மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நீயும் கூடத்தான் மாதேவரா!


தமிழ் இலக்கிய உலகம் யதார்த்த வாதத்தில் தான் நடைபோட்டு வந்தது. அண்மையில் தான் அங்கும் ஒரு சுனாமி போல பலப்பல இசங்கள் ஒன்று திரண்டு வந்து ஓரடி அடித்தன. வந்த வேகத்திலேயே அவை திரும்பிப் போகவும் மீண்டும் யதார்த்த வாதம் கொடி கட்டிப் பறக்கிறது. இன்று பேசப்படுகிற பல நாவல்களும் யதார்த்த வாதப் பாற்கடலில் பிறந்தவையே.

அப்படியொரு நாவல் ச. பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி. தமிழகத்தின் கர்நாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் என்கிற பழங்குடி மக்களைப் பற்றியது இந்த நாவல். அவர்களது சிற்றூரின் பெயர் தொட்டி. அந்த மக்களின் வாழ்வை ஒரு விரிந்த திரையில் அப்படியே வரைந்து காட்டுகிறார் படைப்பாளி. என்னைப் போன்ற நகர்ப்புற வாசிக்கு அந்தச் சித்திரத்தைக் காணக் காண மலைப்பாக உள்ளது. நாம் வாழுகிற இதே காலத்தில் இப்படியும் ஒரு மக்கள் கூட்டம் இதே தமிழகத்தில் வாழ்கிறதா? இத்தகைய அடித்தட்டு மக்களை ஒருபடியேனும் உயர்த்திடாத பொது வாழ்வு இருந்தாலென்ன ஒழிந்தாலென்ன என்று பட்டு விட்டது.

அந்த வருஷ அறுவடைக்குப் பின் ராகி தானியக் கதிர்களைக் குத்தாரி அமைத்துப் பாதுகாத்திருந்தன சிவண்ணா. இரவில் சற்றே கண்ணயர்ந்தாலும் யானைகள் வந்து தின்றுவிட்டுப் போய் விடும். இரவு முழுக்க கொட்டக் கொட்ட விழித்திருக்க வேண்டும். குளிரின் நடுக்கத்தில், குடிசையின் நடு மையத்தில் எரியும் நெருப்பின் கதகதப்பில் சற்று நேரம் தன்னை மறந்து உறங்கிப் போனான். அந்த நேரம் பார்த்து வந்து விட்டன மூன்று யானைகள்.

பதறிப்போன சிவண்ணா தன் மனைவியை மிதித்து எழுப்பி வெடி போடச் சொன்னான். தகரத்தில் மூங்கிலை அடித்து பெரும் சப்தம் எழுப்பினான். தொட்டியில் அவரவர் குடிசைகளிலிருந்து வந்தவர்கள் தகரங்களை எடுத்துத் தட்டத் துவங்கினார்கள். யானைகள் சற்றே பின் வாங்கின. சிலர் பட்டாசுகளை கொளுத்தி வீச அதிலிருந்து வந்த சப்தத்தை விட, கந்தக வாசனையை முகர்ந்து மிரண்டு விட்ட யானைகள் காட்டுக்குள் புகுந்து மறைந்தன.

கொத்தல்லி கிழவன் சிவண்ணாவிடம் குத்தாரியை விட்டு விட்டு வீட்டிற்குள் விழுந்து கிடந்தியே! அதிகமாக கஞ்சா அடித்து விட்டாயாடா? என்றான். சிவண்ணா அமைதியாக இருந்தான். கொத்தல்லி அவன் அருகில் வந்து கொஞ்சம் கஞ்சா இருந்தால் கொடுடா என்றான்.

இதுதான் நாவலின் துவக்கம். இதுவரை நாம் கேட்டதாக, கண்டிராத ஒரு வாழ்வின் காட்சிகள் நமக்கு மச மசவென்று தெரியத் துவங்குகின்றன. உள்ளே நுழைய நுழைய அவை துவக்கமாகத் தெரிகின்றன. மனித குலம் இந்தக் கட்டத்தைத் தாண்டித்தான் வந்திருக்கிறது. நமது மூதாதையர் இப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள். தமிழர்களின் தற்காலத்திய வாழ்வு எவ்வளவோ மாறிப் போயிருந்தாலும் பழைய வாழ்வின் ஒரு துண்டு சிதறிப் போய் எங்கேயோ விழுந்து அப்படியே மாசு மருவில்லாமல் கிடக்கிறது. மியூசியத்தில் இருந்திருக்க வேண்டிய அந்தப் பழமையின் சின்னம் இன்னும் நிஜமாக இருப்பது தான் அதிசயம். பழைய மொழியில் சொன்னால் செத்த காலேஜாக இருந்திருக்க வேண்டியது இன்னும் உயிர்க் காலேஜாக இருப்பது தான் விந்தை!

இதிலே சோகம் என்னவென்றால் அந்த மக்களை அப்படியே இயற்கையோடு இயற்கையாகவும் இருக்கவிடாமல், சம வெளிச் சமுதாயத்தின் நாகரீகத்தையும் தராமல் இரண்டுங் கெட்டானாக ஆக்கி விட்டார்கள். இவர்கள் வசிக்கும் பக்கம் முன்பெல்லாம் யானைகள் வருவதில்லை. கொஞ்ச காலமாகத்தான் வருகிறது. இதற்கு என்ன காரணம்? கொத்தல்லி கிழவன் சொன்னான் அதோட பசிக்கு ஆகாரமில்லை. மூங்கில் கூப்பு போட்டு வெட்டி வளி வளியா கீழ்நாட்டுக்குப் போறது வந்திருக்காது. அது சத்தியவாக்கு உள்ளதாச்சே, இது தான் பிரச்சனை. இயற்கையை மனிதன் சீண்டுகிறான். அதன் பக்க விளைவு பற்றிக் கவலைப்படாமல் சீண்டுகிறான். அது யானைகளை மட்டுமல்ல சக மனிதர்களையும் பாதிக்கிறது என்பது பற்றி கவலைப்படாமல் சீண்டுகிறான். பணத்துக்காக எதையும் செய்யலாம் என்கிற முதலாளித்துவ லாப வெறி அந்தப் பழங்குடி மக்களை விதவிதமாகத் தாக்குகிறது.

காசுக்காகக் காட்டை அழிக்கிற அடாவடியாட்கள் அந்தக் காட்டின் குழந்தைகளுக்கு அது சொந்தமில்லை என்று சொன்னதுதான் அவர்களது சோகங்களுக்கு எல்லாம் மூல காரணமாகிப் போனது. வன அதிகாரிகள் என்கிற புது வகை மனிதர்கள் வனத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே யமகிங்கரர்களாக விசுவரூபம் எடுத்து நின்றார்கள். அந்நியப்படுதல் என்கிற முதலாளித்துவத்தின் விசித்திர விதி வனத்திற்குள்ளும் புகுந்தது, அதன் குழந்தைகளை இதனிடமிருந்து அநியாயமாய்ப் பிரித்தது. யானையை அவர்கள் வாக்குத் தவறாத தெய்வமாகக் கருதினார்கள். தந்தத்திற்காக யானையைக் கொல்வது கண்டு அவர்கள் துடித்தார்கள். தந்தத்தைக் கொண்டு போய் என்ன செய்வார்கள்? என்று ஒருவன் அப்பாவியாயக் கேட்க அதில் பொம்மை யானை செய்வார்கள் என்று மற்றொருவன் கனிவாய்ப் பதில் சொல்லும் போது மெய்யான சூழலியவாதிகள் இந்தப் பழங்குடி மக்களே தவிர நகரவாசிகள் அல்ல என்பது தெளிவாகிறது.

அகல பாதாளத்தில் கயிறு கட்டி இறங்கி அந்த மக்கள் தேன் எடுக்கிற காட்சியை பிரமாதமாக வருணித்திருக்கிறார் படைப்பாளி. மார பிறப்புத்தான். சிவண்ணா தேன் அடையை அடுத்த வருடத்திற்காகப் பாதி வைத்து, பாதி பிய்த்துக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த தகர டின்னில் வைத்தான் என்று வருகிறது. சுயநலத்திற்காக பேனும் இயற்கையை மிகவும் சீண்டிவிடக் கூடாது என்கிற ஞானம் அந்த மக்களுக்கு இயல்பாகவே வந்திருக்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து வந்த தேனடையை அதிகாரிகளுக்கு என்று வனக் காவலர்கள் பறித்துக் கொள்கிறார்கள். மலைத்தேன் இருந்த தகர டின் வனக் காவலர்களின் கைகளில் போய்க் கொண்டிருக்கும் போது தங்களின் குழந்தைகள் முகங்கள் நினைவுக்கு வந்தன அவர்களுக்கு!
எதையும் பகிர்ந்துண்ணும் பழக்கம் உள்ளவர்களே அவர்கள். இப்படி அதிகாரிகள் அடித்துப் பிடித்துத் தின்னும் கொடுமை புதிது அவர்களுக்கு மானை வேட்டையாடி விருந்து படைப்பார்கள். முதல் கறிக்கூறு கிராமத்தின் விதவைப் பெண்ணுக்கு என ஆரம்பித்து வேட்டைக்கு உதவிய நாய்களுக்குக் கூட பங்கு தரப்படும்! வனத்திலே தெரியும் மான்கள் எப்படி புலிகளுக்கு இயல்பான உணவோ அப்படித்தான் இந்த மக்களுக்கும். புலிகளுக்கு மான் கறி கூடாது என்று சட்டம் போட வக்கில்லாத ஆட்சியாளர்கள் இந்த மக்களுக்கு மட்டும் அப்படிச் சட்டம் போட்டு உதைத்தார்கள். தாக்க வரும் கரடியைக் கொன்றால் கூட வனச் சட்டம் பாய்ந்தது. கரடி தாக்க வரும் போதும் வனக் காவலர்கள் வரட்டும் எனக் காத்திருக்க வேண்டும் என்கிற விசித்திர சட்ட விதி கேட்டு அவர்கள் குழம்பிப் போனார்கள். அவர்களை இதுவரை வாழவைத்த காடு இப்போது அவர்களை மிரட்டியது. பெற்ற தாயே பெரும் வில்லியான கதையானது.

இந்தக் கட்டத்தில் வீரப்பன் விவகாரம் வந்து சேருகிறது. அவர்கள் வாழ்ந்த அந்த வனப்பகுதியில் தான் அவனது நடமாட்டம் இருக்கிறது எனச் சொல்லி இவர்களை பல விதங்களிலும் மிரட்டினார்கள் தமிழக போலீசாரும், கர்நாடகப் போலீசாரும். சுள்ளி பொறுக்கக் கூட வனத்திற்குள் போக அச்சமாக இருந்தது. சந்தனக் கடத்தல் வீரப்பனை ஏதோ பழங்குடி மக்களைக் காக்கப் புறப்பட்ட சாகச வீரன் போல சிலர் சித்தரிக்கிறார்கள். இந்த நாவலின் ஆசிரியர் அந்தத் தவறைச் செய்யவில்லை. காரணம், அந்த மக்கள் அவனை அப்படிப் பார்க்கவில்லை. வீரப்பனின் நடமாட்டம் தங்களுக்குப் பெரும் கேட்டைக் கொண்டுவரப் போகிறது என்றே அவர்களது உள்ளுணர்வு சொன்னது. புட்டன் என்கிற சோளகன் சந்தன மரக் கடத்தலுக்கு உதவுகிறான். அப்போது தான் சிவண்ணா அந்த வார்த்தைகளைச் சொல்லுகிறான் நாம் பார்க்கார சந்தன மரமா? ஆணா, அதை வச்சி ஒரு சந்தன பொட்டாவது வைக்கிற பழக்கம் நம்மகிட்டேயிருக்கா? இந்த வேலை நமக்கு ஆகாது, விட்டுவிடு பொட்டுக்காகக் கூடச் சந்தன மரம் வெட்டாத அப்பாவி அவர்கள்.

இத்தகைய சிவண்ணாதான் கடைசியில் வீரப்பனுடன் சேர்ந்து சுத்த வேண்டியதாகிறது. இதற்கெல்லாம் காரணம் வீரப்பனை வேட்டையாடுகிறோம் என்று இந்த அப்பாவி சோளகர்களைப் போலிகள் வேட்டையாடிய கொடூரம். போலீசாரே இவர்களை வீரப்பன் பக்கம் தள்ளி விட்டார்கள்.

வீரப்பனை எப்போதோ பிடித்திருக்கலாம் ஆட்சியாளர்கள். செய்திருக்க வேண்டியது ஒரு எளிமையான வேலை. அதாவது மலை வாழ் மக்களை வீரப்பனுக்கு எதிராகத் திருப்பியிருக்க வேண்டும். அந்த மக்களை ஆட்சியாளர்கள் தங்கள் பக்கம் ஈர்த்திருந்தால் வீரப்பன் தனிமைப்பட்டு போயிருப்பான், தானாகச் சிக்கியிருப்பான். நடந்ததோ நேர்மாறான வேலை. அப்பாவி மலைவாழ் மக்களைப் போலீசார் கொடுமைப்படுத்தினார்கள். அந்த வனவாசிகளைக் காட்டு மிராண்டித்தனமாக நடத்தினால் வீரப்பன் பிடிபட்டுப் போவான் என்று தப்பு கணக்குப் போட்டார்கள். இது மோசமான எதிர் விளைவைத் தந்தது. இவ்வளவு நாளாக வீரப்பன் தப்பி வந்ததற்கு முழு முதற் காரணம் ஆட்சியாளர்களின் இந்தத் தவறான போலீ கொள்கையே. இந்த நாவலைப் படிக்கிற எவரும் இந்த உண்மையை உணருவார்கள்.

வீரப்பனைச் சுட்டுக் கொன்றதற்காக பெரும் விழா எடுத்து, பல கோடி ரூபாய் பரிசும், பதவி உயர்வும் கொடுத்தார் முதல்வர் ஜெயலலிதா. அவர் அவசியம் இந்த நாவலைப் படிக்க வேண்டும். படிப்பாரேயானால், தூங்கிக் கிடக்கும் அவரது மனசாட்சிக்குச் சுதந்திரம் கொடுப்பாரேயானால் அவர் நிச்சயம் வெட்கித் தலைகுனிவார். நாம் அனைவரையும் சொல்லவில்லை. இந்த நாவலில் கூட சுபாஷ் என்கிற ஒரு போலீகாரர் வருகிறார். ஜீப் கிளம்பும் போது சித்தி, சுபாஷ் போலீசைப் பார்த்து கொட்டையில் ஒரு குறைந்தபட்ச மனிதனாக இருந்தததற்காகக் கையை எடுத்து கும்பிட்டாள் என்று வருகிறது. ஆம்! குறைந்தபட்ச மனிதன்! அவனே அபூர்வமாக இருந்தான். ஆனால் மற்ற போலீசார் காமக் கொடூரன்கள். அவர்களுக்குத் தர வேண்டியது பரிசு அல்ல, கடுமையான தண்டனை.

நாவலின் கடைசிப் பகுதியை படிக்கும் போது என் மனது நடுங்கியது. டில்லியிலிருந்து திரும்பும் போது ரயிலில் படித்து முடித்தேன். அது மதிய உணவு வேளை. தோழர்கள் சாப்பிட ஆரம்பித்தார்கள். என்னால் சாப்பிட முடியவில்லை. இழவு வீட்டில் எப்படி பசியில்லாமல் போகுமோ அப்படி இருந்தது. இந்த நாவல் ஒரு பதிவுதானே தவிர, இலக்கியமாகாது என்று யாரோ ஒருவர் பேசியதாக செய்தி படித்தேன். அழகியல் போதாது என்பதாக சில விமர்சகர்கள் கூறுகிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன். விமர்சகர்கள் எனப்பட்டவர்கள் விஞ்ஞானி களாகிப் போனார்கள், உணர்ச்சியுள்ள இலக்கியவாதிகளாக இல்லை. அவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஈர நெஞ்சுள்ள எந்தவொரு வாசகரையும் இந்தப் படைப்பு பதை பதைக்க வைக்கும். அப்படியென்றால் அதற்கென அழகியல் இருக்கிறது என்பதே பொருளாகும். அழகியல் என்பது இருக்கிறேன்… இருக்கிறேன்… என்று துருத்திக் கொண்டிருக்கிற விஷயமல்ல. அது தண்ணீருக்குள் பாய்ந்திருக்கும் மின்சாரம் போன்றது. தொட்டால் ஷாக் அடிக்க வேண்டும். அந்த குணம் இந்த நாவலுக்கு இருக்கிறது. படைப்பாளி பால முருகன் பி.யூ.சி.எல். அமைப்பில் செயல்படுபவர் என்று பதிப்புரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகையவருக்கு என்று தனி அரசியல் கொள்கை இருக்கவே செய்யும். சிறப்பு என்னவென்றால் அது எங்கேயும் இந்த நாவலில் வெளிப்படவில்லை. தீண்டாத வசந்தம் நாவலிலிருந்து இது இந்த விஷயத்தில் தெளிவாக மாறுபட்டிருக்கிறது.

போலீசாரின் கைகளில் சிக்கி சோளக ஆண்களும், பெண்களும் படும் அவதைகளைச் சித்தரித்தவர், அவர்களுக்காகக் குரல் கொடுத்த வெளியார் எவரையும் படைப்பில் கொண்டுவரவில்லை. அப்படி எவரும் உதவவில்லையோ என்கிற தவிப்பு ஏற்படவே செய்கிறது. அந்தப் பகுதியை படைபபில் கொண்டு வந்தால் தனது அரசியல் சாய்மானம் தவிர்க்க முடியாதபடி வெளிப்பட்டுப் போகும் என்று படைப்பாளி கருதினாரோ என்னவோ.

எப்படியாயினும், இப்போதே நாவலில் ஒரு முழுமை இருக்கிறது. உண்மை எனும் முழுமைக்கு பல பகுதிகள் உண்டு. ஒரு பகுதியை மட்டும் படைப்பில் கையாள எழுத்தாளனுக்கு உரிமை உண்டு. அந்தப் பகுதி முழுமையாகத் தரப்பட்டுள்ளதா என்று நோக்கினால் ஆம்… ஆம்… என்றே அறிவிக்க வேண்டியுள்ளது.

வனம் – வீரப்பன் – போலீசார் என்கிற மூன்று முனைகளில் சோளகர்கள் இழுபடுவதை மட்டும் நாவல் காட்டவில்லை. அந்த மக்களின் அகவாழ்வையும், பிற வாழ்வின் அத்து மீறல்களைத் தாண்டி, அதன் எளிமை காக்கப்படுவதையும் படைப்பு இயல்பாய் சொல்லிக் காட்டுகிறது. கணவனை இழந்த கெம்பம்மா எனக்கு என் கொழுந்தன் கரியன் வேண்டும். என் குழந்தையையும் அவன் பரிவோடு நடத்துவான். என் குடும்பத்திலேயே மாப்பிள்ளையை வைத்துக் கொண்டு நான் வேறு எங்கும் தேட முடியாது என்கிறான். நகர்ப்புறத்து உயர்சாதிப் பெண்மணி ஒருத்தி இப்படிப் பேசுவாள் என்று கனவிலும் கருத முடியாது. உள்ளும் புறமும் வெவ்வேறாய் இல்லாத வெள்ளை மனம் கொண்ட வனவாசிப் பெண்களுக்கே அந்தத் தைரியம் உண்டு.

ஜுருண்டைக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த சித்தியை மாதேவரன் மலை ஒர்க்ஷாப்பில் போலீசார் சூறையாடினார்கள். மாதேவரன் சோளகர்களுக்கு மிகப் பெரிய தெய்வம். அதைக் கும்பிடப் போகும் போது புருஷன் பொண்டாட்டி கூட ஒருவரையொருவர் தொட்டுக் கொள்ள மாட்டார்கள். அந்த தெய்வ சந்நிதிக்குப் பக்கத்திலே தான் சித்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இது சகலருக்கும் தெரியும். ஜூருண்டைக்கும், அவன் தகப்பனுக்கும் தெரியும். சித்தியின் தாய் மாதி நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்க வேண்டுமென்று கோரியபோது, சிறிதும் தயக்கமின்றி அதை நடத்தி வைக்கிறார் ஜுருண்டையின் தந்தை. நாய் நக்கி விட்டது என்கிற காரணத்துக்காக காலை யாரும் வெட்டிக் கொள்வதில்லை. அப்படித்தான் அந்த மனிதர் பார்த்தார்.

சித்திக்குத்தான் அதை நினைக்கவும் வேதனையாக இருந்தது. அவருக்கு கணவர் தொடும்போதெல்லாம் போலீசார் செய்த கொடுமை நினைவுக்கு வருகிறது. தாயிடம் சொர்லி அழுகிறாள். மகளே! உன் வாழ்க்கை உன் கையில். மண் சட்டியைப் பாதுகாப்பதும், போட்டு உடைப்பதும் உன் விதி என்கிறாள் அவள். சில நாட்களுக்குப் பின் மெல்ல ஜுருண்டையுடன் படுத்துக் கொள்ள சம்மதிக்கிறாள் சித்தி. இது தான் நிஜமான வாழ்க்கை, அரிதாரம் பூசாத மெய்யான முகம்.
சித்தி மட்டுமல்ல அவனது தயாகிய மாதியும் போலீசாரால் கெடுக்கப்பட்டாள். மகளைச் சிலபேர் இழுத்துக் கொண்டு போக, இவளைத் தரையில் கிடத்தி அவள் மீது ஒருவன் விழுந்தான். அதன் பின் இரண்டு பேர் வந்து விழுந்து எழுந்து போய் விட்டார்கள். படைப்பாளி எழுதுகிறார்.

அவளுக்கு மேலே திறந்திருந்த வானத்தில் மின்னிய அவளுக்குப் பழக்கப்பட்ட ஒற்றை நட்சித்திரத்திடம் நான் பிணம் என்று சொல்லிக் கொண்டாள். அதன் பின் நீயும் கூடத்தான் மாதேவரா என்றாள்.

மகா தெய்வமாகிய மாதேவரனும் சோளகர்களைப் பொறுத்தவரை பிணமாகிப் போனான். அடுக்கடுக்கான நாத்திகப் பிரச்சாரத்தை விட இந்தச் சில வரிகள் அர்த்தம் பொதிந்தவையாகிவிட்டன. கைவிடுவதற்கே கடவுள் இருக்கிறார், காப்பாற்ற சக மனிதர்கள் இருக்கிறார்கள். இந்தக் கருக்கோள் உண்மையாகும் போதே கடவுள் காணமல் போவர்.

இந்த மக்கள் சோளகர் மொழி பேசுவார்கள் என்கிறார் படைப்பாளி. தனது என்னுரையில், எனினும், உரையாடலில் அதன் வாடை சரியாக அடிக்காமல் போனது இந்த படைப்பின் பலமா பலவீனமா என்று கணிக்க முடியவில்லை. உரையாடல் சோளகர் மொழியில் இருந்தால் அது தெரியாத வாசகர்களை அந்த மக்கள் விடும் பெரு மூச்சின் வெப்பத்தை சரியாக உணர முடியாமல் போகலாம். அந்த ஆபத்து இருக்கவே செய்கிறது.

சோளகர்கள் பற்றிய இந்த நாவல் சோளர்களுக்காக எழுதப்பட்டது அல்ல. அவர்கள் அவர்களைப் பற்றி நன்றாகவே அறிவார்கள். அவர்களை அறியாத நாமே பாவிகள். நமக்காக எழுதப்பட்ட இந்த நாவலை நம்மில் ஒவ்வொருவரும் படித்தால் மலைவாழ் மக்களுக்காக ஏதேனும் செய்தாக வேண்டும் என்கிற துடிப்பு பிறக்கும். ஒரு அருமையான படைப்பிலக்கியம் செய்யக் கூடியது இதைவிட வேறு என்னவாக இருக்க முடியும்.

வனம் வெளியீடு

17, பாவடித் தெரு,
பவானி – 638 301
தொலைபேசி – 09443213501

விலை ரூ. 100/-



%d bloggers like this: