மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சுற்றுப்புற சூழல் பாதுகாப்பில் மாற்று எரிபொருட்கள்


சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு குறித்து ஒரு புறம் பெரிய அளவில் பேசப்படுகிறது. மறுபுறம் நீரும், நிலமும், காற்றும் மாசுபட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. ஓசோன் மண்டலத்தில் ஓட்டை, அண்டார்டிகா வெப்பத்தால் உருகுகிறது, மாலத்தீவே காணாமல் போகும் அபாயம் உண்டு, பயிரிடக்கூடிய நிலங்கௌல்லாம் தன் ஜீவ சத்தை இழந்து மலட்டுத்தனமாக மாறுகின்றன என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எதிர்காலத்தில் வரக்கூடிய பேராபாயத்தைச் சுட்டிக்காட்டும் நிகழ்கால நிகழ்ச்சிகளாக இவை உள்ளன.

சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதற்கென்றே மத்திய மாநில அரசுகள் தனி இலாகாவையே வைத்துள்ளன. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு தொடர்பான கியோட்டா ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திட் டுள்ளது. அமெரிக்கா இதில் கையெழுத்திடவில்லையென்றாலும் ஏனைய உலக நாடுகள் இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த உறுதி பூண்டுள்ளனர். ஆனாலும், இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த இந்தியாவுக்கு இன்னும் அரசியல் உறுதியும் தொலைநோக்கும் பெரிதும் தேவைப்படுகிறது. இதுவரை இது தொடர்பான மத்திய – மாநில அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக இல்லை.

மைய மின்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய மின்சார கொள்கையில் கூட, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு குறித்து கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
நிலவங்கி, வனவங்கி ஏற்படுத்தப்பட்டு சுற்றுப்புற சூழல் பாதிக்கா வண்ணம் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில், இடையூறின்றி மின் உற்பத்தி நடைபெறவும், நீர்ப்பிடிப்பு பகுதிகள் முறையாக பராமரிக்கப்படுவதும் உத்திரவாதம் செய்யப்படும்.

நிலக்கரி கழிவுகளை அகற்றும் பணி திறம்பட நடத்தப்படும். நிலக்கரி எரிப்புக்குப் பின் கிடைக்கும் சாம்பல் கழிவுகள், சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாதவாறு அப்புறப்படுத்த தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும்.

நகராட்சி பகுதிகளில் கிடைக்கக்கூடிய திடக்கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளிலிருந்து மின் உற்பத்தி செய்வது குறித்து திட்டமிடப்படும். சுற்றுப்புற சூழல் மாசுபடா வண்ணம் அந்த கழிவுகளற்றப்படும்.

அமைக்கப்படும் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் சுற்றுப்புற சூழல் விதிகளை கண்டிப்பாக பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய நடவடிக்கைள் அனைத்தும் வரவேற்க தக்கவையே. ஆனால் மின்துறையை தனியாரிடம் விட்டு, விட்டு சுற்றுப்புற சூழலை பாதுகாப்போம் என மைய அரசு அறிவிப்பதுதான் போலித்தனமாக உள்ளது. கடலோரத்தில் உள்ள இறால் பண்ணைகள், தோல் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் மண்வளத்தை மாசுபடுத்தி சுற்றிலுமுள்ள நிலங்களை பாலையாக்கியிருக்கிறது. சாயப்பட்டறை, பல தொழிற்சாலைகள் கழிவுகள், ஆற்று நீரில் கலந்து நீரையே மாசுபடுத்தி ஆற்றையே வரண்ட நிலைக்கு கொண்டு சென்று விட்டது. இவைகளையெதிர்த்து சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு இயக்கங்களும், மக்களும் நடத்தும் போராட்டத்திற்கு இந்த அரசுகளிடமிருந்து நீதி கிடைக்கவில்லை. குண்டாந்தடி தாக்குதலும், சிறைவாசமும் அந்த மக்களுக்கு கிடைத்த பரிசுகள்.

இந்த நிலையில் மின் உற்பத்திக்கு பன்னாட்டு மற்றும் இந்நாட்டு முதலாளிகளிடம் மன்றாடுகிற மத்திய மாநில அரசுகள், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதிகளை இந்த முதலாளிகளிடம் கண்டிப்புடன் அமல்படுத்துமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். ஏனெனில், முதலாளிகளின் சமூகப் பொறுப்பு பற்றியும் முதலாளிகளிடம் அரசு காட்டும் கண்டிப்பு பற்றியும் பொதுமக்கள் நன்கு தெரிந்தே வைத்துள்ளார்கள். எனவேதான், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பில் மைய அரசுக்கு உண்மையில் அக்கறை உண்டென்றால் மின்துறை பொதுத்துறையிலேயே நீடிப்பது அவசியமாகும். அது சாத்தியமும்கூட.

மரபு சார்ந்த எரிசக்தி மூலம் புனல் மின்சாரம்

புனல் மின் உற்பத்தியினால் சுற்றுப்புற சூழல் மாசுபடாது. இத்தகைய மின் நிலையங்கள் அமைக்க ஆரம்பத்தில், அதிக முதலீடு தேவை. பின்னர் வெறும் பராமரிப்புச் செலவு மட்டுமே. இந்தியாவில் நீர் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பை நாம் முழுமையாக அறுவடை செய்யவில்லை. 50,000 மெகாவாட் உற்பத்திக்கு வாய்ப்பிருக்கிறது என கண்டறியப்பட்டாலும், அதில் 30,000 மெகாவாட் உற்பத்திக்காண முயற்சிகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டுள்ளன.

பருவகாலங்களில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற பெரும்பாலும் வாய்ப்புண்டு. வருடம் முழுவதும் உற்பத்தி, உடனடி லாபம் என உத்திரவாதமுள்ள இடங்களில் மட்டும் முதலாளிகள் நீர்மின் உற்த்தியில் ஈடுபட ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, அரசு இதில் அக்கறை செலுத்தினால், மின்சாரத்தை கட்டுப்படியான விலையில் தரும் வாய்ப்புண்டு. சீன அனுபவம் அதை தெளிவாக உணர்த்துகிறது. எங்கெல்லாம் வாய்ப்புண்டோ அங்கெல்லாம் சிறு சிறு மின் நிலையங்கள் அமைத்து நீர் மின்சார உற்பத்திக்கான வாய்ப்பை முழுவதுமாக சீனம் பயன்படுத்தியுள்ளது. எனவே, இந்திய அரசு இந்த மாதிரியை பின்பற்றி ஏராளமான மின் நிலையங்கள் அமைப்பது, சுற்றுப்புற சூழல் மாசுபடாமலிருக்கும் நோக்கமும் குறைந்தவிலையில் மின்சாரம் வழங்க வேண்டிய நிலையில் உள்ள அரசின் சமூக பொறுப்பும் நிறைவேறும்.

அனல் மின்சாரம்

அனல் மின்சாரம் நிலக்கரி இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் நிலக்கரி இருப்பு விரைவில் தீர்ந்து போகுமென பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் அபாய சங்கு ஊதுகிறார். நாம் உபயோகிக்கும் பெட்ரோலிய பொருட்களில் 70 சதம் இறக்குமதியையே நம்பி உள்ளது. உலக சந்தையில் பெட்ரோலிய பொருட்களின் விலையேறும்போதெல்லாம் இந்தியாவிலும் விலை உயர்த்தும நிர்ப்பந்தம் உள்ளது. சங்கலித் தொடர்போல அனைத்து பொருட்களின் விலைவாசியும் அதனால் ஏறிப்போகிறது. மேலும், சுற்றுப்புறச் சுழல் மாசுபடுவதும் அனல் மின் தயாரிப்பில் அதிகம் உள்ளது.

எனினும், தனியார்துறை அனல் மின்தயாரிப்பில்தான் அதிகம் ஈடுபட விரும்புகிறது. காரணம் உத்திரவாதமான மூலப்பொருடகள், தொடர்ந்த லாபம் ஆகியவைதான். ஆயினும் அனல் மின் நிலையங்களில் உற்பத்திக்கு கூடுதல் செலவையே தனியார் முதலாளிகள் காட்டுகிறார்கள். இவர்களிடம் மின்சாரத்தை விலைக்கு வாங்கும் மின்வாரியங்கள் கூடுதல் கட்டணத்தை தரவேண்டி உள்ளது. மாநில மின்வாரியங்கள் உற்பத்தி செய்யும் 1 யூனிட்டின் அடக்க விலை ரூ. 3/-க்குள் உள்ளபோது, இவர்களிடம் ரூ. 7/- முதல் 8 வரை தர வேண்டி உள்ளது. இதைவிட நுகர்வோருக்கு குறைவான விலையில் தரும் மின்வாரியங்கள் எப்படி நட்டத்தை சந்திக்காமல் இருக்க முடியும்? எனவே, பொதுத்துறை இதில் அனல் மின் உற்பத்தியில் ஈடுபடுவதே நாட்டுக்கும் நல்லது, சுற்றுப்புற சூழல் பாதுகாக்கவும் உதவும்.

எடுத்துக்காட்டாக நெய்வேலி அனல் மின் நிலையம் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து முன்னுதாரணமாக விளங்குகிறது. இந்தியாவில் மொத்த பழுப்பு நிலக்கரி இருப்பு 15,835 மில்லியன் டன் என்றால் தமிழகத்தில் மட்டும், 13,555 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரியை தங்கள் பயன்பாட்டுக்கு வெட்டியெடுக்கின்றன. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் 3172 எக்டேர் நிலத்தை முதலாவது சுரங்கத்துக்காக கையகப்ப டுத்தியுள்ளது. 2490 மெகாவாட் உற்பத்தி செய்யும் மூன்று அனல் மின் நிலையங்களும் ஆண்டுக்கு 200 ஏக்கர் வரை நிலக்கரியை வெட்டியெடுக்க பயன்படுத்துகின்றன.

இதனால், இப்பகுதியில் நில வளம் முழுவதும் பல்வேறு வகைகளில் பாதிப்படைகிறது. எனவே, மத்திய ஆராய்ச்சி நிறுவனமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தி, நிலத்தின் மண் வளம் மற்றும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க கடந்த 50 வருடங்களாக பலதரப்பட்ட பணியில் ஈடுபட்டுள்ளன. கடந்த 30 வருடங்களில் 17 லட்சம் மரம் நட்டு மரங்களின் பூமியாக அப்பகுதியை மாற்றியுள்ளது. இரண்டாவது நிலக்கரி சுரங்கம் வெட்ட கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் 37 லட்சம் மரங்களை நட்டு வளர்த்து வருகிறது. இவற்றில் மூங்கில், தேக்கு, புளியன், இலுப்பை, புங்கன், வேம்பு போன்று பயன்படும் மரங்களும் அடங்கும்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பொதுத்துறையில் இருப்பதன் மூலமே சமூக பொறுப்புடன் இவ்வளவும் செய்கிறது. தனியார் முதலாளிகளின் தயாள குணம் சுயநலத்தை உள்ளடக்கியதே. சமூக பொறுப்புடன் கூடிய பொது நலமாக அவர்கள் நடந்து கொள்வது அபூர்வமே. எனவே, நெய்வேலியில் மூன்றாவது சுரங்கத்தையும், அதிலிருந்து வெட்டியெடுக்கப்படும் பழுப்பு நிலக்கரியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்தலையும் தனியாரிடம் தரக்கூடாது என தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதில் வியப்பில்லை.

அணு மின்சாரம்

இந்தியாவில் மின் உற்பத்திக்கான வாய்ப்பு கீழ்க்கண்டவாறு இருக்குமென கணக்கிடப்படுகிறது.

எண்ணெய், இயற்கை எரிவாயு நீர் மூலம் 534 GWE
நிலக்கரி மூலம் 40,000 GWE
யுரேனியம் மூலம் 50,300 GWE
தோரியம் மூலம் 2,00,00 GWE
சூரிய சக்தி மூலம் 6,00,000 GWE

யுரேனியம் மற்றும் தோரியம் அணுமின் உற்பத்திக்கான வாய்ப்பு இந்தியாவில் அதிகம் உள்ளது இதன் மூலம் தெரிகிறது. அணுமின் உலைகளை பாதுகாப்புடன் கட்டுவதிலும், பராமரிப்பதிலும் நம் விஞ்ஞானிகளுக்கு போதிய அனுபவங்கள் உண்டு என்பதும், ஆபத்து சூழல் ஏற்பட்டாலும் திறமையுடன் அதை சமாளிக்கும் ஆற்றலும் அவர்களிடம் உண்டென கடந்த காலம் தெளிவாக உணர்த்தியுள்ளது.

பாதுகாப்பு, தொழில்நுட்பம், உற்பத்தியில் சிக்கனம், விநியோகத்தில் நம்பகத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்தவரையில் நம் தேசத்தில் உள்ள அணுமின் நிலையங்கள் உலகில் மிகச் சிறந்தவை என கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் எஸ்.கே. அகர்வால் கூறுகிறார். மேலும், நம் தேசத்தில் கிடைக்கும் தோரியத்தை பயன்படுத்தி 5,40,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியுமென கூறுகிறார். 14 அணுமின் நிலையங்கள் தங்கள் நிறுவு திறன்களில் 90 சதம் வரை உற்பத்தி செய்கின்றன. 8 அணுமின் நிலையங்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. அண்மையில் தாராப்பூர் டி.ஏ.பி.பி.எச். திட்டம் 540 மெகாவாட் மின்உற்பத்தி மின் நிலையம் அமைக்க தொடக்கத்தில் 80,000 கோடி ரூபாய் செலவாகுமென திட்டமிடப்பட்டது. ஆனால், திட்டமிட்ட காலத்திற்கு முன்பே 60,00 கோடியில் கட்டி முடித்து அதன் மூலம் 1 யூனிட்டிற்கு அடக்க விலை ரூ. 3.50லிருந்து ரூ. 2.65 ஆக குறையும் நிலையை ஏற்படுத்தி நம் விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.

அணுமின்சாரம் கேந்திர மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் பொதுத்துறையிலேயே உள்ளது. இதிலும் தனியார் முதலாளிகளை வரவேற்று மைய அரசு பச்சைக்கொடி காட்டுகிறது. இது நம் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பலவீனப்படுத்தும், சுற்றுப்புறசூழல் மாசுபடலை தடுக்க முடியாத நிலைக்குத்தள்ளும். கடைசியில் பத்மாசூரனுக்கு வரம் கொடுத்து சிவன் பட்ட கதி நிலைக்குத் தள்ளும். 1 லட்சம் மெகாவாட் என்ற இலக்கை இத்துறையில் சுலபமாக எட்ட வாய்ப்பிருந்தும், அரசு அசட்டை செய்வது தெரிந்தேதான். காரணம், முதலாளிகள் நல அரசே தவிர, மத்திய அரசு மக்கள் நல அரசு அல்ல என்பதுதான்.

மரபு சாரா எரிசக்தி மூலம் மின்சாரம்

சூரிய சக்தி, காற்றலை, கடலலை மற்றும் பல்வேறு கழிவுகள் மூலம் மின்சக்தி உற்பத்தியாகிறது. அநேகமாக இவைகள் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாதவை என்பது மட்டுமல்ல மாசுபடுவதை குறைக்கவும் செய்யும். இவைகள் தீர்ந்து போகிற ஆதாரங்களாக இல்லாமல் புதுப்பிக்க வல்லதாக இருப்பது இவற்றின் சிறப்பாகும். எனினும் கட்டுப்படியாகும் விலையில் மின் உற்பத்தியை இந்த ஆதாரங்களின் மூலம் செய்வதில் இன்னும் முன்னேற வேண்டி உள்ளது. செலவு பிடிக்கும் இந்த ஆராய்ச்சியில் பன்னாட்டு மற்றும் இந்நாட்டு முதலாளிகள் லாபக்கண்ணோட்டமின்றி ஈடுபடுவார்களா என்பதற்கு அரசே உறுதியேற்க முடியாது. எனவே, அரசின் கவனமும் அக்கறையும் மரபுசாரா எரிசக்தி மூலங்கள் தொடர்பாக காட்டப்படுமானால், இந்தியாவின் முகத்தோற்றத்தையே மாற்றியமைக்க முடியும்.

சுமார் 46,485 மெகாவாட் காற்றலை மூலம் மின் உற்பத்தி செய்ய வாய்ப்பிருந்தும் தற்போது 2909 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாகிறது. அதில் தமிழகத்தின் பங்கு மட்டும் 1664 மெகாவாட்டாகும். ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடியுமானால் 2000 மெகாவாட் உற்பத்தி கூடுதலாக்க முடியுமென, தமிழகத்தின் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் ராஜேஷ் பக்ஷி கூறுகிறார். தற்போது இதில் தனியார் முதலாளிகளே ஈடுபட்டுள்ளனர். கட்டுப்படியான விலையில் இந்த முதலாளிகளிடம் மின்சாரம் பெற முடியாது என்றால், அரசே இத்துறையில் ஈடுபடுவது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

மற்ற ஆதார வளங்கள் மூலம் நடக்கும் மின் உற்பத்தியைக் காட்டிலும் 120 மடங்கு கூடுதல் மின் உற்பத்தி பெறும் வாய்ப்பு சூரிய சக்தி மூலமே உள்ளது. இப்போதைக்கு இதில் அதிக முதலீடு செய்ய வேண்டி உள்ளது. பாட்டரிகள் மூலம் சூரிய சக்தியை தேக்கி வைத்து பயன்படுத்துவதில் ஆகும் செலவை கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டால் ஒரு அடிப்படை மாற்றமே நம் தேசத்தில் நிகழ வாய்ப்புண்டு. அபரிமிதமாக கிடைக்கும் சூரிய சக்தியை தேவைக்கேற்ப தேவையான இடங்களில் தேக்கி பயன்படுத்தலாம். பராமரிப்புச் செலவு குறைவு, ஆபத்துக்களை குறைக்கலாம். சுற்றுப்புற சூழல் மாசுபடாது. கிராமப்புறங்களை மின்மயமாக்கி நலிந்த பிரிவினருக்கும், கிராமப்புற தொழிற்சாலைகளுக்கும் மானிய விலையில் மின்சாரம் தர சூரிய சக்தி ஒரு அற்புதமான வாய்ப்பைத் தருகிறது. எனினும் அரசு இது குறித்து செலுத்தும் அக்கறை கவலையையே தருகிறது.

மரபு சாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டால், நம் தேசத்தில் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதிக்கு தேவையே இருக்காது. போக்குவரத்தும் இந்திய குடும்பங்களும் தங்கள் பயன்பாட்டுக்கு மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தினால் 66 சதம் பெட்ரோலிய பொருட்களை சேமிக்க முடியும். பெட்ரோலிய பொருட்களுக்கு நாம் தரவேண்டிய அன்னிய செலாவணி மீதமாகும். உலக சந்தையில் விலை ஏறும்போதெல்லாம் உள்ளூர் சந்தையிலும் பெட்ரோலிய பொருட்களின் விலையை ஏற்றி, அதனால் சகல பொருட்களுடைய விலைவாசியும் ஏறுவது கட்டுப்படுத்தப்படும். சுற்றுப்புற சூழலும் மாசுபடாது.

மக்கள் திரள் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனங்களை மேம்படுத்தி புகை மாசை குறைத்தல், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது கூடுதல் வரி விதித்தல், தொழிற்சாலை வெளியிடும் மாசுகளை கண்டிப்புடன் கட்டுப்படுத்துதல் போன்றவை மார்க்சிஸ்ட் கட்சியின் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன. சுற்றுப்புற சூழல் குறித்த கவலை நீங்க, அரசு மரபுசாரா எரிசக்தி மூலங்களை ஆக்கபூர்வமாக மின் உற்பத்திக்கு பயன்படுத்துவது இன்றைய அவசிய தேவையாகும்.%d bloggers like this: