கம்யூனிஸ்ட்டுகளும், தொழிலாளி வர்க்கமும்


கம்யூனிஸ்ட் தோழர்கள் தொழிற்சங்க இயக்கத்திலும், போராட்டத்திலும் முன்னிலையில் நிற்கின்றன என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தொழிற்சங்க இயக்கத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களும் தோழர்களும் மிகவும் திறமையுடனும் பயனுள்ள முறையிலும் (மற்றவர்களை ஒப்பிடும் பொழுது முதன்மையாகவும்) செயல்படுகிறார்கள் என்று தொழிலாளர்கள் பரவலாக கருதுகிறார்கள். தன்னலமற்ற முறையில் நேர்மையாகவும் உறுதியாகவும் தொழிலாளர் நலன்களை பாதுகாப்பதில் விடாப்பிடியான முயற்சியுடனும் கம்யூனிஸ்ட்டுகள் தலைமை தாங்குகிறார்கள் என்று பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக தொழிற்சங்கங்கள் அமைப்பது பற்றி யோசிக்கம் போது மார்க்சிஸ்ட் தலைவர்களை தலைமையில் வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஏராளமான தொழிலாளர்கள் மத்தியில் இயல்பாகவே ஏற்படுகிறது. கம்யூனிஸ்ட்கள் பற்றி இத்தகைய மதிப்பீடு உருவானதற்கு ஆதாரமான காரணங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது. (பிறவியிலேயே கம்யூனிஸ்ட்டுகளுக்கு இந்த நல்ல குணங்கள் அமைந்து விடுகின்றன என்று நினைப்பதானது சிறுப்பிள்ளைத் தனமானது)

கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளர் இயக்கத்தில் முன்னணியில் நிற்பதற்கான காரணங்களை ஆராயும்பொழுது சமூக வளர்ச்சிப் பற்றியும் ஒவ்வொரு வர்க்கத்தின் வரலாற்று ரீதியான பாத்திரங் களைப் பற்றியும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு முற்றிலும் தெளிவான விஞ்ஞான ரீதியான ஒரு பார்வை இருப்பதுதான் முக்கிய காரணம் என்று புலனாகும். இது கம்யூனிஸ்ட்டுகளின் அடிப்படையான நோக்கங்களுடன் பின்னிப் பிணைந்து கிடக்கக் கூடிய ஒரு முக்கியமான அம்சமாகும்.

தொழிலாளி வர்க்கம் – புரட்சியின் ஈட்டி முனை

கம்யூனிஸ்ட்டுகள் சோசியலிச இலட்சியத்தை தங்களின் போர்ப்பதாகையாக ஏற்றுக் கொண்டதாகும். சோசியலிச இலட்சியம் என்று கூறும்போது அடிப்படையான இன்றியமையாத தன்மை அரசியல் அதிகாரம் சுரண்டும் வர்க்கங்களிலிருந்து சுரண்டப்படும் வர்க்கங்களின் கைகளுக்கு மாற்றப்படுவது என்பது முக்கியமான தாகும். இத்துடன் இன்றுள்ள சமுதாய அமைப்பில் எல்லா துறைகளிலும் ஆதிக்க வர்க்கங்களின் பிடிமானத்தை உடைத் தெறிவதற்கு முன்னோடியாகத்தான் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டமாகும். மொத்தமாக இந்த கடமையைத் தான் சோசியலிச புரட்சியின் கடமை என்று கம்யூனிஸ்ட்டுகள் பார்க்கிறார்கள்.

