மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கம்யூனிஸ்டுகளும், தொழிலாளி வர்க்கமும் II


மார்க்சிஸ்ட்டின் செப்டம்பர் மாத இதழில் கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளி வர்க்கத்தினர் மத்தியில் அதிக கவனம் செலுத்தி பணியாற்றுவதைப் பற்றிய சில அம்சங்களை குறிப்பிட்டு இருந்தோம். குறிப்பாக தொழிலாளி வர்க்கமும் இன்றைய உலகில் முதலாளித்துவ சுரண்டலையும், ஆட்சிகளையும் நேரடியாக அன்றாடம் எதிர்த்துப் போராடக் கூடிய வர்க்கம் என்ற முறையில் சமுதாய வளர்ச்சியில் ஒரு தனிப்பாத்திரத்தை நிறைவேற்றுகிறது என்பதை குறிப்பிட்டிருந்தோம். இரண்டாவதாக, இன்றைய உலகில் நவீன உற்பத்தி முறைகளை விஞ்ஞானத்தை  அன்றாடம் கையாளக்கூடிய தன்மையுடைய ஒரு வர்க்கம் என்ற முறையில் மிகவும் முற்போக்கான ஒரு பங்கு இந்த வர்க்கத்திற்கு இருப்பதை பற்றி குறிப்பிட்டிருந்தோம். அதே போல, கூட்டான முறையில் அனைவரும் சேர்ந்து உற்பத்தியில் ஈடுபடக் கூடிய வர்க்கம் என்ற முறையில் இவ் வர்க்கத்திற்கு கூட்டான எண்ணங்களும், உணர்வுகளும் இயல்பாகவே ஏற்படுகிறது என்றும் கூட்டாகவே போராடி அந்த அனுபவத்தை வர்க்கப் போராட்டத்திலும், சமுதாய மாற்றத்திற்கான புரட்சிகரமான பணிகளிலும் நடைமுறைப்படுத்தக் கூடிய வர்கம் என்ற முறையில் தொழிலாளி வர்கத்திற்கு மிகவும் முக்கியமான தலைமை தாங்க கூடிய தன்மைகள் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான பாத்திரம் – அனுபவத்தில்:

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற் சாலைகள் மூலம் உற்பத்தியின் அனைத்து துறைகளிலும் நவீன முறைகள் நடைமுறைக்கு வந்து இரு நூற்றாண்டுகள்தான் ஆகின்றன. துவக்க காலத்திலிருந்து அநேகமாக எல்லா நாடுகளிலும் சிறியது முதல் பெரியது வரை மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் இடைவிடாமல் நடைபெற்று வருவதை காண்கிறோம்.

சோசலிசத் திற்கான மாபெரும் புரட்சிகரமான எழுச்சிகளில் – ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி, வியட்நாம், கிழக்கு ஐரோப்பா, கொரியா, கியூபா போன்ற நாடுகளில் எல்லாம் தொழிலாளி வர்க்கத்தின் பொது வேலை நிறுத்தங்கள்தான் புரட்சிகரமான எழுச்சிகளுக்கு தூண்டு கோலாக அமைந்தது. அதேபோல, இந்தியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவில் பல நாடுகள் போன்ற பகுதிகளில் வீரத்துடன் நடைபெற்று வெற்றியும் அடைந்த தேச விடுதலைப் போராட்டங்களில் தொழிலாளி வர்க்கத்தினுடைய மகத்தான பங்கு நேரடியாக பார்க்க முடிந்தது. இந்தியாவில் சுதந்திர போராட்டக் காலத்தில் மாபெரும் தேசிய தலைவர் திலகர் 1908ல் கைது செய்யப்பட்டதை கண்டித்து மும்பாயைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் வேலை நிறுத்தம் செய்ததைப் பற்றி தோழர் லெனின் அவர்களே மிகவும் பாராட்டி கட்டுரை எழுதியிருந்தார். பிற்காலத்தில் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் கொடூரமான அடக்குமுறைகள் தாண்டவமாடிய காலத்தில் பெரிய அளவில் தொழிலாளி வர்க்கம் போராட்டங்கள் நடத்திய வரலாற்றினையும் நாம் பார்க்கிறோம்.

1946-லிருந்து 1948வரை நாடு தழுவிய அளவில் பிரம்மாண்டமான எழுச்சி நடைபெற்ற போது தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்தம் மிகவும் மகத்தான பாத்திரத்தை நிறைவேற்றியது. 1946ல் மும்பாயில் இந்திய கப்பற்படை மாலுமிகளின் கலவரத்தின் நேரத்தில் மும்பாய், சென்னை, கல்கத்தா மற்றும் முக்கிய நகரங்களில் எல்லாம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் போர்க்குணமிக்க பொது வேலைநிறுத்தங்கள் நாட்டை ஒரு குலுக்கு குலுக்கியது. இவ்வாறு நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்கள் தொழிலாளி வர்க்கத்தின் பங்கினை அழுத்தமாக நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது. அண்மையில் நமது நாட்டில் நடைபெற்ற பொதுவேலை நிறுத்தத்தில் கோரிக்கைகளுக்கான அம்சங்களைத் தவிர அரசு கொள்கைகளுக்கு எதிரான – தாரளமயம் – அடக்குமுறை சட்டங்கள் – வாழ்க்கைத் தரத்திற்கு எதிரான தாக்குதல்கள் போன்ற அம்சங்களும் இருந்தது. இந்த மகத்தான போராட்டத்தில் மத்திய தர வர்க்கத்தினர் உட்பட கணிசமான அளவிற்கு உழைக்கும் வர்க்கம் பங்கேற்றது. அக்டோபர் 4-ந் தேதி தனியார்மயத்தை எதிர்த்தும், உழைப்பாளிகளின் உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை கண்டித்தும் பிரான்ஸ் நாட்டில் பரவலாக வேலைநிறுத்தம் நடைபெற்ற செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன. அநேகமாக நாள்தோறும் இத்தகைய போராட்டங்கள் பல நாடுகளில் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.

இவற்றின் மூலம் தொழிலாளி வர்க்கம் இன்றைய உலகில் போராட்டங்களில் ஈட்டிமுனையாக செயல்படுவது கண்கூடாக தெரிகிறது. கடந்த மூன்றாண்டுகளில் அமெரிக்கா ஈராக்கை தாக்கிய போது முதலாளித்துவ நாடுகள் உட்பட ஏராளமான நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் பிரம்மாண்டமான ஆர்ப் பாட்டங்கள் நடந்தது பற்றி உற்சாகமான செய்திகள் வந்தன.

வரலாற்று ரீதியான படிப்பினைகள் :

மார்க்சிசத்தில் மிகவும் ஆதாரமான ஒரு பகுதி வரலாற்று இயல் பொருள்முதல் வாதம் ஆகும். மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து வரலாற்று ரீதியாக கிடைக்கப் பெற்ற அனுபவங்களின் தொகுப்பு இந்த தத்துவத்தில் உள்ளடங்கியுள்ளது. அதன்படி சமுதாய வளர்ச்சியின் போக்கில் ஒவ்வொரு நீண்ட காலக்கட்டத்திலும் (யுகத்திலும்) உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்டு சமுதாய மாற்றங்கள் ஏற்படுகிறது என்று மார்க்சியம் போதிக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் குறிப்பிட்ட ஒரு வர்க்கம் முன்னணிப் பாத்திரத்தை வகுத்து வருகிறது.

உதாரணமாக, அடிமை சமுதாயத்திலிருந்து நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்கு படிப்படியாக மாற்றங்கள் ஏற்படும் போது அந்த நாள் வரை அடிமைகளை சுரண்டி வந்த எஜமானர்களில் பலர் நிலப்பிரபுக்களாக வளர்ச்சியடைந்தார்கள். அவர்கள் ஆட்சியதி காரங்களை கைப்பற்றினர். பல நூற்றாண்டுகள் வரை மன்னர்கள், குறுநில மன்னர்கள் போன்றவர்களின் கைகளில் அரசியல் அதிகாரம் குவிந்து கிடந்தது. அரசியல், கலாச்சாரம் மற்றும் எல்லா அம்சங்களிலும் நிலப்பிரபுத்துவம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. பல நூற்றாண்டுகளின் வளர்ச்சிக்குப் பின் நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்குள் படிப்படியாக புதிய உற்பத்தி முறைகள் தோன்றி முதலாளி வர்க்கம் அரங்கிற்கு வந்தது. புதிய முறையிலான தொழிற்சாலை உற்பத்தி முறைகள் பரவியது. இவற்றிற்கு எல்லாம் தலைமை தாங்கியது புதிய முதலாளி வர்க்கமாக இருந்தது. பழைய நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கும், புதிய முதலாளி வர்க்கத்திற்கும் மோதல்கள் நடைபெற்றன. ஆயினும், நவீன உற்பத்தியின் முறைகளின் தலைவர்களாக வளர்ந்த முதலாளி வர்க்கம் இறுதியில் வெற்றிப் பெற்று இன்று வரை உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இன்றைய வரலாற்று ரீதியான காலகட்டத்தில் நவீன உற்பத்தி முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் தோன்றியுள்ளன. அனைத்து உற்பத்தி சம்பந்தப்பட்ட காரியங்களும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் இணைந்து கூட்டாக செய்ய வேண்டியவையாக அமைந்துள்ளது. உற்பத்தி அனைத்தும் இவ்வாறு கூட்டான முறையில் ஆயிரக் கணக்கான ஊழியர்களினுடைய உழைப்பை ஆதாரமாக இருந்து வருகிறது. மூலப்பொருள் கொண்டு வருவதிலிருந்து, இறுதியான விற்பனைப்பொருளாக மாறுவதுவரை, கூட்டான உழைப்பை உள்ளடக்கிய ஒரு முறைதான் நவீன உற்பத்தி முறை.

அதே நேரத்தில் இந்த காரியங்கள் அனைத்தின் உடைமைமுறை பொறுத்தமட்டில் அது தனிப்பட்ட சில முதலாளிகளின் கை வசம் சிக்கியுள்ளது ! ஆகவே தான், இன்றைய உற்பத்தி முறைபற்றியும், முதலாளித்துவ சுரண்டலைப்பற்றியும், காரல் மார்க்ஸ் அவர்கள் விளக்குவது மிகவும் கருத்து பொதிந்ததாகும்.:-  கூட்டான உற்பத்தி முறைக்கும் தனியார் உடைமை முறைக்கும் உள்ள முரன்பாடுதான் முதலாளித்துவத்தின்  அடிப்படை முரண்பாடாகும்.  இந்த முரண்பாட்டில் வளர்ந்து கொண்டே இருக்கும் உற்பத்தி சக்திகளின் பிரதிநிதியாக திகழ்வது தொழிலாளி வர்க்கமாகும். உடைமை முறையை பிரதிநிதித்துவப் படுத்துவது முதலாளி வர்க்கமாகும். ஆகவேதான், இன்றைய உலகத்தில் முக்கிய முரண்பாடு தொழிலாளி வர்க்கத்திற்கும், முதலாளி வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடாகும் என்று மார்க்சிசம் போதிக்கின்றது. இதில் தொழிலாளி வர்க்கம் சோசலிசத்திற்கான, அடிப்படை சமுதாய மாற்றத்திற்கான போராடக்கூடிய வர்க்கமாகும். மறுபக்கத்தில் முதலாளி வர்க்கம், பழைய சுரண்டல் அமைப்புகளை பாதுகாப் பதற்காக முயற்சிக்கும் வர்க்கமாகும்.

ஆகவேதான் வரலாற்று ரீதியான இன்றைய யுகத்தில் தொழிலாளி வர்க்கம் புரட்சிகரமான வர்க்கமாகும் என்று கம்யூனிஸ்ட்டுகள் தெளிவாக புரிந்திருக்கின்றனர். அடிப்படையான சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் முக்கிய தலைமை பாத்திரத்தை நிறைவேற்ற வேண்டியது தொழிலாளி வர்க்கமாகும். புரட்சிகரமான வர்க்கமாக தொழிலாளி வர்க்கத்தை உயர்த்துவது:

ஆலைகளில் பணியாற்றுவதன் மூலம் மட்டும் தொழிலாளர்கள் தாங்களாகவே புரட்சிக்கு தயாராகிவிடுவார்கள் என்பது தவறான கருத்து என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். பல ஆலைகளில் பல்வேறு தொழில்கள் செய்து, வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய தொழிலாளர்களை புரட்சிப்பாதைக்கு அழைத்து வருவது கடுமையான பணியாக இருப்பினும், அம்முயற்சி வெற்றி பெற்ற அனுபவங்கள் ஏராளம் ஏராளம்!

இந்த முயற்சியின் முதல்படியானது, தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் தொழிற்சங்கங்களை அமைப்பதும், அவற்றில் சிதறிக்கிடக்கும் தொழிலாளர்களை இணைத்து, அவர்களுக்கு ஆரம்ப நிலை வர்க்க உணர்வை ஊட்டுவதுமாகும். இவ்வாறு செய்து பல போராட்டங்கள் மூலம், தொழிலாளர்களுக்கு போராட்ட குணங்களை கற்றுக்கொடுப்பது ஒரு முக்கிய கடமையாகும். நாளடைவில் பல தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாற்றும் பொழுது அவர்களின் மனதில் நாம் தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உயர்ந்த எண்ணம் உருப்பெறுகின்றன. (தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு மற்ற சங்கங்களின் மூலம் ஆதரவைத் திரட்டுவது என்ற பணி மூலம், வர்க்க உணர்வு வலுப்பெறுகிறது என்ற முறையில் இந்த ஆதரவு இயக்கங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்)

வேலைநிறுத்தங்கள் மற்ற பல்வேறு போராட்டங்கள் மூலம் வர்க்க உணர்வை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தொழிற்சங்கங்களில் கம்யூனிஸ்ட்டுகள் பணியாற்றுகிறார்கள்  என்பது கம்யூனிஸ்ட் தொழிற்சங்க வாதிகளுக்கும், இதர தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் உள்ள அடிப்படையான வேறுபாடாகும். வர்க்கத்தைத் திரட்டுவது, வர்க்க உணர்வை வளர்ப்பது போன்ற ஆதாரமான கடமைகளை செய்வதற்காகவே கம்யூனிஸ்ட்டுகள் தொழிற்சங்கங்களில் பணியாற்றுகிறார்கள்.

ஆரம்ப நிலையில் பல ஆலைகளில் அல்லது துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தன் பணியுடன் இணைந்த உணர்வுதான் இயல்பாகவே ஏற்படுகிறது. (நான் ஒரு பஞ்சாலைத் தொழிலாளி, இரயில்வே தொழிலாளி, சிமெண்ட் ஆலைத் தொழிலாளி, சர்க்கரை ஆலைத் தொழிலாளி போன்ற பகுதி வாரியான உணர்வுகள் அல்லது நான் ஒரு பெயிண்டர், வெல்டர் … போன்ற தொழில்வாரியான சிந்தனைகள்) இந்த நிலையிலிருந்து, நான் தொழிலாளி வர்க்கத்தைச் சார்ந்தவன் என்ற எண்ணத்திற்கு அவர்களை உயர்த்திக் கொண்டு வருவதற்கு கம்யூனிட்கள் உணர்வுப் பூர்வமாக முயற்சிக்கிறார்கள். ஸ்தல உணர்வுகளிலிருந்து, அனைத்திந்திய உணர்வு வரை உயர்த்துவதும், நாளடைவில் உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளிகள் அனைவரும் ஒரே வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்ற மகத்தான கருத்தினை இந்த வர்க்கத்திற்கு புகட்டுவது கம்யூனிஸ்ட்டுகளின் கடமையாகும். முதலாளித்துவ கட்சிகள், தொழிற்சங்கத்தில் பணியாற்றும் போது இத்தகைய பார்வை இருப்பதே இல்லை. வர்க்க எதிரியை அடையாளம் காணுதல் :

பல கட்சி சார்பற்ற தொழிற்சங்கத் தலைவர்கள் அல்லது பூர்சுவா கட்சித் தலைவர்கள், குறிப்பிட்ட ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக மட்டும் தான் தொழிற்சங்கம் என்ற முறையிலான எண்ணங்களை வேண்டுமென்றே வளர்க்கப் பார்க்கிறார்கள். தொழிலாளி வர்க்கத்தை சுரண்டுவது, முதலாளி வர்க்கம்தான் என்ற மிகவும் அடிப்படையான உண்மையை தொழிலாளர்களிடமிருந்து மறைத்து, வர்க்க சமரச எண்ணங்களை பரப்புவதற்கு திட்டமிட்டு முயற்சிக்கிறார்கள். முதலாளி வர்க்கத்தின் அனைத்து முறையிலான சுரண்டல்தான் நம்முடைய வர்க்கத்தின் அவல நிலைக்கு காரணம் என்ற எண்ணத்தை ஆழமாகத் தொழிலாளர்களின் மனதில் பதிய வைக்க கம்யூனிஸ்ட் தோழர்கள் தொடர்ந்து முயற்சிப்பார்கள். வர்க்க உணர்வை ஊட்டுவது, புரட்சிகரமான மாற்றத்திற்கான போராட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாகும் என்று எண்ணக் கூடியவர்கள் கம்யூனிஸ்ட் தொழிற் சங்கவாதிகள். இதரர்களிடமிருந்து இது ஒரு பெரிய மாறுபட்ட தன்மையாகும்.

அரசின், ஆட்சிகளின் தன்மை:

கம்யூனிஸ்ட்கள் அல்லாத தொழிற்சங்கத் தலைவர்கள் ஆட்சியாளர்களைப் பற்றியும், அரசு பற்றியும் வர்க்க சமரச பார்வையுடனேயே பிரச்சாரம் செய்கிறார்கள். ஆட்சியாளர்கள் அடிப்படையிலேயே சுரண்டும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பவர்கள் என்ற மூலாதாரமான கருத்தை கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளர்களுக்குப் போதிக்கிறார்கள். அரசின் வர்க்கத்தன்மை பற்றி புரிய வைக்காமல் தொழிலாளி வர்க்கத்தை புரட்சிகரமான வர்க்கமாக மாற்ற முடியாது. தவிர, இப்பேருண்மையை தொழிலாளர்கள் உணராமல் இருந்தால் சாதாரண போராட்டங்கள் கூட சரியாக நடத்த முடியாமல் போய்விடும் என்று கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளர்களுக்கு புரிய வைக்க பாடுபடுகிறார்கள். ஆளும் வர்க்கங்களின் அடக்குமுறைகளை சந்தித்துதான், தொழிலாளிவர்க்கப் போராட்டங்கள் முன்னேற முடியும் என்ற எண்ணத்தையும் ஆழமாக தொழிலாளர்களின் மனதில்  பதிய வைப்பது கம்யூனிஸ்ட்டுகளின் ஒரு முக்கிய கடமையாகும். அடக்குமுறைகளுக்கு முன் அஞ்சாமல் நிற்க வேண்டிய அம்சத்தை தொழிலாளர்களுக்கு போதிக்க வேண்டும். இந்தப்பணி எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் அல்லாத தொழிற்சங்கவாதிகள் நினைத்துகூடப் பார்ப்பதில்லை.

மேலே குறிப்பிட்ட சில அம்சங்கள் கம்யூனிஸ்ட்டுகளின் தொழிற்சங்க பார்வைக்கும், இதர தொழிற்சங்கத்தலைவர்களின் கண்ணோட்டத்திற்கும் உள்ள மாறுபாடுகளாகும். ஆக, தொழிலாளர்களுக்கு ஒரு புதிய உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தொழிற்சங்கங்களில் பணியாற்றும் கம்யூனிஸ்ட்டுகள் நேர்மையாகவும், உறுதியாகவும் முயற்சித்து தொழிலாளர் இயக்கத்தை ஒரு போர்குணமிக்க இயக்கமாக, சக்தியாக வளர்க்க பாடுபடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். தொழிலாளி வர்க்கத்தை புரட்சிகரமான வர்க்கமாக உயர்த்துவது என்ற கடமையில் மேலும் பல அம்சங்களை அடுத்த இதழில் பார்ப்போம்.

I



%d bloggers like this: