தமிழகத்தின் அடிமை முறை என்ற அரிய நூலை ஆ.சிவ சுப்ரமணியன் அவர்கள் வாசிப்பதற்கு இலகுவாகவும், புரிவதற்கு ஆணித்தரமாகவும் ஏராளமான ஆதாரங்களை அழகு தமிழில் அள்ளித் தந்துள்ளார்.
தலைப்பைப் பார்த்த உடனே சிலர் பதறிப்போய் தமிழகத்திலா, அடிமைகளா? நம் தமிழ் முன்னோர்கள் ஆண்ட அந்தப் பொற்காலத்திலா? என்று வியப்போடு கேட்பவர்கள் இப்பவும் ஏராளம் பேர் இருக்கிறார்கள்.
பொற்காலம் என்று புகழப்பட்ட அந்தக் காலத்திலிருந்து விஞ்ஞானம் விண்ணை அளக்கும் 21ம் நூற்றாண்டின் இக்காலம் வரையிலும் தமிழகத்தில் அடிமை முறை ஜீவனம் செய்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நூலாசிரியர் ஆதாரங்களோடு நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். நிலைமை அந்தமட்டோடு நிற்கவில்லை; இதற்கு நேர்மாறாக நம் தமிழர்களே, அண்டை நாடுகளுக்குச் சென்று அடிமையாகிப் போன சோகக் கதைகளும் உண்டு! சொந்த நாடான இந்தியாவிலேயே அடுத்த மாநிலங்களில் நம் தமிழ் சகோதரர்கள் அடிமைகளாய் அல்லல்படுவதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். நமது தொண்மையான வரலாற்றை சரியாக இளைய சமுதாயம் புரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது. மன்னர்களையும், அவர்களது படை வரிசைகளின் கொள்ளைகளையும், போற்றி புகழ்வதால் ஏற்படுகிற உணர்வை விட, உண்மையான வரலாற்றை அறிந்து, கழிக்க வேண்டியதைக் கழித்து கொள்ள வேண்டியதை பாதுகாக்கும் பண்பே உயர்ந்ததாகும். மன்னனை துதிபாடும் புலவர்கள் வாழ்ந்த சங்க காலத்தில் அடிமை முறையை எதிர்த்தும், அரசர்களுக்கு ஆக்கப் பூர்வமான ஆலோசனைகள் கூறியும் புலவர்கள் இருந்தனர் என்பது இந்நூலின் மூலம் அறிகிறோம். நமது பண்பாட்டின் இன்னொரு பக்கத்தை நமக்கு ஆசிரியர் காட்டுகின்றார். அந்த பாரம்பரியத்தை பண்பாட்டை வளர்த்திட இந்நூல் இன்னொரு கருவியாக வந்துள்ளது. இந்நூல் எழுதிய போராசிரியரை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்.
இப்போதும் அடிக்கடி பத்திரிகைகளில் செய்திகள் வருவதை நாம் பார்க்கிறோம். இதயமற்ற ஏஜெண்டுகள், தமிழகத்திலிருந்து சிறுவர்களை, பெண்களை பல்வறு ஆசை வார்த்தைகள் சொல்லி அவர்களின் பெற்றோர்களுக்கு பரிவோடுபணத்தைக் காட்டி கடத்திச் சென்று அங்கு வட மாநிலங்களில் வேலை கொடுப்பது என்பதின் பேரில் 18 மணி நேரம், 20 மணி நேரம் அவர்களைக் கசக்கிப் பிழிந்து வெளி உலகமே அறிய விடாது மடக்கி இருட்டறைகளில் அடக்கிப் போட்டு சித்ரவதை செய்யும் செய்திகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன.
தமிழகத்திலேயே தமிழர்களே தமிழ்ச் சிறுவர்களைக் கொத்தடிமைகளாக்கி பல தொழிற்சாலைகளில் கசக்கிப் பிழியும் சோகச் செய்திகள் வந்த வண்ணம்தான் இருக்கின்றன. அடிமை ஒழிப்புச் சட்டங்கள் எத்தனை இருந்தும் என்ன பயன்? சட்டங்களை ஏமாற்றி அடிமை ஏஜெண்டுகளாக, கேவலமான பிழைப்பு நடத்துவோரும் ஏராளம் உண்டு. வர்க்கங்களால் ஆன ஒரு சமுதாயத்தில், ஏற்றத் தாழ்வுகள் உள்ள ஒரு சமுதாயத்தில், மற்றவர்கள் உழைப்பைச் சுரண்ட ஆதிக்க சக்திகளுக்கு வாய்ப்புகள் வளமாக உள்ள ஒரு சமுதாயத்தில், அடிமைமுறை இல்லாமல் போகும் என்றால் அது அறியாமையின் அடையாளம்தான். தமிழகம் அதற்கு விதிவிலக்கு என்று அடம்பிடித்தால் அது அறியாமையின் உச்சகட்ட அடையாளமாகும்.
நூலாசிரியர் இந்நூலின் முன்னுரையிலேயே தமிழ்ச் சமுதாயத்தில் நிலவி வந்த கொத்தடிமை முறையினைப் பற்றி சொல்லுகிறபோது, அமிஞ்சி, அடிமை, அடியான், மூப்படியான், படியான், பண்புசாலியான், குடிப்பறையன், கொத்தடிமை என பல்வேறு பெயர்களில் தமிழர்களில் ஒரு பிரிவினர் அடிமைகளாய் அல்லல்பட்டு ஆற்றாது அழுது மடிந்த துயர நிகழ்ச்சிகள் மறக்க முடியாத வரலாற்றுண்மைகளாகும் என்கிறார். இத்தகைய வரலாறு இன்னும் முடிந்து போகவில்லை. இன்றும் புதிய வடிவில் பல்வேறு தொழில்களில் அடிமைநிலை நீக்கமற நின்று நிலவுகிறது என்கிறார்.
தமிழ்ச் சமுதாய வரலாற்றில் இவ்வடிகைளைக் குறித்து ஆராயாமல் அடிமைகளே தமிழர்களிடம் இருந்ததில்லை என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும் என்றும் குறிப்பிடுகிறார்.
தமிழ்ச் சமுதாயம் தொன்மையானதுதான், கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே, வாளோடு முன்தோன்றி மூத்தக் குடி என்று சொல்லுவதிலே நமக்குப் பெருமை உண்டு.
இலக்கணத்திலும், இலக்கியத்திலும் மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்பாகவே, முன்னேறியவன் தமிழன் என்பதிலும் உண்மை உண்டு. வானை முட்டும் கற்கோவில் கட்டினான். ஆற்றை வளைத்துப் போட அணையும் கட்டினான். விளைச்சலைப் பெருக்கிட விவசாயத்தை விரிவாக்கினான். கடல் கடந்து வாணிபம் வளர்த்தான். இவை அத்தனையும் எதனால் முடித்தான்; யாரைக் கொண்டு தீர்த்தான் என்ற கேள்விக்கு விடை காணும்போதுதான் விஷயமே வெளி வருகிறது. ஆதி பொதுவுடமை சமுதாயத்தில் கிடைத்த உணவை இனக்குழுக்கள் சமமாகப் பகிர்ந்து உண்டன; பட்டினி என்றாலும் பகிர்ந்து கொண்டனர். அன்று உற்பத்தி முறை மிகக் கீழாக இருந்த காலம். ஆகவேதான் ஆதி பொதுவுடமை சமுதாயத்தில் ஒரு இனக்குழு மற்றொரு இனக்குழு மீது போர் தொடுத்த போது, தோற்றுவிட்ட போர்க் கைதிகளைக் கொன்று போட்டார்கள்.
உற்பத்தி முறையில் மாற்றம் வந்தபோதுதான் தேவைக்கு அதிகமான உபரி உற்பத்தி மெல்ல மெல்ல வளர்ச்சியுற்ற போதுதான் போர்க் கைதிகளைக் கொல்லுவதற்கு பதிலாக அவர்களை உற்பத்தியில் ஈடுபட வைத்து, உபரி உற்பத்தியை மேலும் மேலும் பெருக்கினார்கள். போர்க் கைதிகள் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள்.
இதுபற்றி குறிக்க வந்த நூலாசிரியர் எகிப்தை உதாரணம் காட்டுகிறார். எகிப்தில் போரில் பிடிபட்டவர்கள் முடைடநன என்றழைக்கப்பட்டனர். பின்னர் அடிமைகள் டுஎபே முடைடநன என்றழைக்கப்பட்டனர். வேதகால இந்தியாவில் தயூ அல்லது தா என்ற சொல் முதலில் பகைவரையும், பின்னர் தாஸர் என்ற சொல் அடிமையையும் குறித்தது என்கிறார்.
இதேபோல் தமிழகத்தைக் குறிக்க வந்த நூலாசிரியர், தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள், கிறிதுவ மிஷினரிகளின் கடிதங்கள், குறிப்புகள், அரசாங்க ஆவணங்கள் ஆகியவைகளில் அடிமைகளைப் பற்றிய செய்திகளும், குறிப்புகளும் காணக்கிடக்கின்றன என்கிறார்.
சங்ககால தமிழர்கத்தில் போரில் வெற்றி பெற்ற தமிழ் மன்னர்கள் தோற்ற மன்னர்களையும், அவர்களின் மனைவியர் களையும், மற்ற பெண்டிர்களையும், போர் வீரர்களையும் கைது செய்து கொண்டு வந்து அடிமைப்படுத்தி வேலை வாங்கியதை சங்ககால நூல்கள் குறிப்பிடுகின்றன என்கிறார் நூலாசிரியர்.
சேரன் செங்குட்டுவன் கனக விசயர் தலையில் கல்லேற்றி கொண்டு வந்ததை தமிழர்களின் வீரத்தின் விளை நிலத்திற்கு அடையாளம் என்று பேசினாலும், தோற்றவர்களை அடிமைகளாக்கி அவர்களைக் கொண்டு தமிழகத்தில் கற்கோவில் கட்டியதும், காவற் கோட்டை கட்டியதும், அணை கட்டியதும் அன்றைய சமூகத்தின் அவசியமாக இருந்தது என்பதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
உற்பத்தி சக்திகள் உயராத, வளராத அன்றைய சமுதாயம் இயங்க, வளர அடிமை முறை தேவைப்பட்டது. அத்தியாவசியமாக இருந்தது; இந்த அடிமைக்களும் உற்பத்திக் கருவிகளாகவே, பேசும் கருவிகளாகவே கருதப்பட்டார்கள்.
இது கிரேக்க நாட்டுக்கும் பொருந்தும், தமிழ்நாட்டிற்கும் பொருந்தும். தமிழகத்தில் அன்றைய நிலையில் சிறை பிடித்து கொண்டு வரப்பட்ட பெண்களைப் பற்றி குறிப்பிடுகிற பட்டினப் பாலையாசிரியர் அவர்களை கொண்டி மகளிர் என்று சொல்கிறாராம்.
கொண்டி என்பதற்கு கொள்ளை என்று பொருள். கொண்டு, பிறர் நாட்டில் கொள்ளையிட்டுக் கொணர்ந்த பெண்டிர்கள் என்பதற்கு கொண்டி மகளிர் என்று அர்த்தப்படுமாம். இந்தப் பெண்கள் காவிரிப் பூப்பட்டினத்திலுள்ள அம்பலங்களில் விளக்கேற்றும் பணி செய்தவர்களாம்.
சங்க காலத்தில் வாணிபம் செழித்து வளர்ந்த நெய்தல் பகுதிகளிலும், உணவு உற்பத்தி செய்து வாழ்ந்த மருத நிலப் பகுதிகளிலும் உபரி உற்பத்தியைக் பெருக்க இன்றையது போல் இயந்திரங்கள் வளரா அக்கலாத்தில் அடிமைகளைப் பயன்படுத்தியது தவிர்க்க முடியாத சமூக விளைவாக இருந்தது. அன்றைய தமிழகத்திலும், கேரளத்தில் பெரும்பகுதியும் மூவேந்தர்களாலும், பல குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டது என்பதனை நினைவில் கொண்டால், பிறர் நாடு என்பது பெரும்பாலும் தமிழகத்தின் ஏதாவது ஒரு பகுதியினையே குறிக்கும். எனவே, போரில் தோற்ற தமிழ் மன்னர்களின் மனைவியர்களும், அந்நாட்டு மகளிரும் அடிமைகளாகப் பகைவர் நாட்டில் பணி புரிந்துள்ளது தெளிவு என நூலாசிரியர் ஆ.சிவசுப்ரமணியம் குறிப்பிடுகிறார்.
தமிழ் மன்னனே, இன்னொரு தமிழ் மன்னனின் மனைவி யாகிய அந்தத் தமிழச்சிகளை அடிமைப்படுத்தினானா என அங்கலாய்பதில், உணர்ச்சிப்படுவதில் அர்த்தமில்லை. இங்கேதான் மார்க்சிய உரைகள் தேவைப்படுகிறது.
வர்க்கமுள்ள சமுதாயத்தில், ஆண்டான், அடிமை என்ற சமுதாயத்தில், சுரண்டலை அடிப்படையாக வைத்துள்ள ஒரு சமுதாயத்தில் இந்த சமூக, விஞ்ஞான விதி நடந்துதான் தீரும். தமிழர் சமூகத்திலும் அடிமை முறை இருந்தது, தமிழர் வீடுகளிலும் வீட்டடிமை முறை இருந்தது என்பதை முல்லை கலியில் ஒரு பாடலைக் காட்டி நூலாசிரியர் விளக்குகிறார்.
தலைவன் (காதலன்) தலைவியிடம் (காதலியிடம்) தன்னுடைய நெஞ்சை இருப்பிடமாகக் கொடுத்து அங்கே அவளுக்கு அடிமையாக தஞ்சம் அடைந்து விட்டதாகக் கூறுகிறானாம். அதற்கு தலைவி அவனிடம் கேட்கும் கேள்விகள் உன்னை எனக்கு அடிமையாக்குதல் அவ்வளவு எளிதான செயலாகுமா? உன் நெஞ்சானது திணைப்புனத்தில் இருக்கும் என் தமையனுக்கு உணவு கொண்டு சென்று கொடுக்குமா? பசுக் கூட்டங்களை மேய்த்துக் கொண்டிருக்கும் என் தந்தைக்குக் கறவைக் கலன் கொண்டு செல்லுமா?
அறுத்த திணைத்தாளிடையே என் தாய் மேயவிட்டிருக்கும் கன்றை மேய்குமா? என்று வினவுகிறாளாம்.
வீட்டடிமை அன்றைய சங்ககாலத்தில் என்னென்ன அடிமை வேலைகளை செய்தான் என்பதை இது காட்டுகிறது. சமூக விஞ்ஞானப்படி, இதை எப்படிப்பார்க்க வேண்டும் என்பதை நூலாசிரியர் சிறப்பாக விவரிக்கிறார். மேய்ச்சல் நில வாழ்க்கையில் தனிச் சொத்துரிமை உருவாகிறது என்ற சமூகவியல் உண்மையின் அடிப்படையில் மேற்கூறிய வரிகளை நோக்கினால் தனிச் சொத்துரிமையின் துணைப்படையாக அடிமைமுறை உருவாகியுள்ளதை நாம் உணரலாம் என்கிறார்.
தலைவன், தலைவி இருவரின் பேச்சில் அன்று வழக்கில் இருந்த சமூகவியல் தன்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது. பல்லவர் ஆட்சி காலம் தமிழக நிலவுடமையின் வளர்ச்சிக் காலமாகும். பிராமணிமும், நிலவுடமையும் கை கோர்த்துக் கொண்டு வேத சமயம் பேணி வளர்க்கப்பட்ட காலம். இக்காலத்தில்தான் சைவமும், வைணவமும் பக்தி இயக்கம் என்ற பெயரால் மூர்க்கமுடன் பௌத்தத்தையும், சமணத்தையும் தாக்குதல்களுக்கு இரையாக்கிய காலம். அழித்த காலம்.
நிலவுடமை வளர்ச்சி பெற்ற பல்லவர் ஆட்சி காலத்தில் அடிமைகளின் பங்களிப்பு அதிகமாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால், இது குறித்த கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கவில்லை என்று நூலாசிரியர் கூறுகிறார். ஆனால் பதினென்கீழ்க் கணக்கு நூல்கள் சிலவும், சைவ, வைணவ அடியார்கள் சிலர் பாடிய பக்தி இலக்கியங்களும் அடிமை முறை குறித்த சான்றுகளை மறைமுக மாகவும், வெளிப்படையாகவும் பதிவு செய்துள்ளன என்கிறார் ஆசிரியர்.
இரும்பு விலங்குகளால் பூட்டப்பட்ட கால்களை உடையவர்களாக அடிமைகள் விளை நிலத்தில் தொழில் புரிவர் என்று நாலடியார் கூறுவதாகவும், அதே நூலில் பெண்ணடிமைகளை தொழுத்தை என்று குறிப்பிட்டுள்ளதாகவும் ஆதாரம் காட்டுகிறார். பக்தி இலக்கியங்களிலும் அன்று நிலவிய அடிமை முறையைக் காண முடிகிறது என்பதற்கு பல பக்திப் பாடல்களை மேற்கோள் காட்டுகிறார்.
ஆள் என்பது அடிமையைக் குறிக்கும் சொல்லாகும் என்பதற்கு தமிழ் இலக்கியத்தில் பலப் பாடல்களில் உள்ள வரிகளை ஆதாரப்படுத்தி காட்டுகிறார். உதாரணமாக திவாகர நிகண்டு அடிமைகளின் மறு பெயர்களை ஆளும், தொழும்பும் அடிமை யாகும் என்று குறிப்பிடுவதையும், விலைக்கு வாங்கப்பட்ட அடிமை என்ற பொருளில் விலையாள் என்று பெரிய திருமொழியில் குறிப்பிடுவதையும் ஆசிரியர் ஆதாரமாகக் காட்டுகிறார். இப்படிப் பல உதாரணங்கள் நூலில் காட்டப்படுகின்றன. படியாள், பண்ணையாள் என்பதும்கூட அடிமையைக் குறிக்க வந்த சொற்கள்தான்.
இன்றைய காலத்திலும் ஒருவர் மற்றவரை எதிர்க்கின்றபோது, நான் என்ன, நீ வைத்த ஆளா, நீ சொல்வது போல் நடக்க எனக் கோபத்தோடு பேசும் பழக்கம் உண்டு. நான் என்ன, உனக்கு அடிமையா, நீ சொல்வதைப் போல் நான் நடப்பதற்கு ? என்ற அர்த்தம் தான் அதில் உள்ளடங்கி இருக்கிறது. ஆனால், இக்காலத்தில் ஆள் என்ற வார்த்தை ஞநசளடி என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ளப் படுகிறது. ஆனால், வழக்காற்றில் ஆள் என்பது அடிமை என்ற அர்த்தத்தில்தான் மொழியப்பட்டது.
அடிமையை வாங்கும் போதோ, விற்கும் போதோ எழுதப்படும் அடிமைப் பத்திரத்தைக் குறிக்க ஆளோலை என்ற சொல்லைச் சோழர் காலத்தில் வாழ்ந்த சேக்கிழாரும் பயன் படுத்தியுள்ளார் என்பதை நூலாசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.
சோழர் கால ஆட்சியில் அடிமைமுறை பற்றிய ஏராளமான தகவல்களை கல்வெட்டுச் சான்றுகள் தெரிவிக்கின்றனவாம். காரணம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள காலம் பிற்கால சோழர்கள் ஆதிக்கம் செலுத்திய காலம். நிலவுடமை முறை இறுக்கமடைந்த காலம். சோழர் ஆட்சி விரிவடைந்த காலம்.
ஆகவே, அதற்கேற்றார் போல அடிமை முறையும் அகலமாக பரவி நின்ற காலமாக இருந்திருக்கிறது. இதற்கான பல ஆதாரங்களைக் குறிப்பிடுகிற நூலாசிரியர், சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட வழக்கையை ஆய்வு செய்து கீழ்க்கண்ட முடிவுக்கு வருகிறார்.
- அடிமை முறை சோழர் காலத்தில் நிலவியது.
- அந்தணர் அடிமையாகும் வழக்கமில்லை.
- அடிமையாவோர் அடிமையாளருக்கு ஓலை எழுதிக் கொடுக்கும் பழக்கமுண்டு; இதற்கு ஆளோலை என்று பெயர்.
- ஆளோலையில் எழுதிக் கொடுத்தவரின் கையெழுத்துடன் சாட்சிகளின் கையெழுத்தும் இடம் பெற்றிருக்கும்.
- தன்னை மட்டுமின்றி, தன் பரம்பரையினரையும் அடிமையைக எழுதிக் கொடுக்கும் பழக்கம் உண்டு.
- அடிமை தன் பணியில் தவறினால் அது குறித்து அடிமையாளன் ஊர் வழக்கு மன்றங்களில் முறையிடலாம்.
- தக்க ஆளோலை இருப்பின் அடிமையாளனுக்கு அடிமையின் மேலுள்ள உரிமையினை ஊரவை உறுதிப்படுத்தும்.
வீட்டடிமையோடு, கோவில்களுக்கும், மடங்களுக்கும் கூட அடிமைகள் தானமாகவோ, விற்பனைக்கோ வழங்கப்பட்டார்கள். குழந்தைகள் கூட விற்கப்பட்டன. பெண்களும் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். அடிமைகளுக்கு முத்திரையிடும் பழக்கமும் உண்டு. பரம்பரை வழி தகப்பன், அவனது மகன், மகனுக்குப்பின் பேரன் என அடிமை முறை நீடிப்பது உண்டு. அடிமைகள் தப்பித்து ஓடினால், பிடித்து வந்து தண்டித்த வரலாறும் உண்டு.
விஜய நகரப் பேரரசுக் காலத்தில், சேதுபதிகள் ஆட்சிக் காலத்தில், தஞ்சையை மராத்தியர்கள் ஆண்ட காலத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் நிலவி வந்த அடிமை முறையின் கூறுகளை கோர்வைப்படுத்தித் தகுந்த ஆவணங்களோடு தமிழகத்து அடிமைமுறை பற்றி ஆதாரங்கள் தருகிறார். நம் தமிழகத்திலும் அடிமைகளின் வரலாறு மனிதாபிமானமற்ற கொடுமைகள் நிறைந்ததுதான்.
உதாரணமாக தஞ்சை மண்ணில் நிலச்சுவான்தார்களிடம் சிக்கிய அடிமைகளின் வரலாறு கண்ணீரும், செந்நீரும் கலந்த கொடிய வரலாறு. ஓர் அடிமை, உரிமையாளன் சோழர் காலத்திலேயே இறந்து விட்டால் அவனது ஏனைய சொத்துக்கள், உடமைகள் எப்படி அவனின் மக்களுக்கு வாரிசு உரிமையாகிறதோ, அதேபோல அவன் வைத்திருந்த அடிமையும், அடிமையின் மனைவியும் இறந்தவனின் மக்களுக்கு உரிமையாகிறார்கள்; அடிமைகள் விற்பனைக்கும் உரியவராகிறார்கள் என்ற வழக்கம் இருந்திருக்கிறது. இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இப்போதும் பறைசாற்றுகின்றன. விஜய நகர பேரரசின் காலத்திலும் ஆடு,மாடுகளைப் போல அடிமைகள் விற்கப்பட்ட ஓலைச் சான்றுகள் கிடைத்துள்ளன.
உதாரணமாக, கடலங்குடியிருக்கும் ராமச்சந்திர நாயக்கர் தன் அடிமைகளான முத்தன், மற்றொருவன் வெளிச்சான், அவன் பெண்சாதி பார்வதி ஆகியவர்களை கோபால சக்ரம் குறிகை பதினாலு பொன்னுக்கு குண்ண மருதூர் மாகணம் மங்க நல்லூரி லிருக்கும் சுப்பிரமணிய முதலியாருக்கு விற்ற செய்தி காணப்படுகிறது. இந்த ஓலையில் விற்றவர், விற்கப்பட்டவர், வாங்கியவர் ஆகிய மூவரின் பெயர்களும் உண்டு. இப்படி மேலும் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டது மட்டுமல்ல, சமூகத்தில் நிலவிய அடிமை முறையையும் எப்படி பாதுகாத்தார்கள் என்பதற்கு ஓர் உதாரணம். திருச்சி மாவட்டதிலிருந்த ஒரு பிராமணனுக்கு உரிமைப்பட்ட சில பள்ளர்குல அடிமைகள் திருச்சி மாவட்டத்திலிருந்து தப்பித்து கோவை மாவட்டம் சென்று விட்டனர். அவர்களைப் பிடித்து கோவை மாவட்டத்திலிருந்து மீண்டும் திருச்சிக்கு மாவட்ட பிராமண நிலக்கிழாரிடம் சேர்க்க வேண்டுமென்று சொல்லி திருச்சி ஆட்சித் தலைவர் கோவை ஆட்சித் தலைவருக்கு எழுதிய கடிதம்…
அவர்கள் இந்த மண்ணின் (திருச்சி மாவட்டம்) அடிமைகள். அவர்கள் சார்ந்திருக்கும் பண்ணையை விட்டுச் செல்லும் உரிமையற்றவர்கள். அந்தப் பண்ணையின் உரிமையாளரான பிராமணன் அவர்களின் உதவியின்றி சாகுபடி செய்ய முடியாத நிலையில் உள்ளான். அவர்கள் மீது அவனுக்குள்ள உரிமையை நிலைநாட்ட உதவியளிக்கப்படவில்லையானால் நிலம் தரிசாகக் கிடப்பதோடு அரசாங்கமும் இழப்பிற்குள்ளாகும் என்று எழுதியுள்ளார். பின்னர் ஆங்கிலேயர்களால் அடிமை ஒழிப்புச் சட்டம் வந்தது வேறு விஷயம். அது எவ்வளவு தூரம் செல்லுபடியானது என்பதும் மற்றொரு விஷயம். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் மட்டுமல்ல; இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் பண்ணை அடிமை முறை நீடிக்கவே செய்தது.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் தஞ்சை மண்ணில் அனுபவித்த கொடுமைகளை ஆசிரியர் நெஞ்சு கசிய விவரிக்கிறார். மனித குலத்திற்கே அவமானம். அங்கு அந்த இழிவைத் துடைக்க செங்கொடி இயக்கம் வீறு கொண்டு எழுந்ததையும், அடிமை விலங்குகள் நொறுக்கப்பட்டதையும் வெற்றிக் களிப்போடு விளக்குகிறார்.
அக்கால ஐரோப்பிய அடிமை முறையைப் போல், அண்மைக் காலம் வரை அமெரிக்காவில் நீடித்து இருந்த கறுப்பர் அடிமைபோல் தமிழகத்தில் அடிமை முறை அவ்வளவுக் கொடுமையானது அல்ல என வாதிடும் வகையறாக்களும் உண்டு.
இந்த வாதத்தினை முறியடிக்க ஆசிரியர் பல ஆதாரங்களைக் காட்டி, இரண்டு அடிமை முறைக்கும் உள்ள வேறுபாடுகளை புரிய வைக்கிறார். ஐரோப்பிய அடிமைகளைவிட மோசமான வாழ்க்கை நிலை இந்தியாவில், தமிழகத்தில் இருத்தது. இந்திய, தமிழக அடிமைமுறையில் அடிமைத்தனத்தோடு, தீண்டாமை என்ற கொடுமையையும் இந்திய மேட்டிமையினர் உருவாக்கி வைத்திருந்தனர். தீண்டாமை கட்டாயமானது, மீற முடியாதது. மனிதனை நிரந்தமாகக் கட்டிப்போடுவது.
தீண்டாமையோடு இணைந்த அடிமை முறை உலகிலிருந்த, இருக்கிற அடிமை முறைகளையெல்லாம் விட எவ்வளவு கொடுமையானது என்பது பற்றிய சமூகவியலார்கள் எழுதியுள்ள விளக்கங்களை நூலாசிரியர் மேற்கோள் காட்டியுள்ளார். இது பற்றி அம்பேத்காரின் வாதங்களையும் முன் வைக்கிறார்.
மார்க்சிய பார்வையில் தமிழகத்தில் நிலவிய – நிலவும் அடிமை முறை பற்றி ஆய்வு நடத்தி அதை பயனுள்ள வகையில் தமிழக வாசகர்களுக்குத் தந்துள்ள ஆ.சிவசுப்ரமணியன் பாராட்டுக்குரியவர். அவர் பணி இதுபோல் மேலும் பல தளங்களில் பரிணமிக்க வேண்டுமென விரும்புகிறோம். எனினும், நூலாசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் தமிழகத்தின் அடிமை முறையை வேறொரு கோணத்திலும் பார்க்கிறார்.
தமிழகத்தில் அடிமைகள் இருந்தார்கள். ஆனால், அடிமைச் சமுதாயம் இருத்தில்லை என முடிவுக்கு வருகிறார். அவர் மேலும் சொல்லுகிறார்: தமிழகத்தில் அடிமைகள் இருந்ததும், விலங்கு களைப்போல் அவர்களுக்குச் சூடு போட்டதும், பொருள்களைப் போல் விற்கப்பட்டதும், வாங்கப்பட்டதும், தானமளிக்கப்பட்டதும், சீதனமாக கொடுக்கப்பட்டதும், ஆள்பவர்களின் துணையுடன் அடக்கி ஒடுக்கப்பட்டதும், வரலாற்று ரீதியில் மறுக்கப்படவோ, மறைக்கப்படவோ முடியாத உண்மைகளாகும் என்கிறார். ஆனால், அந்த அடிமைகள் சமூகம் என்ற முறையில் அடிமைச் சமுதாயமாக இருந்ததில்லை என்கிறார். ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலத்திலும் கூட பண்னை அடிமை முறையும், அடிமை நிலைக்குச் சமமாக இருந்த ஒப்பந்தக் கூலி முயையும் வழக்கத்திலிருந்தாலும், சமூக அமைப்பில் ஒரு பெரும் சக்தியாக அடிமைகள் இல்லை. முதலாளித்துவம் தோன்றிய நாட்டிலிருந்து வந்த ஆங்கிலேயர்கள் தங்களை அறியாமலேயே முதலாளித்துவ வித்துக்களை இங்கு தூவினார்கள். இதன் விளைவாக குறிப்பிட்ட எல்லைக்கு மேல் அடிமை முறை வளர்ச்சியுறும் நிலை தோன்றவில்லை என்கிறார்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நாற்பதினாயிரம் குடிமக்களைக் கொண்ட ஏதன் நகரத்தில் எண்பதினாயிரம் அடிமைகள் இருந்தனர். அந்த அளவுக்கு அடிமைகள் எண்ணிக்கை தமிழகத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. ஏதன் போன்ற ரோம தொல் நாகரீக நாடுகளில் திறந்த வெளிச் செம்பு, ஈயச் சுரங்கம், திராட்சை மது தயாரிக்கும் தொழிற்கூடங்கள், பீங்கான் பாத்திரம் செய்யும் தொழிற்கூடங்கள் போன்றவைகளில் ஆயிரக்கணக்கில் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த அளவிற்குப் பொருள் உற்பத்தி முறை தமிழகத்தில் நிலவவில்லை. உற்பத்தி முறையின் வளர்ச்சிக் குறைவும், சுயதேவைப் பூர்த்தியுடைய கிராமங்களின் வளர்ச்சியுமாகும் என்கிறார். எனவேதான், அன்றைய தமிழ் மன்னன் முதலாம் ராஜேந்திரன் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, வென்று பல்லாயிரக்கணக்கான இளம் பெண்களை மட்டும் சிறைபிடித்து வந்தான். ஆண்களை சிறை பிடித்து வராமைக்குக் காரணம் அவர்களின் உழைப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமளவிற்கு உற்பத்தி சக்திகள் வளராமையே. தங்கள் போகப் பொருளாகவும், கோவில்களில் பணிபுரியவும் பெண் அடிமைகளைக் கொண்டு வந்தனர் என்கிறார். இவை சிந்தனைக்குரியவைதான். ஆனால், இந்தியா ஒரு நிலவுடமை நாடாக இருந்ததும், அதற்கேற்ப உற்பத்தி முறை வளர்ந்ததும், அந்த உற்பத்தி முறையில் அடித்தளத்து மக்கள், அடிமைப்பட்ட மக்கள் ஈடுபட்டதும் உண்மையே. அந்த அடிமைகள் நில உற்பத்தியில் ஈடுபட்டதுமின்றி மிக,மிகக் கேவலமான இழிவானப் பணிகளிலும் ஈடுபட வைக்கப்பட்டதும் உண்மையே!
அவர்கள் ஆண்டவனின் காலில் பிறந்த சூத்திரர்கள், அதற்கும் அடுத்து கீழான ஒரு பகுதியினர் சண்டாளர்கள் என பிரிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு ஒரு சமூகமாக வாழ்ந்ததும் உண்மையே. ஆனால் எழுச்சியும், சமூக சக்தியும் அவர்களிடையே வளர முடியவில்லை என்பதும் உண்மையே.
அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக எந்த தகுதிக்கும் அவர்கள் உரிமையாளர்கள் அல்லர். எந்த ஒரு சிறு உற்பத்தி உடமைக்கும் அவர்கள் உரியவர் அல்லர். கல்வி அறிவு கூட அவர்களுக்குக் கூடாது. சிந்தனைத் தெளிவே காட்டக்கூடாது. உயர்சாதிக்காரர்கள் கண்ணில் படவேக் கூடாது. ஆண்டவனை மனதால் கூட அவர்கள் தரிசிக்கக் கூடாது. ஊரின் ஒதுக்குப்புறமாக வைக்கப்பட்டவர்கள். அவர்களை என்றென்றும் அப்படியே அடக்கி வைக்க அவர்களுக்கு மேல் சாதிப் படிகள், அதற்குமேல் அவர்கள் என்றும் அசையாத மன அமைதியோடு வாழ புனிதம் என்ற பெயரால் மதக்கட்டுப்பாடு! மதம் ஒரு பலமான சமூகக் கட்டுமானம். ஆண்டவனின் இந்த படைப்பு அமைப்பில் யாரும் தலையிட முடியாது என்கிற சமூகத்தால் கட்டப்பட்ட சிந்தனைச் சிறை.
இது இந்தியாவிற்கென்றே, தமிழகத்திற்கென்றே உருவாக்கப்பட்ட மிக வஞ்சமான அறிவு பலத்தோடு கூடிய, ஆண்டவனின் பேரால், மதத்தின் பேரால், புனிதத்தின் பேரால் இயங்கும் சமூக அமைப்பாகும். இந்த சமூக ஏற்பாடுதான் உற்பத்தி சக்திகள் வளராமல் இருக்கவும், உற்பத்தி முறையில் நவீன ஏற்றம் கொள்ளாமல் இருக்கவும் பார்த்துக் கொண்டது. ஆதிக்க சக்திகளின் அரிய ஏற்பாடு. ஆகவேதான், இங்கு அடிமைகள் நிலவுடைமை உற்பத்தியில் ஈடுபட்டாலும், சமூகமாக இயங்கினாலும், எண்ணிக்கையிலும் கணிசமாக இருந்தாலும், அடிமைகளிடையே கூட சாதிப்படிகள் வைத்து விட்டதாலும், ஒற்றுமை உருவாகாது, என்றும் எழுந்திருக்க முடியாது போனார்கள். அதிலும் பெரிய சோகம், இப்படி இருப்பது. நியாயம், நீதி, தர்மம் என்று ஒடுக்கப்பட்டவர்களே கற்பிக்கப்பட்டு மனத்திருப்தியோடு வாழ்வை அமைதியாக ஓட்டுவதற்கு பழகிபோனதுதான்.
ஆகவேதான் இந்தியாவில், தமிழகத்தில் அடிமைகள் சமூகமாக இருந்தாலும் ஒரு சக்தியாக எழுந்திருக்க முடியாமல் போனார்கள். எனவே, தமிழகத்தில் அடிமைகள் ஒரு சமூகமாக இல்லை என்று நூலாசிரியர் சொல்லுவது சரிதானா என்று யோசிக்க வேண்டும்.
நூல் கிடைக்குமிடம்
தமிழகத்தில் அடிமை முறை ஆசிரியர் : ஆ.சிவசுப்ரமணியன்
விலை ரூ.80/-
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001.
தொலைபேசி: 91 – 4652 278525