வரலாற்றில் பல குறியீடுகள் தோன்றுகின்றன. 9/11 – 2001 செப்டம்பர் 11-இல் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையக் கட்டிடம் குண்டு வெடிப்பில் நொறுங்கியது; இப்போது 7/7 ஜூலை மாதம் 7 ஆம் தேதி குண்டு வெடிப்பில் லண்டன் மாநகரம் (4 இடங்களில்) குலுங்கியது. மனிதாபிமானம் கொண்ட எவரும் இந்த பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்திற்கு எல்லைகள் கிடையாது; விளைவுகள் பற்றிய சிந்தனை கிடையாது; நோக்கங்கள் நிறைவேற வேண்டும் என்பதைக் காட்டிலும் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதோடு, அது தன் வேலையை முடித்துக் கொள்கிறது. நொறுங்கிப் போன வாழ்க்கைக்கும், முடக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட உரிமைகளுக்கும், அழிந்து கொண்டிருக்கும் மனித நேயத்திற்கும் நிலைமையினை மாற்ற அமைப்பு ரீதியாக மக்களை திரட்ட வாய்ப்பில்லாத நேரங்களில் பயங்கரவாதம் ஒரு வடிகாலாக அமைந்து விடுகிறது; எச்சரிக்கை மணியாகவும் ஒலிக்கிறது.
7/7 லண்டனில் தாக்குதல் நடத்தியவர்கள் அந்த நாளை கவனமாக தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் ஜி-8 இன் உயர்மட்ட தலைவர்கள் ஜூலை 6 அங்கே கூடினார்கள். உலகம் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்து முடிவு எடுக்க அங்கே அவர்கள் கூடும் பின்னணியில் இந்த சம்பவம் நடந்து முடிந்திருக்கிறது. இப்போது பயங்கரவாதத்தை எப்படி எதிர் நோக்க வேண்டும் என்பதும் ஜி-8இன் வேலைத் திட்டங்களில் ஒன்றாக வந்து விட்டது. ஆனால், உலக மக்களுக்கு கவலையினையும் அச்சத்தி னையும் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை அவர்கள் முன் வைக்கப்பட்டது. ஸ்காட்லாண்டின் எடின்பர்க் நகரின் கிளெனிகன் பகுதியில் அனைத்து பாதுகாப்புகளிடையே நடைபெற்ற ஜி-8இன் கூட்டம் மற்றொரு இயக்கத்தை சந்தித்தது.
450 அரசு சாரா நிறுவனங்கள் ஒருங்கிணைந்து “வறுமை வரலாறாகட்டும்” என்ற போர்க்குரலை எழுப்பி, சுமார் இரண்டு லட்சம் மக்கள் கொண்ட பேரணி நடத்தப்பட்டது. ஆயிரக் கணக்கானோர் கிளெனிகன் நோக்கி நடந்தனர். வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் ஆப்பிரிக்க கண்டத்தின், குறிப்பாக சகாரா பகுதியில் உள்ள நாடுகளின் அவல நிலை விவாதப் பொருளாகியது. அதற்கு முந்தையவாரத்தில் பாப் இசை பாடகர்களான பாப் கெல்டாஃப், போனோ போன்றவர்கள் களமிறங்கினர். ரோம், பாரீஸ், பெர்லின், லண்டன், ஜோகன்ஸ்பர்க், பிலடெல்பியா, டோக்கியோ போன்ற நகரங்களில் லிவ்-8 என்ற இசை விழா நீதிக்காக ஒரு நீண்ட பயணம் என்ற கோஷத்துடன் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கில் மக்கள் திரண்டனர். அறிக்கையாக இல்லை, எச்சரிக்கையாக சில செய்திகள் வெளி வந்தன. அரை குறை நடவடிக்கைகளை நாங்கள் ஏற்க முடியாது. வரலாற்று ரீதியில் ஒரு உடைப்பு வேண்டும். எங்களை ஏமாற்ற வேண்டாம். வெறுப்புற்று பேசும் வேதாந்திகளின் தலைமுறையினை உருவாக்க வேண்டாம். உலகின் கோடிக்கணக்கான வறிய மக்களின் தேவைகளையும் நம்பிக்கைகளையும் புறந்தள்ளி விடாதீர்கள் என்று ஜி-8 நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. ஒவ்வொரு நாளிலும் 50,000 பேரை பலி வாங்கும் கொடிய வறுமை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. கேளாக் காதினராய் இருந்தவர்கள் காதில் அது விழுந்தது. ஜி-8 கவனம் திரும்பியது.
சின்னத் துளியாக வரும் நிவாரணம்
18 ஏழை நாடுகளுக்கு கடன் நிவாரணம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் 14 நாடுகள் ஆப்பிரிக்க கண்டத்தை சார்ந்தவை. 40 பில்லியன் டாலர் கடன் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு. இந்த நாடுகள் அதிக கடன் பட்ட ஏழை நாடுகள் (எச்.ஐ.பி.சி.) என்ற முறையில் இந்த உதவிக்கு தகுதியானர்கள். கடனை மறப்போம்! மன்னிப்போம் என்பதுதான் ஏகாதிபத்தியத்தின் இன்றைய கோஷம் என்கிறார் பேராசிரியர் ஜெயதி கோஷ்.
ஏகாதிபத்தியம் தன்னுடைய கோர முகத்தை மறைத்துக் கொள்ள சில முகமூடிகள் தேவைப்படுகின்றன. இராக் மக்கள் சமூகத்தை காட்டுமிராண்டித்தனமாக பேரழிவுக்கு உட்படுத்தி விட்டு இப்பொழுது ஏழை நாடுகளின் மேல் கருணை வெள்ளம் பாய்ச்சுகிறது. பாய்ச்சுகிறது என்பது கூட சரியில்லை, சின்ன சின்னத் துளிகளாக தெளிக்கிறது. 60 ஏழை நாடுகளின் மொத்த கடன் 520 பில்லியன் டாலர்; கடனுக்காக செலுத்தப்படும் வட்டி ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர். அந்த நாடுகள் மக்களின் கல்விக்கும் சுகாதாரத்திற்கும் செலவிடுவதைக் காட்டிலும் அவர்கள் செலுத்தும் வட்டி அதிகம். கடன் வாங்கி வட்டி கட்டும் விஷச் சுற்றில் அவை மாட்டிக் கொண்டன. பிரிட்டன் பத்திரிக்கை, இசைக் கலைஞர் நோவின் பாடல் வரியில் நின்ற இடத்திலேயே நிற்க ஓடிக் கொண்டிருக்கிறேன் என அந்த நிலையினை விளக்கிச் சொன்னது. துளியாக விழும் 40 பில்லியன் டாலர் அதை மாற்றுமா? சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கி மற்றும் ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி கொடுத்த கடன்களுக்காக அந்த 40 பில்லியன் டாலர் தள்ளுபடி. அது ஒரு ஆண்டில் கொடுக்க வேண்டிய வட்டியினை 1.5 பில்லியன் டாலர் அளவுக்கு குறைக்கும். இது கடலில் கரைத்த பெருங்காயம் தானே! மூன்றாம் உலக நாடுகளின் கடன் 2.4 டிரில்லியன் டாலர் (1 டிரில்லியன் = 1000 பில்லியன், 1 பில்லியன் = 1000 மில்லியன், 1 மில்லியன் = 10 இலட்சம்) எச்.ஐ.பி.சி. வட்டத்திற்கு வரும் 38 நாடுகளின் (மேலே குறிப்பிட்ட 18 நாடுகள் உட்பட) கடனை முழுமையாக ரத்து செய்தால் கூட அது ஆப்பிரிக்க நாடுகளின் மொத்த கடனாக 300 மில்லியன் டாலரில் 18 சதம்தான். ஆப்பிரிக்காவிலிருந்து திருடப்பட்ட உழைப்பு, கொள்ளையடிக்கப்பட்ட வளங்கள் யாவும் ஏகாதிபத்திய வளர்ச்சிக்கு வித்திட்டவை என்பதை வரலாறு அறியும்.
இருள் அடிக்கப்பட்ட கண்டம் – ஆப்பிரிக்கா
சர்வதேச சமூக நிதிக்கான புதிய சகாப்தம் தொடங்கி விட்டதாக பிரச்சாரம் துவங்கியிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடன் நிவாரணம் என்றெல்லாம் எழுதப்படுகிறது. ஆப்பிரிக்காவை பாதுகாக்க என்று சொல்லி எடுக்கப்படும் நடவடிக்கைகள் கடந்த காலத்தில் வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் அடித்த கொள்ளையினை மறைக்க எடுக்கும் முயற்சிகளே. ஆப்பிரிக்காவில் ஒரு உரையாடல் உண்டு.
ஆண் : நீ மிக மோசம். எதற்கும் லாயக்கற்றவள்.
பெண் : நான் நன்றாகத்தான் இருந்தேன், நீ என்னை இப்படி ஆக்குவதற்கு முன்.
ஆப்பிரிக்க நாடுகள் வளமாகத்தான் இருந்தன. காலனி ஆதிக்கம் அக்கண்டத்தினை சுரண்டுவதற்கு முன். ஆப்பிரிக்கா இருண்ட கண்டமல்ல; இருள் அடிக்கப்பட்ட கண்டம். நவீன முதலாளித்துவம் உருவாக ஒரு சுரண்டல் தளமாக மாற்றப்பட்ட கண்டம். 1885ஆம் ஆண்டு பெர்லின் மாநாட்டின் முடிவின்படி ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்காவை பங்கு போட்டுக் கொண்டன. மலிவான உழைப்பு, அபரிமிதமான கச்சாப்பொருள் மற்ற இயற்கை வளங்கள் யாவும் ஐரோப்பாவுக்கும் பின்பு அமெரிக்காவுக்கும் நீண்ட முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படையில் கொடுத்தன. ஆப்பிரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட அடிமை வணிகம், பிற்கால தொழிற்புரட்சிக்கு உத்வேகம் கொடுக்கும் மூலதனப் பகுதியாக அமைந்தது. துண்டு துண்டுகளாக உடைக்கப்பட்ட ஆப்பிரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், பெல்ஜியம், இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின் போன்ற நாடுகளின் காலனிகளாக உருப்பெற்றன. காலனி ஆதிக்கம் கொண்ட நாடுகளிடையே போட்டி உண்டு; சண்டைகள் உண்டு. ஆனால் ஆப்பிரிக்காவை சுரண்டுவதில் ஒற்றுமை உண்டு.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவும் அமெரிக்காவும் சுரண்டும் பணியில் கூட்டணி அமைத்துக் கொண்டன. ஆனால், காலனி நாடுகள் விடுதலை பெற போராடத் துவங்கின. சோவியத் யூனியன் அந்த இயக்கங்களுக்கு மிகப் பெரிய அரணாக இருந்தது. ஆகவே சுரண்டலை நீடிக்க ஐரோப்பாவும் அமெரிக்காவும் புதிய உத்திகளை கையாண்டன. தாராளமாக கடன் கொடுப்பது பிறகு கடன் வலையில் சிக்கவைப்பது, பன்னாட்டு நிறுவனங்கள் அந்த நாடுகளில் உள்ளே நுழைய பாதை போட்டுக் கொடுப்பது இவைகளெல்லாம்தான் அவர்கள் மேற்கொண்ட உத்திகள். நவீன காலனி ஆதிக்கத்தின் துவக்கம் ஆப்பிரிக்காவில் இப்படித்தான் இருந்தது. முரண்டு பிடிக்கும் நாடுகளை அண்டை நாடுகளின் தாக்குதலாலும், உள்நாட்டு ஆதரவு சக்திகளாலும் ஒரு வழிக்கு கொண்டு வர இந்த ஏகாதிபத்திய நாடுகள் தயங்கியதேயில்லை. காங்கோவின் லுமும்பா சி.ஐ.ஏ. சதித்திட்டத்தால் படுகொலைக்கு உள்ளான பிறகு கொடுங்கோலன் மொபுடு இவர்களின் கைப்பாவை மனிதனாக ஆட்சி பொறுப்பேற்றதை உலகம் அறியும். ஆப்பிரிக் நாடுகளில் சர்வாதிகாரத்தை வளர்ப்பதில் ஏகாதிபத்தியம் அதிக கவனம் செலுத்தின. அனால் இன்று அதை நோயுற்ற கண்டம், வறுமையில் உழலும் கண்டம் என்றும், ஊழலின் உறைவிடம் என்றும் மேலை நாட்டு ஆளும் நாகரீக வர்க்கங்கள் வர்ணிக்கின்றன. ஆனால், அவர்கள் செய்தது, செய்து கொண்டிருப்பதெல்லாம் உலக மக்கள் பார்வைக்கு வரத் துவங்கியிருக்கின்றன. 90களில் சோமாலியா பெரும் பஞ்சத்தினை சந்தித்தது. வறட்சி, விளை நிலம் பாலைவனமாதல், உள்நாட்டு யுத்தம் இவைகள்தான் காரணம் என்று சொல்லப்பட்டது. அதற்கு முன்பே உலக வங்கி சர்வதேச நிதி நிறுவனம் தங்களுடைய கட்டுப் பாட்டிற்குள் சோமாலியா பொருளாதாரத்தை கொண்டு வந்து விட்டார்கள். 1970 வரை சோமாலியா ஒரு சுயதேவையினை பூர்த்தி செய்து கொள்ளும் நாடாகத்தான் இருந்தது. சோமாலியா கால் நடை வளர்ப்பில் ஈடுபட்ட நாடோடி இன மக்களையும் (மக்கள் தொகையில் இவர்கள் 50 சதம்) சிறு விவசாயிகளாக இருந்த சில இனக்குழுக்களையும் உள்ளடக்கிய நாடு. பொருள்களை பரிவர்த்தனை செய்து கொள்ளும் முறை இருந்தது. பொருளாதார வளர்ச்சிக்கு ஐ.எம்.எப். கூறிய ஆலோசனைகள் அடிப்படையினையே மாற்றி விட்டன. சோமாலியாவின் நாணய மதிப்பு குறைக்கப்பட்டது; சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; உணவுப் பொருள்கள் ஏராளமாக இறக்குமதி (நிர்ப்பந்தத்தின் காரணமாக) செய்யப்பட்டன; கால் நடை பராமரிப்பில் தனியார் செயல்பாட்டிற்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது. (1983 வரை அந்நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் 80 சதம் கால் நடை ஏற்றுமதியில் வந்தது) இதன் விளைவு? விவசாய உற்பத்திக்கு தேவையான உரம், எரிபொருள் போன்றவைகளின் இறக்குமதி செலவு அதிகரித்தது; மலிவான விலைக்கு கோதுமை, அரிசி உள்ளே வந்தது. (மக்காச் சோளம் பயிரிட்டு உணவாக எடுத்துக் கொள்கிற உணவுப் பழக்கம் கூட மாறிப் போனது)
உள்நாட்டு விவசாயம் சீர்குலைந்தது வெளிநாட்டு உணவு இறக்குமதியை சார்ந்து நிற்கும் நிலை வந்தது; 1970 – 1990 கால கட்டத்தில் 15 மடங்கு – ஆண்டுக்கு 31 சதம் இறக்குமதி அதிகரித்தது.
கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகளுக்கு அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது; அது தனியார்மயமாக்கப்பட்டதே தவிர, வறட்சி காலங்களில் உணவு பராமரிப்பு ஏற்பாடு, தண்ணீர் சேகரிப்பு இல்லாத காரணத்தால் கால்நடை கொஞ்சம், கொஞ்சமாக அழியத் துவங்கியது; அதை வளர்க்கும் நாடோடி இனமே அழிவின் விளிம்புக்கு போனது; அதன் ஏற்றுமதி வணிகம் குறைந்தது. சோமாலியாவிலிருந்து சவூதிக்கு அனுப்பப்படும் மாட்டுக்கறி சந்தையில் மலிவு விலை பொருளோடு ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உள்ளே நுழைந்து, சோமாலியாவை முடக்கிப் போட்டன. கல்வி, சுகாதாரத்திற்கான செலவினங்கள் (சிக்கன நடவடிக்கை) வெட்டப்பட்டன.
1975-89 காலத்தில் சுகாதாரத்திற்கான செலவு 78 சதம் குறைந்தது; 1982இல் ஒரு மாணவன் / மாணவிக்கு 82 டாலர் செலவு செய்யப்பட்டது. 1989இல் அது 4 டாலராக குறைந்தது; 1981-89 காலத்தில் பள்ளி மாணவர் சேர்ப்பே 41 சதம் குறைந்தது. உலக வங்கியின் அறிக்கையின்படி பொதுத்துறை ஊழியர்களின் ஊதியம், 1970லிருந்து 1989க்குள் 90 சதம் குறைந்தது. (அதாவது ஊதியம் சராசரியாக ஒரு மாதத்திற்கு 3 டாலர்) மொத்தத்தில் ஐ.எம்.எப். சீர்திருத்தங்களால், சோமாலியாவில் சமூகக் கட்டமைப்பு சீர்குலைந்தது, நாடோடி இனம்அழிவின் பாதைக்கு செல்லப்பட்டது. அந்நிய செலாவணி நெருக்கடி வந்தது. தேசிய உணவு விவசாயம் பாதிக்கப்பட்டது. உணவு இறக்குமதி அதிகரித்தது. (சகாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள நாடுகளிலும் உணவு இறக்குமதி 3.72 மில்லியன் டன்னிலிருந்து 8.47 மில்லியன் டன்னாக உயர்ந்தது) சோமாலியா பஞ்சம் உணவு இன்றி வரவில்லை, அதிக அளவில் அது கொட்டப்பட்டதால் வந்ததுதான். ஜிம்பாப்வே – ஆப்பிரிக்காவின் ரொட்டிக் கிடங்கு! என்று சொல்லப்பட்டநாடு. ஆனால் 1982இல் ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியில் தலை விரித்தாடிய பஞ்சம் இந்த நாட்டையும் விட்டு வைக்கவில்லை. அதன் மக்காச் சோள உற்பத்தி 90 சதம் குறைந்தது. அமெரிக்காவின் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி திறந்த சந்தையின் வழி உள்ளே நுழைந்ததால் ஆப்பிரிக்கா கண்டத்தை பலமாக அசைத்தது. ஆனால், பணப்பயிரான புகையிலை உற்பத்திக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது. அங்கே பட்டினி கிடந்த மனிதன் கரையானை தின்று வாழ்க்கை நடத்திய காலத்தில் புகையிலை விற்பனை அமோகமாக நடந்தது; அதில் வந்த பணம் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தத்தான் பயன்பட்டது. மலாவி நாட்டிலும் இது நடந்தது. உணவு ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்த மலாவியில் 1992இல் 40 சதம் அதன் மக்காச் சோளம் உற்பத்தி குறைந்தது; 1,50,000 ஏக்கர் நல்ல வளமான நிலங்கள் (1986 – 93) புகையிலை உற்பத்திக்காக மாற்றப்பட்டு அதன் உற்பத்தி இரண்டு மடங்காகப் பெருகியது.
ருவாண்டா என்றவுடன் அங்கு நடந்த இனச் சண்டை நினைவுக்கு வரலாம். அதற்கு முன் அது ஒரு ஆழமான நெருக்கடிக்கு உள்ளானது. அந்நாட்டின் முக்கியமான உற்பத்தி காபி. சர்வதேச காபி ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதற்கென ஏற்றுமதி பொறுப்பு பங்கு இருந்தது. ஆனால் காபி விலை சர்வதேச சந்தையில் வீழ்ந்தது. 1989 இல் அமெரிக்க காபி வியாபாரிகளின் நிர்ப்பந்தத்தால் 50 சதம் விலை வீழ்ச்சி ஏற்பட்டது. ருவாண்டாவின் காபி உற்பத்தியாளர்கள் நொறுங்கிப் போனார்கள். (பருத்தி விலை வீழ்ச்சியில் நமது ஆந்திர மாநில விவசாயிகள் நொறுங்கிப் போனார்களே அதைப்போல) விவசாயிக்கு கொடுப்பதைக் காட்டிலும் 20 மடங்கு விலையில் சந்தையில் விற்பனை செய்தனர். அந்த வியாபாரிகள். ருவாண்டாவின் அன்னிய செலாவணி வருவாயில் 80 சதம் காபி ஏற்றுமதி மூலம்தான் வந்தது. உலக வங்கி ஆலோசனை சொன்னது. நாணய மதிப்பை குறைத்துக் கொள்; ஏற்றுமதி வருமானம் கிடைக்கும். சர்வதேச விலை வீழ்ச்சியில் ஏற்றுமதி வருமானமா?
ருவாண்டாவின் விவசாயிகள் 1992இல் வெறுப்புற்று சுமார் 3 லட்சம் காபி மரங்களை வெட்டிப் போட்டார்கள் என்பதிலிருந்து நெருக்கடியின் தன்மை புரியும். 1992இல் இரண்டாம் முறையாக நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டது. ஐ.எம்.எப். / உலக வங்கி ஆலோசனைகளின்படி வர்த்தகம் தாராளமயமாக்கப்பட்டு மலிவு விலையில் உணவு பொருள்கள் (பெருமளவு மான்யத்தை உட்கொண்ட) ருவாண்டாவின் சந்தைக்குள் நுழைந்தது. அப்புறம் என்ன? மற்ற நாடுகளில் என்ன நடந்ததோ அத்தனையும் நடந்தது. பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் எல்லாம் சீர்குலைந்தது. வேலையின்மை அதிகரித்தது; பஞ்சம் வந்தது. இனச் சண்டையோடு ருவாண்டா நாடே படுகுழிக்குப் போனது. 14 ஆண்டுகள் சுதந்திரச் சந்தையில் மூழ்கிய பிறகு கானா நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2000 ஆண்டில் 5 பில்லியன் டாலர்; இந்த தாராளமயம் இல்லையென்றால், அது 5.85 பில்லியன் டாலராக இருந்திருக்கும் என்று பொருளாதார அறிஞர்கள் கணித்துச் சொன்னார்கள். இப்படி கானா 1986லிருந்து இழந்தது. 10 பில்லியன் டாலர் என்றும் கணக்கிடப்பட்டது. (அதாவது ஒரு தனிநபர் இழப்பு 510 டாலர்). உகான்டாவிலும் இது நடந்தது. இந்த தாராளமயம் இல்லையென்றால், உகாண்டாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2000இல் 6 பில்லியன் டாலர் என்ற கணக்கு 6.735 மில்லியன் டாலராக இருந்திருக்க வேண்டும். 735 மில்லியன் டாலர் உகாண்டாவின் 2000ம் ஆண்டிற்கான கல்வி / சுகாதாரம் ஆகியவற்றிற்கான நிதி (நிதி நிலை அறிக்கையின் படி) தேவையாகவும் இருந்தது. கடன் உதவி வந்தது. அப்படி வந்தது ஒரு நபருக்கு 35 டாலர்; அவர் சுதந்திரச் சந்தையில் இழந்தது 32 டாலர். இதே முறையில் மாலி அதன் மொத்த தேசிய வருமானத்தில் 1991லிருந்து 1.4 பில்லியன் டாலர் இழந்தது.
மான்யம் வழிசீர்குலைவு
“தாராளமயமாக்கல்” என்ற கோட்பாட்டினை வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் ஐ.எம்.எப்., உலகவங்கி உலக வர்த்தக அமைப்புகளை பயன்படுத்தி அந்த நாடுகளின் முதலாளித்துவ பொருளாதாரத்தை தக்க வைத்துக் கொள்ள எடுத்த முயற்சிகளின் விளைவுதான் ஆப்பிரிக்காவை, குறிப்பாக சகாராவுக்கு அருகிலும் தெற்கேயும் உள்ள நாடுகளை இருளில் மூழ்கடித்தன. அந்த நாடுகள் பெரும்பாலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடுகள். அவர்களின் சந்தைக்குள் நுழைய வழித்தடம் அமைத்துக் கொடுக்க கடன் உதவி என்பதெல்லாம் பயன்படுத்துவது ஏகாதிபத்தியத்தின் நடைமுறை. ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும் கோடிக்கணக் கான டாலர் மான்யங்கள் கொடுத்து தங்கள் நாட்டின் உற்பத்தி பொருள்களுக்கு சந்தை தேடும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓ.இ.சி.டி.) 2003ஆம் ஆண்டில் தங்கள் விவசாய பொருள் ஏற்றுமதிக்கு கொடுத்த மான்யம் 350 பில்லியன் டாலர் (ஒரு நாளைக்கு ஒரு பில்லியன் டாலர்) ஆனால், ஆப்பிரிக்க நாடுகள் பெற்ற உதவி 22 பில்லியன் டாலர். ஐரோப்பிய யூனியன் மட்டும் ஒரு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் தங்கள் நாட்டு விவசாயத்திற்கு மான்யம் கொடுக்கிறது. அமெரிக்கா 2002ஆம் ஆண்டு மட்டும் அதன் பருத்தி உற்பத்தியாளர்களுக்கு கொடுத்த மான்யம் 3.7 பில்லியன் டாலர். அந்த பருத்தி ஆப்பிரிக்க பருத்தி சந்தையினை பெனின், பர்கினோ, ஃபாசோ, சட், டோகோ, கென்யா மற்றும் மாலி போன்ற ஆப்பிரிக்க நாடுகளின் பருத்தி வணிகத்தை, முற்றிலும் சீர்குலைத்தது. அவ்வழியில், 2004ஆம் ஆண்டு மட்டும் இந்த நாடுகளுக்கு 400 மில்லியன் டாலர் ஏற்றுமதி நஷ்டம் ஏற்பட்டது. அமெரிக்கா அரிசி உற்பத்தியாளர்களுக்கு 1 டாலர் செலவுக்கு 72 சென்ட் மான்யம் வழங்குகிறது. மொசாம்பிக், எத்தியோப்பியா, மலாவி, ஜாம்பியா நாடுகளின் சர்க்கரை வணிகம் ஐரோப்பிய யூனியன் மான்யத்தால் சீரழிகிறது. லைலே-டேட் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு மட்டும் ஆண்டுக்கு 900 மில்லியன் டாலர் மான்யம் கொடுக்கப்படுகிறது. செனோகவின் தக்காளி உற்பத்தி கூட நசிந்துப் போனது. சகாராவுக்கு தெற்கே உள்ள நாடுகள் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் இழந்தது 272 பில்லியன் டாலர்.
ஜி – 8 நாடுகளின் கருணை வெள்ளம்
இந்தப் பட்டியல் முடிவில்லாது நீளும். ஆனால் நிலைமை வெடித்துக் கிளம்பாமல் இருக்க ஏகாதிபத்தியம் எடுக்கும் நடவடிக்கைதான் ஜி-8 மாநாட்டின் முடிவு. அந்த நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூடி ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதன் பாரா (2)இல், கடன் நிவாரணம் வேண்டும் எனக் கோரும் நாடுகள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- லஞ்சம் / ஊழல் ஒழிக்கப்பட நல்லாட்சி வேண்டும்.
- தனியார் துறை வளர்ச்சிக்கு ஊக்கம் தர வேண்டும்.
- வெளிநாட்டு – உள்நாட்டு தனியார் முதலீட்டுக்கான தடைகள் நீக்கப்பட வேண்டும்.
40 பில்லியன் டாலர் கடன் தள்ளுபடி எதை கருக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.காங்கோவின் மொபுடுவும், இந்தோனேசியாவின் சுகார்த்தோவும், பிலிப்பைன்ஸின் மார்க்கோசும் உகாண்டாவின் முசவேனியும், ருவாண்டாவில் பால் ககாமே இவர்கள் கருத்துப்படி நல்லாட்சி நடத்தியவர்கள். நடத்துபவர்கள். அண்டை நாடான காங்கோவின் மீது படையெடுத்து 40 லட்சம் மக்களை கொன்று, அங்கிருந்த திருடப்பட்ட பொருள்களை செல்போன், கணிணி மற்றும் மின்னனு கருவிகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றவர்கள் தான் ககாமேயும் முசவேனியும். அதற்கு தேவையான பணபலம் படைபலம் கொடுத்தவர்கள்தான் இந்த கொடை வள்ளல்கள். இங்கே ஓநாய்களின் கண்ணீர் ஆடுகளை நனைத்து விடுகிறது.
வெள்ளை கோமான்களின் நிலத்தை எடுத்து சொத்துக்களை பறிமுதல் செய்த ராபர்ட் முகாபே (ஜிம்பாப்வே) இவர்களுக்கு பிடிக்காதவர். லஞ்ச ஒழிப்பு சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபை எடுத்த முடிவினை அங்கீகரிக்காத நாடுகளில் ஜி-8 நாடுகள் அனைத்தும் அடங்கும். பிரிட்டனின் சட்டமே லஞ்சத்தை அனுமதிக்கிறது. அதற்கு சொந்தமான ஜெர்சி தீவினை முதலீட்டு மையமாகக் கொண்டால், பிரிட்டனின் வரிவிலக்கு உண்டு. கம்பெனி சட்டங்களை மீற சட்டரீதியான வழி. (மொரிஷீயஸ் தீவு வழி முதலீட்டார்களுக்கு இந்தியா வரி விலக்கு கொடுத்ததை நினைவில் கொள்க) லண்டன் பங்குச் சந்தையில் ஜெர்சியின் 100 வாடிக்கையாளர்கள் விளையாடுகிறார்கள். 1999இல் ஜெர்மனியின் கோலோன் நகரில் நடந்த ஜி-8 நாடுகளின் கூட்டம் 100 பில்லியன் டாலர் கடனை ரத்து செய்ய உறுதியளித்தது. அதில் கால் பகுதி கூட நிறைவேற்றவில்லை. ஆனால் இந்த 18 நாடுகள் 40 பில்லியன் டாலர் உதவி பெற தனியார்மயம் உட்பட அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏற்கனவே, டான்சானியா அதை ஏற்றுக் கொண்டு பொதுத்துறை ஊழியர்கள் 40,000 பேர் வேலையினைப் பறித்து; ஜாம்பியா தன்பங்குக்கு 60,000 பேரை வீதிக்கு தள்ளியது. டான்சானியாவும் கானாவும் நகரங்களுக்கான குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு கொடுத்து விட்டன. மாலியின் ரயில்வே தற்பொழுது கனடா – பிரான்ஸ் கூட்டு நிறுவனத்தின் கைகளில் விழுந்திருக்கிறது. கையில் வந்தவுடன் அந்த நிறுவனம் 600 பேரை வேலையிலிருந்து நீக்கியது 3இல் 2 பங்கு ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்தது.
ஆகவே, சுரண்டல் மூலதன வெளியேற்றம், பொருளாதாரச் சுருக்கம் – இவைகள் விளையாடும் பொருளாதாரத்தில் மக்களின் அவலம் கடன் தள்ளுபடியால் முடிந்து போகாது. வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு தன்னுடைய 2004ஆம் ஆண்டு அறிக்கையில், ஆப்பிரிக்கா கண்டம் 1970லிருந்து 2002 வரை 540 பில்லியன் டாலர் கடன் பெற்றது; 550 பில்லியன் டாலர் முதலும் வட்டியுமாக திருப்பிக் கொடுத்தது; இருப்பினும் ஆப்பிரிக்காவின் கடன் 300 பில்லியன் டாலராக இருக்கிறது என்று அறிவிக்கிறது. இந்தக் கொடுமையிலிருந்து விடுவித்துக் கொள்ள ஆப்பிரிக்க நாடுகள் முயன்றன. அவைகள் ஒன்றுபட்டு செயல்பட, ஆப்பிரிக்க ஒற்றுமைக்கான அமைப்பு 1963 ஆம் ஆண்டு என்ற தளத்தினை உருவாக்கின. இதில் மொராக்கோ அண்டை நாடான சகராவியிடன் சேர்ந்த இருக்க இயலாது என்று சொல்லி இதில் சேரவில்லை.
53 நாடுகளைக் கொண்ட அமைப்பு ஆப்பிரிக்க மக்களின் குரலை எதிரொலிக்கிறது. கடன் நிவாரணம் என்பது வறுமைக்கு முடிவு கட்டாது, முழுமையான கடன் தள்ளுபடி தான் பயன்தரும் செயல் இன்று இந்த அமைப்பு வலியுறுத்துகிறது. இந்த 53 நாடுகளில் 37 நாடுகள் மிக மிக வறுமையில் உழலும் நாடுகள் வளர்ச்சியின் கடை நிலையில் நிற்கும் நாடுகள். ஆப்பிரிக்க நாடுகளின் கடன் சுமை 300 மில்லியன் டாலருக்கு சுமார் 23 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் வட்டியாக கொடுக்கப்படுகிறது. 15 நாடுகளில் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன; கூலிப்படைகளின் தாக்குதல் தீவிரமாகிறது. இந்தப் படைகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களும் ஏகாதிபத்திய அரசுகளும் ஆசி வழங்குகின்றன. இந்த நிலையினை எதிர்த்து ஆப்பிரிக்க மக்கள் போராடத் தயராகி வருகிறார்கள். ஒரு வெடி மருந்து கிடங்காக ஆப்பிரிக்கா மாறிக் கொண்டிருக்கிறது. ஒரு தீப்பொறி ஏகாதிபத்திய நலன்கள் அத்தனையும் எரித்து விடக் கூடும். ஆகவே அதை நீர்த்துப் போகச் செய்யும் சில சாகசங்கள் ஏகாதிபத்திய சக்திகளுக்கு தேவைப்படுகிறது. அதற்கான ஒரு வடிவம்தான் பிரௌனின் மார்ஷல் திட்டம்.
பிரௌனின் ‘மார்ஷல் திட்டம்’
பிரிட்டனின் நிதியமைச்சர் கார்டன் பிரௌன் தான் ஆப்பிரிக்காவுக்கான மார்வுல் திட்டம் அறிவித்திருப்பதாகக் கூறுகிறார். (1947 இல் 2ஆம் உலகப் போரில் பொருளாதார வீழ்ச்சியினை சந்தித்த ஐரோப்பிய நாடுகளுக்கு உதவிட அமெரிக்க வெளி விவகார செயலாளர் ஜார்ஜ் மார்ஷல் அறிவித்த திட்டம்; 30 மில்லியன் டாலர் (இன்றைய மதிப்பில் சுமார் 210 பில்லியன் டாலர் உதவி அறிவிக்கப்பட்டது.)
முதலாளித்துவ அமைப்பை முதலாளித்துவ அமைப்பாகவே வைத்துக் கொள்ள அமெரிக்க பொருள்களை விற்று அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு வர இருந்த 800 பில்லியன் டாலர் வீழ்ச்சியை தடுக்க அந்த திட்டம் தேவைப்படது ஐ.நா. சபை ஆயிரம் ஆண்டு இலக்குகள் என்று 2000 ஆண்டு அறிவித்தது. அதன்படி 2015ம் ஆண்டிற்குள் உலகில் வறுமை பாதியாக குறைக்கப்பட வேண்டும், குழந்தைகள் மரணம் ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும். கல்வியறிவற்ற நிலை முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற இலக்குகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு முன்பு வளர்ந்த நாடுகள் தங்கள் தேசிய வருமானத்தில் 0.7 சதம் ஏழை நாடுகளின் உதவிக்கு ஒதுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அந்த முடிவினை 7 நாடுகள் தான் நிறைவேற்றின. அவைகளில் ஜி.8 நாடுகளில் ஒன்று கூட இல்லை என்பது ஜி. 8 நாடுகளின் அன்பை வெளிப்படுத்துகிறது. இப்பொழுது பிரௌனின் மார்ஷல் திட்டம், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் உதவி அந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போது கொடுக்கப்படும் 0.33 சதம் (10.8 பில்லியன் டாலர்) 2010க்குள் 0.56 சதம் என உயர்த்தப்படும் என்றும், 2015ல் 0.7 சதத்தை எட்டிப் பிடிக்கும் என்று அறிவிக்கிறது. அது ஆப்பிரிக்க நாடுகளுக்கான ஆண்டு உதவி 25 பில்லியன் டாலரிலிருந்து 2015ல் 75 பில்லியன் டாலராக உயரும் என்றும் அறிவிக்கிறது. அமெரிக்கா, ஜப்பான், கனடா இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்டதாக செய்தியில்லை. அமெரிக்காவின் பங்கு இன்று 0.16 சதம் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்; அது 3.2 பில்லியன் டாலர்தான் (அமெரிக்க ராணுவ தலைமையகத்தின் 4 நாள் செலவு).
2003ல் இஸ்ரேலுக்கு மட்டும் அமெரிக்க உதவி 3.7 பில்லியன் டாலர். இந்த கடன் உதவி இவைகளை வேறு வகையில் ஒப்பிட்டுப்பார்த்தால் வறுமையினை ஒழிக்கும் முதலாளித்துவ நாடுகளின் ஆர்வம் புரியும். 40 பில்லியன் டாலர் கடன் தள்ளுபடியில் பிரிட்டனின் பங்கு (ஒரு ஆண்டுக்கு) 70லிருந்து 96 மில்லியன் டாலர் – இது பிரிட்டன் அரசு ஒரு ஆண்டுக்கு இராக் யுத்தத்திற்கு செலவழிப்பதைக் காட்டிலும் குறைவு; அரச குடும்பத்தினருக்கு செலவழிப்பதைக் காட்டிலும் – 67.1 மில்லியன் டாலர் – சற்று அதிகம்; 2004இல் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் விற்றதில் பிரிட்டனின் வருமானம 1.8 பில்லியன் டாலர். அமெரிக்காவின் பங்கு ஆண்டுக்கு 130லிருந்து 175 மில்லியன் டாலராக இருக்கும். இது பாக்தாத்தின் அமெரிக்க தூதரகத்திற்கு ஒரு ஆண்டு செய்யும் செலவில் மூன்றில் ஒரு பங்கு. 10 வருடத்தில் கொடுக்கும் தள்ளுபடி இராக் தலைநகரில் அது புதிதாக தூதரகம் கட்டும் செலவுக்கு சமம். 2006ம் ஆண்டுக்கான அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட் 441 பில்லியன் டாலர்; ஜி.8 நாடுகள் கொடுக்கும் விவசாயத்துறை மானியம் 350 பில்லியன் டாலர். அமெரிக்க பணக்காரர்களுக்கு புஷ் நிர்வாகம் கொடுக்கும் வரிச்சலுகை மட்டும் ஆண்டுக்கு 200 பில்லியன் டாலர்.
ஆனால், இவர்கள் மனமுவந்து கொடுக்கும் அன்பளிப்பு 40 பில்லியன் டாலர். இந்த 40 பில்லியன் டாலர் சலுகை ஆப்பிரிக்காவின் நிலைமையில் எந்த மாற்றத்தினையும் கொண்டு வரப்போவதில்லை. மௌரிடானியா, மாலி, நைஜர், பர்கிநாஃபானோ ஆகிய நான்கு நாடுகளில் மட்டும் பஞ்சத்தால் வாடும் மக்கள் தொகை 60 லட்சம்; உணவுத் திட்டத்திற்கு தேவை 57 மில்லியன் டாலர். வேண்டுகோள் விடப்பட்ட 16 மில்லியன் டாலரில் 11.5 மில்லியன் டாலர் வந்தது. கொடை கொடுக்க வல்ல நாடுகள் தூங்கிக் கொண்டிருக்கின்றனவா? பசி, பட்டினி, வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது ஆப்பிரிக்கா. அலக்குழுரல் எழுப்பக்கூட அந்த மக்களுக்கு சக்தியில்லை. ஆனால், வறுமையின் குரல் ஒலிக்கத் துவங்கியிருக்கிறது.
1. வறுமை வரலாறாக செய்ய வேண்டியது என்ன?
ஆப்பிரிக்காவிலிருந்து வறுமையினை விரட்டி அடிக்க என்ன செய்ய வேண்டும்? யாரால் எந்த வழிமுறையில் இந்த வறுமை நிலை உண்டானது என்று கவனிக்க வேண்டும். நாம் முன்பே பார்த்தது போல், ஏகாதிபத்திய நாடுகள் தங்களுடைய நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்காகவும், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் லாப வேட்டையினைத் தொடரவும் உள்நாட்டு தாதாக்களின் துணை கொண்டு நடத்தப்பட்ட அப்பட்டமான சுரண்டலின் விளைவுதான் உலகவங்கி, சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் உலக வர்த்தக அமைப்பும் ஏகாதிபத்திய நலனைப் பாதுகாக்க அதனை சுற்றி வரும் கிரகங்கள். இவைகளும் சேர்ந்து அரசியல் பொருளாதார தளங்களில் நடத்திய திருவிளையாடலில் விளைந்ததுதான் ஆப்பிரிக்காவின் இன்றைய வறுமை நிலை. முதலில் அவலச் சுமை நிறைந்த இந்த பாவக்கூட்டு முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும்.
வறுமை வரலாறாகட்டும் என்ற கோஷம் இந்த பின்னணியில் தான் எழுந்தது. வறுமை வரலாறாகட்டும் என்பது அவசர உதவி கோரும் இயக்கமல்ல. நிலைத்து நின்று செயல்படும் ஒரு கொள்கை மாற்றம் தேவை என்பதை சுட்டிக்காட்டும் இயக்கம் அதை உருவாக்க மக்களை அணி திரட்டலுக்கான நடவடிக்கைகள் தான் இது. வறுமையினை ஒழிப்பது என்பது ஒரு அறவழி நடவடிக்கை இல்லை. அது நீதிக்கான செயல்பாடு; அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான செயல்; நல்ல கௌரவமான வாழ்க்கையினை உத்திரவாதம் செய்யும் செயல்முறை நான் உலகத் தலைவர்களை கேட்டுக் கொள்கிறேன். வேறுமுறையில் இதைப் பார்க்க வேண்டாம். தயக்கம் வேண்டாம். உலகம் மிகவும் பசித்து காத்திருக்கிறது. வெறும் வார்த்தைகளுக்கு அல்ல, உறுதியான செயல்பாட்டிற்கு தைரியத்துடனும் தொலை நோக்குப் பார்வையுடன் செயல்படுங்கள் – நெல்சன் மண்டேலாவின் செய்தி இது. இந்த இயக்கம் மூன்று பிரதான கொள்கைகளை முன்வைக்கிறது.
1. உறுதியளிக்கப்பட்ட உதவியினை உடனே அளிக்க வேண்டும்
முன்பே குறிப்பிட்டது போல் வளர்ந்த நாடுகள் தங்கள் தேசிய வருமானத்தில் 0.7 சதம் உதவியாக உடனே அளிக்க வேண்டும். இப்பொழுது எடுக்கும் நடவடிக்கையின் வேகத்தைப் பார்த்தால், 2015ம் ஆண்டுக்கான இலக்கினை அடைய இன்னும் 135 ஆண்டுகள் ஆகும். பணக்கார நாடுகளின் தனி நபர் வருமானம் 1960க்குப் பிறகு 200 சதம் உயர்ந்திருக்கிறது; ஆனால் ஏழை நாடுகளுக்கான உதவி என்பது 1960க்கு முன் எதை கொடுத்தார்களோ அதில் பாதி தான் 60க்குப் பிறகு கொடுத்தார்கள். உதவி என்பது எந்த நிர்ப்பந்தமோ நிபந்தனையோ அற்றதாக இருக்க வேண்டும். தனியார் மயம், வணிகத்தில் தாராளமயம், இயற்கை வளங்களை அந்நிய மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு உள்ளாக்குதல், தங்கு தடையின்றி மூலதனம் ஓட அனுமதித்தல், கல்வி / சுகாதாரம் துறைகளிலிருந்து அரசு விலகல் – ஆகிய நிபந்தனைகளோடு வருகிற உதவி நிராகரிக்கப்பட வேண்டும்.
2. கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்
53 கடன்பட்ட ஏழைநாடுகளின் கடனில் 90 சதம் ரத்து செய்யப்படாமல் இருக்கிறது. கடனுக்கான வட்டி செலுத்துவது என்பது ஒரு நாட்டின் சமூக தேவைகளை புறக்கணிப்பதில் முடிகிறது. இந்த கடன் ரத்து முழுமையாக நிறைவேற்றப்படும் பொழுது தான் வறுமை வரலாறாகட்டும் என்பது வெற்றியடையும். சில புள்ளி விவரங்களில், ஏழை நாடுகள் பெற்றதைக் காட்டிலும் கொடுத்தது அதிகம் எனப் பார்த்தோம். ஆகவே கடன் ரத்து கோரிக்கை அறவழி சிந்தனைக்கு உட்பட்டதல்ல; மனித உரிமை சம்பந்தப்பட்ட விஷயம்.
3. நாடுகளுக்கிடையே (குறிப்பாக ஏழை நாடுகளுடன்) நேர்மையான வணிக உறவுகள் வேண்டும்.
நாடுகள் செல்வம் உருவாக்கும் சக்தியினை பெற்றால் ஒழிய எந்த உதவியும் அதன் பொருளாதார நிலையினை உயர்த்த முடியாது. உலக வணிகம் ஏழை நாடுகளை ஒரு நாளைக்கு 2.5 பில்லியன் டாலர் ஏமாற்றுகிறது, அவைகளிடமிருந்து திருடுகிறது. அவர்கள் பெறும் உதவியினைக் காட்டிலும் இது 14 மடங்கு அதிகம். விடுதலை பெற்ற நாடுகள் முந்தைய காலனி ஆட்சியாளர்களையோ வளர்ந்த நாடுகளையோ சார்ந்திருக்குமாறு பொருளாதார அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. புகழ்பெற்ற ஜெர்மன் நாடக ஆசிரியர் பெட்ரோல்ட் பிரஷ்ட் கூறுவது போல், நாம் சுறா மீன்களாக இருந்தால், நமக்கு கவலை மீன் குஞ்சுகளுக்கு என்ன தார்மீகக் கல்வி கொடுக்க வேண்டுமென்பதை தீர்மானிப்பதுதான் தியாகம் செய்யும் மனப்பான்மை தான் மிகவும் உன்னதமான விரும்பத்தக்க குணம் என்று அவைகளுக்கு போதிக்க வேண்டும். அவைகளின் எதிர் காலத்தை தீர்மானிக்கிற சுறா மீன்கள் அவைகள் மீது நம்பிக்கையும் நல்லெண்ணமும் கொள்ள வேண்டும் மீன் குஞ்சுகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சுறா மீன்களுக்கு கீழ்ப்படிதலை கற்றுக் கொண்டால் தான் அவைகளின் எதிர்காலத்திற்கு உத்திரவாதம் உண்டு. பணக்கார நாடுகள் (சுறா மீன்கள்), ஏழை நாடுகள் (மீன் குஞ்சுகளை) தாங்கள் சொல்வதை செய்யும் நாடுகளாக மாற்ற விரும்புகிறார்கள். அதற்கேற்ப வணிக விதிகளை உருவாக்குகிறார்கள். உலக வணிக அமைப்பு அதற்கு துணை போகிறது. ஆகவே இந்த இயக்கம் கேட்கிறது. நியாயமான நேர்மையான சமதளத்தில் நின்று செயல்படும் வகையில் வணிக விதிகளை மாற்ற வேண்டும்; உருவாக்க வேண்டும்.
விழிப்பு தேவை
இந்த மூன்று நோக்கங்கள் நிறைவேற்றப்படுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. இந்த இயக்கத்திற்குள்ளே யார் யார் நுழைகிறார்கள் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் தனியார்மயத்தை ஊக்குவிக்க முயற்சி மேற்கொள்ளும் பிரிட்டனின் சர்வதேச வளர்ச்சித்துறையின் செயலாளர் ஹிலாரி பென் இதில் சேருவேன் என்கிறார். ஜார்ஜ் மான்பியாட் என்ற கட்டுரையாளர் எச்சரிக்கிறார். அவர்கள் நமது அடையாளங்களை அணியலாம்; நமது மொழியினை பேசலாம்; நமது நோக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம்; நமது போராட்டங்களில், புதிய தடைகளை அல்ல, நமது ஒப்புதலை உருவாக்கும் புதிய வாய்ப்புகளை பார்க்கலாம். அதிகாரத்தில் இருப்போரோடு மோதல் ஏதுமின்றி நீதியினை பெற முடியும் என்ற கருத்து இங்கே முன் வைக்கப்படுகிறது. இந்த புதிய நண்பர்கள் குறித்து வறுமை வரலாறாகட்டும் இயக்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலகம் முழுமையும் இந்த இயக்கம் வியாபித்து பரவக் கூடும். அது இன்றைய காலத்தின் தேவையும் கூட. ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிக்கு இது வலுவூட்டும். ஏழை மக்கள் தங்களை கட்டிப் போட்டிருக்கும் தளைகளை உடைத்துக் கொண்டு எழ வேண்டிய நேரம் வந்து கொண்டிருக்கிறது.
கடன் ரத்து என்பது இந்த நிலையில் வெறும் கண்துடைப்பு. ஏகாதிபத்திய உலகமய மாக்களில் நிதி மூலதனத்தின் வேட்டைக்காடாக உலகத்தையே மாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. ஊக வணிகத்தில் புகுந்து லாபத்தை அள்ளிச் செல்ல பிரதான பணியினை அது செய்து கொண்டு வருகிறது. அரசு கட்டிலில் வீற்றிருப்போர் ஆதரவுடன். அதுவே உள்ளே வந்து தொழில்துறை வளர்ச்சிக்கு வித்திட்டு, வேலை வாய்ப்பினை உருவாக்கி புதிய தொழில்நுட்பங்களை கொடுத்து நாட்டின் பொருளாதார வளரச்சிக்கு துணை புரிந்தால் நாடுகள் ஏற்றுக் கொள்ளக்கூடும். அப்படிப் பயன்படுத்தும் அரசியல் சாதூரியம் அந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு இருக்குமேயானால் அல்லது அதை வளர்த்துக் கொள்வார்களேயானால், வறுமைக் குழியிலிருந்தும் அவைகள் மீறி வழியுண்டு. சாத்தானை மக்களுக்காக வேலை வாங்கும் முயற்சி இது. ஆபத்தான முயற்சியும் கூட. ஆனால் ஆப்பிரிக்க மக்களின் அனுபவங்கள் அவர்களுக்கு கை கொடுக்கும். அதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள். ஜிம்பாப்வே சொல்லாடல் ஒன்று உண்டு.
வேட்டை பற்றிய கதைகள் சிலரின் வீரத்தையும், கீர்த்தியினையும் சொல்லும், வேட்டையாடப்பட்ட மிருகங்கள் தங்கள் வரலாறை எழுதாதவரை அந்த வரலாறு எழுதப்படுகிறது. அதுவே வறுமையினை வரலாறாக மாற்றும்.
ஆதார நூல்கள் – குறிப்புகள்
- The Globalization of Poverty, Michel Chossudovsky.
- Give and take, David Sogge.
- The Enemy, Felix Greene.
- “People’s Democracy, July 17, 2005.
- Website Notes.