கடுமையான நீண்ட நெடும் காலத்திற்கு நடைபெற வேண்டிய இந்த இலட்சியப் போராட்டத்தின் பாதை எத்தகையவை என்று இக்கட்டுரையில் விளக்க முன்வரவில்லை. பல்வேறு நாடுகளில் உள்ள சூழலிற்கு ஏற்ப வரலாற்றின் வளர்ச்சிப் போக்கிற்கு ஏற்ப இந்தப் பாதை உருவாகும் என்பது பற்றியும் இங்கு விளக்கவில்லை. ஆனால், சோசலிச புரட்சி வெற்றி பெறுவதற்கு அடிப்படையாக இருப்பது வர்க்கப் போராட்டம்தான் என்பது தொழிலாளி வர்க்கம்தான் அந்தப் போராட்டத்தை தலைமை தாங்கவேண்டும் என்றும், உலகத்தின் இதுநாள் வரைக்கும் கிடைத்த ஒரு அனுபவமாகும். ஆக, சோசலிசப் புரட்சிக்கு தலைமை தாங்கி நடத்தக்கூடிய வர்க்கம் தொழிலாளி வர்க்கமாகும் என்பது மிகப் பெரிய உண்மையாகும். தொழிலாளி வர்க்கத்திற்கு இத்தகைய வரலாற்றுரீதியாக பாத்திரம் இருக்கிறது என்பது கம்யூனிஸ்ட்டுகளின் ஆழமான கருத்தாகும்.

இந்த மகத்தான பாத்திரம் குறித்த கருத்து விஞ்ஞான ரீதியான பல அடிப்படை பார்வைகளை ஆதாரமாக அமைந்துள்ளதாகும். அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்.

1. இன்றைய முதலாளித்துவ உலகத்தில், முதலாளி வர்க்கத்தை நேருக்கு நேர் சந்தித்து போராடும் வர்க்கம் தொழிலாளி வர்க்கமாகும். சமுதாயத்தில் பல்வேறு வர்க்கப் பிரிவினை இருப்பினும், முதலாளித்துவ சுரண்டலை நேருக்கு நேர் ஒவ்வொரு நிமிடமும் சந்திக்கும் நிலைமையில் உள்ள வர்க்கம் தொழிலாளி வர்க்கம். ஒரு தொழிற்சாலை (அல்லது) ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளி அல்லது ஊழியர் விரும்பியோ, விரும்பாமலோ முதலாளித்துவ சுரண்டலில் பல்வேறு தன்மைகளை நேரில் அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான எண்ணங்கள் இதன் காரணமாக, இயல்பாகவே தொழிலாளர்களின் மனதில் தோன்றுவது இயல்பு. சோசலிசத்துக்கான போராட்டத்தில், நமது முக்கிய எதிரியான முதலாளித்துவ அமைப்பை மனமார வெறுக்கக்கூடிய ஒரு வர்க்கமாக தொழிலாளி வர்க்கம் காட்சியளிக்கிறது. ஆகவே, முதலாளித் துவத்துக்கு எதிரான போராட்டத்தில், இந்த வர்க்கம் இயல்பாகவே முன்னணி பாத்திரத்தை நிறைவேற்றும் நிலையில் உள்ளது.

இந்த முதலாளி வர்க்கத்திற்கும், தொழிலாளர்களுக்கும் உள்ள முரண்பாடு கூர்மையான வர்க்கப் போராட்டம் என்ற உருவத்தில் அனுதினமும் வெடித்துக் கொண்டே இருக்கும். ஆரம்ப நிலையில், முதலாளிக்கு எதிரான வெறுப்பு பல வடிவங்களில் தோற்றமளிக்கும். தொழிற்சங்கங்கள் என்பவை இந்த முரண்பாட்டில் துவக்க நிலை பிரதிபலிப்பே ஆகும்.
சோசலிசத்துக்கான போராட்டத்தில், இவ்வாறு தொழிலாளி வர்க்கம்தான் முன்னணியில் நிற்க வேண்டிய வரலாற்று கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

2. இன்றைய உலகில் உற்பத்தி முறைகள் விஞ்ஞான வளர்ச்சியுடன் நெருங்கி, இணைந்து கிடக்கக்கூடிய தன்மைக் கொண்டதாகும். நவீன விஞ்ஞானத்தில் குணாம்சங்களையும், விதிமுறைகளையும், உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் நேரடியாக பயன்படுத்து கிறார்கள் என்பது ஒரு மகத்தான காரியம். ஆகவேதான், விஞ்ஞானத் தையும், அதன் பயன்பாட்டையும் உட்கொண்டிருக்கக் கூடிய வர்க்கம் நவீன தொழிலாளி வர்க்கம். இந்த தன்மையும் அதன் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி பாத்திரத்திற்கு மூலகாரணமாகும்.  (தொழிலாளி வர்க்கம் என்று கூறும் போது, உடல் உழைப்பை மட்டுமின்றி நுட்பமான மூளை உழைப்பிலும் ஈடுபட்டுள்ளவர் களையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறோம்.) இப்பிரிவில் பணியாற்றும் பலரும் தங்களை அறிவுஜீவிகளாக மட்டும் கருதி, தொழிலாளி வர்க்கத்திற்கு அப்பால் நிற்பதாக நினைக்கிறார்கள். ஆயினும், அவர்களும் பல முறைகளில் முதலாளித்துவ சுரண்டலுக்கு உட்பட்டவர்கள் என்பது உண்மை.

3. தொழிலாளி வர்க்கத்தினர் தங்கள் பணிகளை செய்யும் போது, பலரும் சேர்ந்து (கூட்டாக) செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தனிநபர் என்ற முறையில், செய்யும் பணிக்கு அநேகமாக இடமேயில்லை. இந்த தன்மை காரணமாக, கூட்டாக செயல்படுவது, கூட்டாக வாழ்வது, கூட்டாக சுரண்டலை எதிர்ப்பது போன்ற குணங்கள் இயல்பாகவே, தொழிலாளி வர்க்கம் பெறுகிறது. வேலைப் பாதுகாப்பில் இருந்து, ஊதியம் போன்ற பிரச்சினைகளில் முன்னேற்றம் வரை அனைத்துக் காரியங்களிலும், தொழிலாளர்கள் கூட்டாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏன்? முதலாளி வர்க்கத்தின் சுரண்டலை தனிப்பட்ட ஒரு நபராக எதிர்க்க முடியாது, எதிர்க்கவும் இயலாது, அதுவும்கூட கூட்டாக ஒன்றுபட்டு போராட்டத்தின் மூலமாகத்தான் சாதிக்க முடியும். இத்தகைய காரணங்களால்தான் தனிநபர் உணர்வை விட, கூட்டுணர்வு என்ற உணர்வு நிலை இந்த வர்க்கத்திற்கு அமைகிறது. இந்த உணர்வுதான், சோசலிசம் என்ற கருத்திற்கு ஆதாரமானது. ஒரு ஆலையின் உரிமையாளராக வளர்ந்து, வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற எண்ணம் தொழிலாளிக்கு தானாகவே ஏற்படுவதில்லை. ஆலை அனைத்தும், உற்பத்தி கருவிகள் அனைத்தும் பொது சொத்தாக வரவேண்டும் என்ற சோசலிச கருத்து, இயல்பாகவே இந்த வர்க்கத்திற்கு ஏற்படுகிறது. மற்ற எல்லா வர்க்கங்களை விட, கூட்டான வாழ்க்கை, கூட்டான உடமை முறை என்ற கருத்தினை உட்கொண்டிருக்கும் நிலையில் உள்ள வர்க்கம் தொழிலாளி வர்க்கம்.

சொல்லப்போனால், சோசலிசம் என்ற கருத்துக்கூட தொழிலாளி வர்க்கம் என்ற வர்க்கம், வரலாற்று ரீதியாக உருவெடுத்தபிறகுதான், முன்னுக்கு வந்தது. முதலாளி வர்க்கமும், அதன் ஆதிக்கமும், வளர்ந்த கட்டத்தில், ஐரோப்பாவிலும், மற்ற பல நாடுகளிலும், தீவிரமான வர்க்கப் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்களில், தொழிலாளி வர்க்கம் ஒரு முன்னணி சக்தியாக, வேகமாக முன்னேறியது. அந்தப் பின்னணியில்தான், விஞ்ஞான சோசலிசம் என்ற கருத்து, உருவாகி, வளர்ந்து, உலகத்தில் சிந்தனைப் போக்குகளை முக்கிய இடத்தைப் பெற்றது. அதுநாள் வரை சோசலிசம் என்பது ஒடுக்கப்பட்ட மனிதர்களின் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாகும். பெரும்பாலும், இந்த எண்ணம் சுரண்டலற்ற, வர்க்க பேதமற்ற ஒரு சமுதாயம் அமைய வேண்டுமே என்ற கற்பனைவாத கண்ணோட்டமாகவே இருந்தது. இது கற்பனைவாத சோசலிசம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியில், வர்க்கப் போராட்டத்தின் கூர்மையும் காரணமாக கற்பனைவாத சோசலிசம் என்ற எண்ணப் போக்கிற்கு மாறாக, விஞ்ஞான சோசலிசம் என்ற தத்துவம் வரலாற்றின் அரங்கில் உதயமாயிற்று. வெறும் ஒரு கனவாக இல்லாமல்; சமுதாய வாழ்க்கையில் திசை வழிகளை ஆராய்ந்து விஞ்ஞானரீதியாக வடிவம் கொள்ளப்பட்ட, ஒரு எதார்த்த தத்துவமாக, விஞ்ஞான சோசலிசம் காட்சியளித்தது.

காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்ற மாபெரும் மேதைகள் போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டே, விஞ்ஞான சோசலிசம் என்ற தத்துவத்தை முன்வைத்தபோது, வளர்ந்து வரும் தொழிலாளி வர்க்கம் அதை தன்னுடைய தத்துவமாக இயல்பாகவே ஏற்றுக் கொண்டது. இன்றும், சோலிச தத்துவத்தின், ஆதாரமான ஈர்ப்பு சக்தி தொழிலாளி வர்க்கத்தை கவ்விப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த காரணங்களினால்தான், சோசலிசத்தினுடைய பதாகையை ஏந்தி வரக்கூடிய வர்க்கம்தான் தொழிலாளி வர்க்கம் என்று கம்யூனிஸ்ட்டுகள் கருதுகிறார்கள்.

ஒருவர் தொழிலாளியாக இருப்பதினால், அல்லது அந்த வர்க்கத்தில் பிறந்ததினால், தானாகவே சோசலிசப் புரட்சி பாதைக்கு வந்துவிடுவார்கள் என்று நினைப்பது மூடத்தனமாகும். புதிதாக ஒருவர் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தவுடன் அவர் தொழிற் சங்கத்தில் சேர்ந்து, வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்கும்போதுதான், அவருடைய மனோ நிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
தொழிற்சங்க உணர்வில் இருந்து….

இன்றுள்ள நிலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொழிலாளர்கள் பல்வேறு ஆலைகளை, நிறுவனங்களை, தொழிற்சங்கங்களை நிறுவி பல முறைகளில் போராட்டங்களை நடத்தும் கட்டாயத்தில், சிக்கிக் கொள்கிறார்கள். இவர்களெல்லாம், தங்களுடைய கோரிக்கைகளை அடைவதற்காக, இந்த முதலாளியை எதிர்த்து போராடுகிறோம் என்ற எண்ணத் துடன்தான் இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் தொழிலாளி வர்க்கத்தை சார்ந்தவர்கள், முதலாளிகள் அனைவரும் முதலாளி வர்க்கத்தை சார்ந்தவர்கள்தான் என்ற எண்ணம் அவர்களுக்கு இயல்பாகவே ஏற்படுவதில்லை. அவர்களின் எண்ணப் போக்குகளை சுருங்க கூறின், ஆரம்ப நிலை வர்க்க உணர்வு என்று மட்டுமே கூறமுடியும். ஏராளமான தொழிற்சங்க தலைவர்கள், ஏன்? ஊழியர்கள் கூட இந்த ஆரம்ப நிலையிலேயே தங்களுடைய சிந்தனைகளை நிறுத்திக் கொள்கின்றனர்.

கம்யூனிஸ்ட்டுகள் தொழிற்சங்க பணியில் ஈடுபடும்போது, துவக்க நிலையில் இருந்தபோதிலும், தொழிலாளர்களின் வர்க்க உணர்வை வலுப்படுத்தக்கூடிய வகையில் தங்களுடைய பணிகளை அமைக்கிறார்கள். வர்க்க உணர்வுகூட ஏற்படாத தொழிலாளர் களுக்கு புரட்சிகரமான எண்ணங்களெல்லாம், வந்து விடும் என்று நினைப்பது ஒருமுறையில் கற்பனைவாதமாகும்.

வர்க்க உணர்வு என்று கூறும்போது, நாம் அனைவரும், சுரண்டப்படும் வர்க்கம் என்றும், நம்முடைய எதிரிகளாக இருக்கும் சுரண்டல்காரர்களை எதிரி வர்க்கமாகவும், பாகுபடுத்தி காணும் அளவிற்கு அத்தொழிலாளர்களுக்கு உணர்வு நிலையில் மாற்றம் வேண்டும். நாம் அனைவரும் ஒரு வர்க்கம். முதலாளி வர்க்கம் இன்னொரு வர்க்கம் என்ற எண்ணத்தை வளர்ப்பது கம்யூனிஸ்ட்டுகளின் ஆரம்ப நிலைக் கடமை.

இன்றைய சமுதாயத்தில், தொழிலாளி வர்க்கமும் இதர வர்க்கங்களும் வாழ்க்கைப் போராட்டத்தில் அல்லல்பட்டு, தவிப்பதற்கான அடிப்படைக் காரணம் முதலாளித்துவ, நிலப் பிரபுத்துவ சுரண்டல்தான் என்று தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும்போதுதான் வர்க்க உணர்வுக்கு மூலாதாரமான ஒரு பரிணாமம் ஏற்படும். அது ஏற்படுத்தும் கடமையை உணர்வுபூர்வமாக கம்யூனிஸ்ட்டுகள் நிறைவேற்றுகிறார்கள்.

ஆக, வர்க்க உணர்வில், துவக்க நிலையில் இருந்து, அடுத்த உயர் கட்டதிற்கு தொழிலாளி வர்க்கத்தை அழைத்துச் செல்லும் மகத்தான பணியினைத்தான் கம்யூனிஸ்ட்டுகள் தொழிற்சங்க பணிகள் மூலமாக செய்ய முயற்சிக்கிறார்கள்.

தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபடும்போது, நமது வர்க்க எதிரிக்கு முழுமூச்சுடன் உதவி செய்வது, முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள்தான் என்பதை புரிய வைப்பதன் மூலம் உணர்வில் இங்கு ஒரு புதிய பரினாமம் ஏற்படுகிறது. ஏற்படுத்த வேண்டும். கம்யூனிஸ்ட்டுகள் அதைச் செய்கிறார்கள். மற்ற பல தொழிற்சங்கத் தலைவர்கள் அதைச் செய்வதில்லை.

ஆக, நாம் ஒரே வர்க்கத்தை சார்ந்தவர்கள் என்ற உறுதியான எண்ணத்தையும்; நம்முடைய எதிரிகளாக இருப்பது முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கம்தான் என்ற எண்ணமும், சுரண்டல் வர்க்கங்களுக்கு முக்கிய கருவியாக செயல்படுவது அரசுதான் என்ற எண்ணமும், தொழிலாளர்களின் மனதில் பதியும் போது, உண்மையான வர்க்க உணர்வு வேரூன்றுகிறது. கம்யூனிஸ்ட்டுகள் தொழிற்சங்க பணிகளில் ஈடுபடும்போது, இத்தகைய வர்க்க உணர்வை வளர்ப்பது என்ற கடமையை செய்கிறார்கள்.

உண்மையான போர்க்குணமிக்க வர்க்க உணர்வை வளர்த்து தொழிலாளி வர்க்கத்தை ஒரு சக்தியாக முன்னெடுத்துச் செல்வது என்ற ஜீவாதாரமான பார்வையுடன் கம்யூனிஸ்ட்டுகள் தொழிற்சங்க பணிகளில், பங்கேற்கிறார்கள்.

ஆயினும், இந்த உணர்வு மட்டும் தொழிலாளி வர்க்கத்தை ஒரு புரட்சிகரமான வர்க்கமாக உயர்த்தி விடாது என்று நாம் பார்க்க வேண்டும். புரட்சிகரமான வர்க்கமாக வளர்ப்பது என்ற கடமையைப் பற்றி வரும் இதழ்களில் காணலாம்.