மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


உயர் கல்வியும் – உச்ச நீதிமன்ற தீர்ப்பும்!


நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பு பிடிக்காவிட்டால் சொல்லுங்கள், பேசாமல் நீதிமன்றங்களை மூடிவிடுகிறோம். அதன் பிறகு அரசு தனது இஷ்டம் போல் செயல்படட்டும் என்று ஒரு வழக்கில் விவாதம் நடந்து கெண்டிருந்த போது மத்திய அரசு வழக்கறிஞர் அட்டர்ணி ஜெனரலிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சி. லஹோத்தி கோபத்துடன் கூறினார். நீதிமன்றத்தை மதித்து நடக்குமாறும் அவர் அட்டர்ணி ஜெனரலை கேட்டுக் கொண்டார்.

இந்த அளவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோபப்பட்டிருக்க கூடாது. நிதானமாக இருக்க வேண்டும். நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல; நீதிபதிகளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல; என வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்ற நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஓராண்டு நிறைவு விழாவில் கலந்துக் கொண்டு பேசுகிற போது, நீதிமன்றங்களின் தீர்ப்பும் விமர்சனத்திற்கு உட்பட்டதுதான் என பேசியிருக்கிறார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்த அளவுக்கு கோபமாக பேசிய பிறகு, நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிப்பதற்கு சபாநாயகர் நேரம் ஒதுக்கினார். டி.எம்.ஏ. பாய் வழக்கில் 11 நீதிபதிகள் அளித்த தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் பென்ச்  சமீபத்தில் ஒரு தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பு அரசு உதவி பெறாத சுயநிதி கல்லூரிகளில் இடஒதுக்கீடு அளித்திட வேண்டுமென்று உத்திரவிட அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறியது. இத்தீர்ப்பின் மீது எழுந்த சர்ச்சையில்தான் மேற்கண்டவாறு தலைமை நீதிபதி ஆர்.சி. லஹோத்தி கோபமாக பேசியிருக்கிறார்.

நாடாளுமன்றம் இப்பிரச்சினை குறித்து விவாதித்தது. நீதிமன்றத்துடன் மோதலை யாரும் விரும்பவில்லை; அதே நேரத்தில் நீதிபதிகளும் வரம்புக்கு உட்பட்டு கருத்து தெரிவிக்க வேண்டும் என அனைத்துக் கட்சியினரும் கருத்து தெரிவித்தார்கள்.

இந்த விவாதத்திற்கு பிறகு, சுயநிதி கல்லூரிகளில் தலித் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு அளித்திட வகை செய்யும் வகையில் அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வருவதுதான் ஒரே வழி என நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் கருத்து தெரிவித்தன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன்சிங் கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்திலும், அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வருவதுதான் தலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சுயநிதி கல்லூரிகளில் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டினை பாதுகாக்க முடியும் என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

தற்போது எழுந்திருப்பது நீதிமன்றத்திற்கு அதிக அதிகாரமா? நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரமா? என்ற பிரச்சினையல்ல; எழுந்திருக்கும் பிரச்சினை இந்தியாவில் பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் பின்தங்கியுள்ள தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மக்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளிப்பது பற்றித்தான். சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தமிழகத்தில் இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு அரசியல் சட்டத்திலேயே ஷரத்து சேர்க்கப்பட்டு அமலாக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் சுயநிதி கல்லூரிகளில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அளிக்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு இனி இல்லை என்றாகி விட்டது. இதுதான் எழுந்துள்ள முக்கிய பிரச்சினை. இதை சட்டப் பிரச்சினையாக, உச்சநீதிமன்றம் பார்க்கிறது. இது சட்டப்பிரச்சினையில்லை;  ஒரு சமூகப் பிரச்சினை. சமூக நீதி சம்பந்தப்பட்ட பிரச்சினை என்ற அளவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம்.

12.08.05 அன்று ஏழு நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற பென்ச் அளித்த தீர்ப்பின் முக்கிய பகுதிகள்:

இடஒதுக்கீட்டுக்கு வேட்டு

அரசுக்கு இத்தனை சதம், நிர்வாகத்திற்கு இத்தனை சதம் என அரசு உதவி பெறாத தனியார் சுயநிதி கல்லூரிகளின் சீட்டுக்களை ஒதுக்கீடு செய்திட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மனுதாரர்கள் (சுயநிதி கல்லூரி நிர்வாகிகள்) முன்வைத்த வாதத்தில் வலுவுள்ளது என கருதுகிறோம். தகுதி அடிப்படையில் அல்லாமல், குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் சீட்டுக்களை ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று அரசிடம் உதவி பெறாத தனியார் சுயநிதி கல்லூரிகளை அரசு நிர்ப்பந்திக்க முடியாது.

தீர்ப்பின் மேற்கண்ட முக்கிய பகுதி தனியார் சுயநிதி கல்லூரிகளில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது; இதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறுகிறது.

அரசியல் சட்ட ஷரத்து 31 (1) பிரிவின் கீழ் நியாயமான ஒரு கல்விக் கட்டணத்தை தீர்மானிப்பது என்பது கல்வி நிலையத்தை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்குமான அடிப்படை உரிமையின் ஒரு பகுதியேயாகும். லாபநோக்கமின்றியும், கட்டாய நன்கொடையும் அல்லாத முறையில் மறைமுக அல்லது நேரடியான (அ) எந்த வடிவத்திலாவது கல்விக்கட்டணத்தை தீர்மானிக்கக்கூடிய உரிமை ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் உண்டு.

சுயநிதி கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை இஷ்டம் போல் தீர்மானித்துக் கொள்ள முடியாது என்ற கடந்த கால அணுகுமுறையை அகற்றி சுயநிதி கல்வி நிலையங்கள் தங்கள் விருப்பப்படி கல்விக் கட்டணத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்ற தீர்ப்பு பச்சைக் கொடி காட்டி விட்டது. (லாபநோக்கமில்லாமலும் கட்டாய நன்கொடை நோக்கமின்றியும் கல்விக் கட்டணத்தை சுயநிதி கல்வி நிறுவனங்கள் தீர்மானிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது.) இது குறித்து வேறு ஒரு இடத்தில் பரிசீலிப்போம்)

மாணவர் சேர்க்கை முறை

மாணவர்களின் நலன், பரந்த நோக்கு ஆகியவற்றின் அடிப்படையில் முறைகேடின்றி, சிறந்த தரத்தை எட்டிட வேண்டி தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கை முறை தேவை. இதற்காக மையப்படுத்தப்பட்ட ஒற்றை சாளர முறை மூலம் மாணவர் சேர்க்கையை தீர்மானிக்க வேண்டும்.

இடஒதுக்கீடு இல்லை; கல்வி கட்டணத்தை இஷ்டம் போல் தீர்மானித்துக் கொள்ளலாம்.  கட்டணச்சீட்டு, இலவசச்சீட்டு என்றோ நிர்வாகக் கோட்டா; அரசு கோட்டா அல்லது நிர்வாகம் 50 சதம் சீட்டுக்களை நிரப்பிக் கொள்ளலாம். அரசு 50 சதம் சீட்டுக்களுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர்களை சேர்க்கலாம் என்ற முறை இல்லை. மொத்தத்தில் அனைத்து சீட்டுக்களையும் நிர்வாகம் இஷ்டம் போல் சேர்த்துக் கொள்ளலாம். இதுதான் 12.8.05 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு.

சுயநிதி கல்லூரி நிர்வாகிகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உற்சாகமடைந்துள்ளனர். இந்த ஆண்டு பழைய முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும், அடுத்த ஆண்டில் இருந்து வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும் என குதூகலமாக உள்ளனர்.

வெளிநாட்டு இந்தியருக்கு இடஒதுக்கீடு

தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்று வலியுறுத்திட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என கூறும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிநாட்டு இந்தியருக்கு 15 சதம் சீட்டுக்களை ஒதுக்கீடு செய்யலாம் என கூறுகிறது. கல்விக் கட்டணத்தை நிர்வாகமே தீர்மானித்துக் கொள்ளலாம்.

12.08.2005 அன்று அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் மேற்கண்ட அம்சங்கள் முக்கியமானவை. சுயநிதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, கல்விக் கட்டணம்,

இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் முக்கியமானவை நான்கு.

  1. உண்ணிகிருஷ்ணன் வழக்கு – 1993
  2. டி.எம்.ஏ. பாய் வழக்கு – 2002
  3. இஸ்லாமிய அகாதமி வழக்கு – 2003
  4. பி.ஏ. இனாம்தார் வழக்கு – 2005

இந்த நான்கு வழக்குகளில் முக்கியமான அம்சங்களை பரிசீலித்தால், இன்றைய உலகமயச் சூழலில் உச்சநீதிமன்றமும் கரைந்து விட்டது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கல்வி, சுகாதாரம் போன்ற மக்களுடைய வாழ்வாதாரமான பிரச்சினைகளில் அரசு மெல்ல, மெல்ல நிதி ஒதுக்கீட்டை குறைத்து வருவதுதான் உலகமய, தாராளமய கொள்கையின் ஒரு பகுதி. சமூக நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு, ஆண்டு குறைந்து வருகிறது. வசதி உள்ளவர்கள் வைத்தியம் செய்துக் கொள்ளட்டும், காசு உள்ளவர்கள் உயர் கல்வி படிக்கட்டும் என கல்வி, சுகாதாரம் போன்ற அம்சங்களில் அரசு தன் பொறுப்பை தட்டிக் கழித்து வருவதற்கு ஏற்ப உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது உண்ணிகிருஷ்ணன் வழக்கில் துவங்கி, அடுத்தடுத்து அளிக்கப்பட்ட தீர்ப்புகள், கொஞ்சம், கொஞ்சமாக ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகைகளை பறிப்பதற்கு வழிவகுத்துள்ளது. தீர்ப்புகளை ஒவ்வொன்றாக பரிசீலிப்போம்.

உண்ணி கிருஷ்ணன் வழக்கு

14 உயது வரைக்கும் கட்டாய இலவசக் கல்வி என்பது மட்டுமே அடிப்படை உரிமை. ஆரம்ப கல்வி அளிக்க வேண்டுமென ஒருவர் அரசு மீது வழக்கு போட முடியும். ஆனால், உயர் கல்வி அப்படியல்ல; பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி அடிப்படை உரிமை அல்ல; அரசு உயர்கல்விக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய இயலாததால், தனியார் தலையீடு தேவைப்படுகிறது. இது தவிர்க்க இயலாதது. இதை நீதிமன்றம் தடை செய்ய முடியாது.

தனியார் சுயநிதி கல்லூரிகள் அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை விட கூடுதலாக வசூலிக்கலாம். ஆனால், அது அரசு தீர்மானிக்கும் கட்டணத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது. கல்வியை வியாபரத்தைப் போல் நடத்தக்கூடாது. இது பொது நலனுக்கும், இந்திய மரபுகளுக்கும் விரோதமானது. எனவே கட்டாய நன்கொடை வசூலிப்பது சட்ட விரோதமானது. இவ்வாறான சுயநிதி கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முறையையும் கல்விக் கட்டணத்தையும் ஆசிரியர், ஊழியர், பணி நிலைமைகளையும் அரசு தீர்மானிக்க வேண்டும்.

வியாபாரம் நடத்துவதுபோல், தொழிற்சாலை துவங்குவது போல், ஒரு தனிநபர் சுயநிதி கல்லூரிகளை துவங்கி நடத்தலாம் என்ற உண்ணிகிருஷ்ணன் வழக்கின் தீர்ப்பு பாதகமானது என்றாலும் உயர் கல்வியை வியாபார நோக்கோடு நடத்தக்கூடாது மாணவர் சேர்க்கை முறையையும் கல்விக் கட்டணத்தையும் அரசு தீர்மானிக்கலாம் என்று கூறியது சாதகமான அம்சம். இதன் அடிப்படையில்தான் மாநில அரசுகள் இலவச சீட்டு, கட்டண சீட்டு என இரண்டு வகையான கல்விக் கட்டண முறையையும் ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை முறையையும் உருவாக்கி அமலாக்கி வந்தது.

டி.எம்.ஏ. பாய் வழக்கு

இலவச சீட்டு, கட்டணச் சீட்டு என இரண்டு வகை கல்விக் கட்டண முறையினால், ஏழைகளுக்கு நன்மை இல்லையெனவும், சட்டத்திற்கு விரோதமானது எனவும் கூறி, இம்முறையை டி.எம்.ஏ. பாய் வழக்கில் நீதிபதிகள் ரத்து செய்து விட்டார்கள். இரண்டு வகையான கட்டண முறைகள் ஏழைகளுக்கு நன்மையில்லை என்றால், அவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் ஒரு கட்டண முறையை ஆலோசனையாக நீதிபதிகள் முன்வைத்திருக்கலாம். மாறாக, இலவச சீட்டு என்ற முறையையே ரத்து செய்து விட்டார்கள். (இலவச சீட்டு என்பது முற்றிலும் இலவசமல்ல; கட்டணச் சீட்டை விட சிறிது குறைந்த கட்டணம்தான்) குழந்தையை குளிப்பாட்டி, அழுக்குத் தண்ணீரை மட்டும் கொட்டுவதற்கு பதிலாக, குழந்தையையும் சேர்த்துக் கொட்டிய கதையைப் போலத்தான் டி.எம்.ஏ. பாய் வழக்கு தீர்ப்பு இருந்தது. மேலும் இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் (வாஜ்பாய் ஆட்சியின் போது) ஏழைகளுக்கு இலவச சீட்டு தொடர வேண்டும் என்று வாதிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சக்திவாய்ந்த உலகமய, தனியார்மய கொள்கையின் தாக்கத்திற்கு மேல்தட்டு, படித்த அறிவுஜீவிகளும் இறையாகியுள்ளார்கள் என்பதை சமீபத்தில் அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பில் பார்க்கலாம் என டி.எம்.ஏ. பாய் வாக்குத் தீர்ப்பைப் பற்றி பகிரங்கமாகவே நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் விமர்சித்தார்.
பாதகமான தீர்ப்பாக இருந்தாலும், கல்விக் கட்டணத்தையும், மாணவர் சேர்க்கை முறையையும் தீர்மானித்திட மாநில அரசுகள் குழுக்கள் அமைக்கலாம் என டி.எம்.ஏ. பாய் வழக்கு கூறியது சாதகமான அம்சம்.

டி.எம்.ஏ. பாய் வழக்கில் 11 நீதிபதிகள் பென்ச் அளித்த தீர்ப்பில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாரா 68 (ஐ, ஐஐ). அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகளிலும் சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்தது.

68 (1) அரசு உதவி பெறும் தொழிற் கல்லூரிகளுக்கும் அரசு உதவி பெறாத தொழிற் கல்லூரிகளுக்கும் (சுயநிதி) மாணவர் சேர்க்கையில் ஒரே விதிமுறைகளை கடைப்பிடிப்பது முறையற்ற செயலாகும். அரசு உதவி பெறாத தொழிற் கல்லூரி நிர்வாகங்களுக்கு மாணவர் சேர்க்கையில் அவர்கள் விரும்பும் முறையை கடைப்பிடிக்க உரிமை இருக்கிறது. அதே நேரத்தில் தகுதி அடிப்படையில், மாணவர் சேர்க்கை என்ற கொள்கையை (ஞசஉயீடந டிக ஆநசவை) விட்டு விடக் கூடாது. அரசு உதவி பெறாத கல்வி நிலையத்திற்கு அங்கீகாரம் அளித்திடும் போது, தகுதி அடிப்படையில் மாணவர்களை சேர்க்கும் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என அங்கீகாரம் அளித்திடும் அரசோ (அ) பல்கலைக் கழகமோ கோரலாம். அதே நேரத்தில், விருப்பத்திற்கு ஏற்ற முறையில் மாணவர்களை சேர்த்துக் கொள்ள கல்லூரி நிர்வாகத்திற்கு போதுமான அதிகாரம் அளித்திட வேண்டும்.

(II) உதாணரமாக சுயநிதி கல்லூரி நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட சதமானம் சீட்டுக்களை நிர்வாக கோட்டாவாக தீர்மானித்து, (அரசு (அ) பல்கலைக் கழகம் (அ) கல்லூரி நடத்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் இருந்து) மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம். மீதமுள்ள சீட்டுக்களை அரசுக்கு அளித்து அரசு அதில் இருந்து சமுதாயத்தில் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யலாம். நிர்வாகத்திற்கு எத்தனை சதம் சீட்டுக்கள், அரசுக்கு எத்தனை சதம் சீட்டுக்கள் என்பதை ஸ்தல அளவிலான தேவையை கணக்கில் கொண்டு அரசு முடிவு செய்யலாம். அவ்வாறு முடிவு செய்கிறபோது, சிறுபான்மை மற்றும் அரசு உதவி பெறாத சிறுபான்மை கல்லூரி மற்றும் அரசு உதவி பெறாத சிறுபான்மை அல்லாத தொழிற் கல்லூரிகளுக்கு எத்தனை சதமானம் என்பதை அரசு முடிவு செய்யலாம். அரசு உதவி பெறாத தொழிற் கல்வி அல்லாத கல்லூரிகளிலும் இதே முறையை கடைப்பிடிக்கலாம்.

இஸ்லாமிய அகாதமி வழக்கு

டி.எம்.ஏ. பாய் வழக்கு தீர்ப்பை எதிர்த்து தொடுத்த வழக்குதான் (2003) இஸ்லாமிய அகாடமி வழக்கு; டி.எம்.ஏ. பாய் வழக்கை பரிசீலித்து குறிப்பாக பாரா 68யையும் பரிசீலித்து ஐந்து நீதிபதிகள் கொண்ட பென்ச் தீர்ப்பு அளித்தது. இதனடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை முறைக்கு ஒரு குழுவும் கல்விக் கட்டணத்தை தீர்மானிக்க ஒரு குழுவும், மாநில அரசுகள் அமைத்து மாணவர் சேர்க்கை நடந்து வந்தது.

இதனடிப்படையில்தான் தமிழகத்தில் நீதிபதி சுப்பிரமணியன் தலைமையில் ஒருகுழுவும், நீதிபதி ராமன் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இதைப்போலவே மற்ற மாநிலங்களிலும் இரண்டு குழுக்கள் அமைத்து மாணவர் சேர்க்கை நடந்து வந்தது.

மேற்கண்ட குழு தீர்மானித்த கல்வி கட்டணத்திற்கும் அதிகமான கட்டணத்தை வசூலித்தால் அக்கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கலாம் என இஸ்லாமிய அகாடமி தீர்ப்பு கூறியது. இஸ்லாமிய அகாடமி தீர்ப்பை அனைத்து சுயநிதி கல்லூரி நிர்வாகங்களும் எதிர்த்து வந்தன.

இனாம்தார் வழக்கு தீர்ப்பு (12.8.05)

இஸ்லாமிய அகாடமி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தொடுக்கப்பட்ட வழக்குதான் பி.ஏ. இனாம்தார் என்ற வழக்கு. இவ்வழக்கில் 7 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற பென்ச் 12.8.05 அன்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு இதுவரையில் நடைமுறையில் இருந்த அரசு கோட்டா, நிர்வாக கோட்டா என்ற முறையையும், இடஒதுக்கீடு என்ற முறையையும், அரசே கல்விக் கட்டணத்தை தீர்மானிக்கும் முறையையும் ரத்து செய்து விட்டது. இஸ்லாமிய வழக்கு தீர்ப்பில் சொல்லப்பட்ட இரண்டுக் குழுக்கள் தேவையில்லை என இனாம்தார் வழக்கு தீர்ப்பு கூறுகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான சுயநிதி தொழிற் கல்லூரி நிர்வாகங்கள் தங்களை இவ்வழக்கில் இணைத்துக் கொண்டு இஸ்லாமிய வழக்கு தீர்ப்பை எதிர்த்தன. பெரும்பான்மையான மாநில அரசுகள் இஸ்லாமிய வழக்கு தீர்ப்பு சரியானது என வாதிட்டன.

இரண்டு தரப்புகளின் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர். பி.ஏ. இனாம்தார் வழக்கில் 7 நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் தங்களுக்குள்ள வரம்பு பற்றி சொல்கிறார்கள்.

டி.எம். பாய் வழக்கில் 11 நீதிபதிகள் விசாரித்து தீர்ப்பு கூறினார்கள். எனவே, அந்த தீர்ப்பை திருத்துவதற்கு 7 நீதிபதிகள் கொண்ட பென்ச்க்கு அதிகாரம் கிடையாது. 11 நீதிபதிகளை விட கூடுதலான எண்ணிக்கையையில் நீதிபதிகளைக் கொண்ட பென்ஞ்தான் டி.எம்.ஏ. பாய் வழக்கு தீர்ப்பை திருத்த முடியும். எனவே இனாம்தார் வழக்கில் எங்களது கடமை டி.எம்.ஏ. பாய் வழக்கு தீர்ப்பு பற்றி இஸ்லாமிய வழக்கில் 5 நீதிபதிகள் அளித்த விளக்கம் சரிதானா என தீர்ப்பளிப்பதுதான் என கூறியிருக்கிறார்கள்.

இஸ்லாமிய வழக்கு தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல. குறிப்பாக டி.எம்.ஏ. பாய் தீர்ப்பின் பாரா 68இல் பிரிவு (I) மற்றும் பிரிவு (II) ஆகியவற்றிற்கு கூறிய விளக்கம் சரியானதல்ல என முடிவு செய்தார்கள்.

டி.எம்.ஏ. பாய் வழக்கு தீர்ப்பின் பாரா 68க்கு இனாம்தார் வழக்கு தீர்ப்பு சொல்லும் விளக்கம் வருமாறு:

பாரா 68 இல் முதல் பிரிவில் நீதிபதிகள் கூறியிருப்பது சட்டத்திற்கு ஒப்பானது. அது சட்டம். இரண்டாவது பகுதியில் நீதிபதிகள் சொல்வது சட்டமல்ல வெறும் ஆலோசனை மட்டுமே.

அரசு ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்கு உதவி செய்யலாம் என்று சொல்வது போகிற போக்கில் நீதிபதிகள் சொல்வது உதாரணத்திற் கேயன்றி தீர்ப்பல்ல என இனாம்தார் வழக்கில் தீர்ப்பளித்திருக் கிறார்கள். இந்த விளக்கம் சுயநிதி கல்லூரி நிர்வாகங்களுக்கு சாதகமான விளக்கம். இத்தகைய விளக்கத்தை தீர்ப்பாக அளித்து தனியார் சுயநிதி கல்லூரிகள் தங்கள் விருப்பம் போல் கல்வி கட்டணத்தை தீர்மானித்திடவும், விருப்பம்போல் மாணவர் சேர்க்கையை தீர்மானிக்கவும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை மறுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்வியை முழுக்க முழுக்க வியாபாரமாக நடத்திட உச்சநீதிமன்றம் பச்சைக் கொடி காட்டிவிட்டது. கல்வி ஒரு கடைச்சரக்கு; காசு உள்ளவர்கள் வாங்கிக் கொள்ளட்டும் என்பதுதான் உலகமய, தாராளமய கொள்கை. இதைத்தான் உலகவங்கி, ஐ.எம்.எப்., உலக வர்த்தக நிறுவனம் வலியுறுத்துகிறது. இம்மும்மூர்த்திகள் சொல்வதை அமலாக்கிட வேண்டும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் சொல்கிறது. இதற்கு ஒத்து ஊதுவதுபோல் உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துவிட்டது. இத்தகைய தீர்ப்பை விமர்சிக்கிற போதுதான் கோபப்பட்டு தேவையில்லை என்று கருதினால் நீதிமன்றங்களை மூடிவிடுங்கள் என தலைமை நீதிபதி கோபமாக சீறியிருக்கிறார்.

இனாம்தார் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு நியாயவாதத்தில் நிற்காது – உதாரணத்திற்கு சில வரிகள்.

கல்விக் கட்டணம் பற்றி கூறுகிறபோது, ஒவ்வொரு கல்வி நிலையமும் கல்விக் கட்டணத்தை தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால், மறைமுகமாகவோ, நேரடியாகவோ லாபம் ஈட்டிடும் நோக்கத்துடன் கட்டாய நன்கொடை வசூல் செய்யும் நோக்கத்துடன் கல்விக் கட்டணம் இருக்கக்கூடாது.

மேற்கண்ட அம்சங்களை அமலாக்கிட மாணவர் சேர்க்கை யையும், கல்விக் கட்டணத்தையும் ஒழுங்குப்படுத்தலாம் எனவும் கட்டணத்தையும், மாணவர் சேர்க்கையையும் ஒழுங்குபடுத்திட இரண்டு கமிட்டிகள் இருக்கலாம் எனவும் இனாம்தார் வழக்கின் தீர்ப்பு கூறுகிறது.

கட்டணத்தை தீர்மானிக்க, மாணவர் சேர்க்கை முறையை தீர்மானித்திட அதிகாரம் அளிக்காமல், விதியை மீறுகின்ற கல்லூரி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுத்திட அதிகாரமளிக்காமல் சுயநிதி தொழிற்கல்லூரி நிலையங்கள உயர் கல்வியை வியாபாரமாக்குவதை எப்படி தடுத்திட முடியும்? கல்விக் கட்டணத்தை, மாணவர் சேர்க்கையை அரசே தீர்மானிப்பது சுயநிதி கல்லூரிகளை தேசியமய மாக்குவதற்கு சமம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கல்வியை வியாபாரமாக்கிடுவதை அங்கீகரிப்பதாகிறது.

காசு உள்ளவர்களுக்கே கல்வி என்ற நிலையை உருவாக்குவதன் மூலம் சமுதாயத்தில் மக்கள் மத்தியில் தற்பொழுது நிலவும் பொருளாதார ஏற்றத் தாழ்வை மேலும் அதிகப்படுத்திடத்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழிவகுக்கும்.

கல்வி நிலையத்தை துவக்கி நடத்துவது ஒரு தொழிலை ஒருவர் துவக்கி நடத்துவதற்கு ஒப்பாகும். இது இந்திய அரசியல் சட்டப்படி அடிப்படை ஜனநாயக உரிமை என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது.

கல்வி நிலையத்தை துவக்கி நடத்துவதை ஒரு தொழிலாக பாவித்தாலும் நாட்டின் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு கல்வி அடிப்படை என்ற அளவில் கல்வி நிலையங்கள் மீது சமூக கட்டுப்பாடு இருக்க வேண்டும். இந்த சமூக கட்டுப்பாடு என்பது கல்வியை வியாபாரமாக்குவதை தடுப்பதோடு, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளித்திட வழிவகுக்க வேண்டும். இந்த சமூக கட்டுப்பாடு என்பதை அரசுதான் அமலாக்கிட முடியும். இத்தகைய கட்டுப்பாடு தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இடஒதுக்கீடு இன்மையால் ஏற்படும் விளைவுகள்

அகில இந்திய அளவில் முதல் வகுப்பில் 100 மாணவர்கள் சேர்ந்தால் இதில் 6 மாணவர்கள் தான் உயர் கல்வி படிக்க செல்கிறார்கள். பொறியியல், மருத்துவம் மற்றும் எம்.ஏ., எம்.எஸ்.சி. போன்ற முதுநிலை படிப்பு உள்ளிட்டுதான் இந்த 6 சதம். உயர் கல்வி செல்ல முடியாத 94 சதவீதம் மாணவர்களில் பெரும்பகுதியினர் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரைச் சேர்ந்தவர்கள் என்பது வேதனைக்குரியது. இவர்கள் வேலைவாய்ப்புள்ள தொழிற் கல்லூரியில் சேர இயலாது. இது சமூக நீதிக்கு முரணானது.

எனவேதான் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது சட்டப்பிரச்சினையல்ல; சமூகப் பிரச்சினை என மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறது.

இடஒதுக்கீடு – சமூகநீதி

தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அளித்திட வேண்டுமென்று, வலுவான குரலெழுப்புவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இப்பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு 69 சதம் இடஒதுக்கீடு தமிழகம் கோரி வருகிறது. அதிகமான சதவிகிதம் இடஒதுக்கீடு கோரும் தமிழகத்தில்தான் நாட்டிலேயே அதிகமான சுயநிதி தொழில் கல்லூரிகள் உள்ளன.

சுமார் 250 தொழில்நுட்பக் கல்லூரிகளில் பெரும்பான்மையானவற்றுக்கு சொந்தக்காரர்கள் முன்னாள், இன்னாள் அரசியல்வாதிகள்தான். குறிப்பாக திராவிட கட்சிகளையும், காங்கிரஸ் கட்சியையும் சார்ந்தவர்கள்தான். இக்கட்சியின் தலைவர்கள் இடஒதுக்கீடு கோருவதும், இக்கட்சியைச் சார்ந்தவர்களே பெரும்பான்மையான சுயநிதி கல்லூரிகளை நடத்துவதும், முரண்பட்டதுபோல் இருந்தாலும் உண்மையானது. இந்நிலையிலும் அனைத்துக்கட்சி களும் பெரும்பான்மையான தமிழ் மக்களும் இடஒதுக்கீடு கோருவது நல்ல அம்சம்.

பா.ஜ.க. தலைமையிலான அரசின் பாதகமான அணுகுமுறை

சுயநிதி தொழிற்கல்லூரிகள் பற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள், பாதகமான தீர்ப்புகள் இவைகளெல்லாம் எழுந்த நேரத்தில் வாஜ்பாய் தலைமையிலான  ஆட்சிதான் மத்தியில் இருந்தது. டி.எம்.ஏ. பாய் வழக்கு மற்றும் இஸ்லாமிய அகாடமி தீர்ப்புகள் வந்த காலத்திலேயே தீர்ப்பை திருத்திட அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக் கலாம். இத்தகைய நடவடிக்கையை வாஜ்பாய் அரசு எடுக்கவில்லை, எடுக்கவும் விரும்பவில்லை.

தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் விளைவு

உலகமய, தாராளமயப் பொருளாதாரக் கொள்கை எல்லாத் துறைகளிலும், 1991இல் இருந்து வேகமாக அமலாக்கப்பட்டு வருகிறது. 1998இல் ஆட்சிப் பொறுப்பேற்ற வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக அரசும் முந்தைய அரசை விட மிக வேகமாக தாராளமயக் கொள்கையை அமலாக்கியது. இக்காலத்தில் தமிழகத்திலும் இதே கொள்கைதான் அமலாக்கப்பட்டது. இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளை ஆதரித்தன. இக்கொள்கையை ஆதரித்து அமலாக்கி விட்டு கல்வியில் இடஒதுக்கீட்டுக்காக குரல் கொடுப்பதாக கூறுவது, வினையை விதைத்து விட்டு தினையை அறுக்க ஆசைப்படுவது போல் உள்ளது.

உலகமய, தாராளமயக் கொள்கையில், தனியார்மயம் என்பது முக்கியமான பகுதி. பொதுத்துறை தொழில்களை தனியார்மய மாக்குவதுபோல், கல்வியையும், சுகாதாரத்தையும் தனியார்மயமாக் கினார்கள். இதனுடைய விளைவைத்தான் கல்வித்துறையில் இன்று தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

இவ்விடத்தில் இனாம்தார் வழக்குத் தீர்ப்பில் முற்பகுதியில் நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்து குறிப்பிடத்தக்கது.

A learned academician observes that the 11-Judge Bench decision in Pai Foundation is a partial response to some of the challenges posed by the impact of Liberalization, Privatization and Globalization (LPG); but the question whether that is a satisfactory response, is indeed debatable.

(கற்றறிந்த ஒரு ஆய்வாளர், 11-நீதிபதிகள் கொண்ட பாய் வழக்கு தீர்ப்பு பற்றி கூறும்போது, இத்தீர்ப்பு உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கை எழுப்பிடும் சவால்களை ஓரளவுக்குத்தான் எதிர்கொண்டது. அது திருப்திகரமானதா? இல்லையா என்பது விவாதத்துக்கு உரியது.)

டி.எம்.ஏ. பாய் வழக்கு தீர்ப்பு உலகமய சாவல்களுக்கு ஓரளவுக்கு இறையானது. ஆனால், இனாம்தார் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் உலகமய கொள்கைக்கு முழுமையாக இறையாகியிருக்கிறார்கள் என்பதுதான் பரிசீலனையில் தெரியும் உண்மை.

நிகர்நிலைப் பல்கலைக் கழகம்

கல்வி நிலையங்களில் எல்லாவகையிலும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ள, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய விதிவிலக்கான கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக் கழக அந்தஸ்து வழங்கிடலாம் என்பது முறை. ஆனால், இன்று நிகர் நிலை பல்கலைக் கழக அந்தஸ்து பெறுவது, மாணவர் சேர்க்கையிலும் கல்விக் கட்டணத்தை தீர்மானிப்பதிலும் சுய அதிகாரம் பெற்று கல்வியை முழுக்க முழுக்க வியாபாரமாக நடத்துவதற்காகத்தான்.

இடஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை போன்ற அம்சங்களில் அரசுக்கு அதிகாரம் அளித்திடும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருகிற போது தனியார் நிகர்நிலைப் பல்கலைகழகத்திற்கும் மற்ற எந்த பல்கலைகழகத்திற்கும் விதிவிலக்கு இல்லை என்றளவுக்கு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டுமென்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

இக்கொள்கை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஏற்றுக் கொண்ட தேசிய குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. கல்வி பற்றிய பகுதியில் “Nobody will be denied Professional education because He or She is Poor” (ஒரு மாணவரோ அல்லது மாணவியோ ஏழை என்ற காரணத்தினால் எவருக்கும் தொழிற்கல்வியில் இடம் மறுக்கப்படாது.) இதைத்தான் அமலாக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. பி.ஏ. இனாம்தார் தீர்ப்பு அப்படியே அமலானால், பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் பின்தங்கியுள்ள தலித் மற்றும் பிற்படுத்தப் பட்ட பிரிவினரை தூக்கிவிட முடியாது. எனவே சமூக நீதியை பாதுகாத்திட வேண்டுமென்றால், உச்சநீதிமன்ற தீர்ப்பு திருத்தப்பட வேண்டும். நாடாளுமன்றம் ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதன் மூலமே இதைச் செய்ய முடியும். இத்தகைய திருத்தத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.%d bloggers like this: