மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பண்டைய பண்பாடும் ஆய்வுகளும்


இன்று, நாம் எத்தகைய பண்பாட்டை இளைய சமூகம் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். விடுதலைக்கு பிறகு ஏற்பட்ட மொழி வழி மாநிலங்களுக்கான போராட்டமும், மொழி குறித்த பாதுகாப்புணர்வும், தமிழ் பற்றுருதியும் எண்ணற்ற ஆய்வு நூல்கள் வெளிவர காரணமாக அமைந்தன தமிழ் பற்றால் தமிழ் மொழி, அதன் தொன்மை, அதன் இலக்கிய, இலக்கண வளம் குறித்த ஆய்வுகளின் வெளிப்பாடாக தமிழ் சமுதாயம் குறித்த உயரிய மதிப்பீடுகளும் உருவாக்கப்பட்டன.

இம்மதிப்பீட்டால் சங்க காலம், பொற்காலமென பறைசாற்றப் பட்டது. முடிவுடை வேந்தர்கள் சேர, சோழ, பாண்டியர் ஆட்சி மீண்டும் இம் மண்ணில் வரவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் வகையில் மன்னர்களின் வீரம், மதிநுட்பம், நீதி நெறி முறை, சமயத் தொண்டு, ஈகை என மன்னர்கள் புகழ்பாடும் வகையில் மன்னர்களை மையமாக கொண்டு பெரும்பாலும் தமிழக வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஆய்வுகளுக்கு சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகையும், தொன்மை தமிழ் இலக்கணமான தொல் காப்பியமும், சங்ககால காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணி மேகலையும் அதன் பின் வந்த சைவ, வைணவ பத்தி இலக்கியங்களும் அடிப்படையாக கொள்ளப்பட்டன.

மார்க்சிய நோக்கிலிருந்து மேற்கண்ட இலக்கியங்களை ஆய்வு செய்த அறிஞர்கள் சிலர் வர்க்க ரீதியான பிரிவினைகள் சங்க கால தமிழ் சமூகத்தில் உண்டு என நிரூபித்துள்ளனர். எனினும் தமிழ் பற்றுருதியில் மன்னர்களை மையமாகக் கொண்டு வரலாற்றை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் மேற்கண்ட கருத்தினடிப்படையில் சங்க காலத்தில் ஏற்றத்தாழ்வான சமூக படிநிலை இருந்துள்ளது என்று ஒப்புக் கொண்டாலும், தமிழ்ச் சமூகத்தில் அடிமை முறையென்பது இல்லையென உறுதியாக மறுதலிக்கின்றனர்.

இலக்கிய ஆதாரங்களிலும் மன்னர்களின் கல்வெட்டுகளிலும், ஓலைச் சுவடிகளிலும், செப்பேடுகளிலும் மக்களிடையே நிலவிவரும் வட்டார வழக்குகளிலிருந்தும் அடிமைகள் குறித்த செய்திகளை மறைக்கிற நிலையை அந்த ஆய்வாளர்கள் கையாண்டனர்.

இதுகாரும் இருந்து வந்த வரலாறுகள் அனைத்தும் வர்கப் போராட்டத்தின் வரலாறே என்ற மார்க்சிய கண்ணோட்டத்தோடு, அடித்தட்டு மக்களை மையமாக கொண்டுள்ள தனது ஆய்வின் மூலம் சங்ககாலம் தமிழகத்தின், பொற்காலம் என்ற மாயை இந்த ஆதாரங்களால் உடைத் தெரியப்பட்டுள்ளது.

உலகின் தொன்மையான நாகரீகம் கொண்ட கிரேக்கம், ரோம், எகிப்த்து, பாபிலோன் ஆகிய நாடுகளில் அடிமை முறை உருப்பெற்ற வரலாற்றையும், இவ்வடிவமை முறை இத்தேசங்களின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் எவ்வாறு வித்திட்டது என்பதையும், அடிமைகள் மீது ஏவப்பட்ட கொடூர தாக்குதல்களையும் படம்பிடித்து காட்டுவதோடு, தொன்மைமிக்க நாகரீக பண்பாட்டைக் கொண்ட நமது தமிழ் சமூகத்தில் இம் முறை ஏன் இல்லை என்ற வினாக்களோடு ஆய்வுகள் இன்று வெளிவந்துள்ளன. சான்றாக, ஆ. சிவசுப்பிரமணியனின் தமிழக அடிமை முறை என்ற ஆய்வு நூலை கூறலாம்.

அடிமைத்தனம் தமிழரிடையே இருந்ததில்லை, அப்பழங்காலத்தில் அவர்கள் அடைந்திருந்த உயர் நாகரீகப் படியை இது குறித்துக் காட்டுகிறது என்ற ஆய்வாளர் திரு.வி.கனக சபையின் கருத்தையும், நாளா வட்டத்தில் புலையராக ஒதுக்கப்பட்ட புறச் சாதிகள் பெருகின. அவர்கள் வட புலத்தைக் காட்டிலும் அதிகமாக தென்னாட்டில் அல்லலுற்றனர். இழிந்தவை என்று கருதப்பட்ட தொழில்களை புரிந்தும் பண்ணையாட்களாக பயிர்த் தொழில் புரிந்தும் ஊருக்கு அருகிலுள்ள சேரிகளில் அவர்கள் காலந் தள்ளினார் ஆயினும்  அவர்களை அடிமைகளாக கருத முடியாது. அவர்கள் உடமையாக விற்கவோ. வாங்கவோ உரிமை பெற்றார் எவரும் இலர் அவர்கள் மீது கட்டுப்பாடுகளை வகுக்கவும் நிறைவேற்றவும் அவர்களின் உறவுமுறைக் கூட்டங்களும் சாதி தலைவர்களுமே அதிகாரம் பெற்றிருந்தனர். என்று தமிழத்தில் சாதிமுறை குறித்த நூலில் இ.ராமகிருஷ்ணன் ஆகியோரின் கருத்தியலுக்கு மாறான ஏராளமான ஆதாரங்களை இன்று ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.

சங்க காலத்தில் போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோற்ற மன்னர்களின் மனைவியரையும், பிற பெண்களையும் சிறைப்பிடித்து வந்ததையும், இப்பெண்கள்  காவிரிப்பூப்பட்டினத்துள்ள அம்பலங்களில் விளக்கேற்றி நிற்பதனை  கொண்டி மகளிர்  என பட்டினப்பாலையில் கூறுவதையும் ஆய்வாளர்கள் காட்டுகின்றனர்.
காலில் விலங்கு பூட்டி அடிமைகளிடம் வேலை வாங்கியதையும் வேளாண்மையில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டதையும் பதினெண் கீழ்கணக்கு செய்யுள் மூலம் அறிய முடிகிறது.

ஆள் என்ற சொல் அடிமையை குறிக்கும் சொல் என்பதையும், அதன் தொடர்ச்சியாகவே பண்ணையாள் படியாள் என்ற சொற்கள் வழக்கத்தில் இருந்து வந்ததையும், அடிமைப் பத்திரத்தை குறிக்க ஆளோலை என்ற சொல்லை சோழர் காலத்தில் பயன்படுத்தி வந்ததையும் ஆ. சிவசுப்பிரமணியம் காட்டுகிறார்.
பல்லவர் காலத்துக்கு பின் வந்தவர்களாக அறியப்படும் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் அடிமைத் தொழில் பூண்டாயே என்ற அடிமை முறை குறித்த இலக்கிய பதிவுகளும். சோழர் காலத்தில் வீட்டடிமை முறை வழக்கத்தில் இருந்தது என்பதை சுந்தரர் திருமண நிகழ்ச்சியின் போது முதிய அந்தனர் கோலத்தில் வந்த சிவபெருமான் சுந்தரன் என்னடிமை என்று கூறிய நிகழ்ச்சியும் அடிமை முறைக்கு சான்று பகர்கின்றன.

மேலை நாடுகளில் இருந்ததைப் போல அடிமைகளின் உடலில் சுடுகோலால் அடையாளச் சின்னம் போடுகிற வழக்கம் தமிழகத்தில் இருந்ததையும், கோயில் அடிமைகளுக்கு சூலச் சின்னம் போடப்பட்டதையும் ஆதாரங்கள் உள்ளன.

தஞ்சை மராட்டியர் ஆட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள மோடி ஆவனங்களில் அரண்மனை அதிகாரிகள் வன்முறை வாயிலாக அடிமைகளை பெற்றமையும், பாலியல் உறவுக்காக சிறுமிகளும் கூட அடிமைகளாகக்கப்பட்டதும் ஆவணங்கள் காட்டுகின்றன.

தஞ்சை மராட்டிய மன்னர்கள் ஏராளமான மனைவிகளுடனும், வைப்பாட்டிகளுடனும் வாழ்ந்துள்ளனர். அரன்மணையில் அதிகாரப் பூர்வமான மனைவிகளான இராணிகள் இருந்தனர், வைப்பாட்டிகளுக்குகாக கல்யாண மஹால் என்ற பெயரில் ஒரு தனி அரண்மனை திருவையாறில் இருந்துள்ளது. இவர்கள் பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கி பருவம் எய்தும் முன்னரே பாலியலில் ஈடுபட்ட விபரங்களும் தெரிய வருகின்றன.

இந்திய சமூகத்தில் இந்து பெண்கள் மீதான பாலியல் வன்முறையை இலாமியர்கள் மட்டுமே நிகழ்த்தி வந்ததாக ஒரு மாயத் தோற்றத்தை படியவைக்கப்பட்டுள்ளது. இந்து சமயத்தின் பாதுகாவலனாக கருதப்படும் சிவாஜியின் வழிவந்த தஞ்சை மராட்டியர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்துள்ள சம்பவங்களிலிருந்து பாலியல் வன்முறைகள் மதம் கடந்தது தெறிகிறது.

சோழர் காலத்திற்கு பிறகு இருந்து வந்த தேவ அடியார் முறைகளும், இன்று வரை தொடரும் பொட்டுக்கட்டுதல் முறையும், ஆங்கில ஆட்சியின் போது நிலவிய பண்ணையடிமை முறையும், ஆண்டைகளால் பண்ணை அடிமைகளுக்கு அளிக்கப்படும் சவுக்கடி, சாணிப்பால், கிட்டி போடுதல், கொக்கு பிடித்தல் என்கிற கொடூரமான தண்டனைகளையும் இந்நூல் படம் பிடித்து காட்டுகிறது.

வயிற்றுப் பசியினால் வாடிப்போகும் சேரிப்பெண்களின் சேலைத்துணி எவ்வளவுதான் எடுத்துச் சொருகிக் கொண்டாலும் அடிக்கடி முழங்காலுக்கு கீழே வந்துவிடும். என்னடி திமிரா சேலயத் தழயத் தழய கட்டுறே என்று சொல்லி காருவாரியை* விட்டு அடிக்கச் சொல்வார். சொறிபிடித்தவன் கையைப் போன்று இருக்கும் காருவாரிக்குப் பண்ணையார் சொல்வது சக்கரை பொங்கல் சாப்பிடுவதுபோல் இருக்கும்.

அடியை வாங்கும்போது காலை அந்தப் பக்கம் இந்தப்பக்கம் நகர்த்தாமல் அப்படியே நிற்க வேண்டும். நகர்த்தினால் இன்னும் தண்டனை அதிகமாகும்.
இத்தகைய ஒடுக்குமுறைக்கெதிராக, கம்யூனிட் கட்சி நடத்திய போராட்டத்தினால் சேலையைச் கணுக்கால்வரை கட்டும் உரிமை கிடைத்தது. மணலி என்ற கிராமத்தில் இவவுரிமையைப் பெற்ற பெண்கள், அவ்வூரைச் சேர்ந்தவரும் தமிழ்நாடு கம்யூனிட் கட்சியின் தொடக்ககாலத் தலைவர்களுள் ஒருவருமான மணலி சி.கந்தசாமி இவ்வுரிமைக்காகப் போராடியதை நன்றியுடன் நிவுகூர்ந்து.

முழங்கால் வரை இருந்த சேலையை
கணுக்கால் வரை இழுத்து விட்டது யாரு?

மணலி கந்தசாமி என்று கூறு என்று பாடி மகிழ்ந்துள்ளனர்.  இந்த அடிமைத் தனத்தை எதிர்த்த போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் நடத்தியது இன்று மறைக்கப்படும் வரலாறாகும்.

ஆங்கில ஆட்சியில் கொத்தடிமை, பண்ணையாள், படியாள் என்ற பெயர்களில் கிராமப்புறங்களில் வாழ்ந்து வந்த அடிமைகளை குறித்த செய்திகளை ஆங்கில ஆட்சியில் இருந்த கலெக்டர்கள் சென்னையில் உள்ள ரெவின்யூ மேயர்க்கு அனுப்பிய அறிக்கைகளிலும், ஆங்கில அதிகாரிகளின் பணிக்கு உதவுவதற்கென்று தயாரிக்கப்பட்ட மாவட்ட (கெசட்) விவரச் சுவடிகளிலும் காணப்படும் செய்திகள் பண்டைய பழக்க தொடர்ச்சி என்பதை அறிய முடிகிறது.

இறுதியாக தமிழகத்தின் அடிமை முறையின் தன்மை குறித்தும் ஏன் இதர நாடுகளைப் போல் இங்கு அடிமை முறை மிகப் பெரும் எண்ணிக்கையில் இல்லை, என்பதற்கான காரணத்தையும், சிவசுப்பிரமணியனின் ஆய்வு நூலில் காணலாம். இங்கு நிலவிய இனக்குழு வாழ்க்கை, நிலவியல் தன்மை, உற்பத்திமுறை, இதற்கேற்ற வகையில் இங்கு நிலவிய அடிமை முறை இத்துடன் சோழர் காலத்தில் அடிப்படை உற்பத்திச் சாதனமான நிலத்தின் மீது பிராமணர்களும், வெள்ளாளர்களும் இவர்களுடன் சேர்த்து கொண்டு கோயிலும் செலுத்திய ஆதிக்கம், இதனால் ஒரு மேட்டிமை சக்தியாக கோயில் உருவெடுத்தது. வருண கட்டமைப்பு என்ற அடிப்படையில் சமூக அமைப்பை உருவாக்கியது.

பெரும்பாலான தொழில் பிரிவினை கோயிலை மையமாக கொண்ட சடங்கியல் அதிகாரபடிநிலையில் வைக்கப்பட்டது. தூய்மை, தீட்டு என்ற இரண்டு கருத்தியல்களை உருவாக்கி தீண்டத்தகாதவர்கள் என உழைக்கும் மக்களை கோயிலுக்கு வெளியே நிற்க வைத்தது. என தமிழ் சமூகத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் தோன்றிய அடிமைகளை பிராமணியம் தீண்டத்தகாத வர்களாக மெல்ல மெல்ல மாற்றியது என்பதை வரலாற்று ரீதியாக புரிவது அவசியம்.

மேலும் ஜரோப்பிய அடிமைகள் கொடூரமாக நடத்தப்பட்டாலும் தீண்டத்தகாதவர்களாக அவர்கள் நடத்தப்படவில்லை. ஆனால் தமிழக அடிமைகளில் பலர் தீண்டாமை கொடுமைக்கு ஆளாகும் தீண்டா அடிமையாக உள்ளனர்.

மனுவின் விதிமுறைகளை விட இருக்கமான முறையாக தமிழக அடிமை முறை உள்ளது. ஒரு பிராமணன் மற்றொரு பிராமணனுக்கு அடிமையாகலாம் என்பது மனுவின் கூற்று. ஆனால் சோழர் காலத்திய பெரிய புராணத்தில் ஒரு அந்தணன் மற்றொரு அந்தணக்கு அடிமையாக முடியாது என்ற கருத்து முன்வைக்கப்படுவதும். குயவர், உவச்சர், நெசவாளர், நாவிதர் ஆகியோர் அடிமைகளை வைத்துக் கொள்ள கூடாது என்ற இரண்டாம் இராஜராஜனின் பதினான்காம் ஆட்சிக்கால கல்வெட்டு குறிப்பிடுவது. சூத்திரர்கள் பிற சூத்திரர்களை அடிமைகளாக வைத்துக் கொள்ளலாம் என்ற மனுவின் முரணான கருத்துத்தும் இதில் குறிப்பிடத்தக்கது.

சூத்திரர்களின் சமூக மேன்பாட்டை வளர்த்துக் கொள்வதற்கான தடைகளை இந்திய நிலவுடமை உலகில் இதர நிலவுடமை வர்க்கத்தைவிட மிகவும் தந்திரமாக தனக்குறிய வேளாண் அடிமையை தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளது.

நமது பண்டைய பண்பாட்டில் கொள்ளத்தக்கன எது, விலக்கத்தக்கன எது என்பதை வரலாற்று ஆய்வுகள் உதவ வேண்டும். தமிழகத்தில் அடிமை முறை போன்ற ஆய்வு நூல்கள் இன்றையத் தேவையாகும்.

வள்ளுவரும், சங்ககாலப் புலவர்களில் ஔவையார், பிசிராந்தையார், நரி வெரூ உத்தலையார், கடவுள் மாய்ந்த இளம் பெரும் வழுதி, குடபுலவியனார் போன்ற புலவர்கள், ஒருவகையான பண்பாட்டை தூக்கி பிடிக்க முயலும் பொழுது அதே சங்க காலத்தில், வர்ணாஸ்ரம தர்மத்தை தூக்கி பிடிக்கும் புலவர்களும், மன்னர் புகழ்பாடி வயிறு வளர்ப்பவர்களும் இருந்தனர்.

வரலாற்று ரீதியாக பார்த்தால் பண்பாட்டின் பொற்காலம் என்பன இனி நாம்தான் உருவாக்க வேண்டும், அதற்காக இளைய சமூகம் வரலாற்றை சரியாக புரிந்துக் கொள்ளுதல் அவசியம்.

உதவும் நூல்கள்:

தமிழகத்தில் அடிமை முறை, ஆ. சிவசுப்பிரமணியன்
பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், க. கைலாசபதி.
தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும், கே.கே. பிள்ளை.



%d bloggers like this: