மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நில உடமையின் இன்றைய பிரச்சினைகள்


பணப்புழக்க பண்பாடு எங்கெனும் பரவி விட்ட 21ஆம் நூற்றாண்டில் நிலம், உணவு, வேலை என்ற பழைய முழக்கங்களை, மீண்டும், மீண்டும் மூச்சு விடாமல் ஜெபிக்கும் மார்க்சிஸ்ட்டுகள் உருப்படமாட்டார்கள் என்று தாராளமய பாடங்களால் பயிற்றுவிக்கப்பட்ட படிப்பாளிகள் கூட்டம் நம்மை ஏகடியம் செய்யலாம்.

உலகமய நாகரீகத்தின் கதாநாயகனாக காட்சி தரும் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷிலிருந்து, அதிரடி அறிவிப்பு முதலிட நாயகி தமிழக முதல்வர் வரை வாரி வழங்குகிற அறிவுரைகளை மண்டையில் ஏற்றிக் கொள்ளாத மரமண்டை மார்க்சிஸ்ட்டுகள் என்று பத்திரிகைகளில் கைவலிக்க எழுதும் மேதைகள் நம்மை ஏசலாம். அந்த மாண்புமிகுகளின் அறிவுரைகள் என்ன?

வறுமை, வறுமை என்று புலம்பாதே பணம் பண்ணு வறுமை ஓடிவிடும்:! பணம் பண்ணுகிற சுதந்திரத்தை உலகளவில் காக்கவே, அணுகுண்டுகளும், அதிரடிப் படைகளும் உலகளவில் சுற்றிவரச் செய்துள்ளேன் என்று ஜார்ஜ் புஷ் கூட்டம் தோறும் பேசுவதை டி.வி.யில் கேட்கலாம்.

தமிழக முதல்வர் அடிக்கடி வலியுறுத்தி பேசுவதென்ன?

உணவுப் பயிர் செய்து வறுமையில் வாடாதே பணப் பயிர் செய்து பணக்காரனாக ஆகு. (அம்மாவிற்கு வரலாறு தெரியாது. பிரிட்டீஷ் வியாபாரிகள்தான் நமது விவசாயிகளைப் பார்த்து உணவுப் பயிர் செய்யாதே, கஞ்சா, அவுரி போன்ற பணப்பயிர் செய் என்று அறிவுரை வழங்கினார்கள். அதன் பிறகு நாம் வேகமாக அடிமையாக ஆனோம்.)

இந்த அறிவுரைகளுக்கும் ரொட்டி கிடைக்கவில்லையா? கேக் சாப்பிடுங்கள் என்று 216 ஆண்டுகளுக்கு முன் உப்பரிகையிலே நின்ற பிரான்சு நாட்டு மகாராணி வீசியெறிந்த அறிவுரைக்கும், ஏகப்பட்ட வேற்றுமைகள் உண்டு என்றாலும் யாரும் மறுக்க முடியாத ஒரு ஒற்றுமை உண்டு. இந்த அறிவுரைகள் எல்லாம், அதிகார போதை தலைக்கேறியதால் ஏற்பட்ட மமதையில் வெளிவந்த உளறல்கள்.

பணம் பண்ணுவதால் வறுமை ஓடிவிடும் என்றால் வங்கிகளிலே புழுத்துக் கிடக்கும் பணம் என்றோ வறுமையை ஓட்டியிருக்க வேண்டும். பணப் பெருக்கத்தை, பணவீக்க வியாதி என்று நிபுணர்கள் கூறமாட்டார்கள். இந்த அறிவுரையின் உள்ளார்ந்த பொருள் என்னவெனில்; நிலத்தையும், தொழிலையும் பயன்படுத்தி உழைப்பாளர்கள் உற்பத்தி செய்யட்டும். அவர்கள் உணவிற்கே அல்லாடட்டும். நீ பணம் பண்ணுவதிலேயே குறியாக இரு என்பதுதான். இந்த உளறல்கள் எதை உணர்த்துகின்றன! நிலம், உணவு, வேலை என்பது  மிக அடிப்படையான சமூக பிரச்சினைகள்.  நிலம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் உயிர் மூச்சு என்பதை உணர்வதற்கே ஒரு ஞானம் தேவைப்படுகிறது.

அதற்கு மேல் இப்பிரச்சினையில் தெளிவைப் பெற வேண்டியிருக்கிறது. தெளிவு இருந்தால்தான் தீர்வுகளை தேட முடியும், அந்த தீர்வும் மக்களின் பங்கெடுப்பில்லாமல் நடைமுறைக்கு வராது. இதையெல்லாம் அதிகார மமதையில் உளறுகிற புஷ்ஷூகளும், அம்மாக்களும் அவர்களது பரிவாரங்களும் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே என்ற கவலை நமக்கில்லை. ஆனால், பொருளாதார வளர்ச்சியையும், மானுட சமத்துவத்தையும் பிரிக்க கூடாது என்று ஏற்றுக் கொள்ளும் நமது பிரதமர் போன்ற அரசியல் செல்வாக்குள்ள பொருளாதார நிபுணர்கள் கூட மார்க்சிஸ்ட்டுகளை அவதூறு செய்வதில் முனைப்புக் காட்டுகிறார்களே தவிர புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. போதுமான அரசியல் ஆதரவு இல்லையென்றாலும், உலகளவில் அங்கீகாரம் பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் போன்றவர்கள் கூறுவதைக் கூட இவர்கள் செவி மடுப்பதில்லை என்ற கவலை நமக்குண்டு.

பிரதமரானாலும், மார்க்சிஸ்ட்டுகளானாலும் அனைவரும் மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நிலம், உணவு, வேலை ஆகியவைகளின் இன்றைய பிரச்சினைகளையும், அதற்கான தீர்வு தேடும் முயற்சிகளையும் மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது அவசியம் என்று மார்க்சிஸ்ட்டுகளாகிய நாம் கருதியதாலேயே ஒரு பிரச்சார இயக்கம் நடத்த மாநாட்டிலே முடிவு செய்தோம்.

இன்று மனம் விட்டு பேசுகிறபொழுது மக்கள் என்ன பேசு கிறார்கள், பொது இடங்களில் அவர்கள் எதை அலசுகிறார்கள், வம்பளப்புகளில் அதிகமாக அடிபடும் பிரச்சினைகள் என்ன? சங்கடங்களை மறக்க எதைச் சார்ந்து நிற்க தள்ளப்படுகிறார்கள். இவைகளை கவனியுங்கள் எண்ணிக்கையில் பல, பல கோடிகள் இருக்கும். கிராமப்புற ஏழைகளும், நகர்ப்புற ஏழைகளும் ஒன்றுக்காக ஏங்குவது தெரியும்.

தங்களது ஒற்றுமையின் வலிமையை காட்டவல்ல அமைப்பிற்காக ஏங்குகிறார்கள். இன்றைய அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள். சுயநலமிகளும், ஒழுக்கங்கெட்டவர்களும் அரசியலிலே ஆதிக்கம் செய்வதைக் கண்டு குமுறுகிறார்கள். அந்த ஏழைகள் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம், ஒழுக்கத்தையும் சமத்துவத்தையும் வாய்வீச்சுகளை தாண்டி செயல்படுத்தவல்ல ஒரு அரசியல் கட்சியையே.

அத்தகைய கட்சியைத் தாருங்கள், எங்களது ஒற்றுமை பலத்தால், பொருளாதார வளர்ச்சியையும், சமத்துவத்தையும் இணைக்கும் அற்புதங்களை செய்வோம் என்று அவர்கள் வழியிலே நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.

I

நிலம், உணவு, வேலை இம்மூன்றின் நிலவரங்கள் என்ன? பிரச்சினைகள் என்ன? வரலாற்று ரீதியாக தீராமல் இருக்கும் மூத்த பிரச்சினைகள், புதிய சூழலால் ஏற்படும் புதிய பிரச்சினைகள் எவை, எவை இவைகளை சற்று சிரமப்பட்டு புரிய வேண்டியதிருக்கிறது.

நிலம் என்பது சமூக உழைப்பால் சொத்துக்களை உருவாக்க இயற்கை தந்த சொத்தாகும். ஒரு சமூகத்தில் அதாவது இந்தியாவில் நிலம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது மிக அடிப்படையான கேள்வி.

  1. பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களிடையே ஏற்றத் தாழ்வை போக்கி சமத்துவத்தை அடைவதற்கும் உரிய கருவியாக நிலம் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது
  2. சிலர் சொத்துக்களை சேர்க்க, மக்களின் உழைப்பை சுரண்டும் கருவியாக நிலம் உள்ளதா? அல்லது
  3. சுதந்திரத்தை பறிக்கவும், நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைப்பதற்கும் நிலம் ஒரு கருவியாகப் போகும் நிலை உள்ளதா?

இக்கேள்விகளுக்கு பதில் வரலாற்று ரீதியாக அலசினால்தான் கிடைக்கும். இந்தியாவின் வரலாறு கூறுவதென்ன?

வரலாற்றின் ஒரு கட்டத்தில் நிலத்தின் மீது ஆதிக்கம் செலுத்த ஒரு கூட்டம், நிலத்தில் பாடுபடும் விவசாயினர் என வர்க்கப் பிரிவினை எழுந்தது. மக்களின் கூட்டு உழைப்பால் நிலத்தில் விளைபவைகளை வர்ணாஸ்ரம தர்ம அடிப்படையில் மக்களிடையே பகிர்ந்து கொள்ளும் அசமத்துவ பகிர்வு முறை நுழைக்கப்பட்டது.

இந்த வர்ணாஸ்ரம தர்மம், பாவம், புண்ணியம் என்ற மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இம்மண்ணில் பிறந்த மனிதர்கள் அனைவரும் சமஉரிமை படைத்தவர்கள் என்பதை மறுக்கும் தர்மம். இந்த தர்மத்தின் மூலம் சொத்துக்களை உருவாக்கும் நிலம் பொதுவானதாக இருந்தாலும், அதில் உருவாகும் விளைச்சல் உழைப்பவனுக்கு இல்லை என்றது. சுரண்டல் தர்மம் தெய்வாம்ச விளக்கங்களால் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அன்று நிலம் பொதுவுடைமையாக இருந்ததாக பழைமைவாதிகள் கூறுவர்.

ஆனால் மார்க்சிஸ்ட்டுகள் அந்த வாதத்தை மறுக்கிறார்கள். அன்று மக்கள் தொகை குறைவு; நிலப்பரப்பு முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை, நிலவுடைமை என்ற பிரச்சினையே எழவில்லை. வர்னாஸ்ரம தர்மம் சமூக வாழ்வில் புகுந்த பிறகு விவசாயம், ஆடு, மாடு வளர்த்தல், கிராம சுகாதாரம் பேனல் ஆகியவற்றில் நேரடியாக ஈடுபடும் ஆணும், பெண்ணும் பட்டி மாடுகளாக கருதப்பட்டனர். இவர்கள் உணவைப் பெறும் உரிமை இருந்தாலும், விருப்பப்படி செயல்பட முடியாதவர்களாக, சுயமரியாதை அற்றவர்களாக, உழைப்பிற்குரிய பங்கை பெற முடியாதவர்களாக இருந்தனர். எல்லா வகையிலும் உழைக்கும் பெண்கள் நிலை ஆண்களை விட மோசமாக இருந்தது. இந்த பகிர்வுமுறை ஒரு தேக்கத்தை, விளைவித்தது.

வரலாறு இப்படியே நகரவில்லை; வர்னாஸ்ரம தர்மத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல்கள் எழுச்சிகள் ஏட்டிலே இடம் பெறாமல் போயிருக்கலாம். ஆனால், வரலாற்றை இழுக்கும் சக்தியாக அவைகள் இருந்தன. அவர்கள் விரும்புகிற திசையில் வரலாறு நகரவில்லை என்றாலும், மார்க்ஸ் குறிப்பிட்டது போல் வரலாற்றில் மாற்றங்காண அவர்கள்தான் காரணமாய் இருந்தனர்.

II

வரலாற்றின் அடுத்த கட்டத்தில் வியாபாரம் செய்ய வந்தவர்கள், நம்மை அடிமையாக்க நிலத்தை கருவியாக்கினர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் நமது சுதந்திரத்தை பறிக்கவும், நமது பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்கவும் நிலம் பயன்படுத்தப் பட்டது.

1793 இல் நிரந்தர குடியிருப்புச் சட்டம் என்ற சட்டத்தின் மூலம், நிலவுடைமையை உருவாக்கினர். இதன் மூலம் ஜமீந்தாரி முறையை புகுத்தினர். சில இடங்களில் நிலவுடைமையாளர்களையும் அனுமதித்தனர். நேரடியாக வரி செலுத்தும் உடைமையாளர்கள் என்ற ரயத்துவாரி முறையையும் புகுத்தினர். இதன் விளைவாக வர்னாஸ்ரம தர்ம அடிப்படையில் விளைச்சலில் உள்ள கொஞ்ச நஞ்ச பகிர்வு உரிமையையும் விவசாயத்தில் நேரடியாக ஈடுபடுபவர்கள் இழந்தனர். பண்ணை அடிமைகளாகவும், குத்தகை விவசாயிகளாகவும், உழைப்பாளர்கள் மாற்றப்பட்டனர். ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற கதைபோல் விவசாயிகள் வாழ்வு ஆனது. வர்னாஸ்ரம தர்மம் ஒழிய போராடியவர்கள், அதை விட நிச்சயமற்ற வாழ்விற்கும் உரிமைகள் இல்லாத உழைப்பிற்கும் தள்ளப்பட்டனர். வர்ணாஸ்ரம தர்மம் புகுத்திய ஏற்றத் தாழ்வும் அப்படியே நீடித்தது.

வர்ணாஸ்ரம தர்ம அடிப்படையிலான பகிர்வு முறையே நம்மை பிரிட்டன் நாட்டு ஏகாதிபத்தியவாதிகள் அடிமைப்படுத்திட வழிவகுத்தது. தமிழ்நாட்டில் மூவேந்தர்கள் ஆட்சி காலத்திலிருந்து, பின்னர் வந்த மராட்டிய மன்னர்கள், கிருஷ்ணதேவராயர், நாயக்கர்கள், நவாப்புகள் ஆட்சி காலம் வரை இந்த தர்மமே ஆட்சி செய்தது. இவர்கள் காலங்களில் ஏரி, குளங்கள் மற்றும் மராமத்துப்பணிகள் மற்றும் விவசாயத்திற்குரிய அடிப்படைகள், சமூக உழைப்பால் வீட்டுக்கொரு ஆள் வீதம் பங்கெடுத்து பாதுகாக்கப்பட்டன. ஆனால், நிலத்தில் விளைந்தது மானுட சமத்துவ தர்மத்தை நிராகரித்தே பகிர்வு செய்யப்பட்டன. விவசாயிகள் மற்றும் உழைப்பாளர்கள் ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்பட்டனர். வெள்ளை ஏகாதிபத்தியம் இந்த நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டது. பெரும்பான்மை உழைப்பாளி மக்களின் ஆதரவு பெறா மன்னர்களை எவ்வளவு விசுவாச படையிருந்தாலும் வெல்வது எளிது என்று கண்டு கொண்டனர். பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் கொண்டு வந்த 1793 நிரந்தர குடியிருப்புச் சட்டம் கொண்டு வந்த கொடுமைகள் பல. நிலம் சிலர் கையில் குவிந்தது. சுதந்திரத்திற்கு சற்று முன்னால் உள்ள புள்ளி விபரப்படி கிராமப்புறத்தில் நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை 70 சதத்தை எட்டியது. 10 சதம் பேர் கையில் நிலம் குவிந்தது.

அந்நிய நிறுவனங்களான ரயில்வே, தேயிலை தோட்டம் போன்ற பங்குதாரர் நிறுவனங்களின் கையில் கையில் பல கோடி ஏக்கர் நிலங்கள் சிக்கின. நிலபிரபுக்களோ, ஜமீந்தார்களோ ஏரி, குளம் மராமத்து ஆகிய பொது வேலைகளை செய்யாமல் கைவிட்டனர். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கிராமப்புற மக்களின் கூட்டுழைப்பால் உருவான விவசாயஅடிப்படைக்குரிய மராமத்து வனப்பாதுகாப்பு எல்லாம் சிதறின. இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் எழுதும் பொழுது நிலத்திற்கு ஏற்பட்ட சீரழிவை குறிப்பிடுகிறார். பிரிட்டீஷ் வருவதற்கு முன்னால் இந்திய மன்னர்கள் மூன்று இலாக்காக்களை கொண்டிருந்தனர். ஒன்று வெளிநாட்டுக் கொள்ளை இலாகா, அதாவது அண்டை நாட்டின் மீது படையெடுத்து அங்கிருப்பதை கொள்ளை அடிக்கும் இலாகா இரண்டாவது உள்நாட்டு கொள்ளை இலாகா, அதாவது நிலத்தில் விளைவதை அபகரிக்கும் இலாகா மூன்றாவது மராமத்து இலாகா அதாவது ஏரி, குளம், கால்வாய் போன்ற பாசன வசதிகள், சாலை வசதிகள் செய்கிற இலாகா.

வெள்ளையர்கள் ஆட்சி புகுந்தவுடன் உள்நாட்டு கொள்ளை, வெளிநாட்டு கொள்ளை ஆகிய இரண்டு இலாக்காக்களை வைத்துக் கொண்டு மூன்றாவது மராமத்து இலாகாவை மூடிவிட்டனர் அல்லது கைகழுவி விட்டனர் என்கிறார்.

பிரிட்டீஷ் அரசு புகுத்திய நிலவுடைமை சட்டத்தாலும், உணவுப் உற்பத்தியை விட பணப்பயிருக்கு முக்கியத்துவம் கொடுக்க தள்ளப்பட்டதாலும், பாசனப் பாதுகாப்பு விரிவாக்கம் செய்யப்படாமல் விடப்பட்டதாலும் பெரும்பான்மையான கிராமப்புற மக்கள் விவசாயத்தை நம்பி நிற்கிற நிலையில் பஞ்சங்கள் வந்தன. பிரிட்டீஷ் வரலாற்று ஆசிரியர்கள், மக்கள் தொகை பெருக்கமே அன்றைய பஞ்சங்களுக்கு காரணங்கள் என்கின்றனர். பஞ்சம் என்பது இயற்கையின் சாபங்களில் ஒன்று என்ற மால்தூசின் கருத்து பரப்பப்பட்டது. இது எதார்த்தமல்ல; இன்றும் வெள்ளமும் வறட்சியும் இயற்கையின் சாபங்கள் என்றே வலியுறுத்துகின்றனர்.

1932-33 வருட புள்ளி விவரப்படி பிரிட்டீஷ் இந்தியாவின் மொத்த பரப்பு 67 கோடி ஏக்கர் ஆகும். இதில் விவசாய உற்பத்திக்கு 23 கோடி ஏக்கர் நிலம் தான் பயன்பட்டது. மீதி 44 கோடி ஏக்கர் கன்னி நிலமாக இருந்தது. விவசாய உற்பத்தி நடந்த 23 கேடி ஏக்கரில் சுமார் ஐந்து கோடி ஏக்கர் நிலம் தான் பாசன வசதி பெற்று இருந்தது. மீதி 18 கோடி ஏக்கர் நிலம் மழையை நம்பி இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசி காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் யுத்தத்தின் கொடுமையாகும். முதலாளித்துவ உலகமய பொருளாதார தன்மைகளின் விளைவாகும். 1943 இல் இந்த வங்க பஞ்சம் உலகளவு அறிந்த பஞ்சமாக இருந்தது. 30 லட்சம் மக்கள் பட்டினியில் செத்தனர். இக்காலத்தில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தி கள்ள மார்க்கெட்காரர்கள் பெரும் பணக்காரர்களாயினர்.

பிரிட்டீஷ் வியாபாரிகள் உணவை சண்டையிடும் நட்பு நாடுகளின் ராணுவத்திற்கு ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் ஈட்டினர். அவர்களைப் பொறுத்தவரை பஞ்சமும் யுத்தமும், பணம் குவிக்க கிடைத்த வரப்பிரசாதம். மக்களுக்கோ, மரண வேதனை. இந்தப் பஞ்சத்திற்கு முக்கிய காரணம் அரிசி ஏற்றுமதியும் பணவீக்கமும் ஆகும். வங்கப் பஞ்சம் மக்கள் நினைவிலிருந்து அகலக் கூடாது என்று கருதிய வங்க எழுத்தாளர்கள் நெஞ்சை உருக்கும் நாவல்களை எழுதினர். 1973ல் சத்தியஜித்ரே தூரத்து இடி என்ற படத்தின் மூலம் வங்கப் பஞ்சத்தை கண்முன் நிறுத்தினார். மிருனாள் சென் பஞ்சத்தை தேடி என்ற படம் எடுத்தார். மேற்குவங்க மக்களின் புரட்சிகர பண்பாட்டிற்கு இவைகள் வலுவான அடிப்படை போட்டன.

III

பிரிட்டீஷ் அரசின் நிலஉடமை சட்டம், கொண்டு வந்த அவலங்கள் பல வீரம் செறிந்த விவசாயிகளின் போராட்டத்தை தூண்டின. உழுபவனுக்கு நிலம், குத்தகை பாதுகாப்பு ஆகிய இரண்டும் சுதந்திரப் போரின் முழக்கமானது. நாடு விடுதலை பெறாமல், நில உடமையில் மாற்றம் ஏற்படாது என்பதால் சுதந்திரத்திற்காக மக்கள் எழுச்சியுற்றனர். விடுதலை கிடைத்தது ஆனால் வர்ணாஸ்ரம் தர்மத்தை எதிர்த்த போர் எப்படி தோல்வியில் முடிந்ததோ அதுபோல் நிலத்திற்கான எழுச்சியும் தோல்வியில் முடிந்தது. கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் விவசாயிகள் நடத்திய இயக்கங்களை பிரிட்டீஷ் அரசைப் போலவே, ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ்காரர்கள் அடக்கினர். அந்த வீரம் செறிந்த வரலாறு ஏழை விவசாயிகளின் குறுதியால் எழுதப்பட்டன. ஏட்டளவில் மறைக்கப்பட்டன. திரித்துக் கூறப்பட்டன.

தெலுங்கானா பகுதி விவசாயிகள் இயக்கம் நாட்டுக்கே முன்உதாரணமாக இருந்தது. உழுபவனுக்கு நிலம், குத்தகை பாதுகாப்பு என்ற சுதந்திரப் போரின் முழக்கத்தை வெற்றிகரமாக அவர்கள் நிறைவேற்றினர். கிராமம் தோறும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்பு உருவாக்கப்பட்டது. நிலப்பிரபுக்களின் நிலம், கோட்பாட்டின் அடிப்படையில் பகிர்வு செய்யப்பட்டது. தவறு செய்யும் உறுப்பினரை கிராம சபை நீக்கி வேறு ஒருவரை நியமித்தது. இந்த நியாயமான, நேர்மையான ஜனநாயக அமைப்பை உருவாக்குவதற்காக அவர்கள் சிந்திய ரத்தம் ஏராளம். உழுபவனுக்கு நிலம் என்ற சுதந்திர முழக்கம். நேர்மையாகவே காங்கிரஸ் தலைவர்களால் முன்வைக்கப் பட்டிருந்தால் தெலுங்கானா விவசாயிகள் செய்ததை நேரு அரசு ஏற்று சட்டப் வடிவம் கொடுத்து நாடு தழுவிய முறையில் கொண்டு வர முயற்சித்திருக்கும். ஆனால் முதல் சுதந்திர அரசு ராணுவத்தை ஏவி தெலுங்கான அமைப்பை குலைத்தது. பல ஆயிரம் கம்யூனிஸ்ட்டு களை கொன்றது. கம்யூனிஸ்ட்டுகளையும், விவசாய சங்க தலைவர்களையும் சமூக விரோதிகளாக வன்முறையளர்களாக சித்தரித்து வரலாற்றையும் எழுதியது. அது நிலச் சீர்திருத்தத்தை வன்முறையில்லாமல் கொண்டுவரப் போவதாக பசப்பியது. பூதான இயக்கம் நடத்தியது.

1951-55 முதல் ஐந்தாண்டு திட்டம் முழுவதும் காங்கிரஸ் அரசு நில உடமை பற்றி ஆய்வு செய்ய கழித்தது. பிரிட்டீஷ் ஆட்சியால் கைவிடப்பட்ட பாசன வசதியை செய்ய திட்டங்கள் அறிவித்தன. இதன் மூலம் அரசே எல்லாம் செய்யும் என்ற பிரமையை ஊட்டினர். மத்திய அரசு நடத்திய ஆய்வின்படி நிலமற்ற விவசாயிகள் பல்கி பெருகிக் கொண்டிருந்தனர். 10 சதம் பேரிடம் நிலம் குவிந்து கிடந்தது. பாசன வசதி திட்டங்களை நிறைவேற்றிய விதம் கள்ளிக்காட்டு இதிகாசமானது! அணை கட்ட பல ஏழை விவசாயிகளின் வாழ்வை பறித்தனர். இதுவும் ஏடறியா வரலறாக ஆக்கப்பட்டது. இரண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் உச்சவரம்பு சட்டம் மாநில அரசுகளால் கொண்டுவர மத்திய அரசு வழிகாட்டியது. ஆறு ஹெக்டரிலிலிருந்து 132 ஹெக்டர் வரை நில உச்சவரம்பு என்று சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதே நேரம் கிராமப்புற ஏழை விவசாயிகளின் சங்க அமைப்புகள் அடக்கப்பட்டன. இவர்களுக்கு தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட்டுகள் வேட்டையாடப்பட்டனர். கட்சியை தடை செய்யாமல் கூட்டம் கூடும் உரிமையை தடை செய்வது, பொய் வழக்கு ஜோடிப்பது, தடுப்புக்காவல் சட்டத்தை பிரயோகிப்பது, விசாரணையில்லாமம் சிறையில் வைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இது தவிர நிலப்பிரபுக்களின் எதிர்ப்பு, நிலத்தை கையகப்படுத்து வதற்கான நிதிப்பற்றாக்குறை, நில உடமை ஆவணங்களில் தில்லு முல்லு. ஊழல் நிர்வாகம், போலி சொத்து விற்பனை, போலிப்பங்கீடு, குடும்பத்திற்குள்ளேயே நன்கொடை போன்ற ஆயிரத்தெட்டு தில்லுமுல்லுகள் சட்டத்தை புதைத்து விட்டது. இதைவிட கொடுமை சட்டமே விதிவிலக்கு அளித்தது. தோட்டம், மேய்ச்சல் தளம், பால்பண்ணை இதற்கு விதிவிலக்கு உண்டு என்று சட்டம் கூறியதால் பலகோடி ஹெக்டர் நிலங்கள் விதிவிலக்கு பெற்று நிலப்பிரபுக்கள் கையிலே சிக்கின.

1970ல் நில உச்சவரம்பு சட்டத்தை மேலும் காட்டமாக்கப் போவதாக மத்திய அரசு ஒரு அரசியல் சாகஸம் நடத்தியது. பல மாநிலங்களில் காங்கிரஸ் அரசு பதவி இழந்ததால் இந்த நிலை வந்தது. விதிவிலக்கை வைத்துக் கொண்டே உச்சவரம்பை 10 ஹெக்டர் பாசன வசதி, 22 ஹெக்டர் பாசன வசதியற்ற நிலம் என உச்சவரம்பு நிர்ணயிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழிகாட்டியது.

1974ல் நீதிமன்றங்கள் மூலம், நிலபிரபுக்கள் உச்சவரம்பு சட்டத்திற்கு தடைபெற்று விடுகிறார்கள்; நீதிமன்றங்களே நிலப் பகிர்வு சட்டப்படி நடப்பதை தடுக்கிறது என அரசு பெரிதாக ஊதி இச்சட்டத்தை அரசியல் நிர்ணய சட்டத்தின் 9வது பிரிவில் சேர்த்து, நீதிமன்றங்கள் சட்டத்தின் ஷரத்துக்களை கேள்வி கேட்க முடியாதவாறு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒரு பக்கம் விவசாயிகளின் இயக்கத்தை சீர்குலைத்துக் கொண்டே மறுபக்கம் நில உச்சவரம்பை அமுலாக்குவதில் அக்கறை இருப்பதாக சாகசம் செய்தது. இதற்கிடையில் விவசாயிகளை சாதி அரசியல், வகுப்புவாத அரசியலில் திருப்பி விடும் முயற்சிகளும் நடந்தன. வெற்றியும் பெற்றனர். உழுபவனுக்கு நிலம் என்ற அரசியல், பொருளாதார அடிப்படை மறக்கடிக்கப்பட்டது.

1980ல் வனப் பாதுகாப்பு சட்டத்தை அரசு கொணர்ந்தது. இதன் மூலம் காலம் காலமாய் வன விளைச்சலை அனுபவித்து வந்த மக்கள் அதிகாரிகளாலும், தொழில் அதிபர்களாலும் விரட்டப்பட்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சி, பின்னர் அதன் பராம்பரியத்தை உயர்த்திப் பிடித்த மார்க்சிஸ்ட் கட்சி, நில உச்சவரம்பு சட்டத்தின் இரண்டு அணுகுமுறைகளை கொள்கை ரீதியாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

உழுபவனுக்கே நிலம் என்ற கோட்பாட்டை இச்சட்டம் வரையறை செய்யாததால்; நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாத பணக்காரர் களும் நில உடமையாளர்களாக ஆகிறார்கள். இதன் விளைவாக நிலபிரபுக்கள் என்ற நிலத்தை சுரண்டும் கருவியாக்க வழி விடுகிறது. இதனை தடுக்க சட்டம் வழி செய்யவில்லை.

இரண்டாவது குறை கண்மூடித்தனமான விதிவிலக்குகள். சட்டத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டது. வனப்பாதுகாப்புச் சட்டம் ஆதிவாசிகளை வெளியேற்றும் நோக்கம் கொண்டது. வாழ்வு ரிமையை மறுக்கிறது.

மேற்குவங்கம், கேரளம், திரிபுரா போன்ற மாநிலங்களில் இடதுசாரி அரசுகளின் கைகளை சட்டங்கள் கட்டிப்போட்டன. அவர்கள்சட்டமன்றத்திலே நிறைவேற்றி கொடுக்கிற, திருத்தங்களை மத்திய அரசு ஏற்காமல் கிடப்பில் போட்டன. ஆளுகிற கட்சியாக இருந்தாலும் சட்டத்தை ஏழைகளுக்கு ஆதரவாக அமுலாக்குகிற பொழுது, விவசாய சங்கத் தலைவர்கள், நிலப்பிரபுக்களின் கொடுமைக்கு ஆளாயினர்.

IV

கடைசியாக உலக வங்கி நடத்திய ஆய்வில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளி வந்தன. இந்தியா தான் ஏழைகளின் எண்ணிக்கையில் முதலிடம். 25 கோடி விவசாயிகள், .2 (சுமார் 20 சென்ட்) ஹெக்டேர் நிலத்திற்கும் குறைவான துண்டு துக்காணி நில உடமையாளர்களாக வறுமையில் உழல் கின்றனர். விவசாய உற்பத்தி தேசமொத்த உற்பத்தியின் பங்களிப்பில் குறைந்து கொண்டே போனாலும் நாட்டின் 58 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கின்றனர். உழுபவனுக்கு நிலமும் இல்லை; குத்தகை பாதுகாப்புமில்லை. நில உச்சவரம்புச் சட்டங்களால் யாதொரு பயனுமில்லை. கிராமப்புற பெண்கள் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு பண்பாட்டு ரீதியாக உடமை கொள்ளும் உரிமை கிடையாது. சட்டமும் வழங்கவில்லை. கிராமப்புற பெண்களில் 10க்கு ஆறுபேர் கல்வியறிவு பெறாதவர்கள். அந்த உலக வங்கி அறிக்கை கிராமத்தில் இருக்கும் விவசாய குடும்பங்களுக்கு வீட்டுமனையும் அதோடு இணைத்து 2 ஆயிரம் சதுர அடி தோட்டமும், உத்தரவாதம் செய்யப்படுமானால் வறுமையிலிருந்து விடுபட வழிபிறக்கும் என்று கூறியது. எடுத்ததற்கெல்லாம் உலகவங்கி நிபந்தனைகளை காட்டுவார்கள் இதைக்கண்டு கொள்ளவில்லை. உலகவங்கியும் இதனை நிபந்தனையாக வற்புறுத்துவதில்லை.

உலகிலேயே மிகவும் மக்கள் தொகை உள்ள ஒரு நாட்டில் அநியாயமான ஊழல் மலிந்த நில உடமை அமைப்பு உள்ளது. நில உடமையில் நேர்மையான அமைப்பு தான். வன்முறை நிறைந்த சமூக நிலைக்கு மாற்று என்றும் அந்த அறிக்கை கண்ணீரும் வடித்தது. ஆனால் அது முன்வைத்த முக்கிய ஆலோசனை தான் வியாதியை விட கொடூரமான மருந்தாக உள்ளது.

இன்றைய அவல நிலைக்கு காரணம் நில உச்சவரம்பு குத்தகை பாதுகாப்பு சட்டங்களே, அவைகளை நீக்கிவிட வேண்டும்; நிலம் சுதந்திர சந்தையில் விற்கவும், வாங்கவும் வல்ல சரக்காக ஆக்கிவிட வேண்டும். சுதந்திரமான சந்தையே உழுபவன் கையில் நிலத்தை ஒப்படைக்கும் என்கிறது.

மார்க்சிஸ்ட்டுகள் உலகவங்கியின் சந்தைமய கொள்கையை எதிர்க்கிறார்கள். இந்த ஆலோசனைகள் நிலத்தை பொருளாதார வளர்ச்சியையும், மானுட சமத்துவத்தையும் இணைக்கும் கருவி ஆக்காது. மாறாக சிலர் சொத்துச் சேர்க்கவும், நமது சுதந்திரத்தை பறிக்கும் ஏகாதிபத்தியவாதிகளின் கைக் கருவியாக நிலம்போய்விடும். அதற்குப் பதிலாக கிராமப்புற விவசாயிகளின் சங்கங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் அச்சங்கங்களை அரசு அங்கீகரித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்பு மூலம், தெலுங்கானா விவசாயிகள் உருவாக்கிய அமைப்பை முன்னு தாரணமாக கொண்டு இடதுசாரி அரசுகள் செயல்படுவதுபோல் செயல்பட வேண்டும். அது தான் கலவரமற்ற அமைதியான நிலையான ஆட்சி முறைக்கு வழிவகுக்கும்.

ஒரு முறை மத்திய திட்டக்குழு உறுப்பினர் டாக்டர் கே. வெங்கட சுப்பிரமணியம் ஒன்றை சுட்டிக்காட்டினார். அதனை இங்கே நினைவு கொள்ளலாம்.

மக்கள் தொகை பெருக்கம் அழிவின் அடையாளம் என்ற உயிரியல் விதியை மீறி மக்கள் தொகைமிக்க சீன நிலையாக இருப்பதற்கு காரணம் எது என்பதை சீனாவை ஆய்வு செய்பவர்கள் கூறுவது நில சீர்திருத்தம், இந்தியாவில் நில சீர்திருத்தம் பற்றி நிறையப் பேசி இப்பொழுது எதுவும் செய்ய முடியாது என்று பின்னுக்குத் தள்ளிவிட்டோம் என்கிறார்.

நிலச் சீர்திருத்தத்தை சுதந்திர சந்தை கவனிக்கட்டும் என்ற ஆலோசனைகள் இன்று நடைமுறையில் வந்து கொண்டிருக்கிறது. உலக வங்கி இந்தியாவின் நிலப்பிரச்சினையின் வியாதிகளை சரியாக கணித்தாலும், சுதந்திர சந்தை தான் அதற்கு தீர்வு என்பது நடைமுறையில் அபாயகரமான விளைவை கொண்டு வரும். அது ஏகாதிபத்தியவாதிகளின் ராணுவ தலையீட்டிற்கும், நில உடமையில் ஏகபோக ஆதிக்கத்திற்கும் இட்டுச் சென்றுள்ளது என்பதை தென்அமெரிக்க பாலஸ்தீன அனுபவங்கள் கூறுகின்றன. நடைமுறையில் சரியென்று நிரூபிக்கப்பட்ட வழி என்பது தெலுங்கானா விவசாயிகள் உருவாக்கிய கிராம பஞ்சாயத்து முறையே என்பதை இடதுசாரி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அனுபவங்கள் கூறுகின்றன. அவ்வழிக்கு மக்களை திரட்டுகிற ஒரே கடமை தான் இன்று நம் முன் உள்ளது.

ஏழை விவசாயிகளை சங்கங்களிலே திரட்டிட வேண்டும். வலுவான இயக்கங்கள் மூலம் அரசு அச்சங்கங்களை அங்கீகரிக்க வைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பு மூலம் சட்டங்கள் நிறைவேற உத்தரவாதம் செய்ய அரசை வற்புறுத்த வேண்டும்.



%d bloggers like this: