“சந்தை சோசலிசம்” எழுப்பும் வினாக்கள்: சீனாவில் நடைமுறைப் படுத்தப்படும் சந்தை சோசலிசம் என்பது நீண்ட சோசலிச மாற்றத்தின் போது நிகழும் ஒரு இடைப்பட்ட நிலையா, அல்லது முதலாளித்துவத்திற்கான ஒரு குறுக்குப்பாதையா என்ற கேள்வி இன்று உலகமக்களிடமும், சோசலிச அனுதாபிகளிடமும் எழுந்து கொண்டு இருக்கின்றது.
1980க்கு பிறகு, டெங் ஜியாபிங் தலைமையின் கீழ், சீனா ஒருவகையான சந்தை பொருளாதரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அந்த சந்தை பொருளாதார கொள்கைதான், சீனாவை இன்றைய நிலைக்கு வளர்த்துக் கொண்டு வந்துள்ளது. அப்போது இருந்தே, முதல்பத்தியில் கேட்டக் கேள்வி மக்கள் மனதில் உதிக்க ஆரம்பித்து விட்டது. அந்த கேள்விக்கு இன்னும் திருப்திகரமான பதிலளிக்கப் படவில்லை என்பதுடன், இதற்கான சரியான விடையை பெற இன்னும் பலகாலம் பிடிக்கும் என்பதே தற்போது நிலவும் யதார்த்தம்.
முதலாளித்துவமும், சீனச் சந்தை சோசலிசமும் : இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து சோசலிசம் பலநாடுகளில் பரிசோதனை முயற்சியில் கட்டப்பட்டு, மக்களது எதிர்பார்ப்பை உயர்த்தி, பின்னர் அதன் வீச்சு குறைந்து, சோசலிச நாடுகளின் பகுதி நூற்றாண்டின் கடைசியில் உடைந்து நொருங்கி கூட போயிற்று. இருந்தாலும் மற்றொரு சோசலிச பேரெழிச்சி வருவதற்கான வாய்ப்புகளுடன்தான் உலகம் சென்று கொண்டுள்ளது. ஆனால் அப்படியொரு பேரெழிச்சி எழும்போது, அது பழைய சோசலிச கட்டுமானத்தையே மாதிரியாக கொண்டு அமையும் என்று சொல்ல முடியாது. அதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக சோசலிஸ்டுகள் ஏற்கனவே நொறுங்கிப்போன சோசலிச கட்டுமானத்தில் இருந்து பல பாடங்களை கற்றுக் கொண்டு உள்ளனர். அடுத்து இரண்டாவதாக, முதலாளித்துவமும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உள்ளது போல் இல்லாமல், தற்போது பல மாறுதலுக்கு உள்ளாகி உள்ளது.
சொல்லப் போனால், முதலாளித்துவமும் பல எழுச்சிகளை சந்தித்துதான் வளர்ந்துள்ளது. இத்தாலிய நகரங்களில் மறுமலர்ச்சியின்போது நிகழ்ந்த முதலாம் முதலாளித்துவ பேரெழிச்சி கடுமையான தோல்விக்கு உள்ளானது. ஆனால் அதை அடுத்து நிகழ்ந்த, வடக்கு மற்றும் மேற்கு அட்லாண்டிக் பகுதியிலுள்ள ஐரோப்பிய மூலைகளில் நிகழ்ந்த முதலாளித்துவ பேரெழிச்சிதான், இன்றுவரை தாக்குப் பிடித்து நின்று கொண்டிருக்கிறது. அதுபோலவே மறுபடியும் ஒரு சோசலிச பேரெழிச்சியும் மலர வாய்ப்பு இருப்பதால்தான், அது சம்பந்தமான விவாதங்கள் இன்று முக்கியத்துவம் பெறுகின்றன. இரு சம்பந்தமான விவாதங்கள் தற்போதுள்ள மாறுபட்ட குழப்பமான சமூக யதார்த்தங்களை பல கோணங்களில் கணக்கில் எடுத்துக்கொண்டு தொடர வேண்டியுள்ளது. சீனாவில் தற்போதைய ஆளும் வர்க்கம் ஒருவகையான முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை தேர்ந்தெடுத்து உள்ளது. டெங்கிற்கு பின்னர் கண்டிப்பாய் அப்படிப்பட்ட பாதைதான் செயல் படுத்தப் படுவதாய் கருதலாம். இந்த உண்மையை சீனா நேரடியாக ஒப்புக்கொள்வதில்லை. காரணம் சீனச்சமூகத்தின் வேர் புரட்சியுடன் பின்னிப் பிணைந்து இணைந்துள்ளது. புரட்சியின் இறை யாண்மையை நிராகரிப்பது என்பது, சீனாவில் தற்கொலைக்கு சமமானது. சீன புரட்சியின் போது, சீனமக்கள் தனது பண்டைய வரலாற்றை உடைத்துக் கொண்டு வெளியேறி நவீனமயப் பட்டார்கள். அப்புரட்சியின் தாக்கம், சீன சமூகத்தின் அனைத்து பரிமாணங்களிலும் ஊறிப் போயிருக்கிறது.
சீன ஆளும் வர்க்கத்தின் உண்மையான செயல்திட்டம் முதலாளித்துவ தன்மை வாய்ந்ததுதான். முதலாளித்துவ மாற்றத்திற்கான அடிப்படை கட்டமைப்பையும், நிறுவனங்களையும், குறைந்த உராய்வுடன், குறைந்த எதிர்ப்புகளுடன் நிறுவுவதற்கான குறுக்கு வழிதான், இந்த சந்தை சோசலிசம் என்ற கருத்தாக்கம். இதை அவர்கள் சீன சோசலிசம் என்று சொல்கிறார்கள். ஆனால் சீனாவில், முற்றிலும் முதலானது சமத்துவம் மட்டுமே என்ற சோசலிச மதிப்பீடு இன்னும் மங்காமல் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதன் அர்த்தத்தை நாம் சீன மரபுப்படி புரிந்து கொள்ளுதல் அவசியமாகும். மக்களுக்கு விளைவிப்பதற்கான நிலத்தை பெறுவதில், சமத்துவமும் உரிமையும் இருக்க வேண்டும என்பதே இதன் பொருள். இதை சீன ஆளும் வர்க்கமும் நன்கு உணர்ந்து வைத்துள்ளது. ஆகவேதான் முதலாளித்துவ கூறுகளை மிகவும் ஜாக்கிரத்தையாகவும், திட்டமிட்ட வேகத்தில் மெள்ள நகர்த்த, சீன ஆளும் வர்க்கம் விரும்புகிறது. எந்தவகையிலும் விவசாயிகளின், பொதுமக்களின் அதிருப்தியை சந்திக்க அது விரும்பவில்லை. சீனமக்கள் இந்த வளர்ச்சியை அனுமதிக்க மாட்டார்கள் என்பது மேலோட்டமான பார்வை என்றாலும், சீனமக்கள் இந்த வளர்ச்சியை அது போக்குக்கு அனுமதித்து விடுவார்கள் என்றும் உறுதியாக கூறமுடியாது. இந்த போக்குக்கு விடை காண வேண்டுமானால், நாம் முதலாளித்துவத்தின் பலம், போதாமை குறித்து மறுபடியும் மறுபரிசீலனை செய்வது அவசியம் ஆகும்.
முதலாளித்துவம் உழைப்பை சுரண்டி கொழுக்கிறது. இது கண்டனத்திற்கு உரியது என கண்டித்துக் கொண்டிருப்பது மட்டும் உதவாது. சுரண்டப்படும் மக்களிடம் கூட முதலாளித்துவம்தான் நிலையான ஆட்சியை கொடுக்க இயலும் என்ற பார்வை தற்போது உள்ளது. முதலாளித்துவத்தின் ஏற்புத்தன்மை மற்றும் அதன் நிலைப்புத்தன்மை எதன் மூலம் அடையப்பட்டது என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உண்மையில் முதலாளித்துவத்தின் பலம், இன்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் ஒரு சக்தியாக, முதலாளித்துவம் தொடர்ந்து இருப்பதில்தான் அடங்கியுள்ளது. முதலாளித்துவம் தனது செல்வ ஆதாரத்தை சமமாக பிரித்துக் கொடுக்காது விட்டாலும், முதலாளித்துவத்தால் தொடர்ந்து செல்வத்தை ஈட்ட முடிகிறது என்ற அம்சம்தான் அதனை தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கிறது.
அடுத்து நாம் விடை காணவேண்டிய கேள்வி எதுவென்றால், சீனாவில் ஒரு முதலாளித்துவத்தை கட்டுவதாய் இருந்தாலும், அதில் யார் அக்கறை காட்டுவார்கள்? என்பதுதான். சீனாவில் ஏராளமாய் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு சீனர்களும், உள்நாட்டு பணக்காரர்களும், நகரமயமாதல் மூலம் பயனடைந்த நகரை ஒட்டியுள்ள விவசாயிகளும், வேகமாக வளர்ந்து வரும் மத்தியதரவர்க்கத்தினரும் சேர்ந்து ஒரு முதலாளித்துவ சாத்தியத்தை சீனாவில் உருவாக்க முயலக்கூடும் என்பது வாஸ்தவம்தான். ஆனால் சீனாவில் வலுவான் ஒரு முதலாளி அமைப்பை கட்ட வேண்டுமானால், இந்த மேற்படி சக்திகள் சீனாவின் தொழிலாளிகளையும், விவசாயிகளையும் தங்கள் அணியில் சேர்க்க வேண்டும். ஆகவேதான் மேற்கத்திய நாடுகள் போல், ஒரு முதலாளித்துவ அமைப்பை சீனாவில் ஏற்படுத்துவது உடனடியாக முடியாத காரியமாய் உள்ளது.
ஐரோப்பாவில் முதலாளித்துவத்தை ஏற்படுத்தும் போது கூட, முதலாளிகள் விவசாயிகளுடன் ஒரு கூட்டமைத்துக் கொண்டு, உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிராக ஒரு முன்னணியைக் கட்டி, அதை நிலைநிறுத்தினார்கள். பின்னர் தொடர்ந்து முதலாளி களுக்கும் தொழிலாளிகளுக்கும் ஏற்பட்ட சமரசத்தின் விளைவாய், தொடர்ந்து அங்கு முதலாளித்துவம் தக்க வைத்துக் கொள்ளப்படுகிறது.
ஜனநாயகமும், ஜனநாயகப்படுத்துதலும் : முதலாளித்துவ நாடுகளில் ஜனநாயகம் பெயரளவுக்கு இருப்பினும், அந்த ஜனநாயகம் கூட முதலாளித்துவத்திற்கு எதிராய் போகாத வரைக்கும்தான், அனுமதிக்கப்படும். எப்போது ஒரு முதலாளித்துவ நாட்டின் ஜனநாயகம், அந்த நாட்டின் முதலாளித்துவததையே தூக்கி எறியும் அளவுக்கு ஜனநாயகப்படுத்தப்படுகிறதோ, அப்போதே ஜனநாயகமற்ற முதலாளித்துவம்தான் முதலாளித்துவ நாடுகளில் அமுல் படுத்தப்படும். சீனாவில் முதலாளித்துவ கூறுகளை அறிமுகப்படுத்துவது என்றாலும், அங்கு நடைமுறை படுத்தப் படும் ஜனநாயகத்தை நாம் முதலில் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
மூன்றாம் அகிலம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதுதான், சோசலிச ஜனநாயகம் என்ற பெயரில் சீனாவில் நடைமுறையில் இருக்கிறது. அது மார்க்சிய, லெனினிய மற்றும் மாவோயிச பாதையில் வளர்த்தெடுத்த ஒரு சிக்கலான ஜனநாயகம் ஆகும். அங்கு ஐரோப்பியா மாதிரி ஜனநாயகத்தை நடைமுறைபடுத்துவது என்பது இயலாத காரியமாகும். ஆகவே தனது சந்தை சோசலிசத்திற்கு தகுந்த மாதிரி ஒரு ஜனநாயகத்தை கண்டுபிடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் சீனா தற்போது உள்ளது. தற்போதும் சரி, மற்றும் எதிர் காலத்திலும் சரி, சீனா எப்படி முதலாளித்துவ அமைப்புகளுடன் இணைந்து செயலாற்ற போகிறது என்பதை பொறுத்துதான், சந்தை சோசலிசத்தின் வெற்றியும், அதன் பொருளாதார வளர்ச்சியும். பொருளாதார வாய்ப்புகளும் உள்ளன. இருந்தாலும் இப்படி முதலாளித்துவ அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றும்போது, எதிர் கொள்ள இருக்கும் அரசியல் சவால்களும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பல உண்டு. இதுதான் முதலாளித்துவ சார்பு சந்தை பொருளாதரத்தை கையில் எடுத்துக் கொண்டிருக்கும் சீனாவுக்கு, அரசியல் ரீதியாய் நாட்டை நிர்வகிக்கும் போது, ஏற்படப்போகும் பெரும் பிரச்சினையாகும்.
பலவிதமான முதலாளித்துவம் இன்று உலகம் முழுதும் பேசப்படுகிறது. ஆனால் எல்லாமே மறைக்கப்படாத அரசியல் சந்தர்ப்பவாதமே. சீன வழியிலான, சந்தை சோசலிசம் என்ற இந்த சீன சோசலிசமும், சிலரால் முதலாளித்துவம் என்று அழைக்கப் பட்டாலும், ஏனையோர் அதில் இன்னும் சோசலிச மதிப்பீடுகள் காப்பாற்றப் படுவதாக சொல்கின்றனர். எப்படி இருப்பினும், சந்தை சோசலிசம் என்ற கருதுகோள் இன்னும் தெளிவாக விளக்கப் படவில்லை என்பதுதான் உண்மை. இதையும் ஒரு அரசியல் சந்தர்ப்பவாதம் என்று நினைப்பவரும் உண்டு.
பலவகையான முதலாளித்துவம் நிலவுகிறது என்பதை முற்றிலும் மறுப்பதற்கும் இல்லை. ரைன்லேண்ட்(பிரெஞ்ச் மற்றும் ஜெர்மானியக்கூட்டு) முதலாளித்துவம் கண்டிப்பாக ஆங்கிலோ-சாக்சன் முதலாளித்துவத்தில் இருந்து பலவகையில் மாறுபட்டுதான் உள்ளது. வடஅமெரிக்க முதலாளித்துவம் பிரிட்டிஷ் முதலாளித்து வத்தில் இருந்து மாறுபட்டுதான் உள்ளது. அவைகளின் அரசியல் கலாச்சாரங்கள், நவீனத்துவத்தை அடைவதற்காக நடத்திய சமூகப் போராட்டத்தின் விளைவாய் எழுந்திருப்பதால், வெவ்வேறு நாட்டு முதலாளித்துவம் வெவ்வேறு கலாச்சார கூறுகளுடன் திகழ்கிறது.
உதாரணத்திற்கு வடஅமெரிக்க முதலாளித்துவத்திற்கு தனிச் சொத்து, சுதந்திரம் (அதாவது தனிச்சொத்தை எந்தவித தொந்தரவு இல்லாமலும் அனுபவிக்கும் சுதந்திரம்) போன்றவைகள்தான் முக்கியம். ஆனால் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு சமத்துவமான மதிப்பீடு என்பது முக்கியமான விஷயமாகும். அங்கே மதிப்பீடு களுக்கும் விடுதலைக்கும் இடையேயான முரண்பாடு, சொத்து மூலம் நடைமுறை படுத்த படும் உச்சக்கட்ட வரம்புகள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால் மேற்படி முரண்பட்ட கருத்தாக்கங் களால், இந்த முதலாளித்துவங்களுக்கு இடையே எந்த பிரச்சினையும் வருவதில்லை. ஏனெனில் அவர்களது நலன் என்று பார்த்தால், ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆகவேதான் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் மூன்றும் சேர்ந்து, பெருமளவு வித்தியாசமான அரசியல் கலாச்சாரங்களை கொண்டு திகழ்ந்தாலும், பிரதான முதலாளித் துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இவைகளை தவிர மற்ற உருவாகும் அனைத்து முதலாளித்துவமும், விளிம்புநிலை முதலாளித்துவ நாடுகள்தான். இந்த பிரதான முதலாளித்துவத்திற்கும், விளிம்புநிலை முதலாளித்துவத்திற்கும் உள்ள பிரச்சினைகள், பிரதான முதலாளித்துவ நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை விட ஆழமானது.
இது தவிர்த்து இயல்பான முதலாளித்துவத்திற்கும், ஜனரஞ்சகமான முதலாளித்துவத்திற்கும் உள்ள வேறுபாடுகள் மிகவும் பேசப்படுகிறது. “ஜனரஞ்சகமான முதலாளித்துவம்” சொத்து சமமாக பிரித்து கொடுக்கப்பட வேண்டும் என பேசாவிட்டாலும், அது பரந்துபட்ட அளவில் கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக கூறுகிறார்கள்.
முதலாளித்துவம் எப்படி மாறுவேஷம் போட்டாலும், அது சோசலிசம் போல் ஆகிவிடாது. சோசலிசம் என்பதுதான் மனித சமூகத்தின் விடுதலைக்கு உதவக்கூடியது. சொத்து குவிக்கும் தேவைக்கு உட்பட்டு போய் அன்னியமாகிப்போன ஒரு முதலாளித்துவ சமூகத்தில் இருந்து, விடுதலை தருவதுதான் சோசலிச சமூகம். சொத்து குவித்தவர்களுக்கே அனைத்தும் கிடைக்கும் என்கிற முதலாளித்துவ சமூகத்தில் எப்படி ஜனநாயகம் இருக்க முடியும்? ஆகவே சோசலிசம்தான் ஜனநாயகத்தை உறுதி செய்ய முடியும். சோசலிசத்தில் இருந்து ஜனநாயகத்தை பிரிக்கவே முடியாது.
வளர்ச்சி அடைந்த சோசலிசத்தில் அடிப்படைகள் மக்களது படைப்பு ரீதியான கற்பனாசக்தியை செழுமைப்படுத்தி, முடிவே இல்லாத இன்னும் ஆழமாக செல்லக்கூடிய மக்கள் அதிகாரத்தை செயல்படுத்த வைக்கும். அப்போதுதான் தற்போதைக்கு அனைவரும் கனவு கொண்டிருக்கும் சுமாரான சோசலிச சமூக அமைப்பைவிடவும், மார்க்ஸ் கனவு கண்டது போலவே அதிஅற்புதமான சிறந்த சோசலிச அமைப்பு ஏற்படும். ஆகவே அந்த அற்புதமான சோசலிச அமைப்பு எப்படியிருக்கும், அந்த அமைப்புக்கு பொறுத்தமான நிறுவனங்கள் எவ்வாறு அமையும் என்றெல்லாம் தற்பொழுதே விளக்குவது இயலாதது.
உண்மையிலேயே சோசலிசத்திற்கான பாதை இரண்டாம் மற்றும் மூன்றாம் அகிலத்தால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு மிகமிக நீளமானதாய் இருந்தது. சந்தை சோசலிசம் சில அடிப்படை நிபந்தனைகளை நிறைவேற்றினால், இந்த நீண்ட சோசலிச பதாகையின் ஆரம்ப கட்டமாக கூட இருக்க முடியும். தற்போதைக்கு மூன்று நிபந்தனைகளை அடிப்படையாக முன்மொழிய முடியும்.
முதலாவதாக ‘சந்தை சோசலிசம்’ என்ற சமூக செயல்பாடு நடைமுறைபடுத்தப்படும் போது, ஏதாவது வகையான கூட்டு சொத்துரிமை உருவாக்கப்பட்டு, தொடர்ந்து அது இருக்க அனுமதிக்கப்பட்டு, பலம்பெற உதவ வேண்டும். அந்த கூட்டு சொத்துரிமை, அரசுக்கு சொந்தமானதாகவோ, அல்லது மண்டலத்திற்கு சொந்தமானதாகவோ, அல்லது தொழிலாளிகள் அல்லது குடிமக்களின் கூட்டுறவாக அவர்களுக்கு சொந்தமான தாகவோ இருக்கலாம். அதே நேரத்தில் கூட்டு சொத்துரிமையின் செல்வாக்கு, தனி சொத்துரிமைக்கு இடமில்லை என்றும் மறுத்து விடக்கூடாது. எங்கெங்கு கைவினைஞர்கள், மத்திய மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், சேவை நிலையங்கள் தங்களுக்கான சொத்துகளை வைத்துக் கொள்ளலாம் என்பதையும், எங்கெங்கு பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் செயல் பாடுகளை வைத்துக் கொள்ளலாம் என்பதையும் சந்தை சோசலிசம் தெளிவாக வரையறுத்து, அதற்கும் அனுமதிக்க வேண்டும்.
அடுத்தது, சொத்துடமையாளர்களின் பொறுப்புகள் ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும். இங்கே சொத்து உடமை யாளர்கள் என்றால் அது அரசும், கூட்டுறவுகளும், மற்றும் தனிப்பட்டவர்களும் ஆவார்கள். இந்த ஒழுங்குப்படுத்துதல் எப்படி இருக்க வேண்டும் என்பது சமூகம் மாற்றமடையும் போக்கை வைத்துதான் தீர்மானிக்க முடியும். ஆனால் இந்த ஒழுங்கமைப்பு முதலாளித்துவ இயல்பின் படி சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசைக்கும், முற்போக்கான சோசலிச மதிப்பீடுகளுக்கும் இருக்கும் முரண்பாட்டை தீர்க்கும்படி இருக்க வேண்டும்.
மூன்றாம் நிபந்தனை ஜனநாயகம் சம்பந்தப்பட்டது. எப்போதுமே விடுதலை என்பது ஜனநாயகத்திடம் இருந்து பிரிக்க முடியாதது. ஜனநாயகத்தை வெறுமனே வரையறை செய்து, அதை அப்படியே சமூகத்தில் செலுத்தி விடமுடியாது. ஜனநாயகம் பேசும் முதலாளித்துவ நாடுகளில், ஜனநாயகப்படுத்துதல் நடந்திருக்கிறதா என்றால் இல்லை. மக்கள் விரும்புவது அங்கு நடக்கிறதா என்றால் இல்லை. ஈராக் மேல் போர் தொடுக்க கூடாது என்பது மக்கள் விருப்பம் என்றாலும், அமெரிக்க முதலாளிகள் அதை விரும்பவில்லை. அவர்களுக்கு ஈராக்கின் எண்ணெய்வளம் வேண்டும் என்ற காரணத்திற்காக, மிருகத்தனமான தாக்குதலை தொடுத்தார்கள். அங்கே ஜனநாயகப்படுத்துவதற்கான முறை இல்லாததினால்தான், அமெரிக்க ஜனநாயகம் கேலிக்கூத்தாக உள்ளது. ஜனநாயகப் படுத்துவதுதான் சோசலிச மதிப்பீடுகளை எல்லா நிலைகளிலும், எல்லா எல்லைகளிலும் வலிமைப்படுத்துவதற்கு உதவும்.
தற்போது கூட்டு சொத்துரிமை சீனாவில் கைவிடப்பட்டுள்ளது என்றும், தற்போது சீனா கூட்டு சொத்துரிமையையும், பொது சொத்துரிமையையும் நிராகரித்து, தனிச்சொத்துரிமையின் செல்வாக்கை ஏற்படுத்தும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும், அதை சீரமைப்பதற்கான நேரம் கடந்து விட்டது என்றும் பல விமர்சகர்கள் சொல்லதான் செய்கிறார்கள். இருந்தாலும், நிலத்தை அடைந்து விவசாயம் செய்வதில் அனைத்து மக்களுக்கும் உரிமை இருக்கிறது என்பது ஒப்புக்கொள்ளப்பட்டு, அது நிறை வேற்றப்படும் வரை, அதன் சோசலிச கட்டமைப்புக்கு ஆபத்து இல்லை என்றுதான கருத வேண்டியுள்ளது.
சீன சந்தை சோசலிசத்தில் வேளாண்மைக்கான இடம்: 2000 ஆம் ஆண்டில் 120 கோடி ஜனத்தொகையை சீனா கடந்துவிட்டது. அதில் 80 கோடி மக்கள் கிராமப்புறங்களில் வசித்தார்கள். 2020ல் சீனாவின் ஜனத்தொகை 150 கோடியை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோலவே நகரமயமாதல் மூலம் 2020ல், 72கோடி மக்கள் சீன நகர்பகுதிகளில் வசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால் இன்னும் 53 முதல் 65 சதவீத மக்கள் 2020லும் கிராமத்தில்தான் சீனாவில் வசித்து வருவார்கள். கிராமத்தில் வசிக்கும் இந்த மக்களுக்கு நிலத்தை அணுகவும், பயிர் செய்யவும் உரிமை மறுக்கப்பட்டால், முதலாளித்துவ மூன்றாம் உலக நாடுகளில் உள்ளதுபோல், நகரபுறத்தில் உள்ள சேரிகளில் வந்து அவர்கள் குடியேறுவதை தவிர வேறு வழியில்லை. இது சீனாவிற்கு உள்ள தனிப்பட்ட பிரச்சினை என்று கொள்ள முடியாது. 75 சதவீத மக்கள் வாழும் மூன்றாம் உலகத்தின் ஒட்டுமொத்த நிலைமையுமே இப்படிதான் இருக்கிறது.
சின்ன நிலபுலன்களை உள்ள சிறுவிவசாயிகளாகதான், உலகத்தில் உள்ள பாதிபேர் இருக்கிறார்கள். அதாவது உலகத்தில் 300 கோடி மக்களின் நிலைமை இதுதான். இவர்களது நிலங்கள் முழுமையான பசுமைபுரட்சியின் மூலம் பயனடையாதது. சிறு விவசாயி தனது உழைப்பு மூலம் ஒரு வருடத்திற்கு 100 முதல் 500 குவிண்டால்தான் உணவுப்பொருள் வரை விளைச்சல் செய்கிறான்.
ஆனால் முதலாளித்துவ வேளாண்மை என்பது, போட்ட முதலீட்டிற்கு எவ்வளவு இலாபம் வருகிறது என்பதை பொறுத்து நடத்தப்படுகிறது. இத்தகைய வேளாண்மை வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவின் தென்கோடி போன்ற இடங்களில் தற்போது நடந்து வருகிறது. அதிகம் போனால், உலகம் முழுதும் சேர்த்து மொத்தமே ஒருகோடி பேர்தான், இந்த முதலாளித்துவ வேளாண்மையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். கடுமையாய் இயந்திரமயப்படுத்தப் பட்டிருப் பதாலும், பெரும் பரப்பளவில் விவசாயம் நடப்பதாலும், முதலாளித்துவ வேளாண்மை மூலம், ஒரு விவசாயியின் உழைப்பில் வருடத்திற்கு 10,000 முதல் 20,000 குவிண்டால் வரை சராசரியாக உணவுப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது.
மூன்றாம் உலகத்தில் உள்ள 300 கோடி விவசாயிகள் உற்பத்தி செய்வதை, முதலாளித்துவ வேளாண்மையில் ஈடுபடும் இரண்டு கோடி விவசாயிகள் உற்பத்தி செய்து விடுவார்கள். அவர்களிடம் இருந்து உணவுப் பொருட்களை நகர நுகர்வாளர்களும் வாங்கிக் கொள்வார்கள். 300 கோடி விவசாயிகள் உற்பத்தி செய்யும் நிலத்தை, முதலாளித்துவத்தின் வேண்டுகோளை ஏற்று, 2 கோடி விவசாயிகளிடம் கொடுத்துவிட்டால், நிலைமை என்னவாகும்? என்று யோசித்துப் பார்க்க வேண்டும். 300 கோடி ஏழைகளிலும் ஏழைகளான இந்த விவசாயிகளின் நிலைமை இன்னும் படுபாதாளத்திற்கு சென்று விடும். ஒரு சில பத்தாண்டுகளில், வரலாற்றினால் இந்த ஏழை விவசாயிகள் நிரந்தரமாய் நிராகரிக்க பட்டவர்களாய் ஆகிவிடுவார்கள். நகரங்களின் தொழிற்சாலை வளர்ச்சி 7சதவீதம் என்று இருந்தாலும் கூட, இத்தனை ஏழை விவசாயிகளுக்கும் அது வேலை கொடுக்க முடியாது. மொத்தத்தில் உலக முதலாளித்துவம் பல கோடி ஏழை விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க முடியாத மலட்டுத் தன்மையுடன்தான் இருக்கிறது.
முதலாளித்துவத்திற்கு 300 கோடி மக்கள் உலகம் முழுதும் செத்தாலும் பரவாயில்லை, அதன் இலாபம் குறையக்கூடாது. ஆகவே விவசாயத்தில் நவீனத்துவம் என்ற கோஷத்துடன் காரியத்தில் இறங்கி, உலகம் முழுதும் உள்ள நிலத்தை கபளிகரம் பண்ண அது இறங்கியுள்ளது. 300 கோடி மக்கள் உலகம் முழுதும் சோற்றுக்கு வழியில்லாமல் சாகாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, இந்த முதலாளித்துவத்தை நிர்தாட்சியம் இல்லாம் ஒழிக்கலாம்..
முதலாளித்துவ ஊதுகுழல்கள் ஐரோப்பாவில் விவசாய பிரச்சினைக்கு முதலாளித்துவ விவசாயத்தில் ஈடுபட்டு தீர்வு கண்டபோது, கிராமபுறத்து ஏழைகள் நகரத்திற்கு இடம் பெயர்ந்து தொழிற்புரட்சியை ஏற்படத்தினார்கள் என்பார்கள். அப்போதைய ஐரோப்பிய தொழிற்சாலைகள் ஏராளமான தொழிலாளர்களை ஏற்றுக் கொள்ளும் அளவு இயந்திரமயப்படாமல் இருந்தது. தற்போது நிலைமை அப்படி இல்லையே? ஏற்கனவே நகரபுறத்தில் இருக்கும் தொழிலாளிகளுக்கு போதுமான வேலை கிடைக்கவில்லை.. தற்போது உலகமயமாதல் மூலம் நடந்திருக்கும் மூலதன பெருக்கம், இன்னொரு ஐரோப்பிய முதலாளித்துவ மறுமலர்ச்சியை போன்று ஒன்று மூன்றாம் உலக நாடுகளில் மறுடிபயும் நடக்க வாய்ப்பளிக்காது.
ஆகவே இதை கணக்கில் எடுத்துக் கொண்டு, 21ம் நூற்றாண்டு முழுதும் சீன சிறுவிவசாயிகளுக்கு உள்ள நிலத்தை அணுகுவதற்கு இருக்கும் உரிமை பாதுகாக்கப் பட வேண்டும். சந்தைக்கும், சிறுவிவசாயிகளின் விவசாயத்திற்கும் இடையேயுள்ள உறவு சந்தை சோசலிசத்தினால், ஒழுங்குப் படுத்தப்பட வேண்டும். அதே சமயத்தில் சிறுவிவசாயிகளும் தங்களது உற்பத்தி திறனை பெருக்க வைத்து, முதலாளித்துவம் உணவுப் பிரச்சினையை ஒரு ஆயுதமாக உருவாக்கி, சீனாவின் சோசலிச கண்ணியை அறுத்து விடாதபடி பாதுகாக்க வேண்டும்.
21ம் நூற்றாண்டின் வரலாறே எப்படி இந்த சிறுவிவசாயிகளின் பிரச்சினை தீர்க்கப்படுகிறது என்பதை பொறுத்துதான் இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு எப்படி தீர்க்கப்படுகிறது என்பதை பொறுத்துதான் எதிர்கால உலகத்தின் வரலாறு நிர்ணயிக்க படப் போகிறது.
சீனாவை பொறுத்த வரை இந்த விஷயத்தை எதிர்கொள்வதில் ஒரு சாதகமான அம்சம் உள்ளது. சீனாவுக்கு புரட்சியின் பதாகை அல்லது மரபு உள்ளது. நிலத்தின் மேல் உள்ள உரிமை, சீனாவில் கடந்து ஐம்பது ஆண்டுகளாக பாதுகாக்கப் பட்டிருக்கிறது. அது தொடர்ந்து பாதுகாக்கப்டுவதில்தான், சீனாவில் உள்ள பாதி மக்களின் வாழ்வே அடங்கியுள்ளது. அதை அடிப்படையாக அங்கிகரீப்பதில்தான், புரட்சியின் உயிர்பே சீனாவில் உள்ளது.
சூ என் லாய் சொன்ன நான்கு நவீனத்துவ அம்சங்களில் விவசாயத்தை நவீனத்துவப் படுத்துதலும் ஒன்றாகும். அதற்கு அர்த்தம், ஒரு குறிப்பிட்ட சிலரின் நன்மைக்காக சிறுவிவசாயிகள் தாங்கள் நிலத்தின் மேல் செலுத்தும் உரிமையை கைவிட்டு விட வேண்டும் என்பதல்ல. இந்த நேரத்தில் கூட ஒன்றையும் நாம் மறந்து விடக்கூடாது. இப்படி முதலாளித்துவப்படுத்தப்பட்ட வேளாண்மையும், கடைசிவரையும் பெரும் உற்பத்தியைதான் தரும் என்று சொல்ல முடியாது. அதுவும் கூட சொற்பான வளர்ச்சியை தரும் அளவுக்கு நாளாவட்டத்தில் மந்தமாக வாய்ப்பு இருக்கிறது.
முதலாளித்துவம் என்றால், செல்வத்தை குவிப்பது என்று மட்டும் அர்த்தமல்ல. சம்பாத்தியம் பண்ண முடியாதவர்களை சமூகத்தில் இருந்து விலக்குவது என்பதும் அதன் உள்அர்த்தம். மூலதனத்தின் துணை கொண்டு சொத்துகளையும் சாம்பத்தியத்தையும் ஈட்ட முடியாதவர்களை இந்த முதலாளிதுவம், தூக்கி எறிந்து விடும்.
ஆனால் சீனாவோ மேற்படி முதலாளித்துவ வேளாண்மை என்ற பாதைக்கு மாற்றுபாதை ஒன்றை ஏற்படுத்தி, அதை ஐம்பது வருடங்களாய் நடைமுறை படுத்தி உள்ளது. அதுவும் தனது மொத்த விவசாயத்தை நவீனப்படுத்திக் கொண்டே, இந்த மாற்றுப் பாதையையும் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. அந்தந்த பிரதேசங்களில் உள்ள வாழ்நிலையை கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்கு தக்கவாறு நவீனத்துவப்படுத்துதல் நடந்துள்ளது. மொத்தத்தில் சீனாவின் உணவு உற்பத்தி திருப்திகரமாகவே உள்ளது.
ஒருவருக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், விவசாய பிரச்சினைதான், நவீனமயப் படுத்தலுக்கு ஒரு பெரும் சவாலாக அமையப் போகிறது. சந்தை சோசலிசம் கடைபிடிக்கும் விவசாய அணுகுமுறை, மூன்றாம் உலகில் விவசாயத்துறையில் காணப்படும் குறைவளர்ச்சியை நிவர்த்தி செய்து, ஆரோக்கியமான வளர்ச்சியை ஏற்படுத்தும் அதே நேரத்தில், கோடிக்கணக்கான சிறுவிவசாயிகளை பட்டினி போட்டு விடும் நிலைக்கு தள்ளாத படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சீன சமூகத்தில் புரட்சியின் பங்கும், நவீனத்துவமும் : சீனப்புரட்சி பதாகை சீன சமூகத்தில், ஒரு சாதகமான விளைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது; இன்னும் எதிர்காலத்திலும் ஏற்படுத்தும். கடந்த இருபது வருடங்களில், சீனாவில் பரவலான சுமூகமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 20கோடி மக்கள் கிராமத்தில் இருந்து பெயர்ந்து நகரவாசிகளாய் மாறியுள்ளார்கள். பெரும் தொழில்நுட்பங்கள் சமூகத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. சீனப்புரட்சி இந்த வெற்றிகளுக்கு அடித்தளம் அமைக்காது விட்டிருந்தால், சீனா இப்படியொரு மாபெரும் வெற்றியை அடைந்திருந்திருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வெற்றியின் பரிணாமத்தை உண்மையான அளவில் புரிந்துகொள்ள வேண்டுமானால், சீனாவை மற்ற விளிம்புநிலை முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்டிருக்கும் சமூக முன்னேற்றத்துடன் வைத்து ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
உலகமக்கள் தொகையில் சீனர்கள் மட்டும் 22 சதவீதமானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் உலகத்திலுள்ள மொத்த விளைநிலத்தில், சீனர்கள் கைவசம் உள்ளது வெறும் 6 சதவீதம்தான். 6 சதவீத விளைநிலத்தை வைத்துக் கொண்டு, 22 சதவீத மக்களுக்கு உணவளிப்பது சாதாரண விஷயம் இல்லை. இதே அளவு மக்கள்தொகை மற்றும் விளைநிலங்களை விகிதாசாரங்களாக கொண்ட நாடுகள் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்தியா, பங்களாதேஷ், மற்றும் எகிப்து போன்ற நாடுகள், அந்த பட்டியலில் வரும். ஆனால் அந்த பட்டியலில் வரும் நாடுகளில் பஞ்சம் எப்படி தலைவிரித்தாடுகிறது என்பதை நோக்கும்போதுதான், சீனாவின் வெற்றி புரியும். இந்த வெற்றி சீன புரட்சியின் மூலமே சாத்தியமானது. உண்மையில் 1940களில் இந்தியா போன்ற நாடுகள், சீனாவை ஒப்பிடும் போது, பொருளாதாரத்தில் மேன்மை பெற்றிருந்தது புரியும்.
சீனசமூகத்தில் அத்தனை பரிணாமத்திலும், ஒரு நவீனத்துவம் ஊடுருவியிருக்கும். நவீனத்துவம் என்றால் என்ன? தொடர்ந்து வரும் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் நிராகரித்து, தாங்களே தங்கள் வரலாற்றை படைக்கும் திறன் மக்கள் பெற்றிருப்பதுதான் நவீனத்துவம். சீனா இத்தகைய நவீனத்துவத்தை அடைந்திருப்பதால்தான், இந்து இந்தியாவில் உள்ளது போலவோ, அல்லது சில முஸ்லீம் நாடகளிலும், சில சஹாரா நாடுகளில் உள்ளது போலவோ, தீவிர மதவாதம் தலைதூக்கவில்லை. சீனமக்கள் நிகழ்காலத்தில் புரிதலுடன் வாழ்கிறார்கள். அவர்களுக்கு புராணகாலத்து தொன்மை சமூகத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய எந்த அவசியமும் ஏற்படவில்லை. அடையாளப் பிரச்சினை சீனர்களுக்கு எழவே இல்லை.
புரட்சியும், நவீனத்துவமும்தான் சீனாவை விளிம்புநிலை முதலாளித்துவத்தை கடைபிடிக்கும் மற்ற மூன்றாம் நாடுகளை விட சிறப்பாக முன்னேற உதவியுள்ளது. சீன வெகுஜனங்களுக்கு எப்போதுமே, தன் மீது நம்பிக்கை உள்ளது. சரியான விஷயத்திற்கு எப்படி போராட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அதுபோல் ஒரு போராட்டத்திற்கு எவ்வளவு தூரம் பயன் இருக்கும் என்தையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியும்.
பிரான்ஸ் பல புரட்சிகளை செய்த நாடு. ஆகவே புரட்சிகரமான சீனாவை போல், அங்கும் சமத்துவம் என்பது பொது தத்துவார்த்ததில் ஒரு முக்கியமான அம்சமாகும். ஆனால் புரட்சி குறித்து எந்த அனுபவமே இல்லாத, அமெரிக்காவில் சமத்துவத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.
சீனாவிலும் சமூகப்போராட்டம் தினமும் நடக்கதான் செய்கிறது. சில நேரங்களில் அப்போராட்டங்கள் ஆக்ரோஷமாய் இருக்கும். சீனாவில் அதிகாரத்தில் உள்ளவர்கள், போராட்ட ஸ்தலத்திலேயே அதை எதிர்கொண்டு, அது பரவலாகி விடாதபடி, அங்கேயே பேசி தீர்த்து சமாளிக்க முயல்வார்கள். இந்த மாதிரி போராட்ட முறைகளை, முதலாளித்துவவாதிகள் லயித்து பாராட்டுவதில்லை. உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகம் சேவகம் செய்தால், முதலாளித்துவத்திற்கு அது விருப்பமானதாக இருக்காது. முதலாளிகள் விரும்பும் ஜனநாயகம், முதலாளித்துவத்திற்கு மட்டுமே சேவகம் செய்யும் ஒருவகையான ஜனநாயகம் ஆகும். அங்கு மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனநாயக முறையில் தீர்வு காணும் எந்த முறையும் இருக்காது.
சீனாவின் ஓப்பீட்டு கலாச்சாரம்: 1840 முதல் 1949 வரை கடுமையான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்குள்தான் சீனா இருந்தது. மேற்கத்திய மற்றும் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள், ஸ்தல நிலசுவான்தார்கள் தரகு முதலாளிகள், ஸ்தல ரௌடிகள் துணை கொண்டு, பெரும் அடக்குமுறையை மக்கள் மேல் கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள். அங்கு விடுதலைப் போர் கம்யூனிஸ்ட்களின் தலைமையில் வெற்றிகரமாக நடந்தேறியது. அந்த விடுதலைப்போரின் மூலம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவின் சுயமரியாதையை மீட்டெடுத்தது மட்டும் அல்லாது பரந்துப்பட்ட ஒற்றுமையையும் கட்டியது.
சீனாவில் ஹான் மக்கள்தான் பெருமளவில் வசிக்கிறார்கள். இது தவிர்த்து திபெத்தியர்களும், உயிகோர்களும் இருக்கிறார்கள். புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில், திபெத்திய லாமாக்களும், உயிகோரிய முல்லாக்களும் மக்களை மிருகத்தனமாய் சுரண்டிக் கொண்டிருந்தார்கள். சீனப்புரட்சிதான், இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
சீனர்கள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் ஐக்கிய அமெரிக்காவைதான் தங்கள் முதல் எதிரியாக நினைக்கிறார்கள். சீனாவில் உள்ள அனைத்து தேசிய இனமக்களும், அமெரிக்காவின் ஏகாதிபத்திய போக்குதான் சீனாவின் நலனுக்கு எதிராக இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறார்கள். ஆகவே அமெரிக்காவைதான் தங்களது முதல் எதிரியாய் மனதில் நிறுத்தி வைத்துள்ளார்கள். சீனர்கள் தங்கள் நாட்டுக்கு யாராவது தீங்கு விளைவிக்க முற்படுகிறார்கள் என்றால் பொறுத்துக் கொள்ளவே மாட்டார்கள்.
எப்போது சீனர்கள் தங்களை சக்தி வாய்ந்தவர்களாகவே நினைத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். 1919களில் அவர்கள் தங்களை ஜப்பானுடன் ஒப்பிட்டுப் பார்த்து, முன்னேற துடித்தார்கள். பிறகு புரட்சிகரமான ரஷ்யாவுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்து, ஒரு புரட்சிகர சமூக மாற்றத்தை சீன சமூகம் முழுதும் ஏற்படுத்தினார்கள். தற்போது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு பின்னர், அமெரிக்கர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்து முன்னேறத் துடிக்கிறார்கள்.
இந்த மாதிரியான பார்வையில் உள்ள அவலத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. இது அமெரிக்காவிற்கு எதிரான ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு பார்வையை ஏற்படுத்துவதற்கு பதிலாய், ஏகாதிப்பத்தியத்துடன் போட்டி போட்டுக் கொண்டு, அவர்கள் மாதிரியே வளர்வதற்கான ஒரு மாயையை ஏற்படுத்தக்கூடும். தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்க ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய பிரதான முதலாளித்துவத்திற்கு எதிராய், ஆசிய-அமெரிக்க மக்களின் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு எதிராய் இந்த பார்வை செயல்படுவதில் கொண்டு போய் விடும்.
இன்றைய சீனா: அனைத்து மகத்தான புரட்சிகளும், அப்போதைய சமூகத்தில் தேவைப்படும் மாற்றத்தை அளிப்பதற்காகவே நடக்கிறது. பிரெஞ்ச், ரஷ்ய மற்றும் சீன புரட்சிகள் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் புரட்சியின் மூலம், அதனால் செய்ய முடிந்ததற்கும் மேலும் எதிர்பார்ப்பதுதான் சிக்கலில் கொண்டு போய் விடுகிறது. இந்த அதிகப்படியான எதிர்பார்ப்புகள், புரட்சியின் பின்னடைவுக்கும் எதிர்புரட்சிக்கும் வித்திடுகிறது. எப்படி இருப்பினும், எப்போதுமே புரட்சி அனுபவங்கள், மக்களுக்கு புரட்சிகரமான பார்வையை தருகிறது.
புரட்சியின் பின்னடைவு என்பதும் ஒரு முக்கியமான விஷயம்தான். அது திரும்பவே முடியாத அளவுக்கு, ரஷ்யா என்ற தேசத்தையே மறைய வைத்து விட்டது. சீனாவும் விளிம்புநிலை முதலாளித்துவத்தை சந்தை சோசலிசம் என்ற பெயரில் கையில் எடுத்துக் கொண்டு ஆபத்தான திசைவழியில் சென்று கொண்டுதான் உள்ளது.
தற்போது சீனாவுக்குள் வளர்ந்து வரும் பூர்ஷ்வாக்கள், அதற்கு முன்னர் இருந்த சீன தரகு முதலாளிகளை விடவும், எந்த வகையிலும் சுயநலத்தில் குறைந்தவர்கள் அல்லர். கூடவே தற்போதை சீன மத்தியதர வர்க்கத்தினர் கடைபிடிக்கும் அமெரிக்கத்தனம் மக்களை அரசியலற்றவர்களாய் ஆக்க முனைகிறது.
தற்போதை சூழ்நிலை சீனாவில் தெளிவற்றுதான் உள்ளது. சோசலிசத்திற்கான போராட்டம் இன்னும் அங்கு முடியவில்லை. அதேசமயத்தில் அது தோல்வியும் அடைந்து விடவில்லை. எப்போது வரையிலும், நிலத்திற்கான உரிமைகள் மக்களுக்கு நிராகரிக்கப் பட வில்லையோ, அப்போது வரைக்கும், சீனாவில் சோசலிசத்தை வீழ்த்தவே முடியாது.
சீனாவின் ஆளும் அணியினர் மேற்படி எதிரெதிர் போராட்டத்தை, தங்களது ஆளும் அதிகாரத்தை செயல்படுத்தி, கட்டுக்குள் வைத்து கொண்டுள்ளார்கள். அங்குள்ள பூர்ஷ்வாக்களும், மத்தியவர்க்கத்தினரும், அமெரிக்கபாணி சுதந்திரம் வேண்டும் என இன்னும் போராட ஆரம்பிக்கவே இல்லை. சில தத்துவவாதிகளை தவிர, பெரும்பான்மையானவர்கள் ஆசிய மாதிரியான மையப்பட்ட ஆட்சிமுறையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். மத்தியவர்க்க மற்றும் சீன பூர்ஷ்வாக்கள், தங்கள் நுகர்வு பசிக்கு தீனி கிடைக்கும் வரை, அமைப்பு இப்படியே தொடர்வதற்கு எதிராய் செல்ல மாட்டார்கள்.
சீனாவில் பெரும்பான்மையான பொதுமக்கள் தங்கள் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறார்கள். அவர்கள் தங்களது நலனையொத்த அணியினரை ஒன்று திரட்டி, அதற்கான அமைப்புகளை நிறுவி, மாற்றுப் போக்கினை உருவாக்கி, அதற்கு தகுந்தார் போல் பணிபுரியும் ஒரு ஜனநாயகத்தை வரையறை செய்து உருவாக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். ஆகவே சந்தை சோசலிசம் உலக சோசலிச மாற்றத்திற்கான ஒரு இடைநிலையாக அமைவது, அது எந்த திசையில் கட்டப்படுகிறது என்பதை பொறுத்துதான் உள்ளது. அமெரிக்க ஏகாதிப்பத்தியமோ, பெரும் ஜாம்பவானைப் போல், உருவெடுக்க வாய்ப்புள்ள சீனாவை சின்னாபின்னமாக்கி அதை பல துண்டுகளாய் சந்தை சோசலிசத்தை பயன்படுத்தியே உடைத்தெறிய வேண்டும் என கனவு கண்டு கொண்டுள்ளது. இந்த இரண்டு வாய்ப்புகளுக்கும் நடுவே, ஒரு அனுசரிப்பான போக்கு தற்போதைய சீனாவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் வலதுசாரியான பரிணாமம் அனுமதிக்கப்படும் அதே பட்சத்தில், நாட்டின் ஒற்றுமையை கட்ட எந்தவித ஜனநாயக சலுகைகளும் தராமல், போகும் ஒரு அனுசரிப்பு போக்கை சீன ஆளும் அணியினர் கடைபிடிக்கிறார்கள். இந்த அனுசரிப்பு போக்கு, எந்தவிதமான ‘சீன முதலாளித்துவமும்’ சீனாவில் காலூன்ற அனுமதிக்காது. அதே நேரத்தில் உந்துவிக்கப்பட்ட பொருளாதார நவீனத்துவத்தை எற்படுத்தவும் முட்டுக்கட்டையாய் இருக்கலாம்.
குறிப்பு : இக்கட்டுரை சோசியல் சயின்டிஸ்டில் வெளியான சமீர்அமீன் கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது.