நிர்வாக முறை நான்கு வகைப்படும்;
எந்த அமைப்பானாலும் அதனை நிர்வாகம் செய்யும் மையமோ, தலைமையோ அவசியம். கம்யூனிஸ்ட் இயக்கத்தை பொறுத்த வரையில் தலைவர், தொண்டர் என்ற ஏற்பாடு கிடையாது. சிந்திக்கவும் ஏவவும் ஒருத்தர் சொன்னதைச் செய்ய இன்னொருத்தர் என்ற எற்பாடு கிடையாது. கூட்டு முடிவு, தனிநபர் பொறுப்பு என்பது கட்சி நிர்வாக முறையின் அடிப்படை கோட்பாடு.
இங்கே நிர்வாகப் பண்பு குறித்து சிலவற்றை குறிப்பிடுகிறோம். நிர்வாக முறை நான்கு வகைப்படும்.
1. ஜனநாயக முறை, 2. ஏதேச்சதிகார முறை, 3. தாராள நிர்வாக முறை, 4. சூழ்ச்சி நிர்வாக முறை.
- ஜனநாயக முறை என்பது ஒரு குழுவின் செயலாளராக இருப்பவர். உறுப்பினர்களிடையே பொதுக்கருத்தை உருவாக்கி அதனை செயல்படுத்தும் முறை.
- ஏதேச்சதிகாரமுறை என்பதற்கு விளக்கம் தேவையில்லை; தனது திறமையால் மரியாதையை உருவாக்கிக் கொண்டு குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கணக்கில் கொள்ளாமல் நிர்வகிப்பது. மந்தைகளாக கருதி மேய்ப்பது, ஏவி வேலை வாங்குவது.
- தாராள நிர்வாக முறை என்பது தொள, தொளப்பான நிர்வாக முறையாகும். குழுவில் இருப்பவர் யார் எதைச் செய்தாலும் கண்டு கொள்ளாமல் விமர்சிக்காமல் நிர்வகிப்பது.
- சூழ்ச்சி நிர்வாக முறை என்பது வெளிப்படைத் தன்மை இருக்காது. தனது கருத்தை வெளியே சொல்லாமல், தனக்கு உடந்தையாக இருப்போரை வைத்துக் கொண்டு நிர்வகிப்பது. சாணக்கியம் என்று இதனை அழைக்கலாம்.
கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு முதல் முறையைத் தவிர மற்ற முறைகள் ஏற்புடையதல்ல; நிர்வாக முறையில் 4 முறைகள் என்பது, பகுத்தாராய வகுக்கப்பட்ட முறைகளே தவிர, எதார்த்தத்தில், இந்த நான்கும், வெவ்வேறு விகிதங்களில் கலந்தே நிர்வாகிகள் உருவாவர். எனவே ஜனநாயக முறைக்கான இடைவிடா முயற்சி அவசியமாகிறது.
கிளைச் செயலாளர் முதல் வெகுஜன அரங்கம் வரை நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் கம்யூனிஸ்ட் வரை ஜனநாயக முறையில் நிர்வகிக்கும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
திறமையை வளர்த்துக் கொள்ளுதல் – அமைப்பாளராக, எழுத்தாளராக, பேச்சாளராக, கிளர்ச்சியாளராக, வகுப்பு எடுக்கும் திறமையுள்ளவராக, வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். எல்லா திறமைகளும் ஒரு சேர வராது என்றாலும் முயற்சிக்க வேண்டும். திறமை வளர்த்தலில் – படிப்பது. தத்துவார்த்த ரீதியாக தன்னை வளர்த்துக் கொள்ளுதல், படிப்பதற்கு நேரம் ஒதுக்குதல், படிக்கும் இதழ்களில் – தீக்கதிர், மார்க்சிட் கட்சி இதழ்கள், நூல்கள் மற்றும் பத்திரிகைகள், பொது அறிவு சம்பந்தப்பட்ட நூல்கள் உட்பட ஆகும்.
படிப்பது மட்டும் போதாது. படித்ததை சக தோழர்களோடு விவாதிக்க வேண்டும். மார்க்சும், எங்கெல்சும், புத்தகங்களின் மூலம் பெற்ற தகவல்களை நேரடியாகவும், கடிதங்கள் மூலமாகவும் விவாதித்ததால்தான் உலகம் போற்றும் தத்துவ ஞானிகளாகவும், புரட்சியாளர்களாகவும் உயர்ந்து நின்றார்கள்; மார்க்ஸ், எங்கெல்ஸ் கடிதத் தொகுப்புக்களை படிப்பவர்களுக்கு, படித்ததை விவாதிப்பதின் மூலமே தெளிவினை பெற முடியும் என்பதை உணர்வர். பல விஞ்ஞானிகளின் வாழ்க்கைகளை படித்தாலும் படிப்பது, விவாதிப்பது என்பதும் அறிவாற்றலை பெருக்கும் வழிகளாக இருந்தன என்பது தெரியும்.
படி – படி – படி
யாதானும் நாடாமல் ஊராமல் இன்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு என்கிறார் திருவள்ளுவர் – மனிதன் சாகும் வரை படிக்க வேண்டுமென்கிறார். பாடை ஏறினும் ஏடது கைவிடேல் என்பது பழமொழி.
மாமேதை மார்க்ஸ் மரணமடைந்தபோது – அவர் மார்பில் புத்தகம் கிடந்தது – அது ஷேக் பியரின் கவிதைகள்.
பண்டித நேரு நான் இறக்கும் போது என் மார்பு மீது மலர்மாலை விழக்கூடாது. கடைசி வரை புத்தகம் படித்து என் மூச்சு நிற்கும் போது – அந்தப் புத்தகம்தான் எனது மார்பில் விழ வேண்டும் என்றார் – மாபெரும் சரித்திரப் போராசிரியர் அவர். அவர் இறந்தபோது மார்பு மீது ஆங்கில கவிஞன் ராபர்ட் பிராடின் கவிதை நூல் கிடந்தது.
கம்யூனிஸ்ட் கட்சியில் குழுக்கள்தான் முக்கியம், செயலாளர் அந்த குழுவை ஜனநாயக ரீதியில் நிர்வாகிக்கும் பொறுப்புண்டு. வெறும் ஞானிகளால் பலனில்லை. செயல்வீரனாயிருந்தால் மட்டும் போதாது. தேர்ந்த ஞானமும் செயலாற்றும் திறனும் இணைக்கப்பட வேண்டும்.
கலை, இலக்கியம் பயிலாதவன் வறட்டு தத்துவவாதியாக இருப்பான் என்றார் “லெனின்”
சினிமா, நாடகம், நாவல், சிறுகதை, கட்டுரைகள் எல்லாம் படித்துப்படித்து மக்களின் பலதரப்பட்ட பார்வைகளை அறிந்துக் கொள்ள வேண்டும். மக்கள் வம்பளப்புகளில் என்ன பேசுகிறார்கள் என்பது உட்பட அறிவது அவசியம். அதாவது கேள்வி ஞானமும் படிப்பின் ஒரு பகுதியே.
பழமையும் – புதுமையும்
கட்சி துவக்கப்பட்ட காலத்தில், கட்டுப்பாடு பற்றியும், எளிமை பற்றியும் கட்சிக்குள் இருந்த பார்வை வேறு வெள்ளையும், சொள்ளையுமாக இருந்தால் ஏழை மக்கள் நெருங்கி பழக மாட்டார்கள் என்ற நிலைமை இருந்தது.
ஆனால், உழைப்பாளி மக்களின் பார்வையில், பண்பாட்டில் பலமாற்றங்கள், முதலாளித்துவ வளர்ச்சிப் கோக்கில் ஏற்பட்டுள்ளது. ஆடம்பரம் எது, எளிமை எது என்பதற்கு அளவு கோலே மாறிவிட்டது. சுத்தம், அழகு, சுகாதாரம் என்பது முன்னுக்கு வந்து விட்டது. கட்டுப்பாடு என்பதற்கும் அளவு கோல் மாறி விட்டது. ஒருவருடைய முன்முயற்சியை தடுப்பது சரியல்ல; புதிய சிந்தனைகளை தடுப்பதும் சரியல்ல; ஒரு பட்டம் பறப்பதற்கு நூல் எவ்வாறு உதவுகிறதோ அதுபோல் கட்டுபாடு நெறிப்படுத்தும் முறையாகவே இருக்கும்.
அதுபோல் பொதுக்கூட்டத்தில், முதலாளிகளையும், அதிகாரி களையும் தாக்கிப் பேசுவது பழைய பாணி. அன்று முதலாளிகளும், அதிகாரிகளும், அடக்குமுறைகள் மூலம் சுரண்டினர். இன்று உழைப்பாளி மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி மூலமும், சலுகைகளை வழங்குவதின் மூலமும் சுரண்டலை பாதுகாக்கிறார்கள். எனவே, பொதுக்கூட்டத்தில் பேசுகிற பொழுது கூட பழைய பாணியை விட்டு, விட்டு அறிவிற்கும் உணர்விற்கும் பொறுத்தமான நியாயங்களை எடுத்துக் கூறுவதின் மூலமே நமது கருத்துச் செல்லுபடியாகும்.
ஜனநாயகப் பண்புகள்
தோழமைப் பண்பு – சமதையாக நடத்துவது தோழர்களை மதிப்பது – அன்பு செலுத்துவது – உதவுவது. அவர்களது குடும்பங்களோடு நல்லுறவு – வாழ்விலும் தாழ்விலும் அவர்களோடு நிற்பது அடிப்படையானது. தேவையைப் பொறுத்து மனதில் சஞ்சலமின்றி சாவை எதிர்நோக்கிச் செல்கிறவர்கள் அவர்கள். தூக்குமேடை பாலு முதல் லீலாவதி வரை. அதுதான் நமது தோழர்களின் முக்கியத்துவம். எந்த உறவுமின்றி லட்சிய ஒருமைப்பாடு என்ற அடித்தளத்தில் உருவாவது தோழமை – அது மகத்தானது.
தனது குடும்பத்தில் சீரான நிலையில் உயிரோட்டமிக்க குடும்ப உறுப்பினராய்த் திகழுவது அவசியம். இல்லையேல் எதிர்நிலை குடும்பத்திலேயே வரும். தோழர்களின் உணர்வு ஆழம் – வேறுபாடு அறிந்து, அவரவர் ஆற்றலறிந்து கட்சிப் பணிகள் தர வேண்டும். எவரைப் பற்றியும் மதிப்பீடு செய்வது கூட்டு முடிவாக இருக்க வேண்டுமே தவிர, தன்னிச்சையாக மதிப்பீடு செய்து திணிக்க முயற்சிக்க கூடாது. தோழர்களிடம் மிகுந்த சகிப்புத்தன்மையோடு, கர்வமின்றி நடந்துகொள்ள வேண்டும். வணக்கம் செலுத்தினால் பதில் வணக்கம் செலுத்துவது உட்பட கவனம் தேவை.
முகதுதிகளுக்கு மயங்கக் கூடாது. அதை விரும்பக் கூடாது. முகதுதி செய்வோர் நமது முதுகுக்குப் பின்னால் நிந்திப்பார்கள். சுய அகம்பாவம் – தனி மனித சூரத்தனம் – ஆடம்பர வீராப்புகள் கூடாது. இவர்கள் கட்சியில் அந்தது தேடுகிறவர்கள் என்றார் லெனின். சொந்த நலன்களைக் கட்சியின் நலனுக்காகத் தியாகம் செய்வது கம்யூனிசப் பண்பின் அடையாளம். கட்சி நலனுக்கு விரோதமான சொந்த நோக்கங்கள் கூடாது. அது கட்சியின் நோக்கங்களின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும்.
ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்ட ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எர்னட் தேல்மன் தோழர்களுக்கு நீங்கள் எந்த வழிமுறையைப் பின்பற்றினாலும் உங்களுடைய நடத்தைகள் என்ற உங்கள் உள்ளார்ந்த குணத்திலிருந்துதான் அவை உருவாக்கம் பெறுகின்றன. ஒரு தலைவனின் வரலாறு அவனது பண்பிலே இருந்துதான் உருவாகிறது. அந்தத் தலைமைப் பண்புகளை நீங்கள் பெற வேண்டும் என்று கூறினார்.
கட்சியின் நிலைபாடுகளைக் குழப்பமின்றிப் புரிந்துகொள்ள வேண்டும். நமது இன்றைய கொள்கை இன்றைய நிலைமைக்குப் பொருந்துகிறது. நமது நேற்றைய கொள்கை நேற்றைய நிலைமைக்குப் பொருந்தியது. நமது நாளைய கொள்கையை நாளைய நிலைமை தீர்மானிக்கும். இந்த அடிப்படையைப் புரியாவிடில் அரசியல் தவறில் முடியும். நாமும் குழம்பி அணிகளையும், மக்களையும் குழப்பிவிடுவோம்.
ஒரு புரட்சிக்கு கட்சி அவசியம். அதற்கு அதன் உறுப்பினர்களின் ஆதரவையும், மதிப்பையும் பெற்றுள்ள பலமான தலைமை அவசியம். அந்தத் தலைமைக்குத் தத்துவம் தெரிந்தால் மட்டும் போதாது. அதைப் பயன்படுத்தவும் அறிந்திருக்க வேண்டும். கட்சிக்குள் கருத்தொற்றுமை, செயலொற்றுமை, கட்டுப்பாட்டு ஒற்றுமையை உருவாக்கத் தெரிய வேண்டும்.
கட்டுப்பாடின்றி கட்சி அணிகளின் ஒற்றுமையை எண்ணிப் பாக்கவே முடியாது. கட்டுப்பாடின்மையே கட்சிக்குள் கட்சி கட்டும் போக்கிற்கு இட்டு செல்கிறது. இதனால் நமது குறுகிய நலன்களைக் கட்சியின் நலன்களைவிட மேலானதாகக் கருதும் குழுக்கள் தோன்றுகின்றன. கோஷ்டிகளும், குழுக்களும் இருப்பது கட்சியைப் பலவீனப்படுத்தி சீர்குலைக்கும். ஒற்றுமையைக் குலைத்துக் கட்சி அணிகளைப் பிளவுபடுத்தும். ஜனநாயக நடைமுறையில் குறைகள் ஏற்படுமானால் கட்டுப்பாடுகள் செல்லுபடியாகாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
எல்லா வகையான திருத்தல் வாத, வறட்டுத்தத்துவவாத செக்டேரியன் கருத்துக்களை எதிர்த்தும் சமரசமற்ற போராட்டம் நடத்த வேண்டும். கட்சி விவாதங்களைக் கருத்து வேறுபாடுகளை வென்று அகற்றுவதற்கான சாதனமாக, கட்சியின் ஒற்றுமையை வலுப்படுத்தும் சாதனமாக நடத்த வேண்டுமென்று லெனின் கூறினார். தவறான சிந்தனைகளுக்கு எதிராக ஈவிரக்கமின்றிப் போராட வேண்டும். மறுபுறம் தவறிழைத்த தோழர்களுக்கு விழித்தெழப் போதிய அளவு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். அதற்கு மிதமிஞ்சிய அவகாசமும் கூடாது. தவறிழைத்தோர் அதிலேயே ஊன்றி நின்று நிலைமையை மோசமாக்க அனுமதிக்கக் கூடாது. நடைமுறை அனுபவத்துடன் கூடிய தலைமை தமது அனுபவங்களைக் கோட்பாடுகளாக ஒழுங்குபடுத்திக்கொடுக்க வேண்டும். இதன் மூலம் தவறிழைப்பதைத் தடுக்க முடியும்.
நாம் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கையால் கட்சி வளர்ச்சி பெற வேண்டுமே தவிர பாதகமாகிவிடக்கூடாது. இதற்கு தோழர். லெனின் கூறும் உதாரணம் – குழந்தையைக் குளிப்பாட்டுகிறபோது அழுக்கு நீரைத்தான் வெளியே கொட்ட வேண்டுமே தவிர குழந்தையையும் சேர்த்துக் கொட்டி விடக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
உணர்வுகள்
புரட்சிகர இயக்கத்தில் பணியாற்றும் நாம் தனிமனித உணர்வுகளையும், சமூகத்தின் உணர்வுகளையும் அறிந்து கொள்ள வேண்டும். மனம் – அறிவு பற்றியது. அறிவு என்பது பட்ட அறிவு. அனுபவங்களின் தொகுப்பே அறிவு. அதைப் பிரதிபலிக்கும் முறையே உணர்வு ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் அனுபவங்கள் மனிதனிடம் மாற்றங்களை உருவாக்குகிறது – மானுடத்தின் சிறப்பு என்னவென்றால், பழைய தலைமுறையிடம் இருந்து புதிய தலைமுறை கற்கிறது, கற்றதை இளைய தலைமுறை மேன்மைப்படுத்துகிறது என்பதுதான். கட்சி அமைப்பிலும் முதுமையும், இளமையும் இணைந்து நிற்க வேண்டும்.
மனம் உடலை பாதிக்கிறது. உடல் மனதை பாதிக்கிறது. உடல்மீது தாக்கம் ஏற்படும்போது மனம் குதூகலமடைகிறது. மாற்றுரு ஆகிறது. (கிச்சு கிச்சு மூட்டினால் சிரிப்பு – புதிய நிலை)
நம்பிக்கை வாதம் – அவநம்பிக்கை வாதம் – எதார்த்தம் (ரோஜா – முள் – பார்த்துப் பறித்தல்). நல்லதும் கெடுதலும் இணைந்தே இருக்கும் – சதவீதம்தான் வேறுபாடு. எது அதிகமோ அதுவே அதுவாகி விடுகிறது. மனித மனம் எல்லாவற்றிலும் தலையிட விரும்புகிறது.
உடனே தலையிட வேண்டியது
தலையிடக் கூடாதது
காத்திருந்து தலையிடுவது
இவற்றைப் பிரச்சனைகளில் பிரித்தறிய வேண்டும்.
தீப்பிடித்து விடுகிறது – உடனடித் தலையீடு வேண்டும். குழந்தை பெற பத்துமாதம் காத்திருக்க வேண்டும். பால் கறக்க மாடு ஈனும் வரை காத்திருக்க வேண்டும். திடீர் மறியல் நடக்கிறது – உடனடித் தலையீடு வேண்டும். நமது வழக்கமும் அணுகுமுறையும் தலையிடுதலுக்கு முக்கியமாகிறது. தனிமனிதரோடும் மக்கள் திரளோடும் நாம் தொடர்பு கொள்ளும்போது நமது மனமும் கண்ணோட்டமும் சரியாக இருக்க வேண்டும்.
கருத்துப் பறிமாற்றம் பற்றி – விஞ்ஞானிகள் பாவ்லோவ். டாக்டர் மலின் கூறுவது:-
ஒருவர் சொல்லும் செய்தியில் வார்த்தைகள் தருவது 7 சதம். குரல் தருவது 45 சதம். அங்க அசைவு தருவது 48 சதம். 93 சதம் வார்த்தைகளற்றவை – ஆனால் செய்தி. ஊமைகள் பேசுகிறார்கள் – அங்க அசைவுகள் மூலம் – 48 சத அங்க அசைவுகளால் அவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்ய முடிகிறது. செவிடர்கள் உதடு அசைவு. அங்க அசைவுகளைப் பார்த்து அறிந்து கொள்கிறார்கள். அதாவது, நாம் பேச்சில் உள்ள சத்தம் மட்டுமல்ல; அங்க அசைவுகளும், செய்திகளை சுமந்து செல்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் சொல்ல வந்ததை உத்திரவாதம் செய்ய அங்க அசைவுகள் உதவுகின்றன. சில சிறந்த பேச்சாளர்கள் குரலை ஏற்றி இறக்கி பேசுவதின் மூலம் அங்க அசைவு இல்லாமலே கேட்போரை வசப்படுத்துவர். கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்
சொலல் வல்லன், சோர்விலன் அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது என்ற குறள்கள் கருத்துப் பரிமாற்றம் பற்றி ஆதிகாலத்திருந்தே படிப்பினைகள் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதை காட்டுகிறது.
கருத்துப் பரிமாற்றத்தில் அழுத்தமான பரிமாற்றமும் தேவை. பொதுமக்களுக்கு வேலை செய்யும்போது முகத்தை உம்மென்று வைத்துக் கொள்வது, கூனிக் குறுகுதலும் கூடாது. தெளிவும், கலகலப்பும், கம்பீரமும் இருக்க வேண்டும். புன் சிரிப்பு இழையோட கும்பிடுவது தொடர்பின் துவக்கமாக இருக்க வேண்டும். பிரியும் பொழுது கைகுலுக்குவது, அரவணைப்பது மேலும் தொடர்பினை உறுதிப்படுத்தும்.
தொடர்பு கொள்வதில் இயற்கையான தன்மை இருக்க வேண்டும். செயற்கைத் தன்மையை அனுமதிக்கக்கூடாது. நிலப்பிரபுத்துவமும், முதலாளித்துவமும், சுரண்டல் கும்பலும் செயற்கைத் தன்மையுடன் தொடர்பு கொள்ளும் – கும்பிடும் கைக்குள் ஆயுதமிருக்கும்.
நமது தொடர்பில் கபடமின்றி இருக்க வேண்டும். எங்கும் எதிலும் முடிவு என்பது மூன்று விதம்
திடீர் முடிவு
பின்பற்றிய முடிவு
ஆராய்ந்து எடுத்த முடிவு (எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு)
கூட்டுச் செயல்பாடு
காலம் காலமாக மனித சமூகம் கூட்டாக வாழ்ந்தது. இது தொன்மைப் பாரம்பரியமாகும். சமூகத்திற்குப் பணியாற்றும் போது கூட்டுச் செயல்பாடு முக்கியமாகத் தேவைப்படுகிறது. கூட்டுச் செயல்பாட்டில் அறிவிக்கும். கூட்டு முடிவை அவரவர் தமது தனித்த செயல்பாடுகளால் அமுல்படுத்த வேண்டும். இதில் நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். பழக்கங்கள் முக்கியமானது. அவை இரு வகைப்படும். நீடிக்கச் செய்ய வேண்டியவை. நீக்க வேண்டியவை. கர்வமும், போலித் தனமும் கூடாது. எல்லாம் தெரிந்தவன் என்பது கர்வம். எல்லாம் தெரிந்தது போல் நடிப்பது போலித்தனம் ஆகும்.
எதையும் சுற்றி வளைத்துப் பேசக் கூடாது. அது குழப்ப நிலையாகும். எப்போதும் பக்குவ நிலை தேவை. எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், முரண்பட்டவர்களிடம் கூட அணுகத் தெரிய வேண்டும். அவரோடு பேசமாட்டேன் என்பது கூடாது. களங்கமற்ற நிலையும், தன்னம்பிக்கையும் தேவை. எந்த விஷயத்தையும் – இருப்பதைப் பார்ப்பது – இயல்பாய் பார்ப்பது அவசியம்.
செவி மடுத்தல்
1. உன்னிப்பாய் செவி மடுத்தல் (ஈடுபாடு மிகுதி) 2. பொதுப்படையாய் செவி மடுத்தல் (ஈடுபாடு குறைவு). சொல்வதைக் கேட்டு அறிவது. சொல்லாததையும் கேள்வி கேட்டு அறிவது ஆகிய இருவகைப்படும். டாலின்: இயக்கம், முழுமைக்கும் ஒரு காது என்றால் கீழிருந்து வரும் தோழர்கள் கூறுவதைக் கேட்க ஒரு காதைத் தனியே ஒதுக்கி வைக்க வேண்டும். அவர்கள் கூறும் செய்திகளில் ஆயிரம் குப்பை கூளங்களிலிருக்கும் அவை ஏற்கெனவே, உங்களுக்குத் தெரிந்தவைகளாகவும் இருக்கும். ஆனால் ஐந்து சதமானமாவது அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது என்றார். காது கொடுத்துக் கேட்பதிலேயே குறை சொல்ல வந்தவரின் மனபாரம் பாதிக்கு மேல் குறைந்துவிடும்.
பிரச்சனையும், தீர்வும்
பிரச்சனை இருப்பின் அதற்குத் தீர்வு உண்டு. அதைத் தீர்வு காணாமல் குறைபேசி தள்ளுபடி செய்ய முடியாது. காலில் ஆணி குத்தி விடுகிறது. ஆணியைப் பிடுங்கியெறிந்துவிட்டு ஊசி போடாமலிருந்தால், குறைந்தபட்சம் கள்ளிப் பாலாவது அடிக்காமலிருந்தால் சீழ் பிடித்துக் கால் பறிபோகும். அலட்சியம் கூடாது.
குழந்தை ஒரு நாற்காலியில் தட்டி கால் தடுக்கி விழுகிறது. அதை அலட்சியம் செய்ய முடியாது. குழந்தையைக் கீழே விழச் செய்த நாற்காலியைப் பொய் அடி அடிக்கிறோம். அதைக் குழந்தையிடம் நாற்காலியை அடிச்சாச்சு என்று கூறுகிறோம். குழந்தை அழுகையை நிறுத்தி சாந்தமடைகிறது. குழந்தை கீழே விழுந்ததை அலட்சியம் செய்தால் உறவு கெடும். நாசமாகும்.
மனிதனின் கெட்ட குணங்களை வெறு – ஆனால் மனிதனை வெறுக்காதே – நேசி.
நகைச்சுவை
சிரிப்பு – ஒரு அருமருந்து – வலி நிவாரணி சகல வலிகளையும் போக்குகிறது. சிரிப்பு சுய மதிப்பை உயர்த்துகிறது. கர்வத்தை அகற்றி சமனப்படுத்துகிறது. மனதை லேசாக்கி பலப்படுத்துகிறது. வாழ்வில் உறுதி ஏற்படுத்துகிறது. நினைவாற்றலையும் சிரிப்பு வளர்க்கிறது. மன அழுத்தத்தை நீக்குகிறது. மூளைக்குப் புத்துணர்வு அளிக்கிறது. சிறந்த சிந்தனைகளைத் திறந்துவிடுகிறது.
தன்னடக்கம்
பணிவும், தன்னடக்கமும் நிர்வாகப் பண்பில் தலையாயதாகும். நிறைகுடம் ததும்பாது – காலிப் பாத்திரங்கள் கூச்சலிடும் என்பார்கள். யூரி காகரின், ஒரு கம்யூனிஸ்ட் முதன் முதலில் விண்வெளியில் பறந்த மாவீரன். அவரிடம் ஒரு அமெரிக்க நிருபர் : உயிரைப் பணயம் வைக்கும் விண்வெளிப் பயணத்தில் உங்களை ஏன் அனுப்பினார்கள் என்று கேட்டார். அதற்கு காகரின் : என்னை அனுப்பியது அல்ல. என்னை நம்பினார்கள் என்று சொல்லுங்கள். அந்த நம்பிக்கைக்குரியவனானதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்று பதிலளித்தார். தடால் புடால் பேச்சுக்கள், பீற்றிக் கொள்ளுதல் எவ்விதப் பலனையும் தராது.
ஒழுக்கம் – நேர்மை – நாணயத்தைப் பின்பற்றுக. இம் மூன்றும் இருந்தால் அச்சமின்றி நடைபோட முடியும். லஞ்சம் – ஊழல் அண்டவிடக் கூடாது. தொடர் குடிகாரர்கள், பெண் பித்தர்கள், சூதாடிகள் கட்சியில் அனுமதிக்கக் கூடாது. திருத்த முடியாதவர்களை வெளியேற்றும் திராணி வேண்டும். பஞ்சாயத்துப் பேசுவது அறவே கூடாது என்பதல்ல. கட்சி உறுப்பினர்கள், அனுதாபிகள், ஆதரவாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வரும் பிரச்சனைகளில் தலையிட்டுப் பேசித் தீர்வு காண வேண்டும். ஆனால் கட்சிக்குச் சம்பந்தமில்லாத கட்டப் பஞ்சாயத்துக்கள் கூடாது. அதில் காசும் பார்க்ககூடாது.
ஒன்றைத் துவக்குவதற்கும், அதை முடிப்பதற்குமான திறமை வேண்டும். கட்சி வேலைகள் உருவாக்கி, திட்டமிட்டுக் கொடுத்து, அதைத் தலைமைதாங்கி வழிகாட்டி நிறைவேற்ற வேண்டும். அனுபவங்களில் இருந்து படிப்பினை பெற வேண்டும். வாய்ச் சொல் வீரர்கள் பற்றி எச்சரிக்கை தேவை. யாந்திரீகமான அணுகுமுறை கூடாது. வரும் தோழரிடம் வசூல் முடிஞ்சதா, கொண்டு வந்தாயா என்று முதலில் கேட்கக்கூடாது. வேறு பல குசலங்கள் பேசிய பின் சாவகாசமாய் கேட்க வேண்டும். அதற்குள் அவரே சொல்லி விடுவார். தோழர்கள் எந்திரமல்ல. அதிகார வர்க்கப் போக்கு அறவே கூடாது. தோழர்கள் உங்களை நெருங்கவே பயப்படுவார்கள். வாசல் வழியே எட்டிப் பார்த்துவிட்டு ஓடிவிடுவார்கள். தோழர்கள் உங்களிடம் நெருங்குவதற்கு ஆசைப்பட வேண்டும்.
கட்சி ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். ஒருவருக்குத் தெரிந்தால் ரகசியம் வேறொருவருக்குப் போய்விட்டால் அது பரசியம். கட்சி சேதமுறும். இந்தோனேசியா அனுபவம் – ஓட்டை வாயர்களால் அழிவு – ஐந்து லட்சம் தோழர்கள் ராணுவத்தால் அழிக்கப்பட்டார்கள். உங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லாதீர்கள். முடிந்ததையெல்லாம் செய்யாதீர்கள்; உங்களிடம் கேட்பதையெல்லாம் கொடுக்காதீர்கள் என்பது முதுமொழி. தோழர்கள் மீது கண்காணிப்பு வேண்டும். நல்லது கெட்டது இரண்டின் மீதும். ஆனால் அதற்காக சிஐடி போட வேண்டுமென்பதல்ல.தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீர இடும்பை தகும் என்கிறது குறள்.
எல்லா வேலைகளையும் நானே செய்வேன் என்பது கூடாது. வேலைகளை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். வேலைப் பிரிவினை செய்யப்பட்டபின் அவரவர் அரங்க வேலைகளில் சாதனைகள் படைத்துத் தங்கள் முத்திரைகயைப் பதிக்க வேண்டும். இதற்குத்தான் ஒருவர் முன்னுரிமையளிக்க வேண்டும்.
சிக்கலான நிலைமைகள், அபாயம் வரும்போது பீதியடையாமல், பீதியின் சாயல்கூட இல்லாமல் நிற்க வேண்டும். நுண்ணறிவும், ஆய்வுத் திறனும் தேவை. அபாயத்திலிருந்து தப்புவது – முன்னேறுவது அல்லது பின்வாங்குவது பற்றி சரியான முடிவை உடனே எடுக்க வேண்டும்.
தோழர்களை விமர்சிப்பதிலும், திருத்துவதிலும் (ஒழுங்கு நடவடிக்கை உட்பட) பாரபட்சம் காட்டக்கூடாது. புதிய பொறுப்புகளுக்குத் தோழர்களை உயர்த்தும்போதும் பாரபட்சம் கூடாது. பாரபட்சம் காட்டினால் கோஷ்டி முளைக்கும். எந்த விமர்சனமும் சுயவிமர்சனப் பார்வையோடு அமையவில்லையானால் அந்த விமர்சனம் எடுபடாது.
ஒரு பிரச்சனைகளை ஆராயும்போது மானசீகப் போக்கு, ஒருதலைப்பட்சப் போக்கு, மேலோட்டமான போக்கு ஆகிய மூன்றும் கூடாது. மானசீகப் போக்கு என்பது பிரச்சனையின் எதார்த்தத்தை பார்க்கத் தவறுவதாகும். அதாவது பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பார்க்காமல் தன்னோக்குப் பார்வையில் பார்ப்பது ஆகும்.
ஒருதலைப்பட்சப் போக்கு என்பது பிரச்சனையை முழுமையாகப் பார்க்கத் தவறுவதாகும். அதாவது பாதகமான நிலைகளையும் பார்க்காமல் சாதகமானதை மட்டும் புரிந்து கொள்வது ஒருவரின் சாதனைகளைப் புரிந்துகொள்ளாமல் அவரது குறைபாடுகளை மட்டும் புரிந்து கொள்வது, முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் பகுதியை மட்டும் புரிந்து கொள்வதாகும். முதலாளியைப் புரிந்து கொள்ளாமல் தொழிலாளியை மட்டும் புரிந்து கொள்வது, நிலப்பிரபுவைப் புரிந்து கொள்ளாமல் விவசாயியை மட்டும் புரிந்து கொள்வது, நம்மை ஒழித்துக் கட்ட நினைக்கும் கட்சிகளைப் பற்றி புரிந்து கொள்ளாமல் நமது கட்சியை மட்டும் புரிந்து கொள்வதாகும். பகைவரை அறிந்து, நம்மையும் அறிந்து கொண்டால் தோல்வியே இல்லாமல் நூறு போர்களைக்கூட நம்மால் நடத்த முடியும்.
மேலோட்டமான போக்கு என்பது பிரச்சனையின் ஆழத்தைப் பார்க்கத் தவறுவதாகும். தூரத்திலிருந்து ஒன்றைப் பார்ப்பதாகும். நுட்பமாக ஆராய மறுப்பதாகும். பிரச்சனையின் வெளித் தோற்றத்தை மட்டும் பார்த்து அதன் உள்ளிருப்பதை அறியாமல் போவதாகும். பிரச்சனையை மேலோட்டமாகப்பார்த்து அதைத் தீர்க்க முற்பட்டால் தொல்லைகளே மிச்சமாகும்.
ஒரு பிரச்சனையை உண்மையாக அறிய வேண்டுமானால் நாம் அதன் எல்லாப் பக்கங்களையும் எல்லாத் தொடர்புகளையும், இடை நிகழ்வுகளையும் வரலாற்று ரீதியாக தழுவி ஆராய வேண்டும். இதை நாம் முழுமையாய் செய்வது கடினம். ஆனால் எல்லாப் பக்கங்களையும் ஆராய வேண்டும் என்பது தவறுகள் நேராமல் பாதுகாக்கிறது என்றார் லெனின்.
நிதி திரட்டுதல்
கட்சிக்கு நிதி திரட்டுவது தலைமையின் அதிமுக்கியப் பணியாகும். அதற்குத் திட்டமிடலும், ஒரு காலத்தை நிச்சயித்து நிதி வசூலுக்கான குறியிலக்கை நிச்சயித்து, குறித்த காலத்திற்குள் வசூலித்து முடிப்பது அவசியமாகும். நிதி வசூலில் கட்சி அணிகள், அனுதாபிகள், ஆதரவாளர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி இறக்கிவிட வேண்டும்.
கட்சிக்கு நிதித் தேவைகள் இருந்து கொண்டே இருக்கும். ஒரு ஆண்டுக்குத் தேவையான நிதியை நிதியை ஒரே மாதத்தில் வசூலித்து முடிக்க வேண்டும். மக்களுக்குச் சேவை செய்து, அவர்களது நல்வாழ்வுக்குப் போராடும் கட்சி என்பதால் பொது மக்களிடம் வீடு வீடாகச் சென்று நிதி வசூலிக்கும் முறையே சரியானதாகும். ஒரே நபரிடம் லட்சக்கணக்கில் நன்கொடை பெறுவது கூடாது. காண்டிராக்டரிடம் கட்சி நிதி என்று பல்லாயிரக்கணக்கான நன்கொடை பெறுவது தவறு.
நேர நிர்வாகம்
குறித்த நேரத்தில் வருவது – நேரந்தவறாமை அவசியம். புரட்சிக்காரர்கள் நேர நிர்வாகத்தைக் கறாராகப் பின்பற்ற வேண்டும். திருமணத்திற்கு முகூர்த்த நேரத்திற்குச் சரியாகச் செல்வது, சடங்கு. காது குத்துக்கு நேரத்திற்குப் போய்ச் சேருவது, உறவினர் இறந்தால் அடக்க நேரத்திற்கு சரியாய்ச் செல்வது, சினிமாவிற்கு நேரத்திற்குச் செல்வது. ஆனால், கட்சிக் கூட்டம், கமிட்டிக் கூட்டத்திற்கு என்றால் தாமதமாக வருவது. காரணம், இது உணர்வு சம்பந்தப்பட்டதாகும். நம் கட்சிதானே, எப்படியும் போகலாம், நாம போகாம கூட்டம் நடந்திடுமா, நமக்காக எல்லோரும் காத்திருக்கட்டும், என்ன பெரிசா நடந்துடப்போகுது என்ற அலட்சியமும், கர்வமும் இதற்கு அடிப்படையாகும். தலைமறைவுக் காலங்களில் தாமதமாக வந்தால் ஆபத்து நேரும்.
குறித்த நேரத்தில் கமிட்டி கூடி குறித்த நேரத்திற்குள் முடிவுகளை எடுப்பது, கூர்மையான விவாதங்களை நடத்தி, மணிக்கணக்கான எல்லையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது அவசியம். குறித்த காலத்தில் குறித்த வேலையை முடிப்பது முக்கியம் (வசூல், சந்தா உட்பட அனைத்தையும்). காலம் பொன் போன்றது என்பார்கள். அதை மண்ணாக்கிவிடக்கூடாது. சுய முயற்சி, சுய பயிற்சி மூலம் நேர நிர்வாகத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.
ஊழியர்களை வளர்ப்பது
சிறந்த அரசியல் கொள்கையை வகுத்த பிறகு அதை நிறைவேற்றுவதில் பிரதான பங்கு வகிப்பது ஊழியர்கள்தான். எனவே, ஏராளமான புதிய ஊழியர்களைத் திட்டமிட்டுத் தயாரிப்பது தலைமையின் இன்றியமையாத கடமையாகும்.
ஊழியர்களைத் தீர்மானிப்பதில் தலைமை திறமையுடன் இருக்க வேண்டும். ஊழியரின் ஏதாவது ஒரு வேலையை ஒரு சமயத்தில் மட்டும் பார்த்து அவரைப் பற்றி முடிவுக்கு வரக்கூடாது. முழு வேலையையும் கவனித்து முடிவு செய்வதே சரியான வழியாகும்.
ஒரு ஊழியர் கட்சியின் கொள்கையை உறுதியுடன் நிறைவேற்றுபவரா? கட்சிக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடப்பவரா? மக்களுடன் நெருங்கிப் பழகுபவரா? சுயமாக வேலை செய்யும் திறமையுள்ளவரா? பொறுப்பைத் தீவிரமாக ஏற்று நடப்பவரா? தனது சொந்த நலனைப் பிரதானமாய் கொள்பவரா? என்பனவற்றைக் கணக்கிலெடுத்துக் கொண்டு கட்சி ஊழியரை நியமிக்க வேண்டும்.
தலைமைத் தோழர்களுக்கு ஊழியர்களை வேலைகளில் ஈடுபடுத்துவதில் திறமை வேண்டும். புதிய கருத்துக்கள், புதிய கோட்பாடுகளை உருவாக்குபவராகத் தம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். திட்டங்கள், தீர்மானங்கள், உத்தரவுகள், வழிமுறைகள் ஆகியவற்றில் புதுமைகளை உருவாக்கி வெற்றிபெற வேண்டும். அதற்கு ஊழியர்களைச் செயலில் இறங்க ஊக்குவிக்க வேண்டும்.
ஊழியர்களைப் பொக்கிஷம் போல் பாதுகாப்பதில் நாம் திறமையுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு வழிகாட்டி சுயேட்சையாக வேலை செய்ய அவர்களை அனுமதிக்க வேண்டும். புதிய பொறுப்புகளை ஏற்குமாறு அவர்களுக்கு தைரியமூட்ட வேண்டும். அவ்வப்போது தலையிட்டு ஆலோசனைகளையும் கூறிவர வேண்டும்.
ஊழியரின் ஆற்றல், உள வலிமை, திறமை, அனுபவங்களை வைத்து அவர்களைக் கட்சியின் பதவிப் பொறுப்புகளில் உயர்த்த வேண்டும். ஒரு சிறந்த ஊழியரைச் சிறந்த தலைவராக மாற்றுவதற்கான வழிமுறை இதுதான்.
ஊழியரின் சாதனைகளை அபிவிருத்தி செய்வது, சாதிக்க முடியாதவர்களை சரி செய்வது முக்கியம். ஊழியரின் பணிகளை ஆய்வு செய்யாமல் இருந்துவிட்டு, அவர் பெரிய தவறு செய்த காலத்தில் மட்டும் கவனம் செலுத்துவது ஊழியரைப் பாதுகாக்கும் முறையல்ல.
தவறு செய்யும் ஊழியர்கள் தாங்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ளும் முறையில் தலைமையின் அணுகுமுறை இருக்க வேண்டும். தவறுகளை ஒப்புக்கொண்டு கட்சியின் வழிகாட்டலை ஏற்கும் ஊழியர்களுக்கு கடும் தண்டனையளிக்கக் கூடாது. தவறை ஒப்புக்கொள்ள மறுக்கும் ஊழியரிடம்தான் நாம் போராட்ட முறையைப் பின்பற்ற வேண்டும். அதற்கும் பொறுமை அவசியமாகும்.
ஊழியரின் கஷ்டங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அவரது உடல்நலம், குடும்ப நலம் பற்றிய பல சங்கடங்கள் உண்டு. சாத்தியமான அளவுக்கு அனுதாபத்துடன் அவை குறித்து தலைமை கவனம் செலுத்த வேண்டும். இதுவே ஊழியரைப் பேணிப் பாதுகாக்கும் முறையாகும்.
கட்சிக் கட்டுப்பாடு பற்றி தலைமைத் தோழர்கள் அறிய வேண்டியது
தனிப்பட்ட தோழர்கள் அமைப்புக்குக் கட்டுப்பட வேண்டும்.
சிறுபான்மை, பெரும்பான்மைக்குக் கட்டுப்பட வேண்டும்.
கட்சியின் கீழ் அமைப்புகள் மேல் அமைப்புகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
கட்சி முழுமையும் மத்தியக் கமிட்டிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மத்திய கமிட்டி கட்சி காங்கிரஸ் முடிவுப்படி நடக்க வேண்டும். அனுபவத்திலிருந்து நாம் அறிவது என்னவென்றால், கட்டுப்பாடு இன்னதென்று தெரியாத காரணத்தால் சிலர் கட்டுப்பாட்டை மீறுகிறார்கள். சிலர் வேண்டுமென்றே கட்டுப்பாட்டை மீறுகிறார்கள். கட்சி உறுப்பினர்கள் கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டுமானால் கட்சியின் பிரதான ஊழியர்களும், தலைவர்களும் கட்டுப்பாடின்றி நடக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும் – என்று மாசேதுங் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்குள் உறவுநிலை சரியாக அமையும் பொருட்டு, கட்சிக் கட்டுப்பாடு பற்றி கட்சி உறுப்பினர்களுக்கு போதிக்கப்பட வேண்டும். கட்சியின் தலைமையில் இயங்கும் வெகுஜன அமைப்புகளை ஒன்றுபடுத்துவதற்காக விரிவான ஜனநாயக விதிகளை அமுல்படுத்த வேண்டும் வெகுஜன அரங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
கட்சி இயக்கத்தின் சுறுசுறுப்பின் பிரதிபலிப்பு கட்சிக்குள் உள்ள ஜனநாயகத்தைப் பொறுத்தது. கட்சிக்குள் ஜனநாயக வாழ்வில் குறைவு ஏற்படுமானால் திறமையை வெளிப்படுத்தும் குறிக்கோளை அடைய முடியாது. ஜனநாயக வாழ்வு இருந்தால் மட்டுமே பலர் திறமையோடு ஆக்க வேலைகளைச் செய்ய முடியும்.
மாசேதுங் நம் நாட்டில் தந்தை வழியைச் சேர்ந்த உற்பத்தியே இதுவரை ஆதிக்கம் செலுத்தி வருவதால் மொத்தமாகப் பார்க்கும்போது நம்நாடு முழுவதும் ஜனநாயக வாழ்வு இல்லை. இந்த நிலைமை கட்சிக்குள்ளும் பிரதிபலிக்கிறது. இதனால் கட்சிக்குள் குறைவான ஜனநாயகமே உள்ளது. இது கட்சியின் செயலாற்றலை முழுமைபெற விடாமல் தடுக்கிறது. வெகுஜன இயக்கத்திலும் கூட்டு இயக்கங்களிலும் குறைவான ஜனநாயகம் நிலவக் காரணமாகிறது.
ஜனநாயக வாழ்வு என்றால் என்ன? ஜனநாயகத்திற்கும் மத்தியத்துவத்திற்கும் உள்ள தொடர்பு யாது? ஜனநாயக மத்தியத்துவத்தை நடைமுறையில் கடைப்பிடிப்பது எப்படி? இவைகளைக் கட்சி உறுப்பினர்கள் தெரிந்துகொள்ளும் பொருட்டு ஜனநாயக வாழ்வு பற்றி கட்சி உறுப்பினர்களுப் பயிற்சியளிக்க வேண்டும். இந்த பயிற்சியை நிறைவேற்றினால் கட்சிக்குள் விரிந்தவொரு ஜனநாயக வாழ்வு அமையும். அதீத ஜனநாயகமோ, மிதவாதமோ, ஒழுங்குச் சீர்குலைவோ ஏற்படாது. இதனால் திறமையும் போராடும் சக்தியும் அதிகரிக்கும் என்று கூறுகிறார்.
ஆதார நூல்கள்
- செய்ய வேண்டியது என்ன? – லெனின்
- ஊழியர் பயிற்சி – லெனின்
- கட்சி எவ்வாறு தோன்றியது? – விக்தர் பிலதோவ்
- சிறந்த கம்யூனிஸ்ட் ஆவதெப்படி? – லியூஷோசி
- நான்கு தத்துவக் கட்டுரைகள் – மாசேதுங்
- லெனினிசத்தின் அடிப்படை அம்சங்கள் – ஸ்டாலின்