உலக தொழிலாளர் இயக்கங்களில் தற்போது சோர்வும், தேக்கமும் ஏற்பட்டுள்ளது என்ற கருத்தினை பல முதலாளித்துவப் பத்திரிக்கைகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு முதலாளித்துவ அறிவு ஜீவிகளும் சளைக்காமல் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி வருகின்றனர்.
இக்கருத்து பல உள்நோக்கங்களோடு திட்டமிட்டு பரப்பப் படுகிறது. ஆனால் இது உண்மைக்கு புறம்பானது. இது உண்மையெனில், கடந்த சில ஆண்டுகளாக உலகமயத்தை எதிர்த்த பெரும் போராட்டங்களும், ஈராக் ஆக்கிரமிப்பை எதிர்த்து எழுந்த யுத்த எதிர்ப்பு இயக்கங்களும் எவ்வாறு வீறு கொண்டு எழுந்தன? உண்மையில், இந்த இயக்கங்களில் தொழிற்சங்கங்கள் குறிப்பாக, இடதுசாரி தொழிற்சங்கங்களின் பங்கு மிக முக்கியமானது. தொழிற்சங்கங்களும், பல்வேறு மக்கள் அமைப்புக்களும் இணைந்து செயல்பட்டதால்தான் உலகமய எதிர்ப்பு யுத்த எதிர்ப்பு வலுமிக்கதாக நடைபெற்றது.
எனினும், தொழிற்சங்க இயக்கம், பல புதிய பிரச்சினைகளையும், சவால்களையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது என்பது உண்மையே. தற்போதைய உலகமயச் சூழல் உற்பத்தி முறைமைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
முக்கியமாக உலக அளவில் நிதி மூலதனம் பெரும் சக்தியாக சுரண்டல்உலா நிகழ்த்தி வருகிறது. உலகச் சந்தையை ஆக்கிரமித்து இலாபத்தை உடனடி இலாபத்தை பெற அது அலைபாய்ந்து வருகிறது. இதற்கேற்றவாறு உற்பத்தி முறைகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவைகளை புரிய ஒரு புரட்சிகர சர்வதேசிய பார்வை அவசியமாகிறது.
உலகளவில் சில புதிய இன்னல்களையும், தடைகளையும் தொழிலாளர் இயக்கங்கள் உலக நாடுகள் முழுவதும் சந்தித்து வருகின்றன. இக்கட்டுரையில் பல்வேறு நாடுகளின் தொழிற்சங்க இயக்கங்கள் இப்பிரச்சினைகளை எவ்வாறு சந்தித்து வருகின்றன, எத்தகு கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன ஆகியன தொகுக்கப்பட்டுள்ளன.
மூலதனத்தின் அதிரடி
முதலாளித்துவ உற்பத்தி முறையின் ஒரு முக்கிய அம்சம் அவ்வப்பொழுது, நெருக்கடி சூழலில் மாட்டிக் கொள்வதுதான். பணச் சுழற்சியின் வேகம் பன்மடங்காகி, சரக்கு உற்பத்தியின் வேகம் அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் போவதால், உள்நாட்டு அளவிலும் உலகளவிலும் சூழல் பூகம்பம் போல் வந்து போகும். 1975ஆம் ஆண்டுகளையொட்டிய காலத்தில் அப்படி ஒரு சூழலில் மாட்டி உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி வேகம் குன்றியது வளர்ந்த நாடுகள் அனைத்திலுமே வளர்ச்சி குறைந்தது. ஆனால், இதற்கு அந்த நாட்டு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் எப்படி தீர்வு கண்டார்கள்?
உழைப்பின் மீதும், உழைப்பாளர் மீதும் மேலும், மேலும் வேட்டையாடுவதுதான் அவர்கள் கண்ட வழி. அதாவது, லாபத்தைப் பெருக்கிட, உழைப்பாளர்களுக்கு ஆகும் செலவுகளைக் குறைப்பது என்பதே.
இந்தப் பாதையை செதுக்கி அமைத்தது, அந்தந்த நாட்டு முதலாளித்துவ அரசாங்கங்களும், கடன் கொடுக்கும் அமைப்புகளான உலக வங்கியும் சர்வதேச நிதி நிறுவனமும்தான்.
அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் யாவை?
இதோ பட்டியல்
- ஊதியத்தை வெட்டுவது, சலுகைகளை பறிப்பது
- பாதுகாப்பற்ற சூழலில், கடுமையான வேலை வாங்கி உற்பத்தியை பெருக்குவது – இதனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் உடற்காயங்கள், நோய்கள் பற்றி கண்டுகொள்ளாதது.
- தொழில் நிறுவனங்களை மூடி உழைப்பாளர் சமூகத்தை உருக்குலைப்பது.
- பிற்போக்கான மீடியா மற்றும் அறிவு ஜீவிகள் மூலம் உழைப்பாளர்களுக்கு எதிரான சித்தாந்தப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவது (தொழிற்சங்கங்களின் தேவை காலாவதியாகி விட்டது; பல தொழிலாளர்கள் தொழிற்சங்கம் மூலம் வசதி படைத்தவர்களாக ஆகி விட்டனர்; போன்றவை யெல்லாம் இந்த சக்திகள் கட்டவிழ்த்து விடும் பிரச்சாரம் தான்)
- சமூக நலத் திட்டங்களை வழங்கும் அரசுகளை ஒழிப்பது – குடிநிர் போன்ற பொதுச் சேவைகளை தனியார்மயமாக்குவது
- மூலதனத்தை கட்டுப்படுத்துகிற அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவது.
- ஏகபோகங்களுக்கு வரிக்குறைப்பு, சாதாரண மக்களின் மீது வரிச்சுமையேற்றுவது என்ற வகையில் வரி வசூலிப்பு முறையை மாற்றியது.
- வேலைகளை அவுட்சோர்ஸிங் செய்வது
- தொழிலாளர்க்கு எதிரான பல வியாபார ஒப்பந்தங்களை போடுவது.
- இவற்றுக்கு மேலாக, நேரடியாக தொழிலாளர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது.
இத்தகு நடவடிக்கைகள் எல்லா முன்னேறிய நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் தொடர்ந்து வருகின்றன. இதனால் கோடிக்கணக்கான உழைப்பாளிகள் உலகம் முழுவம் வேலையிழந்து அவதிப்படுவதும், வறிய, இயந்திர கதியான வாழ்க்கை முறையில் தள்ளப்படுவதும் அதிகரித்து வந்தது.
தொழிலாளர் வேலைகள்
வேலையிழப்பு, வேலை கிடைக்காதது, அல்லது மிகச் சொற்பமான சம்பளத்துக்கு கடும் உழைப்பைச் செலுத்தும் வேலை எனப் பல வகைச் சூழலில் இன்று உழைப்பாளி வர்க்கம் சிக்கிக் கொண்டுள்ளது.
கிராமங்களிலிருந்து பிழைப்பு தேடி நகரத்தின் குடிசைப் பகுதிகளில் வந்து தங்கிடும் உழைப்பாளிகள் மூன்றாம் உலக நாடுகளில் அதிகரித்துள்ளனர். இவர்களுக்கு முறைசாராத் தொழில்கள்தான் ஒரே வாய்ப்பு.
இதர உழைப்பாளிகள் பிரிவிலும் பல வகை. வீட்டிலிருந்தே பணியாற்றும் தொழிலாளர்கள், தாற்காலிக தொழிலாளர்கள், காண்ட்டிராக்ட் தொழிலாளர்கள், சுயதொழில் என்ற பெயரில் சுயமாக தங்களை சுரண்டலுக்கு ஆளாக்கிக் கொள்ளும் தொழிலாளர்கள் என பல்வேறு பிரிவு தொழிலாளர்கள் உருவாகியுள்ளனர்.
முழுநேரமும், ஆண்டு முழுவதும் ஒரு தொழிலில் நிரந்தரமாக பணியாற்றும் தொழிலாளர்கள் பெருமளவு குறைந்துள்ளனர். பணக்கார நாடுகளிலும் இதே நிலைதான்.
இதுவரை நிரந்தரமாக, பாதுகாப்போடு பணியாற்றிய தொழிலாளர்களுக்கும் ஆபத்து நீடித்து வருகிறது. இத்தகு வேலைகளில் இருந்த பலர் வேலையிழந்து வேற்று நாடுகளுக்கு பிழைப்பு தேடி ஓடும் நிலையும் உலகின் பல பகுதிகளில் உள்ளது. இதனால் அந்தந்த நாடுகளில் உள்ள உள்நாட்டு தொழிலாளர் களுக்கும், வெளியிலிருந்து வந்தவர்களுக்குமான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. எல்லா பகுதிகளிலும், வேலை ஏற்படுத்தும் மன அழுத்தம் தொழிலாளர்களிடையே அதிகரித்துள்ளது.
மேற்கண்ட எல்லா அவதிகளுக்கும், இடையூறுகளுக்கும் அதிக அளவில் பெண்களும் ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிட வேண்டிய உண்மை. பெண்களின் உழைப்பு சுரண்டப்படுவது கொடூரமாக அதிகரித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் வலுத்து வரும் எதிர்ப்பு
பல ஏழை நாடுகளில், தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் தங்களது நாடுகளில் உலகமயம் ஏற்படுத்தி வரும் சீரழிவுகளுக்கு எதிராக திரண்டனர்.
அர்ஜெண்டினாவில் வேலையிழந்த தொழிலாளர்கள் நேரடி மோதல் களத்தில் இறங்கினர். நாட்டின் அனைத்து முக்கிய சாலைகளையும் மறித்து மீண்டும் தங்களுக்கு வேலையையும், சேவைகளையும் வழங்கிட அரசாங்கத்தை வற்புறுத்தினர்.
தென்னாப்பிரிக்காவில், ஏழைகளின் இயக்கம் எனும் பெயரில் உலகமயத்திற்கு எதிரான தொழிலாளர் இயக்கங்கள் ஒன்று திரண்டு, பல்வேறு சமூக மக்களையும் இணைத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இருப்பிடம், தண்ணீர், மின்வசதி போன்ற அடிப்படை பிரச்சினைகளிலிருந்து, ஏழை நாடுகளின் கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டுமென்ற பல பிரச்சினைகள் வரை பல்வேறு தரப்புக் கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் இயங்கி வருகின்றனர்.
வட அமெரிக்க சுதந்திர வணிக ஒப்பந்தம் எனும் பெயரில் ஒப்பந்தம் ஏற்படுத்தி, மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளின் பொருளாதாரத்தை அமெரிக்கா ஆக்கிரமித்து வருகின்றது. அந்த ஒப்பந்தம் கையெழுத்தான தினத்திலிருந்தே மெக்சிகோவில் சாபாடிஸ்டா இயக்கம் விவசாயிகளின் சுயஆட்சிக்காக வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி வருகின்றது. இதற்கு அந்நாட்டு தொழிலாளி வர்க்கம் உடன் நின்று போராடி வந்துள்ளது.
மெக்சிகோவின் சீர்திருத்த அமைப்புக்களைச் சார்ந்த தொழிலாளர்கள் புதிய வடிவிலான அமைப்புக்களையும், கூட்டணிகளையும் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் மெக்சிகோ தொழிலாளர் இயக்கம் வேகமாக இடதுசாரி நிலைபாடுகளை வந்தடைந்துள்ளது.
வெனிசுலாவில், ஊழல் நிறைந்த பிற்போக்கான தொழிலாளர் இயக்கங்கள் தொழிலாளர் ஆதரவை இழந்து வருகின்றன. இதனால், புதிய தொழிலாளர் கூட்டமைப்பு ஏற்பட்டுள்ளது. இது, வெனிசுலா அதிபர் சாவேஸ் அரசு பின்பற்றி வரும் முற்போக்கு கொள்கைகளால் ஏற்பட்ட தாக்கம் ஆகும்.
பிரேசில், ஜிம்பாப்வே, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலும் தொழிற்சங்கங்கள் இடதுசாரி கொள்கையை நோக்கியதாக மாறிவருகின்றன. ஏழை நாடுகளான ஈக்குவாடார் பொலிவியாவிலும் இத்தகு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பிரேசில் நாட்டில், விவசாயிகள், தொழிலாளிகள் ஒற்றுமை பயணம் தொடருகிறது. நிலமற்ற விவசாயிகள் தேசிய தொழிலாளர் கட்சியோடு கைகோர்த்துள்ளனர். இந்த இயக்கம் நில மீட்சிக்கு பயன்பட்டது மட்டுமல்லாது, இடதுசாரித் தலைவரான லூலா டீ சில்வா நாட்டின் அதிபர் பதவிக்கு வந்திடவும் உதவியது. மேற்கண்ட அனைத்தும் உழைப்பாளி வர்க்க இயக்கதின் மைல் கல்களாக தடம் பதித்துள்ளன. சிறிய, பெரிய வெற்றிகளை இவை குவித்துள்ளன. உழைப்பாளி மக்களின் வாழ்வில் சிறு முன்னேற்றங்கள் எற்படுத்திட இந்த இயக்கங்கள் உதவியுள்ளன என்பதை யாரும் மறுத்திட இயலாது.
உலகமயம் தடுக்கப்படவில்லை
எனினும், உலகமயக் கொள்கைகள் தடுக்கப்படாமல், தடை படாமல் தொடருகின்றன என்பதே உண்மை. இது கசப்பான உண்மையாக இருப்பினும், இடதுசாரி உழைப்பாளி வர்க்க இயக்கங்கள் இந்த உண்மை நிலையை உணர்ந்தே செயல்பட முனைகின்றன. இதை உணர்ந்து, உரிய தீர்வுகளையும், நடவடிக்கைகளையும் வீறுகொண்ட இயக்கங்களையும் உருவாக்கி வருகின்றனர்.
செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்க உலக வர்த்தக மையக் கட்டிட தாக்குதலுக்குப் பிறகு, உலகமெங்கும் தொழிலாளர் உரிமைகளும், பாதுகாப்பு சலுகைகளும் பறிக்கப்பட்டன. என்றுமில்லாத வேகத்தோடும், தீவிரத்தோடும் ஆளும் வர்க்கங்கள் இத்தாக்குதலை மேற்கொண்டனர்.
ஆனால், தொழிலாளிகள் மூலதனத்திற்கு எதிராக எப்போதுமே போராடி வந்துள்ளது போன்று தொடர்ந்து போராட்டக் களத்தில் இருந்து வருகின்றனர். 1990 ஆம் ஆண்டுகளில் சில உற்சாகமூட்டும் நிகழ்வுகள் உழைப்பாளி வர்க்க இயக்கங்களில் நிகழ்ந்தன. பிரான்ஸ் அரசாங்கம் தனது சமூகச் செலவுகளை குறைக்கும் திட்டங்களை அறிவித்த போது பிரெஞ்சு பொதுத்துறை ஊழியர்கள் கோபாவேசத்தோடு எழுச்சியுடன் போராடி, நாட்டையே ஸ்தம்பிக்க வைத்தனர்.
இதே போன்ற சூழலில், கனடா தொழிலாளிகள் தொழிற் சாலைகளை முற்றுகையிட்டனர். இந்த தொடர் போராட்டங்கள் கனடா தொழிலாளி வர்க்கத்திற்கு அரசியல் உணர்வை அதிகரிக்கச் செய்தது.
அமெரிக்காவில் கூட, முக்கிய தொழிற்சங்கங்களின் தலைமை சீர்திருத்தவாதிகளிடம் இருந்தாலும், பல துறைத் தொழிலாளிகள் வெற்றிகரமாக தேசந் தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டனர். இது சியாட்டில் நகரில் இதர உலகமய எதிர்ப்பு இயக்கங்களோடு அமெரிக்கத் தொழிற்சங்கங்களும் கைகோர்த்த வரலாற்றுப் புகழ்பெற்ற உலக இயக்கமாக மலர்ந்தது.
அமெரிக்க நாட்டு தொழிற்சங்க இயக்கத்திலும் தொழிலாளர் இயக்க எதிர்காலம் பற்றி பல சர்ச்சைகள் நடந்து வருகின்றன. 1990ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் தொழிற்சங்க கூட்டமைப்பான ஏ.எப்.எல். – சி.ஐ.ஓ. சீர்திருத்தவாதிகளிடம் இருந்த போதிலும், உலகமய எதிர்ப்பு இயக்கங்களில் அமெரிக்காவின் பல தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கு வகித்தன.
இந்த தொழிற்சங்கங்கள் மாணவர்களை மையமாகக் கொண்ட இயக்கங்களோடும், உலகமய எதிர்ப்பில் ஈடுபட்ட பலவகை இயக்கங்களோடும் ஒருங்கிணைந்து போராடின.
பல புதுவகையிலான திரட்டல் முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டன. பல்வேறு சமூகங்களோடு இணைந்த கூட்டணிகள் அமைத்தல், பாலின வேறுபாடு, நிறவெறி எதிர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் பல பிரச்சார இயக்கங்களை மேற்கொள்வது, அமெரிக்காவிற்கு வெளியே, வேறு நாட்டு இயக்கங்களோடும் இணைந்து பிரச்சாரங்கள் மேற்கொள்வது என பல வகைச் செயல்பாடுகளோடு இந்த இயக்கங்கள் நடைபோட்டன. இத்தகு முயற்சிகளில் நல்ல பலன் கிட்டியது.
இதில் முக்கியமான முயற்சியாக, 2003ஆம் ஆண்டு போருக்கு எதிரான அமெரிக்கத் தொழிலாளர்கள் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, ஏராளமான முக்கிய பிரமுகர்கள், சங்கங்கள், முற்போக்கு அமைப்புக்களை கொண்டதாக விளங்கியது. இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைவரும், அனைத்து அமைப்புகளும் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்ப்போர் மட்டுமல்ல, அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையையே கடுமையாக எதிர்ப்பவர்கள்.
அதே போன்று இந்த அமைப்பின் கோரிக்கைகளில்
- அமெரிக்கா நியாயமான வெளியுறவு கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.
- அமெரிக்கா வேறு எந்த நாட்டிலும் ஆக்கிரமிப்பு யுத்தங்களை தொடுத்திடக் கூடாது.
- அமெரிக்க தேசிய வளங்களை பயன்படுத்துகிற திசை வழியில் மாற்றம்.
- அமெரிக்கத் துருப்புக்களை ஈராக்கிலிருந்து மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்பப் பெற வேண்டும்.
- சமூக உரிமைகளையும், தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரின் உரிமைகளை பாதுகாத்தல்.
- உலகம் முழுவதும் தொழிலாளர்களோடும், தொழிற்சங்கங்க ளோடும் நல்லுறவையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவது ஆகியன அடங்கும்.
அமெரிக்காவில் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அங்கு அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழிலாளர்களை கொண்ட பெரிய தொழிற்சங்கங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பதுதான் வழக்கம்.
புதிய வடிவங்கள்
பல நாடுகளில் தொழிலாளர் இயக்கங்கள் மேற்கண்ட முன்முயற்சிகளையொட்டி பல புதுப்புது வடிவங்களையும் கையாள்கின்றனர். தற்போது பரவலாக பல நாடுகளில் வேகமாக பரவி வருகின்ற புதிய வடிவங்களில் ஒன்று, தொழிலாளர் மையங்கள் எனப்படுவது.
தொழிலாளர் இயக்கம் தனது உள்ளுர் சக்தியை பலப்படுத்திக் கொள்ள இந்த மையங்கள் உதவுகின்றன. தொழிலாளர்கள் வெவ்வேறு தொழில்களில் இருந்தாலும் தங்களது குடியிருப்புப் பகுதியில் அல்லது ஒரு முக்கிய இடத்தில் கூடுகின்றனர். இதில் கலந்து கொள்வோர் குறிப்பிட்ட தொழிற்சாலையில் பணிபுரிவோராக இருக்கலாம். அல்லது குறிப்பிட்ட அந்தப் பகுதியைச் சார்ந்தவர்களாக இருக்கலாம்.
இந்த மையங்களில் கூடும் தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கை, தொழில் நிலைமைகளை விவாதிப்பார்கள். குறைபாடுகள், சிரமங்கள், கஷ்டங்களை பகிர்ந்து கொள்கின்றனர். தொழிலாளர் உரிமை எனும் வகையில் தங்களது குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி பெறுவதைப் பற்றி சிந்திக்கின்றனர்.
தொழிலாளர்கள் அரசியல் உணர்வு பெறும் வகையில் இந்த மையங்கள் சார்பாக, சிறு சிறு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். தங்களது தொழிலாளர் இயக்கத்தை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு, சிறு சிறு வெற்றிகளையும் பெறுகின்றனர். வாழ்கிற அளவிலான ஊதியம் என்ற குறிக்கோளை நோக்கிச் செல்ல தேவையான உத்திகள் குறித்து விவாதிக்கவும் செயலாற்றிடவும் இந்த மையங்கள் உதவுகின்றன.
இத்தகு புதிய பரிசோதனை முயற்சிகள் குறைந்த ஊதியம் பெற்று, வாழ்க்கை உத்திரவாதமற்ற நிலையில் வாழ்ந்து வரும் தொழிலாளர்களுக்கும் வேற்று நாடுகளிலிருந்து வந்து குடியேறிய தொழிலாளர்களுக்கும் பேருதவியாக திகழ்கின்றன.
உயர்ந்த வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்கள்
எவ்வகையில் தொழிலாளர்களைத் திரட்டினாலும், இப்பணியில் முக்கிய இடம் பெறுபவர்கள், உயர்ந்த வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்கள்தான். அவர்கள்தான் இதர தொழிலாளர்களுக்கு பல்வேறு விஷயங்களை விளக்கி, இதர தொழிலாளர்களை திரட்டக்கூடியவர்கள். அவர்களால்தான் அவர்களது தொழிலில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளுக்கும் உலக முதலாளித்துவத்திற்கும் உள்ள தொடர்புகளை அப்பட்டமாக அடையாளம் காட்டி, இதர தொழிலாளர்களிடம் விளக்கி புரிய வைக்க முடியும்; அவர்களால்தான் முதலாளித்துவ சமூகங்களில் நிகழும் ஏற்றத் தாழ்வுகளை விளக்கிட முடியும்.
பல புரியாத புதிர்களைக் கொண்டிருக்கும் இன்றைய நவீன முதலாளித்துவத்தில், சாதாரண தொழிலாளர்களைத் திரட்டிட மேற்கண்ட வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் தேவை. அவர்களே தொழிலாளர் இயக்கத்தின் முக்கிய தளகர்த்தர்கள்.
பல நாடுகளில், போக்குவரத்து, தகவல் தொடர்பு, உணவு சப்ளை, நவீன தொழில்நுட்பம் என பல துறைகளில் இது போன்ற உயர்ந்த வர்க்க உணர்வு பெற்ற தரமிக்க தொழிலாளர் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இன்னும் வேறு பல துறைகளிலும் இது போன்ற தலைமையை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
நிரந்தரமற்ற தொழில்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும், நிரந்தர தொழில் சார்ந்த தொழிலாளர்களுக்குமான பிணைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. ஓரளவு பாதுகாப்பான வேலையோடு அமைப்பு ரீதியான தொழில்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கும், வேகமாக வளர்ந்து வரும் பாதுகாப்பற்ற முறைசாராத் தொழில்கள் சார்ந்த தொழிலாளர்களுக்கும் பாலம் அமைத்தால், தொழிலாளர் இயக்கம் விரிந்த பரந்ததாக மாறிடும்.
அர்ஜெண்டினாவிலும், வெனிசுலாவிலும் இதுபோன்ற முயற்சிகள் பெரும் பலன்களை ஏற்படுத்தியுள்ளன. இங்கு ஏற்படுத்தப்பட்ட தொழிலாளர் சமூகங்கள் மேற்கண்ட பிணைப்பை ஏற்படுத்திட உதவின.
திரட்டுவதற்கான பல்வேறு தளங்கள்
தொழிலாளர்கள் ஒன்று திரள்கிற போதும், அதற்கான திட்டங்களை உருவாக்குகிற போதும், பல அம்சங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. முதலில், தொழிலாளர்கள் பல்வேறு பகுதிகளில் வாழ்கின்றனர். வேலைத் தளங்கள், சமூகங்கள், பெரிய குடும்பங்கள், சமூக மற்றும் சமய நிறுவனங்கள் இப்படி பலச் சூழல்களில் வாழ்கின்றனர். இந்த தளம் ஒவ்வொன்றும் அவர்களைத் திரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ள தளங்களாக கருதப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகு தளங்களில் மக்கள் ஏற்கெனவே பல விதங்களில் பண்பாட்டு ரீதியாக ஒற்றுமையை கடைப்பிடித்து வருகின்றனர். அங்கு தானாகவே உருவாகி மலர்ந்துள்ள ஒற்றுமையை மூலதனமாகக் கொண்டு, தொழிலாளர் திரட்டல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒவ்வொரு தளத்தின் தன்மைக்கேற்ப கோரிக்கைகள் மாறுகின்றன. எனினும் தங்களது வேலைத்தளங்களில் தொழிலாளர் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு வலு சேர்ப்பதாகவே ஸ்தல மட்டத்தில் முன்வைக்கும் கோரிக்கைகளும் அமையும். உதாரணமாக, தங்களது குடியிருப்பில் உள்ள கல்வி நிலையங்களில் நன்கொடை, கல்வி கட்டண உயர்வுக்கு எதிராக போராடுவதும், வேலைத் தளத்தில் கல்வி உள்ளிட்ட வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப ஊதிய உயர்வுக்குப் போராடுவதும் ஒன்றுக் கொன்று தொடர்புடையது மட்டுமல்ல, ஒன்றுக்கொன்று உரமூட்டும் போராட்டங்களாகும்.
கோரிக்கைகளை வென்றடைய மேற்கொள்ளப்படும் வடிவங்கள் தொழிற்சாலைக்குள்ளும், வெளியே குடியிருப்புப் பகுதியிலும் வேறு வேறாக இருக்கக்கூடும். ஆனால், இதிலும் தொடர்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. தொழிலாளர்கள் திரண்டு தங்களது வேலைத் தளத்தில் ஆர்ப்பாட்ட இயக்கத்தில் இறங்கும் போது அதே கட்டத்தில் சமூக தளத்தில் உள்ள இயக்கங்களும் ஆர்ப்பாட்டத்தில் இணைகின்றன.
உலகமயச் சூழலில் தொழிலாளர் ஒற்றுமையை உருவாக்குவதற்கு மேற்கண்ட முயற்சிகள் பலனித்து வருகின்றன.
எதிர்கால இலக்கு எதை நோக்கியது?
மேற்கத்திய நாடுகளின் தொழிற்சங்க இயக்கங்களில் ஒரு பகுதியினர் உலகமயத்தை எதிர்த்து பல முனைகளில் தொழிலாளர் ஒற்றுமையை உருவாக்கிட முயற்சித்து வருகின்றனர். ஆனால் இன்னமும் கூட பெருமளவு சீர்திருத்த நோக்கங்கள், ஏகாதிபத்திய ஆதரவுப் போக்குகள் நீடித்து வருகின்றன.
மார்க்சீய ஆய்வாளரும், தொழிற்சங்க இயக்கம் குறித்து தொடர்ந்து எழுதி வரும் மைக்கேல் யேட்ஸ் சமீபத்தில் எழுதியுள்ள, தொழிலாளர் இயக்கங்கள் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கிறதா? என்ற கட்டுரையில் இதையொட்டிய பல வினாக்களை எழுப்புகிறார்.
தொழிலாளர் இயக்கத்தின் நோக்கம் என்ன என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். எதற்காக தொழிலாளர்கள் திரட்டப்பட வேண்டும்?
இதற்கான விடை தேடல் ஆழமாக நடைபெறுகிறது. தொழிலாளர் இயக்கங்கள், இடதுசாரி இலட்சியங்களை நோக்கி பயணிக்க இந்த விவாதங்கள் உதவிடும். இது இப்போது உடனடியாக நிகழாவிட்டாலும், இத்தகு விவாதங்கள் என்றாவது ஒரு நாள் சோசலிச பாதையை நோக்கி அமெரிக்க உள்ளிட்ட இதர மேலைய நாடுகளின் தொழிற்சங்க இயக்கங்கள் திரும்பிட உதவிடும்.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அமெரிக்க தொழிற்சங்க கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் இத்தகு விவாதங்களும், கேள்விகளும் எழுப்பப்பட்டன. எதிர்கால திசை வழி பற்றிய கடும் கருத்து மோதல்கள் எழுந்தன. பிளவு ஏற்படும் சூழலும் உருவானது. பல பிற்போக்காளர்களும், அமெரிக்க அரசு ஆதரவாளர்களும் கொண்ட இந்த தொழிற்சங்க அமைப்பிலும் சில விஷயங்களில் ஒன்றுபட்ட முடிவுகளை அந்த மாநாடு நிறைவேற்றியது.
ஈராக்கிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேற வேண்டு மென்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பெரும் திருப்பங்கள் இல்லா விட்டாலும் கூட, சில நம்பிக்கை ஒளிக்கீற்றுக்களை இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுத்தும் தொழிலாளர்களை எந்த நோக்கத்திற்காக திரட்ட வேண்டுமென்ற கேள்வி எழுப்பிய மைக்கேல் யேட்ஸ் தனது கட்டுரையில் அதற்கான பதிலையும் அளிக்கின்றார்.
… தொழிலாளர் இயக்கம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டுமானால் இடதுசாரி திசையில் செல்ல வேண்டும்…
… தொழிற்சங்க இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, ஏழைக்கும், பணக்காரனுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து அதிகமான சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்
… இதை யொட்டி தவிர்க்க முடியாமல், எழும் கேள்வி என்னவென்றால், சமூக சமத்துவம் முதலாளித்துவ அமைப்பில் அடைய முடியுமா என்பதும், தொழிலாளர் இயக்கங்களால், முதலாளித்துவ அமைப்புகளுக்கு சவால் விட முடியுமா என்பதுதான்… இத்தகு சோசலிச கருத்துக்களை எழுப்புவதை சில தொழிற்சங்க தலைவர்கள் நடைமுறை சாத்தியமில்லாதது என்கின்றனர். முற்போக்குவாதிகள் இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட இப்படி கருதுகின்றனர்.
ஆனால், உயர்ந்த குறிக்கோளை வைத்துக் கொள்வது, சில வெற்றிகளையாவது பெற்றுத் தர வாய்ப்பளிக்கும். முதலாளித்துவ வரையரைகளையும், அதன் விதிகளையும் ஏற்றுக் கொண்டு அதற்குள் அடங்கிப் போவது தொழிற்சங்க இயக்கத்தின் அழிவுக்கே வழிவகுக்கும். தற்போதைய நெருக்கடி நமது பார்வையை குறுக்கிக் கொள்வதற்கு பதிலாக மேலும் விரிவாக்கவே துணை செய்ய வேண்டும்.
இந்த முன்னேறிய நாடுகளின் தொழிற்சங்கங்கள் முற்போக்குப் பாதையில் நடைபோட, அந்த நாடுகளில் உள்ள முற்போக்கு, இடதுசாரி, மார்க்சீய தொழிலாளர் தலைவர்கள் கடுமையாக முயற்சிக்கின்றனர்.
அவர்களோடு மூன்றாம் உலக நாட்டு தொழிற்சங்க இயக்கங்களின் போராட்டங்களும் இணைந்தால், உலகத் தொழிலாளர் இயக்கம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பாதையில் நடைபோட்டு ஒரு புதிய உலகு அமைக்க உதவிடும். அப்போதுதான் சோசலிச லட்சியங்கள் புத்துயிர் பெற்று எழும்.
இதற்கு மேற்கத்திய நாடுகளில் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள், விவாதங்கள், புது வடிவங்கள் ஆகியவற்றின் படிப்பினைகளை மூன்றாம் உலக நாட்டு தொழிற்சங்கங்களும் கூர்மையாக உள்வாங்கிட வேண்டிய அவசியம் உள்ளது.
பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற பார்வையோடு உள்ளூர் போராட்டங்கள் நடைபெறும் காலமாக இன்றைய காலகட்டம் உள்ளது. குர்குவான் ஹோண்டா தொழிலாளர்களின் போராட்டத்தை ஜப்பான் ஹோண்டா நிறுவனத் தொழிலாளர்கள் நமக்கு சம்பந்தமில்லையென்று இருந்திடவில்லை. ஹுண்டாய் கார் தொழிலாளர்கள் பயிற்சிக்காக தென்கொரியா சென்ற பொழுது, அவர்கள் இந்தியத் தொழிலாளர்களின் அவலத்தை துடைக்க எடுத்த முயற்சிகள் மேற்கொண்டனர். இன்று, சர்வதேசியப்பார்வை தொழிலாளர்களிடம் முன்னை விட ஆழமாக இருக்கிறது. உலக சமூக மாமன்றம் போன்ற அமைப்புகள் மற்றும் தொடர்புகள் பலப்பட வேண்டியுள்ளது.
ஆதாரக் கட்டுரை :
Labour Movements : Is There Hope? By Fernando E. Lapsin & Michael D. Yates.
பல தொழிற்சங்கங்களின் இணையதளங்கள்