மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


ஜோசப் ஸ்டாலின் – 4


 I 1 I –  I 2 I – I 3 I – I 4 I – I 5 I

லெனின் நலக்குறைவு:

1918 இல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் உள்ளேயே தங்கிவிட்ட குண்டினை அகற்ற 1922 இல் ஏப்ரலில் நடைபெற்ற அறுவை சிகிச்சையும் தோழர் லெனினை வலுக்குறையச் செய்தது. 1922 மே மாதம் பக்கவாதம் தாக்கியது. பேச்சுத் திறனையும் இழந்தார். ஆயினும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுத் தேறினார். இக்காலத்தில் லெனினின் குறிப்பறிந்து, கருத்தறிந்து ஸ்டாலின் செயல்பட்டார். அவ்வபோது நடைபெறும் நிகழ்ச்சிகளை லெனின் கவனத்திற்கு கொண்டு சென்று வழிகாட்டுத்தலைப் பெற்றார்.

அரசியல் அமைப்பு:

1922 ஆகட் 10 அன்று அரசியல் அமைப்பு ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக ஸ்டாலின் செயல்பட கட்சி முடிவு செய்தது. சோவியத் சோசலிசக் குடியரசுக் கூட்டமைப்பிற்கான புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்படுவது, இதன் நோக்கமாக இருந்தது. அனைத்து தேசிய இனங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதும் அதன் மூலம் சோவியன் யூனியனை பலப்படுத்து வதும் இதன் நோக்கம். இப்பணியைச் சிறப்புற ஸ்டாலின் நிறைவேற்றினார். இத்துடன் உடல்நலம் குன்றி இருந்த லெனினின் அறுவைச் சிகிச்சையிலும் உரிய கவனம் செலுத்தினார்.

லெனினது கடிதங்கள்:

இக்காலத்தில் லெனின் தனது உடல்நலம் குன்றி இருந்த காலத்தில் சில கடிதங்களை சொல்லி எழுத வைத்தார். 1922 டிசம்பர் 23, டிசம்பர் 24, 1923 ஜனவரி 4 ஆகிய தேதிகளில் மூன்று கடிதங்கள் அவரால் சொல்லப்பட்டு எழுதப்பட்டன. அடுத்து வரும் கட்சிக் காங்கிரசில் முன்வைப்பதற்காக இதனைத் தயாரித்தார். இதில் பல அம்சங்கள் இருந்தன. ஸ்டாலின் பற்றியும் இருந்தது.

ஸ்டாலினிடம் எல்லையற்ற அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன. போதிய அளவு எச்சரிக்கையுடன் இதைப் பயன்படுத்துவாரா? என்பதை என்னால் உறுதி கூற முடியவில்லை என்று ஒரு கடிதத்திலும், மற்றொன்றில், ஸ்டாலின் மிகவும் சிடுசிடுப்பு உடையவர், நம்மிடையே குறைபாடு சகித்துக் கொள்ளப்படலாம். ஆனால் பொதுச் செயலாளர் என்ற முறையில் இதைச் சகிக்க முடியாது. ஆகவே ஸ்டாலினை அப்பதவியில் இருந்து நீக்கி விட்டு வேறு ஒருவரை அந்த இடத்தில் நியமிக்க தோழர்கள் சிந்திக்க வேண்டும் என்று இருந்தது.

இதை ரகசியமாக வைத்திருக்க லெனின் கோரி இருந்தார். இக்கடிதங்கள் அவரது மனைவி குரூப்கயாவிடம் இருந்தன. காங்கிரசில் இக்கருத்தை முன்வைக்க அவர் எண்ணி இருந்தார்.

அமைப்பு குறித்தும், அரசு குறித்தும் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இவையனைத்தும் அடுத்து நடைபெற்ற மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டன. டிராட்ஸ்கி இதனை எதிர்த்து செய்த முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன.

மாநாடு:

1923 ஏப்ரல் 17-25 ஆகிய தேதிகளில் கட்சியின் 12 ஆவது மாநாடு நடைபெற்றது. தோழர் லெனின் கடுமையான உடல்நல பாதிப்பு காரணமாக இதில் கலந்து கொள்ளவில்லை. லெனின் இல்லாத காலத்தில் ஸ்டாலின் பொறுப்புடன் தனது கடமைகளை நிறைவேற்றினார். தேசிய இனவெறிப் போக்கு எவ்விடத்தில் தலைதூக்கினாலும் எவ்வளவு தீங்கானது என்பதை விளக்கினார். நாட்டின் ஒற்றுமை, கட்சிக்குள் ஒற்றுமை ஆகியவை இம்மாநாட்டின் உட்கருவாக இருந்தது.

1924, ஜனவரி 16,17,18 தேதிகளில் நடந்த கட்சியின் 13 ஆவது மாநாட்டிலும் இக்கருத்து பலப்படுத்தப்பட்டது. டிராட்ஸ்கி செய்த தவறுகளையும் லெனினிசத்தில் இருந்து விலகிப் போவதையும் இம்மாநாடு கண்டித்தது.

லெனின் மறைவு:

மார்க்சையும், ஏங்கெல்சையும் மனமார விரும்பியவர் அறிவுப்பூர்வமாகப் புரிந்தவர், புரிந்து கொண்டதை உழைக்கும் மக்களுக்கு விளக்கியவர்.

“கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”

என்ற குறளுக்கேற்ப மார்க்சியத்தை கசடின்றிக் கற்று அதன்படி வாழ்வையும் நெறிப்படுத்திக் கொண்ட தலைவர் தோழர் லெனின் அவர்கள் 1924 ஜனவரி 21 அன்று மாலை மாஸ்கோ அருகில் உள்ள கோர்க்கி என்ற கிராமத்தில் காலமானார். அவரது உடல் மாஸ்கோ கொண்டு வரப்பட்டது.

லெனினுக்கு மரியாதை:

நாடு முழுவதும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. லெனினை வணங்க மக்கள் சாரைசாரையாக அணி வகுத்தனர். அவரது உடலைப் புதைக்க வேண்டாம், எரிக்க வேண்டாம் பாதுகாப்போம் என்ற முடிவு கட்சியில் எடுக்கப்பட்டது. லெனினது துணைவியார் குரூப்கயா கூட இதனை விரும்பவில்லை. சோவியத் யூனியனில் இருந்த மக்களின் அன்றைய நிலை, உணர்வு இவற்றைக் கணக்கிலெடுத்து தோழர் ஸ்டாலினின் வற்புறுத்தல் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டது.

ஏழு லட்சத்திற்கும் அதிகமான மக்கள், பாதுகாப்புடன் கண்ணாடிப் பேழையில் பாதுகாக்கப்பட்டிருந்த லெனினை வணங்கினர். இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்களும் தொலை தூரத்தில் இருந்து வந்து லெனினை வணங்கினர். அப்போது பிறக்காதவர்களும் பல ஆண்டுகள் கழித்து அவரைக் கண்டனர். மரியாதை செலுத்தினர் (இந்தக் கட்டுரையாளர் உட்பட)

1924 ஜனவரி 21 அன்று சோவியத்துக்களின் மாநாடு நடைபெற்றது. தோழர் ஸ்டாலின் ஆற்றிய உரை மகத்தானது.

தோழர்களே!

கம்யூனிஸ்ட்களாகிய நாம் தனிச் சிறப்பு மிக்க வார்ப்புகள். தோழர் லெனின் அவர்களது இராணுவத்தைச் சேர்ந்தவர்கள். தோழர் லெனின் அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சியின் அங்கத்தினர்கள். இதை விட உயர்ந்தது எதுவும் இல்லை. இத்தகைய கட்சியின் உறுப்பினராக இருந்து நெருக்கடிகள், தாக்குதல்கள் ஆகியவற்றைத் தாங்கிக் கொள்வது எல்லோராலும் முடியாது. உழைக்கும் வர்க்கத்தின் புதல்வர்களாலும், ஏழ்மை அதிலும் போராட்ட உணர்வு கொண்டவர்களால் தான் முடியும்.

இதனால் தான் லெனினிய வாதிகளாக உள்ள நம் கட்சி கம்யூனிஸ்ட்களின் கட்சி, உழைக்கும் வர்க்கத்தின் கட்சி என அழைக்கப்படுகிறது. நம்மிடமிருந்து நம்மை விட்டுப் பிரிந்து சென்றுள்ள தோழர் லெனின் கட்சியின் உறுப்பினர் என்ற பெரும் பொறுப்பை தூய்மையுடன் பாதுகாக்க நமக்கு கட்டளையிட்டிருக்கிறார்.

இம்மாநாட்டின் மூலம் அவருக்கு நாம் கூறுகிறோம். தோழர் லெனின்! உங்களது கட்டளையை நிறைவேற்றுவோம். நேர்மையுடன் நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறுகிறோம். கண்ணின் மணிபோல் கட்சி ஒற்றுமையைக் காக்கக் கோரி இருக்கிறார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பாதுகாக்க வலுப்படுத்தக் கோரி இருக்கிறார்.

தொழிலாளர், விவசாயிகள் அணிவகுப்பை முழு ஆற்றலுடன் வலுப்படுத்தக் கோரி உள்ளார். சோவியத் ஒன்றியங்களின் குடியரசுகளை வலிமைப்படுத்தக் கோரி உள்ளார்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் கோட்பாடுகளுக்கு உண்மையுடன் நடந்து கொள்ளக் கோரியுள்ளார்.

தோழர். லெனின் அவர்களே! இக்கடமைகளை நிறைவேற்றுவோம் என்று உறுதி கூறுகிறோம்.

மேற்கண்ட நோக்கங்களை வலிமைப்படுத்த விரிவாக்கம் செய்திட எம் உறிரைத் துச்சமெனக் கருதிடுவோம்!

என்று சூளுரை செய்தார். சோகம் கப்பிய சூழலில் இது வேகம் ஊட்டுவதாக இருந்தது. இன்றளவும் உலக கம்யூனிஸ்ட்களால் ஏற்கப்பட்டு மதிக்கப்பட்டு வருகிறது.

லெனினது சடலம் தாங்கிய பெட்டியைத் தூக்கிச் செல்வதிலும் ஸ்டாலின் இருந்தார்.

கட்சிக்கு முன் லெனினது கடிதம்:

லெனின் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட கடிதங்கள், கட்டுரைகள் பல உண்டு. அதே சமயம் ஸ்டாலின் பற்றிய தம் கடிதத்தைத் தமது மறைவிற்குப் பிறகு தான் வெளியிட வேண்டும் என்று தமது மனைவி குரூப்கயாவிடம் கொடுத்து இருந்தார். அதன்படியே கடிதம் அன்றைய தலைவர் காமனேவிடம் குரூப்கயாவால் ஒப்படைக்கப்பட்டது. காமனேவ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். ஸ்டாலின் இக்கடிதத்தை வரும் காலத்தில் நடைபெற்று இருந்த 13 ஆவது காங்கிரசை வழிநடத்த இருந்த வழிநடத்தும் குழுவிடம் ஒப்படைத்தார். அக்குழு கடிதத்தை மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு வழங்குவது என்று முடிவு செய்தது, அவ்வாறே வழங்கியது. மாநாட்டிலும் படிக்கப்பட்டது.

மத்தியக்குழுவில் தோழர் ஸ்டாலின் தன்னை மாற்றக் கோரினார். குழு மறுத்து விட்டது. டிராட்ஸ்கி, காமனேவ், ஜினோவியேவ் உட்பட பல தலைவர்கள் ஸ்டாலினே நீடிக்க வேண்டுமென்றனர். மாநாட்டுப் பிரதிநிதிகளும் இதன் மீது மாற்றுக் கருத்து கூறவில்லை. மாநாடு 1924 மே 23 துவங்கி 31 வரை நடந்தது. தொடர்ந்து ஸ்டாலின் தமது பணிகளை மேற்கொண்டார்.

“பெட்ரோ கிராட்” நகர் “லெனின் கிராட்” என பெயர் மாற்றப்பட்டது. லெனினது படைப்புகளைத் தொகுத்து உலகின் அனைத்து மொழிகளிலும் வெளியிட லெனின் இன்ஸ்டியூட் அமைக்கப்பட்டது. மாகோவிலும் மற்ற நகரங்களிலும் லெனின் நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. தோழர் ஸ்டாலின் தன்னை லெனினது மாணவர் என அழைத்துக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார். லெனின் எழுதியிருந்த விமர்சனங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார்.

– அடுத்த இதழில் நிறைவுறும்



3 responses to “ஜோசப் ஸ்டாலின் – 4”

%d bloggers like this: