மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சிவில் சமூகம் என்றால் என்ன?


அரசு சாரா அமைப்பு சொல்லும் அரசியல் சாரா சமூகம் – ஒரு மார்க்சீய ஆய்வு

அறிமுகம்

(அரசியல் சாரா அமைப்புகள் பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிலையினை 18வது கட்சி காங்கிரஸ் அதன் அரசியல் – ஸ்தாபன அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அமைப்புகளில் சில அணி திரட்டப்பட்ட இடதுசாரி இயக்கங்களிலிருந்து மக்களை திசை திருப்ப பயன்படுத்தப்படுகின்றன என அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. சிவில் சமூகம் என்ற கோட்பாட்டினை இவை முன்வைத்து, ஒரு மூன்றாவது வழியாக (சோசலிசம், முதலாளித்துவம் ஆகிய இரண்டிற்கும் மாற்றாக) பிரச்சாரம் செய்யப்படுகிறது.

சிவில் சமூகம் பற்றி மார்க்சீய – லெனினிசத்தின் அடிப்படையில் இத்தாலிய கம்யூனிஸ்ட் அறிஞர் அந்தோனியோ கிராம்சி கூறியதை நினைவில் கொள்வது அவசியம். சிவில் சமூகம் என்பதும் அரசு (அரசியல் சமூகம்) என்பதும் வெவ்வேறு அமைப்புகளாக இருந்தாலும், ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகள் தான். அரசின் மீது எந்த வர்க்கம் மேலாதிக்கம் செலுத்துகிறதோ அதுவேதான் சிவில் சமூகத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும்.

சிவில் சமூகங்களை அரசுக்கு எதிராக, அல்லது அதற்கு மாற்றாக நிறுத்தும் முயற்சியில் அரசு சாரா அமைப்புகள் இன்று தாராளமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடும் மக்களை வலுவிழக்கச் செய்து விடுகின்றன. எங்கும் பரவி நிற்கும் (தாராளமாக வந்து குவியும் நிதியாதாரங்களோடு) இந்த அமைப்புகள் இடதுசாரி புரட்சிகர இயக்கத்திற்கு பெரும் சவாலாக உருவெடுக்கின்றன.

தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற போராடும் பொழுது சிவில் சமூகத்தின் மீது தன் ஆளுமையினை உறுதி செய்து கொள்ள வேண்டுமென்கிறார் கிராம்சி. தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் கட்சியும் (கம்யூனிஸ்ட் கட்சி) தொழிலாளர் நலன்களுக்காக போராடும் மற்ற அமைப்புகளும், பரந்த அளவில் மக்களின் ஜனநாயக உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களின் ஆதரவுடன் செயல்படுவதற்கான சமூக அடிப்படை சிவில் சமூகத்தில் இருக்கிறது.

பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி இது சம்பந்தமாக வெளியிட்ட விமர்சனக் கட்டுரையினை தமிழாக்கம் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. கட்சி அணிகள் அரசியல் சாரா இயக்கங்கள் பற்றிய கோட்பாட்டு அடிப்படைகளில் தெளிவு பெற இக்கட்டுரை உதவும் என்று ஆசிரியர் குழு கருதுகிறது)

சிவில் சமூகக் கருத்து :

சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பிறகு பெரும்பாலான இடதுசாரி அறிவு ஜீவிகள் சிவில் சமூக கோட்பாடு என்னும் காய்ச்சலுக்கு ஆட்படுத்தப்பட்டனர். அரசியல் சாரா தன்னார்வ அமைப்புகள், மனித உரிமைக் குழுக்கள் முதல் கல்வியாளர்கள், ஆர்வலர்கள் வரை ஜனநாயகவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொண்ட எதிர்ப்பாளர்கள் உட்பட நவீன உலகின் தீமைகளை எதிர்த்துப் போராட சிவில் சமூகம் என்னும் கோட்பாட்டையே பாதையாகத் தேர்ந்தெடுத்தனர். எனினும், சிவில் சமூகம் என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதற்கு சிலர் கேள்வி எழுப்பினாலும், மற்றவர்கள் அதைப் பற்றிய கருத்து எதையும் வெளிப்படுத்தவில்லை.

பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் புரட்சிகள், ஜனநாயகம் மற்றும் சிவில் சமூக கோட்பாடுகளின் மூலாதாரமாக அமைந்தது. மேற்கூறப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகளின் காலத்தில் வளர்ச்சி பெற்ற இக்கொள்கையே இன்று சிவில் சமூகம் என்பதன் அடித்தளமாக அமைந்துள்ளது.

பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் புரட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டங்களின் படி சிவில் சமூகம் என்பது ஆறு கொள்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.

அவை;- சொத்து, சமத்துவம், சுதந்திரம், பாதுகாப்பு, மதச்சார்பின்மை மற்றும் பத்திரிகை சுதந்திரம்.

உதாரணமாக, மனித உரிமை பிரகடனம் ஷரத்து 2, சமத்துவம், சுதந்திரம், பாதுகாப்பு, சொத்து ஆகியவை இயற்கையான, மீறப்படக் கூடாத உரிமைகள் என விளக்குகிறது. முதற்பார்வையில் இந்தக் கொள்கைகள் நியாயத்திற்கு உருக் கொடுத்தது போல் தோற்ற மளிக்கின்றன. பிரபல பத்திரிகைகள் மற்றும் தினசரி செய்தித் தாள்கள் மூலம் இவை தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்பட்டன. இருப்பினும், கூர்ந்து நோக்குங்கால், சிவில் சமூக கோட்பாடு என்பது முதலாளி வர்க்க ஆட்சியாதிகாரத்தைக் கடந்து சிறிதும் சென்று விடவில்லை என்பது புலப்படும். ஒரு வார்த்தையில் கூறினால், சிவில் சமூகம் என்பது முதலாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறைமுகமாகச் சொல்வதாகும்.

சொத்து: –

சிவில் சமூகக் கோட்பாட்டின் மையக் கொள்கையாவது, மீறப்படாத உரிமை கொண்ட தனிச் சொத்தைப் பற்றியதாகும். உதாரணமாக அரசியல் சட்டம் 1793ன் ஷரத்து 16ன் படி:- சொத்துரிமை என்பது எல்லா பிரஜைகளும் அவரவர்கள் செய்த வேலை, தொழில் ஆகியவை மூலம் ஈட்டிய வருமானத்தையும், பொருட்களையும் அவர்கள் சொந்த விருப்பப்படி அனுபவிக்கவும், விற்கவும் உரிமை பெற்றவர்கள் என்பதாகும் என்று மார்க்ஸ் கூறுகிறார்.

இப்படியாக சொத்துரிமை என்பது அவன் தன்னிடம் இருப்பதை அனுபவித்து விருப்பம் போல் அதை கையாளும் உரிமை; மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் சமூகத்திலிருந்து விடுபட்டு நின்று சுயநலம் பேணும் உரிமையாகும். முன்னால் குறிப்பிட்ட தனி மனித சுதந்திரத்தோடு பின் குறிப்பிடப்பட்ட அதை செயல்படுத்தும் முறைதான் சிவில் சமூகத்தின் அடிப்படையினை உருவாக்குகிறது. அது மனிதன் தன் சுதந்திரத்தைப் புரிந்து கொள்ள உதவுவதில்லை, மாறாக அடுத்தவனுக்கும் அந்த சுதந்திரம் உண்டு என்பதை உணர விடாமல் தடுக்கிறது. தனது சுதந்திரத்திற்கு எல்லை போடுபவர்களாக அடுத்தவர்களைப் பார்க்க வைக்கிறது.

இவ்வாறாக ஏனைய இதர மனித சமுதாயத்தை முழுவதுமாகப் புறக்கணித்து தனது விருப்பத்தின் பேரில் தனிச் சொத்தின் உபயோகம் என்பது முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் சிவில் சமூக கோட்பாடுகளின் நிர்ணய நியதிகளாக கட்டமைக்கப்பட்டுள்ளன. செல்வ ஆதாரங்களை சுயநலத்திற்கு பயன்படுத்துவது  என்பதே சிவில் சமூகக் கோட்பாட்டின் மையக் கொள்கையாகும்.

பொருளாதார ஆய்வுகளிலிருந்து தனிச் சொத்து என்பது சில குறிப்பிட்ட வளர்ச்சி விதிகளைப் பின்பற்றுகிறது என்பதை நம்மால் அறிய முடிகிறது.  நமது கவனத்தைக் கவர்வது மூலதனக் குவிப்பு நியதியாகும். உண்மையில், உலகில் மூன்று மிகப் பெரும் தனிநபர் பணக்காரர்களிடம் உள்ள சொத்து 60 கோடி மக்களிடம் உள்ளதை விட அதிகமாகும். இம்மாதிரியான வளர்ந்து வரும் சமத்துவமின்மை தனி உடமை தர்மத்திற்கு விரோதமானதல்ல.

சமத்துவம்:

சமத்துவம் என்ற கோட்பாட்டை சிவில் சமூகம் இவ்வாறு விளக்குகிறது. அரசியல் சட்டம் ஷரத்து 3ன்படி; …… சமத்துவம் என்பது சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்ற உண்மையை உள்ளடக்கியதே. பாதுகாப்பு நல்கினாலும், தண்டனை கொடுத்தாலும் பாகுபாடு காண்பிக்கக்கூடாது என்பதே. வேறு வார்த்தைகளில், சிவில் சமூகத்தில் சொல்லப்படுகின்ற சமத்துவம் என்பது சட்டத்தின் முன் சமம் என்பதே தவிர வாய்ப்பு அளிப்பதில் சமத்துவம் என்பதல்ல. அதாவது, சட்ட ரீதியான சமத்துவம் என்பதே தவிர பொருளாதாரரீதியாகவோ மனிதன் என்ற முறையிலோ அது அர்த்தப்படுத்தப்படவில்லை. ஆகவே, சிவில் சமூகக் கோட்பாட்டில் அடங்கியுள்ள சமத்துவம் என்பது பரந்தும், வளர்ச்சியுற்றும் வருகின்ற பொருளாதார ஏற்றத் தாழ்வு, செல்வக் குவிப்பு, அதிகாரம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றுடன் முழுவதுமாக இணக்கம் கொண்டதாகும். உண்மையில் சிவில் சமூகத்தில் சொல்லப்படுகின்ற சமத்துவம் என்பது பொருளாதார சமத்துவமின்மைக்கு முகவுரையாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சிவில் சமூகம் என்ற கோட்பாடே தனிச் சொத்து என்பதன் முகவுரைதான்!

சுதந்திரம்:

எனவே எந்த அர்த்தத்தில் இத்தகைய சமூகத்தில் சுதந்திரம் என்ற சொல் உள்ளது என்பதை கேள்வியாக கேட்க வேண்டியள்ளது. சுதந்திரம் என்ற மிகப் பெரிய வார்த்தை, சுரண்டலிலிருந்து விடுதலை என்னும் கருத்தை உணர்த்துவதாகும். எனினும் இந்தக் கருத்து சிவில் சொசைட்டி கோட்பாட்டின்படி முழுவதுமாக சரியல்ல. ஷரத்து 6-இன் படி:- சுதந்திரம் என்பது ஒரு மனிதன் மற்றவர்களின் உரிமையினை மீறாதவாறு எந்த ஒரு செயலையும் செய்ய அளிக்கப்பட்ட அதிகாரம் என்பதாகும். 1791 மனித உரிமை பிரகடனத்தின்படி, சுதந்திரம் என்பது சட்டங்கள் விளக்கியபடி மற்றவர்களைத் துன்புறுத்தா வண்ணம் எந்தவொரு செயலையும் செய்யும் அதிகாரத்தை உள்ளடக்கியது. ஆகவே சிவில் சமூகத்தில் சொல்லப்படுகின்ற சுதந்திரம் என்பது மற்றவர்களுடைய சொத்தின் மீது உரிமை கோராத வகையில் எதையும் செய்யும் உரிமை என்பதாகும். தனிச் சொத்தின் மீது எந்த (எவருடைய) உரிமை கோருதலும் இருத்தல் கூடாது என்பதை உயர்த்திப் பிடிக்கும் சட்டத்தை வரம்புகளாகக் கொண்டதே சிவில் சமூகத்தின் மையக் கோட்பாடு. அதாவது, தனிச் சொத்து என்ற ஸ்தாபனம் மூலம் தொழிலாளர்களை சுரண்டும் உரிமையை முதனிலைப் படுத்தப்பட்டது தான் சுதந்திரம் என்பதாகும். மேலும், சமூக உறவுகளை தொழிலாளிகள் மாற்றியமைக்க முயற்சி செய்யுங்கால், அச் செயல் மற்றவர் உரிமை அல்லது சுதந்திரத்தை மீறும் செயலாகக் கருதப்படுமேயொழிய, சுரண்டலிலிருந்து சுதந்திரம் பெறுவது என்பதாகாது. முடிவாக, சிவில் சமூகத்தில் சொல்லப்படுகின்ற சுதந்திரம் என்பது முதலாளிகள் தொழிலாளிகளைச் சுரண்டுவதேயன்றி வேறேதுமில்லை.

பாதுகாப்பு:

பொருளாதார சமத்துவமின்மை என்னும் நெறுக்குதலிலிருந்து சிவில் சமூகம் சிதறாத வகையில், தடுத்து நிறுத்தும் கொள்கையே பாதுகாப்பு என்பதாகும். அரசியல் சட்டம் 1793ன் ஷரத்து 8ன் படி: – சமூகம் தனது ஒவ்வொரு பிரஜைக்கும் தனிநபர், உரிமைகள், சொத்து இவற்றிற்கான காப்பாற்றுதல் அளிப்பதை உள்ளடக்கியதே பாதுகாப்பு என்பதாகும் மார்க்ஸ் எழுதுகிறார்.

பாதுகாப்பு என்பது சிவில் சமூகத்தின்  உயர்ந்தபட்ச சமூக கோட்பாடாகும். காவல்துறை மூலம் காப்பது என்பதாகும்.  ஒருவனது சொத்து  மற்றும் உரிமைகளை சமூகமே பாதுகாக்க வேண்டும் என்பதாகும்.

வேறு வார்த்தைகளில் கூறினால் சிவில் சமூகத்தில் உள்ள பாதுகாப்பு என்பது பசி, வறுமை, சீரழிவு இவற்றிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பு என்பதல்ல; சொத்து மற்றும் உரிமைகள் மீதான பாதுகாப்பே! இப்பாதுகாப்பு சொத்தின் மீது தடையில்லாத தனிப்பட்ட உபயோகத்தை விளக்குவதாகவே உள்ளது. ஆகவே பாதுகாப்பு என்பது பொதுவாக மக்கள் அல்லது தனிநபர் பாதுகாப்பு என்று  இல்லாமல், குறிப்பாக சொத்துப் பாதுகாப்பு மற்றும் சொத்தின் உபயோகம் என்பதைப் பற்றியதாகும். மார்க்ஸ் எழுதுகிறார்: ஆகவே, மனிதனின் உரிமைகள் என்று இது கூறப்படு பவைகள் எல்லாம் தன்னகங்காரம் கொண்ட மனிதனை  தாண்டி செல்வதில்லை; அவன் தான் வாழும் சிவில் சமூகத்திலிருந்து விலகி நின்று சுய நலன்களுக்கு பின்னே தான் நின்று கொண்டிருக்கிறான்……… இயற்கைத் தேவைகள், சொந்த நலன்கள் மற்றும் தேவைகள், சொந்த சொத்துக்கள் மற்றும் தன் ஆணவ உணர்வுகளை பாதுகாப்பது என்பவைகள் மட்டும் தான் மனிதர்களை இணைக்கிறது.

சிவில் சமூகம் என்பது முதலாளித்துவ சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது.  சட்டத்தின் முன் சமம் என்கிற சம்பிரதாய விளக்கம் உழைப்பாளிகளைச் சுரண்ட சுதந்திரம், பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த போலீஸ் படை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. சிவில் சமூகம் என்ற பெயரில் பேசுபவர்கள், தாம் முதலாளித்துவ சுரண்டல் சார்பாக பேசுபவர்கள் என்பதை உணர இது தக்க தருணமாகும்.

மேற்கூறப்பட்ட கருத்துக்கள் சரியானவையாக இருக்கலாம்; இருந்தபோதிலும் மதச்சார்பின்மை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவை சிவில் சமூகத்தின் சாதகமான பயன்களே என்று சிலர் வாதிடலாம்.

மதச்சார்பின்மை:

மதச் சார்பின்மை பற்றிய பொதுவான கருத்து என்னவெனில், அது மதத்திற்கு எதிரான கொள்கை அல்லது மத சகிப்பின்மை என்பதாகவே உள்ளது. இக்கருத்து மதச்சார்பின்மையாளர்களை சளைக்காமல் வசைமாரி பொழியும் மதவாதிகளால் ஆதரிக்கப்படுகிறது. இந்தக் கருத்தும் சரியானதல்ல. மனித உரிமை மற்றும் பிரஜா உரிமை பிரகடனம் 1791, ஷரத்து எண் 10ன் படி; ஒருவர் கொண்டிருக்கும் கருத்துக்களுக்காக – அது மத ரீதியாக இருந்தாலும் சரி, துன்புறுத்தல் கூடாது., மேலும் தான் ஏற்றுக் கொள்ளும் ஒரு மதத்தைப் பின்பற்ற எந்தவொரு மனிதனுக்கும் சுதந்திரம் உண்டு என்பது மனித உரிமையாக உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது. 1793 மனித உரிமை பிரகடனம் ஷரத்து 7 சுதந்திரமான மத பழக்கவழக்கங்களையே உயர்த்திப் பிடிக்கிறது.

அரசியல் சட்டம் 1795 பிரிவு 14 ஷரத்து 354, இந்த உரிமைகளை அறிவிப்பதன் அவசியம் நிகழ்கால அல்ல சமீபத்திய கொடுங் கோன்மையை நினைவில் கொண்டுதான் என்பதை மத சுதந்திரக் கொள்கை வெளிப்படுத்துவதாக வாதிடுகிறது.

அதே போன்று பென்சில்வேனியா அரசியல் சட்டம் ஷரத்து 9 பாரா 3 இவ்வாறு சொல்கிறது;-

எல்லா மனிதர்களுக்கும் அவரவர் மன உணர்வின்படி கடவுளை வழிபடும் உரிமை இயற்கையாகவே உள்ளது. எந்த மனிதனும் அவனது ஒப்புதலுக்கு எதிராக ஒரு வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்தவோ, அதற்கு ஆதரவாக இருக்கவோ, எந்தவொரு மத அமைப்பையும் நிர்வகிக்கவோ கட்டாயப்படுத்தப்படக் கூடாது. இந்த உள்ளுணர்வு உரிமைகளில் எவ்விதத்திலும் கட்டுப்பாடு செய்யவோ அல்லது தலையிடவோ எந்த மனிதனுக்கும் அதிகாரம் இல்லை.

நியூஹாம்ப்ஷர் அரசியல் சட்டம் ஷரத்து 5,6 சொல்வது;-

இயற்கை உரிமைகளில் சில நூதனமான தன்மை கொண்டவை. மன சாட்சிப்படி நடக்கும் உரிமைகள் இவ்வகைப்படும்.

பாகிஸ்தானில் முதலாளித்துவ மதச்சார்பின்மையாளர்களுக்கும், மதவாதிகளுக்கும் உள்ள சச்சரவு மதம் அல்லது மத வழிபாடு வேண்டுமா என்பதல்ல; (இரு சாராரும் மதவழிபாட்டை உயர்த்திப் பிடிப்பவர்களே) இவ்விரு பிரிவினருக்கும் உள்ள மையப் பிரச்சனை என்னவெனில், நாடானது மதகுருக்கள் ஆளும் நாடாக இருக்க வேண்டுமா அல்லது மதச் சார்பின்மை நாடாக இருக்க வேண்டுமா என்பதே.

மெத்தப்படித்த முதலாளிகளாகிய பூர்ஷ்வா மதச்சார்பின்மை யாளர்கள், மிக நவீன கருத்துக்கள் / எண்ணங்கள் கொண்ட முதலாளித்துவ உறவுகளுக்கேற்றவாறு முதலாளித்துவப் பொருளாதாரம் நடத்தப்படுவதையே விரும்புகிறார்கள். இதர அம்சங்களில், பெண் விடுதலை உள்ளடக்கியதாக இருந்த போதிலும், அது முதலாளித்துவ பொருளாதாரத்தின் எல்லைகளுக்குள்ளே தான் என்பது தெளிவு.  இம்மாதிரியான பெண் விடுதலை, அதன் வர்க்க குறிக்கோள்களால் முடக்கப்பட்டதால் தொழிலாளி வர்க்கத்திலும், விவசாயத்திலும் உள்ள பெண்களை அவர்களால் அணி திரட்ட முடியவில்லை.

போதுமான கல்வியறிவு பெறாத மத உரிமைவாதிகளாக இருக்கும்  சிறு முதலாளிகள், முதலாளித்துவ பொருளாதாரம் இன்னும் அதிகமாக பாரம்பரிய வழக்கங்களைத் தராளமாகக் கொண்டு கட்டப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்தப் பாரம்பரிய பழக்க கட்டமைப்பு உண்மையில் எழுச்சி பெற்று வரும் தொழிலாளி வர்க்க இயக்கங்களை எதிர்ப்பதில், முதலாளி வர்க்க ஜனநாயகத்தை விடவும் தத்துவார்த்த ரீதியான சிறந்த பாதுகாப்பாக உள்ளது. ஆகவே தொழிலாளி வர்க்கத்தின் முன்னேற்றப் பாதையில் இவர்களே முதல் தடங்கல். இந்த இரண்டு சமூக குழுக்களுக்கும் இடையே உள்ள சச்சரவு குறிப்பிட்ட வடிவிலான முதலாளித்துவத்தைப் பற்றியதே. (நவீனம் அல்லது பழைமை). மதவாதிகளே தெளிவாகத் தெரியக் கூடிய விரோதிகளாக உள்ள போதிலும், முதலாளித்துவ மதச் சார்பின்மையாளர்கள் உழைக்கும் பிரிவினருக்கும், பெண்களுக்கும் திசை மாற்றும் புத்திசாலித்தனமான மறைமுக எதிரிகளாவார்கள். புரட்சிகர சக்திகள் தமது வலதுகரத்தை குறுகிய மனப்பான்மை கொண்ட வலதுசாரி (மத) சக்திகளின் செல்வாக்கை எதிர்க்கவும், இடது கரத்தை இடதுசாரி போர்வையில் உள்ள முதலாளித்துவ மதச்சார்பின்மையாளர்களை எதிர்க்கவும் பயன்படுத்த வேண்டும்.

பத்திரிகை சுதந்திரம்:

அரசியல் சட்டம் 1793, ஷரத்து 122ன்படி, கட்டுப்பாடற்ற பத்திரிகை சுதந்திரம் மனித உரிமைகளின் பலனாக, தனி மனித சுதந்திரமாக உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், ஆழமாக அறியுங்கால் பத்திரிகை சுதந்திரம் என்பது பொது சுதந்திரம் என்ற கோட்பாட்டால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதே ஷரத்து, சொல்வது, பொது சுதந்திரத்துடன் சமரசம் செய்து கொள்ளும் போது பத்திரிகை சுதந்திரம் அனுமதிக்கப்படக் கூடாது அதாவது, தனிச் சொத்து என்ற ஸ்தாபனம் மூலம் முதலாளி வர்க்கம் தொழிலாளர்களைச் சுரண்ட செலுத்தும் உரிமை மீது தாக்குதல் தொடுக்கும் போது பத்திரிகை சுதந்திரம் அனுமதிக்கப்படக் கூடாது என்பதாகும். சுதந்திரமான தகவல் தொடர்பு சகாப்தத்தில் நாம் நுழைந்திருப்பதாக உரிமை கொண்டாடும் இந்நேரத்தில் உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் இறுக்கமாகத் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இக்கட்டுப்பாடு சிவில் சமூகக் கோட்பாட்டிலிருந்து வேறுபட்டதல்ல என்பது குறைவாகவே புலப்படுகிறது. தனிச் சொத்தின் அடிப்படையில் அமைந்துள்ள சுதந்திரம் என்பதைப் பாதுகாக்க இந்த ஊடகக் கட்டுப்பாட்டு உரிமையை முதனிலைப்படுத்தியதே சிவில் சமூகம் என்பது, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுத்த போது பத்திரிகை சுதந்திரத்தில் அமெரிக்காவின் நோக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

முடிவுரை:

மேற்கூறிய விளக்கங்களிலிருந்து சிவில் சமூகம் என்ற கோட்பாடு முழுவதுமாக முதலாளி வர்க்க ஆட்சி அதிகாரத்துடன் கட்டப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே, சிவில் சமூகம் என்பது முதலாளித்துவ எதேச்சதிகாரத்தை மறைமுகமாகக் கொண்டது என்ற முடிவு, ஆதாரமற்ற ஒன்றாக கருத முடியாது.
மேலும், சிவில் சமூகம் என்ற கோட்பாட்டினை ஒரு குறிப்பிட்ட குழுவினர் பயன்படுத்துவது மேலே கூறப்பட்ட விளக்கத்திலிருந்து மாறுபட்டது என்று வாதிட முடியாது; அப்படிச் செய்வது அதன் அரசியல் தன்மையினை ஒதுக்கித் தள்ளுவதாகும். தனி மனித அல்லது சில குழுக்களின் சொந்த விருப்பங்கள், சிவில் சமூகம் என்ற கோட்பாட்டினை செயல்படுத்துவதற்கு பொருத்த மற்றவைகள். அரசியல் தளத்தில், இந்த கோட்பாடு அறிவார்ந்த ரீதியிலும் தார்மீக ரீதியிலும் முதலாளி வர்க்க ஆட்சியோடு கட்டப்பட்டிருக்கிறது. இந்த இணைப்பு மாற்ற முடியாதது; புரட்சிகர நோக்கங்களுக்காக இதை சொந்த உடமையாக்கிக் கொள்ளவும் இயலாது.

ஆகவே செயலூக்கம் கொண்டவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சிவில் சமூகம் (அரசியல் சாரா சமூக இயக்கம்) என்பது சுரண்டல், சுயநலம், ஒடுக்குமுறை, ஏற்ற தாழ்வு மற்றும் கண்காணிப்பு ஆகியவைகளை உள்ளார்ந்த அம்சங்களாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மக்களைப் பற்றி உண்மையான அக்கறை கொண்டவர்கள், அவர்களை அனைத்து துறைகளிலிருந்து விடுவிக்க நடத்தும் போராட்டங்களுக்கு புதிய தத்துவார்த்த வடிவங்களை வளர்த்தெடுக்க வேண்டும்.

தமிழாக்கம்: ஆர். விஜயலெட்சுமி%d bloggers like this: