பண்பாட்டு உளவியல் நோக்கில் கட்சி


அ.குமரேசன்

பண்பாடு என்றால் என்ன என்பது பற்றியே முழுமையான புரிதல் உருவாக்கப்பட்டிருக்கிறதா என்பது கேள்வி. `கல்ச்சர்’ என்பதை இங்கே சமஸ்கிருத வழியில் `கலாச்சாரம்’ என்றே இத்தனை ஆண்டுகளாக கூறிவந்திருக்கிறோம். கலாச்சாரம் என்றால் வெறும் கலை – இலக்கிய செயல்பாடுகள் மட்டுமே என்பதாகப் புரிந்துகொண்டு அதைப்பற்றி மட்டுமே பேசி வந்ததும் உண்டு. `பண்பாடு’ என்ற சொல்லையும் அதற்கு கிட்டத்தட்ட நெருக்கமான `வாழ்க்கை முறை’ என்ற பொருளையும் அண்மைக் காலமாகத்தான் பயன்படுத்தி வருகிறோம்.

`பண்பாட்டு உளவியல்’ என்பது இன்னும் ஆழமான ஆய்வுக்கு உரியது. இதைத் தனிமனித உளவியல், சமூக உளவியல் ஆகிய இரண்டு கோணங்களிலும் காணலாம். கார்ல் மார்க்ஸ், “உணர்வு சமுதாயத்தை உருவாக்கும் காரணியாக இருப்பதில்லை. சமுதாயம்தான் உணர்வை உருவாக்குகிறது,” என்றார். பண்பாட்டு உளவியல் என்பதும் சமுதாயத்தை அடித்தளமாகக் கொண்டு இயங்குவதுதான். சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப பண்பாட்டு நியதிகள் மாற்றமடைந்து வந்துள்ளன.

பண்பாடு என்பது வாழ்க்கை முறை மட்டுமல்ல, வாழ்க்கை விதியாகவும் வலியுறுத்தப்படுகிறது. இப்படியிப்படித்தான் வாழ வேண்டும், இன்னின்ன நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், தனித்துவங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் வரம்புகள் வரையப்படுகின்றன. அந்த வகையில் குறிப்பிட்ட பகுதி மக்களின் அடையாளத்தோடும் சம்பந்தப்பட்டதாகிறது பண்பாடு. குழந்தை பிறப்பு, திருமண உறவு, பெண் வயதுக்கு வருதல், மரணம், வீடு கட்டுதல், விவசாய நிகழ்வுகள்….என வாழ்க்கை நிகழ்வுகள் எல்லாவற்றிலும் அந்த அடையாளங்கள் பதிக்கப்படுகின்றன. அந்தப் பண்பாட்டு விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்வது தனி மனிதரின் பெருமைக்குரிய பாங்காக அந்தந்த சமூகங்களால் கற்பிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் மனித மனம் இயற்கையான சுதந்திரத்தை, வேலிகளற்ற உறவை, பாகுபாடுகளற்ற நேயத்தை விரும்புகிறது. அதற்குத் தடையாக இருக்கிற பழைய பண்பாட்டுக் கட்டுகளை அறுத்து முன்னேறத் துடிக்கிறது. சமத்துவப் பண்பாடு என்கிற புதிய பண்பாட்டை நிறுவ முயல்கிறது. சமூகப் போராட்டங்களின் சாராம்சம் இது.

கட்சியின் பங்கு

இதில் கட்சி என்பதன் பங்கு என்ன?

“தத்துவம் இல்லாத அமைப்பு மலட்டுத்தனமானது; அமைப்பு இல்லாத தத்துவம் குருட்டுத்தனமானது,” என்கிறது மார்க்சியம். பழைய பண்பாட்டு அமைப்புகளைப் பாதுகாப்பது, புதிய பண்பாட்டினை மலரச் செய்வதற்காக பழைய அமைப்புகளில் உடைப்பு ஏற்படுத்துவது ஆகிய இந்த இரண்டு செயல்களிலுமே கட்சி அமைப்புகள் பங்கு வகிக்கின்றன.

கட்சி என்கிற அரசியல் வடிவம் எப்போது உருவெடுத்திருக்கும்? மன்னராட்சிக் காலங்களில் அரண்மனை சார்ந்த போட்டிக் குழுக்கள் இருந்திருக்கக்கூடும். அரண்மனைக்கு வெளியேயும்கூட அடிமைத்தன எதிர்ப்புடன், விடுதலை உணர்வுடன் பல்வேறு குழுக்கள் செயல்பட்டிருக்கக் கூடும். இன்று நாம் பார்க்கிற கட்சி அமைப்புகளுக்கான திட்டவட்டமான வடிவம் நாடாளுமன்றம், முதலாளித்துவ ஜனநாயகம் ஆகியவை நிலைபெற்றதன் பின்னரே உருவாகின. மக்கள் முன் தமது கொள்கை களையும் திட்டங்களையும் எடுத்துரைப்பது, அவர்களது ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சிப் பொறுப்பில் அமர்வது, எதிர்க்கட்சியாக அமர்ந்து ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது என்பதெல்லாம் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத் துடன் இணைந்தே  நடைமுறைக்கு வந்தன.

முதலாளித்துவக் கட்சிகளைப் பொறுத்தவரையில் பல்வேறு அணுகு முறைகளில் மாறுபாடுகள் இருந்தாலும்கூட அடிப்படையில் முதலாளித் துவத்தைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. முதலாளித் துவம் நிலப்பிரபுத்துவத்தைவிட முற்போக்கானது – புரட்சிகரமானது என்பதால் முதலாளித்துவக் கட்சிகளிடமும் அந்த அம்சங்கள் பொதுவாக இருக்கும். ஆயினும், அவர்களைப் பொறுத்தவரையில் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால்” என்ற கோணத்திலேயே பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்பவர்களாக இருக்கி றார்கள்.

இதற்கு மிகச் சரியான சமீபத்திய எடுத்துக்காட்டு அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தல். ஜார்ஜ் டபிள்யு புஷ், ஜான் கெர்ரி இருவருக்கும் – அதாவது அவர்களது குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டுக்கும் – பெரிய கொள்கை மாறுபாடுகள் கிடையாது.  “என்னிடம் ஆட்சியை ஒப்படைத்துப் பாருங்கள்” என்ற முறையிலேயே அவர்களுடைய பிரச்சாரங் களும் விவாதங்களும் இருந்தன. இராக், இஸ்ரேல் விவகாரங்கள் முதல் உலகளாவிய பொருளாதார ஆதிக்கம் வரையில் அவர்களிடையே முக்கிய மாறுபாடு எதுவும் கிடையாது.

பண்பாட்டு ஆதிக்கம்

இந்தியாவில் விடுதலைப் போராட்டக் காலத்திலேயே கட்சிகள் உருவாகின என்றாலும் காங்கிரஸ் கட்சிதான் பெரிய இயக்கமாக இருந்தது. நீதிக்கட்சி போன்ற வட்டாரக் கட்சிகள் உருவாகி, பின்னர் இன்றைய மாநிலக் கட்சிகள் பலவும் களத்திற்கு வந்தன. முதலாளித்துவக் கட்டமைப்பைப் பாதுகாப்பதில் ஒத்த கருத்துடையவர்கள் என்றாலும் மாநில மக்களின் உரிமைகள், தனித்துவ அடையாளங்கள், மொழிப்பாதுகாப்பு, மாநில வளர்ச்சிகள் போன்ற அக்கறைகளோடு புறப்பட்ட கட்சிகள் இவை. காங்கிரஸ் ஆட்சியின் தவறுகள், சமரசங்கள் மாநிலங்களின் சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியாத பலவீனங்கள் போன்ற காரணங்களால் இந்த மாநிலக் கட்சிகள் மக்கள் ஆதரவைப் பெற்றன. அதே காரணங்களால் மக்களின் அதிருப்தியையும், ஆன்மீக நம்பிக்கைகளையும் பயன்படுத்திக்கொண்டு பாரதீய ஜனதா கட்சியும் தலைதூக்கியது.

இன்று,  மாநிலக் கட்சிகளை கூட்டுச் சேர்த்துக்கொள்ளாமல் எந்தவொரு அகில இந்தியக் கட்சியும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது – இது ஒரு முக்கிமான வளர்ச்சிப்போக்கு. பாஜக-வைப் பொறுத்தவரையில்  அது ஆன்மீகத்தை அல்லது மத உணர்வை தனது அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்கிற கட்சி மட்டுமல்ல, அடிப்படை யிலேயே நாட்டின் ஒரு ஒற்றை மத ஆதிக்கத்தை நிறுவுவதையே நோக்கமாகக் கொண்ட, அதன் மூலம் ஒரு ஒற்றைப் பண்பாட்டை திணிக்க முயல்கிற கட்சியாகும். முதலாளித்துவ வளர்ச்சியின் நவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டே இப்படியொரு பிற்போக்குத்தனமான கட்சி வளர்ந்தது எப்படி? இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட உள்ளடக்கத் தோடு தொடர்புகொண்ட இந்தக் கேள்வியும் விரிவாக ஆராயப்பட வேண்டியது.

முதலாளித்துவ நாடாளுமன்றம் பற்றிய மாயைகள் இன்றி, அதே நேரத்தில் இன்றைய எதார்த்தம் அதுதான் என்ற புரிதலோடு அதைப் பயன்படுத்துகிற கட்சிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  ஆகியவையும் இதர சில இடதுசாரிக் கட்சிகளுமாகும்.

மூன்று சக்திகள்
பண்பாட்டுக் களத்தில் மூன்றுவித சக்திகள் போராடுகின்றன. ஒன்று, மதத்தின் பெயரால் ஒற்றைப் பண்பாட்டு ஆதிக்கத்தைத் திணிக்க முயல்கிற கூட்டம். இந்து மதத்தின் காவலர்களாகத் தங்களைத் தாங்களே அறிவித்துக் கொண்டு, `இந்து’ என்ற உணர்வுதான் இந்திய தேசிய உணர்வு என்று மூளைச்சலவை செய்கிற கூட்டம் இது. ஒருபக்கம் பல்வேறு சாதிகளாகவும், இனங்களாகவும் இருக்கிற எல்லோருமே இந்துக்கள்தான் என்று கூறிக்கொண்டாலும் உண்மையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நியதிகளே ஒட்டுமொத்த சமுதாயத்தின் நியதிகளாக நிறுவ முயல்கிறது இக்கூட்டம். மனிதர்களின் ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் பிறப்பின் அடிப்படையில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவைதான் என்றும், “அவரவர் அவரவருக்கு இடப்பட்ட பணிகளை செய்துகொண்டிருந்தால் சமூகத்தில் பிரச்சனையே வராது,” என்னும் நவீன வர்ணாஸ்ரமத்தை – நவீன பார்ப்பனீயத்தை – நிறுவ முயலும் பண்பாட்டுச் சர்வாதிகார ஆதிக்கவாதிகள் இவர்கள். இந்த ஆர்எஸ்எஸ் – சங்பரிவாரக் கூட்டத்தின் அரசியல் முகம் பாரதீய ஜனதா கட்சி. சிவசேனா போன்ற கொசுறுகளும் உண்டு.

இன்றைய அரசியல் நிலைமைகளுக்கான பல்வேறு சாகசங்களையும் சமரச சாமர்த்தியங்களையும் செய்துகொண்டாலும்கூட, அடிப்படையில் “நாத்திகம் என்பது கடவுளை மறுப்பதுகூட அல்ல, நியதிகளை மறுப் பதுதான்,” என்ற பார்வையோடு வலை விரிக்கிற நவீன மனு தர்மவாதிகள் இவர்கள். பாஜக தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், புதுவை துணை நிலை ஆளுநராக இருந்தவருமான மல்கானி ஒரு பேட்டியில், “இந்த நாட்டின் விவசாயிகள் எதற்காக கல்வி கற்க வேண்டும்? அவர்கள் படித்து யாருடன் தொடர்பு கொள்ளப்போகிறார்கள்,” என்று கேட்டது ஒன்றும் வாய்தவறி அல்ல. அதேபோல் பாஜகவின் மகளிர் பிரிவு, “மேற்கத்திய பாணி பெண் விடுதலையில் எமக்கு நம்பிக்கை இல்லை. இந்திய பண்பாடு சார்ந்த பெண் கல்வி, பெண்ணின் உயர்வு, சமத்துவம், பெருமை என்பவற்றை நிலை நாட்டுவோம்,” என்று பிரகடனம் செய்திருக்கிது. இதன் அர்த்தம் மனுதர்மம் போதிக்கிற “அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு” ஆகியவையே இந்தியப் பெண்ணின் பெருமை என்பதுதான் என விளக்கவேண்டியதில்லை.

பொருளாதார உளவியல்
இந்த பாரதீய ஜனதா கட்சி இவ்வாறு இந்துத்துவம் பேசுவதோடு மட்டுமல்லமல் அடிப்படையான பொருளாதார களத்தில் காங்கிரசைவிட பலமடங்கு வேகத்தில் தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலக மயத்திற்கு விசுவாசமாக இருந்தது, இருக்கிறது. இந்தியப் பெருமுதலாளிகளும், அந்நியப் பன்னாட்டுச் சந்தை தாதாக்களும் பாஜக-வை ஆதரிப்பது தற்செயலாக அல்ல. இந்திய மக்களின் – உழைப்பாளிகளின் எதிர்ப்பு உணர்வுகள் பண்பாட்டுப் பெருமையின் பெயரால் முனை மழுங்கச் செய்யப்படுவது இந்த ஆளும் வர்க்கத் தலைமைக்கு வாய்ப்பான ஒன்று. கோக் – பெப்சி குடியல் முதல், ஷாம்பு குளியல் வரை நாகரீகங்களாகத் திணிக்கப்பட்டதில் இந்த உலகச் சந்தை ஆக்கிரமிப்பாளர்களின் லாப நலன்களும், அதற்கு உடந்தையாக இருந்த முந்தைய பாஜக ஆட்சியின் நலன்களும் கலந்திருந்தன.

சுதந்திர இந்தியாவில் நீண்டகாலம் தனிக்கட்சியாகவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பண்பாட்டுப் பிரச்சனைகளில் உள்ள தெளிவின்மை, உறுதியின்மை, சமரசக் கொள்கை ஆகியவையும் பாஜக-வின் வளர்ச்சிக்கு சாதகமாக  அமைந்தன. எடுத்துக்காட்டாக – தொலைக்காட்சியிலும் வானொலியிலும் இந்தியப் பண்பாடு என்பதாக பரதநாட்டியத்தையும் கர்நாடக சங்கீதத்தையும் பார்ப்பனீய கோயில் சார்ந்த செயல்பாடுகளையும் மட்டுமே முன்னிலைப்படுத்துவது காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே துவங்கிவிட்டது. அரசு விழாக்களில் குத்துவிளக்கு ஏற்றுதல், நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன் ஒலிபெருக்கிகளில் நாதசுரம், கிளாரினெட், வீணை போன்ற கருவிகளின் இசையில் கர்நாடக சங்கீதம் மட்டுமே ஒலித்தல்…இவை முந்தைய தனி காங்கிரஸ் ஆட்சியிலும் நடந்தன. இன்றைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் நடக்கின்றன. இங்கு வாழும் இதர பிரிவு மக்களின் வழிபாடுகள், கலைகள் முதலியவற்றைப் புறந்தள்ளுகிற அல்லது இரண்டாம் நிலைக்குத்தள்ளுகிற இந்தப் போக்கும் மனுதர்மவாதிகளுக்கு வாய்ப்பாகி விட்டது. பாஜக ஆட்சியின்போது இவை இன்னும் அதிகார பலத்தோடு வலிந்து திணிக்கப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியின் ஏகபோக முதலாளித்துவ ஆதரவு – நிலப் பிரபுத்துவ ஆதரவு பொருளாதாரக் கொள்கைகள் சாமான்ய மக்களை வஞ்சித்து, இதனால் அவர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை பாஜக தனக்கு சாதகமாக அறுவடை செய்துகொண்டதும் நடந்தது.

அண்மையில் சென்னையில் நடந்த ஒரு ரயில்வேத்துறை விழாவில்,  அமைச்சர் வந்து சேரும் வரையில் ஒலிபெருக்கியில் கிளாரினெட் இசையில் இந்து மத பக்திப்பாடல்கள், சாஸ்திரீய இசையாக ஒலித்துக்கொண்டிருந்தன. சென்னை சாஸ்திரிபவன் வளாகத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கால் கடுக்க காத்துக்கொண்டிருப்பவர்களின் சோர்வு நீக்குவதற்காக கருவியிசை ஒலிபரப்பப்படுகிறது – அத்தனையும் கர்நாடக  இசை மட்டுமே. இதன் பின்னணியில் மற்ற மதங்களின் பண்பாடுகள் மட்டுமல்ல, இந்துக்களிலேயே பிராமணர் அல்லாத மற்ற பிரிவினரின் பண்பாட்டு அடையாளங்களும் மூர்க்கத்தனமாக புறக்கணிக்கப்படுகின்றன. இந்தப் பண்பாட்டுத் தாக்கு தலை, இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை காங்கிரஸ் கட்சி புரிந்துகொண்டிருக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்வி.

மாநிலக் கட்சிகள்
அடுத்து, பண்பாட்டுக் களத்தில் போராடுகிற இன்னொரு சக்தி, ஒற்றை ஆதிக்கத்திற்கு எதிராக மற்ற சமூகங்களின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்க நிற்பதாகும். தமிழகத்தில் திராவிட இயக்கத்திலிருந்து உருவான திராவிடக் கட்சிகள் மொழிப்பாதுகாப்பு, தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு போன்ற முழக்கங்களோடுதான் முன்னுக்கு வந்தன. ஆனால், பண்பாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில் அல்லது தமிழர் பெருமை என்ற பெயரில் இந்தக் கட்சிகளும் கூட  பழமைவாதம் பேசியது ஒரு சோகம். கடந்தகால மன்னராட்சி அடை யாளங்களை மீட்க இக்கட்சிகள் முயன்றயான. ஒரு பக்கம் பார்ப்பனீயத்திற்கு எதிரான கிளர்ச்சிக்குரல், இன்னொரு பக்கம் அதை ஆரோக்கியமான முற்போக்குத் திசையில் கொண்டு செல்வதற்கு மாறாக குறுக்கிவிடுகிற போக்கு. மலர்க்கிரீடம் சூடுதல், `”முடிசூடா மன்னன்”, “தளபதி” என்றெல்லாம் பட்டங்களை வழங்குதல் போன்றவற்றில்கூட அந்த மன்னராட்சிக்கால மயக்கங்கள் உண்டு.

மாநில முதலாளித்துவக் கட்சிகளின் இப்படிப்பட்ட மயக்கங்களும்கூட, தெளிவான இந்துத்துவம் பேசுகிற கும்பலுக்கு வசதியாகிப்போனது. எந்த பிராமணீயத்திற்கு எதிரான போர்க்குரலாக திராவிடக் கட்சிகள் தலை யெடுத்தனவோ, அந்த பிராமணீயத்திற்காகவே நிற்கிற பாஜக்ர-வோடு இவர்கள் அரசியல் உறவுகொள்ள தயங்கவில்லை. பெரியாரின் தாடியில் தீ வைக்கிற இந்தச் செயலின் பின்னணியில் இவர்களது ஆட்சி அதிகார தாகம், பதவி மோகம் ஆகிய அரசியல் கணக்குகள் மட்டுமல்ல, பண்பாட்டு அடை யாளங்களுக்கான போராட்டப் பாதையிலிருந்து விலகிய குழப்பங்களும் உண்டு. பொருளாதார கொள்கை சார்ந்த மயக்கங்களும் உண்டு. இன்றைக்கு அந்தத் தவறு திருத்தப்பட்டிருக்கிறது – இந்தத் திருத்தம் நீடிக்குமா என்பது வெறும் ஆய்வாளர்களுடைய சந்தேக புத்திக் கேள்வி. நீடிக்க வேண்டும் என்பது சமுதாய அக்கறையுடன் செயல்படுகிறவர்களின் விருப்பம்.
தலித் மக்களின் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்கவென்று புறப்பட்ட கட்சிகள், வாக்கு வங்கிகளை ஏற்படுத்திக்கொண்டு பெரிய கட்சிகளுடன் பேரம் பேசுவதற்காக மட்டும் அதைப் பயன்படுத்திக்கொள்கிற விபத்தும் நடந்தது. அதேபோல் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சார்ந்த மக்களின் பிரதிநிதிகளாக உருவான கட்சிகளும் பேரம் பேசுகின்றன. சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்களுக்கான அரசியல் கட்சிகளும் வாக்கு வங்கி பேரம் நடத்தத் துவங்கின.

இப்படிப்பட்ட சமரசங்கள், பின்னடைவுகள் ஆகியவை ஒருபுறம் இருந்தாலும் – ஒற்றை ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்திலும்,  மற்றைய சமூகங்களின் பண்பாட்டு அடையாளக் குரல்களை இந்த அளவிற்கேனும் ஒலிக்கச் செய்ததிலும் இவர்களது பங்களிப்புகளை குறைத்து மதிப்பிடுவதற் கில்லை. களத்தில் இக்கட்சிகள் இறங்காமல் விட்டிருந்தால், மனுதர்ம வாதிகளின் ஆதிக்கத் திட்டம் எளிதில்  நிறைவேறியிருக்கும் என்பதை மறைப்பதற்கில்லை.
பண்பாட்டு அடையாளப் போராட்டம் என்ற பெயரில், அவரவர் அடையாளங்களோடு நிற்க வேண்டும், கலப்பு என்பதே கூடாது என்று வாதிடுகிறவர்களும் இருக்கிறார்கள். எதுவும் மாறாமலே இருந்திருந்தால், கலப்பு என்பது நடக்காமலே போயிருந்தால் இன்றைய வளர்ச்சிகள் எதுவுமே இல்லாமல் போயிருக்கும். பரிணாம வளர்ச்சியே தேய்ந்துபோயிருக்கும். ஆனால் அந்தக் கலப்பு சந்தை வேட்டைக்காகவும், சிலரது ஆதிக்க வேட்கைக்காகவும் சமுதாயத்தின் தலையில் வலிந்து கட்டப்படுவதாக இருக்கக்கூடாது. இயற்கையான, தன்னியல்பான, மாற்றத்தின் நன்மை களையும் தீமைகளையும் ஆராய்ந்து மனமுவந்து ஏற்றுக்கொண்டதாக அந்தக் கலப்பு நடைபெற வேண்டும்-பேண்ட், சட்டை, சுடிதார் முதலிய உடைகள் இயல்பாக ஏற்கப்பட்டதுபோல. ஆனால், இத்தகைய அறிவியல் பார்வையோடு இந்தப் பிரச்சனகளை எத்தனை கட்சிகள் அணுகுகின்றன? கூட்டு விவாதத்தின் அடிப்படையில் கொள்கை நிலைபாடுகளோ கருத்துக்களோ மேற்கொள்ளப்படாமல், கட்சியின் ஆகப்பெருந் தலைவர் என்ன சொல்கிறாரோ அதுவே கட்சியின் கருத்து என்ற `பண்பாடு’, அக்கட்சியின் மற்ற தலைவர்களும் தொண்டர்களும் கேள்வியின்றி அதை ஏற்றுக்கொள்கிற `உளவியல்’ ஆகியவை தனி விவகாரங்கள்!

கம்யூனிஸ்ட் பண்பாடு
கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டுத் தலைமை, கூட்டு விவாதம், கூட்டு முடிவு  என்ற ஜனநாயகத்துடன் இயங்குகின்றன. தலைவர் சொல்வதே வேதவாக்கு என்ற பண்பாடு, அதை அப்படியே ஏற்றுக்கொள்கிற உளவியல் இரண்டுமே மார்க்சிய கட்சிகளிடம் கிடையாது. சொல்லப்போனால் உள்ளூர்க் கிளைகள் முதல் தலைமைக் குழுக்கள் வரை மாநாடுகளின் மூலம் கட்சியின் கொள்கைகளை வகுப்பதில் பங்கேற்கிற உயர்ந்த பண்பாடு உள்ளது. எடுத்துக்காட்டாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது 18வது அகில இந்திய மாநாட்டை டில்லியில் 2005ம் ஆண்டு ஏப்ரலில் நடத்தவுள்ளது.  அதன் அரசியல் தீர்மானத்தை இறுதிப்படுத்துவதில் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் பங்கேற்கிறார்-அதற்கான அமைப்பு ரீதியான ஏற்பாடுகள் உள்ளன. இவ்வாறு, கட்சியின் கொள்கைகளைத் தீர்மானிப்பதிலேயே பங்களிப்புச் செய்கிற கம்யூனிஸ்ட் கட்சிக்காரரின் தனிமனித உளவியல் எத்தகையதாக இருக்கும் என்று விளக்கவேண்டுமா என்ன?

பண்பாட்டுக் களத்தில் நடக்கிற ஆதிக்கங்களுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடுகின்றன. அதே நேரத்தில் அந்தப் போராட்டம் மக்களின் எந்தப் பிரிவினரையும் தனிமைப்படுத்துவதாகிவிடக்கூடாது என்ற அக்கறையுடன் இயங்குகின்றன. பண்பாட்டுப் போராட்டத்தின் அடித்தளம் வர்க்கப் போராட்டம்தான் என்ற புரிதலோடு – வேறு சொற்களில் சொல்வ தானால், வர்க்கப் போராட்டத்திலிருந்து வர்ணப் போராட்டத்தை அல்லது பண்பாட்டுப் போராட்டத்தை தனி அஜெண்டாவாகப் பிரிப்பதற்கில்லை என்ற புரிதலோடு – இயங்குகின்றன. இதன் அர்த்தம், வர்க்கப் போராட்டம் என்றால் வெறும் பொருளாதாரப் போராட்டமே என்பதல்ல; அதற்கு மட்டுமே முன்னுரிமை என்பதல்ல; பொருளாதார சமத்துவம் வந்துவிட்டால் “ஆட்டமேட்டிக்காக” மற்ற மாற்றங்களும் வந்துவிடும் என்று பண்பாட்டுப் பிரச்சனைகள் பின்னுக்குத் தள்ளப்படும் என்பதல்ல. அப்படி கம்யூ னிஸ்ட்டுகள் அல்லாதவர்கள் மட்டுமல்ல கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களே கூட புரிந்துகொண்டால் அது தவறு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில், இதில் தெளிவான நிலைபாடுகளைக், கடந்தகால  அனுபவங்களின் பாடங்களி லிருந்து கற்றுக்கொண்டு உருவாக்கிக்கொள்கிறது. விமர்சனம் – சுய விமர்சனம் என்ற அடிப்படையில் இது ஒரு தொடர்ச்சியான நடைமுறையாக இருக்கிறது. 1992 டிசம்பர் 6ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, நாடெங்கும் கலவரங்கள் பரவியதைத் தொடர்ந்து, தில்லியில் நடந்த ஒரு நல்லிணக்கக் கருத்தரங்கில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், “இப்படிப்பட்ட நிலைமை உருவானதில் இடதுசாரிகளாகிய எங்களுக்கும் பங்கு உண்டு. பொருளாதாரப் பிரச்சனை களில் கவனம் செலுத்திய அளவுக்கு நாங்கள் சமூகப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தத் தவறிவிட்டோம்,” என்று வெளிப்படையாகக் கூறினார். மார்க்சிஸ்ட் கட்சி கற்றுக்கொள்வதற்கும், சரியான நிலைபாடுகளை உருவாக்கிக்கொள்வ தற்கும் தனது கதவுகளை ஒருபோதும் மூடிக்கொண்டதில்லை என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?

இறை நம்பிக்கை, மதப்பற்று, போலியான தேசியவாதம் – ஆகியவற்றின் அடிப்படையில் சங் பரிவாரத்தினர் துவங்கிய பண்பாட்டு மேலாதிக்கத்தை ஓரளவு தடுக்க முடிந்திருக்கிறது என்றால் அதில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. சங் பரிவாரம் தனது முதல் எதிரியாக கம்யூனிஸ்ட்டுகளையே கருதுகின்றது என்பது அதன் வெளிப்பாடுதான். அதே நேரத்தில், பண்பாட்டுத் தளத்தில் கம்யூனிஸ்ட்டு களின் தலையீடும் ஈடுபாடும் இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது என்பதும் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும்.

இன்றைக்கு, காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட விவகாரத்தைப் பயன்படுத்தி மிகப்பெரிய மதவெறித் திட்டத்தைத் தொடங்கவும், கலவர விதைகளை விதைக்கவும் சங்பரிவாரம் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. உளவியல் ரீதியாக மக்களின் நம்பிக்கைகளைக் கிளறிவிட்டு ஆதாயம் அடைய முயல்கிறது பாஜக. ஆயினும், பொதுவாக அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டுவிடவில்லை. இப்படிப்பட்ட மன நிலை வளர்ந்திருப்பதில் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பங்களிப்பு தலையாயது.

அடித்தளம்
இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் இங்கே மூடநம்பிக்கைகள், பிற்போக்குத்தனங்கள், சாதியப்பாகுபாடுகள், பெண்ணடிமைத்தனம், மரபு என்ற பெயரில் குடும்பங்களில் நிலவும் ஜனநாயகமின்மை முதலியவை நீடிக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் இங்கே முதலாளித்துவம் கட்டப்பட்டது, நிலப்பிரபுத்துவத்தை தகர்த்த இடிபாட்டின் மீது அல்ல. முதலாளித்துவம் தனது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை தகர்க்கிற கடமையை நிறைவேற்றவில்லை. மாறாக அதனுடன் சமரசம் செய்து கூடிக்குலவுகிறது. அந்தக் கடமை தொழிலாளி வர்க்கத்தின் தோளில் விழுந்திருக்கிறது.
சுதந்திர இந்தியாவின் ஆளும் வர்க்கத்தைப்பற்றி மார்க்சிஸ்ட் கட்சி தனது கட்சித் திட்டத்தில் இவ்வாறு கூறுகிறது: “… (சுதந்திர இந்தியாவில்) புதிய அரசுக்கு தலைமையேற்ற பெருமுதலாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைக் கடமையைப் பூர்த்தி செய்ய மறுத்தது. உற்பத்தி சக்திகளின் விலங்குகளை உடைத்தெறிவதில்தான் இந்திய சமூகத்திற்கு புத்துயிர்  அளிக்கும்  பாதை அமைகிறது.

புல்லுருவித்தனமான நிலப் பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டு விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்நிய ஆதிக்கப்பிடியிலிருந்து தொழில் வளர்ச்சி விடுவிக்கப்பட்டிருந்தால் முன்னேறிய தொழில் வளர்ந்த நாடாக மாற வழி ஏற்பட்டிருக்கும். ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை நிறைவேற்றுவதால் ஏற்படும் தொடர் விளைவுகளை எண்ணி அச்சமுற்ற பெரு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுக்களுடன் ஒரு கூட்டை அமைத்துக்கொண்டதோடு, ஏகாதிபத்தியத்தோடும் சமரசம் செய்துகொண்டது……முதலாளித்துவப் பாதையின் தன்மை ஆளும் வர்க்கங்களின் இந்தத் தன்மையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப் பட்டது.”

கட்சித் திட்டம் இதுபற்றி மேலும் கூறுவதாவது: “…நாடு முழுவதும் சாதியப் பாகுபடும், சாதிய ஒடுக்குமுறையும், மிக மோசமான பாலியல் ஒடுக்குமுறைகளும், ஏழைகள், கந்துவட்டிக்காரர்கள் மற்றும் வர்த்தக மூலதனக்காரர்களாக சுரண்டப்படுவதும் தடையின்றி நடக்கின்றன. இந்திய விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சி என்பது பழைய வடிவங்களை உறுதியான முறையில் ஒழித்து உருவாக்கப்படவில்லை. முதலாளித்துவத் திற்கு முந்தைய உற்பத்திமுறை மற்றும் சமூக அமைப்பு எனும் சீரழிந்த வடிவத்தின் மீது பொருத்தப்பட்டது. `நவீனத்தின்’ வளர்ச்சி, காலத்திற்கு ஒவ்வாதவற்றைத் தவிர்த்துவிடவில்லை……”
“……பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சக்திவாய்ந்த சர்வதேச தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி நமது நாட்டின் சமூகப் பண்பாட்டு வாழ்க்கையில் நேரடியாகத் தலையிட ஏகாதிபத்தியத்திற்கு வழிவகுக்கிறது….,” என்றும் கட்சித் திட்டம் கூறுகிறது.
“…மதச்சார்பின்மைக் கோட்பாடும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளும் அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ளது என்று அரசின் பெருமுதலாளி வர்க்கத் தலைமை பறைசாற்றிக்கொள்கிறது. எனினும் நடைமுறையில் மதச்சார் பின்மை முதலாளி வர்க்கத்தால் நாசமாக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டையே முற்றாகத் திரித்துக் கூறமுயல்கிறது. அரசியலையும் மதத்தையும் முற்றாகப் பிரிப்பது என்பதற்குப் பதிலாக அரசு மற்றும்  அரசியல் வாழ்க்கையில் அனைத்து மத நம்பிக்கைகளும் சமமாக தலையிடுவதற்கான சுதந்திரம் என்பதே மதச்சார்பின்மையின் பொருள் என மக்களை நம்பவைக்க முயல்கின்றனர். மதச்சார்பின்மைக்கு எதிரான போக்குகளை உறுதியுடன் எதிர்ப்பதற்கு பதிலாக முதலாளி வர்க்கம் அதற்கு சலுகை வழங்கி வலுப்படுத்துகிறது…,” என்றும்  கட்சித் திட்டம் சுட்டிக்காட்டுகிறது. காலையில் அகில இந்திய வானொலியைத் திருப்பினால், ஒரு இந்துமத பக்திப்பாட்டு, ஒரு முஸ்லிம் பாட்டு, ஒரு கிறிஸ்துவப்பாட்டு என்பதாக ஒலிபரப்பப்படுகிற ஏற்பாட்டில் இதன் விளக்கத்தைக் காணலாம்.

“…..சாதீய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுவதிலும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அமைப்பு தோல்விகண்டுள்ளது. இதனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மிக மோசமான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். தீண்டாமை என்பது சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், தலித் மக்கள் தீண்டாமை எனும் பாரபட்சத்தின் இதர வடிவங்களுக்கு உள்ளாக்கப்படு கின்றனர். இதற்கு எதிராக தலித் மக்களிடம் வளர்ந்துவரும் விடுதலை உணர்வு கொடூரமான ஒடுக்குமுறை மற்றும் வன்செயல் மூலம் எதிர் கொள்ளப்படுகிறது. சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதியினரான தலித் மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியில் ஒரு ஜனநாயக உள்ளடக்கம் உள்ளது. சாதிகளாகப் பிரிக்கப்பட்ட சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தினரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டுகிறார்கள்…………. அதே நேரத்தில் வாக்கு வங்கிகளைத் திரட்ட வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திற்காகவே சாதிய உணர்வுகள் தூண்டப்பட்டு சாதியப் பகைமைகள் ஏற்படுத்தப் படுவதன் மூலம் பொதுவான ஜனநாயக இயக்கங்களிலிருந்து அடித்தட்டு மக்களைப் பிரிக்கும் முயற்சியும் நடந்துகொண்டிருக்கிற….,” என்றும் கட்சித் திட்டம் கூறுகிறது.

“…சுதந்திரப் போராட்டத்தில் சமமாக பங்கேற்ற பெண்கள், இந்தியா விடுதலை பெற்றவுடன் பல நூற்றாண்டு பழமைவாய்ந்த நிலப்பிரவுத்துவ தளைகளிலிருந்தும் பாலியல் ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை கிடைக்கு மென்று நம்பினார்கள். அவர்கள் முன்னேறுவது என்பது ஒருபுறமிருக்க,  ஐம்பதாண்டுகால முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சி ஆணாதிக்கம் என்பதையே அனைத்துத் துறைகளிலும் நிரந்தரமாக்கிவிட்டது…,” என்றும் கட்சித் திட்டம் கூறுகிறது.

இன்றும் தொடர்கிற இரட்டை கிளாஸ் அக்கிரமங்கள், பெண்களைக் கொச்சைப்படுத்தும் வர்த்தக விளம்பர வக்கிரங்கள் முதலியவற்றிற்கு அடித்தளமாக உள்ள இந்திய சமூகத்தின் – அரசின் – வர்க்கத்தன்மையை மார்க்சிஸ்ட் கட்சி கோடிட்டுக் காட்டுகிறது. ஆம், மண்டிக்கிடக்கும் புதரை அகற்றாமலே வீட்டைக்கட்டினால் வீட்டிற்குள் பூச்சிகளும் தேள்களும் பாம்புகளும் வரத்தான் செய்யும். நிலப்பிரபுத்துவத்தை தகர்க்காமல் கட்டப்பட்டிருக்கிற முதலாளித்துவ வீட்டிற்குள் சாதியம், பெண்ணடிமைத் தனம், மூடநம்பிக்கைகள், பிற்போக்குத்தனங்கள் முதலிய நச்சு ஜந்துக்கள் நெளிந்துகொண்டுதான் இருக்கின்றன.
இதை மாற்றுவதற்கான போராட்ட வியூகத்தையும், அதிலே அணி சேர்க்கப்பட வேண்டிய மக்கள் சக்திகளையும் பற்றி கட்சித் திட்டம் மேலும் எடுத்துரைக்கிறது. அந்த இலக்குடன்தான் கட்சி தனது தொலைநோக்குத் திட்டங்களையும் உடனடி அணுகுமுறைகளையும் மக்கள் முன் வெளிப் படையாக வைத்து இயக்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.  சமூக-வர்க்க-பொருளாதார கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் பண்பாட்டு உளவியல் தளத்திலும் முற்போக்கான ஆரோக்கியமான மாற்றங்களை விளைவிக்க முடியும் என்று மார்க்சிஸ்ட் கட்சி நம்புகிறது. அந்த மாற்றத்திற் கான புரட்சிக்கு “மக்கள் ஜனநாயகம்” எனப் பெயரிட்டு அதை நனவாக்குதற் கான இயக்க முயற்சிகளிலும் இடையறாமல் கட்சி தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.

தனி மனித உளவியல் என்ற நோக்கிலும் கம்யூனிஸ்ட் கட்சி அதன் உறுப்பினர்களை புரட்சியாளர்களாக, மனித நேயர்களாக, அரசியல் அறிஞர்களாக, தத்துவ ஞானிகளாக வார்க்கிறது. கூட்டு விவாதம், பெரும்பான்மையினரின் கருத்து முடிவாக்கப்படுதல், அதனுடன் முரண்பட்ட சிறுபான்மையினரும் அந்த முடிவை முழு விசுவாசத்துடன் நிறைவேற்றுவது என்ற கட்சிக் கட்டுப்பாட்டு ஒவ்வொரு உறுப்பினரையும் வளர்த்தெடுக்கிறது. ஊழலற்றவர்களாக, சுயநலமற்றவர்களாக, மக்கள் சேவைக்காகத்தான் அரசியல் என்ற உணர்வுபெற்றவர்களாக அவர்கள் செயல்படுவதை கட்சி வாழ்க்கை உறுதிப்படுத்துகிறது. தலைவர் துதி, தனிமனித வழிபாடு, அடிமைத்தனம் போன்றவற்றிற்கு மார்க்சிய இயக்கத்தில் இடமில்லை. மனிதரை மனிதர் நேசிக்கிற, மதிக்கிற, பண்பாட்டு வேர்களையும் வேறுபாடுகளையும் புரிந்துகொள்கிற, இயல்பான பண்பாட்டுக் கலப்பை வரவேற்கிற உயர்ந்த பண்பாட்டு உளவியல் இத்தகைய இயக்கத்தின் மூலமே தழைத்திருக்கும்.

ஒரு வெளிப்பாடு
மக்கள் சாதி, மத  பிடிப்பு உள்ளவர்களாக இருந்தாலும்கூட, அரசியல் ரீதி யாகவே – கட்சி அடிப்படையிலேயே – அவர்கள் அணிதிரண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இது பளிச்செனத் தெரியவருகிறது. மக்கள் இவ்வாறு கட்சி கட்சியாகத் திரண்டிருப்பதுதான் தேர்தல் கால கூட்டணிகளில் பலனளிக்கிறது. இதற்குச் சரியான எடுத்துக்காட்டு கடந்த 14வது மக்களவைத் தேர்தல். குறிப்பாகத் தமிழகத்தில் என்ன நடந்தது? போட்டி பாஜக போல மத உணர்வுகளின் அடிப்படையில் வாக்குகளைக் குவித்து விடத் திட்டமிட்டார் அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா. மதமாற்றத் தடைச் சட்டம், ஆடு-கோழி பலியிட தடை, கோவில்களில் அன்னதானம், வேத உபந்நியாசம்,கோவில்களுக்கு திருவிளக்கு பூசை ஏற்பாடு, கோவில் யானைகளுக்கு இன்பச் சுற்றுலா… என்று அவர் அடுத்தடுத்துப் பல நடவடிக்கைகளை எடுத்ததில் பெரும்பான்மை இந்து மக்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற அரசியல் கணக்கீடுகளும் இருந்தன. ஆனால் தேர்தலில் மக்கள் அவர்கள் ஆதரிக்கிற அரசியல் கட்சிகளஇன் அணிச் சேர்க்கை அடிப்படையிலேயே மின்னணு வாக்குப் பெட்டியின் பொத்தான்களை அழுத்தினார்கள். லயோலா கல்லூரி, பண்பாடு-மக்கள் தொடர்பகம் அந்தத் தேர்தலுக்கு முன் மேற்கொண்ட கருத்துக்கணிப்பு அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டத்தையும், ஆடு-கோழி தடை ஆணையையும் விளக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.

இன்று காஞ்சி சங்கராச்சாரி மீது கை வைக்கிற அளவுக்கு தமிழக அரசுக்குத் துணிவு வந்திருக்கிறது. திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் தமிழக மண்ணில் வேரூன்றச் செய்துள்ள மதச்சார்பின்மை, சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றால் உருவான மக்களின் மனநிலையிலிருந்தே அந்தத் துணிவு பிறந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

அகில இந்திய அளவிலும் கூட பாஜக-வின் மதவாதத் திட்டங்களுக்கு இரையாகாமல் பெரும்பாலான மக்கள் தங்கள் வயிற்றுப்பாட்டு அடிப்படை யிலேயே அவரவர் சார்ந்துள்ள கட்சிகளின் வேண்டுகோள்படியே, வாக்குச் செலுத்தினார்கள். இது ஒரு முக்கியமான பண்பாட்டு உளவியல் வெளிப்பாடு. இதைச் சொல்வதால், மக்கள் முற்றிலுமாக மத, சாதி உணர்வுகளிலிருந்து விடுபட்டுவிட்டார்கள் என்றாகிவிடாது. கணிசமான மக்கள் அந்த உணர்வு களின் அடிப்படையில்தான்  பாஜக வகையறாக்களை ஆதரிக்கிறார்கள். இதை ஊதி ஊதிப் பெரிதாக்குகிற செயல்திட்டத்துடன்தான் பாஜக தனது காய்களை நகர்த்துகிறது.

செங்கொடிச் செயல்பாடு
தமிழகத்தின் தஞ்சை மண்ணில் அரை நூற்றாண்டுக்கு முன் இருந்த நிலைமை என்ன? அடிமைகளாக நடத்தப்பட்ட விவசாயத் தொழிலாளிகளான தலித் மக்கள் தோளில் துண்டு அணிய முடியாது, காலில் செருப்பணிந்து மேட்டுத் தெருக்களில் நடக்க முடியாது, ஆண்டைகளை சாமி சாமியென்றே விளிக்க வேண்டும், எதிர்ப்புக் குரல் எழுப்புவோருக்கு சாணிப்பால்-சாட்டையடி. இன்று இந்த நிலைமை பெரிதும் மாறிவிட்டிருக்கிறது. மேட்டுத் தெருக்களில் ஒரு தலித் தலைநிமிர்ந்து நடக்க முடிந்ததில் செங்கொடி இயக்கத்தின் நீண்ட போராட்டத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பு உள்ளது. இது வெறும் பிரச்சாரத்தால் மட்டும் வந்ததல்ல, இயக்கத்தின் நீண்ட நெடும் போராட்டங்களாலும் தியாகங்களாலும் விளைந்த விளைச்சல் இது.

இடதுசாரிகளின் ஆட்சி நடைபெறுகிற மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் கம்யூனிஸ்ட்டுகள் முக்கிய அரசியல் சக்தியாக உள்ள கேரளத்திலும் சாதியம், மதவாதம் முதலிய பிற்போக்குத்தனங்கள் பெருமளவுக்குப் பின்தங்கிவிட்டிருக்கின்றன என்பதும் காணத்தக்கது. இதற்கு முக்கியக் காரணம் இந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த (நில விநியோக) நடவடிக்கைகள். இந்திய அரசமைப்பு சாசன சட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட வேண்டிய சூழலில் அந்த மாநிலங்களின் இடதுசாரி அரசுகள் இதைச் செய்ய முடிந்திருப்பது சாதாரணமானதல்ல.
பெண் விடுதலை, குடும்ப ஜனநாயகம், அனைவருக்கும் கல்வி, அனைத்து மொழிகளின் சமத்துவம், வேலை வாய்ப்பு, பொதுத்துறை பாதுகாப்பு எனப் பல்வேறு அம்சங்களில் செங்கொடி இயக்கம் உணர்வுப்பூர்வ மான அக்கறையோடு முழக்கங்களை எழுப்பி முயற்சிகளை மேற்கொள்கிறது. பண்பாட்டு உளவியல் நோக்கில் இவை முக்கியமான செயல்பாடுகளாகும். மார்க்சிஸ்ட் கட்சி நெறிப்படுத்தும் இயக்கம் என்ற ஒன்றை மேற்கொண்டு, முன்னணி ஊழியர்கள் தமது இல்லங்களில் காதணி விழா, பூப்புனிதவிழா போன்றவற்றைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு அழுத்தமான வேண்டுகோளை விடுத்தது. கம்யூனிஸ்ட் குடும்பங்களின் சாதி, மத வேலிகளைத் தாண்டிய காதல் திருமணங்கள் மனமுவந்து வரவேற்கப்படுகிற இயல்பான ஒரு நிகழ்வு.

மொத்தத்தில்
பண்பாட்டு உளவியல் வளர்ச்சியில் பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் நிகழ்வுகள் பங்காற்றுகின்றன. ஆயினும், அரசியல் களத்தில் இயங்குகிற கட்சிகளின் பங்களிப்பு இதில் முக்கியமானதாகும். இதில் ஏற்பட்டிருக்கிற முன்னேற்றம், பின்னடைவு இரண்டிலுமே அரசியல் கட்சிகளுக்குப் பங்குண்டு. பிரச்சனைகளின்போது மக்கள் புலம்பிக் கொண்டிராமல் வீதிக்கு வந்து போராடுவது, அதிகாரிகளைத்  தட்டிக்கேட்பது, தங்களது சொந்த நம்பிக்கைகளையும் அரசியலையும் பிரித்துப் பார்ப்பது முதலிய ஆரோக்கிய மான வளர்ச்சிப் போக்குகள் கட்சிகள் இல்லாமல் ஏற்பட்டுவிடவில்லை. அதேபோல் முழுமையான ஜனநாயகம் மலர்வதில், அரசியல் உணர்வு வளர்வதில், பல்வேறு பிற்போக்குத்தனங்கள் மறைவதில் நீடிக்கிற தேக்க நிலைமையிலும் கட்சிகளுக்குப் பொறுப்பு உண்டு. எந்தக் கட்சிகள் எந்த அம்சத்தில் கூடுதல் பங்களிப்பைச்  செய்கின்றன என்பதையும் எந்தக் கட்சிகள் பண்பாட்டு உளவியலின் முற்போக்கான வளர்ச்சிக்காக நிற்கின்றன என்பதையும் உங்கள் சொந்த ஆய்வுக்கும் முடிவுக்கும் விடுகிறேன்.

-(சென்னை லயோலா கல்லூரி
– பண்பாடு மக்கள் தொடர்பகம் நடத்திய
சாதி-மதம்-சினிமா-அரசியல்” கருத்தரங்கில்
நிகழ்த்திய உரை)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s