மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது….


ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவது என்பது பல முறைகளிலும் ஒரு முக்கிய நிகழ்வாகவே காண வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது அந்த நபருடைய வாழ்க்கையில் மட்டுமின்றி அவருடைய சிந்தனைகள் உலகத்தைப் பற்றியும், சமூகத்தைப் பற்றிய பார்வை அவரின் மனோநிலை ஆகியவற்றிலும் பெரிய மாறுதல்கள் ஏற்படுகின்றன. அவருடைய ஆற்றல், மனதின் உறுதிப்பாடு போன்ற பல குணாம்சங்களிலும் படிப்படியாக உயர்நிலை அடைந்து கொண்டே இருக்கும். ஒரு மனிதனுடைய உணர்வு நிலைகளை சமூகப் பிரக்ஞை என்ற அறிஞர்கள் விளக்குகின்றனர்.

மாமேதை காரல் மார்க்ஸ் இத்தகைய ஒரு உணர்வு நிலையின் தோற்றத்தை மிகவும் நுட்பமானதோர் உதாரணத்துடன் விளக்கியுள்ளார். அதாவது ஒரு தொழிற்சாலையில் புதிததாகச் சேர்ந்துள்ள தொழிலாளியின் மன நிலையில் தன்னுடைய தனிப்பட்ட குறிக் கோள்கள், எதிர்காலம், கவலைகள், குடும்பப் பிரச்சனைகள் பற்றி யெல்லாம் எந்நேரமும் சிந்தித்துக் கொண்டே இருப்பான் என்பது இயல்பு. நான் என்று உணர்வு நிலை தான் அவர் மனதில் மேலோங்கி நிற்கும். ஆனால் தொழிற்சாலையிலும் அவனுடைய வேலைகளிலும் பல சிக்கல்கள் உருவெடுக்கின்றன. அவனாகவே தொழிலாளர் சங்கத்தில் சேருகின்றான். இந்நிகழ்ச்சி அவனுடைய சிந்தனைகளிலும் எண்ணங் களிலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதைக் கச்சிதமாக இவ்வாறு மார்க்ஸ் விளக்குகிறார். அத்தொழிலாளியின் மனதில் நான் என்ற எண்ணத்திற்கு மாறாக நாம் என்ற புதிய உணர்வு துளிர்விடுகிறது. தொழிலாளர்களின் மனோ நிலையில் உருவாகும் இந்த மாற்றம் தான் வர்க்க உணர்வின் துவக்கமாகும் என்று மார்க்ஸ் விளக்கினார். ஆக தொழிலாளர்களின் பிரக்ஞையில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்கிறது.

இந்த உதாரணத்தை விட பன்மடங்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மனோ நிலை மாற்றம் தான் ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது காணப்படும் சமூகப் பிரக்ஞையாகும். ஏனெனில் வர்க்க உணர்வில் இருந்து சோசலிச உணர்வுக்கு உயரும் போது தான் ஒருவர் கம்யூனிஸ்ட் ஆகிறார்.

இன்றுள்ள சமூக அமைப்பில் காணப்படும் அனைத்து அவலங்களுக்கும், துன்பத் துயரங்களுக்கும் மூலாதாரமான காரணம் பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் ஏன் சமுதாயத்தின் எல்லாத் துறைகளிலும் பரந்து கிடக்கும் சுரண்டும் வர்க்கங்களின் கொடூரமான ஆதிக்கம் தான் என்று உணரக் கூடிய மனிதர்கள் ஒரு புதிய சமூக அமைப்பை நிறுவ வேண்டுமென்ற சிறந்த எண்ணத்தால் உந்தப்படுகிறார்கள். அந்தப் புதிய அமைப்பானது சுரண்டலற்ற, ஒரு வர்க்கமற்ற மிக உயர்ந்த மனித நேயத்தை உயர்த்திப் பிடிக்கும் தன்மை கொண்ட சோசலிச சமூகமாக இருக்கும். ஆக ஒருவர் கம்யூனிஸ்ட்டாகும் போது மகத்தான சோசலிச லட்சியத்துடன் தன்னை இணைத்து அதற்கான போராளியாக மாறுகிறார். அவருடைய சிந்தனைகளில், உலகப் பார்வையின் செயல் முறைகளில் பிற பிரச்சினைகளை அணுகும் முறைகளில் எல்லாம் புதிய தன்மைகள் உருவாக்கின்றன. இத்தகைய மாற்றங்கள் எல்லாம் திடீரென்று ஏற்படுபவையல்ல. நான் ஒரு மகத்தான லட்சியத்தை ஏற்றுக் கொண்டவன் என்ற உணர்வு காரணமாகவும், அனுபவங்கள் மூலமாகவும் இம்மாற்றங்கள் தோன்றுகின்றன.

சமூகத்தில் அடிப்படையான, புரட்சிகரமான மாறுதல்கள் வழியாகத்தான் ஒரு சோசலிசப் பாதையில் முன்னேற முடியும். சுரண்டும் வர்க்கங்களின் கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து சந்தித்தும், முறியடித்தும் தான் புரட்சிகரமான இயக்கம் முன்னேற முடியும் என்பது தான் வரலாற்று உண்மை. இதுவானது ஒரு நீண்ட காலப் போராட்டமாகவே அமையும். இப்பேராட்டங்களில் உணர்வுப்பூர்வமாக பங்கேற்பதன் மூலம் ஒரு கம்யூனிஸ்ட்டின் போர் குணமும், உறுதிப்பாடும் தைரியமும், தெளிவும் வலுப்பெறும். இதுவே ஒருவரை சிறந்த கம்யூனிஸ்ட்டாக உதவி செய்யும்.

ஆக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணையும் போது அத்தோழர் மகத்தானதோர் லட்சியப் போராட்டத்தின் ஒரு போராளியாக வளருகிறார். நீண்டகால அடிப்படையில் பணியாற்ற வேண்டியதால் படிப்படியாக அதற்கான பயிற்சியும் பக்குவமும் பெற்று முன்னேற வேண்டிய பெரும் கடமையாகும் இது.

உறுதிமொழி

மிகச் சிறந்தோர் லட்சியத்துக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் வகையில் தான் கட்சியில் சேரும் போதும் கீழ்க்கண்ட உறுதி மொழியை ஏற்க வேண்டுமென கட்சியின் அமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது.

பக்கம் – 7 பிரிவு 5

கட்சியின் அமைப்புச் சட்டம் கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் ஸ்தாபன கோட்பாடுகளையும், கட்சியின் அமைப்புச் சட்டம் வரையறுத்து தந்துள்ளது. (இங்கு அவற்றையெல்லாம் குறிப்பிடவில்லை) தோழர்கள் அவசியம் அவற்றைப் படிக்க வேண்டும்.

கட்சி உறுப்பினர்களின் கடமைகள்

அமைப்பு விதிகளின் 11வது பிரிவில் கட்சி உறுப்பினர்களின் கடமைகள் என்ற பகுதியானது மிகவும் முக்கியமானவையாகும். இந்த லட்சியத்திற்காக தன்னை உணர்வுப் பூர்வமாக அர்ப்பணித்துள்ள கட்சி உறுப்பினர் மேலே குறிப்பிட்டுள்ள கடமைகளைப் பின்பற்றுவதன் மூலம் புரட்சிகரமான பாதையில் முன்னேறுவதற்கு முயற்சிக்க வேண்டும். ஒரு நல்ல நாளை நோக்கி மனித குலம் சோசலிசத்தின் மகத்தான பாதையில் முன்னேறுவதற்கு ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் தன்னுடைய பங்கினை ஆற்றுவதை விட சிறந்த பணி வேறில்லை.

பிரிவு – 11 – கட்சி உறுப்பினர்களின் கடமைகள்

1.    கட்சி உறுப்பினர்களின் கடமைகள் பின் வறுமாறு:

  1. தாங்கள் சேர்ந்திருக்கும் கட்சி ஸ்தாபனத்தின் வேலைகளில் முறையாகப் பங்கெடுத்துக் கொள்ளுவது. கட்சியின் கொள்கை முடிவுகளையும், கட்டளைகளையும் விசுவாசமாக நிறைவேற்றுவது.
  2. மார்க்சிசம் லெனினிசத்தை கற்பது. மார்க்சிசம் லெனினிசத்தைப் பற்றிய தங்களது அறிவின் மட்டத்தை உயர்த்திக் கொள்ளப் பாடுபடுவது.
  3. கட்சி பத்திரிகைகள், கட்சி பிரசுரங்களை படிப்பது, ஆதரிப்பது அவற்றை மக்கள் மத்தியில் பரப்புவது.
  4. கட்சியின் அமைப்புச் சட்டம் கட்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றை கடைப்பிடிப்பது: அத்துடன் கம்யூனிசத்தின் மகோன்னத இலட்சியங்களுக்கு ஏற்பவும் தொழிலாளி வர்க்க சர்வதேசியத்தின் உணர்வுடனும் நடந்த கொள்ளுவது.
  5. சொந்த நலன்களை, மக்கள் நலன்களுக்கும், கட்சியின் நலன்களுக்கும் உட்படுத்துவது.
  6. மக்களுக்கு மனப்பூர்வமான சேவை செய்வது. மக்களுடனுள்ள தொடர்புகளை இடைவிடாது பலப்படுத்திக் கொண்டிருப்பது; மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுவது: மக்களது அபிப்பிராயங்களையும், கோரிக்கைகளையும் கட்சிக்கு அறிவிப்பது: விதிவிலக்கு கொடுக்கப்பட்டாலொழிய, கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் வெகுஜன ஸ்தாபனமொன்றில் வேலை செய்வது.
  7. கட்சித் தோழர்கள் ஒருவருக்கொருவர் தோழமை உறவுகளை வளர்த்துக் கொள்வது, கட்சிக்குள் ஒரு சகோதர உணர்வை வளர்க்க இடைவிடாமல் பாடுபடுவது.
  8. ஒருவருக்கொருவர் உதவி செய்யும் நோக்கத்துடன் விமர்சனம், சுய விமர்சனத்தை கடைப்பிடிப்பது. அத்துடன் ஒவ்வொரு நபரின் வேலைகளையும், கூட்டு வேலைகளையும் அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் விமர்சனம், சுய விமர்சனத்தை கடைப்பிடிப்பது.
  9. கட்சியின் பால் திறந்த மனதுடனும் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொண்டு கட்சி தன்மீது வைத்துள்ள நம்பிக்கைகக்கு துரோகம் இழைக்காமல் இருப்பது.
  10. கட்சியின் ஒற்றுமையையும், ஐக்கியத்தையும் பாதுகாப்பது. தொழிலாளி வர்க்க விரோதிகளுக்கு எதிராகவும், நாட்டின் விரோதிகளுக்கு எதிராகவும் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது.
  11. கட்சி தொழிலாளி வர்க்கம், நாடு ஆகியவற்றின் விரோதிகளிடமிருந்து வரும் தாக்குதல்களிலிருந்து கட்சியை பாதுகாத்து, கட்சியின் இலட்சியத்தை உயர்த்திப் பிடிப்பது.

ஆதாரமான மூன்று அம்சங்கள்:

கட்சி உறுப்பினர்களின் கடமைகள் என்ற பிரிவில் 11 ஷரத்துகள் உள்ளன. மேலே குறிப்பிட்டபடி ஒரு கம்யூனிஸ்ட் தோழரின் முக்கியமான கடமைகளை வரையறுத்து காட்டப்படும் ஷரத்துக்களே இவை. ஆயினும், இவற்றினுள் மூன்று ஷரத்துக்கள் கம்யூனிஸ்ட் கண்ணோட்டத் திற்கும் செயலுக்கும் ஆதாரமானவையாகும்.

கடுமையான, நீண்டநாள் போராட்டம்

சோசலிச இலட்சியத்திற்காக தாங்களை அர்ப்பணித்தவர் என்பதை முன்பகுதியில் வலியுறுத்துகிறேன். சோசலிச இலட்சியம் ஒரு பகற்கனவாக, ஒரு கற்பனைவாத நீண்ட கால இலட்சியமாக மட்டுமே இருக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உலக சமூகத்தை பொருளாதார மற்ற இதர துறையில் சுரண்டி மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியுள்ள சுரண்டும் வர்க்கங்களின் சர்வாம்சமான பிடிமானத்தை குறைத்துப் பார்க்க முடியாது. தங்களின் ஆதிக்கத்தை கட்டிப் பாதுகாப்பதற்காக இவ்வர்க்கங்கள் கொடூரமான முறையில் அரசியல் அதிகாரத்தையும் கை அடக்கி வைத்துள்ளனர். சோசலிஸ்ட்டுக்கான போராட்டம் ஒரு கனவல்ல. மாறாக, இந்த சுரண்டல் வர்க்கத்திற்கு எதிரான போராட்டமாகும். அவற்றின் மேலாதிக்கத்தை உடைத்தெறிவதன் மூலம் மட்டுமே இக்காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும். அரசியல் அதிகாரத்தை இக்கும்பல்களிடமிருந்து கைப்பற்றுவது புரட்சிகரமான போராட் டத்திற்கான அடிப்படை கடமையாகும். இவ்வாறு செய்து அரசியலதிகாரத்தை தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின், இதர வர்க்கங்களையும் இணைத்து உழைப்பாளி வர்க்கங்களின் கைகளுக்கு மாற்றுவதற்கான கடுமையான போராட்டம் தான் சோசலிச புரட்சிக்கான முதன்மையான கடமையாகும்.

இந்தியாவில் இந்தப் புதிய அரசியல் அதிகாரத்தை மக்கள் ஜனநாயகப் புரட்சி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிர்ணயித்துள்ளது. மிக வலுவான எதிரிகளை வீழ்த்துவதன் மூலமாகத்தான் இப்போராட்டம் வெற்றியடைய முடியும். பணபலம், அதிகாரபலம், போலீஸ் – இராணுவம் போன்ற அடக்குமுறை அமைப்புகளின் மீதுள்ள பிடிமானம், பத்தாம்பசலி, பிற்போக்கு கருத்துக்கள் என்னும் ஆயுதங்கள் சமூகத்தில் நிலவி வரும் அத்தனை பிற்போக்கு எண்ணங்களின் தாக்கம் – போன்ற ஆயுதங்களை கையில் வைத்துள்ள ஆதிக்க வர்க்கங்கள் புரட்சிகரமான போராட்டங்களை மூர்க்கத்தனமாக தாக்கிக் கொண்டே இருப்பார்கள்.

இவற்றையெல்லாம் முறியடிப்பதற்கு சோசலிச சக்திகள் நீண்ட கால பார்வையுடன் தொடர்ச்சியாக போராட வேண்டியுள்ளது. இக்காரியத்தை திறம்பட செய்து தான் பல நாடுகளிடம் புரட்சிகர இயக்கங்கள் வெற்றியை கண்டுள்ளது. இந்த எதிரியின் தாக்குதல்களை முறியடித்து முன்னேறுவதற்கு மிகவும் அடிப்படையான சில கடமைகளை நமது இயக்கம் கோடிட்டு காட்டியுள்ளது.

அவை வருமாறு;

  • புரட்சியின் வெற்றிக்கு மக்களை தயார் செய்து கொள்ளும் பணி.
  • புரட்சிகரமான இயக்கத்திற்கு வழிகாட்டும் புரட்சிகரமான தத்துவத்தை (மார்க்சிய – லெனினிய தத்துவத்தை) கட்சி உறுப்பினர்களுக்கும் பரவலான மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது. இவற்றின் அடிப்படையில் அரசியல் கொள்கைகள் வகுப்பது, நடைமுறை தந்திரங்களை உருவாக்குவது போன்ற காரியங்களை செய்வது.
  • மிகப் பிரம்மாண்டமான போர்க்குணமிக்க இயக்கங்கள் பல நாடுகளிலும் தன்னெழுச்சியாக உருவெடுத்திருக்கின்றன. ஆயினும் அவை பல சந்தர்ப்பங்களிலும் தோல்வியடைந்தது மட்டுமின்றி மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்ட அனுபவங்களும் ஏராளம். இத்தகைய புரட்சிகரமான எழுச்சிகளும், இயக்கங்களும் சரியான தலைமையில்லாத காரணத்தினால் தான் தோல்வியடைந்தன என்பதும் வரலாற்று உண்மை. சோசலித்திற்கான போராட்டங்கள் வெற்றிப் பெறுவதற்கு அதற்கு தலைமை தாங்குவதற்கான ஒரு புரட்சிகரமான கட்சி இன்றியமையாதது என்பது வரலாற்றுப் பாடம்.

ஆக, வெகுஜனங்களை திரட்டும் பணி; புரட்சிகரமான தத்துவத்தை கற்பது, கற்றுக் கொடுப்பது அதை நடைமுறை சூழல்களுக்கு ஏற்ற முறையில் நடைமுறைப்படுத்துவது; இவற்றையெல்லாம் செய்யும் தகுதி வாய்ந்த கட்சி ஸ்தாபனத்தை கட்டுவது, வளர்ப்பது; ஆகியவை அனைத்து கடமைகளுக்கும் மூலாதாரமானதாக கம்யூனிஸ்ட் கட்சி பார்க்கிறது. இந்த அணுகுமுறையை மனதில் வைத்துக் கொண்டு கம்யூனிஸ்ட்டுகள் செயல்பட வேண்டும்.

இவையெல்லாம் மகத்தானதோர் நீண்ட பயணத்தின் தேவைகள் தொடர்ச்சியாகவும், விடாமுயற்சியாகவும் இக்கடமைகளை நிறைவேற்றுவதற்கான போராட்டத்தில் ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டுகளும் ஈடுபட வேண்டும். மனதார ஏற்றுக் கொண்டு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இலட்சியப் பணிகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒவ்வொரு தோழரும் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டாக – புரட்சியாளனாக வளர வேண்டும்.



%d bloggers like this: