மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பஞ்சாலைகளில் இன்றைய நிலை


அமெரிக்காவின் மாபெரும் மோட்டார் உற்பத்தியாளர்கள், ஜெனரல் மோட்டார், தொழிலாளர்கள் தங்களது ஊதிய உயர்வுக்காக நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்த பொழுது நிர்வாகம் மறுத்தது, தொழிற்சங்கமும், விடாப்பிடியாக தங்களது நியாயத்தை நிலை நிறுத்த உறுதியாக நிற்க, உற்பத்தி முடக்கம் ஏற்படும் நிலை, நிர்வாகம் தங்களது உயர் மட்டக்குழுவை கூட்டியது. அவர்களும், ஊதிய உயர்வால், கம்பெனி பல கோடி இழப்பு ஏற்படும். புது, புது கம்பெனிகளின் வரவால் சந்தைப் போட்டியுள்ளதாகிவிட்டது. எனவே ஊதிய உயர்வு சாத்தியமில்லை என அறிவித்தது. தொழிற்சங்கமும் தங்களது கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் வேலைநிறுத்தம் செய்வது உறுதி என அறிவித்தது.

இது நிர்வாகத்திற்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அது நிர்வாகம் கம்ப்யூட்டர்களை உபயோகிக்க ஏற்பாடு செய்திருந்த சமயம். உற்பத்தி ஆலோசனைகளில் பொறுப்பை யூனியன் தலைவர் ஏற்று இருந்தார். தலைவர் இந்தப் பிரச்சனையை கம்ப்யூட்டரிடம் விட்டு விடுவது அது தரும் தகவல் அடிப்படையில் பிரச்சனையை அணுகுவது என முடிவு செய்யப்பட்டது.  அதன்படி சந்தை நிலவரம், கம்பெனியின் உற்பத்தி திறன் மற்றும் தொழிலாளரின் ஊதிய உயர்வு, மருத்துவ செலவு, விடுமுறை இவைகளால் ஏற்படும் இழப்பு இப்படி பல விபரங்கள் கம்ப்யூட்டரிடம் அளிக்கப்பட்டன.

கம்ப்யூட்டரின் முடிவு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஊதிய உயர்வு தொழிலாளருக்கு அளிக்கப்பட்டால், கம்பெனியின் இலாபம் அதிகரிக்கும். சந்தை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் என அறிக்கை தந்தது. நிர்வாகமும் அந்த மாதமே ஊதிய உயர்வும் இதர சலுகைகள் வழங்குவதாக அறிவித்தது. இதன் பிறகு கம்பெனியின் வளர்ச்சி சந்தையின் வாய்ப்புகள் கூடியது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது எப்படி சாத்தியமானது? எந்த பக்கமும் சாய்வு இல்லாத நிலை. அதை விட உளவியல் ரீதியான பகுப்பாய்வு செய்யப்பட்டது. தொழிலாளருக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வால் உற்பத்தி அதிகரிக்கும், தரம் உள்ளதாகவும் சந்தையில் வாய்ப்புகள் பிரகாசமானது. கம்பெனியின் இலாபங்களும் அதிகரித்தன.

இதற்கு நேர் எதிராக ஒரு வழக்கு தேசிய பஞ்சாலைக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய ஏற்ற தாழ்வு பற்றிய வழக்கில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பார்ப்போம். கார்பரேட் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போலவே எங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். ஏனெனில் ஒரே மாதிரியான வேலை ஆனால் அவர்களுக்கு மத்திய அரசின் ஊதிய உயர்வும், சலுகைகளும் கிடையாது; எனவே வழங்க வேண்டுமென கடந்த 30 ஆண்டுகால நடைபெற்ற வழக்கு இதன் பேரில் வழங்கிய தீர்ப்பில் நீதிபதி அவர்கள் ஊதிய விகிதம் ஓர் அளவுக்கு ஏற்ற தாழ்வு இருக்கலாம். ஒரே அடியாக மிகுந்த வேறுபாடு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் ஊதிய உயர்வு கேட்கும் பொழுது ஆலை நஷ்டம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. நிறுவனத்தின் நஷ்டம் அனைவருக்கும் பொதுவானது. விரைவில் ஒரு கமிஷனை அமைத்து நான்கு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டு பஞ்சாலை ஊழியர்கள் அந்த ஊதிய உயர்வை பெற்று வருகிறார்கள்.

மற்றொரு நிகழ்வு, கடந்த பதினைந்து வருடங்களாக தனியார் பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வில்லை. 1989ஆம் ஆண்டு முடிவுற்ற பல கட்டங்களில் சைமாவிடமும், அரசிடமும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பயன் அளிக்காமல் அரசு, 2001 செப்டம்பரில் 10பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆலை அதிபர்கள் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர். மேற்கொண்டு அரசோ, பிளவுபட்டு நிற்கும் தொழிற்சங்க தலைமைகளோ அக்கறையின்றி இருந்ததால் இந்நிலை, அதைவிட கொடுமை தமிழக அரசு அறிவித்த இடைக்கால நிவாரணம் கூட மத்திய அரசின் கீழ் இயங்கும் ஆலைத் தொழிலாளர் வழங்க மறுத்து வருகிறது. உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எந்தவித உயர்வுமில்லை என்ற நிலை தொழிலாளரின் மனோ நிலையின் பாதிப்புகளை வார்த்தையில் வழங்க முடியாது.

பொதுத்துறை ஆலைகளின் நலிவுக்கு காரணம் அதிகாரிகளே. பல ஊழல்களுக்கு இவர்களே காரணமாக உள்ளனர். போனஸ் சட்டத் திருத்தம் செய்யப்படாமல் இருப்பதால் ஆலை விட்டு வெளியேறும் தொழிலாளர்களுக்கு ரூ. 30,000 மேல் பிடித்தம் செய்யப்படுகிறது.  சட்டத்திற்கு மேற்பட்டு வழங்கிய போனஸ் என்பதால் இந்த பிடித்தம். தொழிலாளரிடம் பிடித்தம் செய்யப்பட்ட எந்த தொகையும் அந்தந்த துறைகளுக்கே வழங்கப்படுவதில்லை. இதனால் தொழிலாளர் படும் சிரமங்கள் சொல்லி மாளாது. தனியார் ஆலை அதிபர்களை விட வசதியான வாழ்வு, அதிகாரம் பொது நிறுவனம் என்ற நிலை மறந்து தான்தோன்றித்தனமான பல முடிவுகளால் பல ஆலைகளின் நலிவுக்கு இவர்களே காரணம்.

தனியார் ஆலை அதிபர்களே அரசிடம் கிடைக்கும் சலுகை, வங்கிகளில் பெறப்படும் கடன்கள் முறையாக பயன்படுத்தாது, குடும்பக் காரணங்களுக்காக ஆலை மூடல், என நீண்டு கொண்டே இருக்கும் காரணங்கள். இவைகளில் தொழிலாளர்கள் மீதுதான் தாக்குதல் தொடர்கிறது.

இவைகளையெல்லாம் கவணிக்க வேண்டிய தொழிலாளர் துறை என்ன செய்கிறது என்பதை விட அவர்கள் யாருக்கு சேவை செய்கிறார்கள் என்றுதான் கேட்க தோன்றுகிறது. சட்ட மீறல்கள், பகிரங்கமாக இருப்பதும் இவர்கள் ஆலை அதிபர்களுக்கு சேவை செய்வதும் பிரச்சினைகள் வரும் பொழுது அதற்கான தீர்வுகள் காண்பதைவிட ஆலோசனைகளை வழங்கிவிட்டு ஒதுங்கி விடுவது என்ற நிலைதான் உள்ளது. தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட எந்த தொகையையும், அந்தந்த துறைக்கு செலுத்துவதில்லை, பி.எப்., இ.எஸ்.ஐ., எல்.ஐ.சி. பண்டகசாலை, வங்கிகள் என இப்படி செலுத்தவில்லையானால் ஒரு வருட ஜெயில் தண்டனையும் அபராதமும் உண்டு. ஆனால் இதுநாள் வரை எந்த முதலாளிகளும் இந்த தண்டனையை பெறவில்லை. இப்படி கூறிக் கொண்டே போகலாம். இவைகளுக்கு காரணம் என்ன என்பதுதான் நம்முன்னே இருக்கும் கேள்வி?

பஞ்சாலைகளில் அடக்குமுறை தலை விரித்து ஆடிய கட்டம் 1967 வரை இருந்தது. அன்று ஆட்சி செய்த கங்கிரஸ் கட்சியின் கெள்கைகளை எதிர்த்தவர்கள் இடதுசாரிகள் மட்டுமே அவர்களின் தன்னலமற்ற தியாகத்தால், தொழிலாளர்களுடன் தொழிலாளியாக வாழ்ந்தார்கள், அன்றைய தொழிற்சங்க வேலைகள், ஒரு சேவை மனப்பான்மையுடன் ஈடுபட்டு உடல், பொருள், ஆவி அனைத்தையும் அற்பணித்தனர். அவர்கள் சந்தித்த அடக்குமுறைகள் ஏராளம் போராட்டங்களில் களப்பலியான சின்னியம்பாளையம் தியாகிகள், ஸ்டேன்ஸ் மில் தியாகிகள், இலட்சுமி மில்ஸ் தியாகிகள் என நீண்டுக் கொண்டே போகும். எத்தனை வழக்குகள், எத்தனை துரோகங்கள் இவைகளை சந்தித்த தலைவர்கள் பி.ஆர்., ஜீவா, கே.ஆர்., வி.பி. சிந்தன் என நீளும் பட்டியல். அப்பொழுதே காங்கிரசின் தொழிலாளர் சங்கம் ஒவ்வொரு பிராந்திய அளவில் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து வர்க்க விரோதிகளாகவே செயல்பட்டனர்.

தொழிலாளர்களின் அறியாமையும், பாமரத்தனமான நம்பிக்கைகளும் அவர்களுக்கு சாதகமாக இருந்தது கம்யூனிஸ்ட்டுகள் பற்றிய தவறான பிரச்சாரங்கள் ஆழமாக தொழிலாளர்கள் மத்தியில் விதைக்கப்பட்டது. இடதுசாரிகளின் தியாகங்களும், சேவைகளும் தொழிலாளர் மத்தியில் இருந்து அகற்ற திராவிட கட்சிகள் தங்களது தொழிலாளர் அமைப்புகளை தொடங்கினர். அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக நின்றனர். மேடைகளில் தொழிலாளர் நலன் பற்றியும், தமிழகத்தின் தொழில் பற்றியும் வார்த்தை ஜாலம் புரிந்தனர். எதார்த்தத்தில் தொழிற்சங்கங்களின் ஜனநாயகத்தை மெல்ல, மெல்ல நீர்த்துப் போகச் செய்தார்கள்.

கூட்டுப் போராட்டம், கூட்டு பேரம், கூட்டு தலைமை விடுத்து தனிப் போராட்டம், தனிப்பேரம், தனிநபர் தலைமைகள், ஜாதியம், பணப்பட்டுவாடாக்கள், பிரச்சினைகளில் சமரசம் பிரித்தாளும் சூழ்ச்சி, தொழிற்சங்கங்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு இல்லாமை, தொலை நோக்கு இன்மை ஆகியவை தலைவிரித்தாடுகின்றன. கூட்டாக போராடினால் தங்களது பங்கு குறையும் என்ற மனோ நிலையை பிரித்தாளும் சூழ்ச்சிகள் மூலம் தொழிலாளர்களிடையே உருவாக்கப்பட்டுள்ளன. பஞ்சாலைகளை படுநாசம் செய்த புதிய பொருளாதார கொள்கை, புதிய ஜவுளிக் கொள்கை, உலகமயமாக்கல், தாக்குதல் பற்றிய அறியாமை பரவலாக உள்ளது. இதனை இடதுசாரிகளே மக்களிடையே பிரச்சாரம் செய்கின்றனர். இதன் இடையே நடந்த தொழிலாளர் விரோத செயல்கள், ஊதிய குறைப்பு, ஆலை மூடல், நிரந்தர தொழிலாளி வெளியேற்றம், தினக்கூலி, காண்ட்டிராக்ட் முறை கேங்கூலி, திருமண திட்டம் என்ற நிலை இன்று உள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் மீதும், தொழிற்சங்கங்கள் மீதும் ஆலை அதிபர்களுக்கு இருந்த பயம் கலந்த மரியாதையை இந்த முதலாளித்துவ சங்கங்களின் நிரந்தர தலைவர்களின் தனிபேரத்தின் மூலம் தகர்த்தெரிந்தனர். ஒவ்வொரு முறை போராட்டம் வரும் பொழுது ஆட்சியில் இருக்கும் கட்சியின் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் தலைவர்கள் புகழ்பாடி தாங்கள் பிரச்சினையை முடித்துவைப்பதாக வீராவேசம் இடுவார்கள். இப்படித்தான் பல உரிமைகள் பறிக்கப்பட்டது.

இளம் தொழிலாளர்களுக்கு கடந்த கால வரலாறுகள் தெரியாது குறுகிய எண்ணங்களை பரப்புகிற சூழலில் தான் சார்ந்த தொழில் பற்றிய அரசியல், பொருளாதார ஞானம் இல்லாதது, அறியாமை பயம் என்ற நிலைபாடுகளும், ஜாதியம், பணப்பட்டுவாடாக்கள், இப்படி பல விதங்களில் அவர்களைச் சுற்றி ஒரு வலை பின்னப்பட்டு உள்ளது. இதனால் தாங்கள் பெற்ற உரிமைகள் பறிபோவதைப் முனகிக் கொண்டே ஏற்கிற நிலையில்தான் அவர்கள் உள்ளனர்.

இன்று இடதுசாரி அரசியலை தழுவி நிற்காமல், தொழிலாளர்கள், விவசாயிகள் வாழும் உரிமையை காக்க முடியாது என்ற நிலை உள்ளது. பிரமைகள் விலகி போராட்ட உணர்வுகள் அரும்பி வருகிறது. மத்திய அரசிற்கு இடதுசாரி கட்சிகளின் நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவு கொடுப்பதற்கு காரணங்களை மக்கள் பார்க்கத் துவங்கியுள்ளனர். நாம் முயன்றால் நல்ல திருப்பம் ஏற்படும் என்பதின் அறிகுறிகள் இவைகள்.



%d bloggers like this: