ஜோசப் ஸ்டாலின் – 2


 I 1 I –  I 2 I – I 3 I – I 4 I – I 5 I

மண வாழ்வும் மகப்பேறும்

தனது இருபத்து ஏழாம் வயதில் இல்லறம் என்னும் நல்லறத்தில் அடியெடுத்து வைத்தார்.

1906 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் எக்காதெரினா ஸ்வானிட்சே என்னும் மங்கை நல்லாள் வாழ்க்கைத் துணைவியாக வாய்த்தார். இவரது தந்தையார் ஓர் இரயில்வேத் தொழிலாளி. சமூக ஜனநாயக இயக்கத்தில் ஈடுபாடு உடையவர். சகோதரர் தோழர் ஸ்டாலினுடன் இளம்குரு மடத்தில் பயின்றவர்.

1908 ஆம் ஆண்டு ஆண்குழந்தை பிறந்தது. யாக்கோபு என்று பெயர் சூட்டினர்.

வாழ்க்கையில் வறுமைதான் நிலவியது. ஆயினும் இதயத்தில் அமைதியும் அன்பும் நிலவியது. ஆனாலும் கொடும் விஷக்காய்ச்சல் காரணமாக ஸ்டாலின் துணைவியார் மரணமுற்றார். 1906 இல் துவங்கிய மணவாழ்வு 1910 இல் முடிந்தது. அதே சமயம் அவரது பணிகளும் தொய்வின்றித் தொடர்ந்தது.

இடையூறுகளுக்கு இடையிலும்

1905 ஆம் ஆண்டில் நடைபெற்ற புரட்சி வெற்றி பெறவில்லை எனப் பார்த்தோம் அல்லவா? அதையொட்டி ஜார் அரசின் அடக்குமுறை அதிகரித்தது. தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குள் பிரதானமான கருத்து வித்தியாசங்கள் எழுந்தன.

போல்ஷ்விக் – மென்ஷ்விக் பிரிவுகள் முன்னை விடக் கூடுதல் ஆயின. போல்ஷ்விக் பிரிவின் சரியான நிலையையும் அதற்குத் தலைமை ஏற்ற தோழர் லெனின் அவர்கள் கருத்தையும் திறம்பட எடுத்துரைத்தார்.

வர்க்கப் போராட்டம் எனும் தலைப்பில் கட்டுரை எழுதினார்:

விரக்தியாளர்கள் மத்தியில் அதிதீவிர அராஜகப் போக்குகள் எழுந்தன. இதனையும் ஸ்டாலின் வெறுத்தார். இப்போக்கு சோசலிசப் பாதைக்கு உதவாது என்றார்.

ஜார் அரசிடம் சரணாகதி அடைவதையம் எதிர்த்தார். அதே சமயம் இருக்கிற சக்தியை விரயமாக்கும் அராஜக வடிவத்தையும் கண்டனம் செய்தார்.

“அராஜகவாதமா சோசலிசமா” என்னும் புகழ் பெற்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை வெளியிட்டார்.

“இயக்கஇயல் பொருள்முதல்வாதம்“ “வரலாற்றியல் பொருள்முதல்வாதம்” குறித்த விளக்கங்களையும் வெளியிட்டார்.

1906-1907 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் டிப்ளிஸ் நகரில் ஜார்ஜிய மொழி ஏடுகளில் இவை வெளியிடப்பட்டன. இன்றளவும் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தால் இவை போற்றப்படுகின்றன.

டிராட்ஸ்கி என்ற முக்கிய தலைவர் செய்த சீர்குலைவு முயற்சிகளையும் கடுமையாக எதிர்த்தார்.

1907 ஆம் ஆண்டு கட்சியின் ஐந்தாவது மாநாடு லண்டன் நகரில் நடைபெற்றது. இதில் தோழர் ஸ்டாலின் பங்கு கொண்டார். சரியான கருத்துக்கு உறுதியாக நின்றார். வெளியிலும் விளக்கினார். தோழர் லெனினது கருத்தை வலிமையுறச் செய்தார்.

1907 ஜூன் மாதம் கட்சி இவரை பாகு நகர் செல்லக் கோரியது. இப்பகுதி தொழிலாளர் நிரம்பிய பகுதி. தொழிலாளர்களைத் தாக்கும் உடனடித் தாக்குதலை எதிர்த்து அவர்களைத் திரட்டினார். அதே சமயம் இந்நிலைமைக்குத் காரணமான முதலாளித்துவச் சுரண்டலையும் அதற்குத் துணைபுரியும் அரசின் கொள்கைகளையும் விளக்கினார். விளைவுகளை எதிர்த்தும் அதே சமயம் மூலகாரணத்தை எதிர்த்தும் உழைக்கும் மக்களை அணி திரட்டினார். மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தைப் பற்றியும் விளக்கினார்.

தேர்தல் பிரச்சாரம்

அக்காலத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாகு பகுதியில் சமூக ஜனநாயக இயக்க வேட்பாளர்கள் வெற்றிபெற பாடுபட்டார்.

சங்கப்பணி

பாகு பகுதி எண்ணெய்த் தொழிலாளர் நிரம்பிய பகுதி. அத்தொழிலாளர்களை அமைப்பு ரீதியில் திரட்டினார். முதலாளிகளும் வேறு வழியின்றி பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர். பேச்சுவார்த்தையை மென்ஷ்விக் பிரிவினரும் வேறு சிலரும் எதிர்த்தனர். ஸ்டாலின் நீக்குப் போக்கான அணுகுமுறையைக் கையாளக் கோரினார்.

வேலைநிறுத்தமும் வேண்டும். பேசவும் வேண்டும் என்றார். இது பற்றி சங்கத்தின் ஏட்டில் ஒன்பது கட்டுரைகள் எழுதினார். அதே சமயம் தான் தொழிலாளர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாக கூறவில்லை. அவர்களிடம் கற்றுக் கொண்டேன் என்கிறார்.

1907 முதல் 1909 முடிய மூன்று ஆண்டுக் காலம் தான் பணியாற்றியதில்  கிடைத்த அனுபவத்தை தனது இரண்டாவது ஞானஸ்நானம் என்றார்.

கைது

1908 மார்ச் 25 அன்று கைது செய்யப்பட்டார். வைலோவ் என்னும் இடத்தில் சிறை வைக்கப்பட்டார்.

கொடுஞ்சிறை

பொதுவாக சிறைச் சாலைகளில் விதவிதமான இன்னல்கள் இருக்கும் இந்தச் சிறை மிகவும் கொடூரமானது. ஸ்டாலின் முன்பாகவே தூக்குக் கைதிகளின் தண்டனை நிறைவேறும். அவர்களது மரண ஓலம் கடுமையாக கொடூரமானதாக இருக்கும். இச்சூழலில்தான் ஸ்டாலின் இருந்தார். நிறையப் படித்தார். எழுதினார் தளரா உறுதியுடன் செயல்பட்டார்.

தண்டனைக்காக காத்திருந்த காலம் முடிந்ததும் 1908 நவம்பர் 9 இல் தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை. நாடு கடத்தல். ஆனால் 1909 ஆம் ஆண்டு மத்தியில் தப்பித்தார். வேறு ஒரு பெயரில் பாஸ்போர்ட் பெற்றார். ஜக்கார் கிரிகோரியன் மெலிக் கியான்ஸ் என்ற பெயர் கொண்டு இதனைப் பெற்றார். தப்பித்து நேராக பாகு நகர் அடைந்தார். அமைப்பில் தளர்ச்சி இருந்தது. உற்சாகம் குன்றி இருந்தது. உறுப்பினர் எண்ணிக்கையும் குறைந்திருந்தது.

கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியும் நமது பணிகளும் என்ற தலைப்பில் எழுதினார். கட்சி மக்களிடம் இருந்து தனிமைப்படக் கூடாது என்று எச்சரித்தார். உயர்வும், தாழ்வும் இதையொட்டித்தான் அமையும் என்றார். காக்கசசில் இருந்து கடிதங்கள் என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வந்தார்.

மீண்டும் கைது

1910 மார்ச் 23 அன்று மீண்டும் கைது செய்யப்பட்டார். கொடிய பைலோவ் சிறையில் அடைக்கப்பட்டார். ஆறுமாதம் அங்கே அடைக்கப்பட்ட பின் நாடு கடத்தப்பட்டார். காக்கசசுக்கும் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்குக்கும் வரக்கூடாது. மாஸ்கோவில் குடியிருக்கக் கூடாது. இத்தடை ஐந்து ஆண்டுகாலம் என்று விதிக்கப்பட்டது. ஆகவே குடியிருக்க வோலொக்டா என்ற இடத்தைக் தேர்ந்தெடுத்தார். அங்கிருந்து இரகசியமாக பீட்டர்ஸ் பர்க் நகரை அடைந்தார்.

இல்லற வாழ்வு தொடங்கிய காலமும் இன்னல்கள் அதிகரித்த காலமும் ஒன்றாகவே இருந்தது.

“துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை

என்ற குறளுக்கேற்ப அவரது பணிகள் நீடித்தன.

ஆழ்ந்த சோகத்தைத் தாங்கிக் கொண்டு அடைய வேண்டிய மக்கள் சுபிட்சத்திற்காக செயல்பாடுகளைத் தொடர்ந்தார்.

ஸ்டாலின்

1912 ஆம் ஆண்டு பிப்ரவரி மத்தியில் வோலொடக்டாவில் இருந்தபோது தோழர் ஸ்டாலின் அவர்களை ஒரு முக்கியமான தலைவர் சந்தித்தார். அவர் பெயர் ஆர்ஜோனிஜிட்சே. தோழர் லெனின் அவர்களது நெருங்கிய சகா. ஸ்டாலின் அவர்களது செயல்கள் பற்றியும் பண்புகள் பற்றியும் லெனின் உயர்வான அபிப்பிராயம் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். இரும்பு மனிதர் என்று கருதுவதாகக் குறிப்பிட்டார். இதன் வழியாகப் பிறந்த பெயர்தான் ஸ்டாலின் என்பது. லெனின் உட்பட மற்ற தோழர்களின் விருப்பப்படி அமைந்தது தான் ஸ்டாலின் எனும் பெயர். அதற்கு முந்திய பெயர்கள் மறைந்தன. ஸ்டாலின் என்னும் பெயரே நிலைத்தது.

1912 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் பிராக் நகரில் கட்சியின் ஆறாவது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தோழர் லெனின் அவர்களுடன் ஸ்டாலினும் இப்பெயரை அறிவித்த தோழர் ஆர்.ஜோனித்சேயும் மத்தியக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தோழர் ஸ்டாலின் நாடு கடத்தப்பட்ட நிலையில் இது நிகழ்ந்தது. மாநாட்டு முடிவுகளை விளக்கி அறிக்கை தயாரித்தார். ஆறாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

1912 பிப்ரவரி 29 அன்று தான் கட்டாயமாகத் தங்கி இருக்க நேர்ந்த வோலொக்டாவில் இருந்து தப்பித்தார். பீட்டர்ஸ் பர்க் பாகு ஆகிய நகர்களுக்கு சென்றார். மேதின ஆர்ப்பாட்டங்களுக்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மத்தியக்குழுவின் சார்பில் மேதினப் பிரகடனம் எழுதி வெளியிட்டார்.

புரட்சிகர இயக்கங்கள்

1912 ஏப்ரல், மே மாதங்களில் புரட்சிகர இயக்கங்கள் நாடெங்கும் வெடித்தன. லீனா என்னும் இடத்தின் தங்கச் சுரங்கத்தின் தொழிலாளர் போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடும் அதனால் 500 தொழிலாளர்கள் பலியானதும் நாடெங்கும் கோப அலைகளை உருவாக்கியது. வேலை நிறுத்தங்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்தன. ஸ்டாலின் இவற்றை வரவேற்று எழுதினார்.

பிராவ்தா

கட்சியின் செய்தி ஏடாக பிராவ்தா என்ற பெயரில் ஏடு வெளிவந்தது. இதன் வெளியீட்டிற்கு தோழர் ஸ்டாலின் பெரும் பங்கு வகித்தார். முதல் இதழும் அவராலேயே தயாரிக்கப்பட்டது. தலையங்கமும் அவரே எழுதினார். ஒரு இதழ் பல அங்கங்களைக் கொண்டது. அதில் தலையாய அங்கம் தலையங்கம். இதனை எழுதும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு வாய்த்தது.

வர்க்க எதிரிகள் மீது யுத்தம் தொடுப்போம். நமது அமைப்புக்குள் சமாதானத்தை நிலைநாட்டுவோம் என்றார். விற்பனை விறு விறுப்பாக உயர்ந்தது. எண்பது ஆயிரம் பிரதிகள் விற்றன. மக்கள் தொடர்புக்கு இவ்வேடு பணிபுரிந்தது.

மீண்டும் கைது

1912 ஏப்ரல் 22 அன்று கைது செய்யப்பட்டார். மூன்று ஆண்டு காலத்திற்கு நாடு கடத்த உத்தரவு. இத்தண்டனையை அனுபவிக்க வேண்டிய இடம் சைபீரியாவின் நாரிம் மாகாண பகுதி. மூன்று ஆண்டுகள் தண்டனையை அரசு விதித்தது. மூன்றே மாதத்தில் இவர் தப்பித்துவிட்டார். ஏப்ரல் மாதம் கைது. ஜூலை மாதம் தண்டனை அறிவிப்பு. சைபீரியா நாரிம் மாகாணம் வந்ததும் செப்டம்பர் மாதம் தப்பினார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வந்தார். பிராவ்தாவின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பை அளித்தனர்.

நான்காவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் தொழிலாளர் பிரதிநிதிகள் வெற்றி பெற பாடுபட்டார். தொழிலாளர் பிரகடனம் என்ற பெயரில் பீட்டர்ஸ் பர்க் தொழிலாளர்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோள் தோழர் லெனின் அவர்களால் பாராட்டப்பட்டது. பிரச்சாரத்திற்கும் பெரிதும் பயன்பட்டது. தேர்தலில் போல்ஷ்விக் உறுப்பினர்கள் தொழிலாளர் பகுதியில் இருந்து கூடுதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் ஆற்ற வேண்டிய பணிகளுக்கு தோழர் ஸ்டாலின் வழிகாட்டினார். மன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் ஆற்ற வேண்டிய பணிகளைத் தெளிவுபடுத்தினார்.

லெனின் சந்திப்பு

இக்காலங்களில் தோழர் லெனின் அவர்களிடம் உள்ள உறவு மேலும் பலப்பட்டது. 1912 நவம்பர் – டிசம்பர் மாதங்களில் சந்தித்தார். ஆஸ்திரியாவில் கிராகோவ் நகரில் இது நிகழ்ந்தது. ஏற்கனவே ஸ்டாலினின் எழுத்து, பேச்சு ஆகியவைகளுக்கு லெனினது ஆதரவு இருந்தது. இருவரும் இணைந்து பேசினர். உறவு மேலும் பலப்பட்டது.

நவில் தொறும் நூல் நயம் போலும்

பயில் தொறும் பண்புடையாளர் தொடர்பு

என்ற முறையில் இது அமைந்திருந்தது.

தேசிய இனப் பிரச்சினைகள்

தேசிய இனப்பிரச்சினைகளில் கம்யூனிஸ்ட் அணுகுமுறை குறித்த வழிகாட்டலை தோழர் லெனின் அவர்களது ஆலோசனையுடன் வகுத்தளித்தார். இதற்காக ஆஸ்திரிய நாட்டின் வியன்னாவில் 1913 ஜனவரியில் ஒரு மாத காலம் தங்கி இருந்தார்.

மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சினைகளும் என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதினார். உலகக் கம்யூனிஸ்ட்களின் வழிகாட்டியாக இக்கட்டுரைள் திகழ்கின்றன.

தேசிய இனங்களின் உணர்வையும், உரிமையையும் ஏற்பது. அதே சமயம் வர்க்க உணர்வை வலுப்படுத்தி சோசலிச உணர்வை உறுதிப்படுத்துவது ஆகியவை அதில் வலியுறுத்தப்பட்டன. தோழர் லெனின் இதனை மணதார வரவேற்று எழுதினார்.

தொடர் கைது

ஜார் அரசு மீண்டும் ஸ்டாலினை கைது செய்தது. நான்கு ஆண்டு நாடு கடத்தல் தண்டனை விதித்தது. சைபீரியாவின் கொடிய பகுதிக்கு அனுப்பப்பட்டார். 1900-க்குப் பின்பு 1913-க்குள் அவர் கைது செய்யப்பட்டது ஏழுமுறை. நாடு கடத்தப்பட்டது ஆறு முறை. இவற்றில் இருந்து தப்பித்தது ஐந்து முறை. அவரது சரீரத்தை சிறையிட முடிந்தது. ஆனால் சிந்தனையைச் சிறையிட முடியவில்லை. ருஷ்ய மண்ணை விட்டு அவரது உடலைக் கடத்த முடிந்தது. உள்ளத்தைக் கடத்த முடியவில்லை. உடலை வருத்த முடிந்தது. உள்ளம் உறுதிப்படுவதை தடுக்க முடியவில்லை. தொலை தூர சைபீரியாவில் உள்ளத்தைச் சோர்வுறச் செய்யும் சூழலில் அவர் இருந்தார். ஆயினும் இயற்கைக் காட்சிகளை வெளிப்படுத்தும் படங்களை கேட்டுக் கடிதம் எழுதினார். நிறையப் படித்தார்; கற்றார்; கற்றபடி நின்றார்.

யுத்தம்

1914 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் யுத்தப் போக்குகள் தோன்றின. தோன்றின என்பதை விட தோற்றுவிக்கப்பட்டன. முதலாளித்துவ சக்திகளுக்கு இந்த யுத்தம் தேவைப்பட்டது. ரஷ்யாவிலும் இதன் தாக்கம் இருந்தது. ரஷ்ய ஜார் அரசும் யுத்தத்தில் ஈடுபட்டது.

இதனை தோழர் லெனின் வெறுத்தார் ஏகாதிபத்திய யுத்தம் இதனை உள்நாட்டு யுத்தமாக மாற்றுங்கள். உழைக்கும் மக்கள் ஒருவரை ஒருவர் அழிக்க வேண்டாம் என்றார். யுத்தக் கோட்பாடுகள் என்ற தலைப்பில் வேண்டுகோள் விடுத்தார்.

தோழர் ஸ்டாலினுக்கும் இது கிடைத்தது. இதனை மனதார ஏற்றார். நாடு கடத்தப்பட்டு இருந்த புரட்சியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். அணி திரட்டினார். லெனின் அவர்களது கருத்து உழைக்கும் மக்களால் ஏற்கப்பட்டது. போர் வீரர்கள் மத்தியிலும் இதற்கு வரவேற்பு இருந்தது.

நாடு கடத்தப்பட்டவர் இடையே அணிதிரட்ட தோழர் ஸ்டாலின் நீண்ட பயணம் செய்தார். அனுபவங்களை தோழர் லெனினுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். ஜார் அரசை எதிர்த்து இந்த இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு பலமாக இருந்தது.

உழைக்கும் பெண்கள், இராணுவ வீரர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் பெரும் எழுச்சிகள் இருந்தன. போல்ஷ்விக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தோழர் லெனினது கருத்துக்களையே வெளிப்படுத்தினர். இவைகளையெல்லாம் அச்சமயம் வெளிநாட்டில் இருந்த தோழர் லெனினுக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். மக்கள் இயக்கங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக நாளுக்கு நாள் வலுப்பெற்றதும், ஜார் அரசு தனது பலத்தை இழப்பதும் ஒருசேர நிகழ்ந்தது. புதிய அரசு அமைக்கப்படும் சூழல் உருவானது.

தோழர் லெனினது கருத்துக்கு எதிரான மென்ஷ்விக் பிரிவினரும் வேறு சில பிரிவினரும் ஆதரித்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சக்திகளின் அரசு அமைந்தது. இந்த அரசு தற்காலிக அரசாகவும் இடைக்கால அரசு என்றும் அழைக்கப்பட்டது.

அதே சமயம் மக்கள் மத்தியில் சோவியத் என்னும் பெயரில் புரட்சிகர அமைப்புகள் செயல்பட்டன. இதில் தொழிலாளர்கள், விவசாயிகள், இராணுவ வீரர்கள் பிரதிநிதியாக இருந்தனர்.

பெட்ரோ கிராட் நகரில் லெனினது கருத்துக்கு ஆதரவான போல்ஷ்விக் பிரிவினர் தலைமையில் சோவியத் இருந்தது. பெட்ரோ கிராட் நகரமும் புரட்சிகர குணமும் சோசலிச பற்றுறுதி மிக்க தொழிலாளர்கள் நிரம்பியதாக இருந்தது.

ஒரு புறம் முதலாளித்துவ குணம் கொண்ட தற்காலிக அரசு இருந்தபோதே தொழிலாளர் மத்தியில் செல்வாக்குப் பெற்ற சோவியத் அமைப்பும் செயல்பட்டதால், இரட்டை ஆட்சி என்று அழைக்கப்பட்டது.

1917 ஆம் ஆண்டின் பிப்ரவரி புரட்சி என்று இது அழைக்கப்படுகிறது.

நாடு கடத்தப்பட்டிருந்த தோழர் ஸ்டாலின் 1917 மார்ச் 12 அன்று பெட்ரோகிராட் நகரை அடைந்தார். ஸ்விட்சர்லாந்தில் தலைமறைவாக இருந்த தோழர் லெனினுடன் இடைவிடாது தொடர்பு கொண்டு வழிகாட்டுதலைப் பெற்றுக் கொண்டார். கட்சியின் மத்தியக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சியின் தலைமைப் பொறுப்பையும் பிராவ்தா இதழின் பொறுப்பையும் ஏற்றார். கட்சியை பலப்படுத்துவது சோவியத் அமைப்புக்களை நாடெங்கும் உருவாக்குவது போன்ற கருத்துக்களை எழுதினார். அடுத்து நடைபெற வேண்டிய புரட்சி பற்றி தோழர் லெனினது கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றார்.

இடைக்கால அரசுக்கு நடுக்கம் ஏற்பட்டது. தோழர் லெனின் ரஷ்யாவிற்கு திரும்ப வேண்டும் என்ற உணர்வு மக்கள் மத்தியில் இருந்தது. லெனினும் விரும்பினார். ஆனால் அரசு விரும்பவில்லை. ஏராளமான தடைகளை ஏற்படுத்தியது.

லெனின் நாடு திரும்பும் போது பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

1914-ல் துவங்கிய உலக யுத்தத்தை முதலாளித்துவ சக்திகள் இடைவிடாது நடத்தின. ஜார் அரசு வீழ்ந்த பின் அமைந்த தற்காலிக அரசும் இதனை தொடர்ந்து நடத்தியது. மக்கள் இதனை விரும்பவில்லை. யுத்தம் என்ற பெயரில் ஸ்டாலின் எழுதினார். முதலாளித்துவத்தின் தீய நோக்கங்களை அம்பலப்படுத்தினார்.

லெனின் வருகிறார்

1917 ஏப்ரல் 3 அன்று தோழர் லெனின் தமது நீண்ட தலைமறைவு வாழ்க்கையை முடித்துக் கொண்டு பெட்ரோ கிராட் திரும்பினார். இரயில் நிலையத்தில் மக்கள் வெள்ளம் சூழ்ந்து வரவேற்றது. அதில் அவர் ஆற்றிய உரை ஏப்ரல் ஆய்வுரை என்று அழைக்கப்படுகிறது.

தோழர் ஸ்டாலின் பிராவ்தா இதழில் இதனையொட்டி தமது கருத்துக்களை எழுதினார். தோழர் லெனினை வரவேற்று அவருடன் நெருக்கமாக இருந்து பணியாற்றினார்.

1917 ஏப்ரல் 24 முதல் 29 முடிய போல்ஷ்விக் கட்சியின் அனைத்து இரஷ்ய மாநாடு பெட்ரோ கிராடில் நடைபெற்றது. ரஷ்ய வரலாற்றில் இதுதான் வெளிப்படையாக நடந்த மாநாடு. தேசிய இனப் பிரச்சினை குறித்து இம்மாநாட்டில் ஸ்டாலின் தமது கருத்துக்களை முன் வைத்தார். மாநாடு இதனை ஏற்றது.

1917 இல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியில் அனைத்து தேசிய இனங்களும் தமது ஆதரவை நல்க இது பயன்பட்டது. மே மாதம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உருவாக்கப்பட்டது. தோழர் ஸ்டாலின் அதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்களைத் திரட்ட, அவர்களுக்குப் போர்ப் பயிற்சி அளிக்க, இராணுவத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த, கட்சி அளித்த பணிகளை திறம்பட நிறைவேற்றினார்.

இக்காலத்தில் தோழர் லெனினுடன் நெருங்கிப் பழகியது, வர்க்க இயக்கங்களில் பங்கேற்றது. அதில் கிடைத்த அனுபவம் ஆகியவற்றை தமக்குக் கிடைத்த ஞானஸ்நானம் என்றார்.

1917 ஜூன் 3 அன்று இரஷ்யா முழுவதும் இருந்த சோவியத்துக்களின் முதலாவது காங்கிரஸ் நடைபெற்றது. ஸ்டாலின் இதில் பங்கு கொண்டு ஜூன் 18 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடுத்தார்.

ஜூன் 18 அன்று ஐந்து லட்சம் தொழிலாளர்கள் திரண்டனர். யுத்த எதிர்ப்பும் இடைக்கால அரசை எதிர்த்தும் முழக்கங்கள் இருந்தன. அனைத்து அதிகாரமும் சோவியத்துக்களுக்கே என்ற முழக்கம் அதிர்ந்தது. புரட்சி வீரர்களின் போர்ப் பிரகடன அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டார்.

அரசு கடும் அடக்குமுறையை ஏவியது. ஸ்டாலின் ஆசிரியராக இருந்த பிராவ்தா அலுவலகத்தை அடித்து நொறுக்கியது.

லெனின் தலைமறைவு

ஜூலை முதல் வாரம் தோழர் லெனினைக் கைது செய்ய ஆணை பிறந்தது. லெனினை மறைத்து வைக்க ஸ்டாலின் ஆவன செய்தார். தனக்கு நெருக்கமான அலிலுயேவ் குடும்பத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் லெனினைத் தங்க வைத்தர். அவரது தாடியையும், மீசையையும் தானே வழித்து மாற்றினார். வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தார்.

அவர் இருந்தால் என்னென்ன பணிகளை எந்தெந்த விதத்தில் ஆற்றுவாரோ அவைகளை அவர் நேரடியாக பணியாற்ற முடியாத சூழலில் தான் முன்னின்று நிறைவேற்றினார். தொண்டர்களை அணுகுவீர் என்ற தலைப்பில் அறிக்கை விடுத்தார்.

புரட்சிக்கு எதிரான சக்திகள் புரட்சிகர சக்திகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தன. இதனை முறியடிக்க இந்த அறைகூவல் பயன்பட்டது.

மாநாடு

1917 ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 3 வரை கட்சியின் 6-வது மாநாடு இரகசியமாக நடைபெற்றது. லெனின் இல்லாத நிலையில் ஸ்டாலின் தான் மத்தியக்குழுவின் வேலை அறிக்கை மற்றும் அரசியல் நிலை பற்றிய அறிக்கையை முன்வைத்தார்.

சோசலிசப் புரட்சி சாத்தியமா? ரஷ்யாவில் அது வெற்றி பெறுமா? என்றெல்லாம் டிராட்ஸ்கி போன்ற தலைவர்கள் முன்வைத்த தவறான கருத்துக்ளை லெனின் வழியில் நின்று முறியடித்தார்.

மத்தியக்குழுவிற்கு நடைபெற்ற தேர்தலில் லெனினுக்கு அடுத்தபடியாக கூடுதல் வாக்குகளைப் பெற்றார். புரட்சிகரமான போருக்கு மக்களை அழைத்து அறிக்கை வெளியிட்டார்.

நாடு முழுவதும் அமைதியற்ற காலம் துவங்கியது. இராணுவ ஆட்சிக்கான முயற்சி நடைபெற்றது. புரட்சியாளர்கள் மீது கடும் தாக்குதலை அரசு கட்டவிழ்த்து விட்டது.

புரட்சி வெற்றி

தோழர் ஸ்டாலின் இதனை எதிர்கொள்ள தோழர் லெனின் அவர்களது ஆலோசனையைப் பெற்று வழிகாட்டி வந்தார். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவிற்கு உழைக்கும் மக்களின் போராட்டம் வலுப்பெற்றது.

இராணுவத்தின் தரைப்படை, கப்பற்படை வீரர்களும் உழைப்பாளிகளுக்கு ஆதரவாக  திரும்பினர். புரட்சிக்கான சூழல் கனிந்து விட்டதாக லெனின் கருதினார். இதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட மத்தியக்குழுவை கேட்டுக் கொண்டார். லெனினுக்கும் மத்தியக்குழுவிற்கும் இணைப்புப் பாலமாக ஸ்டாலின் விளங்கினார்.

1913 அக்டோபர் 7 அன்று லெனின் தான் தலைமறைவு வாழ்க்கை நடத்திய பின்லாந்திலிருந்து பெட்ரோ கிராடுக்கு இரகசியமாக வந்து சேர்ந்தார். அக்டோபர் 10 அன்று மத்தியக்குழு கூடியது. புரட்சியைத் தொடங்க வேண்டும் என்ற லெனினது கருத்தைச் சிலர் எதிர்த்தனர். ஸ்டாலின் உறுதியாக லெனின் பக்கம் நின்றார். ஆதரித்து வாக்களித்தார்.

லெனின் மீண்டும் தலைமறைவு ஆனார். ஸ்டாலின் இப்பணிகளை நிறைவேற்றினார். அக்டோபர் 16 அன்று கட்சியின் விரிவடைந்த மத்தியக்குழு கூடியது. ஸ்டாலின் தலைமையில் மையம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

புரட்சிகரப் பணிகள் மார்க்சிய லெனினிய வெளிச்சத்தில் சுறுசுறுப்புடன் நடைபெற்றன.

அக்டோபர் 24 அன்று லெனின் மீண்டும் திரும்பினார். அதுகாறும் ஸ்டாலினும் மற்ற தோழர்களும் ஆற்றி இருந்த பணிகளை மேலும் ஒருமுகப்படுத்தி ஆட்சியாளர்களுக்கு எதிராக நேர்த்தியுடன் திருப்பினார்.

மக்கள் எழுச்சிக்குப் பயந்த ஆட்சியாளர்கள் குளிர்கால அரண்மனை என்று அழைக்கப்பட்ட அரண்மனைக்குள் புகுந்தனர். அவர்களது ஆணைகள் நிறைவேறவில்லை. மக்கள் எழுச்சிக்கு முன் மண்டியிட நேர்ந்தது. 1917 அக்டோபர் 25 அன்று (நவம்பர் 7) பெட்ரோ கிராட் நகர் புரட்சியாளர் வசம் ஆயிற்று. மாபெரும்சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றது.

கட்சி இதழில் தோழர் ஸ்டாலின் இடைக்கால அரசைத் தூக்கி எறிக என்று அறைகூவல் விடுத்தார். இந்த அறைகூவல் சிறப்புற நிறைவேறியது. புரட்சியின் உன்னத நோக்கத்தை நிறைவேற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார் ஸ்டாலின்.