மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பாசிசத்தை வீழ்த்திய 60 ஆம் ஆண்டு சோசலிசம்-செஞ்சேனை-சோவியத் மக்கள்


வரலாற்றில் சில அத்தியாயங்கள் மறக்கக் கூடாதவை. மனிதகுலம் புத்தெழுச்சி பெற்றிடவும், சரியான படிப்பினைகளை தனது அறிவுச் சொத்தாக்கி, பாதுகாக்கவும் வரலாற்றில் சில நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும்.

அத்தகு மகத்தானதோர் வரலாற்று நிகழ்வு பாசிசத்தின் வீழ்ச்சி. அந்த வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்த இரண்டாம் உலகப் போர். இந்தச் சாதனையை நிகழ்த்தி மனித இனத்தையே காப்பாற்றி வீரகாவியம் நிகழ்த்தியது, சோவியத் யூனியன். அந்நாட்டு ராணுவமான செஞ்சேனைக்கு உலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போர் நிகழ்த்திய நாசமும், அழிவும் சொல்லில் அடங்காது. போரில் லட்சக்கணக்கானோர் மடிந்து போயினர். மனிதன் அதுகாறும் சாதித்த அனைத்தின் மீதும் உலகந்தழுவிய அளவில் அழிவு தாண்டவமாடியது. உயிரோடு அன்று வாழ்ந்து வந்த கோடிக்கணக்கான மக்களும் சொல்லொணத் துன்ப துயரங்களுக்கு ஆளாயினர்.

போர் எவ்வளவு கொடூரமானது என்பதும், அதை எந்த வகையிலாவது தவிர்க்க வேண்டும் என்பதும் இரண்டாம் உலகப் போரின் பேரழிவு நமக்கு எடுத்துரைக்கும் எச்சரிக்கை.

எண்ணற்ற துயரங்களுக்கு இடையில் அன்றைய சோவியத் மக்களும், செஞ்சேனையும், பாசிசத்தை வீழ்ச்சி அடையச் செய்தனர். இது ஒருநாடு பெற்ற வெற்றி என்பதாகக் கருதிடக் கூடாது. சோசலிசம் எனும் தத்துவம் உலக மக்களை அடிமைத்தனம், சுரண்டல் ஆகியவற்றிலிருந்து மீட்டு உண்மையான சுதந்திரத்தை கொண்டு வர எத்தகு தியாகத்தையும் செய்திடவல்ல மேன்மையான தத்துவம் என்பதையே இந்த வெற்றி எடுத்துக்காட்டுகிறது.

ஏனெனில், பாசிசம் மனித இனத்தின் சுதந்திர வேட்கையை முற்றாக ஒழிக்க முயன்றது. ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தி, நாடுகளையும் மக்களையும் தனது அடக்குமுறை ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த உலகமே அழிந்து போனாலும் அழியட்டும் என்ற வெறியோடு பாசிசவாதிகள் செயல்பட்டனர்.

பாசிச வீழ்ச்சிக்குப் பின், மகத்தான சரித்திர மாற்றங்கள் நிகழ்ந்தன. இவையும் இந்த நிகழ்வின் மகத்துவம். காலனி ஆதிக்கம் உடைக்கப்பட்டு அடிமை நாடுகள் விடுதலை பெற்றன. பல ஐரோப்பிய நாடுகள் சுதந்திரக்காற்றை சுவாசித்தன. சீனா, வியட்நாம், வடகொரியா ஆகியன ஆக்கிரமிப்பு சக்திகளிடமிருந்து விடுதலையாகி சோசலிச பாதையை தேர்ந்தெடுத்தன. இந்தியா உள்பட பல ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு விடுதலை கிட்டியது.
1945, மே 9ஆம் நாள்தான் இந்த வெற்றி முழுமையடைந்த தினம். சோவியத் செஞ்சேனை ஜெர்மனியில் நுழைந்து, ஜெர்மானிய பாராளுமன்றமான ரீச்ஸ்டாக் மீது வெற்றிக் கொடியை ஏற்றியது.

