மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


எழுச்சிமிகு உறுதியும் ஏற்றமிகு தீர்மானங்களும்


தலைநகர் டெல்லியிலே மார்க்சிஸ்ட் கட்சியின் 18-வது மாநாடு (ஏப்ரல் 6 முதல் 11 வரை) ஆறு நாட்கள் சிறப்பாக நடந்தேறியது. முந்திய 17-வது மாநாட்டு அரசியல் தீர்மானப்படி களப்பணியில் ஈடுபட்டு பெற்ற அனுபவங்களையும், கற்ற படிப்பினைகளையும், பல கட்ட மாநாடுகள் மூலம் திரட்டி இங்கே பிரதிநிதிகள் பகிர்ந்து கொண்டனர்.

அடுத்த மூன்று ஆண்டுகள் மீண்டும் சந்திக்கும் வரை மக்களிடையே அரசியல் பணி ஆற்றிட வழிகாட்டும் அரசியல் தீர்மானத்தை சீர்மிகு திருத்தங்களோடு ஏற்று எழுச்சிமிகு உறுதியோடு மாநாடு நிறைவடைந்தது.

மக்கள் ஜனநாயக புரட்சிக்கான கூறுகளை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு அரசியல் தீர்மானம் அமைக்கப்பட வேண்டும் என்பதால் இரவு 10 மணி வரை நீண்ட விவாதங்கள் சோர்வின்றி நடந்தன. சூடாகவும், சாங்கோபாங்கமாகவும், அரசியல் சிரத்தையுடன் இந்த வாதங்கள் அமைந்தன. நேரம் போதாமை என்ற ஒரு அம்சம் கடந்த மாநாடுகளில் இல்லாத ஒன்று இங்கே இருந்தது.

சில கொள்கைப் பிரச்சினைகளில் காரசாரமான விவாதங்கள் நடந்தன. அவசரப்பட்டு முடிவெடுப்பதை விட கருத்தொற்றுமை கண்டிட மேலும் ஆழமாக விவாதிக்க வேண்டுமென்ற குரல் மாநாட்டிலே மேலோங்கியதால் புதிய மத்தியக்குழு அந்தப் பணியை செய்ய மாநாடு முடிவு செய்தது. ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின் நாணயமான பரஸ்பர நம்பிக்கையை இந்த முடிவு கோடிட்டு காட்டியது. கட்சியின் வரலாறு தெரிந்தவர்கள், ஒரு புரட்சிகர கட்சியின் எல்லா கூறுகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ளது. அல்லது வளர்த்துள்ளது என்பதின் அடையாள மாகத்தான் இந்த முடிவை பார்ப்பார்கள்.

கூட்டுத் தலைமை

இந்த மாநாட்டின் சிறப்பு என்னவெனில், கட்சியின் தலைமை உருவாகும் பாங்கும், கூட்டுத் தலைமையாக இருக்கிற உறுதியும் உலகமே பார்க்கிற அளவிற்கு எடுத்துக் காட்டியதுதான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு எதுவெனில் அது கொண்டிருக்கும் கூட்டுத் தலைமையாகும்.

ஒரு புரட்சிகர பெரும்திரள் மக்கள் கட்சி, உருவாக்கப்படும் ஒரு ஆதர்ச நபரை சுற்றி இல்லாமல் கூட்டுத் தலைமை கொண்டதாக அமைவதின் அவசியத்தை உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களிலிருந்து ஒவ்வொரு நாட்டு தொழிலாளி வர்க்க கட்சி கற்ற பாடமாகும்.

ஒன்றுபட்ட கட்சியாக இருந்த காலத்திலிருந்தே உள்கட்சி விவாதங்களின் மூலம் கூட்டுத் தலைமையை உருவாக்குவதற்கு கண்ணும், கருத்துமாய் இருந்தவர்களே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை 1964 இல் ஏற்றனர். தோழர் பிரகாஷ் காரத் தனது நிறைவுரையில் கூட்டுத் தலைமை உருவானதின் வரலாற்றை தொட்டுக் கூறியபொழுது 1964 இல் உருவான 9 பேர் கொண்ட முதல் அரசியல் தலைமைக்குழுவை, கூட்டுத் தலைமையை உருவாக்கிய  நவரத்தினங்கள் என்று குறிப்பிட்டார். அந்த பாரம்பரியம் இந்த மாநாட்டிலே உலகமே அறிகிற முறையில் உயர்ந்து நின்றது.

உட்பூசலும், ஒருவரை ஒருவர் விஞ்ச வேண்டும் என்ற கடுகுள்ளமும் இல்லாத இடங்களில்தான் கூட்டுத்தலைமை உருவாகும். ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடுகள் இயல்பாகவே இயங்குகிற இடத்தில்தான் கூட்டுத் தலைமை உயிரோட்டமுள்ளதாக இருக்கும். இந்த உண்மை இந்த மாநாட்டிலும் உறுதிப்படுத்தப்பட்டது. பழுத்த அனுபவமும், இளமையின் துடிப்பும் இரண்டற கலந்து நிற்பதை போற்றாத ஏடுகளே இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றால் கொள்கையில் தெளிவும், நடைமுறையில் துடிப்பும் களிநடம் புரியுமிடம் என்பது பத்திரிக்கை உலகின் கணிப்பாகும்.

மக்களை ஒன்று சேர் வாழ்வை உயர்த்து

வயதில் மூப்பும், புரட்சிகர உணர்வில் இளமையும் கொண்ட சுர்ஜித், ஜோதிபாசு தடுமாற்றமில்லாத குரல்களில் சில நிமிடங்களே உரையாற்றினர்.

அவர்கள் கூறியவைகள் நெடுங்காலம் காதிலே எதிரொலித்து கொண்டே இருக்கும். அவர்களது சொற்கள் சுமந்து வந்த கருத்துக்களும், அந்தக் கருத்துக்களில் உரைந்திருந்த உணர்வுகளும் கேட்போர் உறுதியை எஃகாக்கியது. அவைகள் நமது அயர்வினை எரிக்கும் கணலாகியது எனலாம்.

தேக்கத்தை உடைத்திடுக, புதிய இடங்களில் கட்சியை பரப்பிடுக என்ற சுர்ஜித்தின் சொற்கள் எதார்த்த நிலவரங்களை உணர வைப்பவைகளாகும்.

கட்சி வேகமாக பரவி எதார்த்த நிலைமைகளை மாற்றாமல் மாற்றமில்லை என்பதை அவறிவுறுத்தியது. நாடாளுமன்றத்திற்குள் பின்பற்றும் அரசியல் யுக்திகளோ,  அரசியல் வானவேடிக்கைகளோ, பரபரப்பூட்டும் அறிக்கைகளோ, சடங்காகிப் போன ஆர்ப்பாட்டங்களோ, மக்களை பார்வையாளர்களாக ஆக்குமே தவிர போராட்ட களத்திலே கொண்டு வந்து நிறுத்தாது. மக்களிடையே கட்சி கிளைகளின் அயராத உழைப்பே, உள்ளதை உள்ளபடியே மாற்றும் ஆற்றல் படைத்தது என்பதையே சுர்ஜித் சொன்ன வார்த்தைகளின் உணர்வாகும்.

புரட்சிகர தத்துவம் என்றால் எதார்த்த நிலைமைகளை வளர்ச்சி விதிக்கேற்ப மாற்றுவதே தவிர எதார்த்தத்திகேற்ப நமது உணர்வை மாற்றிக் கொள்வதல்ல என்ற மார்க்சின் வாசகத்தை சுர்ஜித்தின் சொற்கள் நினைவூட்டின.

தோழர் ஜோதிபாசுவின் எளிமையான சொற்கள், சிக்கலான அரசியல் சுழலில் மார்க்சிஸ்ட்டுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தியது.

ஆத்திரப்படாத அணுகுமுறையும், சிரத்தையும் அர்ப்பணிப்பும் மிக்க செயல்பாடும் ஒரு மார்க்சிஸ்ட்டின் அடையாளம் என்ற லெனினின் வார்த்தைகளே அவரது பேச்சு நினைவூட்டியது.

பொருளாதார கொள்கைகளில் இடதுசாரி கட்சிகளோடு மாறுபட்டு இருக்கும் அரசியல் கட்சிகளை நோக்கி உங்களுக்கும், பா.ஜ.க.விற்கு இதில் வேறுபாடு இல்லை என்ற நிலை சரிதானா? என்று தொடுத்த கேள்விக்கனையும் அவரது சொற்களின் உணர்வும் அரசியல் என்றால், எதிரிகளை குறைத்து, நண்பர்களை அதிகப்படுத்துவது என்ற மாசேதுங் இன் கருத்தை நினைவூட்டியது. அரசியல் நண்பர்களை விமர்சிக்க தேவையான நளினம் அவரது சொற்களில் நிறைந்து கிடந்தது.

மேற்குவங்கத்தில் 27 வருடம் அரசு நிர்வாகப் பொறுப்பில் இடது அணி இருப்பதற்கான காரணம், அரசியல் யுத்திகளோ, சந்தர்ப்பத்திற்கேற்ற அணி அமைப்பதோ அல்ல. நீலச்சீர்திருத்தத்திற்கும், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் ஜனநாயகத்தை பரவலாக்குவதிலும் இடதுசாரிகள் காட்டும் அக்கறையே. இந்த சாதனையின் மர்மம் என்று அவருக்கே உரிய எளிய நடையில் சொன்னது;

கட்சி வளர்ச்சியுறாத மாநிலங்களில் கட்சியின் எதிர்காலம் கிராமப்புறத்திலே இருக்கிறது; கிராமப்புற ஏழைகளின் வாழ்வு மேம்பட அவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் துணிச்சலில் இருக்கிறது என்பதை ஓங்கி அறைந்து கூறுவது போல் இருந்தது.

விவாதங்களின் மேன்மை

பிரதிநிதிகளின் அரசியல் தரமும், விவாதங்களில் வெளிப்பட்டன. விவாதங்கள் சூடாக எதனை மையமாக வைத்து நடந்தது என்பதை வைத்தே ஒரு மாநாட்டின் வெற்றி தோல்வியை கணிக்கலாம். தோழர் சுர்ஜித்தின் சொற்களிலே சொல்வதென்றால் துஷ்டத்தனம் நிறைந்த அரசியல் சூழலில் எதுபொறுத்தமான அரசியல் யுத்தியாக அமையும் என்பதைச் சுற்றியே விவாதங்கள் இருந்தன.

மொத்தம் 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் என்று இருக்கும் நமது நாட்டில் மூன்றே மாநிலங்களில் தான் நமது செல்வாக்கு உள்ளது. 545 நாடாளுமன்ற உறப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 61 உறுப்பினர்களே இடதுசாரிகளாவர். இந்த பலத்தை வைத்துக் கொண்டுதான், அரசியலில் தலையீடு செய்ய வேண்டியுள்ளது.

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மக்களின் நலன்களை காலில் போட்டு மிதிக்க விடாமல் தடுத்திடவும் வேண்டும். பா.ஜ.க. சந்தர்ப்பத்தை பயன்படுத்திட அனுமதிக்கவும் கூடாது. வேகமாக இடதுசாரி கருத்துக்கள் மக்களிடையே நாடெங்கிலும் பரவவும் வேண்டும்.

இப்பிரச்சினையை சுற்றியே விவாதங்கள் அமைந்திருந்தன. அன்றாட போராட்டங்களினால் புடம் போடப்பட்ட பிரதிநிதிகள் முன்வைத்த கருத்துக்கள் இப்பிரச்சனைகளை விளக்கிய அரசியல் தீர்மானத்தை சுற்றி கருத்தொற்றுமை ஏற்பட வைத்தது.

இதனையொட்டி இன்னொரு பிரச்சினையும் விவாதப் பொருளானது. மாற்று என்ன? என்பதே அந்தப் பிரச்சினை.

மூன்றாவது மாற்று என்பது சில கட்சிகள் கூடி ஒப்பந்தங்கள் செய்து உருவாக்குவதல்ல. ஒரு தொழிலாளி வர்க்க்க் கட்சி நினைத்தவுடன் சமைத்திடவோ, வாருங்கள், வாருங்கள் நாட்டை முன்னேற்ற பொன்னான யோசனைகள் எம்மிடம் உள்ளது, கூடுவோம், அதனை சமைப்போம், மக்களுக்கு படைப்போம் என்று அழைப்பு விட்டு அமைவதல்ல! இந்திய அரசியல் வானில் உருவாகியிருக்கிற கட்சிகள் பல. பல வட்டார அளவில் செல்வாக்கு பெற்றவைகள். இவற்றில் ஜனநாயகத்தின் மீதும், மதசார்பற்ற அரசியல் மீது நம்பிக்கை வைத்திருக்கிற கட்சிகளின் குணாம்சங்கள் எவ்வாறு உள்ளது என்பதை சரியாக கணிக்க வேண்டும். மாறும் மக்களின் மனோ நிலைக்கேற்ப காற்றடிக்கிற பக்கம் திரும்புகிற அரசியல் சாதுர்யம் படைத்தவைகளாக உள்ளனர் என்பது தெறிகிறது.

காங்கிரசோ, பா.ஜ.க.வோ, இரண்டில் ஒன்றை நம்பித்தான் அகில இந்திய அரசியலில் தலையீடு செய்ய முடியும் என நம்புகிறவைகளாக இருக்கின்றன. தங்களது கூட்டு பலத்தையோ, இடதுசாரி அரசியலின் பயன்பாடும் இவர்கள் கணக்கிலே கொள்வதில்லை. இத்தகைய கட்சிகள் இடதுசாரிகள் பக்கம் திரும்ப வேண்டுமானால் முதலில் மக்களின் மனோநிலையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இடதுசாரி கருத்துக்கள் பக்கம் மக்கள் சாய வேண்டும். மக்களின் மனோ நிலைகளில் இத்தகைய மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமானல் உள்ளூர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டாக வேண்டும்.

பெருந்திரள் மக்களின் பங்கேற்பு இல்லாமல் சிரத்தையுள்ள அரசியலை உருவாக்கிட முடியாது என்ற லெனின் வாசகத்தை நாம் மனதிலே கொள்ள வேண்டும் என்பதை இந்த விவாதங்கள் எதிரொலித்தன.

மூன்றாவது மாற்று என்பது உணர்வுபூர்வமாக, மக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்படும் என்பதை மாநாட்டு விவாதங்கள் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தின. மாநாட்டின் இன்னொரு முக்கிய அம்சம், அந்நிய முதலீடு, அந்நிய நிதிமூலதனம் உலகமயத்தால் உருவாகும் சாதக அம்சங்களை பயன்படுத்தவும், பாதக அம்சங்களை எதிர்த்திடவும் தேவையான நமது அணுகுமுறை; அந்நிய உதவி பெறும் தன்னார்வ குழுக்கள் பற்றிய மதிப்பீடுகள்; சுயஉதவிக் குழுக்களை பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றிய விவாதங்களாகும்.

முதலாளித்துவ உற்பத்தி முறையின் ஒரு அம்சமான உலகமயம் பற்றிய சரியான அணுகுமுறை மார்க்சீய கோட்பாட்டின்படி உருவாக்கப்பட வேண்டும்; அப்பொழுது; வரலாற்று ரீதியாக உருவாகியிருக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையை மக்களின் நலனை பெரிதளவு பாதிப்பிற்கு உள்ளாக்காமல் தடுத்திடவும், முன்னேறவும் முதலாளித்துவ முரண்பாடுகளை பயன்படுத்திடவும் முடியும். இயக்கஇயல் பொருள்முதல்வாத அடிப்படையில் இப்பிரச்சினைகளை அணுகும் பொழுதுதான் முரண்பாடுகளை மக்களின் நலனிற்கு பயன்படுத்திட வழிவகுக்கும். இந்த விவாதங்கள் எல்லா அம்சங்கள் மீதும் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தும் பணி மத்தியக்குழுவிடம் விடப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மார்க்சிஸ்ட்டுகளின் கடமையை சுருக்கமாக கூறுவதென்றால் மக்களிடையே…

  1. தேச ஒற்றுமை, அரசியலில் மதச்சார்பின்மை.
  2. நிலச்சீர்திருத்தம்
  3. தேசத்தின் சுதந்திரமான பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பொருள் உற்பத்தியை மாற்றி அமைப்பது.
  4. மாநில சுயாட்சியுடன் கூடிய ஜனநாயக அரசியல் அமைப்பு.
  5. மக்களின் நலனை மையமாக கொண்ட வளர்ச்சி.
  6. வகுப்புவாத அரசியலுக்கு எதிரான போராட்டம் மக்களை பாதிக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கெதிரான மக்களின் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்பு. இடதுசாரி இயக்கங்களை பலப்படுத்துவது.

இவற்றை யெல்லாம் செய்திட பலமான கட்சி அமைப்பு வேண்டும். மார்க்சிஸம் – லெனினிசம் என்ற சித்தாந்த அடிப்படை கொண்டதாக அமைய வேண்டும்.

கட்சி அமைப்பின் புரட்சிகர தன்மை

ஸ்தாபன நிலைமைகளை மிகவும் அக்கறையுடன் மாநாடு விவாதித்தது. பிரதிநிதிகளின் உணர்வு உண்மையிலேயே உயர்ந்து நின்றது. கோஷ்டிப் பூசலுக்கும், அதற்கு  தத்துவார்த்த போராட்ட சாயம் பூசுவதற்கும் கட்சிக்குள் இடமில்லை என்பது விவாதத்தின் போது தெளிவானது. உட்கட்சி போராட்டம் என்பது முற்றிலும், அரசியல் தரத்திலும், தத்துவார்த்த் தரத்திலும், உயர்ந்து நிற்கும், தனிநபர் விறுப்பு, வெறுப்புக்களை தாண்டி நிற்கும், நாடாளு மன்றவாத உள் நோக்கமில்லாமல் இருக்கும்; பதவி சுகம் தேடாது ஒருவரை ஒருவர் வேட்டையாட பயன்படுத்தாது. எல்லாவற்றிற்கும் மேலாக உட்கட்சி போராட்டம் என்பது கொள்கை அடிப்படையில் கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருக்கும். ஒரு பிரதிநிதி கூறியதுபோல் கோஷ்டி சண்டை போடுவதில் ஈடுபடாமல் வர்க்க சண்டை போடுவதில் கவனம் திருப்பும் வகையில் அமைந்திருக்கும். உட்கட்சி பூசலை பத்திரிக்கை களில் விவாதிக்கிற அளவிற்கு தரம் தாழ்வது மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்படை உணர்விற்கே விரோதமானது. அருவருப்பானது என்பதை இந்த மாநாடு தெளிவாக்கியது.

மாநாடு கட்சி அமைப்பை உறுதியுடன் கட்டமைக்க சில முடிவுகளை நன்கு விவாதித்து எடுத்தது

  • கட்சி மையங்களை பலப்படுத்துவது
  • வேகமாக கட்சியை விரிவுபடுத்துவது; வெகுஜன அமைப்புகளில் மக்களை திரட்டுவது.
  • தத்துவார்த்த உறுதியை மேம்பட செய்வது.
  • உறுப்பினர் சேர்ப்பு, ஆதரவாளர் குழுக்களை பராமரிப்பது.
  • நெறிப்படுத்தும் இயக்கத்தை மூச்சாக கருதுவது.
  • கிளைக் கூட்டங்களை ஒழுங்காக நடத்துவது. அங்கு அரசியல் தத்துவார்த்த விவாதங்களில் பங்கேற்பது. ஒவ்வொரு உறுப்பினர் களும் வெகுஜன அமைப்புகளின் மூலம் செயல்படுவது.
  • நமது வெகுஜன அமைப்புகளில் சேருவோருக்கு ஸ்தாபன உணர்வும், அரசியல் விழிப்புணர்வும் உருவாக நடவடிக்கை எடுப்பது. தனது அமைப்பு என்ற உணர்வு உருவாகி ஈடுபாட்டுடன் செயல்பட தூண்டுவது.
  • கிராமப்புற தாழ்த்தப்பட்ட மக்கள், ஏழை விவசாயிகள் இவர்களை கட்சிக்குள் கொண்டுவர சிறப்பு நடவடிக்கைகளை எடுப்பது.
  • கிளை, இடைக்கமிட்டிகள், மாவட்டக்குழுக்கள் ஆகியவற்றின் கூட்டுச் செயல்பாட்டை உத்திரவாதப்படுத்துவது.
  • வெகுஜன அமைப்பு வேறு, கட்சி வேறு என்ற உணர்வுடன் வெகுஜன அமைப்பில் கட்சி உறுப்பினர் செயல்படுதலை உத்திரவாதப்படுத்த வேண்டும்.
  • பெண் அடிமைத்தனம், தீண்டாமை, ஆகியவைகளை ஒழித்துக்கட்ட, எல்லா வகையிலும் முயல்வது.
  • கிளர்ச்சிப் பிரச்சாரத்தின் தரத்தை உயர்த்துவது.

இந்த மாநாடு உருவாக்கிய உறுதியுடன் நாம் முன்னேறுவோம்.

வறுமை விதி எனும் மனிதரை சிரிப்போம்!

பிறவியில் உயர்வு தாழ்வு சொலல் மடமை

இந்த பிழை நீக்குவதே உயிருள்ளாரின் கடமை!

என்போம்!

மக்களை ஒன்று சேர்ப்போம்!

வாழ்வை உயர்த்துவோம்!

கைக்குள திறமையை காட்டுவோம்!

மார்க்சிச உணர்வெனும் கனலிடை

அயர்வினை எரிப்போம்!



%d bloggers like this: