கடந்த பல மாதங்களாக சங்கராச்சாரியார்கள் கைது, நீதிமன்ற நடவடிக்கைகள், சங்கர மடம் குறித்து வெளிவரும் பல தகவல்கள் ஆகியன அனைத்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் தவறு செய்திருக்கிறார்களா என்ற கேள்விக்கு நீதிமன்றம்தான் பதில் அளிக்க வேண்டும்.
ஆனால் அனைத்தையும் விட முக்கியமானது இதுதான்: மடம் அல்லது அமைப்பின் பெயரில் பல மத நிறுவனங்களை உண்டாக்கி, பொதுத் தளங்களில் மதப்பிரச்சாரம், வழிபாடு போன்ற செயல்பாடுகளில் இறங்குவது தேவையானதா? இன்றைய சூழலில் சிந்தித்து, விவாதித்து முடிவுக்கு வரவேண்டிய பிரச்சினை இது.
மடம் உள்ளிட்ட பல மத அமைப்புக்கள் இதர நிறுவனங்கள் போன்று, தங்களது இஷ்டம்போல் நிர்வாகக் குழுக்களை அமைத்துக் கொள்வதும், வெளியில் தெரியாத வகையில் ஏராளமான நிதி வளங்களை உருவாக்கிக் கொள்வதும், அரசியலில் பல ரகசியத் தொடர்புகளை வைத்துக் கொண்டு ரகசிய பேரங்களில் ஈடுபடுவதும் மதம் எனும் போர்வையில் நடக்கிறது. இது சரியானதா?
இப்படிப்பட்ட மடங்கள் / மத நிறுவனங்கள் மீது மக்கள் பக்தி கொள்வதும், நம்பிக்கை வைப்பதும் தேவையா என்பதனை மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது.
தனிநபர் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை ஒரு தனிநபரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமா? தனிநபரின் இதயக் கூட்டிற்குள் இருக்க வேண்டிய இந்த நம்பிக்கையை மட / மத நிறுவனங்கள் மீது கொண்டிருப்பது அவசியமில்லை என்பதே இக்கட்டுரை முன்வைக்கும் வாதம்.
தற்போது கணிசமான பகுதி மக்களிடம் நிறுவனமயமாக்கப்பட்ட மதச் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாலும், அதன் காரணமாக பல பகுதி மக்கள் பாதிப்புக்கு உள்ளாவதும் நிகழ்கிறது. இதனால், மத நிறுவனங்களின் தேவை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
மத / மட நிறுவனங்கள் இன்றைய நிலை
மதம் நிறுவனமயமாகக் கூடாது என்ற கருத்தை தமிழகம் முழுவதும் சென்று வலுவாக குரல் கொடுத்து வந்த மாமனிதர், மறைந்த குன்றக்குடி அடிகளார்.
மத நம்பிக்கையை நிறுவனத்துக்குள் அடைத்து செயல்படுகிற போக்கு, வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சிக்கு தூபம் போடுவதை இருபதாண்டுகளுக்கு முன்பே உணர்த்தியவர் அந்தப் பெருந்தகை.
வீக் ஆங்கிலப் பத்திரிக்கைக்காக கன்கெய்யா பெல்லாரி என்பவர் மடங்களில் நடந்துள்ள குற்றங்கள் பற்றி ஆய்வு செய்துள்ளார்.
ஏழு ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு அவர் எழுதியுள்ள விவரங்கள் மிகவும் அதிர்ச்சியாக உள்ளன.
அவரது ஆய்வுப்படி உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியா நகரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதுக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குள் மடத்தின் சொத்துக்கள் பற்றி தொடர்ச்சியான சண்டைகள் நடந்து வருகின்றன.
இந்த மோதல்களில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 150 சாதுக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காவல்துறை மற்றும் அரசு நிர்வாகங்களால் இந்த வன்முறை நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
1993 ஆம் ஆண்டு புட்டப்பர்த்தியிலுள்ள சத்ய சாயி பாபாவின் பிரஷாந்தி நிலையத்தில், சாயி பாபா பக்தர்கள் நான்கு பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். சாய பாபாவின் உதவியாளர்கள் இரண்டு பேரையும் அவர்கள் சுட்டுக் கொன்றனர். கொல்லப் பட்டவர்கள் சாயி பாபாவை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுபற்றி மேலும் எந்த விபரங்களும் வெளிவரவில்லை. சம்பவத்தன்று பக்கத்து அறையில் இந்த சாயி பாபாவிடம் விசாரணை கூட நடத்தப்படவில்லை.
சில வருடங்களுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தில் வெளிவரும் மாலைப் பத்திரிக்கையின் ஆசிரியர் சத்திரபதி, ஹிஸ்ஸார் நகரில் உள்ள ஒரு செல்வாக்கான மடத்தைப் பற்றி பல செய்திகளை ஆய்வு செய்து வெளியிட்டார். உயிரைப் பணயமாக வைத்து அந்த மடத்தில் பெண்கள் மீதான பாலியல் நடவடிக்கைகள், சில மர்ம மரணங்கள் பற்றிய தகவல்களை அவர் வெளியிட்டார். உடனடியாக அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.
சமீபத்தில் அரவிந்தர் ஆசிரமத்தில் நடந்த பாலியல் குற்றங்களும் வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளன. அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் தேசிய பெண்கள் ஆணையத்திடம் ஆசிரமத்தில் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் தங்கள் மீது செய்த பாலியல் சித்திரவதைகளை விரிவாக எடுத்துரைத்தனர். ஒத்துழைக்க தவர்களை தனி அறையில் போட்டு அடைத்து துன்புறுத்தி யுள்ளனர்.
மாதா அமிர்தானந்தமாயி தேவி மடம், அரவணைக்கும் தாய் என்று விளம்பரம் வெளியிடுகிறார்கள். பி.பி.சி. கூட செய்திப்படம் வெளியிட்டது. இந்த மடம் செய்யும் அற்புதங்கள் போலித்தன மானவை என்றும் மடத்தில் நடக்கும் மர்மச் சாவுகள் பற்றியும் ஸ்ரீரீனி பட்டாபிராம் என்பவர் ஒரு நூல் வெளியிட்டிருந்தார். அவர் இன்று வேட்டையாடப்பட்டு வருகின்றார்.
முப்பதாண்டுகளுக்கு முன்பு அவசர நிலை காலத்தில் மெய் வழிச்சாலை என்ற ஆசிரமத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பிரேமானந்தா மடம் குறித்து வழக்கு நடந்து அவர் சிறையில் இருக்கின்றார்.
இவை அனைத்தும் மதம் நிறுவனமாவதால் தீமையே என்ற குன்றக்குடி அடிகளாரின் கருத்தை நிரூபிக்கின்றன.
இதர மதங்களின் மீதான துவேஷம்
இந்தியாவில் தழைத்து வளர்ந்த எல்லா மதங்களிலும் மனிதநேயம் கொண்ட, மதத் தலைவர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் வேற்று மதங்களின் மீது பகைமை கொள்ளாமல், அந்த மதங்களின் கருத்துக்களையும், போற்றிப் பாராட்டி வாழ்ந்தனர்.
விவேகானந்தர் இதற்கோர் உதாரணம். இந்தியா இஸ்லாமிய உடலும், இந்து ஆன்மாவும் கொண்டதாக இருக்க வேண்டு மென்றார்.
ஆனால் இன்றைய மட / மதத் தலைவர்களில் இத்தகு பாங்கு கொண்டோர் எத்தனை பேர்? காஞ்சி சங்கராச்சாரியார் உள்பட மடாதிபதிகள், மதத் தலைவர்கள் பலர் வேற்று மதத்தினர் மீது அன்பு செலுத்துபவர்களாக நடந்து கொள்ளவில்லை.
நேரடியாக தொகாடியாவைப் போன்று, அவர்கள் இதர மதங்களை தூற்றிப் பேசுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், கன்னிகாஸ்திரிகள் பலவந்தப்படுத்தப்படுகிறபோது, இவர்கள் கண்டித்தது கிடையாது. பெண்களான சில மதத் தலைவர்கள் கூட இதர மதத்தைச் சார்ந்த பெண்களின் மீது கொடுமை இழைக்கப் படுகிறபோது, இது மதம் வலியுறுத்தும் மனித நேயத்திற்கு விரோதம் என்று சொன்னது கிடையாது.
இதர மதத்தைத் சார்ந்த பலர் கொளுத்தப்படும் போது, ஏன், தங்களது மதத்தையே சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் உயிரோடு எரிக்கப்படும்போதும், மக்களால் உன்னத புருஷர்களாக, தெய்வ மரியாதையோடு நடத்தப்படுகிற இந்த மத / மட தலைவர்கள் (சங்கராச்சாரியார் உள்பட) வாய் திறந்ததில்லை. மாறாக, மோடிகளையும் தொகாடியாக்களையும் இவர்கள் தட்டிக் கொடுத்து வளர்த்து வருகின்றனர்.
எந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுமைகள் நிகழ்ந்தாலும் கண்டிக்கிற மனமில்லாமல் மவுனம் சாதிப்பவர்கள், லட்சக்கணக்கான மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்கள் என்று கூறிக் கொள்வது பொருத்தமானது தானா? இந்நிலையில், பொது மக்கள் தங்களது மதத்தின் மீது மரியாதையையும் பக்தியும் வைத்துக் கொள்ளலாமே தவிர, இத்தகைய மத / மட தலைவர்கள் மீது பக்தியும் மரியாதையும் செலுத்துவது அறிவுக்கு உகந்ததல்ல.
தீண்டாமை – பெண்ணடிமைத்தனமும், மடங்களும்
மதம் நிறுவனமாவது கூடாது என்பதற்கோர் உதாரணம், இன்றைக்கு மடாதிபதிகள் பிரச்சாரம் செய்து வரும் தீண்டாமை, பெண்ணடி மைத்தனக் கருத்துக்கள்.
ஜெயேந்திரரின் தலித் விரோத கருத்துக்கள் பிரசித்தி பெற்றவை. அவரது கைது நேரத்தில் கூட அவர் தீண்டாமை வழக்கத்தை கைவிடவில்லை. அவரது காரில் ஒரு போலீஸ்காரர் ஏற முனைந்தபோது, பிராம்மணர்கள் மட்டுமே வரலாம் என்று தடுத்தவர் அவர்.
சிறையில் அவருக்கு சமைத்துப் போட ஒரு பிராமணர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். (இதனை என்.டி. டி.வி.யின் விவாதத்தின் போது அரசு வழக்கறிஞர் துளசியே கூறியுள்ளார்) மற்ற சாதியைச் சார்ந்தவர் சமைத்தால் சுத்தம் இருக்காது, தீட்டாகி விடும் என்ற ஜெயேந்திரரின் எண்ணமே இதற்கு காரணம். இது மனித மாண்புகளுக்கெல்லாம் விரோதமானது.
இதையும் கூட சங் பரிவாரத்தினர் ஆதரித்துப் பேசுகின்றனர். ஜெயேந்திரரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதுதான் ஜனநாயகம் என்று அவர்கள் வாய் கூசாமல் பதில் அளிக்கின்றனர். உழைப்பாளி மக்கள் சமூகத்தை தரக்குறைவாக நடத்துவதுதான் ஜனநாயக உணர்வா?
சங்கராச்சாரியார்கள் கடல் கடந்து பிராயணம் செய்திட மாட்டார்கள். நீண்ட கால மரபாக இருந்து வந்ததைக் கூட அவர்கள் மாற்றிக் கொண்டனர். 2001 செப்டம்பரில பூரி சங்கராச்சாரி அமெரிக்கா சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பி வந்தார். ஆனால், சாதி, தீண்டாமை, பெண் விடுதலை பிரச்சினைகளில் அப்படியே பழமைக் கருத்துக்களை கைவிடாமல் பாதுகாத்து வருகின்றனர்.
இத்தகு பழமையான, பிற்போக்குத்தனமான நிறுவனங்கள் ஜனநாயக உணர்வு ஒவ்வொரு தனி மனிதரிலும் மேலோங்க வேண்டிய ஒரு சமூகத்தில் தேவைதானா? ஒரு செல்வாக்கு மிக்க நிறுவனத் தலைவர் கூறுகிறார் எனும் போது அது வேத வாக்காக பார்க்கப்படுகிற நிலை தற்போதும் நீடிக்கிறது. இதனால், தீண்டாமை, பெண்ணடிமைத் தனக் கருத்துக்களையும் இத்தகு மத நிறுவனத் தலைவர்கள் கூறுவது மத நம்பிக்கை கொண்டோரிடம் செல்வாக்கு செலுத்திடாதா? அது சமூகத்தை பின்னோக்கி கொண்டு செல்லும். எனவேதான் மத நிறுவனங்கள் தேவையில்லை என்ற நிலைபாட்டுக்கு மக்களைக் கொண்டு வர வேண்டும்.
உண்மைகளை மறைக்கும் மதத்தலைவர்கள்
வரலாற்றுப் பேராசிரியர் கே.என். பணிக்கர் மதத் தலைவர்கள் பற்றிய ஒரு கருத்தைக் குறிப்பிட்டார். தாங்கள் தலைமை வகிப்பதாகக் கூறிக் கொள்ளும் மதத்தில் உள்ள உண்மையான கருத்துக்களை தங்களிடம் பக்தி செலுத்தும் பக்தர்களுக்கு போதிப்பதில்லை. தங்களது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளும் கருத்துக்களை மட்டுமே அவர்கள் போதிப்பதுண்டு.
இதர மதங்களை நேசிக்க வேண்டும், சாதிக் கொடுமைகள் கூடாது என்று மதப் பாரம்பரியத்தில் வந்தவர்களில் பலரே போதித்துள்ளனர். உதாரணமாக தமிழகத்தில் இராமலிங்க வள்ளலார் கடவுள் பக்தி இல்லாத நாத்திகர் அல்லர். அவரும் மதப் பாரம்பரியத்தில் வந்து ஒரு பெரும் இயக்கம் கண்டவர். ஆனால் அவரது கருத்துக்களை மடாதிபதிகளோ, மதத் தலைவர்களோ தங்களது பக்தர்களுக்கு சொல்லித் தந்ததுண்டா?
சமூக சேவையும், மத நிறுவனங்களும்
மடங்களும் பல மத நிறுவனங்களும் கல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள் என பல சமூக சேவைப் பணிகளை செய்து வருகின்றன. இப்படிப்பட்ட சமூக சேவைகளை செய்து வரும் மத நிறுவனங்கள் கூடாது என்று விவாதிப்பது சரியா என பலர் கேட்கலாம்.
உண்மையில் துவக்க காலத்தில் பல அமைப்புக்கள் கல்வி, மருத்துவம் என சேவைகளை மேற்கொண்டது உண்மையே. ஆனால் எல்லா மத நிறுவனங்களும் இத்தகு பணிகளை சிறப்பாக செய்தன எனக் கூற இயலாது. தென் மாவட்டங்களில் பணியாற்றிய கிருத்துவ மிஷனரிகள், விவேகானந்தரால் துவக்கப்பட்ட இந்து மத அமைப்புகள் என ஒன்றிரண்டையே குறிப்பிட முடியும்.
வரலாற்றின் ஒரு கட்டத்தில் நிறுவனமயமாக்கும் சில முயற்சிகள் சாதகமான பல விளைவுகளை ஏற்படுத்தியது உண்மையே.
இதற்கு உதாரணமாக, கர்நாடக மாநிலத்தில் உருவான பசவர் இயக்கம், சீக்கிய மதத்தில் குருநானக் சிந்தனை இயக்கமாக உருவாகியது, கேரளத்தில் நாராயண குரு தலைமையில் உருவான இயக்கம், இவை அனைத்தும் பிராமணிய அதிகார பலத்தை தகர்ப்பதற்கு முயன்றவை. அந்தப் பணியில் அவை ஓரளவு வெற்றியும் பெற்றன.
ஆனால், சமீப ஆண்டுகளாக, குறிப்பாக, வகுப்புவாத உணர்வுகள் தலை தூக்கிய சூழலில், மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமூக சேவைப் பணி மூலம் மக்களிடம் சென்று பணியாற்றுவது, அந்த நெருக்கத்தை வைத்துக் கொண்டு அவர்களிடம் மதப் பிடிமான உணர்வை அவர்கள் ஏற்படுத்துகின்றனர்.
ஒரு உதாரணத்திற்கு சுனாமி பாதிக்கப்பட்ட பணிகளில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாட்டை குறிப்பிடலாம். வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகள் நிவரணப் பணியாற்றி, அந்த நெருக்கத்தை வைத்து ஆங்காங்கே மக்களது அடிப்படை தேவைகளான கல்வி, தொழில் பாதுகாப்பு போன்ற விஷயங்களை முன்னிறுத்தி பணியாற்றி வருகின்றனர். இரவுப் பள்ளிகள் பலவற்றை நடத்துகின்றனர்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கள், மக்களை கூட்டம் கூட்டமாக திரட்டி பூஜைகள், சடங்குகள் என பலவற்றை நடத்தி, அவர்களது ஆன்மீகப் பற்றை ஏற்படுத்தி, மதவெறியை வளர்க்க முயல்கின்றனர்.
எனவே, நியாயமாக வெளிப்படையாக செயல்படும் மதம் சாராத தொண்டு நிறுவனங்கள்தான் இந்த துறையில் செயல்படுவது நல்லது. அதிலும் இப்பணிகள் மக்கள் தங்கள் உரிமைகளை ஒன்றுபட்டு குரலெழுப்ப உதவிட வேண்டும்.
மேலை நாடுகளிலும் மடங்களால் தீமையே
அமெரிக்காவில் நிறுவனமயமான கிறிஸ்துவ மத மடலாயங்களில் நிறைய கேடுகள் உண்டு. ஏராளமான கத்தோலிக்க பாதிரியார்கள் சின்னஞ் சிறுவர்களோடு பாலியல் குற்றங்களை புரிந்துள்ள செய்திகள் எல்லாம் இன்றும் அம்பலத்திற்கு வந்த வண்ணமாய் இருக்கின்றன. பல்வேறு குற்றங்கள் மடாலயங்களில் நிகழ்ந்து வருகின்றன.
சங் பரிவாரத்தினர் இந்து மத மடாதிபதி என்பதால்தான் இப்படி வேடையாடப்படுகிறார்கள் எனவும், இதுவே வெளிநாடாக இருந்தால், இப்படிப்பட்ட நிலை அந்த நாட்டு மதத் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்காது என்கின்றனர். இந்துக்கள் அதிகம் வாழும் இந்தியாவிலேயே இந்து மதத் தலைவர்கள் வேட்டையாடப் படுவதாகவும் அவர்கள் விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர்.
பல பாலியல் குற்றங்களில் கத்தோலிக்க மதத் தலைவர்கள் பலருக்கு ஆயுட் தண்டனை உள்பட பல தண்டனைகள் வழங்கப் பட்டுள்ளது. பலகுறைகள் உள்ள அமெரிக்க ஜனநாயகத்திலேயே இக்குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது.
மடங்களில் குற்றங்கள் நிகழ்வதற்கு இந்து மதம் கிறித்துவ மதம் என்ற பேதமில்லை.
மடங்கள் உருவான வரலாற்றுச் சூழல்
ஏன் மதங்கள் நிறுவனமாயிற்று என்பதற்கு வரலாற்றில் விடை தேட வேண்டியுள்ளது.
காஞ்சி மடாதிபதிகள் கைது செய்யப்பட்டவுடன் சங் பரிவாரங்கள் 2500 ஆண்டுக்கு முன்பு ஆதி சங்கரர் நிறுவிய காஞ்சி மடத்துக்கு அவமரியாதை செய்யப்பட்டு விட்டதாக ஆர்ப்பரித்து எழுந்தனர். பொய்யான தகவல்களை வரலாறு எனும் பெயரில் அவிழ்த்து விடத் தொடங்கினர்.
உண்மையில் எல்லா வரலாற்றாசிரியர்களும் பொதுவாக ஆதி சங்கரரது காலம் என்று ஏற்றுக் கொண்டது, கி.பி. 8ஆம் நூற்றாண்டுதான்.
அவர் எப்படி 2500 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி மடத்தை நிறுவியிருக்க முடியும்? ஆதிசங்கரர் தனது அத்வைத கருத்துக்களை பரப்பிட திசைக்கு ஒரு மடம் என்ற வகையில் நான்கு மடங்களே நிறுவினர் என்பதே உண்மை வரலாறு.
கிழக்கில் ஜகன்னாத் மடம், மேற்கில் துவாரகா மடம், தெற்கே சிருங்கேரி மடம், வடக்கே பத்ரி மடம் ஆகிய நான்குதான் ஆதி சங்கரர் நிறுவியவை.
மதம், நிறுவனம் என்ற அடிப்படையில் செயல்படுவது பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வருவதாகும். வேத மரபுச் சிந்தனைக்குப் பிறகு, சமணம், பௌத்தம், பல்லவர் கால வைதிகச் சூழல், பிறகு எழுந்த பக்தி இயக்கம் என இக்காலகட்டங்கள் முழுவதும் மத நிறுவன அமைப்புக்கள் இருந்து வந்துள்ளன.
தமிழகத்தில் பல்லவர் ஆட்சி முடிந்த பிறகு கி.பி. 9ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி துவங்கியது.
சோழர்களின் ஆட்சிக் காலத்தில்தான் நில உரிமைகள், நிர்வாகம் பெருமளவு மைய அரசின் கீழ் வந்தது. நிலப்பிரபுத்துவ சமூக பொருளாதார அமைப்பு முறை பலம் பெற்றது. பிரம்மதேயம் என்று சொல்லி ஏராளமான நிலங்கள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன.
ஊர், சபை, நகரம், நாடு, குறுநிலத் தலைவர் பகுதி, மைய அரசு என பல மட்டங்களில் அதிகார மையங்கள் அரசியல் தளங்களாக பலம் பெற்றன. சோழ அரசு தனது ஆட்சியின் கீழ் நிலப்பகுதி முழுவதையும் நேரடியாக ஆட்சி செய்த அரசு என வரலாற்றாசிரியர் நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார்.
ஊர், நகரம் உள்ளிட்ட அனைத்து அதிகார மையங்களிலும், நிலபுடைமை நிர்வாகம் பிராமணர்களிடம் இருந்தது. அத்துடன் சித்தாந்த ரீதியில் அரசு அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் நியாயம் கற்பிக்கும் பணி பிராம்மணர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. நில நிர்வாகம், மத சிந்தனை இரண்டிலும் பிராம்மணிய ஆதிக்கம் செலுத்தும் நிலை வலுப்பெற்றது.
முதலாம் ராசராச சோழன் ஆட்சிக்காலம் கி.பி. 985லிருந்து கி.பி. 1012 வரை ஆகும். முன்பிருந்தே மடங்கள் திருவாடுதுறை, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் இருந்து வந்துள்ளன.
பெரும் பள்ளப் புலியூர், மேலைச்சேரி பதஞ்சலி தேவர் மடம், கீழையூர் மடம், திருவானைக்கா நடுவில் மடம், திருச்சந்தி முந்நூற்று மடம், திருவாவடுதுறை மடம் ஆகியன சிறப்பு பெற்று விளங்கியதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
மடங்களும், கோவில்களும் சேர்ந்து பிராமணியத்தின மேலாதிக்கத்தை நிலைநாட்டும் கருவிகளாகவும் பயன்பட்டு வந்துள்ளன. சாதிய ஒடுக்குமுறையையும், இந்த மடங்களும், நிறுவனங்களும் கண்டு கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல; நால் வருண சித்தாந்தத்தை வாழ்க்கை நெறியாக நியாயப்படுத்திடும் மையங்களாகவும் இவை இருந்து வந்துள்ளன.
முந்தைய காலங்களில் தமிழ் மொழி செல்வாக்கு பெற்றிருந்த நிலை மாறியது. வடமொழி தெரிந்த வேதம் ஓதுவோர் நில ஆதிக்கத்தை தங்களிடம் வைத்துக் கொண்டதால் கிராமங்களின் சித்தாந்தத் தலைமையாக மாறினர்.
அன்றைய மடங்களால் விளைந்த ஒரு நன்மை, பழந்தமிழ் இலக்கியங்களை அவைதான் பாதுகாத்து பத்திரமாக வைத்திருந்தன. திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுர ஆதினம் உள்ளிட்ட சைவ மடங்களும், அவற்றின் கிளை மடங்களும் சைவ நூல்களை பாதுகாத்து வந்தன. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் நாடு அடிமைப்பட்டு வந்த நிலையிலும் இந்த மடங்கள்தான் ஏட்டுச் சுவடிகளாக இருந்த இந்த நூல்களை பாதுகாத்தன. சிவஞான யோகிகள், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, உ.வே. சுவாமிநாதய்யர் போன்றோர் இம்மடங்களில் இருந்து தமிழ் வளர்க்கும் பணிகளை ஆற்றினர்.
மன்னர்கள் தங்களது அதிகாரத்திற்கு உழைக்கும் மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் வந்து விடக் கூடாது என்பதற்காக ஒழுக்க நெறிகள், தெய்வீக கட்டுப்பாடு போன்ற பண்பாட்டை அவர்கள் மத்தியில் வளர்த்தனர். இதற்கு பிராம்மணர்கள் பயன்பட்டனர்.
பிராம்மணர்களும் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு தங்களது மேலாதிக்கத்தை பெருளாதாரம், சித்தாந்தம் ஆகிய இரண்டு தளங்களிலும் நிலை நிறுத்திக் கொண்டனர்.
இந்த மேலாதிக்கத்திற்கு உழைக்கும் மக்களான பிற்பட்ட சாதியனரிடமிருந்து எங்கெல்லாம் எதிர்ப்பு கிளம்பியதோ, அங்கெல்லாம் மன்னரின் அதிகாரமும் படைகளும் அமைதியை ஏற்படுத்தியது. தங்களது நிலங்களை பிராமணர்களிடம் பறிகொடுத்தவர்கள் மன்னரின் அடக்குமுறை படைகளுக்கும், பிராமணர்களை எதிர்ப்பது தெய்வக் குற்றம் என்று சொல்லப்பட்ட நெறிக்கும் பயந்து ஒதுங்கி வாழ்ந்தனர்.
சோழர் காலத்தில் இருந்த இந்த ஏற்பாடு பிற மன்னர்களையும் கவர்ந்திருக்கிறது. தருமபுரி மற்றும் கொங்கு நாட்டுப் பகுதிகளில் இருந்த குறுநில மன்னர்கள் தங்களது கிராம நிர்வாகத்திற்கும் இதே முறையை பின்பற்றினர்.
கிராமங்களில் ஒழுக்கமும், கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தி நெறிப்படுத்த பல பிராமணக் குடும்பங்களை சோழ நாட்டிலிருந்து அழைத்துச் சென்று கொங்கு நாட்டுப் பகுதிகளில் குடியேற்றினர். இவ்வாறு குடியேற்றப்பட்டவர்களிடம் நிலங்களைக் கொடுத்து நிர்வாகப் பொறுப்புக்களையும் ஒப்படைத்தனர். குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில் இது அதிகம் நிகழ்ந்துள்ளது.
ஆக, அன்று நிலங்கள், சொத்துக்கள், செல்வம் அனைத்தும் பெருமளவில் கோயில்களிடமும், பிராமணர்களிடமும் இருந்தன. வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் அடுத்தடுத்த தலை முறைக்கு பயிற்றுவிக்க மடங்களிலும், கோயில்களிலும் பாட சாலைகள் ஏற்படுத்தப்பட்டன.
மத நிறுவனங்கள் : ஐரோப்பிய வரலாற்றுச் சூழல்
மேற்கத்திய நாடுகளிலும், ஐரோப்பாவிலும் நீண்டகாலமாக கிறித்துவ தேவாலயத்தின் ஆதிக்கம் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அரசுக்கும், சமூகத்தின் தலைமையாக இருந்து ஆதிக்கம் செலுத்திய தேவாலயத்துக்கும் பெரும் போராட்டம் நடந்தது. நீ பெரியவனா, நான் பெரியவனா எனும் பாணியில் ஒரு பெரிய அதிகாரப் போராட்டமாக இது நடந்தது.
ஆன்மீகம் மட்டுமல்ல; இந்த உலக வாழ்க்கையில் எல்லா அதிகாரங்களும் எனக்கே சொந்தம் என்றது தேவாலயத் தலைமை.
ஆன்மீகம் தவிர வாழ்க்கையின் இதர அம்சங்களில் அரசுதான் வழிநடத்தி அதிகாரம் செலுத்த முடியும் என்றனர் அரசு தரப்பினர்.
ரோமானியப் பேரரசர் சார்ல மாக்கென என்பவருக்கும் போப்பாண்டவருக்கும் நடந்த மோதலுக்கு இந்த அதிகாரப் போட்டியே காரணம். இது கி.பி. 9ஆம் நூற்றாண்டில் நடந்தது.
இத்தகைய மோதல்களின் முடிவாகத்தான் மதத்தின் பிடியிலிருந்து அரசு தன்னை விடுவித்துக் கொண்டது. சுயேச்சையான அதிகார மையமாக, ஆன்மீகம் தவிர இதர நிர்வாகப் பொறுப்புகள் முழுவதும் அரசுக்கே என்ற நிலை ஏற்பட்டது. இதுவே மதச்சார்பின்மை கோட்பாடாக உருவெடுத்தது.
முன்னதாக, கிறிஸ்துவ மதத்திற்குள்ளும், பல மாறுதல்கள் நடந்தன. சமூகத்திலும் மதச்சார்பின்மை உணர்வுகள் அதிகரித்தன. ஆன்மீகத்திற்கு வெளியே உள்ள துறைகளில் மதம் அவசியமில்லை என்ற அணுகுமுறை நிலை பெற்றது. சீர்திருத்தவாதம், மறுமலர்ச்சி என பல போக்குகள் இவற்றை ஏற்படுத்தின.
இந்த நிகழ்வுப் போக்கை வைத்து சிலர் கிறிஸ்துவ மதம் பிற மதங்களை விட முற்போக்கான மதமாக இருப்பதால் மதச்சார்பின்மைக் கொள்கை அங்கு வேரூன்றியது என்கின்றனர். இது தவறு. இந்த மாற்றங்களுக்குக் காரணம் கிறிஸ்துவ மதம் மட்டுமல்ல; மிக முக்கியமான காரணம், ஐரோப்பாவில் வளர்ந்து வந்த முதலாளித்துவம்தான். நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, நவீனமயமாக்கலும், முதலாளித்துவமும் வேகத்தோடு சமூகத்தில் ஆதிக்கம் பெற்றது தான் காரணம்.
தேவாலயத்தின் பிடி சமூகத்திலும் அரசு அதிகாரத்திலும் இருந்திருந்தால் முதலாளித்துவம் வளர வாய்ப்பிருந்திருக்காது.
சமூகவியலாளர் அச்சின் விநாயக் இதை குறிப்பிடுகிறார்:
முதலாளித்துவ நவீனமயமாக்கல்தான் மதச்சார்பின்மைமயாக் கலுக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக திகழ்ந்ததே தவிர, கிறித்துவ மதம் அல்ல என்கிறார் அவர்.
மேலும் முதலாளித்துவம் பற்றிக் குறிப்பிடுகிற போது எங்கெல்லாம் முதலாளித்துவம் வளர்ச்சி பெறுகிறதோ அங்கெல்லாம் குறிப்பிட்ட அளவில் மதச்சார்பின்மைமயமாக்கல் நிகழ்கிறது என்கிறார் அவர். இங்கு, மதச்சார்பின்மைமயம் என்று குறிப்பிடுவது சமூகத்தில் மதத்தின் செல்வாக்கு குறைந்து, தனிநபர் உள்ளத்தில் மட்டும் மதம் என்ற நிலையை அவர் குறிப்பிடுகிறார்.
ஐரோப்பாவில் நடந்த இந்த நிகழ்வுக்கும் இந்தியாவில் நிகழ்ந்ததற்கும் பெருத்த வேறுபாடு உண்டு.
இங்கு முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தை அழித்துவிட்டு வளரவில்லை. மாறாக, அதோடு சமரசம் செய்து கொண்டு வளர்ந்துள்ளது.
நமது சமூகத்தில் மதச்சார்பின்மை உணர்வுகள் அதிக அளவில் வேரூன்றாததற்கு இதுவே அடிப்படை காரணம்.
உலகமயம் என்ற கட்டத்திற்கு இந்திய முதலாளித்துவம் வந்த பிறகும் கூட நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் ஒழிக்கப்படவில்லை. சமூகம் மதச்சார்பின்மைமயமாகி பகுத்தறிவுப் பாதையில் நடைபோடாமல் பின்தங்கி இருப்பது, இன்றைய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுக்கு வாய்ப்பாக உள்ளது.
எனவே, முற்போக்கு சக்திகளின் கடமை, முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராகவும், கிராமங்களில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கு எதிராகவும் மக்களைத் திரட்டிட வேண்டும். இதைச் செய்கிறபோதே மக்களின் உணர்வுகளில் மதம் தனிநபரின் நம்பிக்கையாக மட்டும் இருக்க வேண்டும் என்றும், அது சமூக வாழ்வில் தலையிடக் கூடாது என்ற கருத்தினை பதியவைக்க முயற்சிக்க வேண்டும். மதம் நிறுவனமயமாவதைத் தவிர்க்க குரலெழுப்புவது தேவையாகிறது. இந்து மதம் மட்டுமல்ல, இதர அனைத்து மதங்களிலும் நிறுவனமயமாகும் போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.
மதச்சார்பின்மைமயமாக்கலும் – மத அடையாளமும்
மதச்சார்பின்மை என்பது அரசுக்கும் மக்களுக்கும் உள்ள விவகாரம் மட்டும் தானா? தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையே மதச்சார் பின்மை கொள்கையின் பங்கு என்ன?
அதாவது, ஒரு தனிநபருக்கு மதச்சார்பின்மை நெறி இல்லையா? அப்படியானால் அவர் கடைப்பிடிக்க வேண்டிய மதச்சார்பின்மை நெறி என்னவாக இருக்க முடியும்? மதச்சார்பின்மை நெறி சார்ந்த வாழ்க்கைக்கு தனிநபரை மனமுவந்து ஏற்றுக் கொள்ளச் செய்வது எப்படி? இது போன்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டியுள்ளது.
சுதந்திரப் போராட்டத்தில் 1920-30 ஆம் ஆண்டுகளின் போது, மக்கள் மத்தியில் மேலோங்கிய உணர்வுகள் எவை? மத உணர்வுகளா? இல்லை. மத உணர்வுகளை விட தேசிய உணர்வும், இந்தியன் என்கிற உணர்வுகளும்தான் தலை தூக்கி இருந்தன. இந்து முஸ்லீம் என்று மதத்தால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் போக்கு அந்த கட்டத்தில் குறைந்து இருந்தது.
இதே போன்று பல கட்டங்களில் நமது மக்களின் வாழ்வில் மத அடையாளம் ஓரளவு முக்கியத்துவம் இழந்திருக்கிறது என்று அச்சின் விநாயக் குறிப்பிடுகிறார். ஆனால் இன்று இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளாக தனிநபர் வாழ்வில் உலகமயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பிரிவினரும் பல்வேறு வகையான தாக்கங்களுக்கு ஆளாகியுள்ளனர். நிதி மூலதனத்தின் பிரம்மாண்ட வளர்ச்சி இந்தியாவில் ஏகபோக கூட்டத்தினரை பெரும் செல்வதந்தர்களாக மாற்றியுள்ளது. வலுவான நடுத்தர வர்க்கமும் உருவாகியுள்ளது.
பெரிய தகவல் தொழில்நுட்பக் கம்பெனியில் அதிக ஊதியத்தோடு பணியாற்றும் ஒரு இளைஞன் தான் சார்ந்த மதம், சாதியை ஒட்டிய மணப்பெண்ணை நாடுகிற நிலை உள்ளது. தனது தொடர்புகளை வெளிப்படுத்தி பொருளாதாரத் தொடர்புகளை அதிகரித்துக் கொள்ள அவன் தனது திருமணத்தையும் பயன்படுத்துகிறான். இதிலும் கூட பெற்றோர்கள் ஊர் ஊராகத் திரிந்து தங்களது மதம், சாதிக்கேற்ற மணப் பெண்ணைத் தேடி அலையும் சிரமமும் தற்போது இல்லை.
மணமகன் மணப்பெண்ணை சேர்த்து வைக்கும் நூற்றுக்கணக்காக இணைய தளங்கள் தற்போது உள்ளன. இதில் விரைவாகவும், மிகச் சுலபமாகவும் மணப் பெண், மணமகன் குடும்பத்தார் ஜாதகம் வரதட்சணை உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் பேசி முடித்து விட்டு திருமணத்தை நடத்தி முடித்து விடுகின்றனர்.
உலகமயம், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி அனைத்தும் மதத்தின் பிடிப்பு வலுப்பெற உதவுகிற விநோதத்தை காணமுடிகிறது. இந்நிலையில் முற்போக்காளர்கள் செய்ய வேண்டியதென்ன?
முற்போக்காளர்களின் கடமைகள்
சமூக வாழ்க்கையில் மதம் பல செயல்பாடுகளை கொண்டுள்ளது. கடவுள் நம்பிக்கை, சித்தாந்தம், சடங்கு மற்றும் பல வழிபாட்டு முறைகள், மத நிறுவனங்கள் என பல தளங்களில் மதம் தனத செல்வாக்கை மனிதர்களிடம் செலுத்துகிறது. வரலாற்றின் பல கட்டங்களில் வர்க்கப் போராட்டம் தீவிரமடைகிற போது, மத்தின் செயல்பாடுகளிலும் அதன் தாக்க்ம இருந்துள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்திற்கு மதத்தின் செயல்பாடுகள் உறுதுணையாக இருந்துள்ளன. ஆனால், சில சந்தர்ப்பங்களில் முற்போக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளும் சூழல்களும் ஏற்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டில் அந்நியரின் அடக்குமுறைக்கு எதிராக ஆங்காங்கே விவசாயிகளின் எழுச்சி நடைபெற்றபோது, மத நம்பிக்கையும், மதக்கருத்துக்களும் விவசாயிகள் போராடுவதற்கு உத்வேகம் அளித்தன.
நிறுவனம் என்ற செயல்பாட்டை எடுத்துக் கொண்டாலும், இக்கட்டுரையில் சொல்லப்பட்டது போன்று பிராமணீயத்தை எதிர்த்த இயக்கங்களுக்கும் நிறுவனங்கள் உதவியுள்ளன.
எனவே, பல தளங்களில் மதத்தின் செயல்பாடு சிக்கலான தன்மை கொண்டது. ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு தளத்திலும் மதத்தின் செயல்பாட்டை கூர்மையாக ஆராய்ந்து தக்க அணுகுமுறை கடைபிடிக்க வேண்டும்.
இன்று, மதநம்பிக்கையாளர்களிடமே மடங்கள் மற்றும் மத நிறுவனங்களுக்கு எதிரான உணர்வுகள் எழுகிற நிலையில் அதனை முற்போக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மத நம்பிக்கையாளர்களோடு, உள்ளூர் மட்டத்தில் உரையாடல், விவாதம் மூலமாக இதனைச் செய்திட வேண்டும்.
தனிநபர் உணர்வில் மத அடையாள உணர்வு ஆதிக்கம் செலுத்தும் நிலையிருந்தால் வர்க்க ஒற்றுமை சாத்தியமில்லை. சமூகத்திலும், தனிநபர் உணர்வு மட்டத்திலும், மத அடையாள உணர்வுகளை குறைத்து, தொழிலாளி, விவசாயி, உரிமைக்கான போராளி போன்ற உணர்வுகள் தழைக்க வேண்டும்.
கவி ரவீந்திரநாத் தாகூரின் கீழ்க்கண்ட வரிகள் இன்று மிகவும் பொருத்தமுடையதாக விளங்குகின்றன.
இருளூட்டப்பட்டுள்ள இந்த மண்ணில் அறிவொளியை பாய்ச்ச வேண்டுமெனில் மத நம்பிக்கையைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள சிறைச் சுவர்களை உனது இடிமுழக்கத்தால் தகர்த்தெறி
இங்கு தாகூர் மதத்தை இந்தச் சிறைச்சாலைகள் என குறிப்பிடுவது இன்றைய நிலையில் மதத்தின் பெயரால் மூடத்தனத்தை பரப்ப ஒற்றுமையை குலைக்கும் வகுப்புவாத இயக்கங்களும், வகுப்புவாத நிறுவனங்களும் தான். இந்த வரிசையில் தற்போது மடங்களும் வந்து சேர்ந்துள்ளன என்பதே உண்மை.
சமூக மாற்றத்திற்காக, சோசலிசத்திற்காகப் போராடும் மார்க்சிஸ்ட்டுகளுக்கு சமூகத்தை மதச்சார்பின்மைமயமாக்குவதில் முக்கிய பங்கு உள்ளது.
சோசலிச சமுதாயம் அமைந்திட மக்களின் சிந்தனையில் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும், முற்போக்கு சிந்தனைகளும் குடிகொள்ள வேண்டும். இதற்கான தத்துவப் போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் நடத்திட வேண்டும். இந்தப் போராட்டத்தை நடந்திட எது மிகவும் தேவையானது? மதம் மற்றும் ஆன்மீக சிந்தனைகள் சமூகத்தின் பொதுத் தளத்திலிருந்து விலகி தனிநபரின் சிந்தனை தளத்திற்கு உரியதாக மட்டும் என்கிற நிலையை ஏற்படுத்துவதுதான். இது தானாக நடந்திடாது. மக்களிடம் உள்ளூர் மட்டத்தில் நெருங்கிப் பணியாற்றுவதன் மூலம் தான் இதனை செய்திட இயலும்.
சங்கர மட நிகழ்வுகள் மற்றும் இதர மத நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் இப்பணியை தீவிரப்படுத்த நல்வாய்ப்பை நல்கியுள்ளன. இதனை முற்போக்காளர்களும், கம்யூனிஸ்ட்டுகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் 18-வது நகல் அரசியல் தீர்மானம் மதச்சார் பற்ற ஜனநாயக பண்பாட்டை வளர்த்திட வேண்டுமென்று வலியுறுத்துகிறது.
பண்பாட்டு மதிப்பீடுகளை சீர்குலைக்க முயலும் வகுப்புவாத சித்தாந்தங்களை முறியடிக்க இடையறாத போராட்டத்தை நடத்திட வேண்டும். ஜனநாயக மதச்சார்பற்ற பண்பாட்டை வளர்த்தெடுக்க இது தேவையானது.
சமூகத்தின் அடி மட்டத்தில் இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உள்ளூர் சமூகத்தில் மக்களோடு தொடர்புகளை வலுவாக்கினால்தான் ஜனநாயக உணர்வுகளும் தழைத்திடும். அதே நேரத்தில் மத வழிபாடு, சடங்குகள் அனைத்தும் தனிப்பட்ட விவகாரமாக கருதும் உணர்வு வளரும். தங்களது மத உணர்வுகளை வெளிப்படுத்த மத நிறுவனங்களை மக்கள் நாடிடும் போக்கு இதன் மூலம்தான் தவிர்க்க முடியும்.
ஆதார நூல்கள்:
- Communalism Contested, Achin Vanik
- A History of South India – Nilakanda Sasthri
- வகுப்புவாதம் அச்சுறுத்தலும், மதச்சார்பின்மை சவால்களும் – கே.என். பணிக்கர், சவுத் விஷன் வெளியீடு
- சோழர் வரலாறு, நக. மங்களமுருகேசன்
- தமிழர் நாகரிகமும், பண்பாடும் – டாக்டர் அ. தட்சிணாமூர்த்தி, ஐந்திணை பதிப்பகம்.
- காஞ்சிமடத்து ஆச்சாரியார்கள் வரலாறு – குடுமியாமலை சங்கரன்.
- மார்க்சிஸ்ட் கட்சியின் 18-வது அரசியல் நகல் தீர்மானம்
- சங்கர மடத்தின் உண்மை வரலாறு – அருணன்