்து தொழிலாளர் போராட்டமும் நடந்து கொண்டு இருந்தது. அன்றைய ஜார் அரசு இதனை முறையாகத் தீர்ப்பதற்குப் பதிலாக கடுமையாக அடக்கியது. இச்செய்திகளை அறிந்த மாணவர்கள் தொழிலாளர்களை ஆதரித்தனர். ஆண்டவனின் பிரதிநிதி என்று வர்ணிக்கப்பட்ட ஜார் அரசின் அடக்குமுறையை எதிர்த்தனர். ஸ்டாலினை விட மூத்த மாணவர்கள் இதில் முன்னின்றனர். அவர்களில் ஒருவர் ‘லாடோ’ என்பவர். இம்மாணவரை ஸ்டாலின் மிகவும் மதித்தார். இவர் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் மீது பாசம் கொண்டார். தொழிலாளர் துயர்களைக்களையும் விமோசன சித்தாந்தமாகிய மார்க்சிய சித்தாந்தத்தைக் கற்றார். தோழர் லாடோவையும் சேர்த்து அன்றைய மாணவர்களில் எண்பத்து ஒரு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியது. மாணவர்கள் மத்தியில் அச்சம் கலந்த அமைதி தோன்றியது.
இது நீடிக்கவில்லை. தோழர் ஸ்டாலின் தொடர்ந்து மார்க்சீயக் கல்வியில் ஆர்வம் கொண்டார். மாமேதை மார்க்ஸ் எழுதிய “மூலதனம்” எனும் நூலை இரகசியமாகப் பெற்று கையினால் எழுதி சக மாணவர்களுக்குப் படிக்கச் கொடுத்தார். தானும் பயின்றார்.
“கற்க கசடற கற்பவை” என்னும் குறளுக்கேற்ப ஐயம் திரிபு அறப் பயின்றார்.
மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின் ஆகிய ஆசான்களின் படைப்புகளைப் படித்து சக மாணவர்களுக்கும் கற்பித்தார். முற்போக்கு கலை இலக்கியங்களைக் கற்று கவிதை புனைந்தார். டிப்ளிஸ் நகர நாளேடுகள் அதனை வெளியிட்டன. பாடகர் குழு அமைத்தார்.
1894 ஆம் ஆண்டில் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து 1899 ஜூலை 29 முடிய இக்கல்லூரியில் தோழர் ஸ்டாலின் அவர்களின் கல்வியும் களமும் அமைந்திருந்தது.
ஏற்கனவே இக்கல்லூரியில் இருந்து ஸ்டாலின் அவர்களின் முன்னோடி லாடோ அவர்களும் மற்றயை மாணவர்களும் நீக்கப்பட்டதைப் பார்த்தோம். அது நிகழ்ந்த காலம் 1894 ஆம் ஆண்டு அதோடு பிரச்சினை முடிந்ததாக நிர்வாகம் கருதியது. ஆனால் லாடோ அவர்களிடம் சிறிது காலம் பழகினாலும் அவரது வழிகாட்டலுடன் ஸ்டாலின் செயல்பட்டதும் தொடர்ந்து செயல்பட்டதும் நிர்வாகத்திற்குத் தெரிய வந்தது. 1899 ஜூலை 29ல் ஸ்டாலினை கல்லூரியை விட்டு நீக்கியது.
அமைப்புகளில்
கல்லூரியை விட்டு நீக்கப்படும் முன் கல்லூரிக்குள் மார்க்சீய வாசகர் வட்டம் அமைத்து தலைமையேற்றார். சக மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். 1896-97 ஆம் ஆண்டுகளில் இது நிகழ்ந்தது. 1898 ஆம் ஆண்டு ஓர் இரகசிய சோசலிச அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பெயர் மேஸ்ஸேம்டேசி. தோழர் லெனின் அவர்களது கட்டுரைகளை விரும்பிப் படித்தார். அவரைச் சந்திக்க விரும்பினார். உழைக்கும் மக்களின் கூட்டங்களில் பங்கு கொண்டார். பிரசுரங்கள் எழுதினார். வேலைநிறுத்தங்களுக்கு அணி திரட்டினார். அதேசமயம் அவர்களுக்கு கற்றுக் கொடுத்ததுடன் தாமும் அவர்களிடம் கற்றுக் கொண்டார். அவர்களிடம் இருந்து ஞானஸ்தானம் பெற்றேன் என்றார். தொழிலாளர்களைத் தமது ஞான ஆசிரியர்களாக கருதினார். இக்காலம் முழுவதும் தோழர் ஸ்டாலின் கோபா என்றே அழைக்கப்பட்டார். வாசகர்கள் குழப்பம் அடைய வேண்டாம். ஸ்டாலின் என்கிறோம். ஜோசப் என்கிறோம். கோபா என்கிறோம். என்ன இது? என்று எண்ணத் தோன்றும்.
ஜோசப் என்பது பெற்றோர் இட்ட பெயர். மாணவப் பருவத்தில் அவர் விரும்பிய பெயர் ‘கோபா’ பிற்காலத்தில் அவருக்குப் பிறர் இட்ட பெயர் தான் ஸ்டாலின். இது குறித்துப் பின்னர் பார்க்கலாம். அதுவரை புரிதலுக்காக ஸ்டாலின் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
லெனின் மீது ஈர்ப்பு
ஜார் அரசை வீழ்த்த வேண்டும். அது தனி மனிதனால் முடியாது. அமைப்பு வேண்டும். அவ்வமைப்பு புரட்சிகர மார்க்சீய சித்தாந்தத்தைப் புரிந்து உணர்ந்திருக்க வேண்டும். தொழிலாளி வர்க்கம்தான் முன்னணிப் படையாக இருக்க வேண்டும். இவ்வியக்கம் தனது படைவரிசையில் விவசாயி மக்களை இணைத்துச் செல்ல வேண்டும். இவற்றில் உள்ள ஆடவர் மட்டுமின்றி மகளிரும் திரட்டப்பட வேண்டும். ஜார் அரசாட்சியினால் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் மாணவர், வாலிபர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரையும் திரட்டும் கட்சியை வர்க்க உணர்வு பெற்ற கட்சியாக வளர்க்க வேண்டும் என்று தோழர் லெனின் போராடி வந்தார். இக்கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது. தோழர் ஸ்டாலின் ஆதரவாளர் வரிசையில் முன்னின்றார்.
தோழர் ஸ்டாலின் அங்கம் பெற்றிருந்த அமைப்பில் பொருளாதார கோரிக்கைகளும் அதற்கான போராட்டங்களும் போதும் என்றனர். ஸ்டாலின் அவர்களிடம் இருந்து வேறுபட்டார். லெனின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அவரது கருத்துக்களைப் பிரச்சாரம் செய்து வந்தார்.
வேலை
வாழ்க்கை வாட்டியது. தான் கற்ற கல்வியைப் பயன்படுத்தி வேலை தேட விரும்பினார், மதகுருவாக விரும்பவில்லை. மாறாக உழைக்கும் மக்களின் தோழனாக அவர்களிடம் கற்றறிபவனாக கற்றுக் கொடுப்பவராக தலைமை பொறுப்பை ஏற்பவராக இருக்க விரும்பினார். அதே சமயம் உணவுத் தேவைக்காக வேலை தேட விரும்பினார். டிப்ளிஸின் நகர புவியியல் ஆய்வுக் கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஓய்வு நேரத்தை உழைக்கும் வர்க்கத்திற்கு பணியாற்றப் பயன்படுத்திக் கொண்டார்.
கட்சியில்
1900 ஆம் ஆண்டு தொழிலாளர் இயக்கங்கள் அலை அலையாய் எழுந்த காலமாக இருந்தது. “மே தினம்” சட்ட விரோதமாக கருதப்பட்டது. இதனை எதிர்த்து மேதினக் கொண்டாட்டத்திற்கு ஸ்டாலின் ஏற்பாடு செய்தார். டிப்ளிஸி நகருக்கு வெளியே மலைகளுக்குப் பின்னால் இது நிகழ்ந்தது. மொத்த ஊர்வலம் இல்லை. சிறு சிறு குழுக்களாக தொழிலாளர்கள் வந்தனர். கைகளில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் படங்கள் இருந்தன. சர்சதேச கீதம் இசைக்கப்பட்டது. ஸ்டாலின் உரையாற்றினார். ஐநூறு பேர் பங்கு கொண்டனர். இதற்கு முன் அப்பகுதியில் மேதினம் கொண்டாடப்பட்டதில்லை. அடுத்த ஆண்டு மேதினத்தை நாம் மலைக் குகைகளில் நடத்த வேண்டாம். மக்கள் மத்தியில் நடத்துவோம் என்று ஸ்டாலின் அறிவித்தார். அவர் அங்கம் வகித்த அமைப்பு இதை விரும்பவில்லை.
அக்காலத்தில் தோன்றி வளர்ந்து கொண்டிருந்த சமூக ஜனநாயக அமைப்பில் அங்கத்தினர் ஆனார். அன்றைய கம்யூனிஸ்ட் கட்சி இப்பெயரில்தான் இயங்கி வந்தது. இதன் மத்தியக்குழுவில் இருந்து அமைப்புப் பணியிலும் பிரச்சாரப் பணியிலும் ஈடுபட்டார்.
இவ்வமைப்பின் டிப்ளிஸில் குழுவிற்கு ஸ்டாலின் தலைமை ஏற்றார்.
1901 ஆம் ஆண்டு மேதினத் தயாரிப்புப் பணி மும்முரமடைந்தது. மார்ச் மாதம் இதைத் தடுக்க அரசு முயன்றது. தோழர் லெனின் அவர்களின் நெருங்கிய தோழர் கன்னோ தோவ்ஸ்கி உட்பட ஐம்பது தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தோழர் ஸ்டாலின் அறையிலும் சோதனை நடந்தது. இதை அறிந்த ஸ்டாலின் தலைமறைவு ஆகிவிட்டார். ஆனாலும் மேதினத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டார்.
1901 ஏப்ரல் 22 திங்கட்கிழமை அன்று டிப்ளிஸ் நகரின் மையப்பகுதியில் இரண்டாயிரம் தொழிலாளர்கள் திரண்டனர். இதனை அறிந்த லெனின் மகிழ்ந்தார். தனது இஸ்கரா இதழில் வாழ்த்தினார்.
தோழர் ஸ்டாலின் தான் தொடங்கி வைத்த தொழிலாளர் இயக்கத்தை வலுப்படுத்த போராட்டம் என்ற பெயரில் ஒரு செய்தி ஏடு துவங்கினார். தலையங்கம் எழுதினார். இவ்விதழ் அக்காலத்தில் தோழர் லெனின் அவர்களால் நடத்தப்பட்ட ‘இஸ்கரா’ இதழின் கருத்தோடு இணைத்திருந்தது. தோழர் லெனினை ஆசானாக தலைவராக மிக உயர்ந்த தலைவனாக ஸ்டாலின் மதித்தார்.
1901 நவம்பர் 11 இல் டிப்ளிஸ் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் மாநாட்டில் கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
பாட்டூம் என்ற பகுதியில் கட்சியை உருவாக்க அவர் அங்கம் வகித்த டிப்ளிஸ் குழு அனுப்பியது. தொழிலாளர்களைத் திரட்டினார். இரகசியமாக அச்சடித்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்.
1902 பிப்ரவரி 27 அன்று ரோத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை நிறுத்தம் நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இராணுவ கவர்னர் அலுவலகம் நோக்கிச் சென்றனர். துப்பாக்கிச் சூடு நடந்தது. பதினைந்து பேர் பலி. 54 பேர் காயம். 500 பேர் கைது செய்யப்பட்டனர். தோழர் ஸ்டாலின் நடத்தி வந்த இரகசிய அச்சகம் காவலரால் தேடப்பட்டது. ஸ்டாலின் இடத்தை மாற்றினார். நகருக்கு வெளியே அல்யாஸ்கா என்ற கிராமத்தில் அதனை அமைத்தார். முஸ்லீம் மக்கள் அப்பகுதியில் அதிகம் வசித்தனர். இவரைப் பாதுகாக்க உதவினர். இயக்கங்களும் அடக்குமுறைகளும் மாறி மாறி தொடர்ந்தன.
1902 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் மாபெரும் பேரணியை நடத்தினர். தோழர் ஸ்டாலின் தலைமை ஏற்றார். இதற்குப் பெரிதும் காரணம் தோழர் ஸ்டாலின். அன்றைக்கு கோபா என்று அழைக்கப்பட்ட வரை காவல்துறை தேடி கண்டுபிடித்துவிட்டது. 1902 ஏப்ரல் 7 முதல் 1903 ஏப்ரல் 13 வரை பாட்டூம் நகர சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு கொடும் சிறையாகிய குடாய் என்னும் சிறைக்கு மாற்றப்பட்டார்.
1903 ஆம் ஆண்டு மத்தியில் சமூக ஜனநாயக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. ஸ்டாலின் சிறையில் இருந்தார். ஆயினும் காக்கேசியப் பகுதியின் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1903 ஆம் ஆண்டு ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற இரண்டவது மாநாடுகளும், விவாதங்களும் வரப்பெற்றது. இம்மாநாடு பெல்ஜியம் நாட்டில் பிரஸ்ஸல்சிலும் பிரிட்டன் நாட்டின் லண்டனிலும் நடைபெற்றது.
கட்சியின் அங்கத்தினர் சேர்ப்பு பற்றி விவாதம் இருந்தது. கட்சியின் கொள்கைகளை ஏற்று அதன்படி செயல்படுபவரைத்தான் உறுப்பினர் ஆக்க வேண்டும் என்று தோழர் லெனின் குறிப்பிட்டார். கருத்தை ஏற்றால் போதும் எவரையும் சேர்க்கலாம் என்று மற்றொரு பிரிவினர் கூறினர். போல்ஷ்விக் – மென்ஷ்விக் என்று இரு பிரிவாக மாறியது. லெனின் கருத்தை ஏற்றவர்கள் போல்ஷ்விக் எனப்பட்டனர். மறுபிரிவு சிறுபான்மையினர். இவர்கள் மென்ஷ்விக் என்று அழைக்கப்பட்டனர்.
சிறையில் இருந்த ஸ்டாலின் லெனின் கருத்தை ஏற்றார்.
இது குறித்து தோழர் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலை மனதார வரவேற்றார். கடிதமும் எழுதினர். லெனின் அவர்களுக்கு இக்கடிதம் கிடைத்தது மகிழ்ச்சி கொண்டார்.
1903 ஆம் ஆண்டு ஜூலை 9 அன்று ஜார் அரசு புதிய தண்டனையை விதித்தது. ஏற்கனவே சிறையில் உள்ள ஸ்டாலின் வெளியில் நடமாடக்கூடாது. நாடு கடத்த வேண்டும் என்றது. இத்தண்டனை மூன்று ஆண்டுகள் என்றது.
சைபீரியப் பகுதியில் இர்குஸ்த் எனும் கிராமத்தில் அவரது தண்டனைக் காலம் கழிய வேண்டும் என்றனர். இக்காலத்தில் தோழர் லெனின் அவர்களிடம் இருந்து கடிதம் வந்தது. கட்சியின் அரசியல் பணி பற்றி அதில் இருந்தது. தோழர் ஸ்டாலின் அக மகிழ்ந்தார். பெறற்கரிய பேறுபோல் அக்கடிதத்தை பாவித்தார்.
1904 ஜனவரி 5 அன்று காவலில் இருந்து தப்பித்தார். தோழர் லெனின் அவர்கள் எழுதிய என்ன செய்ய வேண்டும், “இரஷ்யாவில் முதலாளித்துவ வளர்ச்சி” ஆகிய நூல்களை ஆழ்ந்து கற்றார். பணிகளிலும் ஈடுபட்டார்.
கருத்துப் போர்
தலைமறைவாக இருந்து கட்சிப் பணியாற்றினார். போல்ஷ்விக் என்ற பெரும்பான்மைக்கும் மென்ஷ்விக் என்ற சிறுபான்மைக்கும் இடையே இடைவிடாத கருத்துப் போர் நடந்து கொண்டே இருந்தது. ஸ்டாலின் அவர்களில் ஜார்ஜியப் பகுதியில் மென்ஷ்விக்குகளின் சக்திதான் ஓங்கி இருந்தது. இதனை மாற்றி அமைக்க ஸ்டாலின் பாடுபட்டார். லெனின் கருத்துக்களைத் தொய்வின்றி எடுத்துச் சென்றார்.
தொழிலாளர்களின் போராட்டம் என்ற பெயரில் வெளிவந்த இதழில் தேசிய இனப்பிரச்சினை குறித்து விரிவான கட்டுரை ஒன்றை எழுதினார். இந்தப் பிரச்சினை மீது அவரது நுண்மாண் நுழைபுலம் வெளிப்பட்டது. உலக கம்யூனிஸ்ட்டுகள் ஏற்கத்தக்கதாக அமைந்தது.
“கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள்” என்ற தலைப்பில் பிரசுரம் எழுதி வெளியிட்டார். இது ஜார்ஜிய ரஷ்ய, ஆர்மேனிய மொழிகளில் வெளியிடப்பட்டது.
மாமேதை லெனின் அவர்கள் எழுதிய ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூலின் கருத்தை ஆழ்ந்து பயின்று அதன் வெளிச்சத்தில் இதனை எழுதினார். உழைக்கும் வர்க்கத்திற்கு உயிரான சோசலிச உணர்வு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
பாகூ பகுதியில் பிரம்மாண்டமான தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு தலைமை ஏற்றார்.
முதலாவது புரட்சியின் போது
1904 ஆம் ஆண்டிற்குப் பின் ரஷ்யா, ஜப்பான் யுத்தம் துவங்கியது. நாடெங்கும் கொந்தளிப்புகள் ஏற்பட்டன. இதனை அணுகும் முறையில் தோழர் லெனின் எடுத்த நிலைபாட்டையே ஸ்டாலின் மேற்கொண்டார்.
1905 ஆம் ஆண்டு ஜனவரி 9 அன்று அதிகாலையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஜார் மன்னரின் அரண்மனையை நோக்கி சென்றனர். கோபன் என்ற மதகுரு தலைமையில் இது நடந்தது. ஜார் மன்னர் படத்தோடுதான் சென்றனர். ஆயினும் தாக்கப்பட்டனர். இதனால் பயன் இருக்காது. ஆபத்து வரும் என்று போல்ஷ்விக்குகள் எச்சரித்தனர். மற்றவர்கள் கேட்கவில்லை. வேறு வழியின்றி போல்ஷ்விக்குகளும் பங்கு கொண்டனர். துப்பாக்கி சூட்டில் ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லாயிரம் பேர் காயமடைந்தனர். செயின்ட் பீட்டர்ஸ் பர்க் வீதியில் இது நிகழ்ந்தது. “இரத்த ஞாயிறு” என்று இந்த நாளை பின்னாட்களில் நினைவு கூர்ந்தனர்.
இதைத் தொடர்ந்து ரஷ்யாவில் புரட்சிகர இயக்கங்கள் மும்முரம் அடைந்தன.
1905 ஜனவரி மாதம் ஒரு பிரசுரம் தோழர் ஸ்டாலினால் எழுதப்பட்டது. “ காக்கசஸ் தொழிலாளர்களே பழிவாங்கும் தருணம் இது” என்பது அதன் தலைப்பு.
தோழர் லெனின் அவர்களது வழிகாட்டுதலைப் பிசகின்றிப் பின்பற்றினார்.
அக்காலத்தில் கருப்பு நூற்றுவர்கள் என்ற பெயரில் ஒரு பிரிவினர் கூலிப்படையினராக செயல்பட்டு வந்தனர். இதனை முறியடிக்க உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டப்பட்டது.
இக்காலம் முழுவதும் கோபா என்ற பெயரில் இரகசியமாகவே செயல்பட்டு வந்தார்.
ஆயுதம் தாங்கிப் போராடுவது என்று உழைக்கும் மக்களைப் பக்குவப்படுத்தினார். “குடிமக்கள்” என்ற தலைப்பில் பிரசுரம் வெளியிட்டார். 1905 அக்டோபரில் இது வெளியானது. புரட்சி வேகம் அதிகரித்ததைக் கண்ட ஜார் அரசு அக்டோபர் 7 அன்று அறிக்கை வெளியிட்டது. நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாகக் கூறியது.
இதனைப் புறக்கணிக்குமாறு தோழர் லெனின் தலைமையிலான கட்சி வேண்டுகோள் விட்டது. ஆயுதப் போரை தொடர்ந்து நடத்தக் கூறியது.
தொழிலாளர் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத்துக்கள், புரட்சிகர விவசாய குழுக்கள் ஆகியவற்றை அமைக்க கோரியது.
1905 டிசம்பரில் அனைத்து இரஷ்ய போல்ஷ்விக் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கு கொள்ள பின்லாந்து சென்றார். இங்கேதான் தோழர் லெனினை முதன் முறையாக நேரில் சந்தித்தார். இருவரும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தனர். மாநாட்டில் அரசியல் தீர்மான நகல் வரைவுக்குழுவில் லெனினுடன் இணைந்து பணியாற்றினார்.
கோபா ஸ்டாலின் ஆகிறார்
மாநாடு முடிந்து திரும்பும் போது புதிய பெயருடன் ஸ்டாலின் திரும்ப வேண்டுமென்று தோழர்கள் விரும்பினர். லெனினும் அவ்வாறே கருதினார். ஸ்டாலின் என்று ஏன் இருக்க கூடாது என்று லெனினும் கருதினார். ஸ்டாலின் என்றால் “இரும்பு மனிதர்” என்று பொருள். “சிதையா உறுதி கொள்” என்ற கவிஞரின் வரிக்கேற்ப ஸ்டாலின் திகழ்ந்தார். இப்பெயர்ப் பொருத்தமுடன் அமைந்தது.
புரட்சி அலை தணிகிறது
கடுமையான அடக்குமுறை காரணமாக ரஷ்யாவில் முதல் புரட்சியின் வேகம் தணிந்தது. மென்ஷ்விக்குகள் போல்ஷ்விக்குகளைக் கடுமையாக சாடினர். ஆயுதம் தாங்கியது தவறு என்றனர். தோழர் லெனினைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஸ்டாலின் லெனின் கருத்தை ஏற்று விளக்கம் அளித்தார்.
1906 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் கட்சியின் மாநாடு ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. தொழிலாளர் நிர்ப்பந்தம் காரணமாக மென்ஷ்விக்குகளும் இதில் கலந்து கொண்டனர். போல்ஷ்விக் மென்ஷ்விக் ஒற்றுமை வேண்டும் என்ற கருத்து தொழிலாளர்களின் கருத்தாக இருந்தது. தலைவர்கள் ஓரிடத்தில் கூடினர். உள்ளார்ந்த ஒற்றுமை ஏற்படவில்லை.
மாநாட்டிற்குப் பின்பு தோழர் ஸ்டாலின் ஒரு பிரசுரம் எழுதினர். “இன்றைய சூழலும் நடைபெற்ற மாநாடும்” என்பது அதன் தலைப்பு தொழிலாளி வர்க்கம் கற்றுக் கொண்ட படிப்பினை. இதற்கு இருக்க வேண்டிய வர்க்க உணர்வு. புரட்சியில் அதன் தலைமைப் பணி ஆகியவற்றை வெளிப்படுத்தினர்.
2 thoughts on “ஜோசப் ஸ்டாலின் – 1”
Comments are closed.