2004 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசீய ஜனநாயக முன்னணி தோல்வியுற்றது. இது சர்வதேச நிதி வட்டாரங்களில் துயரத்தை ஏற்படுத்தியது. இந்தியா போன்ற வளர்முக நாடுகளில் ஏன் அடிக்கடி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கேள்வியை, வால் டீரீட் ஜர்னல் தலையங்கத்தில் எழுப்பியது. இந்திய பொருளாதாரத்தில் அன்னிய முதலீட்டாளர்களுக்கும் ஒரு பங்குண்டு. ஆகவே தேர்தலின் முடிவு மக்கள் விருப்பப்படி விட்டுவிட முடியாது எனவும் இப்பத்திரிகை எழுதியது.
வாஷிங்டனில் உள்ள சர்வதேச நிதி நிறுவனம் / உலக வங்கியின் நிதித்துறை அதிகார வர்க்கமும், இந்திய முதலாளிகளும் கூட இதே போல கருத்தை பிரதிபலித்தனர்.
டாக்டர் மன்மோகன்சிங், சிதம்பரம், அலுவாலியா – புதிய தாராளமயக் கொள்கை ஆதரவாளர்கள் பொருளாதார பிரச்சனைகளில் முடிவெடுப்பர் என்பது தெரிந்த பிறகே உள்நாட்டு / வெளிநாட்டு மூலதனம் அமைதியானது. நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாமல், சிதம்பரம் மும்பாய்க்கு சென்று பங்கு சந்தை பிரமுகர்கள் மத்தியில் தாராளமய கொள்கைகள் நீடிக்கும் என வாக்குறுதி தந்தார்.
வேலையளிப்பு உறுதி திட்டம், சமூக செலவினங்களை அதிகரிப்பது, பொதுத்துறை பாதுகாப்பு போன்ற குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் உள்ளவை தாராளமயக் கொள்கைக்கு விரோதமானது. அரசின் தலையீடுகள் என்பது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும் என நிதி மூலதனம் கருதுகிறது.
பொதுத்துறை என்பது தற்காலிக ஏற்பாடாக இருக்க வேண்டும் என முதலாளிகள் விரும்புகின்றனர். உற்பத்தியில் ஈடுபடாத பங்குச்சந்தை முதலாளிகளை, கூப்பன் கிழிப்பவர்கள் என லெனின் வர்ணிக்கிறார். முதலாளித்துவ பொருளாதாரம் செழிப்பாக இருக்க, பங்குச்சந்தை செழிப்பாக இருக்க வேண்டும் என்ற மாயை திட்டமிட்டு பரப்புகின்றனர். அரசு தலையிட்டு வேலைவாய்ப்பும், நிவாரணமும் கொடுத்துவிட்டால் இந்த மாயை பொய்யாகிவிடும் என்ற பயம் நிதி மூலதனத்திற்கு உள்ளது. அடிமாட்டு விலைக்கு பொதுத்துறை வாங்குவது அதன் கனவு. முதலாளிகளின் மீது விதிக்கப்படும் வரி உயர்த்தக்கூடாது என்ற ஆதங்கமும் முதலாளிகளுக்கு உள்ளது.
தேசீய ஜனநாயக முன்னணி அரசு நிறைவேற்றிய நிதி பொறுப்பு மற்றும் நிர்வாக சட்டத்தை (FRBM ACT), ஐ.மு. அரசு அப்படியே வைத்துக் கொண்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை, நிதிபற்றாக்குறை தாண்டக்கூடாது என்பதே இச்சட்டம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எவ்வளவு சதம் குறைந்தபட்சம் வரி விதிக்கப்படும் என்றோ, குறைந்தபட்சம் சமூக துறை செலவினம் எவ்வளவு என்றோ சட்டம் இல்லை. எனவே பட்ஜெட் நிர்வாக சட்டம் அபத்தமானது. பற்றாக்குறை பட்ஜெட் ஆபத்தானது அல்ல. உதாரணமாக அரசு, வங்கியிலிருந்து ரூ.100 கடன் வாங்குகிறது என வைத்துக்கொள்வோம். இதைக்கொண்டு இந்திய உணவுக்கழகத்தில் தேங்கி கிடக்கும் உணவு தானியத்தை வாங்கி வேலையளிப்பு திட்டத்தில் செலவிட்டால், உணவு கழகம் வங்கியில் ரூ.100-ஐ செலுத்தி கடனை குறைக்கும். பட்ஜெட்டில் உணவு கழக செலவினங்களை சேர்த்தால் (70ம் ஆண்டுகளின் துவக்கம் வரை சேர்க்கப்பட்டது) அரசின் நிதி பற்றாக்குறை உயராது. ஆனால் இது சேர்க்கப்படுவதில்லை. எனவே நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி அரசின் செலவினங்களை குறைப்பதே பட்ஜெட் சட்டம் செய்யும் வேலை.
மனிதாபிமான முகத்தோடு கூடிய தாராளமயம் என்பது அர்த்தமற்றது. இடதுசாரிகளின் ஆதரவு நீடிக்க வேண்டுமானால் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள மக்களுக்கு சாதகமான திட்டங்கள் அமுலாக்கப்பட வேண்டும். இது சர்வதேச நிதி மூலதனம் மற்றும் உள்நாட்டு பெரு முதலாளிகளின் நலன்களுக்கு முரணானது. அரசு தன் விருப்பம்போல தாராளமயக்கொள்கையை அமுலாக்க முடியாமல், ஒவ்வொரு கட்டத்திலும் இடதுசாரிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
வேலையளிப்பு உறுதி திட்டம்
நகரப்புற, கிராமப்புற குடும்பங்களில் குடும்பத்திற்கு ஒருவருக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை உத்தரவாதம் என காங்கிர கட்சியின் தேர்தல் அறிக்கை கூறியது. குறைந்தபட்ச பொது திட்டத்தில் நகரப்புறம் என்பது விடுபட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்றால் பெண்களுக்கு வேலை கிடைக்காது. பாரபட்சமான அணுகுமுறை தான் வரும்.
வேலையளிப்பு உறுதி திட்ட சட்ட முன்வடிவு நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனையில் உள்ளது. சட்ட முன் வடிவில், பல குறைகள் உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் நாடு முழுவதும் அமுலாக்கம் என்பது இல்லை. அமுலாக்கப்படும் இடத்திலும் அரசு நினைத்தால் வாப பெற்றுவிடலாம். எல்லோருக்கும் வேலை என்பதற்கு பதிலாக வறுமைக் கோட்டிற்கும் கீழுள்ள குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என சட்ட முன்வடிவு கூறுகிறது. வறுமை கோடு என்பது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது ; நிர்ணயிக்கும் முறையிலும் கோளாறுகள் உள்ளன. சட்டப்படியான குறைந்தபட்சக் கூலியை உறுதி செய்யாமல், பெயரளவு சம்பளம் மட்டுமே கொடுக்கும் நிலை உள்ளது.
வேலையளிப்பு உறுதி திட்டம் உறுதியாக அமுலாக்கும் அரசியல் உறுதிப்பாடு ஆட்சியாளர்களுக்கு இல்லை. ஆண்டுக்கு ரூ.25000 கோடி செலவாகும் என திட்டக் கமிஷன் மதிப்பிட்டுள்ளது. இவ்வளவு பணம் ஏது? நிர்வாக கஷ்டங்களும் உள்ளன. ஏழைகளுக்கு சன்மானம் வழங்குவதற்கு பதில் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை உயர்த்தி அர்த்தமுள்ள உற்பத்தியில் வேலைவாய்ப்பை உருவாக்கலாமே என்றெல்லாம் எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர். உலக வங்கி போன்ற நிறுவனம் மூலம் அமுலாக்கலாம் என்ற சிந்தனையும் அரசிடம் உள்ளது. உலக வங்கி, தனது பங்கிற்கு எவ்வளவு சுருட்டலாம் என்பதில் தான் குறியாக இருக்கும். மொத்தத்தில் மனிதாபிமான முகத்துடன் கூடிய தாராளமயம் என்பதன் பேரால் ஏழை எளிய மக்களுக்கு நீதி மறுக்கப்படும்.
நிதித்துறை சீரழிப்பு
1990 மார்ச்சில் மொத்த வங்கிக் கடனில் 15.9 சதவீதம் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு பிறகு, இது 9.9. சதவீதமாக குறைந்துள்ளது. எனவே விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களின் பிடியில் சிக்கி, ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஐ.மு. அரசு இந்த நிலைமையை மாற்றுவதற்கு பதிலாக, சர்வதேச நிதி மூலதனத்தின் தாளத்திற்கேற்ப, வங்கி துறையை ஆட்டுவிக்க முடிவு செய்துள்ளது.
நாட்டின் மொத்த அன்னிய செலாவணி கையிருப்பு 14000 கோடி டாலராக உயர்த்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர், இத்தகைய நிதி வரவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்கிறார். டாலர்களின் பார்க்கிங் இடமாக நம் நாடு மாறியுள்ளது என்கிறார். இந்த இருப்புக்கு வெளிநாட்டினருக்கு வட்டி நிறைய நாம் கொட்ட வேண்டியுள்ளது. கிழக்கு ஆசிய நெருக்கடி போல நம் நாட்டிலும் ஏற்பட வாய்ப்புண்டு. செலாவணி கையிருப்பு பங்குச்சந்தை வர்த்தக சூதாட்டத்திற்கே பயன்படுகிறது ; தேசத்தின் கடன்களை அடைக்கவோ, உற்பத்தி பெருக்கவோ பயன்படுவதில்லை. அந்நிய நிதி முதலீட்டாளர்களின் மனம் குளிரச்செய்வதற்காக, அரசு சில நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்கியுள்ளது. மூலதன கணக்கில் முழுமையான பரிவர்த்தனை அனுமதிப்பது ; பொதுத்துறை வங்கிகள் இணைப்பது ; நம் நாட்டு தனியார்வங்கிகளை அன்னிய வங்கிகள் ஏற்று நடத்த அனுமதிப்பது (பின்னால் அரசு வங்கிகளை ஏற்க அனுமதிப்பது) பங்கு சந்தைகளிலும் சரக்கு சந்தைகளிலும் நுழைய வங்கிகளுக்கு அனுமதி போன்றவையெல்லாம் முன்னுரிமை கடன்களை (விவசாயிகளுக்கு, சிறுதொழிலுக்கு, நலிந்தோருக்கு) இல்லாமல் செய்துவிடும். இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கை களுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
நேரடி அன்னிய மூலதனம்
நியூயார்க் நகரில் நிதியீட்டாளர்களிடம் மன்மோகன்சிங் மன்றாடி என்ன கேட்டார் தெரியுமா? அடுத்த 15 ஆண்டுகளில் 15000 கோடி டாலர் நேரடி அன்னிய மூலதனம். எதற்காம்? உள்முக கட்டமைப்பு அபிவிருத்திக்காக.
சீனாவில் அயல்நாட்டு வர்த்தகத்தில் உபரி மூலம் அன்னிய செலாவணி இருப்பு உயர்ந்துள்ளது. யூக வணிகம் செய்யும் வெளிநாட்டு மூலதன வரவு அல்ல இதற்கு காரணம்.
வெளிநாட்டு முதலீட்டார்களை கவர்வதற்காக, 2004-05 பட்ஜெட்டில் தொலைதொடர்பு, சிவில் விமான போக்குவரத்து, காப்பீடு துறைகளில் அன்னிய முதலீடு உயரும் என அறிவித்தனர். விமான போக்குவரத்தில் 40 சதம் என்பது 49 சதம் நேரடி அன்னிய முதலீடாகவும், தொலைதொடர்பு துறையில் 49 சதம் என்பது 74 சதமாகவும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதற்கெல்லாம் நாடாளுமன்ற அனுமதி தேவையில்லை என்பது வேதனையானது. நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக உள்ள இந்த முடிவை இடதுசாரிகள் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர்.
2005-06 பட்ஜெட்டில், பென்சன் துறையில் நேரடி அன்னிய மூலதனம் அனுமதிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு முதலாளிகள் பங்குசந்தையில் யூக வணிகம் நடத்தி பென்சன் நிதியை நாசம் செய்து விடுவர். யாருமே ஓய்வு கால நிதியில் பாதுகாப்பு தான் நாடுவார்கள். ரிக் எடுக்கும் நிலையில் அவர்கள் இல்லை. தனியார் முதலாளிகளிடம் பென்சன் நிதி சென்றுவிட்டால், பென்சனை பெறுவதற்கு சட்டத்தின் உதவி நாடி அலைக்கழிய வேண்டிய நிலைஏற்பட்டுவிடும்.
கண்டுபிடிப்பு உரிமை சட்டத்திருத்தம்
1970ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய காப்புரிமை சட்டம், வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்படும் மருந்தை, வேறு செய்முறைகளில் மாற்றி உற்பத்தி செய்ய வகை செய்தது. இதனால் மருந்துகள் விலை குறைந்தது.
பாராளுமன்றத்தின் முன் அனுமதி பெறாமலேயே, உலக வர்த்தக தாபனத்தின் வர்த்தகம் சம்பந்தபட்ட அறிவு சார் சொத்துரிமை (TRIPS) உடன்பாட்டில் ஏற்கனவே இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளதால், 7 ஆண்டுகள் செய்முறைக்கு உரிமை என்பதற்கு பதிலாக, 20 ஆண்டு பொருளுக்கு உரிமை என திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக மத்திய அரசு கொண்டு வந்த திருத்த சட்டத்தில் பல திருத்தங்களை இடதுசாரிகள் வலியுறுத்தி வெற்றி பெற்றுள்ளனர். மேலும் 2 திருத்தம் நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு விடப்பட்டுள்ளது.
உலக வர்த்தக தாபனத்தில் அறிவுகள் சொத்துரிமை குறித்து மாற்றங்களை ஏற்படுத்த மறுபேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் . இதை வலியுறுத்தி பிரமாண்டமான இயக்கம் தேவை.
2005 -06 பட்ஜெட்
சுரங்கத் தொழிலும், பென்சன் துறையிலும் நேரடி அன்னிய மூலதனம் அதிகரிக்கும் முடிவு அறிவிக்கப்பட்டது. தேசத்தின் இயற்கை ஆதாரங்கள் தாதுப் பொருட்கள் உள்ள சுரங்கங்களை அன்னிய முலாளிகள் கட்டுப்பாட்டில் விட்டால், வெகு சீக்கிரம் சுரங்கத்தை மலட்டு சுரங்கமாக ஆக்கிவிடுவார்கள். பர்மா ஷெல் பர்மாவின் பெட்ரோலிய வளத்தை சுரண்டி முடித்தது.
உணவு தானிய சுய சார்புக்கு வேட்டு வைக்கும் மாற்று பயிர் திட்டம் அறிவிக்கப்பட்டது. இயந்திரங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் உள்நாட்டு இயந்திர உற்பத்தி பாதிப்பு ! நிறுவனங்களின் வருமான வரி 35 சதத்திலிருந்து 30 சதமாக குறைக்கப்பட்டது. தொழிலாளர்கள் சந்தை சீர்திருத்தம், அதாவது, இஷ்டம் போல் ஆட்குறைப்புக்கு அனுமதி என்பதெல்லாம் பேசப்படுகிறது.
சமூக துறை, கிராமப்புற வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்த வரிவருவாய் இல்லையேல், இந்த செலவு வெட்டப்படும் அபாயம் உள்ளது. வேலைக்கான உணவு திட்டத்திற்காக 50 லட்சம் டன் உணவு தானிய செலவினத்தை பட்ஜெட்டில் கொண்டுவராமல், இந்திய உணவு கழகம் திட்டத்திற்காக கடன் கொடுத்ததாக காட்டப்படுகிறது. மானிய விலையில் கொடுப்பதால், உணவு கழகத்திற்கு நஷ்டம். உணவு கழகத்தை மூட வேண்டிய நிலை ஏற்படலாம்.
விவசாய உற்பத்தி பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். கோடிக்கணக்கான விவசாயிகள், விவசாய தொழி லாளர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டது விவசாயம். இதைவிட்டால் அவர்கள் எங்கு செல்ல முடியும்? என நிபுணர் எம்.எ.சுவாமிநாதன் வாதிடுகிறார்.
பெட்ரோல்,டீசல் லிட்டருக்கு 50 பைசா கூடுதல் வரி என்பது தேவையற்றது. டீசல் விலை உயர்ந்தால் சரக்கு கட்டணம் உயரும். சகல பொருட்களின் விலைகளும் உயரும்.
பொதுத்துறைக்கு அபாயம்
பி.எச்.இ.எல். அரசின் பங்கு மூலதனம் 67 சதத்திலிருந்து 57 சதமாக குறைக்கும் முடிவை அரசு எடுத்துள்ளது. நவரத்னா கம்பெனிக்கே இந்த நிலை என்றால், பொதுத்துறையின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
முடிவாக
அன்னிய நிதி மூலதனம் மற்றும் உள்நாட்டு முதலாளிகளின் நலன்களை காக்கும் தாராளமய கொள்கைகளா? அல்லது இடதுசாரிகள் நிர்ப்பந்தப்படுத்தும் சாமான்ய மக்களின் நலன்களா? ஐ.மு. அரசு இரண்டையும் ஒரு சேர நிறைவேற்ற முடியாது. மக்களின் நலன்களை முன்னிருத்தி அரசை செயல்பட வைப்பது, கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களின் அலை அலையென போராட்டங்கள் உருவாவதன் மூலம் தான் சாத்தியம்.
(ஐ.மு. அரசும் பொருளாதார கொள்கைகளும் என்ற தலைப்பில் பிரபாத் பட்நாயக் மார்க்சிஸ்ட் ஆங்கில இதழில் எழுதிய கட்டுரையின் தழுவல்)