இந்த மகத்தான தருணத்தை, ஜெர்மனியில் அன்று வாழ்ந்த எழுத்தாளர் தாமஸ் மான் எழுதினார்.
இந்த மணித்துளிகள் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, ஜெர்மானியர்களுக்கே மெய்சிலிர்க்க வைக்கும் நேரம் ஆகும். கொடூர மிருகமான (பாசிச) டிராகன் வீழ்ந்தது

தேசிய சோசலிசம் என்ற பெயரில் அனைவரையும் நடுங்கிட ஒடுங்கிடச் செய்த பூதம், கடைசியாக ஒழிந்தது. இட்லர் நாடு என்ற இழிச் சின்னத்தை எறிந்து விட்டு, ஜெர்மனி அதிலிருந்து மீண்டது.

முதல் உலகப் போர் முடிந்த பிறகு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் போரில் தோல்வியடைந்த ஜெர்மனியை வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை எனும் ஒப்பந்தத்திற்கு இணங்கச் செய்தனர். இது ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக கடும் நிபந்தனைகளை விதித்து ஜெர்மானிய மக்களை வாட்டிடும் வகையில் அமைந்தது. கிட்டத்தட்ட 300 கோடி டாலர் அளவிற்கு நஷ்ட ஈடாக ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இந்த வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை ஜெர்மானிய மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இட்லர் தனது இனவெறி கொள்கைகளை, சோசலிச முலாம் பூசி, மக்கள் ஆதரவைப் பெற்றிட வாய்ப்பை ஏற்படுத்தியது.

இதே போன்று இத்தாலியுடன் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தங்களும் இத்தாலிய மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி முசோலினி தலைமையில் பாசிசம் இத்தாலியில் வேரூன்ற வாய்ப்பு ஏற்பட்டது. முசோலினிக்கும், இட்லருக்கம் பெரும் தொழிலதிபர்கள், நிலச் சுவான்தார்கள் பக்கபலமாக இருந்தனர். ஏனெனில் இவர்கள் முதலாளித்துவ வளர்ச்சிக்கும் உலகச் சந்தையையும் கைப்பற்றிட ஏணியாக பயன்படக்கூடிய  மக்கள் தலைவர்கள் என்று இத்தாலி, ஜெர்மனி நாட்டு முதலாளித்துவம் கருதியது.

இந்த அச்சு நாடுகளில் ஒன்றான ஜப்பான், அமெரிக்காவின் அராஜக நடவடிக்கையான அணு ஆயுதத் தாக்குதலை எதிர் கொண்டது. ஜெர்மனி, இத்தாலி போன்று அதிகாரப்பூவர்மாக பாசிசத்தை ஜப்பான் ஏற்கவில்லை என்றாலும், அதன் அன்றைய அரசாங்கத்தில் இருந்த ராணுவ மேலாதிக்கம், 1936 – 37ஆம் ஆண்டுகளில் ஜெர்மனி இத்தாலி, ஜப்பான் ஏற்றுக் கொண்ட உடன்படிக்கைகள் மூலம் இவை மூன்றும் சேர்ந்த அச்சு நாடுகள் என்ற கூட்டணியை உருவாக்கியது.

முதல் உலகப் போருக்குப் பின்

முதலாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஏகாதிபத்தியவாதிகள் ஒருபுறமும், ஜெர்மன் முதலாளித்துவம் மறுபுறமும் என பிரிந்து நின்றன.

முதல் உலகப் போரில் தனது காலனி நாடுகளை பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளிடம் ஜெர்மனி இழந்தது. அவற்றை மீண்டும் கைபற்றிட முனைந்தது.

ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சி

இந்த நிலையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள். இட்லர் தங்களது காலனிகளின் மீது கை வைப்பதற்கு பதிலாக சோவியத் யூனியனை கைபற்றுவதில் கவனம் செலுத்தும்படி தூண்டினர். அன்று பிரிட்டிஷ் பிரதமராக இருந்த சேம்பர்லின் உள்ளிட்ட ஏகாதிபத்திய கூட்டம் இதனைச் செய்தது.

இந்த சூழ்ச்சியின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என பலன் பெற அவர்கள் முனைந்தனர். அதாவது, ஒருபுறம் சோவியத் சோசலிசத்தை அழித்து விடலாம். மறுபுறம் தாங்கள் போருக்கான யுத்த செலவை மீண்டும் ஏற்று நஷ்டம் அடைவதைத் தவிர்க்கலாம். இட்லர் ஜெர்மனியையும், சோவியத் யூனியனையும் மோதவிட்டு, இருவரின் அழிவில் தங்களது ஏகாதிபத்திய வேட்டையை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்று அவர்கள் கணக்கிட்டனர்.

வெளியில் இட்லர் பக்கமோ, சோவியத் பக்கமோ தாங்கள் இல்லை என்றும் நடுநிலைமையே தங்கள் கொள்கை என்பது போல் காட்டிக் கொண்டனர். ஆனால் உண்மையில் திரை மறைவு ஆதரவு நல்கினர்.

ஸ்டாலின் தலைமையிலான அன்றைய சோவியத் யூனியன் பிரிட்டனையும், பிரான்சையும், பாசிசத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கு அழைத்தது. இட்லர் சோவியத் நாட்டுக்கும் கம்யூனிசத்திற்கும் எதிராகப் பேசுவது வெறும் வெற்று வேஷம் எனவும், உண்மையில் இட்லர் சோவியத் யூனியனை தாக்குவது மட்டுமல்ல, பிரிட்டன் பிரான்சையும், மற்ற மேற்கத்திய நாடுகளையும் தாக்க முனைவான் என்று சோவியத் யூனியன் எச்சரித்தது. அவர்கள் இதனை காதில் வாங்கவில்லை.
ஆனால், சோவியத் எச்சரிக்கை செய்தது போன்றுதான் பிந்தைய நிகழ்ச்சிகள் அரங்கேறின.
இட்லர் முதலில் பிரான்சையும், பிரிட்டனையும் தாக்கிவிட்டுத் தான் சோவியத் மீது தாக்குதல் தொடுத்தான்.

ஸ்டாலின் ராஜதந்திரம்

பிரிட்டன், பிரான்ஸ் மீது தாக்குதலுக்கு சற்று முன்பாக அவன் சோவியத் யூனியனோடு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டான். பரஸ்பரம் இருநாடுகளும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதில்லை என்பதே அந்த உடன்படிக்கை.

இதற்கு பின்னணியாக இட்லரின் மிகப் பெரிய திட்டம் இருந்தது. அவன் சோவியத்தினை தாக்கும் நோக்கத்தை கைவிடவில்லை. முதற்கட்டமாக பிரிட்டன் பிரான்சை பலகீனமடையச் செய்து, அந்த நாடுகளைக் கைப்பற்றி, மேலும் பலம் பெற்று பின்னர் சோவியத் யூனியனை தாக்கிடலாம் என்பதே அவனது திட்டம். ஏனெனில், சோவியத்தோடு போர் புரிந்து வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமில்லை என்று அவனுக்குத் தெரியும்.

ஸ்டாலின் இந்த திட்டத்தையும், அன்றைய நிலைமைகளையும் நன்குணர்ந்தே இட்லருடன் அந்த உடன்படிக்கையில் சோவியத்தின் ஒப்புதலை தெரிவித்தார்.
தாற்காலிகமாக சோவியத் மீது இட்லர் தாக்குதலை செய்யாமல் இருக்க இந்த உடன்படிக்கை உதவியது. இது ஏற்பட்டு ஒன்றரை ஆண்டு கழித்துதான் சோவியத் மீது இட்லர் தாக்குதல் தொடுத்தான். இந்த ஒன்றரை ஆண்டு அவகாசம் சோவியத் யூனியன் மாபெரும் யுத்தத்திற்கு தன்னைத் தயார் செய்து கொள்ள உதவியது.
இட்லர் போன்றவர்களோடு ஒரு உடன்படிக்கையை சோவியத் யூனியன் எப்படி செய்து கொள்ளலாம் என்று கேள்வி எழுப்பி, சோவியத் மீதும் ஸ்டாலின் மீதும் அன்றும், இன்றும் கூட அவதூறுகள் தொடுக்கப்பட்டன.

அதற்கு ஸ்டாலின் ஒரு அண்டை நாட்டில் இட்லர் ரிப்பன்ட்ராப் போன்ற அரக்கர்களும், மனித மாமிசம் தின்னும் கொடூரர்களும் ஆட்சி புரியலாம். ஆனால் அந்த நாட்டோடு, சமாதானத்தை விரும்பும் ஒரு நாடு அமைதியை நிலைநாட்ட ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்வது தவறில்லை என விளக்கினார். இட்லரோடுதான் ஏற்படுத்திக் கொண்டது ஒரு சமாதான உடன்படிக்கை என்றும் இதனை எந்த நாட்டோடும் செய்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இட்லரின் இனவெறி

துவக்கத்தில் ஸ்டாலின் சொன்ன கூட்டு பாதுகாப்பு உடன் படிக்கைக்கு செவி சாய்க்காத பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பெரும் சோதனைக்கு ஆளாயின.
இட்லரின் திடீர் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போர் துவங்கிய ஓராண்டில் பிரான்சும் இதர ஐரோப்பிய நாடுகளும் நாஜி படைகளிடம் தோல்வியுற்று வீழ்ந்தன. 1939ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி போலந்தை கைப்பற்றியதோடு துவங்கிய இந்தப் போர், 1945ஆம் ஆண்டு வரை நடந்தது. இவ்வாண்டுகளில் ஐரோப்பா உள்ளிட்டு வடஆப்பிரிக்க நாடுகளையும் இட்லர் வெற்றி கொண்டான்.

இந்தக் காலத்தில் இட்லர் யூத இனத்தை அழிப்பதிலும் தீவிரம் காட்டினான். யூதர்களை படுகொலை செய்யும் முகாம்களில் மனிதர்கள் வேட்டையாடப்பட்டனர். ஆஸ்ச்விட்ஸ் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாம்தான் மிகவும் பெரியது. இட்லர் படைகளும், அவனது கூட்டாளிகளான இத்தாலி, ஜப்பான் நாட்டு கொடுங்கோலர்களின் படைகளும் ஆக்கிரமித்த நாடுகளில் இருந்த யூதர்களம் வேட்டையாடப்பட்டனர்.

இந்த சித்திரவதை, படுகொலை முகாம்களில் சுமார் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். இனவெறி, மனித இனத்தை எத்தகைய கொடூரத்துக்கு ஆளாக்கிடும் என்பதற்கு வரலாற்றுச் சான்றாக இவை அமைந்துள்ளன.

1941 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இட்லர் சோவியத் யூனியன் மீது தாக்குதல் தொடுத்தான். இட்லரின் நாஜி படைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ராணுவ ரீதியான திறமை, உலக நிலைமை பற்றிய தீர்க்க தரிசனமான பார்வையும், தெளிவும், கூர்மதியோடு கூடிய ராஜதந்திர முயற்சிகள் ஆகிய அனைத்தும் தேவைப்பட்டன. இந்த திறமைகளும் சிறப்புக்களும் கொண்டவராக ஸ்டாலினும், சோவியத் தலைமையும் அன்றைக்கு விளங்கியது. அதனால்தான் அனைத்து மேற்கத்திய நாடுகளும் இட்லர் தாக்குதலில் அடிபணிய நேர்ந்தபோது, சோவியத் மட்டும் உறுதியாகப் போராடி, இட்லரின் பாசிச வெறியாட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது.

குறிப்பாக, ஸ்டாலின் மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகள் ஒரு பெரும் காவியமாக திகழ்கிறது. ஒருபுறம், நேச நாடுகள் என்று அழைக்கப்படும் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஒற்றுமையை பாதுகாத்து இட்லரை முறியடிக்க வேண்டிய கடமையையும் அவர் ஆற்றினார்.

அதே நேரத்தில், இந்த ஏகாதிபத்திய நாடுகள் பாசிச எதிர்ப்பில் காட்டிய தயக்கம், ஊசலாட்டம், சோவியத் யூனியனுக்கு எதிரான வஞ்சம், ஆகிய அனைத்தையும் ஸ்டாலினும் சோவியத் நாட்டு கம்யூனிஸ்ட் தலைமையும் மிக லாவகமாக எதிர் கொண்டனர். இந்த ஏகாதிபத்திய நாடுகள் இட்லர் தோல்விக்குப் பிறகு, சோவியத் யூனியனும் கடும் வீழ்ச்சி கண்டு சிதிலமாகிட வேண்டுமென விரும்பினர்.

ஆனால், அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக, இட்லர் வீழ்ந்த பிறகும், கடுமையான வரலாறு காணாத நாசத்தை சோவியத் யூனியன் சந்தித்த போதும், அடுத்த பத்தே ஆண்டுகளில் சோவியத் யூனியன் தன்னை புனரமைத்துக் கொண்டு உலகப் பெரும் சக்தியாக உருவெடுத்தது. இது சோசலிசத்தின் மகத்துவம்.

மக்கள் யுத்தம்

இந்தப் போரில் சோவியத் யூனியன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அளவற்ற தியாகம் செய்ததற்கு முக்கிய காரணம், இட்லரின் ஆக்கிரமிப்பிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற நோக்கம் மட்டுமல்ல; உலக மக்களை பாசிசப் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டுமென்பதுதான்.

அதனால்தான் இந்தப் போர் சோவியத் யூனியன் தலையிட்ட பிறகு, தேசபக்த மக்கள் யுத்தம் என மாறியது. தொடக்கத்தில் ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்குள் உலகை பங்கு போட்டுக் கொள்ள இந்தப் போரை துவக்கினர்.

கூட்டாளிகளாக இருந்த ஜரோப்பிய, அமெரிக்கத் தலைமை வஞ்சக சூழ்ச்சிகளை சோவியத் யூனியனுக்கு எதிராக செய்தாலும், ஸ்டாலின் அந்த நாடுகளின் மக்களை நம்பினார்.

சோவியத் மீது தாக்குதல் துவங்க இருந்த சமயத்தில் ஸ்டாலின் தனது ரேடியோ உரையில் குறிப்பிட்டார்.
… இந்த விடுதலைப் போரில், நாம் (சோவியத்) மட்டும் தனித்து இல்லை.இந்த மாபெரும் போரில் நமது உண்மையான கூட்டாளிகள் ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள மக்கள்தான். இட்லரின் கொடுங்கோண்மைக்கு ஆளான ஜெர்மானிய மக்களும் நமது கூட்டாளிகள்தான். எனவே, இது சுதந்திரத்திற்கான மக்களின் கூட்டணி.

முதலாளித்துவ தலைமை, சோசலிசத் தலைமையும்

ஸ்டாலினும், கம்யூனிஸ்ட் தலைமையும் மக்களின் தேசபக்த உணர்வுகளையும் வளர்த்து சுதந்திரம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்தினர்.

வரலாற்றில் சூரப்புலியாகவும், மாமனிதராகவும் முதலாளித்துவ மீடியாக்களில் இன்றும் சித்தரிக்கப்படுகிறவர் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். அவர் மக்களுக்கு அறைகூவல் விடும்போது, ஜெர்மனி நமது நாட்டின் மீது படையெடுக்கும் போது, மக்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக தங்கியிருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். இதுதான் பாசிசத்திற்கு எதிராக மக்களைத் திரட்டுவதில் முதலாளித்துவ தலைமை காட்டிய அக்கறை. ஸ்டாலின் மக்களிடம் உரையாற்றும் போது, சோசலிசத்துக்கே உரிய மேன்மையான நாட்டுப்பற்று உணர்வுகளை தட்டியெழுப்பி அவர்களை போரில் ஈடுபடுத்தினார். அவரது ரேடியோ உரை வருமாறு:

நமது நாட்டில் எதிரிகள் ஆக்கிரமித்துள்ள இடங்களில் கொரில்லா முகாம்களை தரையிலும், மலைப்பகுதிகளிலும் அமைந்திருங்கள். எதிரி முகாம்களை அழித்து ஒழிக்கும் குழுக்களை அமைத்திடுங்கள்… நமது பகுதிகளை ஆக்கிரமித்துள்ள எதிரிகளுக்கு வாழ்க்கை நரகமயமாக்கிடும் வகையில் அவர்களது பகுதிகளில் உள்ள சாலைகள், பாலங்கள், தொலைத் தொடர்பு வசதிகளை அழித்திடுங்கள்.

கொரில்லாக்களும், மக்களும் சேர்ந்து நாஜிப்படைகளை அழித்திட்ட வீர காவியத்தை வரலாறு பயிலும் அனைவரும் அறிவார்கள். சர்ச்சில் போன்ற அன்றைய கம்யூனிஸ்டு எதிரிகளிலும், ஜார்ஜ் புஷ் போன்ற இன்றைய எதிரிகள் கூட சோவியத் மக்களின் போர்த்திறனை போற்றிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.

அதே போன்று, இட்லர் பிரான்சை தாக்கி போரைத் துவக்கியபோது, பிரான்சு மண்கோபுரம் சரிந்து வீழ்ந்து, சரணடைந்தது. எவ்வித வலுவான எதிர்ப்பும் இல்லை. அங்கிருந்த கம்யூனிஸ்டுகள் தீவிரமாக எதிர்த்து உயிர்த்தியாகம் செய்தனர். ஆனால் மக்கள் பெரும் அளவில் எதிர்க்கவில்லை. இதற்குக் காரணம், மக்களிடம் பாசிச எதிர்ப்புணர்வையும், நாட்டுப்பற்றையும் ஏற்படுத்துவதில் அன்றைக்கு இருந்த முதலாளித்துவ தலைமையின் குறைபாடு.

இதற்கு நேர்மாறான சித்திரம் அன்று சோவியத் யூனியனில் இருந்தது. அந்த மக்கள் சோசலிச சித்தாந்தத்தால் ஆட்கொள்ளப் பட்டவர்கள். உலக மக்களைப் பாசிசத்தின் பிடியிலிருந்து பாதுகாக்க வேண்டியது தங்களது கடமை என்று உணர்ந்தவர்கள்.
இட்லர் ஜெர்மனி மீது ஆக்கிரமிப்பு நிகழ்த்திய போது ஸ்டாலின் தலைமையில் அன்றைய தலைமை பாசிசத்தை வீழ்த்தும் மாபெரும் கடமைக்கு மக்களை இடையறாது தயார் படுத்தினார்கள்.

மற்றொரு கருத்தையும் அன்று ஸ்டாலின் மக்களுக்கு உணர்த்தி வந்தார். மக்களின் எதிரி ஜெர்மானிய பாசிஸ்ட் படைகளும், இட்லர் உள்ளிட்ட கொடுங்கோல் தலைமையும் தானே தவிர ஜெர்மானிய மக்கள் அல்ல என்பதை சோவியத் மக்களும், செஞ்சேனையும் நன்கு உணர்ந்திருந்தன.
ஸ்டாலின் குறிப்பிட்டார்:

… இட்லர் கூட்டத்தையும், ஜெர்மானிய மக்களையும் வித்தியாசமில்லாமல் சேர்த்துப் பார்ப்பது முட்டாள்தனமானது. இட்லர்கள் வருவார்கள், போவார்கள்; ஆனால் ஜெர்மானிய மக்களும், ஜெர்மானிய அரசும் நீடிக்கும் என்பதே வரலாற்று அனுபவம்.

இதுவே ஏகாதிபத்திய நாடுகள் நடத்திய, நடத்தி வரும் போர்களுக்கும், சோசலிஸ்ட் நாடு நடத்திய போருக்கும் உள்ள வேறுபாடு ஆகும். செஞ்சேனையும், மக்களும் போரில் ஈடுபடும்போது உலக உழைப்பாளி மக்களின் விடுதலை சமத்துவத்திற்கான இலட்சிய உணர்வுகள் அவர்களிடம் இருந்ததால், ஜெர்மானிய மக்களுக்கு எவ்வித சேதத்தையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை.

சோவியத் மக்களின் தியாகம்

பதிலாக, சோவியத் மக்கள் தங்களை தியாகம் செய்து கொண்டனர். டெல்லியில் இருக்கும் ரஷியத் தூதர் லியா செஸ்லாவ் இது பற்றி குறிப்பிடுகிறார். ரஷியக் காலண்டரில் முக்கிய தினங்களில் மே 9, 1945 தேதிக்கு சிறப்பிடம் உண்டு. இந்த வெற்றி தினம் என்று சொன்னாலே ஒவ்வொரு ரஷியனுக்கும் இதயத்தில் ஒரு வகை துடிப்பு ஏற்படும்.

60 ஆண்டுக்குப் பிறகும் கூட போரின் பாதிப்புக்கு ஆளாகாத ஒரு ரஷ்ய குடும்பத்தையும் பார்க்க முடியாது.

ஆனால், இந்த வரலாற்று நிகழ்வைப் பற்றி பலர் எழுதுகிறபோது, சோவியத்தின் பங்களிப்பை மறைக்க முயல்கின்றனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை 1945ஆம் ஆண்டு நேச நாடுகளின் படைகள் ஜெர்மனியை கைப்பற்றியதாக எழுதியுள்ளது.

உண்மையில் 1944ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெர்மானிய படைகளின் எதிர்த்தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஆங்கில அமெரிக்க போர் முனை சரிந்தது.இதனால் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட், சர்ச்சிலும் சோவியத் யூனியன் கிழக்குப் பகுதியில் தாக்குதலை துவங்க வேண்டுமென ஸ்டாலினை மன்றாடி கேட்டுக் கொண்டனர். இதையொட்டி சர்ச்சில் ஜனவரி 6ஆம் தேதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜனவரி 7ஆம் தேதி சர்ச்சிலின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பதில் எழுதினார்.

இதற்குப் பிறகு சோவியத் யூனியன் ஜனவரி 12, 14 தேதிகளில் மாபெரும தாக்குதலில் இறங்கியது. செஞ்சேனை 23 நாட்களில் ஜெர்மன் தலைநகரான பெர்லினை நெருங்கியது. அப்போது நேசநாட்டுப் படைகள் வெகு தொலைவில் இருந்தது. ஏப்ரல் 30ஆம் தேதி செஞ்சேனை ரீச்டாக்கில் பட்டொளிவீசிப் பறக்கும் செங்கொடியை ஏற்றியது. மே 8ஆம் தேதி சரணாகதி ஒப்பந்தத்தில் ஜெர்மனி கையெழுத்திட்டது.

இதன் மூலம் விடுதலைப்போர் முடிவுக்கு வந்தது. இந்த உண்மைகைள ஏகாதிபத்தியவாதிகள் மறைத்து வருகின்றனர்.

1941ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1945 மே மாதம் வரை சோவியத் யூனியன் ஜெர்மானிய நாஜி படைகளோடு சண்டையிட்டது. இந்தக் காலத்தில் 2 கோடியே 70 லட்சம் மக்களை சோவியத் யூனியன் இழந்தது. அதனடைய 1710 நகரங்கள் முழுமையாகவோ பகுதியாகவோ அழித்து ஒழிக்கப்பட்டன. 70,000 கிராமங்கள் அழிக்கப்பட்டன. நகர்ப்புறத் தொழில்கள் முற்றிலும் நாசப்படுத்தப் பட்டன. பசிபிக் பகுதியில் ஜப்பானிய ராணுவத்தோடும் சோவியத் ராணுவம் மோதி வெற்றிக் கண்டது. இது சீனப்பு புரட்சிக்கு வித்திட்டது.

பாசிசத்தின் வீழ்ச்சி இந்தியாவிலும் பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. பாசிசத்திற்கு எதிரான பிரச்சாரத்தை இந்தியாவில் கம்யூனிஸ்ட்டு களும் முற்போக்காளர்களும் தீவிரமாக மேற்கொண்டனர்.

சோவியத் யூனியன் போரில் ஈடுபட நேர்ந்த போது, இந்த யுத்தம் மக்கள் யுத்தமாக மாறியது என்ற நிர்ணயிப்புக்கு கம்யூனிஸ்டுகள் வந்தனர். சோவியத்தின் போர் முயற்சிகளுக்கு இந்தியா பக்க பலமாக இருந்தது.

இன்றைய நிலையில், பாசிசத்தின் வீழ்ச்சியை நினைவு கூறுகிற போது, இந்திய மக்களுக்கு பாசிசத்தின் கொடுமைகளை நன்கு உணர்ந்திட வேண்டிய அவசியம் உள்ளது.

நூரம்பர்க்கில், இட்லர் ஆட்சியின் போது, நிகழ்ந்த நெஞ்சைக் கதற வைக்கும் கொடுமைகள் விசாரிக்கப்பட்டன. நூரம்பர்க் விசாரணை என்று புகழ்பெற்ற இந்த விசாரணையில் மனிதர்கள் ஈவிரக்கமின்றி சித்திரவதைக்கும் படுகொலைக்கும் ஆளான விவரங்கள் வெளிவந்தன. அங்கு இனவெறியைக் கிளப்பி மக்களின் ஆதரவைப் பெற்று, 1933ஆம் ஆண்டு ஆட்சியையும் கைப்பற்றிய இனவெறி பாசிச கும்பல் வரலாறு காணாத கொடுமைகளை நிகழ்த்தி, சுதந்திரம், ஜனநாயகத்தைப் பறித்தது.

அங்கு இனவெறியைக் கிளப்பியது போன்று இந்தியாவில் மதவெறியைக் கிளப்பி, இந்துத்துவா பாசிசத்தை சங்பரிவாரக் கூட்டம் கொண்டு வர, முயல்கிறது. இந்த சக்திகளை முற்றாக மக்களிடமிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே பாசிசத்தை வெற்றி கொண்ட 60ஆம் ஆண்டு நிறைவு விழா நமக்கு உணர்த்திடும் பாடம்.

அத்துடன், போர் எத்தகு நாசத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக இரண்டாம் உலகப் போர் திகழ்கிறது. இன்று ஜார்ஜ் புஷ் பிரதிநிதித்துவப்படுத்தும் பன்னாட்டு மூலதன கும்பல் தங்களது இலாப வேட்டைக்காக, தங்களுக்கு ஒத்துழைக்காத நாடுகள் மீது போர் தொடுக்க முனைகின்றனர். இதற்கு எதிராக மக்கள் திரள வேண்டுமென்பதும், இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய அழிவுச் சின்னங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.



%d bloggers like this: