மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பெண்கள் மீதான ஒடுக்குமுறை வர்க்க ஒடுக்கு முறையா?


பெண்கள் மீதான ஒடுக்குமுறை பற்றிப் பல ஆய்வுகள், குறிப்புகள், கட்டுரைகள் உள்ளன. இருப்பினும், ஒட்டியோ, வெட்டியோ அதிகம் பேசப்படுவது, எங்கல்ஸ் இதுபற்றி எழுதிய குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்கிற நூல் தான். பெண் நிலைவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் எழுத்துக்களில், இதுபற்றிய விமர்சனம் நிறைய இருக்கும். ஆணாதிக்கம் மட்டுமே, பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்குக் காரணம் என்று கூறி, ஆண் – பெண் முரண்பாடுகளை மட்டும் பிரதானப்படுத்தியும், தனித்தும் பார்க்கிற பார்வை இவர்கள் எழுத்துக்களில் தெரியும். இதைத் தனித்து பார்க்க கூடாது என்று தான் கூறுகிறோமே தவிர, ஆணாதிக்கத்தை மையப்படுத்தும் பாலின ஒடுக்குமுறையே இல்லை என்று நாம் கூறவில்லை. எங்கல்ஸ் நூலில் தான், பெண் இனம் அடிமைப்படுத்தப்பட்டதற்குப் பின்னணியாக வர்க்க காரணி இருந்தது நிலை நாட்டப்படுகிறது.

எங்கெல்ஸ் எழுதிய இந்த நூலுக்கு மூலமாகக் கருதப்படுவது லூயி மார்கன் என்கிற 19ஆம் நூற்றாண்டு மனித இன ஆய்வாளர் எழுதிய நூல். எங்கெல்ஸ், இந்த நூலின் நிலைபாடுகளை கிரேக்க, ரோமானிய சமூக வாழ்க்கையுடனும், அவர்களது புராணங்கள், இதிகாசங்களில் வெளிப்பட்ட சற்று முந்தைய புராதன சமூக வாழ்க்கையுடனும் பொருத்திப் பார்த்தார். மேலும், ஜெர்மானிய மற்றும் அயர்லாந்து பழங்குடியினர் மத்தியில் இச்சமூகங்கள் எப்படி உருவாயின என்பது பற்றியும் ஆய்வு செய்தார். இவையெல்லாமே, மார்கனின் ஆய்வின் முடிவுகள் சரியானவை என்று நிரூபித்தன.

மார்கன் என்ன சென்னார்?

மனிதன் வாழ்வதற்குத் தேவையான உற்பத்தி முறை விரிவடைந்ததைப் பொறுத்தே பெரும்பாலும் அச்சமூகம் அடையாளம் காணப்பட்டது. மனிதகுலம்தான், உணவு உற்பத்தி மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தது என்று அவர் கூறினார். நாகரிகமடையாத காட்டுமிராண்டு காலத்தை வகைப்படுத்தும் போது கூட பழைய கற்காலம், புதிய கற்காலம், வெண்கல காலம், இரும்பு காலம் என்று சமூகம் வகை பிரிக்கப்பட்டது. அதாவது புதிய புதிய உற்பத்திக் கருவிகள் கண்டுபிடிக்கப்படும் போது, அவைதான் சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுத்தன. அதே சமயம் குடும்பம் என்கிற வளர்ச்சிப் போக்கும் இணையாக நிகழ்ந்து கொண்டிருந்தது.

இந்தக் காட்டுமிராண்டி காலத்திலிருந்து நாகரிக காலத்துக்கு மனிதகுலம் மாறிய போது, குடும்பம் எப்படி மாறியது, அதில் உள்ள உறுப்பினர்களின் பங்கு பாத்திரம் என்ன ஆனது என்பது தான் முக்கியமான கேள்வி. ஏனெனில் இந்த கால கட்டத்துக்கு முன் வரை, குடும்ப அமைப்பு இயற்கையாய் தெரிவு செய்யப்பட்டு அமைந்தது. பிறகு தான் பொருளியல், பிரதானமாகக் குடும்ப முறையை நிர்ணயித்தது. மார்கன், குடும்பத்தைப் பற்றிக் கூறும் போது – குடும்பம் எப்போதுமே ஒரே மாதிரி நிலையில் இருந்ததில்லை. சமூகம், கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்கு வளர்ச்சியடையும் போது, குடும்பமும் கீழ் நிலையிலிருந்து, மேல் நிலைக்கு முன்னேறுகிறது என்றார்.

அதன்படிப் பார்த்தால் இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பும் சரி, குடும்ப அமைப்பும் சரி, முதலும் அல்ல, முடிவும் அல்ல, மாற்றத்தின் ஒரு பகுதி தான்; மேலும் மாறப்போவது தான் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

குடும்பத்தின் வரலாறு

மனித குலத்தின் துவக்க காலத்தில் குழுக்கள் அல்லது கணங்களாக மனிதர்கள் வாழ்ந்தனர். இந்தக்குழுக்களும் ஒரே மாதிரியில்லை. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தன்மையுடன் இருந்தன. சில குழுக்களில் எந்த ஆணும், எந்த பெண்ணும் உறவு கொள்ளும் நிலையிருந்தது, சில குழுக்களில், தாயும் மகன்களும் உறவு கொள்வது தவிர்க்கப்பட்டது. சில குழுக்களில், ஒரே தாய்க்குப் பிறந்தவர்கள் உறவு கொள்வது தவிர்க்கப்பட்டது. இயற்கையை எதிர்த்துப் போராட, குழு உறுப்பினர்கள் குறையாமல் இருக்க பெண்ணின் மறு உற்பத்தித் திறன் இன்றியமையாததாக இருந்தது. தாயை மையமாக வைத்தே அனைத்தும் தீர்மானிக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் உற்பத்தி என்பது உபரியை எட்டவில்லை. இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்களை சேகரித்ததே முக்கிய உற்பத்தி நடவடிக்கையாக அமைந்தது. இதில் இருபாலரும் பங்கு பெற்றனர். ஆயினும் பெண்களின் பங்கு மையமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அக்கால உற்பத்தி முறையில் பெண் முக்கியப் பங்கு வகித்ததாலும், அவள் உயர் நிலையில் வைக்கப்பட்டாள் என்று ஸ்டாலின் கூறுகிறார். குழுவிலுள்ள எண்ணிக்கை கட்டுங்கடங்காமல் போய், போதுமான உணவு அனைவருக்கும் கிடைப்பது கடினமான போது, குழு இரண்டாக, மூன்றாப் பிரிய நேர்ந்தது. அப்படிப் பிரியும் போது தான், ஏற்கனவே கூறியது போல், சில விதிவிலக்குகளை ஏற்படுத்திக் கொண்டு (தாய்-மகன்கள், சகோதர – சகோதரிகள்) பிரிந்தனர். பின்னர் காலப்போக்கில், மேலும சில கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன. இப்படிப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் குழு விவாக முறையில் ஈடுபடுவது கடினமானது. எனவே, தற்காலிகமாக ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்கிற ஜோடி திருமண முறை உருவானது. ஆனால் இந்தத் திருமண பந்தம் என்பது பிரிக்க முடியாதது அல்ல. எப்போது வேண்டுமானாலும் தம்பதிகள் பிரிந்து மற்றொருவருடன் சேரலாம். ஆனால் குழந்தைகள் மட்டும் தாய்க்கு சொந்தம் என்று எங்கல்ஸ், இந்தத் திருமண முறை பற்றி விளக்குகிறார்.

ஒரே குழுவுக்குள் இந்த ஜோடி திருமண முறைக்கு உட்பட்டு பல ஜோடிகள் இருந்தன. அனைவரும் இருக்கும் பொதுவான வசிப்பிடத்தில் உள்ள வீடு சார்ந்த, வீட்டைச் சுற்றிய புராதன விவசாயம் சார்ந்த வேலைகளைப் பெண்கள் செய்வதும், வெளியே போய் மீன்பிடிப்பது, உணவு சேகரிப்பது போன்ற வேலைகளை ஆண்களும் செய்ய ஆரம்பித்தனர்.

உலகமயமும், தனியார்மயமும் பெண்களின் மீதான உழைப்பு சுரண்டலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. முதலாளித்துவ உலகில் எங்குமே, ஒரு மனிதனுக்கு கொடுக்கப்படும் சம்பளம், அவன் வாழ்ந்து, ஓய்வெடுத்து மறுநாள் வேலைக்கு வரத் தேவையான வீட்டுப் பணிகளையும், அவனது பராமரிப்பையும் இலவசமாக செய்கிறாளே பெண், அதை ஈடு செய்வதாக அமைவதே கிடையாது. அதுவும் லாபத்தின் ஒரு பகுதியாக சேர்ந்து விடுகிறது.

அப்போதும் கூட, இரண்டு வகை பணிகளும், குழு வாழத் தேவையாக இருந்தால், ஒன்று முக்கியமானதாகவும், மற்றொன்று முக்கியமற்றதாகவும் கருதப்படவில்லை. தாய் வழி சமூகம் நீடித்ததும் பெண்களின் முக்கியத்துவம் நீடிக்க வாய்ப்பாக இருந்தது.

தனியுடைமையின் துவக்கம்

கிட்டத்தட்ட ஜோடிக் குடும்பக் கால கட்டத்தில் தான், காட்டு மிருகங்களை பழக்கி, கட்டுப்பாட்டுக்குள் வைத்ததன் மூலமும், விவசாயத்தைக் கண்டுபிடித்ததன் மூலமும், உற்பத்தி முறையில் உயர்ந்த மாற்றத்தைக் கண்டது மனித குலம். முதன் முறையாக, மனித உழைப்பால், உபரி உற்பத்தி ஏற்பட்டது. அதாவது, குடும்பத்துக்குப் போக, குழுவுக்குப் போக மீதி இருந்தது. இது மெதுவாக அடிமை முறைக்கு வித்திட்டது. எப்படி?

கால்நடைகள் பல்கிப் பெருகின. உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டன. நெசவு கண்டுபிடிக்கப்பட்டது. விவசாயமும் விஸ்தரிக்கப்பட்டது. இதற்கெல்லாம் முன்பு, அடிமைகளை வைத்துக் கொண்டிருந்த போது, அவர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டியிருந்தது. அதை மீறி, அவர்களது உழைப்பால் கூடுதல் பலன் பெரிதாக இல்லை. எனவே பல சமயம் அடிமைகள் கொல்லப்பட்டார்கள். ஆனால், மேலே கூறிய புதிய மாற்றங்கள், உபரியை உருவாக்கி, பண்ட மாற்றுக்கும் உதவின. வேலை பிரிவினை தேவைப்பட்டது. ஆனால் கால்நடை பெருக்கத்துக்கு ஈடாகக் குழு உறுப்பினர்கள் பெருகவில்லை. எனவே வேலை செய்ய அதிக ஆட்கள் தேவைப்பட்டனர். குழுக்களிடையிலான சண்டையின் போது தோற்றவர்கள் அடிமைகளாக்கப்பட்டு இதற்குப் பயன்படுத்தப்பட்டனர்.

இந்தப் புதிய செல்வங்கள், துவக்கத்தில், குழுவுக்கே பொதுவாக இருந்தாலும், தனியுடமை மெல்ல மெல்ல தலை தூக்க ஆரம்பித்தது. உபரியும், அதன் மூலம் கிடைத்த புதிய செல்வாதாரங்களும் அந்தஸ்து உடையதாகவும், மதிப்பு உடையதாகவும் பார்க்கப்பட்டு அவற்றில் ஈடுபடுகிற ஆண்களே குழு தலைவராக்கப்பட்டனர். தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, செல்வங்களைத் தனக்கென்று அவன் ஒதுக்கிக் கொள்ள முடிந்தது.

இது இரண்டுவித விளைவுகளை ஏற்படுத்தியது. ஒன்று உபரியையும், கால்நடைகளையும், செல்வங்களையும், அவற்றிற்கான கருவிகளையும் சொந்தமாக்கிக் கொள்பவர்களும் – அத்தகைய செல்வம் இல்லாதவர்களும், அடிமைகளும் என்று வர்க்க வித்தியாசம் ஏற்பட்டது. வர்க்க சமூகம் உருவானது.

அடுத்து, மதிப்பு மிகுந்த பொருளாதார நடவடிக்கைகள் வீட்டுக்கு வெளியே நடந்ததும், அவற்றுக்கும், அதற்கான ஆதாரங்களுக்கும் எஜமான்களாக ஆண்கள் மாறியதும், அவர்களுக்கு பெண்களை விடக் கூடுதல் அந்தஸ்தை அளித்தன. இதனால் அனைவரும் சமம் என்ற நிலையை நிபந்தனையாக்கிய குழு முறை தேவையற்றதாகி, புதிய முறையை உருவாக்குவது அவசியமானது. அது தான் அரசு! அடிமைகளையும், செல்வங்களையும் சொந்தமாக்கிக் கொண்டு, பிறருடைய உழைப்பைச் சுரண்டி வாழ்ந்த சிறுபான்மை ஆண்களின் கையில், அரசு ஒரு ஒடுக்குமுறை எந்திரமாகப் பயன்பட்டது.

ஒருதார மணம்

மேற்கூறிய சமூக அமைப்புக்கு வித்திட்ட அதே தனியுடைமை தான், (சமூக உற்பத்தி – ஆனால் அதற்கான கருவிகள் தனி மனிதன் கையில்) ஒரு தார மண முறைக்கும் வித்திட்டது. ஏற்கனவே இருந்த சமூக அமைப்புகளில், வேட்டை கருவிகளோ, வீட்டுக் கருவிகளோ, அவற்றை வைத்திருப்பவர் இறந்து போனால், பெண்ணின் சொத்துக்கள் அவர் குழந்தைகளுக்கோ, சகோதர சகோதரிகளுக்கோ போகும். ஆணின் சொத்துக்கள் அவனது குழந்தைகள் என்று பிரித்துப் பார்க்க முடியாததால், அவனது சகோதர, சகோதரிகளுக்குப் போகும். தனியுடமை உருவாக்கப்பட்ட பின்பு, அது ஆண்களின் கைப்பிடியில் இருந்த பின்னணியில் இத்தகைய நிலை நீடிக்க முடியவில்லை. ஆண் வழி வாரிசுகள் இனம் காணப்பட வேண்டியிருந்தது. தாய் வழி உரிமை தூக்கி எறியப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

தாய் வழி உரிமை தூக்கி எறியப்பட்டது, பெண் குலத்துக்கே ஏற்பட்ட வரலாற்றுத் தோல்வியாகும். (இதுவரை வீட்டுக்கு வெளியே மதிப்பு மிக்கவனாக இருந்த) ஆண் வீட்டுக்குள்ளும் கடிவாளத்தைப் பிடிக்க ஆரம்பித்தான். பெண் தரம் தாழ்த்தப்பட்டாள், ஆணின் காம இச்சைக்கு அடிமைப்படுத்தப்பட்டாள், குழந்தை பெறும் கருவியாக்கப்பட்டாள், கிரேக்க சமுதாயத்தில் இது மிகவும் வெளிப்படையாகவே தெரிந்தது. தற்போது அடிமைத்தன வடிவம் மென்மையாக மாறியிருக்கலாம், ஆனால் கண்டிப்பாக ஒழிந்து விடவில்லை என்று வர்ணிக்கிறார் எங்கல்ஸ்.

வாரிசுகள் அந்த ஆணுக்கு மட்டுமே பிறந்தவையாக இருக்க வேண்டுமென்பதால், பெண்ணின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதாக இந்த ஒரு தார மணம் அடிப்படையிலான புதிய குடும்ப முறை – ஆணாதிக்க குடும்ப முறை – மாறியது. இதை சிறந்த பண்பாட்டின் பிரதிபலிப்பாக பார்ப்பதில்லை. ஏனெனில் ஒன்று, இது உடமை நோக்கம் கொண்டது;

இரண்டாவது, இது பெண்ணுக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. ஆணுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை. அவனுக்கு கிடைத்த பொருளாதார, சமூக அந்தஸ்து, அதன் பக்க விளைவாக வன்முறையையும் உண்டாக்கியது. அதுவும் ஆணுக்குச் சாதகமாக அமைந்தது. ஆனால் சமூகவியலாளர்கள் கூறுவது போல, வன்முறையும், சட்ட திட்டங்களும் மட்டுமே பெண்ணடிமை நிலையை உத்திரவாதப்படுத்தியிருக்க முடியாது. புராணங்கள், புனை கதைகள், பத்தினி தன்மை, கற்பு, தெய்வ கட்டளை, சடங்கு, சம்பிரதாயம் என்று பண்பாட்டு ரீதியாகவும், பெண்ணடிமைத் தனம் நிலை நிறுத்தப்பட்டது.

பெண்கள் அனுபவிக்கிற இடையூறுகளும், பாதிப்புகளும், இன்றியமையாத அளவு வர்க்க உள்ளடக்கத்தை உடையவை என்று, வியட்நாம் தொழிலாளர் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் லீ துவான் 1959ல் ஒரு பெண்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உருவான முரண்பாடுகளை அகற்றுகிற, சமரசம் செய்கிற ஏற்பாடாக ஒரு தார மணம் உருவாகவில்லை. மாறாக, புராதன காலத்தில் கண்டறியாத அளவு பாலின மோதலைப் பிரகடனப்படுத்துகிற, ஒரு இனத்தை மற்றொரு இனம் அடிமைப்படுத்துகிற ஏற்பாடாகவே தோன்றியது. வரலாற்றில் தோன்றிய முதல் வர்க்க முரண்பாடு, ஒரு தார மணத்தின் பின்னணியில் உருவான ஆண் – பெண் முரண்பாட்டோடும், முதல் வர்க்க ஒடுக்குமுறை, ஆண் இனம் பெண் இனத்தின் மீது செலுத்திய ஒடுக்குமுறையோடும் ஒத்துப் போகிறது என்றார் எங்கெல்ஸ்.

எனவே, பெண்ணின் மீதான ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்க முறையோடு தொடர்புடையது என்ற வரலாற்று வளர்ச்சிப் போக்கை சரியாகப் புரிந்து கொள்ளாமல், ஆண் தான் பெண்ணுக்கு எதிரி என்கிற நிலை எடுப்போமேயானால், பெண்களெல்லாம் அணி சேர்வது, சமூக மாற்றத்தை ஏற்படுத்த அல்ல, மாறாக, ஆண்களை ஒழிக்கத் தான் என்றாகி விடும். இது, வர்க்க போராட்டத்தை திசை திருப்புவதற்கே பயன்படும்.

ஒரு தார மணமுறை, உடைமை நோக்கத்தோடு எழுந்தது என்றால், தனியுடைமை ஒழிக்கப்பட்ட சமூகத்தில், ஒரு தார மணத்தையும் ஒழித்து விடுவோமா; மீண்டும் வரம்பற்ற பாலுறவு நோக்கிப் போக முடியுமா என்ற கேள்வி எழலாம். மனித குலம் நாகரீகம் அடைந்த காலத்தில் தோன்றியது தான் ஒருதார குடும்ப அமைப்பு. அதை வரலாற்று ரீதியான பெரும் முன்னேற்றம் என்றும் எங்கல்ஸ் நிர்ணயிப்பு செய்கிறார். எனவே ஒருதார மணமுறையை முற்றாக நிராகரிக்கவேண்டியதில்லை. இதன் எதிர்மறை அம்சங்களான தனியுடைமையும், பெண்ணடிமைத்தனமும் அகற்றப்பட்டு, காதல் அடிப்படையில் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற செழுமையான முறையாக இது உருவாகும்.

குடும்பப் பணிகள் தனிப்பட்ட சேவையாய்

வர்க்க பேதமற்ற ஆதி சமூகத்தில் வீட்டுப் பணிகளும், குழந்தை பராமரிப்பும் சமூகம் சார்ந்த பொது பணிகளாக இருந்த நிலை – எனவே மதிக்கப்பட்ட நிலை – வர்க்க சமூகத்தில், கணவனுக்கும் மனைவி செய்யும் தனிப்பட்ட சேவையாக மாறி மதிப்பிழந்து விட்டது. இது உடமை சார்ந்து ஏற்பட்ட மாற்றம் எனில், உடமை உள்ள குடும்பங்களில் மட்டும் தானே நிலவ வேண்டும், உடமையே இல்லாத உழைப்பாளி குடும்பங்களில் இது நிலவ வேண்டிய அவசியம் இல்லையே என்ற கேள்வி எழலாம். இதற்கு மார்க்சும், எங்கல்சும் உருவாக்கிய கம்யூனிஸ்ட் அறிக்கை – ஒவ்வொரு கால கட்டத்திலும், ஆளும் வர்க்கத்தின் கருத்துக்கள் தான், சமூகத்தின் அனைத்துப் பிரிவின் மத்தியிலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்களாக மாறுகின்றன என்று பதில் கூறுகிறது.

பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கும், அடிமைத்தனத்துக்கும் எதிரான போராட்டம் வர்க்கப் போராட்டத்தின் ஓர் அத்தியாவசியமான பகுதி என்பதை உணர வேண்டும்.

எங்கல்ஸ் சமூக உற்பத்தி நடவடிக்கைகளில் மீண்டும் பெண் இனம் முழுமையும் ஈடுபடுவது தான், பெண் விடுதலைக்கு முன் நிபந்தனை என்று சொன்னார்.  பெண்ணடிமைத் தனம் தோன்றிய காலம் முதல் முதலாளித்துவ காலம் துவங்கும் வரை, பெண்கள் பொதுவாக சமூக உற்பத்தியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டனர். நில உடமை காலத்திலும் கூட ஏற்கனவே அடிமை இனமாக இருந்த ஒடுக்கப்பட்ட பெண்களே விவசாய வேலையில் ஈடுபட்டனர். இது, பெண்களின் சமூக அந்தஸ்தை பெருமளவு பாதித்தது. தற்போது முதலாளித்துவ சமூகத்தில், அவர்கள் மீண்டும் சமூக உற்பத்தியில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது ஒரு வளர்ச்சி தான். பெரும்பாலும் தொழிலாளி வர்க்கப் பெண்களுக்கே இந்த வாய்ப்பு உள்ளது. ஆனாலும், குடும்பப் பணிகள் என்பது, இன்னும் தனிப்பட்ட சேவையாகவே உள்ளதால், இரண்டையும் திருப்திகரமாகப் பூர்த்தி செய்வது பெண்களுக்கு இயலாததாக உள்ளது.

பெண்ணடிமைத்தனமும் வர்க்கச் சுரண்டலும்

சமூக உற்பத்தியில் பெண்கள் முழுமையாக ஈடுபட என்ன செய்வது? குடும்பத்தையே வேண்டாமென்று சொல்லிவிடலாமா? குழந்தை பெறுவதை நிறுத்தி விடலாமா? அல்லது, ஆண்கள் வேலையை விட்டு விட்டு, வீட்டில் இருந்து இவற்றையெல்லாம் பார்த்துக் கொள்ளட்டுமா? இல்லை! குடும்பம் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும். வீட்டுப் பணிகள், தனிப்பட்ட குடும்பங்களின் தலைவலியாக இல்லாமல், சமூக உற்பத்தியின் வரையரைக்குள் கொண்டு வரப்பட்டு, பொது சேவைகளாக மாற வேண்டும் – அதாவது தனிப்பட்ட குடும்ப பொருளாதாரம், சமூகப் பொருளாதாரமாக மாற வேண்டுமென்றும் எங்கல்ஸ் கூறினார். இதையே தான் லெனினும், தனிப்பட்ட குடும்ப பராமரிப்பு என்பது சமூக மயமாக்கப்பட்ட தொழிலாக மாறினால் தான், சலிப்பூட்டும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்களுக்கு விடுதலை கிடைக்கும். அப்போது தான் பெரும் இயந்திரத் தொழில்களில், சமூக உற்பத்தியில் பெண் முழுமையாக ஈடுபட முடியும் என்று கூறினார். இவற்றையெல்லாம் சோசலிச அரசுகள் செய்தன. முதலாளித்துவ சமூகத்தில், ஆளும் வர்க்க நலன்களைப் பிரதிபலிக்கிற அரசு, இதை முழுமையாக செய்ய முற்படுமா? சாதாரணமாக, தனிப்பட்ட முதலாளிகள், இதை செய்வார்களா? அவர்களது லாபத்தில் கை வைக்க விடுவார்களா? மாட்டார்கள்! சரி, அப்படியானால், சோசலிசம் வரட்டும் என்று சொல்லி, விட்டுவிட முடியாது. பல்வேறு நல நடவடிக்கைகளை, போராடி அரசிடமிருந்து பெற வேண்டும். குடும்பத்துக்குள் வீட்டுப் பணிகளில் பகிர்வு என்பதும் உருவாக வேண்டும். குடும்பம், ஜனநாயக ரீதியான அமைப்பாக மாற்றப்பட முயற்சிக்க வேண்டும். மற்றொரு பக்கம், வீட்டுப் பணிகள் பொது சேவையாக்கப்பட்டு விட்டால், பெண்கள் இன்னும் கூடுதலாக முழுநேர வேலை வாய்ப்பு கேட்பார்களே, அதைக் கொடுக்க இந்த அரசால் முடியுமா? பெருவாரியான பெண்கள் இப்படி வீட்டுத் தளைகளில் சிக்கிக் கொண்டிருந்தால் தானே, தொழிலாளி வர்க்கத்தின் பின்னடைந்த பகுதியாகவே நீடித்து, புரட்சிகர உழைக்கும் வர்க்க இயக்கத்தின் வளர்ச்சிக்கு உதவாமல் இருப்பார்கள்? அப்படியானால் வர்க்க சுரண்டல் அமைப்பு வலுப்பட, பெண்ணடிமைத்தனம் உதவுகிறது என்று தானே பொருள்?

இதற்கு வேறு மாதிரியான சில உதாரணங்களைக் கூடப் பார்க்கலாம்

விவசாயக் கூலி தொழிலாளர்களில் கிட்டத்தட்ட சரிபாதி பெண்கள். இவர்கள் செய்யும் வேலை மிக அதிகம். ஆனால், இவர்களுக்கு சம கூலி கிடைப்பதில்லை. சில மாநிலங்களில் ஆண் கூலி, பெண் கூலி என்று ஏற்றத்தாழ்வாகவே நிர்ணயிக்கப்படுகிறது. சில சமயம், நடவுக்கு இவ்வளவு, களையெடுக்க இவ்வளவு என்று வேலைகள் அடிப்படையில் கூலி நிர்ணயிக்கப்படுகிறது. அதையும் ஆழமாகப் பார்த்தால், பெண்கள் செய்கிற வேலைகளுக்கு, ஆண்கள் ஈடுபடுகிற வேலைகளுக்குக் கொடுப்பதை விடக் குறைவாகக் கூலி பேசப்படும். ஏனெனில் பெண் மதிப்புக் குறைந்தவளாகக் கருதப்படுவதால், அவள் செய்யும் வேலைகளும் மதிப்பு குறைந்ததாக, மலிவாகக் கருதப்பட்டு, கூலியும் குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பக்கம் இது பாலின பாரபட்சம் என்றாலும், உழைப்பு சக்தியில் பாதியை மலிவான விலைக்கு வாங்கிச் சுரண்டுவதின் மூலம் லாபம் ஈட்டுகிற வர்க்க ஒடுக்குமுறையும் புலனாகிறதல்லவா? மறுபுறம், பெண்ணின் உழைப்பை மலினப்படுத்துவதன் மூலம் அவளது சமூக அந்தஸ்து, தாழ்வான நிலையிலேயே நீடிக்க வைக்கப்படுகிறது. அதாவது பாலின ஒடுக்குமுறையும், வர்க்க ஒடுக்குமுறையும் ஒன்றையொன்று வலுப்படுத்தி தொடர வைக்கிறது.

பல கிராமப்புறங்களில், பெண்களின் கூலியில்லா உழைப்பும் உறிஞ்சப்படுகிறது. ஒரு கட்டு சுள்ளி உடைக்க, ஆட்டுக்கு ஒரு கொத்து தழை ஒடிக்க, மாடு கொஞ்சம் மேய என்ற சின்னச் சின்ன வேண்டுகோள்களுக்கு, ஊதியமில்லாமல் நிலவுடைமையாளர் வீட்டு கடினமான வேலைகளை செய்ய வேண்டும்.

தந்தைவழிக் குடும்பம் விவசாயப் பணிகளை சார்ந்திருந்தால், அதன் உட்கருவாக அடிமை முறையும், பண்ணை அடிமைத் தனமும் இருந்தது என்று மார்க்ஸ் கூறுவது  நிலப்பிரபுத்துவ சமூக நிலைக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. அப்படியானால், முதலாளித்துவ சமூகத்தில், இது மாறியிருக்க வேண்டுமல்லவா? ஏன் பெரிதும் மாறவில்லை? நிலப்பிரபுத்துவத்தின் மிச்சசொச்சங்கள் இன்றும் நீடிக்கின்றன என்பது மட்டுமல்ல, பெண்ணடிமைத்தனம், முதலாளித்துவத்தின் சுரண்டலுக்குத் தேவைப்பட்டது; தேவைப்படுகிறது. எனவே, பெண்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்வது தான், அவர்கள் உழைப்பை மலிவாகப் பெறுவதற்கும், அதன் மூலம் அதிக உபரியை உருவாக்கி முதலாளித்துவத்தின் அடிப்படை தேவையான லாப வேட்டைக்கும் உதவும். அத்துடன், வேலையில்லா பட்டாளத்தின் கணிசமான பகுதியாக மாறி, பொதுவான ஊதிய மட்டம் தாழ்வாகவே நீடிக்கவும் பெண்கள் பயன்படுகிறார்கள்.

இந்தியாவில் சாதிய ஒடுக்குமுறையும் வர்க்க சுரண்டலின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. தலித் மக்கள் ஒடுக்கப்பட்டு சமூகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளதால், அவர்கள் உழைப்பும் விவசாயத்தில் மலிவாகவே மதிக்கப்படுகிறது; குறைவான கூலி கொடுக்கப்பட்டு உழைப்பு சுரண்டல் நடக்கிறது. இதையே காரணம் காட்டி, இதனால் அவர்களது தாழ்வுநிலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. தலித் பெண்களுக்கோ கூடுதல் பிரச்சனைகள்! எனவே தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறையில், பாலின ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை என 3 பரிமாணங்கள் அடங்கியுள்ளன.

இந்த அடிப்படையில் தான், பெண்களின் பிரச்சனைகளை 3 விதமாகப் பார்க்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் வரையறுத்துள்ளது. பெண்ணாக, உழைப்பாளியாக, குடிமகளாக அவள் சந்திக்கும் பிரச்சனைகளை வகைப்படுத்துகிறது.

எந்த நாடு, மற்றொரு நாட்டை ஒடுக்குகிறதோ, அந்த நாடு, தனக்கான விலங்கைத் தானே உருவாக்குகிறது என்று மார்க்ஸ் கூறுகிறார். அதே போல், தொழிலாளி வர்க்கமும், பெண்கள் மீதான ஒடுக்குமுறையை ஏற்றுக் கொண்டு சும்மா இருக்கும் வரை, தம் மீதான சுரண்டலை ஒழிக்க முடியாது. பல்வேறு தளங்களில் எழும் பெண்களின் கோரிக்கைகளைத் தொழிலாளி வர்க்கம் ஆதரிக்காவிட்டால், பெண்களின் பங்கேற்பு தொழிலாளி வர்க்க அரசியலில் அதிகரிக்காது. சமூகத்தில் சரிபாதியான பெண்கள் இணையாமல், வர்க்க புரட்சியும் வெற்றி பெற முடியாது.

எனவே, பெண்ணடிமைத்தனம் என்கிற தனியுடைமை வர்க்க சிந்தனையை, வர்க்க பேதமற்ற சமூகத்தை உருவாக்கப் போராடும் தொழிலாளி வர்க்கம் விட்டொழிக்க வேண்டும். தொழிலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரை, அது ஒரு அந்நிய வர்க்க சிந்தனை. பெண்ணினத்தின் மீதான ஒடுக்குமுறையும், வர்க்க ஒடுக்குமுறையும் ஒரே காலகட்டத்தில், ஒரே காரணியால் உருவானது என்பதையும், அவற்றுக்கிடையிலான தொடர்பையும் குறித்த சரியான புரிதலோடு, பெண்கள் பிரச்சனையை வர்க்கப் பிரச்சனையாகவும் பார்த்திட வேண்டும்.

வரலாற்று ரீதியாக மதம், வர்க்க மற்றும் பாலின சுரண்டலை நியாயப்படுத்தப் பயன்பட்டது. இந்தியாவில் கூடுதலாக, சாதியம் இதை செய்கிறது.

அதேபோல், பெண் விடுதலை சாத்தியமாகவும், தனியுடமை கோட்பாட்டை அகற்றுகின்ற சமூக மாற்றம் அவசியம். எனவே, பெண் விடுதலையாளர்களும், இயக்கங்களும் அத்தகைய சமூக மாற்றத்தை உருவாக்கப் போராடும் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் அரசியலையும் பலப்படுத்துவது அவசியமாகிறது.

எங்கல்ஸ் நூலில் முன் வைக்கப்பட்டுள்ள பிரதான அம்சங்கள்

 • பெண்கள் மீதான ஒடுக்குமுறை, அவர்கள் பெண் என்பதாலோ அவர்களது உடல் கூறு செயல்படும் விதத்தாலோ ஏற்படவில்லை. வர்க்க சமூகம் தோன்றியதை ஒட்டியே, இந்த ஒடுக்குமுறையும் உருவானது.
 • மனித குல துவக்கத்திலிருந்தே பெண் இனம் ஒடுக்கப்படவில்லை. ஆண்களுக்கு இணையாகவும், ஏன் உயர்வாகவும் கூட மதிக்கப்பட்டனர்.
 • ஆதி சமுகம் வர்க்கங்களாகப் பிரிந்ததற்கும், பெண் இனத்தின் மீது ஒடுக்குமுறை செலுத்தப்பட்டதற்கும், சமூக உற்பத்திக்கான ஆதாரங்கள் தனியுடமையானதே பிரதான காரணியாக அமைந்தது.
 • கால்நடை வளர்ப்பு விவசாயம், கைவினை பொருட்கள் என்று சமூகத்தின் அனைத்து துறைகளிலும் உற்பத்தி பெருகி உபரி ஏற்பட்டதன் விளைவாகவே, உற்பத்திக் கருவிகள் தனியுடைமை ஆனதும், சமூகம் வர்க்கங்களாகப் பிரிந்ததும், பெண் இனத்தின் மீது ஆண் இனம் ஆதிக்கம் செலுத்தியதும் நடந்தேறியது.
 • உபரி உற்பத்தி என்பது ஏற்பட்ட துறைகள் அனைத்துமே வீட்டுக்கு வெளியே அமைந்தன என்பதும், அவை ஆணின் கட்டுப்பாட்டில் இருந்தன என்பதும், பெண் செய்த வீட்டு வேலையை மலிவாக்கின.
 • புதிததாக சேர்ந்த செல்வங்கள் தன் வாரிசுக்கு மட்டுமே சேர வேண்டுமென்ற ஆணின் தேவை, பெண் மீது அவன் ஆதிக்கம் செலுத்துவதை அவசியமாக்கியது.
 • இந்த ஆதிக்கம், அன்றைய ஒரு தார மணத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டது.
 • ஒரு தார மணம் தோன்றியதானது, பெண்ணை வீட்டுக்குள்ளே தனிமைப்படுத்தி, அவளது வேலையை, சமூக உற்பத்தி என்கிற வரையறையிலிருந்து விலக்கி, கணவனுக்கான தனிப்பட்ட சேவையாக்கியது.
 • பெண்கள் மீதான ஒடுக்கு முறையும் சரி, வர்க்க ஒடுக்குமுறையும் சரி, அவை தோன்றக் காரணமாயிருந்த தனியுடைமை (அதாவது, சமூக உற்பத்திக்கான கருவிகள், ஆதாரங்கள் தனிநபருக்கு சொந்தமாக இருப்பது) அகற்றப்படும் போது தான் முடிவுக்கு வரும்.

ஆனாலும்,

ஒரு தத்துவம் மக்களின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றும் போது, அது ஒரு பௌதீக சக்தியாக மாறிவிடுகிறது.

என்று மார்க்ஸ் கூறியபடி, பெண்கள் மீதான ஒடுக்குமுறை தோன்றுவதற்கு தனியுடைமை பிரதான காரணமாக இருந்தாலும், நீண்ட காலம் ஆணாதிக்கம் கட்டுக்கோப்பு நிலையில் இருந்தால், மக்களின் மனதில், இயல்பானதாக ஆழமாக நிலை கொண்டு விட்டது. எனவே, தனியுடைமை அகற்றப்பட்ட உடன், தானியங்கியாக பெண் விடுதலை கிடைத்து விடாது. நவம்பர் புரட்சிக்குப் பிறகு சில அடிப்படையான பாலின சமத்துவத்துக்கான நடவடிக்கைகளை எடுத்த பிறகும் லெனின் சொல்வதைப் பாருங்கள் –

“பெண்களின் நிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அரசமைத்து ஓர் ஆண்டுக்குள் நாம் செய்துள்ள பணிகளில் 100ல் ஒரு பங்கு கூட, வளர்ந்த பூர்ஷ்வா நாடுகள் செய்யவில்லை. பழைய சமூகத்தின் மிச்ச சொச்சங்களை, சட்டங்களை, நிறுவனங்களை அகற்றி நிலத்தை  சுத்தமாக்கியுள்ளோம்! சுத்தமாக்கும் போது தான் நமக்குப் புரிகிறது. நிலத்தை சுத்தம் மட்டும் செய்துள்ளோம். அதன் மீது இன்னும் கட்டப்பட வேண்டியது பாக்கியிருக்கிறது என்பது”.

எனவே, தனியுடைமையை தகர்க்கிற சோஷலிசம் வந்தால் மட்டும் போதாது. அதன் விளை பொருளான ஆணாதிக்கம் மண்மூடிப் போக கருத்தியல் மாற்றத்தை உருவாக்குகிற விசேச நடவடிக்கைகளும் தேவைப்படும்.

மொத்தத்தில் மார்க்சிய தத்துவத்தின் ஆசான்களும் சரி, அவற்றை நடைமுறைப்படுத்திக் காட்டிய தலைவர்களும் சரி, பெண் விடுதலையும், தொழிலாளி வர்க்க விடுதலையும் ஒன்றொடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள்.  இந்திய பெண்களில் பெரும் பகுதியினர் உழைப்பாளி வர்க்கத்தை சார்ந்தவர்கள். இவர்கள் தொழிலாளி வர்க்க அரசியலை ஏற்றுக் கொள்ளாமல், அவர்களது பங்கேற்பு இல்லாமல் புரட்சி வெற்றியடையாது. புரட்சிக்கும் பின்னும் கூட, சோசலிச சமூகத்தை நிர்மாணிப்பதில் அவர்களது உழைப்பு தேவை. அது மட்டுமல்ல, இந்திய நிலையே எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசை அகற்றி, மக்கள் ஜனநாயக அரசை அமைப்பதே புரட்சியின் கட்டமாக, மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புரட்சி, அடிப்படையில் ஏகபோக முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய எதிர்ப்பு அம்சங்கள் கொண்ட ஜனநாயகப்புரட்சி. நிலப்பிரபுத்துவ, ஏகபோக, ஏகாதிபத்திய ஒடுக்குமுறையில் பாதிக்கப்படும் அனைத்து மக்களையும் இதற்கு திரட்டுவதே நமது நோக்கம் எனில், பெண்ணாக, உழைப்பாளியாக, குடிமகளாக சுரண்டப்படும் பெண்களை இணைக்காமல், அந்த நோக்கம் எப்படி நிறைவேறும்? எனவே புரட்சிக்கு தலைமையேற்கும் தொழிலாளி வர்க்கம், பெண்கள் மீதான ஒடுக்குமுறை பிரச்சனைகளில் தலையீட்டை வலுப்படுத்த வேண்டும். அவர்களை தொழிலாளி வர்க்க அரசியலின் பால் ஈர்க்க வேண்டும். பெண்கள் இயக்கங்களும், பெண்கள் மத்தியில் தொழிலாளி வர்க்க அரசியல் கருத்துக்களைக் கொண்டு போக வேண்டும். இதற்கு பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் வர்க்க பரிமாணத்தைப் பற்றிய சரியான புரிதல் அத்தியாவசியமானது.

ஆதாரம்

 1. Marxism and the Emancipation of Women –  Ella Rule
 2. குடும்பம் – தனிச்சொத்து – அரசு ஆகியவற்றின் தோற்றம் – எங்கல்ஸ்


%d bloggers like this: