மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


வீரம் விளைந்தது – வியட்நாம் எழுந்தது


படைப்பிரிவுகளின் ஏற்ற தாழ்வினை பார்த்து, சிலர் நமது எதிர்ப்பினை, வெட்டுக்கிளிகளுக்கும் யானைகளுக்கும் நடக்கும் சண்டை என வருணித்தனர். படைப்பிரிவுகளின் பலத்தினையும் மாறிக் கொண்டிருக்கும் நிலைமைகளையும் வைத்துப் பார்த்தால், ஓரளவுக்கு அது சரி என்று தோன்றக் கூடும். எதிரியின் குண்டு வீசும் விமானங்கள் மற்றும் போர்த்தளவாடங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நம்மிடம் இருந்ததென்னவோ மூங்கில் ஈட்டிகள் தான். ஆனால், நமது கட்சி மார்க்சிய – லெனினிய கோட்பாட்டின் மேல் கட்டப்பட்டது. நாம் நிகழ்காலத்தை மட்டும் பார்ப்பதில்லை, எதிர் காலத்தையும் முன்னிறுத்துகிறோம். நாம் மக்களின் மன உறுதி மற்றும் கட்டுப்பாட்டின் மேல் நம்பிக்கை வைக்கிறோம். தடுமாறுபவர்கள் மற்றும் நம்பிக்கையற்றவர்களுக்கு நாம் சொல்லுகிறோம்.

“ஆம், இன்று வெட்டுக்கிளிகளுக்கு யானைகளை எதிர்த்து நிற்கும் தைரியம் இருக்கிறது. நாளை, இந்த யானைகள் தங்கள் தோலை உரித்து கீழே போட்டு விட்டு ஓடும்”.

யதார்த்த நிலை ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறது. காலனியாதிக்க யானைக்கு மூச்சு வாங்குகிறது; ஆனால் நமது படை வீறு கொண்டு எழும் புலிகளாக மாறியிருக்கின்றன.

இது பிப்ரவரி 1951 இல் ஹோசிமின் தொழிலாளர் கட்சியின் இரண்டாவது காங்கிரசில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. மூன்றே ஆண்டுகளில் 1954 இல் – பிரஞ்சு யானை ஓடியது; அதன் பின் 21 ஆண்டுகளில் அமெரிக்க யானையும் ஓடியது. ஏகாதிபத்திய எதிர்ப்பு போர் வியட்நாமில் 1975 இல் ஒரு முடிவுக்கு வந்தது.

30 ஆண்டுகளுக்கு முன்பு:

ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் வெற்றியடைந்த 30 ஆவது ஆண்டு நிறைவினை வியட்நாம் மக்கள் பெருமையோடு நினைவு கூர்ந்தனர். ஏப்ரல் 30, 1975 – வியட்நாம் படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட சைகோன் நகரத்தை, அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளிலிருந்து மக்கள் ராணுவம் கைப்பற்றிய நாள். தொழிலாளர் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் லீடக்தோ சைக்கிள் வண்டியில் நகரத்திற்குள் நுழைந்து, நாபாம் குண்டு வீச்சில் இடிந்து போன வீட்டின் கூரையின் மீது நின்று வியட்நாம் விடுதலைப்போரின் வெற்றி கீதத்தை எழுதியதை மறக்க முடியாத நிகழ்ச்சி என்கிறார் சுர்ஜித். உலக மக்களின் மனசாட்சியினை, நாடுகள் வேறுபாடின்றி, வலுவாக அசைத்துப் பார்த்த கொடுமையான நிகழ்வு இது. போருக்கு எதிரான குரல் அமெரிக்க மண்ணிலே வேகமாக ஒலித்தது.

கென்னடி, ஜான்சன், நிக்சன், ஜெரால்ட் போர்ட் என தொடர்ந்து வந்த அமெரிக்க ஜனாதிபதிகள் போரினை தொடர்ந்தாலும் அமெரிக்க மக்களின் எதிர்ப்பு அலைகள் நாடு பூராவும் பரவியது. வியட்நாம் மக்களின் உறுதியும் தியாகமும் போரின் முடிவினை தெளிவாகச் சொன்னது. நான் ஒன்றும் சைகோன் நகரிலிருந்து வெளியேறவில்லை அமெரிக்க நலன்களையும் நண்பர்களையும் (அமெரிக்கா ஆட்டுவிக்கும் பொம்மை அரசு) பாதுகாக்கும் பொறுப்பு எனக்குண்டு. எனக்கு மேலும் பி.52 குண்டு வீசும் விமானங்கள் தேவை என்று அமெரிக்க தூதர் கிரகாம் மார்டின் சைகோன் தொலைக்காட்சியில் பேசினார். இரண்டே நாட்களில் அந்த நகரின் வீடுகளில் செங்கொடிகள் பறந்தன; வந்த பி.52 விமானங்கள் மெகாங்க் வளைகுடாவில் வீழ்த்தப்பட்ட செய்தி வந்தது. ஹெலிகாப்டர் மூலம் பறந்து வெளியேறினார் அமெரிக்க தூதர். வெல்லற்கரியது என்று சொல்லப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் இயக்கம் அங்கே முடமாக்கப்பட்டது. சைகோன் ஹோசிமின் நகரமாக பரிணமித்தது.

விரைந்து பரவிய விடுதலை வேட்கை:

இந்த வீர சகாப்தம் எழுத வியட்நாம் மக்கள் கொடுத்த விலை? 13 லட்சம் வீரர்கள் உயிரிழந்தர்கள்; கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த மக்களின் எண்ணிக்கை 40 லட்சம். ஏஜெண்ட் ஆரஞ்சு போன்ற வேதியல் குண்டுகளின் வீச்சில் ஏற்பட்ட பேரழிவு வியட்நாமின் செழிப்பான பகுதிகளை சுடுகாடாக்கியது; பொருளாதாரம் சீர்குலைந்து போனது. மக்களின் விடுதலை வேட்கையினை நசுக்க அமெரிக்கா செலவழித்தது 165 பில்லியன் டாலர். கொரியா போரில் இறந்தவர்களை காட்டிலும் இரண்டு மடங்கு அமெரிக்க துருப்புகள் – 58183 – இந்தப் போரில் உயிரிழந்தனர். போரின் உச்சகட்டத்தில் வியட்நாமின் தென்பகுதியில் 5 லட்சம் அமெரிக்க துருப்புகள் முகாமிட்டிருந்தன. ஆனால் அங்கு நடந்தது மக்கள் நடத்திய போர். ராணுவ வலிமை மட்டும் போரின் முடிவினை தீர்மானித்து விடுவதில்லை என்று வியட்நாம் மக்கள் உலகுக்கு தங்கள் தியாகத்தின் மூலம் எடுத்துக் காட்டினர். மனிதகுல வரலாற்றில் நோக்கங்கள் முற்றிலும் நிறைவேற்றப்பட்ட, வெற்றிகள் மிக நெருக்கமாக கொடுக்கப்பட்ட இம்மாதிரி நிகழ்வுகள் எப்போதாவது தான் தோன்றும் என்கிறார் வில்பிரட் புர்செட் (Wilfred Burchett). இந்த விடுதலைப் போரின் வீச்சு கம்போடியாவில் பரவியது; லாவோனில் பரவியது. இந்தோ – சீனா பகுதியில் 100 ஆண்டுகால ஏகாதிபத்திய மேலாதிக்கம் உடைந்து நொறுங்கியது. வியட்நாம் ஒரு விஷயத்தை தெளிவாகக் காட்டியது. மிகவும் ஆழமான உணர்ச்சி மிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாகவும் அதற்கு ஆதரவாக உலக மக்களை ஒருங்கிணைத்த மக்கள் இயக்கமாகவும் இது நிகழ்ந்தது என்பது தான். சோவியத் யூனியன் சீனா மற்றும் சோசலிச உலகின் பாதுகாப்பு அரண் வியட்நாம் விடுதலையை உறுதிப்படுத்தியது என்பதும் யாரும் மறக்க முடியாத ஒன்று.

ஒன்றுபட்ட வியட்நாம்:

ஆகட்ஸ் புரட்சிக்குப் பிறகு 1945 இல் வியட்நாம் ஜனநாயக குடியரசு உருவானது. 1954 இல் தியன்பியன்பூ (Diean Biean Pho) முற்றுகைப் போரில் பிரான் தோல்வியை சந்தித்தப் பிறகு வியட்நாம் வடக்குப் பகுதியில் சோசலிச கட்டுமானத்தை முன்னிறுத்தி ஹோசிமின் தலைமையில், கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் மக்கள் அரசு எழுந்தது. ஆனால் அந்தப் பணியினை நிறைவேற்றவிடாமல் அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய சதிவேலையினை தென்பகுதியிலிருந்து நிறைவேற்றிக் கொண்டிருந்தது; வியட்நாம் முழுமையும் ஒரு போர்க்களமாக மாற்றிய பெருமை அமெரிக்காவுக்கு உண்டு. ஆனால் ஹோசிமின் வியட்நாம் மக்களுக்கு விடுத்த செய்தி மக்களை கவ்விப் பிடித்தது. கம்யூனிசமும் தேச விடுதலை போராட்டமும் ஒன்றை ஒன்று விலக்கி வைத்து நடத்தப்படும் இயக்கங்கள் அல்ல; இணைந்து நடத்தப்பட வேண்டியவை என்பது தான் அவர் விடுத்த செய்தி. தென் வியட்நாம் மக்கள் அதை தெளிவாக புரிந்து கொண்டனர். வடக்கில் துவங்கிய தேசிய விடுதலைப் போர் தெற்கில் முடிந்தது. 1976 இல் ஒன்றுபட்ட வியட்நாம் உருவானது. ஹோசிமின் கனவு நனவானது. சமாதானம், ஒற்றுமை என்ற கோஷங்களை முன்வைத்து நடத்தப்பட்ட உலகப் பேரியக்கங்களுக்கு புதிய வலு கிடைத்தது. ஏகாதிபத்தியம் சரிவினை நோக்கி இறங்கியது. இறங்கியதே தவிர, அது முழுமையாக சரிந்து விடவில்லை என்பதை சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள் நமக்கு சொல்லுகின்றன.

வளர்ச்சிப் பாதையினை நோக்கி:

சோசலிசத்தை கட்டுவது என்ற இலட்சியத்தை நிறைவேற்ற இந்த வெற்றி வியட்நாம் மக்களுக்கு மன உறுதியினை கொடுத்தது. ஆனால் தெற்காசிய நாடுகளில் மிக ஏழ்மையானக நாடாகத்தான் வியட்நாம் இருந்தது. போர் நடந்த காலத்திலே கூட மூன்று முனைகளில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அந்தப் போரை நடத்தியது. போர் முனை, சர்வதேச அரசியல் முனை மற்றும் உள்நாட்டு பொருளாதாரம் – இந்த மூன்றிலும் ஏக காலத்தில் செயல்பட வேண்டிய செயல் திட்டங்களை உருவாக்கினர். ஏழ்மை நிலை மாறவேண்டுமென்றால் விவசாய புரட்சியினை நடத்தி முடிக்க வேண்டுமென்று ஹோ வலியுறுத்தினார். (தென் வியட்நாம் விடுதலைக்கு வித்திட்ட ஹோ அதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே – 1969 இல் மறைந்தார்) அந்த வழிகாட்டுதலை எடுத்துக் கொண்டு வியட்நாம் முன்னோக்கி நடைபோடத் துவங்கியது. முழு விடுதலைக்குப் பிறகு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கவனம் செலுத்த வேண்டிய நிலை எடுத்தது. கிடைக்கப் பெற்ற புள்ளி விவரங்கள் வியட்நாமின் இன்றைய வளர்ச்சியினை துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

2003 இல் 7.2 சதம்,

2004 இல் 7.7 சதம்,

2005ல் 8.1 சதத்தை எட்டிப் பிடிக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

ஆசியாவிலேயே சீனாவுக்கு அடுத்த நிலையில் அதன் வளர்ச்சியிருப்பதாக பொருளாதார ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. பொருளாதார நெருக்கடி என்பது பொதுவான விதியாக மாறிக் கொண்டிருக்கும் பின்னணியில் இந்த வளர்ச்சியை பார்க்க வேண்டும்.

தென்கிழக்கு ஆசியா பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு உற்பத்தியில் கேந்திரமான இடத்தை வியட்நாம் பிடிக்கும். 600 மில்லியன் பீப்பாய் எண்ணெயும், 6800 பில்லியன் கன அடி இயற்கை வாயும் (இதுவரை கண்டுபிடிக்கப்பட்டது) வியட்நாம் பெற்றிருக்கிறது;

ஒரு நாளைக்கு 4.03 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவே வியட்நாமை ஆசியாவின் எண்ணெய் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் வைக்கிறது. 1.5 பில்லியன் டாலர் மூலதனத்தில் முதல் சுத்திகரிப்பு ஆலை துவக்கப்பட்டிருக்கிறது. 87 சதம் வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கிறது;

கல்வியறிவு பெற்றவர்கள் 90.3 சதம் (இந்தியா 61.3 சதம்);

வாழ்நாள் 70.61 ஆண்டுகள் (இந்திய 63.9 ஆண்டுகள்);

குழந்தை மரணம் 1000 பிறப்புக்கு 29.5 சதம், (இந்தியாவில் இது 67 சதம்);

பணவீக்கம் 1991 இல் 67 சதமாக இருந்தது, 2004ல் 9.5 சதமாக குறைந்தது.

நாட்டை தொழில்மயமாக்கும் முயற்சிக்கு பலமான அடித்தளம் போடப்பட்டது. வியட்நாம் ஒரு விவசாய நாடு. நாட்டின் உழைக்கும் மக்களின் (42.98 மில்லியன்) 63 சதம் நிலத்தில் தங்கள் உழைப்பை செலுத்துபவர்கள். உணவு இறக்குமதி செய்து கொண்டிருந்த வியட்நாம் அரிசி ஏற்றுமதியில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வேலைவாய்ப்புகள் பெருகின. ஹோசிமின் நகரத்தில் மட்டும் 2005 ஆண்டு முதல் 4 மாதங்களில் 50000 புதிய வேலை உருவாக்கப்பட்டதாக ஒரு செய்தி குறிப்பு கிடைத்திருக்கிறது. சுற்றுலா பயணிகள் விரும்பிச் செல்லும் உலகின் முதல் 10 நாடுகளில் வியட்நாம் ஒன்று.

புதுப்பித்தல் திசை

விவசாய புரட்சி மேற்கொண்டதன் விளைவாக கடந்த 20 ஆண்டுகளில் இந்த மாற்றத்தை வியட்நாம் சந்தித்திருக்கிறது. 1970லும் 1980 இன் முற்பகுதியிலும் மிகப் பெரிய நெருக்கடியினை சந்தித்தது; 1986-88 ஆண்டுகளிலும் 1991லும் இந்த நெருக்கடி விண்ணை முட்டும் பண வீக்க உயர்வில் வெளிப்பட்டது. 1986 இல் வியட்நாம் கம்யூனிட் கட்சி புதுப்பித்தல் (Renewal) என்ற திசைவழியினை உருவாக்கியது.

சமூக பொருளதார வளர்ச்சியினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்; ஜனநாயகத்தை விரிவுபடுத்த வேண்டும்; அரசியல் திரத்தன்மையினை உறுதிப்படுத்த வேண்டும்; தேசிய மற்றும் உள்நாட்டு பாதுகாப்பினை ஒருங்கிணைக் கவேண்டும்; வெளிநாட்டுடான பொருளாதார உறவுகளை மேம்படுத்த வேண்டும்; சுற்றி வளைக்கும் அனைத்து தடைகளையும் (பொருளாதார தடைகள் உட்பட) கொஞ்சம் கொஞ்சமாக உடைக்க வேண்டும்;

இவைகளோடு வியட்நாம் மண்ணின் விசேச அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு, உலக அரங்கில் ஏற்படும் மாற்றங்களை சரியாக கணித்து வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை உருவாக்குவது தான் புதுப்பித்தல் கோட்பாட்டின் நோக்கம். அதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான், மேலே குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியினை கொண்டு வந்திருக்கின்றன.. சோவியத் யூனியனும், சோசலிச முகாமும் பின்னடைவை சந்தித்தன. வளரும் நாடுகளின் அரசியல் பொருளாதார இறையாண்மைக்கு சோதனைகள் தோன்றின. ஏகாதிபத்தியத்தின் ராணுவ ரீதியான அச்சறுத்தலுடன் பொருளதார நிர்ப்பந்தங்கள் பல வடிவங்களில் திணிக்கப்பட்டன. சந்தைப் பொருளதாரத்தில் போட்டியினை சந்திக்க வேண்டிய அவசியம் வந்தது.

மாற்றங்கள் – கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை:

அதிலிருந்து சேதப்படாமல் எழ வேண்டுமென வியட்நாம் தன் கடந்த கால செயல்முறைகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் 7 ஆவது காங்கிரசுக்குப் பிறகு (1991) புதுப்பித்தல் கொள்கையின் செயல்பாடுகள் தொடர்ந்து விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டன.சோவியத் யூனியன் தோன்றிய பிறகு உடனடி கடமையாக லெனின் கொண்டு வந்த புதிய பொருளாதாரக் கொள்கையினை (முதலாளித்துவ அமைப்பின் சில நடைமுறை அம்சங்களை உள்ளடக்கியது) வியட்நாம் நிலைமைகளுக்கு ஏற்ப செயல்படுத்துவது பற்றியெல்லாம் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டன.

ஊக்கம் சுயேட்சையான செயல்பாடு, சுயமான பொறுப்பு, உற்பத்தியில் தனியார் தொழிற்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை உத்திரவாதம் செய்தல், ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டுமென வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது.

திட்டம், விலை நிர்ணயம் செய்தல், அந்நியச் செலாவணி, நிதி, வங்கி, இன்சூரன், ஊதியம், நிலம் போன்ற விசயங்களில் புதிய நிலைமைகளுக்கேற்ப சட்டத்திருத்தங்களும் செயல்வடிவங்களும் உருவாக்கப்பட்டன. அரசுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு குறித்து வெளிப்படையான விமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்டன; அவைகள் மறுசீரமைப்புக்கு உட்படுத்தி, நஷ்டம் கொடுக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டன. அரசு கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு அமைப்புகள் நத்தை வேகத்தில் செயல்பட்டன; அதன் செயல்வேகத்தை அதிகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றில் அரசே மேற்கொண்ட பொருளதார செயல்முறை தோல்வியுற்றன என்று கண்ட பிறகு அதில் மாற்றம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சந்தை பொருளதாரத்தை முழுமையாக புரிந்து கொண்டு செயல்படுவதில் கூட சிக்கல்கள் எழுந்தன. துவக்க காலத்தில் சந்தையினை தன்னெழுச்சியுடன் செயல்படும் சக்திகள் ஆக்கிரமித்தன; அரசுத்துறை செயல்பாட்டில் ஊனம் இருந்த பின்னணியில், சந்தை தனியாரின் லாப வேட்டைக்கு உட்படுத்தப்பட்டது. அதை மாற்றுவதற்கு சிறிது காலம் தேவைப்பட்டது. மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் அனைத்தும் தொடர்ந்து மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. பண்பாடு, கலை, இலக்கியம் போன்ற துறைகளில் வெளிப்படும் ஆரோக்கியமற்ற சீரழிவு போக்குகளை – சுதந்திரச் சந்தையின் எதிர்மறை போக்குகளை எதிர்த்து தத்துவார்த்த போராட்டம் நடத்த வேண்டிய தேவையினை கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக உணர்ந்துள்ளது.

கட்சியின் தலைமை:

ஒரு விசயத்தை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களெல்லாம் கட்சியின் தலைமைப் பாத்திரத்தை உறுதியாக கடைப்பிடித்ததால்தான் கொண்டுவர முடிந்தது என்பதை சுட்டிக்காட்டுகிறது. சோசலிசத்தை நோக்கி முன்னேற வேண்டுமென்பதை கட்சி முன்வைக்கிறது. அது ஒரு புதிய அனுபவம்; முன்மாதிரி ஏதுமில்லாத செயல்திட்டம்.

வியட்நாமின் விசேச நிலைமைகளுக்கு ஏற்ப பொருளாதாரம், அரசியல் சமூக மற்றும் பண்பாட்டு துறைகளில் அதன் தன்மைகளுக்கேற்ப செயல்வடிவங்களை தேர்ந்தெடுக்கும் முயற்சியினை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டிருக்கிறது. மார்க்சிய – லெனினிய கோட்பாடு – ஹோ சி மின் சிந்தனை, இவற்றின் வழிகாட்டுதலில் ஜனநாயகம், சுதந்திரம், இறையாண்மை ஆகியவற்றை பாதுகாக்கும் பொறுப்பினை கட்சி மேற்கொண்டிருக்கிறது. மக்களை அலைக்கழிக்கும் பன்முக அரசியல் நிலைபாட்டினை முற்றிலும் நிராகரிக்கிறது.

கட்சியின் பொதுச் செயலாளர் நாங் தியூ மான் ஜனவரி 25, 2005 கட்சியின் மத்தியக்கமிட்டி கூட்டத்தில் ஆற்றிய உரையில் சில பகுதிகளை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

கடந்த 20 ஆண்டுகளாக செயல்படுத்திய புதுப்பித்தலை சற்றே பின்னோக்கி சென்று ஆய்வு செய்தால், நமது சாதனைகள் முழுமையானவை என்று புரியும், தத்துவம் மற்றும் செயல்முறையின் அடிப்படையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்து போன 20 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது நாடு சில அடிப்படை மாற்றங்களை பெற்றிருக்கிறது; சமூக பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. வேகமான பொருளாதார வளர்ச்சியினை பெற்றிருக்கிறது; சோசலிச திசைவழியில் சந்தை பொருளாதாரம் உருவாகியிருக்கிறது; தொழில்மயமாக்கலும், நவீனமயமாக்கலும் வேகப்படுத்தப் பட்டிருக்கின்றன; மக்கள் வாழ்நிலையில் கணிசமான முன்னேற்றம் கண்டிருக்கிறோம். அரசியல் அமைப்பும், தேச ஒற்றுமையும் கட்சியின் தலைமையில் வலுப்பெற்றிருக்கின்றன.

கட்சி மேற்கொண்ட புதுப்பித்தல் கோட்பாடு சரியானதும், புதியதை படைக்கும் திறனுள்ளதும் என நிரூபித்திருக்கின்றன. இது வியட்நாம் மக்களின் முழு ஆதரவைப் பெற்றிருக்கிறது. உலகம் இந்த சாதனைகளை வரவேற்று ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு முக்கியமான விசயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 20 ஆண்டுகளாக நாம் மேற்கொண்ட புதுப்பித்தல் நடைமுறையின் மூலம், கட்சிக்கும் அரசுக்கும் நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. சோசலிசத்தை புரிந்து கொள்வதும் அதற்கான பாதையும் தெளிவாகியிருக்கின்றன.

இந்த சாதனைகளோடு கூடவே, பல ஊனங்களும் குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன; சில தத்துவார்த்த பிரச்சினைகள் தெளிவாக்கப்படவில்லை; சில நடைமுறை விஷயங்கள் தாமதமின்றி பயனுள்ள வகையில் சிறந்த தீர்வுக்கு கொண்டு வரப்படவில்லை.

அடுத்த 5 ஆண்டுகளில் கட்சி, அரசு மற்றும் மக்கள், கட்சியின் தலைமைப் பாத்திரத்தை அதிகரிக்கவும், மக்களின் முழு பலத்தையும் திரட்டவும், புதுப்பித்தல் நடவடிக்கைகளை வேகப்படுத்தவும் உறுதி பூண்டிருக்கின்றனர். நாட்டை 2010 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சிகுன்றிய நிலையிலிருந்து மீட்பதும், மக்களின் பொருளாதார மற்றும் அகநிலை வாழ்வை மேம்படுத்துவதும், நமது நோக்கம்; அது 2020 ஆம் ஆண்டு நிறைவுக்குள் தொழில் வளர்ச்சி மிகுந்த நாடாக உருவாக ஒரு வலுவான அடித்தளத்தைக் கொடுக்கும்.

கற்க கடசற:

வியட்நாமின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கான தெளிவாக வரைபடம் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியா போன்ற விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நாடு வளர்ச்சியடைய வியட்நாம் அனுபவங்கள் நமக்கு துணை வரும். அவர்களே ஒப்புக் கொளவ்து போல், முன்மாதிரி ஏதுமில்லாத முயற்சியினை மேற்கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் கற்றுக் கொள்ள வேண்டிய நிறைய பாடங்கள் வியட்நாமிலிருந்து நமக்கு கிடைக்கும்.

ஏகாதிபத்தியம் சுற்றி வளைத்து மூன்றாம் உலக நாடுகளின் மேல் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிக்கும் வேளையில், வியட்நாம் போல் நாட்டின் இறையாண்மையினை பாதுகாக்கும் உடனடி கடமை எழுகிறது. போர் நடக்கும் போது ஹோ சி மின்னின் ஒரு வாசகம் சைகோன் நகரம் பூராவும் எழுதப்பட்டது. சுதந்திரம், விடுதலை என்பதைத் தவிர உன்னதமானது வேறொன்னுமில்லை ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் வளரும் நாடுகளின் அரசியல் பொருளாதார சுதந்திரத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு செயல்பட வேண்டிய நிலை எழுந்திருக்கிறது. அதுவே சோசலிச மாற்றினை நோக்கி உலகம் பயனிக்க வழிவகுக்கும்.

ஆதார நூல்கள் / குறிப்புகள்

  1. “Grasshoppers and Elephants” – Wildfred Burchett
  2. Human Development Report – 2004.
  3. வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி – 7வது காங்கிரஸ் முடிவுகள் பற்றிய இடைக்கால ஆய்வு – 1994
  4. இணையதள குறிப்புகள்


%d bloggers like this: