சுற்றுச் சூழல் பற்றிய ஞானம் இன்றையத் தேவையாகும். ஆண், பெண் சமத்துவத்திற்கு இந்த ஞானம் மிக அவசியமான ஒன்று. ஆணும், பெண்ணும் இணைந்து இந்த ஞானத்தோடு செயல்படும் பொழுதுதான் இயற்கை நமக்கு உதவுகிறது. இல்லையெனில் அதுவே நமக்கு எமனாகிறது. குறிப்பாக பெண்களை கடுமையாகத் தாக்குகிறது. இன்று சுற்றுப்புற சூழல் பற்றி இரண்டு விதமான பார்வைகள் மோதுகின்றன. ஒரு சாரார் கூறுகின்றனர். மனிதன் அறிவியல் தொழில் நுட்பத்தால் இயற்கையை கெடுக்கிறான். இயற்கையை மாற்றுகிற எந்த நடவடிக்கையிலும் மனித சமூகம் ஈடுபடக் கூடாது என்கின்றனர். இவர்களை சுற்றுப்புறச் சூழல்வாதிகள் என அழைப்பர். இன்னொரு சாரார் இது தவறு, மானுட அறிவியல் வளர்ச்சியால் தான் இயற்கையை பாதுகாக்க முடியும், புதிய புதிய தொழில்நுட்பங்களால் மட்டுமே மானுடமும், இயற்கையும் அழியாமல் பாதுகாத்திட முடியும்.
கண் மூடித்தனமான தொழில் உற்பத்தி முறையும் லாபவெறியுமே இன்று இயற்கையை கெடுக்கிறது. மானுட வாழ்விற்கு எமனாகிறது என்கிறார்கள். சுற்றுப்புற சூழல் பற்றிய இரண்டு அம்சங்களை முதலில் மனதில் கொள்ள வேண்டும். இதில் ஏற்படும் மாற்றங்கள் இருவகைப்படும்.
- இயற்கையின் உயிரியல், வேதியியல் விதிகளின்படி ஏற்படுகிற மாற்றங்கள்.
- மனித சமூகத்தின் செயலால் ஏற்படும் மாற்றங்கள்.
இயற்கை விதிப்படி ஏற்படுகிற மாற்றங்களைத் தவிர மற்றவைகளை ஒழுங்குப்படுத்தும் ஆற்றல் இயற்கைக்கு உண்டு. இந்த மாற்றங்கள் எவ்வாறு நமது வாழ்வை மாற்றுகிறது, எவை, எவை கெடுதலான மாற்றங்கள், அவைகளை சரி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும் அதிலும் குறிப்பாக பெண்களின் பங்கு என்ன என்பதை இங்கே விவாதிப்போம்.
சுற்றுச் சூழலும், பெண்களும்
மனித குல வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே, சுற்றுச்சூழலுக்கும், பெண்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்து வந்துள்ளது. விவசாயத்தைக் கண்டு பிடித்தவர்கள் பெண்கள். மூல வளங்களை பாதுகாத்து, பராமரிப்பவர்களாகவும், இருப்பவர்கள் பெண்கள். சமையல் செய்வது யார்? பெண்கள் வீட்டைச் சுத்தப்படுத்துவது யார்? பெண்கள் வயல்களில் நாற்று நடுவது, களைபறிப்பது என வேலைகள் செய்வது யார்? பெண்கள், குடிநிர் கொண்டு வருவது யார்? பெண்கள், சுள்ளி, விறகு சேகரிப்பது யார்? பெண்கள், வேதங்களில் கூட இயற்கை பெண்ணாக, சக்தியாக, அதீதியாக, அள்ள, அள்ள குறையா செல்வமாக கருதப்படுகிறாள். இயற்கை வளங்கள் அழியும் போது, பெண் ஓரங்கட்டப்படுகிறாள். (வந்தனாசிவா) பெண்களின் வாழ்க்கை, நீர், காடுகள், நிலம், உயிரினங்களுடன் பின்னிப் பிணைந்தது. ஆனால், பல்வேறு வரலாற்று காரணங்களால், ஆண்களுக்கும், பெண்களுக்கும், சுற்றுச் சூழலுடன் உள்ள உறவுகள் சமமில்லாத வகையில் நிர்ணயிக்கப்பட்டு விட்டன. உற்பத்தி வளங்கள் மேலுள்ள உரிமை, வேலைகளில் தரப்படும் பங்கு, வேலைச் சுமைகள், பிழைப்புக்கான மூலங்கள், உணவு, சுகாதாரம் ஆகிய எல்லாமே பெண்களுக்கு சாதகமாக இல்லை.
சுற்றுச் சூழல் பற்றி பெண்களுக்கு நல்ல அறிவும், திறனும், உழைப்பின் மூலம் பெற்ற அனுபவத்தால் கைவரப்பற்றவர்கள் என்பதை வலியுறுத்த பல சான்றுகள் உள்ளன. உணவுத் தாவரங்களை பயிரிடும் பெண்களுக்கு விதை தயாரிக்க, அவற்றை பாதுகாக்க, தட்ப வெப்ப நிலையின் தன்மையை அறிய முடியும். கிராமப்புற பெண், கால்நடை பராமரிப்பு குறித்த (பசு, எருமை, ஆடு, கோழி, வாத்து வளர்த்தல்) அனுபவமும் அறிவும் நிறைந்தவர்கள். பல்வேறு வகையான எரி பொருட்கள் தரம் குறித்த அறிவு படைத்தவர்கள் பெண்கள். சேகரித்த தாவரங்களின் உணவு மற்றும் மருத்துவத்தன்மை பற்றி அறிந்தவர்கள். இவ்வமையான அறிவும், அனுபவமும் பெண்களின் வாழ்வோடும், கலாச்சாரத்தோடும் இணைந்தவைகளாகவே உள்ளன. இத்தகைய சுற்றுச்சூழல் பராமரிப்பு குறித்த பெண்களின் ஞானம் விரிவுபடுமானால் சமுதாயத்தையும் பாதுகாக்கின்றது. இன்று கண்மூடித்தனமான உற்பத்தி முறைகள் இயற்கையை வெகுவாக பாதித்துள்ளது. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாதவர்களாக முதலாளிகளும், அரசுகளும் இருப்பதால் விஞ்ஞான தொழில்நுட்பம் வளர்ந்தும் நமக்கு உதவவில்லை. இதனால் பலவிதமான பாதிப்புகள் நமது வாழ்வை பாதிக்கின்றன.
சுற்றுச் சூழல் பாதிப்பினால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது யார் என்ற கேள்விக்கு, கோடிக்கணக்கான எழை கிராமப்பற பெண்களும் சேரிகளில் வசிக்கும் நகர்ப்புற பெண்களும் என எந்த தயக்கமுமின்றி பதிலளிக்க முடியும். அந்தப் பெண் இளவயதுடையவரா, முதியவரா கர்ப்பிணிப் பெண்ணா என்று எந்த வித்தியாசமும் இன்றி ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் எரி பொருளுக்கும், மாட்டு தீவனத்திற்கும், குடிநீருக்கும் என்ன செய்வதென நடையாய் நடக்க வேண்டியுள்ளது.
உலகமயமாதலும், சுற்றுச் சூழலும்
பெட்ரோல், டீசல் போன்றவற்றை பயன்படுத்துவது அரசியல் பொருளாதார காரணங்களால் தவிர்க்க இயலாமல் போய்விட்டது. இதனால் காற்று மண்டலத்தின் சராசரி வெப்ப நிலை 1.47 செல்சியஸ் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக பனி உருகி கடல் மட்டம் 9.88 செ.மீ. உயருமென்று கணித்துள்ளன. இது பல நாடுகளின் நிலப்பரப்பை அழிக்கும் தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகள் இந்தியா போன்ற நாடுகளை தங்கள் கழிவுகளைக் கொட்டும் கொல்லைப் புறங்களாகவே பார்க்கின்றன. பசுமைக்குழல் வாயுக்களை அதிகமாக வெளிப்படுத்துகின்றன. 1997இல் ஜப்பானில் உள்ள கியோடோ நகரில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி பசுமைக்குழல் வாயுவை வெளியிடுவதை குறைத்துக் கொள்வதாக ஏற்றுக் கொண்டும், அதை இன்னும் அமுலுக்கு கொண்டு வராமல் பல தடைகள் உள்ளன. இது போன்றே நீடித்த நிலைத்த காடுகள் பற்றி விவாதம் எழுந்தபோதிலும் முடிவுகள் எட்டப்படவில்லை. காற்றை கெடமால் பாதுகாக்கும் விஞ்ஞானம் தெரிந்தும் அரசியல் பொருளாதார காரணங்களால் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. என்பதையே இது காட்டுகிறது.
சுகாதாரமும், சுற்றுச் சூழலும்
சுற்றுச் சூழல் மாசுபட்டு கெட்டுப் போகும் போது, சுகாதார கேடுகள் விளைகின்றன. நிலங்கள்: நமது நிலங்களில் சுமார் 50 சதம் நிலங்கள் பயிர்விக்கும் சக்தியை இழந்து நிற்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் வளமிழந்த பூமிகளாகிக் கொண்டிருக்கின்றன.
விளைச்சலை அதிகரிக்க ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் அதிக அளவில் பயன்படுத்துவதால், அதிலிருந்து பயிராகும் பொருட்களை நுகர்வதால் உடலில் நச்சுசேருகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கிறது. இன்று உணவு உற்பத்தியை பெருக்க பூச்சி கொல்லி மருந்து இல்லாத தொழில்நுட்பம் வந்துள்ளது. நீரை சிக்கனமாக பயன்படுத்தும் முறையும் வந்துள்ளது. அதனை புகுத்திட அரசுகள் உதவிட வேண்டும்.
காடுகள் அழிக்கப்படும் போது போதிய அளவு எரிபொருள் கிடைப்பதில்லை. விறகடுப்பு எரிப்பதால் வருகின்ற புகை மூச்சுத் திணறல், ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான பல நோய்களுக்கு காரணமாகிறது. ப்ராங்காய்ட்டீஸ் மற்றும் நிமோகோநோய்சிஸ் போன்றவை கிராமத்துப் பெண்களை தாக்குகிறது. நுரையீரல் புற்று நோய்க்கு இந்த புகை மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இண்டர்மீடியர் டெக்னாலஜி டெவலப்மென்ட் க்ரூப் என்ற அமைப்பு வளரும் நாடுகளில் சமைக்கப் பயன்படுத்தும் பொருட்களால் ஏற்படும் புகை 20 நிமிடங்களுக்கு ஒருவர் இறக்க காரணமாக உள்ளது. என தன் ஆய்வு மூலமாக தெரிவித்துள்ளது.
மொத்தம் இறக்கின்றவர்களின் எண்ணிக்கையில் 25 சதம் வீட்டிற்குள் ஏற்படும் மாசு காரணமாக இறக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. ஆண்டொண்றுக்கு ஏழை நாடுகளில் 1.6 மில்லின் மக்கள் சமையல் புகையால் அகால மரணமடைகின்றனர். இவர்களில் 1 மில்லியன் குழந்தைகள் என்றும், மலேரியா போன்ற நோய்களால் இறப்பவர்களைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிலக்கரி அடுப்பு காரணமாக நுரையீரல் புற்றுநோய் பெண்களை அதிகம் தாக்குகிறது. ஆஸ்துமா, காசநோய்க்கு இது முக்கிய காரணம்.
கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் வசிக்கும் ஏழைகளின் வீடுகளிலும், மாசு ஏற்படுத்தாத எரிபொருளை பயன்படுத்த இயலாமல் இருப்பது மட்டுமின்றி, காற்று வீசும்படியான நல்ல அறைகளும் இருப்பதில்லை. வயது வந்த பெண்களிடையே, நுரையீரல் தாக்கம் தவிர கார்பல்மோனேல் என்னும் இதய நோய் வருவதற்கு புகை காரணம்.
நவீன எரிபொருட்களான காஸ் மற்றும் மண்ணெண்ணெயுடன் ஒப்பிடுகையில், ஒரு வேளை உணவு தயாரிப்பில் விறகு, சுற்றி போன்றவை கிட்டத்தட்ட 100 மடங்கு மூச்சை தாக்கும் துகள்களை பரப்புகின்றன. சுள்ளி, விறகுகளை பயன்படுத்துவதால், சல்பர்டையாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்றவை வெளிவந்து மாசுபடுத்துகின்றன. சிகரெட் பிடிப்பதனால் ஏற்படும் சுகாதார கேடுகள் இந்த புகையாலும் ஏற்படுகின்றன.
நவீன எரிபொருளை பயன்படுத்தாத குடும்பங்களில் பெண்களுக்கு கர்ப்பகால சிக்கல்களும் ஏற்படுகின்றன. (குறைந்த எடையில் குழந்தைகள் பிறப்பது, இறந்தே குழந்தைகள் பிறப்பது, பிறந்த உடனேயே இறப்பது போன்றவை) கார்பன் மோனாக்சைடுதான் ரத்தக்குழாய்களை பாதித்து பின் தாய் குழந்தை இருவரையும் பாதிக்கிறது.
எரிபொருளை புகை, கண்களை பெரிதும் பாதிக்கிறது. ஊதுகுழலை பயன்படுத்துவதால், கண்களில் நீர் வழிதல், கண்ணெரிச்சல் என ஆரம்பித்து நாட்கள் சென்று கண்பார்வை மங்கத் துவங்குகிறது.
எரிபொருள் பயன்பாடு எப்படி உள்ளது என நோக்கும் போது, கிரமப்புறங்களில் 70 சதம் விறகு மற்றும் சுள்ளியும் 18 சதம் சாணமும், 5 சதத்திற்கு குறைவான குடும்பங்கள் கரி மற்றும் கெரசின் பயன்படுத்துகின்றன. 2 சதம் குடும்பங்கள் காஸ் வைத்துள்ளன. நகர்ப்புறங்களை பொறுத்தவரை விறகு, சுள்ளி 30 சதம். சாணம், 5 சதம் மண்ணெண்ணெய் 26 சதம், காஸ் 30 சதம், மின்சார அடுப்புகளை 9 சதம் குடும்பங்களும் பயன்படுத்துகின்றன. (சௌபர்ண முகர்ஜி).
இன்று புகை மண்டா அடுப்புகள் வந்து விட்டன. ஆனால், அது ஏழைகள் வாங்கும் நிலையில் இல்லை. எரிபொருளில் எண்ணெய் நிலக்கரி போன்றவை விட, விறகு சிறந்த எரி பொருளே. அவைகள் மீண்டும், மீண்டும் உற்பத்தி செய்ய இயலும். காடுகளை பாதுகாப்பது என்பது மரங்களை வளர்ப்பதோடு மட்டுமல்ல அவைகளை மரங்களை பயன்படுத்தவும் வேண்டும். இன்று இலை, தழை மற்றும் காய்கறி கழிவு மீதமான உணவு கூட எரிபொருளாகும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. இவைகளை வைத்து மின்சார உற்பத்தி செய்ய முடியும்.
வாகனப் புகை
வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை நம்மை அச்சுருத்தும் ஒரு மாசு என்றால் மிகையாகாது. ஆடம்பரம், பாட்டு, போட்டி, வியாபாரம் என மாறி வரும் காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் எதிர்கால சந்ததிக்கம் பொருள் சேர்த்து வைக்கும் மனிதர்கள் கொஞ்சம் சுத்தமான காற்றையும் விட்டுச் செல்ல எண்ண வேண்டும்.
வேலைக்குச் செல்லும் நேரத்தில் வாகனங்கள், (இரண்டு, நான்கு சக்கர) சிற்றெரும்புகள் போல ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து செல்வது மட்டுமின்றி அரக்கனைப் போல புகையையும் உமிழ்ந்து கொண்டு போவதால், சுகாதார கேடுகள் விளைகின்றன. இந்தியாவின் பெரிய நகரங்களில் தினமும் 800 – 1000 டன் மாசு காற்று வெளிக்குள் செல்கின்றன. சரக்கு வாகனங்கள் 64 சதவீதம் கார்பன் மோனாக்சைட் வெளியிட்டு மாசுபடுத்துதளில் முதலிடத்தை பெறுகின்றன. சாலை சந்திப்பில் சிகப்பு விளக்க எரியும் போது, என்ஜின்கள் மட்டும் ஓடிக் கொண்டிருக்கும். அவை வெளியிடும் நச்சுப்புகை சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவதுடன், பச்சை விளக்குக்காக காத்து நிற்போரின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
வாகனப்புகை மனிதனுக்குப் பகை வாகனப் புகையால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்குகின்றன. கண் எரிச்சல், தலைவலி, தொண்டை எரிச்சல் மற்றும் புற்றுநோய் ஏற்படுகின்றன. சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் செயலிழக்கிறது. அது மட்டுமல்ல. பெரும் நகரங்களில் வசிப்போருக்கு தலைமுடி உதிர்தல், தோலில் அரிப்பு போன்றவை எற்படவும் இந்த நச்சுப்புகை காரணமாக உள்ளது. சிலருக்கு வாந்தி, பித்தம் அதிகரிக்கிறது. பெரு நகரங்களில் முகமூடி பயன்படுத்துவது வாகன ஓட்டிகளிடையே அதிகரித்து வருவது என்பது தற்காப்புக்கான நடவடிக்கையே.
தற்போது போக்குவரத்தை சரிசெய்யும் காவலர்களுக்குத் தூய காற்றை பெறுவதற்கு அக்சிஜன் உருளை வழங்க வேண்டும் என்ற ஆலோசனை உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலும், வாகனப் புகையும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் புத்தக பைகளை தோளில் சுமந்து செல்வது போல, ஆக்சிஜன் உருளையை நாம் அனைவரும் சுமக்க நேரிடும் மேலை நாடுகளில் களைப்பை போக்க, உற்சாகம் பெற ஆக்சிஜன் மையங்களுக்கு சென்று சிறிது நேரம் தூய காற்றை சுவாசித்து வருகின்றனர். இந்தியாவிலும், இது போன்ற மையங்கள் துவக்கப்பட்டள்ளன. ஆனால், சாதாரண மக்கள் அங்கு செல்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஒரு மணி நேரம் அந்த மையத்தில் இருக்க 500 ரூபாய்க்கும் மேல் வாங்கப்படுகிறது. ஏற்கனவே, சுத்தமான காற்றை சுவாசிக்கும் பகுதிகளில் ஏழை மக்கள் வசிக்க முடிவதில்லை. கையில் காசில்லையெனில் இன்று சுத்த காற்றை சுவாசிக்க இயலாது.
நிரந்தர தீர்வு உண்டு
வாகனப் புகையை கட்டுப்படுத்த வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பெரும் திரள் மக்கள் போக்குவரத்தை புகுத்த வேண்டும். கார், இரண்டு சக்கர வாகனம் இன்று ஆடம்பரப் பொருளாக இருப்பதால், பல சங்கடங்கள் நேருகின்றன. இது பண்பாட்டு பிரச்சினை. சுற்றுப்புறச் சூழல் பிரச்சினையல்ல! அதாவது கார் இருந்தால் தான் அந்தஸ்து உயரும் என்று கருதக் கூடாது.
கமழி அடுக்கு (ஓசோன் படலம்)
உயிரைக் கொல்லும் சூரிய கதிர்வீச்சுகளில் ஒருவகையான புற ஊதாக் கதிர்கள் பூமியை நோக்கிப் பாய்வதை கமழி அடுக்கு தடுக்கிற்து. இந்த அடுக்கு மட்டும் இல்லையெனில் புறப்பரப்பை அடையும் புறஊதாக்கதிர்கள் வெப்பத்தை அதிகரிக்கும். இதனால் மனித இனமே அழிந்து போகும். ஓசோன் அடுக்கு பூமிக்கு ஒரு குடை போன்று இருந்து நம்மை காக்கிறது. உயிர்களின் மரபுக்கூறான டி.என்.ஏ.யைப் பிளக்கும் வலிமை கதிர்வீச்சுக்கு உண்டு. மனிதர்களின் பேராசையால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு, கமழி அடுக்கில் ஓட்டைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் 50 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் மக்கள் சரும புற்று நோய்க்கு ஆட்படுபவர் என அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. பனிமலைகள் உருகி கடற்கரை பகுதிகளில் வெள்ளம், மற்ற பகுதிகளில் வறட்சி, வெப்பம் அதிகரித்தல் ஆகியவை கூடுதலாகும். இதனால் பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படுமென நாசா நிபுனர்கள் கூறுகின்றனர்.
ஓசோன் அடுக்கில் ஒரு சதம் இழப்பு ஏற்பட்டால் தோல் புற்று நோய் பல மடங்கு அதிகரிக்குமென உலக சுகாதார நிறுவனமும் எச்சரித்துள்ளது. கண்பார்வை இழப்பு வெப்ப நிலை அதிகரிப்பால் ஏற்படும் மற்றொரு அபாயகர விளைவாகும்.
ஓசோன் படலத்தை கெடுக்கும் குளோரா, புளோரா, கார்பன் வேதியல் பொருட்களை குறைவாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் உள்ளது. இதைப் புகுத்த அரசுகள் தயாராய் இல்லை. இந்து பொருளை தயாரிக்கும் பகாசூர நிறுவனங்களின் லாப வெறியே இன்று ஓசோன் படலத்தை கெடுக்கிறது. இரசாயனத் தொழிற்சாலைகள் அமில ஆவியை காற்று வெளிக்குள் செலுத்துகின்றன.
கடந்த பத்தாண்டுகளில் டெல்லியை சுற்றி ஏற்படுத்தப்பட்ட 40,000 தொழிற்சாலைகளில் 30,00 ஆலைகள் மக்கள் வசிக்குமிடத்திலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6000 டன் கரியமல வாயுவை இந்த ஆலைகள் வெளியேற்றி சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன.
நச்சுப் புகை மனித உடலில் மூச்செடுப்பின் மூலம் புகுந்து, நுரையீரலைக் கடந்து இரத்த ஓட்ட மண்டலத்தை அடைகிறது. இதனால் கருத்தரிப்பு கோளாறு, குறை பிரசவம், தானாக கரு சிதைதல், உருக்குலைந்த குழந்தை பிறப்பு ஆகிய பிரச்சினைகள் தோன்றுகின்றன. ஊடி என்ற வாயு கடுமையான எரிச்சலை தருகிறது. மனித உடலில் பெரும் பாதிப்பை உண்டாக்கும் வாயு இது என்றால் மிகையாகாது. இந்த வாயுவின் அடர்வு அதிகரிப்பதற்கேற்றார்போல் விளைவுகளும் அபாயகரமானவை. பார்வை கோளாறு, தலைவலி, கிறுகிறுப்பு, சுயநினைவு இழப்பு, பதைபதைப்பு, மனக்கோளாறு, வாந்தி, ஆகியவை அதிக அளவில் ஏற்படும்.
பெட்ரோல், நிலக்கரியினால் ளுடி2 என்ற வாயு வெளிப்படுகிறது. அமில மழைக்கும் இந்த வாயு காரணம். இந்த வாயு கெட்ட நெடியுடன் கூறியது. ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற சுவாச நோய்களும் இம்பஸிமா என்ற நுரையீரல் நோய் நெஞ்சு சளி, இருமல் ஆகியவை தவிர கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட காரணமாக உள்ளது.
உலோகம் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள், காகித ஆலைகள் அருகேயுள்ள சாகுபடியாகும். பயிர்களின் மகசூல் பாதிப்பிற்கு இந்த ஆலைகள் வெளியிடும் ளுடி2 வாயு காரணமாக இருப்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பல தொழிற்சாலைகள் வெளிவிடும் ழ2ளு என்ற நிறமற்றவாயு நச்சு நிறைந்தது. அழுகிய முட்டை நாற்றம் உடையது. மூச்சிழுக்கும் போது, அதிக அளவில் சென்றால், கோமா நிலையும், வயதானவர்களுக்கு இறப்பையும் ஏற்படுத்துகிறது. விஷக்கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. லாப நோக்கத்தால் முதலாளிகள் புகுத்த மறுக்கின்றனர். அரசும் தலையிட தயாரில்லை.
அமில மழை
வளிமண்டல மாசுகளுடன் நீர்த்துளிகள் சேர்ந்து ரசாயன விளைவுகளை ஏற்படுத்துவதால் அமில மழை பொழிகிறது. இது தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளின் பிரச்சினை என நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். தாவர, விலங்கினங்கள். ஐரோப்பாவில் கடும் பேரழிவுக்கு ஆளானதற்கு காரணம் அமில மழை. இந்தியாவில் டெல்லி, கான்பூர், பூனா, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் அமில மழை பதிவுகளை தெளிவுபடுத்துகின்றன. அமில மழையால் மண்ணில் உள்ள பல ஊட்டச் சத்துக்கள் (மு, ஊய, ஆப) போன்றவை இழக்கப்படுகின்றன. இதனால், மண் மலட்டுத்தன்மை பெறுகிறது. விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
சுற்றுச் சூழல் பாதிப்பால் சுகாதாரம் பாதிக்கப்படுவதைப் பற்றி கூறும் போது, இந்திய நாட்டின் வரலாற்றில் கரைபடிந்த போபால் விஷவாயு சம்பவத்தை நினைவு கூறாமல் இருக்க முடியாது. இது விபத்தல்ல; ஒரு அமெரிக்க நிறுவனம் விஷவாயுவை போதுமான பாதுகாப்பு இல்லாமல் கூடுதலாக ஒரே இடத்தில் சேமித்து வைத்ததால் வந்த வினை. குளிர்பதனம் செய்யாமல் விடப்பட்டதால் வாயு வெளிக்கிளம்பி நகரையே நாசமாக்கியது.
யூனியன் கார்பைட் பூச்சி மருந்து தொழிற்சாலையிலிருந்து 1984ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மிதைல் ஐசோசயனைட் என்ற விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விஷசாயுக் கசிவால் சுமார் 2 லட்சம் போபால் மக்கள் பாதிக்கப்பட்டனர். 5000 பேர் மரணமடைந்தனர். பல ஆயிரம் பேர் பார்வையிழந்தனர். அப்போது கர்ப்பிணிகளாக இருந்தவர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் மூன்றில் இரண்டு இறந்து விட்டன. இந்த விபத்திற்கு பின் பிறந்த 1350 குழந்தைகளில் 16 குழந்தைகளுக்கு உடல் உறுப்புக்கள் குறைந்தும், 60 குழந்தைகள் முழு வளர்ச்சி அடையாமலும் இருந்ததென மருத்துவர்கள் தெரிவித்தனர். போபாலைச் சுற்றி 3.5 சதுர கிலோ மீட்டர் பரப்பில் தாவரங்கள் மடிந்தன. பயிர்களில் விஷவாயு பாதிப்பு தெரிந்தது. பழ மரங்களிலிருந்து அறுவடை செய்த பழங்களை உண்ண முடியவில்லை. 1985இல் மொத்தம் 2584 நோயாளிகள் விஷவாயு தாக்கி மருத்துவமனைக்கு வந்தனர். 2002ல் இந்த எண்ணிக்கை 4230 என்று உயர்ந்தது.
12 விதமான ரசாயன கலவைகள் பாதிப்புகளை நீண்ட கால அடிப்படையில் ஏற்படுத்தியுள்ளன. இந்த விஷத்தன்மை போக்க தொழில்நுட்பங்கள் இருந்தும் அரசு எதுவும் செய்யவில்லை.
26 ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம், வலி, மரத்து போதல், வாந்தி, தலைவலி, வயிற்று வலி, வீங்குதல், பைத்தியமாதல் என போபால் மக்கள் மீதான தாக்கம் விளக்கப் பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவெனில் லாப வெறியால் பாதுகாப்பு ஏற்பாட்டை புகுத்த மறுத்த முதலாளியை இந்திய அரசால் கைது செய்ய முடியவில்லை. அமெரிக்க அரசு அவனை பாதுகாத்தது. இன்று அம்மக்களுக்கு நட்ட ஈடும் போய் சேரவில்லை.
(ஆதாரம் : வரதராஜன் குழு அறிக்கை 1987)
நீர் மாசும், சுகாதாரமும்
தண்ணீர் மிகச் சிறந்த உணவுதான். உணவின்றி மனிதன் 60 நாட்கள் வாழலாம். நீர் மட்டும் அருந்தினால் போதும். ஒருவருக்கு ஒரு நாளில் சராசரியாக 900 மில்லி லிட்டர் வியர்வை வெளியாகிறது. குளிர்காலத்தில், இது குறையலாம். உடல் எடையில் மூன்றில் இரு பங்கு தண்ணீர் வடிவம்தான்.
மனித உடலின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை தண்ணீர், போதுமான தண்ணீர் அருந்தாவிட்டால் உடல் செல்கள் அனைத்தும் வாழ விடுகின்றன. டாக்டர் பார்டின் என்பவர் உங்கள் உடலுப்புகள் தண்ணீருக்காக அழுகின்றன என்று ஒரு நூலே எழுதியுள்ளார். நெஞ்செரிச்சல், தலைவலி, மூட்டுவலி, முதுகுவலி, உடல் சோர்பு முதலியன பல நேரங்களில் உடலில் நீர்கூறு அகன்றதன் விளைவான பிரச்சினைகளே என்கிறார்.
தண்ணிர் மிகச் சிறந்த கரைப்பான். உடலின் கழிப்பு பொருட்களை வெளியேற்ற தண்ணீர் அவசியம். மருந்து – மாத்திரை போன்ற ரசாயன சிசுக்களையும், செத்துப்போன உடல் செல்களையும் வெளியேற்ற நீர் அவசியம்.
இரத்தத்தில் போதிய அளவு நீர் இருந்தால்தான் மூளைக்கும், உடலின் எல்லா உறுப்புகளுக்கும் போதுமான அளவு ஆக்சிஜனை எடுத்துச் செல்ல முடியும். நீர் வறட்சியால், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்த்துமா ஒற்றைத் தலைவலி, சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படும். முறையாக நீர் அருந்தி வந்தால் நமக்கு ஏற்படும் 75 சதவீத நோய்களை எளிதில் எதிர் கொள்ளலாம்.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் நன்கு நீர் அருந்த வேண்டும். உடல் தசை நார்கள் நன்கு விரிய போதுமான நீர் வேண்டும். மாத விலக்கு சமயத்தில் கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்பாக கருப்பை செயல்படுகிறது.
இப்படி அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ அடிப்படையாக உள்ள நீர் இன்று மாசுபட்டு வணிகப் பொருளாகி விட்டது. நீர் மாசு காரணமாக ஏற்படும் நோய்கள் ஏராளம்.
1947இல் 8 லட்சம் பேர் மலேரியாவால் இறந்தனர். 1965இல் மலேரியாவால் யாரும் இறக்கவில்லை. அது கட்டுப்படுத்தப்பட்டது. மீண்டும் 1985க்குப் பிறகு மலேரியா தாக்குதல் அதிகரித்துள்ளது. மலேரியா நகர்ப்புறங்களில் கூடுதலாக பாதிக்கத் துவங்கியுள்ளது. முன்பு மலேரியாவே இல்லாத இடங்களில் கூட மலேரியா கேசுக்கள் பதிவாகியுள்ளன. 50 சதம் மலேரியா கேசுகள் தமிழகத்தில்தான் என்பது கவலையளிக்கும் விஷயம்.
முன்பு உ.பி. போன்ற மாநிலங்களில் நீரில் ஆர்சனிக் அமிலர் பல மாநிலங்களிலும் இதே நிலை. தோல் புற்றுநோய் வெகுவாக பாதிப்பதற்கு இது காரணம். டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ நிறுவனத்தின் டாக்டர் நீனா கன்னா இது தொடர்பாக நிறைய ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார். தன்னிடம் வருகின்ற நோயாளிகளை ரத்த பரிசோதனை செய்த அவர் அதிர்ச்சி அடைந்தார். மற்ற சில மாநிலங்களிலும் இதே நிலை. கைபம்பு தண்ணீரால் தனக்கு புற்றுநோய் வருமென யார் தான் நினைப்பார்கள்?
நீரிலுள்ள நச்சு உடலில் இறங்குவது உடனடியாகத் தெரியாது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இந்த நீரை அருந்தினால் உடலில் மார்பின் மேல், பின்புறம், கைகளில் கருப்பு புள்ளிகள் தோன்றும், டாக்டர்கள் இதை மெலனோசிஸ் (Melanosie) என்கின்றனர். உள்ளங்கைகள், பாதங்கள் சொரசொரவென கடினமாகி, உணர்வற்று போகும். இதற்கு கெரடோசிஸ் (Keratosie) என்று பெயர். தவிர, நோயாளிகளுக்கு கண் சிவந்து போதல், ப்ராங்காயிடிஸ், நுரையீரல் பாதிப்பு, வயிற்று போக்கு. வயிற்று வலி ஆகியவை இருக்கும்.
இரண்டாம் கட்டத்தில் கருப்பு புள்ளிகளுடன் வெள்ளை புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. கால்கள் வீங்க ஆரம்பித்து, பாதம் வெடித்து, ரத்தம் கூட வர ஆரம்பிக்கின்றன. இந்த புண்கள் அதிகரித்து, நடக்கவோ, வேலை செய்யவோ இயலாமல் செய்து விடுகின்றன. கைகள் மற்றும் கால்களில் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன.
மூன்றாவது கட்டத்தில் காலை வெட்டி எடுக்குமளவு புண்கள் மோசமாகி, சிறு நீரகம் கல்லீரல் ஆகியவற்றை பாதிக்கின்றன. இறுதியில் புற்று நோயாக மாறுகிறது. ஆர்சனிக் டாக்சிடிசி எனப்படும் நச்சினால் புற்றுநோய்க்கு மருந்து இல்லை. (நீனா கண்ணா AIIMS)
2004ல் நடத்தப்பட்ட ஆய்வு மூலம், கங்கை, பிரம்மபுத்திரா நதிகளை ஒட்டிய பல கிராமங்கள் இப்படி பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ப்ளோரைட் கலந்துள்ள நீரை தொடர்ந்து அருந்துவதால் ப்ளுரோசிஸ் என்ற நோய் தாக்குகிறது. முதல் முதலில் 1937ல் ஆந்திராவில் இந்நோய் தாக்கம் பற்றி தெரிய வந்தது. தற்போது தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் ப்ளுரோசிஸ் தாக்கம் உள்ளது. முட்டுகள் வீங்குதல், ஈறு வீங்குதல், தோல் தடித்தல் என பல பிரச்சனைகள் எழுகின்றன.
2003ம் ஆண்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 979 காலரா கேசுகள் பதிவாகின. இதே போல கடலூர் மாவட்டத்தில் 1981ல் சிப்காட் அமைக்கப் பட்டு, 1990லிருந்து கடலூர் கடுமையாக குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நீர் வளம் அதிகம் கடந்த 10 ஆண்களில் நிலத்தடி நீர் விஷமாக மாறியுள்ளது. ஷாசன் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் தான் முக்கிய காரணம்.
இதுபோல காவிரி நீர் மிகவும் மோசமாக மாசுபட்டுள்ளது. க்ளோரினை மிக அதிக அளவில் கலந்து, குடிநீராக விநியோகம் செய்யப்படுகின்றது. க்ளோரின் நீரை தொடர்ந்து உட்கொள்வதால், முடி உதிர்தல், தோலில் வெடிப்பு ஏற்படுதல் போன்ற விளைவுகளை சந்திக்க வேண்டியுள்ளது. குளோரின் நீரிலிருந்து வெளியேறும் தன்மை கொண்டது குளோரின் கலந்த நீரை அகண்டபாத்திரம் சில மணி நேரம் விவாதித்திருக்கலாம். சமீபத்தில் நொய்யல், பவாணி ஆறுகளில் திருப்பூர் சாய ஆலைகளின் கழிவுகள் வெளியே விடப்பட்டு காவிரி நீர் குடிக்க லாயக்கற்றதாகி விட்டது. திண்டுக்கல், திருச்சி தோல் பதனிடும் ஆலைகள், கரூர் சாயப்பட்டறைகள் என ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலத்தடி நீர் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது.
உணவும், சுகாதாரமும்
உணவும், சுகாதாரமும் பற்றிய நிபுணர்குழு, கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள் நுகரும் உணவுப் பொருட்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 57 இந்திய கம்பெனிகளும், 10 பன்னாட்டு கம்பெனிகளும் பூச்சிக் கொல்லி மருந்துகளை தயாரிக்கின்றன. இதற்கான மொத்த சந்தை மதிப்பு 3800 கோடி முதல் 4100 கோடி ரூபாய் வரையாகும். தவிர, 400 சிறு தொழில் யூனிட்டுகளும் பூச்சி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
அரிசியில் 56 சதம், கோதுமையில் 43 சதம் அன்று பூச்சிக்கொல்லி மருந்து தங்குவதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. மாசுபட்ட நிலம், மாசுபட்ட நீர், மாசுபட்ட காற்று இப்படிப்பட்ட பின்னணியில் பயிராகும் தானியங்கள் உடலுக்கு கேடு விளை விக்காமல் என்ன செய்யும்?
இந்தியாவில் மிக அதிகமாக பூச்சிக் கொல்லி இருப்பு தங்கும் பொருட்கள் பழங்கள், காய்கறிகள், மற்றும் பால் ஆகும். சுற்றுச் சூழல் பாதித்து, மாடுகள் நல்ல ஆரோக்கியமான தீவனத்தை உண்ண இயலாததால், பாலின் தரம் மோசமாக உள்ளது. உணவில் எந்த அளவுக்கு பூச்சிக் கொல்லி உள்ளன என்பதை கண்காணிக்க அமைப்புகள் இருந்த போதிலும், நிலமை மோசமாக உள்ளது.
சுற்றுச் சூழல் – சுகாதாரம் – அரசு
வளர்ந்துள்ள நாடுகளில் சுற்றுச் சூழலுக்கு அரசு கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்வதுடன், சுற்றுச் சூழலை மாசுபடுத்து வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. சுகாதாரத்தைப் பொறுத்தவரை, வளர்ந்துள்ள நாடுகளுக்கும், பின் தங்கிய நாடுகளுக்கும் இடையே நிறைய இடைவெளி உண்டு.
வளர்ந்துள்ள 25 நாடுகள் | வளரும் நாடுகள் | பின்தங்கியுள்ள 45 நாடுகள் | |
ஆயுட்காலம் | 76 ஆண்டுகள் | 62.2 | 51.2 |
பிரசவ கால இறப்பு (1 லட்சத்திற்கு) | 30 | 488 | 1100 |
5 வயதுக்குட்பட்டோர் இறப்பு (1000க்கு) | 16 | 65 | 171 |
நாடுகளுக்கிடையே மட்டுமின்றி, இந்தியாவில் மாநிலங்களுக்கிடையேயும் ஏகப்பட்ட ஏற்றத் தாழ்வுகள் இருப்பதை காண முடியும்.
சுற்றுச் சூழல் சட்டங்கள்:
சுற்றுச் சூழல் குறித்து ஏறத்தாழ 200 சட்டங்கள் இருப்பதாக திவாரி கமிட்டி குறிப்பிட்டுள்ளது.
புதிய சுற்றுச் சூழல் சட்டங்கள்
- தண்ணீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம்) 1972
- காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம்) 1981
- சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம் (1986)
- பொது பொறுப்புரிமை காப்பீடு சட்டம் (1991)
- தேசிய சுற்றுச் சூழல் தீர்ப்பாய சட்டம் (1995)
- தேசிய சுற்றுச் சுழல் மேன்முறையீட்டு அதிகாரக் குழுச் சட்டம் (1997)
தண்ணீர் தொடர்பான சட்டம் கழிவு நீரை ஆறு ஓடைகளில் விழுவதை தடுக்க வேண்டும். மீறினால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அந்த நிறுவனங்களின் உற்பத்தியை முடக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் உண்டு நடைமுறையில்???
காற்று மாசை தடுக்கும் உரிமை வாரியத்துக்கு உண்டு. 5 ஆண்டுகள் தண்டனை கூட தரலாம். ஆனால், இவற்றை பரிசோரிக்க வேண்டிய ஆய்வாளர்கள் அதிகாரிகள் கண்டுகொள்ளவதில்லை.
இந்த சட்டங்கள் இருந்தும், ஊழல் நிர்வாக அமைப்பால் எதுவும் அமுலாவதில்லை. முதலாளிகளின் லாப வெறியும், ஆடம்பர பொருள் உற்பத்தி பண்பாடும் மாற வேண்டுமானால் மக்கள் இயக்கம் வலுப்பட வேண்டும். மக்கள் இயக்கம் அரசியல் சக்தியாக உயரும் பொழுது தான் மாற்றங்கள் ஏற்படும். இயற்கையும், மனித சமூகமும் இணைந்து வாழ முடியும். அதில் பெண்களின் பங்கு முக்கியம் என்பதை ஆண்கள் உணர வேண்டும். பெண்கள் அமைப்பு எதை உணர்த்த வேண்டும்.
சுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்காத விவசாய முறைகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான அறிவாற்றலை பெண்களுக்கு அளிக்க வேண்டும். நீர், நில, வன வளங்களை பாதுகாப்பதற்கான சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கறாராக அவற்றை அமுலாக்க வேண்டும்.
சுகாதார கேடுகளை விளைவிக்கும் ஆலைகள், கழிவுகளை அப்புறப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்காவிடில் அவற்றின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்த,
- தேவையான மருந்துகள்
- போதிய அளவு மருத்துவர்கள்
- 24 மணி நேர சேவை
போன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகள் சுற்றுச் சூழல் பாதிப்பினால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உதவி அளிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள ஏற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும்.