மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் திட்டத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவத்துக்கு முந்திய சமூகத்தினுடைய சாம்பல்களிலிருந்து தான் முதலாளித்துவ அமைப்பானது உருவாக்கப்பட்டது. புதிதாக வளர்ந்தோங்கி வந்த முதலாளித்துவ வர்க்கமானது முந்திய சமூக அமைப்பை அழித்தொழித்து விட்டு அந்த இடத்தில் தங்களுடைய முதலாளித்துவ சமூக அமைப்பை நிலைநாட்டிக் கொண்டது. ஆனால் இந்திய நாட்டைப் பொறுத்த வரையில் முதலாளித்துவ அமைப்பானது இதற்கு முந்தியிருந்த சமூக அமைப்பின் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. அது தான் நிதர்சனமானதோர் வரலாற்று உண்மையாகும்
கட்சித் திட்டத்தில் மேலும் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் பின்வருமாறு:
பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களோ அல்லது அவர்களுக்குப் பின்னர் பதவியேற்ற இந்திய முதலாளி வர்க்கமோ முந்திய சமூக அமைப்பைத் தகர்தெறிந்திடும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அவ்வாறு தகர்த்தெறிவதன் மூலமாகத்தான் முதலாளித்துவ சமூகமானது சுதந்திரமாக வளர்ந்தோங்கிட சாத்தியமாகும்! எனவே நமது கட்சியும், இந்திய தொழிலாளி வர்க்கமும் ஏனைய முற்போக்கு சக்திகளை எல்லாம் அணி திரட்டிக் கொண்டு முதலாளித்துவத்துக்கு முந்திய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பைத் தகர்த்தெறிந்திட வேண்டும். அவ்வாறு செய்தவன் மூலமாகத்தான் நாட்டிலுள்ள புரட்சிகர சக்திகளையெல்லாம் ஒருங்கிணைத்துக் கொண்டு மக்கள் புரட்சியை வென்றெடுத்திட முடியும். மேலும் நாட்டை சோசலிசப் பாதைக்கு அழைத்துச் செல்லவும் முடியும் ஐரோப்பாவில் நடந்ததென்ன?
முதலாளித்துவ சமூகமானது வளர்ச்சி அடைவதற்கு அதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவச் சுரண்டல்கள் யாவும் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். அதன் மூலமாக விவசாயி வர்க்கத்தை சகலவித சுரண்டல் கொடுமைகளிலிருந்தும் விடுவித்தாக வேண்டும். ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமானது மேற்கூறப்பட்ட வரலாற்றுக் கடமையைத் திறம்படச் செய்து முடித்தது. ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமானது மன்னராட்சி ஒழிக, நிலப்பிரபுத்துவம் ஒழிக, உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று முழங்கிக் கொண்டு களமிறங்கியது. விவசாய வர்க்கமானது தத்துவார்த்த அடிப்படையில் நிலப்பிரபுத்துவ அமைப்பில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அன்றைக்கு இருந்த மத குருமார்கள் மற்றும் ஐரோப்பியத் தத்துவஞானிகளும் இந்த உலகத்தையும் இந்த சமூக அமைப்பையும் மற்றும் மன்னர், நிலப்பிரபுக்கள் மேட்டுக்குடியினர் மற்றும் ஏழை எளிய மக்கள் யாவரையும் சர்வ வல்லமை படைத்த கடவுள்தான் படைத்தார் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர். மேலும் அவர்கள் கடவுள்தான் சமூகத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகளையும் உருவாக்கினார் என்றும் மாதா கோவில்கள் தான் கடவுளின் உறைவிடமாகும் என்றும், எனவே கடவுளை எதிர்த்து யாராவது பேசினால் அது மிகப்பெரிய பாவமாகும் என்றும் சொல்லி வந்தனர்.
ஆனால் கலீலியோ என்ற விஞ்ஞானியானவர் உலக உருண்டையைச் சுற்றித்தான் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கோளங்களும் சுழல்கிறது என்ற கருத்தைத் தகர்த்தெறிந்தார். அத்தகையப் புரட்சிகரமான கருத்தைக் கூறியதற்காக அவரைச் சிறையில் தள்ளினார்கள். அவருடைய கருத்தை ஏற்றுக் கொண்டால் அது கடவுளின் வலிமைக்கே விடப்பட்டதோர் சவலாகிவிடும் என்று ஆட்சியிலிருந்தவர்கள் வாதிட்டனர். மேலும் அவரது கோட்பாடனது கடவுளை மட்டுமின்றி அவரால் உருவாக்கப்பட்ட மன்னர் மற்றும் நிலப்பிரபுக்களுக்கும் எதிராகச் சவால் விடக் கூடும் என்றும் வாதிடப்பட்டது.
தொழிலாளி வர்க்கம் இன்னும் உருவாகவில்லை:
தொழிற்சாலைத் தொழிலாளர்கள் இன்னும் உருவாகவில்லை. நாட்டில் பெரும்பாலான மக்கள் விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களாகவே விளங்கினர். அவர்கள் அனைவருமே நிலப்பிரபுத்துவக் கொள்கைகளின் பிடிப்பில் சிக்குண்டு கிடந்தனர். எனவே வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவ வர்க்கத்தால் நிலப்பிரபுத்துவ சக்திகளை முறியடிக்க முடியவில்லை. மக்கள் சமூகத்தை மூட நம்பிக்கைகள் மற்றும் குறுகிய நிலப்பிரபுத்துவச் சிந்தனை ஓட்டங்களிலிருந்து விடுவித்து அவர்களிடையே புரட்சிகர கருத்துக்களை பரப்புவதன் மூலமாகத்தான் அவர்களை நிலப்பிரபுத்துவக் கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும்படி செய்திட முடியும். எனவே தான் முதலாளித்துவ வர்க்கமானது உழுபவனுக்கே நிலம் என்ற கோஷத்தை முன்வைத்தது. அது மட்டுமின்றி அந்த வர்க்கமானது தத்துவார்த்த அடிப்படையிலும் புரட்சிகரமானதோர் பாத்திரத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. மேலும் அவர்கள் நாட்டிலுள்ள பெரும்பகுதி மக்கள் விஞ்ஞானக் கண்ணோட்டத்துடனும், பகுத்தறிவு சிந்தனையுடனும் செயல்படாமல் மூடநம்பிக்கைகள் மற்றும் பழமைவாத சிந்தனைகளில் மூழ்கிக் கிடப்பதை எதிர்த்தும் போராட வேண்டியதாயிற்று. மேலும் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு என்பது போன்ற தர்க்கப்பூர்வமான சிந்தனைகளை எல்லாம் மக்களிடையே எடுத்துக் கூற வேண்டியதாயிற்று. மேலும் அவர்கள் நாட்டிலுள்ள சகல மனிதர்களும் பிறப்பால் சமமானவர்களே என்ற கருத்தையும் நாட்டு மக்களிடையே பரப்பிடத் தொடங்கினர். மேலும் அவர்கள் மக்களுடைய அன்றாட சமூக நடவடிக்கைகளிலிருந்து கடவுள் பற்றிய சிந்தனைகளை அகற்றிவிட்டு அவரை மாதா கோவிலுக்குள் பூட்டி வைத்தனர். நாம் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டுவோமானால் ஐரோப்பாக் கண்டத்தில் மறுமலர்ச்சி சகாப்தத்தில் புதிய விழிப்புணர்வுகள் ஏற்பட்டதுடன் மக்களிடையே மேற்கூறப்பட்ட கண்ணோட்டங்கள் மிகவும் வலுவடைந்தன.
சோசலிசமே இதற்கு மாற்றாகும்:
மக்களுக்கு முதலாளித்துவ சகாப்தம் உருவாவதற்கு முன்னர் முதலாளித்துவச் சுரண்டல் முறைகளைப் பற்றிய தெளிவோ, ஞானமோ கிடையாது. தாங்கள் நிலப்பிரபுத்துவச் சுரண்டலிலிருந்து தப்பித்துவிட்டமையால் சமுதாயத்தில் சகலவிதமான சுரண்டல்களுக்கும் ஒரு முடிவு ஏற்பட்டுவிடும் என்று நாட்டு மக்கள் கருதினார்கள்.
சமூகத்தில் முதலாளித்துவ வர்க்கம் உதயமாகிய சமயத்திலேயே தவிர்க்க முடியாத வகையில் தொழிலாளி வர்க்கமும் உருவாயிற்று எனலாம். மேலும் சமுதாயத்தில் உழைப்பாளி மக்களுடைய எண்ணிக்கையும் அதிகரித்தது. முதலாளிகள் மிகவும் விரைவாக மூலதனத்தைப் பெருக்கிட வேண்டும் என்றதோர் வெறியுடன் உற்பத்தி சக்திகளை எல்லாம் மிகவும் குரூரமான வகையில் சுரண்டினார்கள்.
காரல் மார்க்ஸ் மேற்கண்ட விவரங்களை எல்லாம் தன்னுடைய புகழ்வாய்ந்த மூலதனம் என்ற நூலில் விளக்கமுடன் எடுத்துக் கூறியுள்ளார். அதே சமயத்தில் தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பு இயக்கங்களும் வளர்ந்தோங்கத் தொடங்கின. மார்க்சும் ஏங்கல்சும் அன்றையக் காலக்கட்டத்தில் தாங்கள் பெற்ற செழுமையான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு 1848 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் அறிக்கை என்ற புகழ்வாய்ந்த நூலை எழுதி வெளியிட்டனர். மேற்படி நூலானது உலகத் தொழிலாளி வர்க்கத்தினுடைய வலுமிக்கதோர் பிரகடனமாக விளங்கியது. அந்த அறிக்கை வெளிவந்ததற்கும் பின்னர் உலகமெங்கிலுமிருந்த தொழிலாளி வர்க்கமானது ஸ்தாபன ரீதியாகவும் கொள்கை அடிப்படையிலும் அணிதிரளத் தொடங்கியது. அதைக் கண்ட முதலாளிகள் நடு நடுங்கினார்கள்.
1848-50 ஆண்டுகளில் பிரெஞ்சுத் தொழிலாளி வர்க்கமானது பிரான்ஸ் நாடெங்கிலும் புயல்வேகத்தில் மாபெரும் போராட்டங்களை நடத்தியது. 1864 ஆம் வருடத்தில் உழைப்பாளி மக்களுடைய சர்வதேசிய அமைப்பானது உருவாக்கப்பட்டது. அதைக் கண்டு உலகமெங்கிலும் இருந்த முதலாளிகள் குலை நடுங்கினார்கள்.
பிரான்ஸ் நாட்டில் தொழிலாளி வர்க்கமானது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிடும் முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாக 1871 ஆம் வருடத்தில் பிரான்ஸில் பாரிஸ் கம்யூன் உயிர்த்தெழுந்தது. அதன் விளைவாக முதலாளிகள் மேலும், மேலும் கலவரமடைந்தனர். 1886 மற்றும் 1905 ஆம் ஆண்டுகளில் வரலாற்றுச் சக்கரங்கள் உருண்டோடின.
முதல் உலகப் போருக்குப் பின்னர் உலக முதலாளித்துவ அமைப்பானது மாபெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. அதைத் தொடர்ந்து மனிதகுல வரலாற்றிலேயே மகத்தானதோர் நிகழ்ச்சியாக விளங்கிய மாபெரும் அக்டோபர் புரட்சியானது நடந்தேறியது. அதன் விளைவாக உலகமே குலுங்கியது எனலாம். மீண்டும் முதலாளி வர்க்கமானது அஞ்சி நடுங்கியது.
1990-களில் அக்டோபர் புரட்சியானது சோசலிசத்தைக் கட்டும் பணியில் வர்க்கப் போராட்டம் பற்றிய ஒரு சில தவறான அணுகுமுறைகள் கடைப்பிடித்தமையால் தோல்வியடைய நேர்ந்தது. ஆனாலும் கூட மேற்படி அக்டோபர் புரட்சியானது முடியாததைக் கூட முடித்துக் காட்ட முடியும் என்பதை நடைமுறையில் நிரூபித்தது.
மேலும் எவருமே நம்ப முடியாத அளவுக்கு பற்பல வியத்தகு சாதனைகளைப் புரிந்தது. மேலும் அக்டோபர் புரட்சியானது சமூகத்தில் தனிச் சொத்துரிமையை ஒழித்துக் கட்டி சொத்துக்கள் யாவற்றையும் சமூகத்தின் உடமையாக்கிச் சாதனை புரிந்தது. அவ்வாறு செய்ததன் மூலமாக சோசலிசத்துக்கு வேறு எந்த ஒரு மாற்றம் கிடையவே கிடையாது என்ற வலிமைமிக்கதோர் பேருண்மையை உலகறியச் செய்தது எனலாம்.
முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் சுரண்டல் முறையானது எவ்வாறு இருக்க வேண்டுமென்ற அம்சத்தில் தான் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நின்றன. ஆனால் தொழிலாளி வர்க்கத்தைப் பொறுத்த வரையில் முதலாளித்துவத்தை வேரும் வேரடி மண்ணுமில்லாமல் வீழ்த்துவதையே தன்னுடைய தலையாய நோக்கமாகக் கொண்டிருந்தது. எனவே தொழிலாளி வர்க்க இயக்கங்களும் சோசலிச சக்திகளும் வளர்ந்தோங்கி வந்ததோர் சூழ்நிலையில் முதலாளித்துவமானது தனது ஆரம்பகால புரட்சிகரப் பண்புகளையெல்லாம் கைவிட்டு விட்டது. மேலும் அந்த வர்க்கமானது நிலப்பிரபுத்துவப் பிற்போக்கு சக்திகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக களமிறங்கியது. மேலும் அக்டோபர் புரட்சியின் விளைவாக முதலாளித்துவமே வர்க்கமானது. விவசாயிகளை ஒரு ஜனநாயகப் புரட்சியை நோக்கி வழி நடத்திடுவதற்கான வலிமையை அடியோடு இழந்து விட்டது. அதன் காரணமாகத்தான் நம்முடைய நாடு உட்பட சகல வளரும் நாடுகளிலுமுள்ள முதலாளி வர்க்கமானது வெளிப்படையாகவே நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் நேச உறவு கொண்டு கூடிக் குலவி வருகிறது.
விவசாயிகள் பங்களிப்பு:
நவீன காலத்தில் விவசாயிகள் பல்வேறு நல உரிமைகளைக் உள்ளடக்கி உள்ளமையால் அவர்களால் அடிப்படையானதோர் வர்க்கமாகச் செயல்பட இயலவில்லை. முதலாளித்துவ சமூகத்துக்கு முன்பிருந்த சமூக அமைப்பானது விவசாய வர்க்கத்தை முதலாளித்துவ நில உடமையாளர்கள் மற்றும் விவசாயக் கூலிகள் என்று பிளவுபடுத்திவிட்டது.
லெனின் குறிப்பிட்டதைப் போன்று முதலாளித்துவமானது விவசாய வர்க்கத்தை சீரிழித்தது மட்டுமல்லாமல் பிளவுபடுத்தியும் விட்டது. இன்றைய விவசாயிகள் எதிர்கால முதலாளித்துவ வர்க்கம் மற்றும் தொழிலாளி வர்க்கம் ஆகிய இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து போய்விட்டனர். அதன் விளைவாகத்தான் நடைமுறையில் விவசாய வர்க்கத்துக்கென்று தனியொரு தத்துவமோ, கோட்பாடோ மற்றும் அரசியல் நடைமுறைகளோ காணப்படவில்லை.
முந்திய நிலப்பிரபுத்துவ சமூகத்தின் ஒரு அங்கமாக விளங்கிய விவசாயிகள் இன்றைக்கு முதலாளி வர்க்கம் அல்லது தொழிலாளி வர்க்கம் ஆகியவற்றின் அரசியல் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளில் ஏதாவது ஒரு பிரிவின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டாக வேண்டியுள்ளது. இன்றையச் சூழ்நிலையில் முதலாளி வர்க்கத்திடம் விவசாயிகளை விடுதலைப் பாதையில் அழைத்துச் செல்லுகின்ற தெம்பும் திராணியும் இல்லை. தொழிலாளி வர்க்கம் ஒன்றினால் மட்டுமே அத்தகைய பணியைச் சிறப்பாகச் செயல்படுத்திட முடியும்.
தொழிலாளி வர்க்கமானது விவசாயிகளின் மீதுள்ள கருணையுணர்வால் மட்டும் மேற்கூறப்பட்ட பணியை ஆற்றிட முன்வரவில்லை. மாறாக தொழிலாளி வர்க்கமானது தன்னுடைய விடுதலையை வெற்றிகரமான முறையில் நிறைவேற்றிடுவதற்காகத்தான் அவ்வாறு செயல்பட்டாக வேண்டியுள்ளது.
முதலாளித்துவச் சுரண்டல் முறை மட்டுமே சுரண்டலின் இறுதிக்கட்டமாகும். தொழிலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரையில் முதலாளித்துவத்தின் சகலவிதமான சுரண்டல் கொடுமைகளிலிருந்தும் நாட்டு மக்களையெல்லாம் விடுவிப்பதன் மூலமாகத்தான் அந்த வர்க்கத்துக்கு உண்மையான விடிவு ஏற்படும்.
சமுதாயத்தில் பெரும்பான்மையினராக விளங்குகின்ற விவசாயிகளை முதலாளி வர்க்கத்தின் பிடியிலிலிருந்து விடுவித்து அவர்களைத் தங்களுடைய நேச சக்திகளாக மாற்றியாக வேண்டும். தொழிலாளி வர்க்கமானது அப்படிச் செய்யாவிட்டால் தன்னையும் முதலாளித்துவ வர்க்கத்தினுடைய பிடியிலிருந்து விடுவித்திட முடியாது. இது வெறும் வேத உபன்யாசமல்ல, மாறாக தொழிலாளி வர்க்கமானது தன்னுடைய இயக்க ரீதியான போராட்டங்களிலிருந்து மேற்கூறப்பட்ட செழுமையான அனுபவத்தையும் பெற்றுள்ளது.
கார்ல் மார்க்ஸ் 1848-களில் பிரெஞ்சு, பாட்டாளி வர்க்கமானது தோல்வியடைந்ததற்கான காரணங்களைப் பற்றியும் பற்பல கோணங்களில் ஆராய்ந்தார். மேற்படி ஆராய்ச்சிகளை அடிப்படையாக கொண்டு அவர் பிரான்ஸில் நடைபெற்ற வர்க்கப் போராட்டம் 1848 – 50 என்றதோர் தத்துவார்த்த நூலை எழுதி வெளியிட்டார். பிரெஞ்சுத் தொழிலாளி வர்க்கமானது முதலாளி வர்க்கத்துக்கும் பாட்டாளி மக்களுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டுள்ள சமூகத்தில் பெரும்பான்மையினராக உள்ள விவசாயிகள் மற்றும் சிறு முதலாளிகள் ஆகியோரைக் கிளர்ந்தெழும்படி செய்யாவிட்டால் முதலாளித்துவ வர்க்கத்தினரின் ஒரு தலை முடியைக் கூட அகற்றிட இயலாது. மற்றும் முதலாளித்துவ சமூக அமைப்பு, மூலதனத்தின் மேலாதிக்கம் ஆகியவற்றையும் தகர்த்தெறிந்ததிடவும் முடியாது. அதே பாணியில் பிரெடரிக் எங்கல்சும் 1868 ஆம் ஆண்டில் சர்வதேச அகிலத்தில் உரை நிகழ்த்திய சமயத்தில் விவசாயிகள், சிறு முதலாளிகள் ஆகியோரை ஓரணியில் திரட்டாமல் முதலாளி வர்க்கத்தை சிறிதளவு கூட அசைத்திட முடியாது என்று சரியாகவே குறிப்பிட்டார்.
1871 ஆம் வருடத்தில் பாரிஸ் கம்யூன் தோல்வியடைந்த பிறகு மார்க் பின்வருமாறு குறிப்பிட்டார்.
பிரெஞ்சு பாட்டாளிகள் முதலாளி வர்க்க முகாமிலிருந்து விவசாயி வர்க்கத்தைத் தன் பக்கத்தில் வென்றெடுக்கத் தவறிய காரணத்தினால்தான் பாரிஸ் கம்யூன் தோல்விடைய நேர்ந்தது. அதே காரணத்தினால் தான் 1905 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியும் தோல்வியில் முடிந்தது. அதற்கு மாறாக 1902 ஆம் ஆண்டில் ரஷ்ய விவசாயிகள் முன்னின்று நடத்திய கிளர்ச்சிக்குத் தொழிலாளி வர்க்கம் தலைமையேற்காத காரணத்தினால் அந்தக் கிளர்ச்சியும் தோல்வியில் முடிந்தது. சுட்டிக்காட்டப்பட்ட மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் கிராமப்புற ஏழைகளுக்கு என்ற தத்துவார்த்த நூலை எழுதி வெளியிட்டார். மேற்படி அனுபவமானது அக்டோபர் புரட்சியின் போது வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது எனலாம்.
ஜோசப் ஸ்டாலின் லெனினிசத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் என்ற தன்னுடைய நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
லெனினிசமானது விவசாயிகள் பிரச்சனையை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது என்று சிலர் கருதுகிறார். அது தவறானதோர் கருத்தாகும். ஆனால் லெனினிசமானது பாட்டாளி வர்க்க சர்வதிகாரம் பற்றிய பிரச்சனையைத் தான். முதன்மைப்படுத்துகிறது. அதேநேரத்தில் விவசாய வர்க்கமானது பாட்டாளி வர்க்கமானது பாட்டாளி வர்க்கத்தினுடைய நம்பகமானதோர் நேச சக்தியாக உருவாக்கப்பட்டாக வேண்டும் என்பதும் முக்கியமாகும் பாட்டாளி வர்க்கமானது தன்னை கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துக் கொண்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால் விவசாயிகளையும் அவர்களது சகலவிதமான அடிமைத்தனங்களிலிருந்தும் விடுவித்தாக வேண்டியது அவசியமாகும்.
இந்தியாவில் நிலவிடும் சூழ்நிலைமைகள்:
நாம் மேலே சுட்டிக்காட்டப்பட்ட வரலாறு பூர்வமான தத்துவார்த்த மற்றும் நடைமுறை உண்மைகளின் அடிப்படையில் நமது இந்திய நாட்டில் நிலவி வருகின்ற சூழ்நிலைகளைப் பரிசீலித்திட வேண்டும். நமது நாட்டிலுள்ள முதலாளி வர்க்கத்தால் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக்கட்டி அதன் மூலமாக நம்முடைய விவசாயப் பெருங்குடி மக்களை வழிநடத்திட முடியவில்லை. அதற்கு இந்தியப் பெருமுதாளிகள் நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் இந்திய முதலாளி வர்க்கமானது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்துடன் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்டு போராட மறுத்துவிட்டது. அதுமட்டுமல்லாது நாடெங்கிலும் நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த விவசாயிகள் வீரமிக்க போராட்டங்களை எல்லாம் மிகவும் மூர்க்கமான முறையில் அடக்கி ஒடுக்கியது.
மேலும் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் சுதந்திரப் போராட்டத்தையொட்டி நடைபெற்ற தெலுங்கானா விவசாயிகளது எழுச்சி, வங்காளத்தின் தேபகா இயக்கம், பீகாரில் பிடாய்தாரி போராட்டம், மகராஷ்டிரத்தில் வோர்லி பழங்குடியினரது கிளர்ச்சிகள், அஸ்ஸாம் சூர்மா பள்ளத்தாக்கில் விவசாயிகள் முன்னின்று நடத்திய போராட்டங்கள் ஆகிய அத்தனை போராட்டங்களுக்கும் எதிராக மிகவும் கடுமையான அடக்குமுறைகளை ஏவிவிட்டனர்.
மேலும் இந்திய முதலாளி வர்க்கமானது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிடையே வர்க்க உணர்வுகள் வளர்ந்தோங்கி வருவதால் எதிர்காலத்தில் பேரபாயங்கள் ஏற்படக் கூடும் என்று கருதி அதன் விளைவாக அஞ்சி நடுங்கினர். அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்துடன் வர்க்க ரீதியான போராட்டங்களை ஒருங்கிணைத்திட மறுத்துவிட்டனர். அதன் மூலம் அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை புரட்சிகரமானதோர் பேரியக்கமாக வளர்த்தெடுக்கத் தவறிவிட்டனர்.
மேலும் நாட்டிலுள்ள பிளவுவாத சக்திகளும் சுறுசுறுப்புடன் இயங்கத் தொடங்கி மக்களது ஒற்றுமைக்கு ஊறுவிளைவித்திடத் தொடங்கின. இந்திய முதலாளிகளும் ஏகாதிபத்தியத்தை ஒழித்துக்கட்டுதவற்கான போராட்டத்தில் முன்னின்று செயல்படாமல் வகுப்புவாத சக்திகளுடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டது மட்டுமின்றி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடனும் சமரசம் செய்து கொண்டனர்.
சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்தேறிய நிகழ்ச்சிகள்:
முதலாளித்துவ ஆட்சியாளர்கள் நாடு சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் நாட்டில் நிலச் சீர்திருத்தங்களை அமுல்படுத்திட மறுத்துவிட்டனர். அது மட்டுமின்றி அவர்கள் இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அரைகுறையான நிலச் சீர்த்திருத்தங்களைக் கூடச் செயல்படுத்திடுவதற்கு முன்வரவில்லை. அதன் விளைவாக நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் நிலச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நாடு விடுதலையடைந்த சமயத்தில் நாட்டிலுள்ள மொத்த நிலப்பரப்பில் 60 சதவீத நிலங்கள் யாவும் 10 சதவீத நிலப்பிரபுக்கள் வசமிருந்தன. மிகப்பெரிய நிலப்பிரபுக்களாக விளங்கிய அவர்கள் வசமிருந்த நிலங்களைக் கைப்பற்றியிருந்தால் ஏழை, எளிய விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக 240 மில்லியன் ஏக்கர்கள் நிலம் கிடைத்திருக்கக் கூடும்.
இடதுசாரிகள் ஆட்சி புரிந்த மேற்குவங்கம், கேரளம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டும் நிலச் சீர்திருத்தங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வெறும் 5 மில்லியன் ஏக்கர்கள் விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை தேசிய மாநாட்டுக் கட்சியினர் ஆட்சி செய்த சமயத்தில் அங்கேயும் நிலச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டன.
இந்தியாவில் நிலப்பிரபுத்துவ அமைப்பிற்குள் முதலாளித்துவ பாணியிலான உற்பத்தி முறைகள் புகுத்தப்பட்டன. மேலும் சில பகுதிகளில் முன்னாள் நிலப்பிரபுக்கள் நிலப்பிரபுத்துவ மனப்பான்மை மற்றும் முதலாளித்துவ சிந்தனையுடன் கூடிய நில உடமையாளர்களாக உருவெடுத்தனர். அதன் விளைவாக சிறு விவசாயிகள் போட்டிகளைச் சமாளிக்க முடியாமல் தாங்கள் வசமிருந்த துண்டு துக்காணி நிலங்களைக் பறிகொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாயின.
மேற்கத்திய நாடுகளைப் பொறுத்த வரையில் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த சூழ்நிலையில் அங்குள்ள முதலாளிகள் ஸ்தாபன ரீதியாக தொழிலாளிகளை ஈவு இரக்கமின்றிச் சுரண்டியதன் மூலமாகவும், காலனி நாடுகளில் அடித்த கொள்ளைகளின் விளைவாகவும் ஏராளமான மூலதனத்தைத் திரட்டிட முடிந்தது. அதன் விளைவாக மேற்கத்திய நாடுகளில் தொழிற் புரட்சியானது வெற்றிகரமாக நடந்தேறிட முடிந்தது. மேலும் அதன் காரணமாக அவர்களால் அந்த நாடுகளில் உபரியாக விளங்கிய விவசாயம் பெருங்குடி மக்களையும் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.
ஆனால் இந்திய முதலாளிகளைப் பொறுத்த வரையில் முதலாளித்துவ நெருக்கடிகள் ஏற்பட்ட சமயத்தில் அவர்கள் ஏகாதிபத்திய மூலதனத்துடனும், உள்நாட்டிலிருந்த நிலப்பிரபுத்துவ சக்திகளுடனும் சமரசம் செய்து கொண்டனர். அதன் எதிரொலியாக இந்திய நாட்டில் மேற்கத்திய நாடுகளில் நடைபெற்றதைப் போல தொழிற்புரட்சியானது இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. அதன் காரணமாக இங்குள்ள விவசாயிகள் உபரியாக நேர்ந்தது. மேலும் உற்பத்தி முறைகள் யாவும் இயந்திரமயமாகிப் போன காரணத்தால் தொழில் நெருக்கடிகளின் போது வேலையில்லாத் திண்டாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கின. மேலும் நிலப்பிரபுத்துவச் சுரண்டல்கள், ஏகாதிபத்திய ரீதியிலான முதலாளித்துவ அமைப்பினுடைய நெறிமுறைகளற்ற சுரண்டல்கள் ஆகியவை யாவும் சேர்ந்து இந்தியக் கிராமப்புறங்களைத் தங்களது வேட்டைக் காடுகளாக்கிவிட்டன.
இந்திய முதலாளி வர்க்கமானது நிலப்பிரபுத்துவ சக்திகளுடன் அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படைகளில் மட்டுமின்றி தத்துவார்த்த மற்றும் கலாச்சாரத் துறைகளிலும் வெட்கங்கெட்ட முறையில் சமரசம் செய்து கொண்டுள்ளது.
எனவே நம்முடைய நாட்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்ததைப் போன்று சமுதாய மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புக்களே ஏற்படவில்லை. ஆதிக்க சக்திகள் அறிவியலையும் தொழிற் நுணுக்கங்களையும் தங்களுடைய லாப நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றன.
சமுதாயத்தின் மேல் தட்டிலுள்ளவர்களும், ஆட்சியாளர்களும் சாதாரண மக்களுக்கு அறிவியல் பூர்வமான சிந்தனையோட்டங்கள் உருவாகாமல் மிகவும் எச்சரிக்கையுடன் காய்களை நகர்த்தி வருகிறார்கள். அதன் விளைவாக நாடெங்கிலும் பற்பல வகையான மூட நம்பிக்கைகள் பழமைவாத சிந்தனைகள் ஜோதிட மாய்மாலங்கள் பில்லி சூனியங்கள் தாயத்துக்களை அணிவித்தல் மந்திர, தந்திரங்கள் போன்ற நடவடிக்கைகள் கோடானு கோடி இந்திய மக்களைப் பழமைவாதச் சக்திக்குள் மூழ்கடித்த வண்ணமுள்ளன.
மேலும் பெண்களுக்கு எதிரான வெங்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளன. நாட்டின் பல பகுதிகளில் உடன்கட்டையேறும் கொடுமைகள் இன்னும் நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்திய கிராமங்கள் யாவுமே மிகவும் இருண்ட கண்டங்களாகவே விளங்குகின்றன. மேலும் ஆதிக்க சக்திகள் பிறப்பால் சகல மனிதர்களும் சமமானவர்களே என்ற கருத்தை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகின்றன.
நாடெங்கிலும் தீண்டாமைக் கொடுமைகளும் சாதீய ரீதியிலான ஒடுக்குமுறைகளும் அன்றாட நிகழ்ச்சிகளாக அரங்கேறி வருகின்றன. மதவாதிகள் மதஉணர்வுகளைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டு மக்களைத் தவறான பாதைகளில் வழிநடத்திச் செல்கின்றனர். மேலும் அவர்கள் மதத்தை அரசியலுடன் இணைத்துக் கொண்டு நாட்டு மக்களிடையே பிரிவினை உணர்வுகளைத் தூண்டி வருகிறார்கள். அடுத்து தொடர்ந்து மக்களுடைய ஜனநாயகப் உரிமைகள் நசுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டிலுள்ள 70 சதவீதம் மக்கள் வாழ்ந்து கொண்டுள்ள இந்திய கிராமப்புறங்கள் யாவும் வறுமைப் படுகுழியில் சிக்கித் தவித்த வண்ணம் சோகமயமாகக் காட்சியளிக்கின்றன.
நம்முடைய கட்சியின் முன்னுள்ள உடனடிக் கடமைகள்:
நாட்டு மக்கள் அனைவரையும் அவர்களது துன்ப துயரங்களிலிருந்து விடுவித்தாக வேண்டும். அதுவே கட்சியின் முன்னுள்ள ஆகப்பெரிய கடமையாகும். நாம் மேற்படி கடமையைச் செய்யத் தவறுவோமானால் தொழிலாளி வர்க்கமானது தன்னையும் விடுவிக்க இயலாமற்போய்விடும்.
மேலும் அந்த வர்க்கம் இது நாள் வரைக்கும் போராடிப் பெற்றுள்ள சகலவிதமான உரிமைகளையும் இழக்க நேரிடும். ஏனென்றால் இன்று உலக ரீதியாகத் தொழிலாளி வர்க்கத்தின் மீது பல்வேறு வகையான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியத் தொழிலாளி வர்க்கமானது அந்நிய ஏகாதிபத்தியச் சுரண்டல்கள் மேலும் உள்நாட்டுப் பெருமுதலாளிகள் மற்றும் கந்து வட்டி வெங்கொடுமைகள் ஆகியவற்றின் விளைவாகச் சொல்லற்கரிய துன்ப துயரங்களைச் சந்தித்து வருகிறார்கள்.
நம்முடைய கட்சிக்கு அத்தகைய மக்களை விடுவித்தாக வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளன. முதலாளி வர்க்கத்தினரால் செயல்படுத்திட இயலாமற் போய்விட்டன. சமூகக் கடமைகளை தொழிலாளி வர்க்கம் மற்றும் நமது கட்சியினால் மட்டுமே செயல்படுத்திட முடியும். நம் நாட்டிலுள்ள இடதுசரிகளாகிய நாம் விவசாய பெருங்குடி மக்களைச் சரியான திசைவழிகளில் அணி திரட்டிடத் தவறிவிட்டோம்.
1967 ஆம் வருடத்தில் நம்முடைய கட்சியினால் வெளியிடப்பட்ட விவசாய அரங்கில் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் யாவை? என்ற ஆவணத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது:
விவசாய அரங்கிலும் அதன் ஸ்தாபன அமைப்பின் பல்வேறு கட்டங்களிலும் நாம் மிக மிகப் பின்தங்கிய நிலையில் உள்ளோம். அதுவே நம்முடைய மிகப்பெரியதோர் பலவீனமாகும். இடதுசாரி சக்திகள் வலுவாக உள்ள பகுதிகளில் விவசாய இயக்கமும், விவசாயிகளிடையிலான உணர்வுகளும் பெருமளவுக்குக் குறிப்பிடத்தக்க நிலையில் உள்ளன.
நம்முடைய கட்சியும் தொழிலாளி வர்க்கமும் நமது நாட்டு மக்கட் தொகையில் 70 சதவீதம் பேர்களாகவும் மிகவும் ஏழை எளியவர்களாகவும், பல்வேறு விதமான சமூகக் கொடுமைகளுக்கு ஆளாகி வருபவர்களாகவும் உள்ள நம்முடைய விவசாயிகளை எல்லாம் ஓரணியில் திரட்டிடத் தவறுவோமானால் நமது இயக்கமானது போதிய வலிமையைப் பெற்றிடவே முடியாது.
மேலும் நம்மால் பிற்போக்குச் சக்திகளுடைய கொடூரமான தாக்குதல்களை எல்லாம் முறியடித்திடவும் முடியாது.
நம்முடைய கட்சித் திட்டத்தின் 6-வது பிரிவில் பின்வரும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன:
நம்முடைய நாட்டில் சோசலிசத்தைக் கட்டுவது தான் நம்முடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கமாகும். நாம் அந்த நோக்கத்தை நிறைவேற்றிடும் போது நாட்டின் பொருளாதார நிலைமைகள், தொழிலாளி வர்க்கத்தின் தத்துவார்த்த அடிப்படையிலான வளர்ச்சி, மேலும் அதனுடைய ஸ்தாபன அமைப்பு ஆகிய பல்வேறு அம்சங்களையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு செயல்பட்டிட வேண்டும்.
மேலும் தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளிடையே உறுதியான ஒற்றுமையை உருவாக்கிக் கொண்டு அவர்களது தலைமையில் நேர்மையான முறையில் நிலப்பிரபுத்துவ ஏகபோகம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றிற்கு எதிராகப் பாடுபட்டு வருகிற சகல சக்திகளுடனும் ஓரணியாகத் திரண்டு நின்று நாட்டில் மக்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டியாக வேண்டும்
சுருங்கக் கூறின் மேற்கூறப்பட்ட கூட்டணியானது தொழிலாளி மற்றும் விவசாயிகளுடைய ஒற்றுமையின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டாக வேண்டும்.
இந்தியத் தொழிலாளி வர்க்கம் மற்றும் அதனுடைய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவர்களால் தான் அத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க கடமைகளை மிகவும் வெற்றிகரமான முறையில் நிறைவேற்றிட முடியும். அவர்கள் அவ்வாறு மேற்படி சீரிய பணிகளைத் திறம்பட ஆற்றிடுவார்கள் என்பது உறுதி.
பினாய் கோனார்
தமிழில்: கே. அறம்
மூலம்: பீப்பிள்ஸ் டெமாக்ரசி, ஆங்கிலம்