மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


அறிவியலும் இறைஞான அனுபவமும்!


மனம் திறக்கட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்! பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர் அருள்வாக்கு இது. குமுதம் வார இதழில் (29.06.2005) இவர் வெளியிடும் இக்கருத்து மேலோட்டமாக பார்த்தால் சரிதானே எனத் தோன்றும்.

மனம் மரபு என்ற சிறைபடாமல்; இனம் மொழி, ஜாதி என்ற குறுகிய மனப்பான்மை விடுத்து திறந்த மனது வரவேற்கத் தக்கதுதான். ஆனால், பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர் மனம் திறக்கட்டும் என்பது இது அல்ல! பகுத்தறிவு என்ற வரைமுறை விடுத்து மனம் திறந்து உள்ளுணர்வுகளை ஏற்க விடுக்கும் அறைகூவலே இது. மூளையை தாண்டி முளைத்திட அனுமதியுங்கள் என்ற வேண்டுகோளே இது!

புற உலகிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதும் தவறு. அக உலகின் ஆன்மக் கருத்துக்களை வாழ்வில் பயன்படுத்தாமல் வெறும் மூளை ரீதியாக மட்டுமே செய்தியாய் சேகரித்து நான் நிறைய ஆன்மீகப் புத்தகம் படித்தவன் என வெட்டிப் பெருமைப் பேசுவதும் தவறு என்பதும் அவர் முன்வைக்கும் வாதம். மேலும் வெளி உலகில் தான் உணர்ந்ததை மற்றவர்கள் உணர சூத்திரமாய் வாழ்பவர்கள் விஞ்ஞானிகள். உள் உலகில்தான் உணர்ந்ததை மற்றவர்கள் உணர சூத்திரங்களாய் வாழ்பவர்கள் மெய்ஞானிகள் எனவும் கூறுகிறார்.

அதாவது நாசூக்காக விஞ்ஞானமும் இறைஞானமும் (மெய்ஞானம்) எனப்படும் Musticism ஒன்றுதான். இரண்டும் அறிவு தான் என இந்த வாதம் நிறுவ முயற்சிக்கிறது.

உள்ளபடியே அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றுதானா?

ஆன்மீகம் என நாம் இங்கு சுட்டுவது இறைஞானம் அல்லது மெய்ஞானம் என பல வைகயில் சுட்டப்படும் Musticism தான். சில சித்தர்களின் சூத்திரங்கள்; வேத புராண கூற்றுகள் சில நேரடியாக பொருள் கொள்ளக்கூடாது. பூடகமாக இவை இறைஞான செய்திகளை கூறவல்லது. இவை இறைஞான அனுபவம் (Mustical Experience) சார்ந்து எழுந்தவை என்பது சிலர் முன்வைக்கிற வாதம்.

எவ்வாறு அறிவியல் என்பது அனுபவத்திலிருந்து எழுகிறதோ அதுபோன்று மெய்ஞானம் (அதாவது விஞ்ஞானத்தை விட உயர்வான ஞானம்) இறைஞான அனுபவம் உள் உணர்வுகள் சார்ந்து வெளிப்படுவது என்பது இவர்கள் வாதம்.

இயற்பியலின் தாவோ எனும் நூல் 1975 இல் ஃபிரிட்ஜெஃப்காப்ரா என்பவரால் எழுதப்பட்டது. இதில் கீழைத் தத்துவங்கள் தாவோ (Tao) மற்றும் இந்து தத்துவஇயலின் சில குறிப்பிட்ட சில தத்துவப் போக்குகளும் நவீன அறிவியலும் (குறிப்பாக குவாண்டம் இயற்பியல் மற்றும் சார்பியல் தத்துவமும்) ஒன்றுடன் ஒன்று ஒப்புமை உடையது என வாதிப்பது.

1975 இல் வெளியிடப்பட்ட இந்நூல் இதுவரை மூன்று முறை மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ் உட்பட பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக தாக்கம் செலுத்தியது இந்நூல்.

இந்நூலின் தாக்கத்தில் பிரபல அறிவியல் எழுத்தாளர் சுஜாதா ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து என்ற நூல் எழுதினார். இதில் இவர் ஓர் எல்லையைக் கடந்த பின் விஞ்ஞானமும் வேதாந்தமும் (Meta Physics) ஒரே இலக்கை நோக்கிச் செல்கின்றன. ஞானம் என்பது புலன் அறிவிற்கு அப்பாற்பட்டது என்பதை பல மேற்கத்திய விஞ்ஞானங்கள் இப்போது தயக்கத்துடன் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார். (சமீபத்தில் ஆனந்த விகடனில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் முன்பு தனக்கிருந்த கருத்து மாயையையோ என்ற தயக்கத்தை வெளியிட்டுள்ளார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்)

தர்க்க அறிவும் (பகுத்தறிவு) உள்ளுனர்வு அறிவும்

வரலாற்றுக் காலம் முழுதிலும் மனித மனம் இரண்டு வகையான ஞானத்தை அல்லது இரு போக்கிலான அறிவாற்றலை பெறவல்லது என்றே அறியப்பட்டுள்ளது. அவை காரண காரியங்களால் அறியப்படுகின்ற தர்க்கம் சார்ந்த அறிவு மற்றும் உள்ளுனர்வுகளால் உரைக்கக்கூடிய அறிவு எனப்படுகின்றன. அவை முறையே பாரம்பர்யமான விஞ்ஞானத்தோடும் இறையனுபவத்தோடும் தொடர்புபடுத்தப்படுகின்றன (பக்கம் 42) என காப்ரா கூறுவதும் ஆழ்ந்து நோக்க வேண்டிய விசயம்.

ஆம், காரண காரிய தொடர்புகளால் தர்க்கம் சார்நது சில சமயம் நமக்கு ஞானம் பிறக்கிறது. சில சமயம் விவரிக்க இயலாதபடி சட்டென்று மனதில் மின்னல் அடித்தது போன்று ஒளி பிறக்கிறது. உண்மைதான். இதை உள்ளுனர்வு என்கிறோம். ஆனால், இங்குதான் சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது.

தர்க்கம் சார்ந்த அறிவு; உள்ளுனர்வால் அறிவு என்பது இரண்டு வகையான அறிவா? வகை என இவற்றை வகுக்க முடியுமா? உள்ளுனர்வால் உந்தப்பட்ட அறிவு; உள்ளுனர்வால் பெறப்பட்ட அறிவு என கூறலாமே தவிர உள்ளுணர்வு அறிவு என்று சிறப்பு பிரிவாக அறிவு உள்ளது எனக் கூற இயலுமா?

புத்தக அறிவு; அனுபவ அறிவு; கேட்டல் அறிவு என அறிவு அடையும் வழிகள் பிரித்து அறியலாம். இதுபோன்று அறிவை அடைய உள்ளுணர்வும் ஒரு வழி எனக் கூற துணியலாமே தவிர உள்ளுணர்வு வகை அறிவு எனக் கூறுதல் இயலுமா?

தர்க்கம் சார்; காரண காரியம் சார் அறிவு என்பது அறியப்படும் வழியை சுட்டி நிற்பதில்லை. எந்த வழியில் அடையப்பட்டாலும் இந்த அறிவு உள்ளபடியே தர்க்கத்தினாலும் காரணகாரிய விளக்கங் களாலும் பகுத்தறியப்பட்டது; நிருபிக்கப்பட்டது; சான்றாதார முடையது என்பதை குறிப்பதாகும்.

எல்லா புத்தக அறிவும் நிறுபிக்கப்பட்ட; பிராமணத்தால் சான்றுறைக்கப்பட்ட அறிவு அல்ல. சில புத்தக அறிவு உள்ளபடியே மெய்பாடி அல்ல. அது போன்றே வேறு வழிமுறைகளால் கிட்டும் அறிவு அனைத்தும் மெய்பாடு என கொள்ளுதல் முறையாகாது. பகுத்து அறிதல் வேண்டும். அதுவே உள்ளுணர்வு ஏற்கக்கூடிய வழிமுறை என ஒருவாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும் இதன் வழி அடையப்படும் அறிவும் பகுத்தறியப்ட வேண்டும். அறிவை அடையும் வழி வேறு; அவ்வாறு கிட்டும் அறிவை பகுத்தறிவது வேறு.

எனவே காப்ரா கூறுவது போன்று தர்கம் சார்; காரண காரியம் சார் பகுத்தறிவும் உள்ளுணர்வு வழி அடையப்படும் அறிவும் இரண்டு வகையான அறிவு என வகுப்பது அறிவியலுக்கு முரணானது ஆகும்.

அறிவு எனக் கொள்ளப்படுவது என்ன. எளிமையாக கூறப்பட்டிருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிராமானத்தால் சான்றுறைக்கப்பட்ட மெய்ஞானமுடைய நம்பிக்கைகள்தாம் அறிவு எனப்படுகிறது. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் நம்பலாம். அவர்கள் உரிமை, அவர்கள் பிரச்சினை. ஆனால், சான்றுரையக்கப்பட்ட மற்றும் மெய்பாடுடைய என்ற அடைமொழிக்கு தகுதியுள்ளவை எவை என்பதறிய பகுத்தறிவு சார்ந்த பொதுவான தரங்கள் உள்ளன. ஆகவே இரண்டு வகையான அறிவு என்பது பிதற்றல். பகுத்தறிவு தரத்தால் ஏற்கக்கூடிய அறிவு ஒருபுறம்; பகுத்தறிவிற்கு (தர்க்க காரணகாரிய அறிவிற்கு) மாற்றாக உள்ளுணர்வு அறிவு மறுபுறம் என்பது வார்த்தை ஜாலம் தான். உள்ளனர்வு என்பது உள்ளபடியே அறிவை அடைவதற்கான சிறப்பு வழி எனக் கொண்டாலும் இந்த அறிவும் அறிவு எனக் கொள்ளப்பட பகுத்தறியப்பட வேண்டும். ஆகவே அடிப்படையிலேயே காப்ரா சிந்தனை குழப்பத்தில் ஆழ்ந்து அறிவை அடையும் வழியையும்; அறிவை மெய்பாடி எனக் கொள்ளத் தேவையான பகுத்தறிவையும் குழப்பிக் கொள்கிறார் என்பது தெளிவு. பல தத்துவ விமர்சனங்களும்; ஆன்மீக பிரசாரர்களும் இதே தவற்றைதான் செய்கிறார்கள்.

ஒப்புமைகள் சான்றாகுமா?

இந்த புத்தகத்தின் நோக்கமெல்லாம்…. ஓர் இந்துவோ, ஒரு பௌத்தரோ, ஒரு தாவோயிஸ்டோ நோக்குவதை போலவே நமது பார்வைகளும் ஒதுக்க வேண்டும் என்று எப்படி எல்லாம் வற்புறுத்துகின்றன என்பதை பார்க்கப் போகிறோம் (பக்கம் 29) எனக் கூறும் காப்ரா நவீன இயற்பியலுக்கும் கிழக்கிந்திய இறைஞானத்திற்கும் இடையே உள்ள ஒப்புமைகள் குறித்து விவரிக்கின்றார்.

வெற்றிடம்; மாற்றம்; காலம் என்பது போன்ற கருத்துருக்களின் பால் கிழக்கிந்திய இறைஞானிகள் கொண்டிருந்த சில இறைஞான நெறி நவீன இயற்பியல் விளக்கும் செய்தியை ஒத்து அமைவதாக கூறுகின்றார் காப்ரா. எடுத்துக்காட்டாக பக்கம் 80 இல் உள்ள படம் 7. குமில் கலத்தினுல் உருவாகும் அணுத்துகள்களின் கீற்றும் சிவ தாண்டவத்தையும் ஒன்றின் மீது ஒன்றாக வைத்து ஒப்பு செய்யும் படம். இதுதான் நுட்பமான சாப்ராவின் வாதமா? உள்ளபடியே நகைப்புக்கு இடம் தரவல்லது.

மேகத்தின் வடிவு பார்வைக் புலி போல தெரிந்தால் மேகம் = புலி எனக் கொள்ளுதல் இயலுமா?

அணுத்துகளின் பாய்ச்சல் இவற்றின் ஒரு புகைப்படத்தை வைத்து சிவதாண்டவத்தை தான் இது சுட்டுகின்றது எனக் கூறுவது எவ்வளவு அபத்தம்! பசுவிற்கும் நாலுகால்; நாற்காலிக்கும் நாலு கால் என்று கூறுவதால் எதுவும் நிருபிக்கப்படுவதில்லை.

தோற்றக் காட்சிகள் (மேலும் புலி போல தெரிவது) பகுத்தறியப்பட்ட அறிவு எனக் கொள்ளப்பட வேண்டும். மெய்பாடி காணப்படுதல் வேண்டும். தோற்றக் காட்சிகளையே மெய்பாடி எனக் கூறுவது பகுத்தறிவு அல்ல. இரண்டு பொருட்களுக்கிடையே ஒப்புமை காணப்பட்டால் அவை இரண்டும் ஒன்றுதான் எனற் முடிவுக்கு வர முடியாது. மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக் கூடாது என்பது காலம் காலமாக அறியப்படும் வழமை. இதுகூட சரியாக விளங்காமல் காப்ரா தனது வாதத்தை மேற்கொள்வது நகைப்புக்குரியதுதான்.

கிழக்கும் மேற்கும்

கிழக்கத்தை தத்துவம் என காப்ராவால் அறியப்படுவது அத்துவைத இந்துதத்துவம்; தாவோவின் கருத்து ஜென் மரபு தத்துவம் முதலியவைதான். இவைகளை மறுதலிக்கும் பல தத்துவ போக்குகள் கிழக்கத்திய பகுதியில் பன்நெடுங்காலமாக புழங்கி வந்துள்ளன. எடுத்துக்காட்டாக இந்தியாவின் நிலவி வந்த லோகாயதம். இது இறைஞான வழியை முற்றிலும் எதிர்க்கிறது. தர்கம், காரண காரியம் முதலியவை சார்ந்த பகுத்தறிவை மட்டிலுமே அறிகிறது. சிதாண்டவம் யின் / யென் என்ற பிதற்றல்களை ஏற்கவில்லை. இந்த தத்துவம். காப்ராவினால் கிழக்கத்திய தத்துவம் என அடையாளமிடப்படுவதில்லை ஏன்?

அதுபோன்ற பண்டைய சீன பிரதேசத்திலும் வாங்ஷான் தத்துவம் பொருள் முதல்வாத தத்துவம்தான். இவை புறந்தள்ளப்பட்டு அத்துவைதம் முதலிய சில கருத்து நிலைகளே கீழைத் தத்துவம் என அடையாளம் காணப்படுவது ஏன்? கிழைத்துவமாக இவை மட்டும் தேர்வு செய்யப்படுவது ஏன்? கிழக்கும் மேற்கும் என்ற காலனிய மனப்பான்மையின் தொடர்ச்சியே இது எனவே கருதத் தூண்டுகிறது. கிழக்கு சார் தத்துவங்கள் ஆன்மீகம் மேலோங்கியது. மேற்குசார் தத்துவங்கள் லோகாதம் மேலோங்கியது. அறிவியல் சற்று தூக்கலாக உள்ள தத்துவங்கள் என்ற காலனிய இருமை தான் இதில் வெளிப்படுகிறது. உள்ளபடியே இது மெய்யில்லை.

மேற்கிலும் சரி கிழக்கிலும் சரி பண்டைய காலம் தொட்டே ஆன்மீகம் எனப்படும் இறையியல் சார் தத்துவங்களும்; இவற்றிற்கு முரணாக பொருள் முதல்வாத லோகாயத தத்துவங்களும் உருவாகி வளர்ந்து வந்துள்ளன. உள்ளபடியே நவீன காலத்திற்கு முன்பு வரை பொதுவாக கிழக்கிலும் மேற்கிலும் ஆன்மீக தத்துவங்களே மேலாதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் காலப்போக்கில் ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்பட்டதும் அதற்கு அறிவியலின் கருத்து தாக்கம் அதிகமாக துவங்கியது. நேரடியாக அல்லது முறைமுகமாக அறிவியலை ஏற்க வேண்டிய சமூக பொருளாதார பண்பாட்டு நெருக்கடி ஐரோப்பாவில் ஏற்பட்டது. ஆகவேதான் வரலாற்றின் போக்கின் வழி, ஐரோப்பாவில் இன்று பெரும்பாலான தத்துவங்கள் அறிவியலை முரண்படாமல் அமைந்து நிற்கிறது.

இந்தியா போன்ற கீழை நாடுகளில் இன்னமும் முழுமையாக சமுதாய மறுமலர்ச்சி ஏற்படவில்லை. ஆகவே இன்னமும் இங்கு தேங்கியு குட்டையாக ஆன்மீகவாதம் தலைதூக்கி நிற்கிறது. இது வரலாற்று போக்கு. ஆகவே ஏதோ இயல்பாகவே; சுபாவமாகவே மேற்கில் அறிவியல்; கிழக்கில் ஆன்மீகமும் என்று வாதிடுவது வரலாற்று பார்வையற்ற வாதம். முற்றிலும் சரியல்ல.

பண்டைய தத்துவங்களின் இயங்கியல் எச்சங்கள்
குனிந்திரு நிமிர்ந்திருப்பாய்
காலியாக இது; நிறைந்திருப்பாய்
தேந்ய்ந்திரு புத்தம் புதிதாய் இருப்பாய்

என தாவோவின் இயக்கங்கள் – எதிர்மறைகளுக்கிடையேயான இடையற செயல்கள் காப்ராவால் சுட்டப்படுகிறது. அதுமட்டுமல்ல; எதிர்மறைகளின் இயக்கப்பூர்வமான உள்ளூட்டு செயல்பாடே மாற்றம் என்கிற கருத்தாக்கம் லாவேசு போன்றோர் உடைத்தனர் எனவும் காப்ரா எடுத்துக் கூறுகிறார்.

இக்கருத்துக்களின் வழி தனது நூலின் மூன்றாம் பகுதியில் எதிரும், புதிருமான உலககியலுக்கு அப்பால் என சில அத்தியாயங்களை படைக்கிறார் காப்ரா. அனைத்துப் பொருட்களின் ஒற்றை நிலை; வெற்றிடமும் உருவமும் மாற்றத்தின் தோற்றங்கள் (பாங்கு) ஒன்றை ஒன்று ஊடுறுவல் இவை மூன்றாம் பகுதியின் சில முக்கிய பகுதியினர்.

மார்க்சிய இயங்கியல் தத்துவம் அறிந்தோர். சட்டென்று ஆ இவை இயங்கியலின் விவாதிக்கப்படும் தத்துவ செய்திகள் அல்லவா என வியக்கக் கூறலாம். ஆம் இவை அனைத்தும் இயங்கியலின் எளிய சாராம்சங்களே ஆகும்.

பண்டைய தத்துவங்கள் சிலவற்றின் (அவை கருத்து முதல்வாத தத்துவமாகட்டும் பொருள் முதல்வாதமாகட்டும்.) இயங்கியலின் எளிய எச்சங்கள் காணக்கிடைக்கின்றன. இதைத்தான் காப்ரா குறிப்பாக சுட்டுகிறார்.

அறிவியலும் உள்ளபடியே இயங்கியல் சார்ந்தது ஆகும். ஆகவே இயங்கியலின் சில அறிவியலோடு ஒப்புமை பெறுவது என்றும் வியப்புமல்ல. அறிவியலின் இயங்கியல்களும்; பண்டைய தத்துவங்களின் காணக்கிடைக்கும் சில இயங்கியல் எச்சமும் பொருந்துவதும் வியப்பு அல்ல. ஆனால் இத்தகைய அங்கும், இங்கும் காணக்கிடைக்கும் பொதுக் கருத்தை வைத்து இயங்கியலின் எச்சத்தை தனக்குள்ளே வைத்துள்ள இறைஞான போக்குகள் முழுமையாக சரி எனக் கொள்வது ஏற்புடையதல்ல.

எடுத்துக்காட்டாக அந்தமானில் உள்ள எரிமலையின் இயக்கத்தால் மலைமுகடுகள் உயர்கின்றன. ஆனால் அதற்கு மாறாக காற்று மழை முதலியவற்றால் அதன் முகட்டின் உயரம் தேய்கிறது. இந்த இரண்டு எதிர் முரண்களின் இடைவிடாத செயல்பாடே அம்மலைகள். இந்த இரண்டு முரண்களில் ஒரு கூறினான் விட்டு அம்மலைகளின் இயக்க்ததை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது.

இது இயங்கியலின் பாலபாடம்

யின்-யாங் என்றும் ஜஜிங் தத்துவமும் முரண்களின் சுட்டி என்ற கருத்தை கொண்டுள்ளது. யின் இல்லாமால் யாங் இல்லை. இது தாவோ தத்துவத்தில் உள்ள இயங்கியலின் எச்சம் தத்துவகூறு. ஆனால் இந்த இறைஞான கோட்பாட்டியல் என்பது ஆண் யாங் என்பது பெண். இது கூடுதலாக கற்பிதம் செய்யப்படும் பிதற்றல்.

எரிமலையின் இயக்கத்தின் ஆண் எனவும் காற்று, மழையின் இயக்கத்தை பெண் எனவும் யின்-யாங் வழி என்கிறர். கூற வேண்டும். அது அபத்தம். எரிமலை என்பதற்கும் ஆண் / பெண் என்ற உயிரியல் சார் பால் பாகுபாட்டிற்கும் சம்பந்தமே இல்லை.

யின்யாங் தத்துவத்தில் ; யின் – ஆண்; யாங் பெண் – மேலும் சித்தத்துவம் ஆண் என்பதை தர்கம்; வன்முறை என்பதே பொத்தாம் பொதுவாக இணைத்து; பெண் என்பதை உள்ளுணர்வு, பென்மை என்பதோடு இணைப்பது உள்ளபடியே பால் பாகுபாட்டை வெளிப்படுத்தும் போக்குதான். பெண்களுக்கு தற்க அறிவு / பகுத்தறிவு இயல்பானதல்ல; உள்ளுனர்வுதான் சுபாவம் எனவெல்லாம் வரலாறு; குறிப்பிட்ட பண்பாட்டுச் சூழல் சாராமல் கூறுவது அறிவுக் கொவ்வாதது.

அதாவது அறிவியல்சார் மார்க்சிய இயங்கியல் குறிப்பிட்ட சூழலுக்கு என்ற முரண்களை வகுத்துப் பார்க்கிறது. பொத்தாம் பொதுவாக முரண்கள் ஒன்றுக் கொன்று இணைநேர் என மார்க்சிய இயங்கியல் கூறுவதில்லை. ஆகவேதான் யின் – யாங் என இரண்டு பிரிவாக வகுத்து ஆண் / பெண் தர்க்கம் / உள்ளுணர்வு; வன்முறை / மென்மை என எல்லாவற்றையும் யின் – யாங் என பிரிப்பதை ஏற்பதில்லை.

ஆய்வும் – உள்ளுணர்வும்

காவோவின் இயற்பியல் என்ற இந்த நூலின் பின் அட்டையில் இது சான்றுக்குப் புலப்படாத அனுவியல். நுண்ணணுவியல்… சார்பியல், குவாண்டம் கொள்கைகளின் அடிப்படையில் ஆய்வு செய்யும் போது உணர்ந்து அறிக்கூடிய உள்ள லர் தொண்மை வாய்ந்த கிழக்கத்திய தத்துவார்த்த மரபுகளோடு ஆழமான ஒப்புமை கொள்கின்றன என்பதை நிலை நிறுத்துகிற ஆய்வு ஆவணம் என கூறுகிறது.

இதில் நிலை நிறுத்துகிற ஆய்வு என்ற சொற்றொடரை குறிப்பாக நோக்குக. அதாவது தர்க்கம் சார் பகுத்தறிவு வாதம் மூலம் கிழக்கத்திய தத்துவார்த்த மரபும் – அறிவியலும் ஒப்பு உடையது என நிறுவுவது என்பதே காப்ரா தமக்குள் வகுத்துக் கொண்ட இலக்கு. இதுதான் வேடிக்கை.

உள்ளுணர்வு உள்ளபடியே தர்கம்சார் பகுத்தறிவுக்கு நிகர் என்பது சாப்ராவின் வாதம் எனில் எதற்கு தர்க்கம் சார் வாதம்! எனது உள்ளணர்வு கூறுகிறது. ஆகவே கிழக்கத்திய தத்துவமும், நவீன அறிவியலும் ஒன்றுதான் என்று எளிமையாக கூறி விடலாமே! எதற்காக நீண்டநெடிய காரணகாரிய; தர்க்க வாதங்கள்?

மெய்யாகவே உன்னதமான மெய்பாடிகளை உள்ளுணர்வு வழி; இறைஞான வழி மட்டுமே தரிசனம் பெற முடியும் என வாதிடும் சாப்ராவே தனது நூலில் தர்கம் சார்ந்த பகுத்தறிவுவாதத்தை துணைக்கழைத்திருப்பது ஏன்? உள்ளுணர்வும் இறைஞான தரிசனமும் மொழியால் விளக்க முடியாது என்கின்றனர். தர்க்கத்தால் மட்டுமே இவற்றை விளங்க இயலாது என்கின்றனர்; இறுதியில் தமது கொள்கை என பிரகடனப்படுத்தியதற்கு மாறாக தர்கம் மூலமும் மொழி மூலமும் தமது தத்துவார்த்தத்தை பரப்ப எத்தணிக்கின்றனர்.

இறுதியில் கூறப்போனால் இவர்களது போக்கே இவர்களது கருத்துக்கு எதிரானதாக அமைகிறது என்பதுதான். காப்ரா போன்றோரின் மார்க்சீய இயங்கியலை ஏற்கவியலாத அரசியல், சமூக சூழல் அதே நேரத்தில் இயங்கியலற்ற கருத்து முதல்வாதமும் தத்துவார்த்த ரீதியில் ஏற்கவியலாத நெருக்கடி சூலில் எடுக்கப்படும் சமரச தத்துவார்த்த நிலைபாடுதான் எனத் துணியலாம்.%d bloggers like this: