இந்தியாவில் பேடண்ட் சட்டம் முக்கிய வெற்றியும் தொடரும் போராட்டமும்


ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்பு, சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான சட்டங்களில் ஒன்று இயற்றப்பட்டது. அதுதான் 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய பேடண்ட் சட்டம். அதன்படி ஏற்கனவே அமலில் இருந்த, பன்னாட்டு கம்பெனிகளுக்கு சாதகமான, 1911 இல் காலனி ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட பேடண்ட் சட்டம் முற்றிலும் மாற்றப்பட்டது. 1970 ஆம் ஆண்டு சட்டம் உணவு, ரசாயனப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றிற்கு செயல்முறை பேடண்ட் மட்டுமே உண்டு என்று விதித்தது. அதுவும் 5 ஆண்டு அல்லது 7 ஆண்டுக்குக் கூடுதலாக இருக்காது. இந்த மிக முக்கிய மாற்றம், இந்தியாவில் மருந்துகள் உற்பத்தி வேகமான முன்னேறவும், நவீனமயமாகவும் உதவியது. 1970க்கு முன்பு இருந்த அநியாய மருந்து விலைகள் வீழ்த்தப்பட்டு, பிராண்டு கம்பெனிகளின் மாத்திரைகளுக்குச் சமமான மலிவு மருந்துக்களை இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களான ஐ.டி.பி.எல்., ஹிந்துஸ்தான் ஆண்டி பயாடிக்ஸ் போன்றவை, பெருமளவிற்கு உற்பத்தி செய்து சந்தையில் இறக்கினர். பிற வளரும் நாடுகளை உலகிலேயே இந்தியாவில் நவீன மருந்துகள் மலிவு என்ற நிலை 1970 பேடன்ட் சட்டத்தாலும், இந்திய மருந்துக் கொள்கையாலும் ஏற்பட்டது. உலகிலேயே நான்காவது பெரிய மருந்து உற்பத்தி செய்யும் நாடாகவும், ஏழை வளரும் நாடுகளுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்கும் நாடாகவும் இந்தியா ஆனது.

ஆனால், 1995 இல் உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization (WTO)) நிறுவப்பட்ட பொழுது, அதன் பகுதியாக வந்த டிரிப்ஸ் ஒப்பந்தம் (வர்த்தகம் தொடர்பான அறிவுச் சொத்துரிமை) நிலைமையை மோசமாக்கியது. டிரிப்ஸ் செயல்முறைகளுக்கு மட்டுமின்றி பொருட்களுக்கே பேடண்ட் உரிமம் வழங்கப்பட வேண்டும் என்று விதித்தது. இதன்படி அனைத்து உட்டோ உறுப்பு நாடுகளின் சட்டங்களும் மாற்றப்பட வேண்டும் என்றும், இந்தியா போன்ற பொருட்களுக்குக் காப்புரிமை வழங்காத வளரும் நாடுகள் 2005 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் இந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்றும் பணிக்கப்பட்டது.

பொருட்களுக்கு காப்புரிமை தரும் வகையில் சட்டம் இயற்ற 2005 ஜனவரி 1 வரை காலக்கெடு அளிக்கப்பட்ட போதிலும், 1995-லிருந்தே (அதாவது, டிரிப்ஸ் ஒப்பந்தம் அமலுக்கு வந்த தேதியிலிருந்தே கம்பெனிகள் பொருட்களுக்கான காப்புரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும், அந்த விண்ணப்பங்கள் 2005 ஜனவரியிலிருந்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாலும், விண்ணப்பித்த நாளிலிருந்தே கம்பெனிகளுக்குப் புதிய பொருட்களை விற்பனை செய்ய பிரத்யேக உரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் டிரிப்ஸ் ஒப்பந்தம் விதித்தது.

மேற்கூறிய டிரிப்ஸ் ஒப்பந்த ஷரத்துக்களுக்கிணங்கும் வகையில் 1970 இந்திய பேடண்ட் சட்டத்தை இந்திய அரசுகள் திருத்த முனைந்தள்ளன. இதன்படி பா.ஜ.க. தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கம் 1999லும் 2002லும் இரண்டு முறை 1970 ஆம் ஆண்டு சட்டத்தைத் திருத்தியது. 2003 டிசம்பர் இறுதியில் மூன்றாவது திருத்தத்திற்கான மசோதாவைக் கொண்டு வந்தது. மே 2004 பா.ஜ.க. தோற்ற பின்பு ஆட்சிக்கு வந்த யூ.பி.ஏ. அரசு, இந்த மோசமான மசோதாவை ஓரிரு மிகச் சிறிய மாற்றங்களுடன் பேடண்ட் அவசர சட்டம் 2004 என்ற பெயரில் டிசம்பர் 26, 2004 இல் பிறப்பித்தது.

இந்த இரண்டு சட்ட திருத்தங்கள் மற்றும் மூன்றாவதாகக் கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் ஆகிய அனைத்துமே மக்கள் நலனைப் புறக்கணிப்பதாக மட்டுமல்ல; டிரிப்ஸ் ஒப்பந்தத்தில் நமது நாட்டு நலன்களை ஓரளவிற்காவது பாதுகாத்துக் கொள்ள வகை செய்யக் கூடிய ஒரு சில வாய்ப்புகளையும் பயன்படுத்தவில்லை.

இத்தகைய பின்னணியில் தான் இடதுசாரி கட்சிகளும் அவர்கள் தலைமையிலான வெகுஜன அமைப்புகளும் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்தை எதிர்க்கும் பல இயக்கங்களும் யூ.பி.ஏ. அரசாங்கத்தின் பேடண்ட் திருத்த அவசர சட்டத்தை எதிர்த்தனர். 1999, 2002 பேடண்ட் திருத்த சட்டங்களின் ஊனங்களையும், 2003 அவசர சட்டத்ததின் ஊனங்களையும் களைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

2005 பேடண்ட் திருத்த சட்டமும் இடதுசாரி கட்சிகள் நிலைபாடும்

டிசம்பர் 2004 இல் யூ.பி.ஏ. அரசாங்கம் பிறப்பித்த பேடண்ட் திருத்த அவசர சட்டம் எற்கனவே 2003 டிசம்பரில் என்.டி.ஏ. அரசாங்கம் கொண்டு வந்த மோசமான மசோதாவின் நகலாகவே இருந்தது. இதனை எதிர்த்து இடதுசாரிகள் தலைமையில் நடைபெற்ற விரிவான போராட்டங்களின் விளைவாகக் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்தது. என்ன வகையான திருத்தங்கள் தேவை என்பது குறித்து இடதுசாரி கட்சிகள் யூ.பி.ஏ. அரசாங்கத்திற்கு விரிவான குறிப்பு ஒன்றைக் கொடுத்தன. அந்தக் குறிப்பு 1970 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட முற்போக்கான பேடண்ட் சட்டத்தின் பின்னணியையும் நன்விளைவுகளையும் சுட்டிக் காட்டியது. 1995க்குப் பின் டிரிப்ஸ் ஒப்பந்தம் அமலுக்கு வந்த பின்பு பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பல அனுபவங்களையும் கோடிட்டுக் காட்டியது. குறிப்பாக, பன்னாட்டுக் கம்பெனிகள் டிரிப்ஸ் ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி எய்ட்ஸ் நோயை எதிர்க்கும், உயிர் காக்கும் மருந்துகளை அநியாயமான விலையில் விற்று வந்தது. அவர்களுக்கு எதிரான உணர்வுகளை உலகெங்கும் ஏற்படுத்தியது என்பதையும், இந்தியாவில் 1970ஆம் ஆண்டு சட்டம் அமலில் இருந்ததால் சிப்ளா போன்ற இந்திய கம்பெனிகள் அதே மருந்துகளை மிக மிகக் குறைவான விலையில் விற்று ஏழை நாடுகளுக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் உதவ முடிந்தது என்பதையும் அக்குறிப்பு சுட்டிக் காட்டியது. (செப்டம்பர் 2000இல் சிப்ளா கம்பெனி ஒரு ஆண்டிற்கான அளவு எய்ட்ஸ் எதிர்ப்பு மருந்துக்களை 350 அமெரிக்க டாலர்களுக்கு விற்க முன் வந்ததனால்தான் 10,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான விலை வைத்து விற்று வந்த பன்னாட்டுக் கம்பெனி ஜனவரி 2001இல் விலையை 931 டாலராகவும் மார்ச் 2001இல் 727 டாலராகவும் குறைக்க வேண்டியதாயிற்று. ஏப்ரல் 2003 நிலவரப்படி ஹெடெரோ என்ற இந்திய கம்பெனி இந்த மருந்தை 201 டாலர் என்ற குறைந்த விலையில் விற்றது. இதிலிருந்தே டிரிப்ஸ் ஒப்பந்தம் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் பகற்கொள்ளை நடவடிக்கைகளுக்கு எவ்வளவு ஆதரவாக உள்ளது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.)

இடதுசாரி கட்சிகள் மத்திய அரசுக்கு அளித்த பேடண்ட் சட்ட திருத்தம் 2004 பற்றிய குறிப்பு தேச நலனையும் மக்கள் நலனையும் காக்க 1999 மற்றும் 2002 பேடன்ட் திருத்த சட்டங்கள் தவறியுள்ளதைச் சுட்டிக்காட்டியது. டிரிப்ஸ் ஒப்பந்தம் மோசமானது என்றாலும், அதற்குள்ளே கூட நாட்டு நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள சில வாய்ப்புகள் உள்ளதையும், இதைக்கூட 1999, 2002 சட்டங்களும், 2003 என்.டி.ஏ. மசோதாவும், 2004 யூ.பி.ஏ. அவசர சட்டமும் பயன்படுத்தவில்லை என்பதை மார்க்சிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரி கட்சிகளும் சுட்டிக்காட்டியதைக் குறிப்பு நினைவு படுத்தியது. யூ.பி.ஏ. அரசு என்.டி.ஏ. அரசு கொண்டு வந்த அதே மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வருவது தவறானது என்றும், ஒரு விரிவான, அறிவார்ந்த விவாதம் நடத்தாமல் மசோதாவை அவசரப்பட்டு நிறைவேற்றுவது நாட்டு நலன்களுக்கு விரோதமானது என்றும் இடதுசாரி கட்சிகளின் குறிப்பு சுட்டிக்காட்டியது.

விமர்சனத்துடன் மட்டும் நிற்காமல், இடதுசாரி கட்சிகள் தங்கள் குறிப்பில் தெளிவான மாற்றுப் பரிந்துரைகளை முன் வைத்தன. எத்தகைய பொருட்கள் / கண்டு பிடிப்புகள் பேடண்ட் பெற தகுதி வாய்ந்தவை, எவை தகுதியற்றவை, கட்டாய உரிமம் வழங்குதல், கட்டாய உரிமம் பெற்று செய்யப்படும் உற்பத்தியை ஏற்றுமதி செய்தல், 1995 முதல் 2005 வரை செய்யப்பட்ட இடைக்கால ஏற்பாடுகளின் பின் விளைவுகளை எவ்வாறு கையாளுதல், ஒரு நிறுவனம் அல்லது நபரின் பேடண்ட் உரிமத்தைப் பயன்படுத்தும் பிறர் என்ன ஈவுக் கட்டணம் செலுத்த வேண்டும், பேடண்ட் விண்ணப்ப பரிசீலனையில் பேடண்ட் வழங்கும் முன் ஆட்சேபனைகள் வைக்க உரிமைகள் என்ற பல அம்சங்கள் குறித்து, அரசு கொண்டு வரவிருந்த மசோதாவிற்கு தெளிவான மக்கள் நலன் காக்கும் நாட்டின் சுயசார்ப்பு காக்கும் மாற்று ஆலோசனைகளை இடதுசாரி கட்சிகள் முன் வைத்தன.

ஒரு முக்கிய வெற்றி

பா.ஜ.க. கொண்டு வந்த மசோதாவை தானே நாம் கொண்டு வருகிறோம், இடதுசாரிகள் ஆதரவு இல்லாமலேயே  நாம் மசோதாவை நிறைவேற்றி விடலாம் என்று காங்கிரஸ் கட்சியும் யூ.பி.ஏ. அரசும் ஒரு வேளை நினைத்தனரா என்று நமக்குத் தெரியாது. ஆனால், உண்மை என்னவென்றால், இடதுசாரி கட்சிகளுடன் பேசக்கூட முதலில் மத்திய அரசு தயாராக இல்லை. கோவா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் யூ.பி.ஏ.க்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவு மத்திய அரசை பின்னுக்குத் தள்ளியது. பா.ஜ.க. பேடண்ட் சட்டத் திருத்தத்தை எதிர்ப்பதாக பாசாங்கு செய்தது. இந்த நிலையில்தான், பேடண்ட் சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டால், அரசுக்கு மிகுந்த சங்கடம் ஏற்படும் என்று கருதி அரசு தனது நிலையை தலை கீழாக மாற்றிக் கொண்டது. விருப்பமின்றி, ஆனால் வேறு வழியின்றி, இடதுசாரி கட்சிகளுடன் பேடண்ட் சட்ட திருத்தங்கள் பற்றிப் பேச மத்திய அரசு முன் வந்தது.

இப்பேச்சு வார்த்தைகளின் விளைவாக, பாராளுமன்றத்தில் அரசே இடதுசாரி கட்சிகளின் ஆலோசனைகளில் பெரும்பாலான வற்றை ஏற்கும் வகையில் 15 திருத்தங்களைக் கொண்டு வந்தது. இடதுசாரிகள் எழுப்பியிருந்த முக்கிய அம்சங்கள் இவற்றில் இடம் பெற்றன. இவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1.பேடண்ட் உரிமைப் பெற தகுதி வரம்புகள்

டிரிப்ஸ் ஒப்பந்தம் பொருளுக்குப் பேடண்ட் வழங்க வேண்டும் என்கிறது. அப்படி பேடண்ட் பெறுவதற்குத் தகுதிகளாக 3 பண்புகள் நிபந்தனைகளாக உள்ளன. புதிய தன்மை ஒரு புதிய கண்டுபிடிப்பு நடவடிக்கை தொழில் உற்பத்தியில் பயன்பாடு இந்தப் பண்புகள் டிரிப்ஸ் ஒப்பந்தத்தத்தில் எங்குமே வரையறை செய்யப்படவில்லை. ஆகவே இவற்றை பன்னாட்டு கம்பெனிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தெரிந்த விஷயங்களையோ அல்லது உற்பத்தி ரீதியாக முக்கியத்துவமில்லாத மிகச் சிறிய மாற்றங்கள் மட்டுமே பொருளையோ, பேடண்ட் பெறத் தகுதி வாய்ந்ததாக காட்டி ஏகபோகச் சுரண்டலை வலுப்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக, மருந்துகள் தொடர்பான வேதியல் மூலக்கூறுகளுக்கு இது பொருந்தும். ஒரு புதிய மூலக்கூறுக்கு உரிமம் பெற்று 20 ஆண்டுகள் ஏகபோகம் அனுபவிப்பது மட்டுமின்றி, அதிலேயே கவைக்குதவாத சிறிய மாற்றத்தைச் செய்து விட்டு இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஏகபோகத்தைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதற்கு ஒரு பேடண்ட் உரிமைத்தை என்றும் பசுமையாக வைத்திருப்பது என்று பெயர். இதனால் பிறர் இம்மருந்தை உற்பத்தி செய்ய முடியாமல் போகும். விலை உச்சாணிக் கொம்பிலேயே இருக்கும். கீழே வராது. இது வெறும் கற்பனையல்ல; நோவார்டிஸ் என்ற பன்னாட்டு பகாசூர மருந்துக் கம்பெனி கிளிவக் என்ற பெயர் கொண்ட புற்று நோய் எதிர்ப்பு மருந்துக்கு (இதன் ரசாயனப் பெயர் இமாடினிப் மெசைலேட்  1993ல் அமெரிக்காவில் உரிமம் பெற்றது. இந்த உரிமம் 2013இல் காலாவதியாகி விடும். 2005 மார்ச் வரை இந்தியாவில் பொருள் உரிமம் கிடையாது என்பதால், பல இந்திய மருந்துக் கம்பெனிகள் (நாட்கோ, ரான்பாக்ஸி, ஸன்ஃபார்மா? எம்கியூர், இன்டால், ஹெடெரோ) கிளிவக் மருந்தின் அதே மூலக்கூறு கொண்ட மருந்தை மிகக் குறைவான செலவில் உற்பத்தி செய்து மலிவாக விற்று வருகின்றனர். நோவார்டில் கம்பெனி விற்கும் கிளிவக் விலை மாதம் ரூ. 120,000 செலவு ஏற்படுத்தும். ஆனால் இந்திய கம்பெனிகள் மருந்து வாங்கினால் மாதச் செலவு ரூ. 9000/- முதல் ரூ. 12,000/-க்குள்தான். இப்பொழுது நோவார்டில் கம்பெனி கிளிவக் மருந்தின் மூலக்கூறைப் படிக வடிவில் செய்து 2003இல் ஆஸ்திரேலியாவில் பேடண்ட் பெற்று அதற்கு பிரத்யேக விற்பனை உரிமையை இந்தியாவில் பெற்றுள்ளது. இந்திய கம்பெனிகள் இம்மருந்தை விற்பனை செய்வதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நோவார்டில் தடை உத்தரவு பெற்றுள்ளது. ஆக, எந்த உண்மையான புதுமையையும் திறன் மிக்க விளைவும் இல்லாமலேயே பேடண்ட் பெறும் அபாயம் உள்ளது. இந்த அபாயத்தை அரசு கொண்டு வந்த அவசர சட்டம் தடுக்கவில்லை.

ஆனால், இடதுசாரி கட்சிகளின் தலையீட்டால், பேடன்ட் தகுதி வரம்புகள் கடுமையாக்கப்பட்டு, மேற்கண்ட அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட சட்டம் புதிய நடவடிக்கை என்பதை குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றம் அல்லது பொருளாதார முக்கியத்துவம் அல்லது இரண்டும் கொண்டது என்று வரையறுத்துள்ளது. வேறு பல ஷரத்துக்கள், விளக்கங்கள் மூலமும் பேடண்ட் தகுதி கடினமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல மாற்றம்.

2. மென் பொருள் பேடன்ட் மறுப்பு

ஏற்கனவே கொண்டு வரப்பட்ட அரசு நகல் மசோதாவில் மென் பொருளுக்கு பேடண்ட் வழங்கப்படும் அபாயம் இருந்தது. இப்பொழுது இடதுசாரி கட்சிகள் வாதம் ஏற்கப்பட்டு, மென் பொருளுக்கு பேடண்ட் கிடையாது என்பது தெளிவாக்கப் பட்டுள்ளது.

3. உரிமம் வழங்கும் முன் ஆட்சேபிக்க வாய்ப்புகள்

1970 சட்டத்தில் விண்ணப்பதாரர் கோரும் உரிமம் வழங்கும் முன்பு ஆட்சேபனைகள் தெரிவிக்க பல அங்கீகரிக்கப்பட்ட காரணங்கள் குறிப்பிட்டிருந்தன. மிகக் கவனமான ஆய்வுக்குப் பிறகே அனைத்து ஆட்சேபனைகளையும் பரிசீலித்த பின்பே – உரிமம் வழங்கும் ஏற்பாடு இருந்தது. ஆனால் அரசு கொண்டு வந்த நகல் இரண்டே, இரண்டு காரணங்கள் மட்டுமே ஆட்சேபனைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. எளிதில் பன்னாட்டுக் கம்பெனிகள் உரிமம் பெற்றுவிட வழி செய்யப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு வழக்கு தொடர்ந்து ஏகப்பட்ட செலவு செய்து தான் உரிமத்தை எதிர்க்க வேண்டும் என்ற நிலைமை இந்திய கம்பெனிகளுக்கும் நுகர்வோருக்கும் எதிரான, பன்னாட்டு ஏகபோகங்களுக்கும் சாதகமான ஏற்பாடாகும். இது இடதுசாரிகள் தலையீட்டால் நிராகரிக்கப்பட்டு, 1970 சட்டத்தில் இருந்த சாதகமான அம்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், உரிமை விண்ணப்பத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 3 மாதத்திலிருந்து 6 மாதமாக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பு மனு தாக்கல் செய்பவருக்கு பேடன்ட் ஆணையரை நேரில் சந்தித்து விளக்கமளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4. கட்டாய உரிமம் அளித்தல்

பொதுவாக பேடண்டுகள் வழங்கப்படுவது தொழில்நுட்ப வளர்ச்சியில் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்காகத்தான். அதே சமயம், அவ்வாறு உரிமம் பெறுபவர், தனது பேடண்டைப் பயன்படுத்த பிறருக்கும் லைசன்ஸ் வழங்க வேண்டும் என்றும் அதற்கென ஒரு தொடர் வெகுமதியை அவர் பேசிப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதைத்தான் கட்டாய உரிமம் வழங்குதல் என்று கூறுகிறோம்.

கட்டாயம் உரிமம் வழங்குதல் என்பது போட்டியை ஊக்குவித்து, உரிமம் பெற்ற பொருளின் விலை உயராமல் தடுக்க மிகவும் அவசியமாகிறது. வளர்ந்த நாடுகளில் இத்தகைய சட்டம் உள்ளது. டிரிப்ஸ் ஒப்பந்தமும் கட்டாய உரிமம் வழங்குவதை அனுமதிக்கிறது. இன்று வளரும் நாடுகள் கட்டாய உரிமம் வழங்குவதை எதிர்க்கும் அமெரிக்கா, தனது நாட்டில் ஏகபோக வர்த்தக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த நூற்றுக்கும் மேற்பட்ட கட்டாய உரிமங்களை வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல்தான் பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளும் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்துள்ளன.

டிரிப்ஸ் ஒப்பந்தத்தின் 31வது ஷரத்து கட்டாய உரிமம் பற்றியது. அதில் எந்த நிபந்தனையும் இல்லை. தோஹாவில் நடைபெற்ற உட்டோ அமைச்சர்கள் கூட்ட அறிக்கையில் ஒவ்வொரு உட்டோ உறுப்பினர் நாட்டுக்கும், கட்டாய உரிமம் வழங்கவும் அதற்கான விதி முறைகளை உருவாக்கிக் கொள்ளவும் முழு சுதந்திரம் உண்டு. என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு முன் வைத்த நகல் சட்டத்தில் கட்டாய உரிமம் வழங்குவதற்கான செயல் முறை மிகவும் சிக்கலானதாகவும் தேவையற்ற கால தாமதத்தை ஏற்படுத்துவதாகவும் மொத்தத்தில் பொருள் உரிமம் பெறுவதில் முன்னிலை வகிக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் சாதகமாகும் இச்சரத்து.

இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட திருத்தத்தில் இடதுசாரி கட்சிகளின் சரியான தலையீட்டால், அது சரி செய்யப்பட்டுள்ளது. பொருள் உரிமம் பெற்ற கம்பெனி போட்டியாளர்களுக்கு நியாயமான ராயல்டி அடிப்படையில் லைசன்ஸ் வழங்க மறுத்தால், ஆறு மாதங்களுக்குள் பேடண்ட் ஆணையர் விண்ணப்பதாரருக்கு கட்டாய உரிமம் வழங்குவதற்கான செயல்முறை கூட எளிதாக்கி, சீர்படுத்த இடதுசாரிகள் அளித்த ஆலோசனைகள் அரசால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இருப்பினும் ஒரு சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

5. இடைக்கால அஞ்சல் பெட்டி ஏற்பாட்டின் பின் விளைவுகளும் மருத்துவ விலைகளும்.

டிரிப்ஸ் ஒப்பந்தம் 1995இல் அமுலுக்கு வந்தது. இந்தியாவிற்கு, தனது சட்டங்களைத் திருத்தி முழுமையான பொருள் உரிமம் அளிக்கும் ஏற்பாட்டைக் கொண்டு வர 2005 ஜனவரி 1 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் இடைப்பட்ட இந்த பத்து ஆண்டுகளில் பொருள் உரிமம் கோரும் விண்ணப்பங்களை (இவற்றைக் கோருபவர்கள் பெரும்பாலும் பகாசூர பன்னாட்டுக் கம்பெனிகள் தான்) பெற்றுக் கொள்ள இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். (இதுதான் அஞ்சல் பெட்டி என்றழைக்கப்படுகிறது) என்பதும் உரிம விண்ணப்பம் அஞ்சல் பெட்டியில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து அதன் மீது பரிசீலனை செய்து முடிவு எடுக்கும் நாள் வரை விண்ணப்பதாரருக்கு அவர் உரிமம் கோரும் பொருளை விற்பனை செய்திட பிரத்யேக உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதும் டிரிப்ஸ் நிபந்தனைகள்.

மத்திய அரசு 2004 டிசம்பர் 26-இல் கொண்டு வந்த அவசர சட்ட திருத்தத்தில் இது தொடர்பாக ஒரு மிகப் பெரிய பிரச்சினை இருந்தது. அது என்னவென்றால், ஏற்கெனவே இந்தியக் கம்பெனிகள் (பழைய 1970ஆம் ஆண்டு சட்ட அடிப்படையில்) செயல் உரிமம் பெற்று உற்பத்தி செய்து வரும் பல பொருட்களுக்கு பொருள் உரிம விண்ணப்பம் அஞ்சல் பெட்டியில் தாக்கலாகியுள்ள நிலையில், 2005 ஜனவரியிலிருந்து இவற்றிற்கு உரிமம் வழங்கப்பட்டால், இந்திய கம்பெனிகள் உற்பத்தியை நிறுத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு அவசர சட்டத் திருத்தத்தில் சரியான விடை இல்லை. இப்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட இந்திய கம்பெனிகள் பொருள் உரிமம் புதிதாகப் பெற்றுள்ள மருந்துகளை /ரசாயனப் பொருட்களை  தொடர்ந்து விற்கலாம் என்றும் அவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் செல்லாது என்றும், அவர்கள் பொருள் உரிமம் பெற்றுள்ள கம்பெனிக்கு ஒரு தொடர் வெகுமதித் தொகை அளித்தால் போதும் என்றும் தெளிவு படுத்துகிறது. மருந்து விலைகள் உயர்வை இது ஓரளவு கட்டுப்படுத்தும்.

6. மருந்து உற்பத்தித் தொழில்நுட்பம் இல்லாத நாடுகளுக்கு ஏற்றுமதி

2004 அவசர சட்டம் கட்டாய உரிமம் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள் உரிமம் பெற்ற மருந்துகளை, அத்தகைய தொழில்நுட்பம் இல்லாத நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்று கூறியிருந்தது. ஆனால், அவ்வாறு இறக்குமதி செய்யும் நாடு இதற்குரிய கட்டாய உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டிருந்தது. இது பல ஏழை நாடுகளுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்ற விமர்சனம் வந்தது. தற்சமயம் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட திருத்தத்தில் இந்த நிபந்தனை விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.

7. பொருள் உரிமம் பெற்ற மருந்துகள் ஏற்றுமதி பற்றி

பிரதானமாக உள்நாட்டு சந்தையில் விற்பதற்கு என்று இந்தியாவில் கட்டாய உரிமம் பெற்று உற்பத்தி செய்யப்படும் (பொருள் உரிமம் பெற்ற) மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தப் பேடண்ட் சட்டம் வகை செய்யுமாறு என்ற கேள்வி உலகில் பரவலாக எழுந்தது. இதற்குக் காரணம் ஏழை நாடுகளுக்கு மலிவு விலையில் மருந்துகள் பெரும்பாலும் இந்தியாவில் இருந்துதான் கிடைத்து வந்துள்ளன என்பதே. எடுத்துக் காட்டாக எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உலகளவில் தேவைப்படும் மருந்தில் 50 சதவீதம் இந்தியாவிருந்துதான் கிடைக்கின்றன. இப்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தில், பிரதானமாக உள்நாட்டுச் சந்தைக்கு என்று கட்டாய உரிமம் அளிக்கப்பட்டிருந்தாலும், ஏற்றுமதியும் செய்யலாம் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

8. உடன்பாடு ஏற்படாத பிரச்சினைகள்

துரதிருஷ்டவசமாக, இடதுசாரி கட்சிகள் முன்வைத்த அனைத்து நல்ல ஆலோசனைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அதில் இரண்டு முக்கியமானவை வருமாறு:

  • 2002ஆம் ஆண்டு பேடண்ட் சட்ட திருத்தம் சிறு உயிர்களையும், சிறு உயிரி செயல் முறைகளையும் பேடண்ட் செய்யலாம் என்று கூறியிருந்தது. இது அபாயகரமானது. இவ்வாறு அனுமதித்தால் வேளாண்துறையிலும் மருந்துத்துறையிலும் உயிரி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பேடண்ட்டுகள் குவிய வாய்ப்பு உள்ளது. இத்தகைய ஷரத்து டிரிப்ஸ் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட பொழுது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதனால் நான்கு ஆண்டுகள் முடிந்தவுடன் இதனை மறு பரிசீலனை செய்வது என்றும் முடிவாகியது. அப்பரிசீலனை தற்சமயம் டிரிப்ஸ் குழுவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே நமது சட்டத்தில் இந்த ஷரத்துக்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இடதுசாரிகளின் இந்த நிலையை மத்திய அரசு ஏற்கவில்லை. இருப்பினும், இப்பிரச்சினை ஒரு நிபுணர் குழுவிற்கு அனுப்பப்படும் என்றும், அக்குழு பரிந்துரைத்தால் இந்த ஷரத்துக்கள் நீக்கப்படும் என்றும் அரசு வாக்குறுதி அளித்துள்ளது.
  • அதே போல் புதிய மருந்துப் பொருள் என்பதன் விரையறை மேலும் கறாராக வரையறுக்கப்பட்டால்தான் தவறான புதுமையற்ற உரிம விண்ணப்பங்களைத் தவிர்க்க முடியும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தினர். இந்தப் பிரச்சினையிலும், இவ்வாறு புது மருந்துப் பொருள் என்பதை வரையறை செய்வது பற்றி ஒரு குழு பரிசீலிக்கும் என்றும், அதன் அடிப்படையில் மேலும் திருத்தங்கள் பரிசீலிக்கப் படலாம் என்றும் ஏற்றுக் கொண்டுள்ளது.

தொடரும் பிரச்சினைகள்

உரிய நேரத்தில் உரிய முறையில் இடதுசாரி கட்சிகள் பேடண்ட் பிரச்சினையில் தெளிவான, அமல்படுத்தக்கூடிய மாற்று ஆலோசனை களை முன்வைத்து மத்திய அரசுடன் நடத்திய விவாதம், பேடண்ட் சட்டத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை தரும் குறைந்தபட்ச தன்மைகளைக் குறைக்கும் மாற்றங்களைச் சாத்தியமாக்கியுள்ளது. ஆனாலும், பல பிரச்சினைகள் தொடர்கின்றன. திருத்தப்பட்டுள்ள பேடண்ட் சட்டத்தில் இன்னும் கவலை தரும் அம்சங்களும் மேம்படுத்தப்பட வேண்டிய அம்சங்களும் உள்ளன.

ஒரு அம்சம், கட்டாய லைசன்ஸ் தொடர்பானது. பொருள் உரிமம் அமலில் உள்ள பொழுது கட்டாய லைசன்ஸ் மிகவும் அவசியமாகிறது என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளோம். இந்திய நாட்டு சட்டத்தில் கட்டாய லைசன்ஸ் வழங்குவதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான வழிமுறைகள் சிக்கலாக ஆக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தெளிவுபடுத்தி எளிதாக்க வேண்டியது மிக முக்கியம் தற்சமயம் பன்னாட்டு ஏகபோகங்களுக்குச் சாதகமாக உள்ள ஷரத்துக்களை நீக்கி, கட்டாய லைசன்ஸ் பெறுவதை எளிதாக்க அரசுக்கு நாம் கெடுபிடி கொடுக்க வேண்டும். அதன் மூலம் கட்டாய லைசன்ஸ் கால தாமதமின்றியும் நியாயமான கட்டண அடிப்படையிலும் வழங்கப்படுவதை உறுதி செய்ய முடியும்.

இரண்டாவது அம்சம், மருந்து விலைகள் மீதான தாக்கம். இப்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் பொருள் உரிமத்தை அனுமதிப்பதால், மருந்து விலைகள் கட்டாயம் உயரும். முதலில் 1995-2005 வரை அஞ்சல் பெட்டியில் உள்ள பொருள் உரிம விண்ணப்பங்களில் பல வழங்கப்படும் அவற்றை உற்பத்தி செய்து போட்டி போட்டு விலைகளை குறைப்பது முன்பு 1970 சட்டத்தில் இருந்தது போல் எளிதல்ல; இந்திய கம்பெனிகள் கட்டாய லைசன்ஸ் பெற்றுத்தான் உற்பத்தி மேற்கொள்ள முடியும். அதற்கு காலதாமதம் ஆகும். எனவேதான் கட்டாய லைசன்ஸ் எளிதில் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.

மூன்றாவது அம்சம், இந்திய கம்பெனிகள் மருந்து ஏற்றுமதி செய்வது தொடர்பானது. இரண்டு வழிகள் உண்டு. புதிதாக பொருள் உரிமம் பெற்ற மருந்துகளை உற்பத்தி செய்ய கட்டாய லைசன்ஸ் பெற்று, அதன்பின் ஏற்றுமதி செய்யலாம். இரண்டாவது, உட்டோவின் டோஹா அறிக்கையின் அடிப்படையில் உற்பத்தி செய்யும் திறன் இல்லாத நாடுகளுக்கு, அந்த அறிக்கையில் விதிக்கப்பட்டுள்ள சிக்கலான நிபந்தனைகளுக்கிணங்க ஏற்றுமதி செய்யலாம். இரண்டு வழிகளுமே புதிய சட்டத்தின் கீழ் கடினம்தான்.

பா.ஜ.க. கபட நாடகம்

இந்த பேடண்ட் சட்ட திருத்த விவகாரத்தில் பா.ஜ.க. – என்.டி.ஏ.யின் கபட நாடகம் கேலிக்கூத்தானதாகும். 1999லும், 2002லும் மோசமான பல ஷரத்துக்கள் கொண்ட பேடண்ட் சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியதோடல்லாமல், 2003 டிசம்பரில் மிக மோசமான மூன்றாவது பேடண்ட் சட்ட திருத்த முன் வடிவைக் கொண்டு வந்ததும் என்.டி.ஏ. – பா.ஜ.க. அரசுதான். (அதை யூ.பி.ஏ. அரசு ஈயடிச்சான் காப்பி அடித்தது அதன் வர்க்கப் பார்வையைக் காட்டுகிறது.) நிலைமை இப்படியிருக்க, திடீரென்று யூ.பி.ஏ. அரசு கொண்டு வந்த பேடண்ட் சட்டத் திருத்தத்தை எதிர்ப்பதாக வீராப்புடன் என்.டி.ஏ. – பா.ஜ.க. அறிவித்தது உண்மையில் நகைப்பிற்குரியது.

தன்னார்வ அமைப்புகளின் இடது விமர்சனம்

இடதுசாரி கட்சிகள் ஒப்புதலுடன் புதிய பேடன்ட் சட்டம் நிறைவேற்றப்பட்டதால், இடதுசாரிகள் சமரசம் செய்து கொண்டு விட்டனர் என்ற விமர்சனமும் வந்துள்ளது. இதைப்பொதுவாக பன்னாட்டு என்.ஜி.ஓ.க்கள் வெறுக்கின்றன. இந்தியாவிலும் இத்தகைய குரல்கள் ஒலிக்கின்றன. உண்மை என்ன?

நம்மைப் பொருத்தவரையில் உட்டோ அமைப்பின் டிரிப்ஸ் ஒப்பந்தமே மிக மோசமானது, அது தூக்கி எறியப்பட வேண்டும் என்பதுதான் நமது அடிப்படை நிலை. அதற்கான போராட்டம் உட்டோவின் வேறு மட்டங்களில் நடத்தப்பட வேண்டும். மக்கள் மத்தியிலும் டிரிப்ஸ் ஒப்பந்தம் அம்பலப்படுத்த வேண்டும். ஆனால், இந்தியா உட்டோ உறுப்பினராக இருக்கும் வரை, டிரிப்ஸ் ஒப்பந்தத்தைப் புறக்கணித்து விட முடியாது. பிரச்சினை என்னவென்றால், தொடர்ந்து இந்திய அரசாங்கங்கள் கொண்டு வந்துள்ள 1999, 2002, 2003, 2004 பேடண்ட் சட்டத் திருத்தங்கள், முன்மொழிவுகள் டிரிப்ஸ்சில் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்புகளைக் கூடப் பயன்படுத்தவில்லை என்பதுதான். இப்பொழுது நமது தலையீட்டால், ஓரளவிற்கு முன்னேற்றம் காண முடிந்துள்ளது. இன்னும், டிரிப்ஸ் வரம்புக்குள்ளேயே மேலும் முன்னேற்றம் காண நாம் போராட வேண்டும். ஆனால் இது ஒரு போர்க்களத்தில் பெறும் முன்னேற்றம்தான். இறுதியாக யுத்தத்தையே வெல்ல வேண்டு மென்ல், டிரிப்ஸ்சையே பின்தள்ளியாக வேண்டும். ஆனால், ஏற்பட்டுள்ள சிறிய முன்னேற்றத்தையும் விமர்சிப்பதைவிட, இப்பிரச்சினையில் ஏகாதிபத்தியத்தை அம்பலப்படுத்துவதுதான் மிக முக்கியம், அவசர அவசியம்.