மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பாசிசமும் திரிக்கப்படும் வரலாறும்!


வரலாற்றை மறைப்பது, திரிப்பது என்பது இன்று ஒரு பெரிய தொழிலாக கருதப்படுகிறது. முன் எப்பொழுதையும் விட செய்திகளை கொண்டு செல்லும் வேகம் ஒளி வேகத்தை நெருங்கி விட்டதால் இந்த புதிய தொழில் பிறந்து விட்டது. மக்களின் அபிப்பிராயங்களை வழிநடத்தும் சுக்கானாக இது சில காலம் கெட்டிகாரன் புளுகுபோல் பயன்படுவதால், பெருமளவு முதலீடுகள் இதில் போடப்படுகின்றன. இதற்கென பல்கலைக் கழகங்கள் நிபுனர்களை தயாரிக்கின்றன. அவர்களது தொழில் காசு கொடுப்போரின் அரசியலுக்கேற்ப வரலாற்றை மடித்து பொய்யர்களின் மெய்களாக்குவதுதான். உண்மைகளை அறிய ஒருவன் விரும்பினால் அவன் பெரும்பாடு பட வேண்டும்; வைக்கோல் போரில் ஊசி தேடும் கதைதான். சாதுர்யமிக்க நிபுனர்களின் திறமை முதலில் வரலாற்றை எதிர்பாரா நிகழ்வுகளின் தொகுப்பாக மக்களை சென்றடைய வைப்பதில் காட்டப்படுகிறது. மானுட மனம் இயற்கையானாலும், சமூக நிகழ்வானாலும், அதனுள் மறைந்து கிடக்கும் ஒழுங்கமைவை, காரண காரியங்களை நாடும் அந்த நாட்டத்தை தள்ளி வைத்து விட்டு, பங்கு சந்தையில் அல்லாடும் சில்லரை முதலீட்டாளர்கள் போல் எதையும் அணுக வைத்து விடுவது. இதுதான் அந்த நிபுனர்களின் சாதுர்யமாகும்.

ஜின்னா என்பவர் இல்லை என்றால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது. சாராயக் கடையில் நடந்த மோதலில் ஹிட்லர் கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலே போட்டிருந்தால் இரண்டாம் உலகப் போரே நடந்திருக்காது. ஆஸ்திரியா, ஹங்கேரி நாட்டின் இளவரசரை சிராஜிவோவாவில் நகர் வலம் வரும் பொழுது துருக்கி நாட்டு பயங்கரவாதி சுட்டுத் தள்ள முயன்று குறிதவறியது. இளவரசரை காப்பாற்ற மாற்று வழியில் வாகனத்தை ஓட்டிச் சென்ற பொழுது ஏற்கனவே முயன்று தோற்ற பயங்கரவாதி தோல்வியை தழுவியதால் விரக்தியில் அவ்வழியே வர இம்முறை குறி தவறாமல் சுட்டுத் தள்ள வாய்ப்பு கிடைக்காமலிருந்தால், அதாவது வாகன ஓட்டி, வழி தவறாமல் இருந்திருந்தால் முதல் உலகப் போரே மூண்டிருக்காது.

அமெரிக்க ஜனாதிபதி கென்னடியை சுட்டு வீழ்த்தியதால் முடிவிற்கு வர வேண்டிய வியட்நாம் போர் விரிந்தது. ஜெர்மன் படை வீரனை போலந்து எல்லையில் சுடாமல் இருந்திருந்தால், இரண்டாம் உலகப் போர் மூண்டிருக்காது. இப்படியாக வரலாற்றை, தனித்தனி நிகழ்வுகளின் தொகுப்பாக சித்தரிக்கப்படுமானால், எதிர்பாரா நிகழ்வுகளாக பதிவு செய்யப்படுமானால், மாயங்களை உருவாக்குவது எளிது என முதலாளித்துவ முகாம் கருதுகிறது. இன்று வரலாற்றை இவ்வாறு திருகி, பாசிசத்தை விட பயங்கரமானது கம்யூனிசம் என்ற மாயத்தை சமதர்ம எதிர்ப்பு நஞ்சை, இளம் பிராயத்தினரிடையே பரப்ப ஒரு பெரும் முயற்சி நடக்கிறது.

இன்று ஜார்ஜ் புஷ் பாசிசத்தை வென்ற அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி, பழைய பனிப்போர் காலத்து கதையை கூறி வருகிறார். பனிப்போர் காலத்தில்தான் கம்யூனிச எதிர்ப்பு என்பது, அமெரிக்க நாகரீகத்தின் அடையாளமாக்கப்பட்ட காலம், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு சாம்ராஜ்யவாதிகள் ஒன்றுபட்டு இந்த கம்யூனிச எதிர்ப்பை உலகளவில் உருவாக்கினர். இக்காலத்தில் தான் சமதர்ம எதிர்ப்பு பிள்ளை கதைகளின் மூலம் கல்லின் மேல் எழுதிய எழுத்தாக ஆக்கப்பட்டது. அமைதிக்காக, சமதர்ம உறவிற்காக பாடுபடுகிற யாரானாலும், மாஸ்கோ ஏஜென்டுகள் என்று முத்திரையிடப்பட்ட காலம். இக்காலத்தில் உருவான வரலாற்று திருகல்களை இடியட் பாக்ஸ் மூலம் அறிந்த ஜார்ஜ் புஷ் பாசிசத்தை உறுதியாக எதிர்த்த கம்யூனிஸ்ட்டுகளையும், சோவியத் யூனியனையும் தாக்கி பேசி 60 ஆண்டு நிறைவை கொண்டாடுகிறார்.

இன்று உலகமய பொருளாதாரத்தில் சுரண்டல் முறை ஆதிக்கத்தால், குறிப்பாக அமெரிக்காவின் அடாவடித்தனங்களால் முதலாளித்துவ உற்பத்தி முறை மீது மக்களின் அதிருப்தி பெருகுகிறது. இந்த நேரத்தில், பாசிசத்தை எதிர்த்த போரில், கம்யூனிஸ்ட்டு களையும், சோவியத்தையும் பாராட்டுவது சாம்ராஜ்யவாதங் களுக்கு குழிதோண்டுவதாகும். புஷ் பாராட்டினால் அவருக்கு சாம்ராஜ்ய வெறி போய் விட்டது என்று ஆகும். எனவே பழைய கதையை அவிழ்த்து விடுகிறர். புஷ் வகையறாக்களின் பொய்களை முறியடிக்கும் முறையில் உண்மையான வரலாற்றை மக்கள் உணரும் படி செய்ய ஒரே வழி பொய்களை எதிர்த்து எல்லா வகையிலும் போரிடுவதுதான்.

முதலாவதாக, இரண்டாம் உலகப்போர் எதிர்பாரா நிகழ்வுகளால் மூளவில்லை. மாறாக பச்சையான சாம்ராஜ்ய விரிவாக்க வெறியால், ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் கூட்டணி அமைத்து முதல் உலப் போரின் வெற்றியாளர்களான, பிரான்சு, பிரிட்டன் வகையறாக்கள் திணித்த காலனி ஆதிக்க பங்கீடு முறையை மாற்றி அமைக்கவே இரண்டாம் உலகப் போரை தொடுத்தன. மார்க்சிஸ்ட்டுகளின் வார்த்தைகளில் சொல்வதென்றால், காலனி நாடுகளை மறுபங்கீடு செய்வது என்ற உண்மையை சொந்த நாட்டு மக்களிடமிருந்து மறைக்க, தேசமான பிரச்சினையாக சித்தரித்துக் கூறப்படும் காரணங்களையே புஷ் வகையாறாக்கள் வரலாறாகக் குறிப்பிடுகிறார்கள்.

இரண்டாவதாக சோவியத் யூனியன், பிரான்சு, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்சு,பிரிட்டனின் காலனி நாடுகள் முரண்பட்ட தேச நலன்களை கொண்டதாக இருந்தாலும், பொதுவான பாசிச ஆபத்தை சந்திக்க ராணுவ நடவடிக்கைகளையும், ராணுவ யுத்திகளையும் ஒன்றினைத்து நடத்திய போர் ராணுவ வெற்றியை ஈட்டியதே தவிர பாசிசத்தை புதைத்த நடவடிக்கையாகாது.

மூன்றாவதாக, சமதர்ம சித்தாந்த பரவலும், காலனி ஆதிக்க எதிர்ப்பும், உலக அரசியலின் தொடர்ச்சியாக ராணுவ நடவடிக்கை அமையக் கூடாது என்ற உலக அமைதிக்கான தாகமும் இரண்டாம் உலகப் போரின் தலைவிதியை நிர்ணயித்தது.இதனால் தான் சாம்ராஜ்யவாதிகளின் யுத்த தளமாக உலகம் மாறுவது தடுக்கப்பட்டு, நாடுகளுக்கிடையே உருவாகும், தகராறுகளை தீர்க்கும் நோக்கம் கொண்ட ஐக்கிய நாடுகளின் சபை தோன்ற வழிவகுத்தது.

நான்காவதாக இரண்டாம் உலகப் போரில் சோவியத் மக்களும், சோவியத் செஞ்சேனையும் போர் முனைகளாக இருந்த இதர நாடுகளை விட மிகஅதிகமாக குறுதியை சிந்தினர், போரில் மிக அதிகமான மக்களை இழந்தனர். குண்டு வீச்சுகளினாலும், முற்றுகைகளினாலும், மிக அதிகமான பொருட் சேதங்கள், உற்பத்தி அமைப்புகள் இழப்புகளும் ஏற்பட்டன. ஆனாலும், பிற நாடுகளில் காண முடியாத உலைவிலா உறுதியை காட்டினர், லட்சிய பிடிப்போடு போர் முனையில் நின்றனர்; அதனால் வெற்றிக் கொடியை நாட்டும் வாய்ப்பு கிட்டியது.

பாசிச வெறிக்கு பலியாகாமல் உலகம் தப்பியது. சோவியத் நாட்டு மக்களும், செஞ்சேனையும் காட்டிய உறுதியும் உலகமே விஷவாயு கூடமாக மாறாமல் தப்பிட வழிவகுத்தது. அந்த உன்னத உறுதியை நினைவில் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். குறைந்தபட்சம் அவதூறுகளையாவது பொழியாமல் இருக்க மேற்கத்திய ஜனநாயகவாதிகளுக்கு கடமை உண்டு.

அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு அன்று நிகழ்ந்தவைகளை இன்று பரிசீலிக்கிற பொழுது, பனிப்போர் காலத்து பொய்ப் பிரச்சாரங்களை தாண்டி சில உண்மைகளை நாம் உணர முடிகிறது.

பாசிச ஆபத்தை வெறும் ராணுவ யுத்திகளால் வென்றோம் என்று யார் கூறினாலும் அது வெத்து வேட்டு, மனித குலத்தின் பெரும் பகுதியை புல் பூண்டாக கருதி அழிக்க நினைத்த பாசிசத்தை அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும், எதிர்த்திட உலக நாடுகளின் கம்யூனிஸ்ட்டுகள் காட்டிய உறுதியும், சாதுர்யமும், ஐ.மு. யுத்திகளை பின்பற்றுவதில் காட்டி விவேகமும், ஒரு காவியம் எனலாம். ராணுவ ரீதியான வெற்றிக்கு இவைகள் அடிப்படை போட்டன.

கம்யூனிஸ்ட்டுகளின் தத்துவார்த்த விளக்கத்தினால் ஜெர்மன் மக்கள் தன்னை விட்டு வெகு தூரம் போய் விட்டனர் என்று தெரிந்ததாலேயே, மேற்கத்திய ஜனநாயக நாடுகளிடம் சரனடையாமல் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டான். இந்த உண்மைகளையெல்லாம் மறைக்கலாம், பூசி மெழுகலாம் ஆனால் மறுக்க முடியாது. அன்று ஹிட்லரும் மேற்கத்திய ஜனநாயக வாதிகளும் சமரசம் செய்து மீண்டும் உலகயுத்தத்தை சோவியத்திற்கு எதிராக திரும்பி விடும் அபாயம் இருப்பதை உணர்ந்தே, ஹிட்லரை கைது செய்வதில் செஞ்சேனை உறுதி காட்டியது. ஆனால் நடந்தது வேறு. ஜெர்மன் அதிபரின் மாளிகை தோட்டத்தில் இருந்த அறையில் ஹிட்லரின் சடலத்தை செஞ்சேனை வீரன் ஐவான் சுரத்கோவ் கண்டு பிடிக்கிறார். ஏற்கனவே அவரது சடலம் கிடைத்து விட்டதாக தகவல் வந்ததால் அங்கேயே சடலம் புதைக்கப்படுகிறது. பின்னர் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு, இதுதான் ஹிட்லரின் சடலம் என்று உறுதி செய்ய சோவியத் அரசு ஹிட்லரின் சடலத்தை 8 முறை எடுத்தும், புதைத்தும் இறுதியில் அதுதான் ஹிட்லரின் சடலம் என்று உறுதி செய்யப்பட்டபின் ஏப்ரல் 5ஆம் தேதி சடலம் கரியுடன் சேர்த்து எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் 1938இல் ஹிட்லரே தனது இறுதிப் பயனம், புதைக்கப்படுகிற விதம் பற்றி எழுதி வைத்துள்ளான். தனது சடலத்தை லின்ட்ஸ் நகரில், தேசிய சோசலிஸ்ட் காங்கிரசின் கட்சியின் சார்பில் ஒரு மாபெரும் சவப்பெட்டியில் அடக்கம் செய்து அதன் மீது தங்கத்திலான சிலுவையில் யூரல் மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட வைரங்கள் பதிக்கப்பட்டு நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த கடைசி விருப்ப ஆவணத்தில் ஆசைப்பட்டான் இதனை என்னவென்று சொல்வது? முதலாளித்துவ பேராசையின் கலை வடிவம் என்பதா, கோர சொரூபம் என்பதா? செத்த பின்பும் தங்கமும், வைரமும் தன் சவப்பெட்டியை அலங்கரிக்க வேண்டும் என்ற பேராசை எதனை காட்டுகிறது! மனிதனை மனிதன் சுரண்டுவது மானுட இயல்பு என்று கருதுகிற அடித்து சாப்பிடும் பண்பாட்டின் கலை அம்சம் இப்படித்தான் வெளிப்படுமா?

இரண்டாம் உலகப் போருக்கு முன் முதல் உலகப் போர் முடிந்த பிறகு இடைப்பட்ட காலத்தில் ஜெர்மனியின் பெரு முதலாளி வர்க்க அரசியல் ஆதிக்கத்தினால் வளர்க்கப்பட்ட கலை, இலக்கியங் களையும், அதனை எதிர்த்த கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் அல்லாத ஜனநாயகவாதிகளும் உருவாக்கிய கலை, ஓவியம், இலக்கியங் களையும் ஒருவர் ஒப்பிட முடிந்தால் இத்துறையிலும் இரண்டு முகாம்கள் மோதுவதையும் காணமுடியும். மனித மனத்தை மேம்படுத்தும் கலை எது என்பதையும் உணர முடியும். அங்கே முதலாளித்துவ முகாம் பாசிச வெறிபிடித்து அலைந்ததை பார்க்க முடியும்.

இந்த பாசிச வெறிக்கு ஜெர்மன் மொழியில் லெபன் சராம் என்று பெயர். வாழ இடம் விடு என்பது இதன் பொருள். மானுட சமூகம் அழியாமல் இருக்கவும், அறிவிலும், ஆற்றலிலும் சிறக்கவும் வேண்டுமானால், தூய்மையான ஆரிய இனம் தவிர மற்ற தரக்குறைவான இனங்களை களையெடுக்கப்பட்டு இப்பூமி முழுவதும் கலப்படமில்லாத தூய்மையான ஆரிய இனம் பரவ வேண்டும் என்பதே லெபன் சாரம் என்ற சொல்லின் சாரம்சமாகும்.

அன்று பிற சாம்ராஜ்யவாதிகளுக்கும் (அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு மற்றும் மேற்கத்திய ஜனநயக நாடுகள்) பாசிசவாதிகளுக்கும் வேறுபாடுகளை தேடினால் அதிகமிருக்காது. அவர்கள் பிற நாடுகளிலே குடியேற்றம் செய்து அங்குள்ள வளங்களை கைப்பற்றுவது, மக்களை அடிமைப்படுத்துவது என்பதாகும். பாசிசவாதிகளோ இனத் துய்மையை காக்க பிற நாடுகளில் மக்களை பூண்டோடு அழித்து விட்டு பூமியை ஆரிய இனம் மட்டுமே வளரும் சொர்க்கமாக்குவது என்ற முடிவில் இருந்தனர். இன்றும் கொஞ்சம் பேர் அப்படி இருக்கின்றனர்.

இந்த லெவன் சாரம் கோட்பாட்டை ஹிட்லர் உருவாக்கவில்லை. அன்றைய முதலாளித்துவ விஞ்ஞான உலகில் இருந்த சில பிரபல விஞ்ஞானிகள் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை வைத்து உருவாக்கிய அரசியல் தத்துவமாகும்.

இந்த விஞ்ஞானிகள் டார்வினின் பரிணாம வளர்ச்சி ஏனிப்படிகளில் மனித சமூகம் மட்டும் ஒரே இனமாக இல்லாமல் பல இனங்களாக உயிரியல் அமைப்பிலே இருப்பதாக சில ஆய்வுகளின் முடிவுகளாகக் காட்டினர். மனித குரங்கிற்கும், மனிதனுக்கும் இடையில் இந்த இனங்கள் உள்ளன. அதில் ஆரிய இனம் மட்டுமே முழுமையான மனித இனம், மற்றவைகள், பாதி மனிதன் பாதி குரங்கு ரகங்களாகும். இந்த இனங்களோடு ஆரிய இனம் கலந்தால் அறிவாற்றல் அற்ற கலப்பினம் பெருகி மனித குலமே அழிந்து விடும். நல்ல ரக நெல் வளர கலப்பின ரகங்களை அழிப்பது போல்மற்ற இனங்களை அழித்து விட வேண்டும் என்றனர்.

இந்த இனத் துய்மை ஆய்வுகளை ஹிட்லர் தனது அரசியலுக்கு அடிப்படையாக்கிக் கொண்டான். ஜெர்மன் மக்களிடையே தங்களது இனமே உசந்தது. மற்றது இழிவானது என்ற ஆணவம் பரவ வழி செய்து கொண்டான்.

அன்று பாசிசத்தை உறுதியாக எதிர்ப்பதில் மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகளும், சில விஞ்ஞானிகளும், சில ஜனநாயகவாதிகளும் உறுதி காட்டினர். பிரபலமான அரசியல் தலைவர்கள் எல்லோருமே ஊசலாடினர். கம்யூனிசம் பரவாமல் தடுக்கும் மாமருந்தாக பாசிசத்தை பெரு முதலாளிகள் கூட்டம் பார்த்தது.

இவைகளெல்லாவற்றையும் யாரும் மனதிலே கொள்ளக் கூடாது என்ற நோக்கில்தான் புஷ் வகையறாக்கள், சோவியத்தை ஆக்கிரமிப்பு தன்மை கொண்ட சாத்தானின் நாடு என்று சித்தரிப்பை புதுப்பிக்கிறார்கள். அவர்கள் பரப்புவதென்ன?

ஸ்டாலினும், ஹிட்லரும் 1939இல் செய்து கொண்ட ஒப்பந்தமே, ஹிட்லருக்கு போர் தொடுக்க தெம்பு ஏற்பட்டது.

உலக நாடுகளின் கம்யூனிஸ்ட்டுகள் எல்ம் மாஸ்கோ ஏஜெண்டுகளாக செயல்பட்டனர்.

1940இல் சோவியத் பால்டிக் கடலோர நாடுகளை ஆக்கிரமித்தது.

போருக்குப் பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சோவியத் கைப்பற்றியது.

சோவியத்தும் ஒரு சாத்தானின் நாடு.

ஜார்ஜ் புஷ்ஷூம் அவரது வகையறாக்களும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிபுணர்களும் வரலாற்றின் ஒரு பகுதியை மறைத்து, ஒரு பகுதியை திருத்தி மெய்போன்ற பொய்களாக்கி மானுட சமூகத்தின் இயல்பான சமதர்மம், அனைவரும் சமம் என்ற உணர்வினை பிடுங்கி எறியலாம் என்று கருதுகின்றனர். ஆனால் வரலாற்றை அவ்வளவு எளிதாக புதைத்து விட முடியாது. மக்களின் சமதர்ம உணர்வும் அகன்றிடாது.

முதலில் குறிப்பிட வேண்டியது உயிரியல் அடிப்படையில் உயர்ந்த இனம், தாழ்ந்த இனம் என்று மானுடத்தை பிரிக்க முடியாது என்பதை இன்று விஞ்ஞானம் நீருபித்து விட்டது. இன்று மேற்கத்திய அறிவுலகம் இதை ஏற்றுக் கொண்டாலும், பண்பாட்டு ரீதியில் இன ஆணவம் ஊறிபோய் உள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

1938 செப்டம்பர் மாதத்தில் பிரிட்டன் நாட்டு பிரதமர் நெவில் சேம்பர்லின் ஜெர்மன் நாட்டு அதிபர் ஹிட்லரை அவரது வீடான பெர்க்டஸ் தோட்டத்தில் சந்தித்து அளவளாவினார். உரையாடிக் கொண்டிருந்த பொழுதே ஹிட்லர், அன்றையத் தேதிகளில் சாம்ராஜ்யவாதிகளின் தலைமை பீடமான பிரிட்டிஷ் பிரதமரை மிரட்டுகிற தொணியில் ஒன்றை சொன்னார். செக்கோஸ்லோவியா என்ற முதல் உலக யுத்த முடிவில் பிறந்த குட்டி நாட்டின் பகுதியான சடட்டன் லாண்ட் என்ற பகுதியை ஜெர்மனியோடு இணைக்க மறுத்தால், செகோஸ்லோவியா மீது படையெடுத்து கைப்பற்று வோம் என்றார். இதன் பொருள் முதல் உலக யுத்த முடிவில் ஏற்பட்ட வெர்செல்ஸ் ஒப்பந்தத்தை மீறுவதாகும்.

பின்னர் அதே மாத இறுதியில் (1938) ஹிட்லர், பிரிட்டன் நாட்டு பிரதமர் சேம்பர்லின் பிரெஞ்சு அதிபர் டால்டியர், இத்தாலி நாட்டு அதிபர் முசோலினி, முனிச் என்ற இடத்தில் கூட சுடட்டன் லேண்ட்டை ஜெர்மனியோடு இணைக்க சம்மதித்து ஹிட்லரின் விரிவாக்க வெறியோடு சமரசம் செய்கின்றனர். ஒப்பந்தம் செய்கிறார்கள். ஒரு காலத்தில் ஆஸ்திரியா – ஹங்கேரி என்ற நாட்டின் பகுதியாக இருந்த செக்கோஸ்லோவகியா, முதல் உலக யுத்த முடிவில் ஏகாதிபத்தியவாதிகள், இதனை குட்டி நாடாக பிரித்தனர். இதில் வேதனை என்ன வென்றால், தனிநாடாக அறிவிக்கப்பட்ட போதும் சரி, பின்னர் ஒரு பகுதியை ஹிட்லர் ஆக்கிரமிக்க அனுமதித்தபோதும் சரி, இந்த ஏகாதிபத்தியவாதிகள், ஜனநாயகம் பற்றி அதிகம் பேசுபவர்கள், எந்த காலத்திலும் செக்கோஸ்லோவகியா நாட்டு மக்களையோ, அரசையோ மதித்ததும் இல்லை; ஆலோசனை கேட்டதும் இல்லை.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகே சோவியத் உதவியினால், அது சுயநிர்ணய உரிமை பெற்ற சுதந்திர நாடானது.

முனிக் ஒப்பந்தம் ஆபத்தானது. ஹிட்லர் எந்த நாட்டை தாக்கினாலும், நாம் ஒன்றினைந்து தடுக்க ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று சோவியத் அரசு மேற்கத்திய நாடுகளை எவ்வளவோ வேண்டியும் அவர்கள் சம்மதிக்கவில்லை. முனிச் ஒப்பந்தத்தின் மூலம், ஹிட்லர் சோவியத்தை முதலில் தாக்குவான், பின்னர் தான் நம்மிடம் வருவான் என எதிர்பார்த்தனர்.

ஹிட்லரின் ராணுவ யுத்திகளை மேற்கத்திய அரசுகள் சரியாக கணிக்க தவறி விட்டன. இந்நிலையில் ஹிட்லர், சோவியத்தோடு, ஆனாக்கிரமிப்பு ஒப்பந்தம் செய்ய முன்வந்தான். அன்றைய சோவியத் அரசு இதனை நம்பாவிட்டாலும், ஒப்பந்தம் செய்வதால் பாதகம் ஏற்படாது, மாறாக தற்காலிகமாகவாது யுத்த பீதியின்றி மக்கள் வாழ்வர் என்று கருதி ஒப்பந்தம் செய்தனர். உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிற சோவியத் அழிவது நல்லது என்று கருதிய மேற்கத்திய ஜனநாயகவாதிகள், ஜெர்மனியின் யுத்த வெறிக்கு கொம்பு சீவி விட்டதை மறைக்கவே 1939 ஹிட்லர் – ஸ்டாலின் ஒப்பந்தத்தை காட்டுகின்றனர். ஹிட்லரின் அடாவடித்தனங்களை என்றுமே மேற்கத்திய ஜனநாயக நாடுகள் கண்டித்து வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் மூலம் கேட்க கடமைப்பட்டவர்கள். ஆனால், அன்று ஹிட்லரின் படைகள் பாசிஸ்ட் ஆட்சியை கொணர ஸ்பெயினை தாக்கியபொழுது, இந்த மேற்கத்திய ஜனநாயக நாடுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்பெயின் அரசிற்கு எவ்வளவோ வேண்டியும் உதவ மறுத்து விட்டன. கம்யூனிஸ்ட்டுகளே உறுதியாக எதிர்த்தனர். ஹிட்லர் ஆஸ்திரியாவை கைப்பற்றிய பொழுது இவர்கள் வேடிக்கை பார்த்தனர்.

வொர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தை அமுலாக்க வற்புறுத்தாமல் ஜெர்மனிக்கு விட்டுக் கொடுத்தனர். முதல் உலக யுத்த முடிவில் உருவான இந்த ஒப்பந்தப்படி, ஜெர்மன் ராணுவம் பிற நாடுகளி லிருந்து வெளியேற வேண்டும் என்பதையும் வற்புறுத்தவில்லை. முதல் உலக யுத்த முடிவில் ரஷ்யாவின் பகுதிகளில் போல்ஷிவிக் கட்சியினர் ஆட்சியைப் பிடிக்காமல் இருக்க, தங்களது படைகளை அனுப்பியதோடு, பால்டிக் கடல் பகுதியில் புகுந்த ஜெர்மன் ராணுவத்தை பின்வாங்க வேண்டாம் என்று கூறி விட்டனர். புதிதாக உருவாகிய போல்ஷிவிக் இயக்க தலைவர்களை ஜெர்மன் ராணுவம் வெட்டி சாய்த்தது. 1721லிருந்து, 1917 வரை ரஷ்யாவின் பகுதியாக இருந்த ஈஸ்ட்டோனியா, லாட்வியா, லிதுவேனியா நாடுகள் போல்ஷிவிக் ஆட்சியின் போதுதான், சுயநிர்ணய உரிமை பெற்று தனி நாடுகளாகின.

ரஷ்ய புரட்சிக்குப் பிறகு இந்த ஜனநாயகவாதிகளும், பாசிஸ்ட்டுகளும், படையெடுத்ததை மறைக்கவே புஷ் வகையறாக்கள் விரும்புகின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகே, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட்டுகள் அரசமைக்க வாய்ப்பு ஏற்பட்டது. அந்த நாடுகளில் சோவியத்தின் கவர்னர்கள் அனுப்பப்டவில்லை. அங்குள்ள மக்களே அரசை தேர்ந்தெடுத்தனர். அந்தந்த நாடுகளின் மொழிகள், ஆட்சி மொழி, பயிற்று மொழிகளானது. அனைவருக்கும் வேலை, திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மேம்பட்டது. அதுவரை இந்த நாடுகள் சுரண்டலாலும், மிகவும் பின் தங்கிய நாடுகளாக  இருந்தன. சோவியத் உதவியால் மேற்கத்திய ஜனநாயக நாடுகளோடு போட்டியிடுகிற அளவிற்கு பொருளாதாரம் முன்னேறியது.

ஆனால் இக்காலங்களில் மேற்கத்திய ஜனநாயக நாடுகள் புகுந்த காலனி நாடுகளானலும், ராணுவ கூட்டில் இருந்த நாடுகளானாலும், அவைகளின் கதி என்ன! கடன் சுமைகளால் தவித்தன; முட்டாள்களாக்கும் கல்வியும், பணப்பித்து பிடித்தலையும் பண்பாட்டை வளர்த்தன. பங்கு சந்தை ஊகவாணிபத்தை நம்பி வாழும் சோம்பேறி வாழ்வே உயர்வானது என்ற பண்பாட்டை பரப்பி வருகின்றன. அவர்கள் பொழுது போக்கிற்கு காம விகார இலக்கியங்களை உற்பத்தி செய்ய வைத்தன. ஒரு அமெரிக்க எழுத்தாளன் குறிப்பிட்டதைப் போல வார விடுமுறை நாளில் அடுத்தவன் சொத்தை அழிக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடும் பண்பாட்டை புகுத்தின.

இன்று ஈராக்கில் புகுந்து அந்த நாட்டை காலனியாக்கி விட்ட இந்த ஏகாதிபத்தியவாதிகள், யூகோஸ்லோவியா என்ற நாட்டை துண்டு துண்டாக்கி, துவம்சம் செய்தவர்கள். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிக் கொண்டவர்கள் சோவியத்தை அவதூறு செய்ய விடுவது, அதற்காக வரலாற்றை மறைப்பது என்பதை அனுமதித்தால் உலக அமைதிக்கும், உலக நாடுகளின் ஒத்துழைப்புக்கும் சாதாரண மக்களின் முன்னேற்றத்திற்கும் அக்கறையுள்ள எந்த மனிதனும் சம்மதிக்க மாட்டான்!

ஸ்டாலின் செய்த தவறுகளை சரியாக மதிப்பீடு செய்வது அவசியம், கிழக்கு ஜெர்மனியிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஆட்சி பொறுப்பேற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் குறைபாடுகளை மதிப்பீடு செய்வது அவசியம். ஆனால் பாசிசத்தை விட கம்யூனிசம் மோசமானது என்று சித்தரிப்பதை சமூகம் ஏற்குமானால் சாம்ராஜ்யவாதிகளின் பேராசைகளுக்கு மக்கள் பலியாவதை தடுத்திட இயலாது.%d bloggers like this: