மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நவம்பர் புரட்சிக்குப் பின்….


விரக்தியின் தத்துவம் உலகம் உருக்குலைந்து போய்க் கொண்டிருப்பதாகவும் பண்பாடு அழிந்து கொண்டிருப்பதாகவும் அவலக் குரல் எழுப்புகின்றது. ஆனால் அதே வேளையில் மார்க்சிஸ்டுகள் புதிய உலகு தோன்றும் பிரசவ வலியின் ஒலியினை கேட்கிறார்கள் அந்த பிறப்பின் வலியினை குறைக்கவும் முயற்சி செய்கிறார்கள்.

ஜார்ஜ் லூகாஸ்

நவம்பர் புரட்சியின் நினைவுகள், உலகை விளக்கிச் சொல்வதோடு நில்லாமல் மாற்ற முனையும் சக்திகளுக்கு என்றும் உத்வேகம் கொடுக்கும். அண்மை காலத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகள் அதற்கு தடையாக இருந்தன என்பதும் உண்மை. சோவியத் யூனியன் சிதைந்து போனதும் அதையொட்டி சோசலிச உலகம் சந்தித்த பின்னடைவும் நம்மையெல்லாம் சற்று அசைத்துப் பார்த்ததும் உண்மைதான். முதலாளித்துவத்தின் பிரச்சார பீரங்கிகள் முழங்கின. மார்க்சிசம் மறைந்து போனது வரலாறு முடிந்து போனது என்றும் மாற்று ஏதுமில்லாத மாற்றம் எதுவும் நெருங்க முடியாத உலகு, முதலாளித்துவ உலகுதான் என்றும் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ரஷ்யாவில் நடந்து முடிந்த நவம்பர் புரட்சியும் அதையொட்டி அங்கு எடுக்கப்பட்ட முடிவுகள் நடவடிக்கைகள் யாவும் சோசலிச கட்டமைப்புக்கு எந்த வகையிலும் தொடர் பில்லாதவை என்று சிலர் வாதிட்டனர்; சோசலிசம் எங்கும் நடைமுறைப்படுத்தப்படவில்லை, ஆகவே சோசலிசம் தோற்றுப் போனதாக சொல்ல முடியாது என சிலர் (அனுதாபத்துடன்) வாதிட்டார்கள். வரலாற்று உண்மைகளையும் அறிவியல் ரீதியாக நிறுவப்பட்ட உண்மைகளையும் கேள்விக்குறியாக மாற்றும் சில அறிவு ஜீவிகளின் முயற்சி பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன. இந்நிலையில் நாம் செல்லும் பாதையில் தெளிவுபெற வேண்டி கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை நினைவு கொள்ளுதல் அவசியமாகிறது.

முதலாளித்துவ சமூக அமைப்பிலிருந்து கம்யூனிச அமைப்புக்கு மாறிச் செல்லும் நிகழ்வு ஒரு வரலாற்று யுகம் முழுமையும் எடுத்துக் கொள்ளும். அந்த யுகம் முடியும் வரை, சுரண்டுபவர்கள் மீண்டும் புத்துயிர் பெரும் நம்பிக்கையினை வளர்த்துக் கொண்டிருப்பார்கள்; அந்த நம்பிக்கை அப்படி புத்துயிர் பெறுவதற்கான செயல் திட்டங்களில் அவர்களை ஈடுபடவைக்கும் என்று லெனின் விடுத்த எச்சரிக்கையினை கவனத்தில் கொள்ள வேண்டும். தோற்றுப் போனவர்கள், தூக்கியெறிப்பட்ட சுரண்டல்காரர்கள் பத்து மடங்கு வேகத்துடன் இழந்த சொர்க்கத்தை மீட்க போராடுவார்கள் என்றும் எச்சரித்தார்கள். இது ஒன்றும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு தெரியாத விஷயமல்ல; ஆனால் இது உணர்வில் முழுமையாக வியாபித்து அதன் பகுதியாக மாறவில்லை என்பது தான் சோவியத் காட்டும் உண்மை. மனித சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு மாறிச் செல்வது புல் தளத்தில் நடப்பதை போன்றதல்ல. முன்னேற்றம் உண்டு – ஆனால் ஏற்ற இறக்கத்துடன், கல்லும் முள்ளும் கடந்து, சில நேரம் பின் வாங்குதலையும் சந்தித்து அந்த முன்னேற்றம் உறுதி செய்யப்படுகிறது. சோவியத் யூனியனிலோ கிழக்கு ஐரோப்பா நாடுகளிலோ நிகழ்ந்த மாற்றங்கள் அதிர்ச்சி தருவதாக இருந்தாலும், நடக்க முடியாத நிகழ்வுகள் அல்ல.

சோவியத் சந்தித்த சோதனைகள் :

ஏகாதிபத்தியத்தின் பலமிழந்த கண்ணி அறுந்த பொழுது எழுந்தது தான் சோவியத் யூனியன். மார்க்ஸ் எதிர்ப்பார்த்தது போல் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் அந்த மாற்றம் நிகழவில்லை. தொழில் வளர்ச்சியிலும் விவசாயத்திலும் மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் பின் தங்கியிருந்த ரஷ்யாவில் அது நிகழ்ந்தது. நாட்டின் 82 சதம் மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்தனர்; 70 சதம் மக்கள் கல்வியறிவு நிரம்பப் பெறாதவர்கள். அங்கு தான் சோசலிச புரட்சியின் மூலம் தொழிலாளி வர்க்க ஆட்சியை பிடித்தது. அதை தக்க வைத்துக் கொள்வது ஒரு சிக்கலான கடுமையான அனுபவமாக இருந்தது. லெனின் எச்சரித்தது போல் தோற்றவர்கள் மூர்க்கத்தனத்துடன் இளம் சோவியத் யூனியனை தாக்கினார்கள். வெள்ளை பயங்கரம் (White Terror) என்று குறிப்பிடப்பட்ட காலாடின், கோல்சாக், ராங்கல் (Kaladin, Kolchack, Wrangal) படைகள் உள்நாட்டு போரை துவக்கின. 14 நாடுகள் அவர்களுக்கு ஆதரவாக நின்று அனைத்து உதவிகளையும் செய்தன. ஆனால், “சிவப்பு பயங்கரம்” அதை சந்தித்தது. அந்த உள்நாட்டு போரில் வெள்ளை படைகளும் உள்ளே மூக்கை நீட்டியவர்களும் தோல்வியைச் சந்தித்தாலும், ரஷ்யாவின் பொருளாதாரம் பெரும் அழிவிற்கு உட்படுத்தப்பட்டது.

சில புள்ளி விவரங்கள் அந்த நிலையினை விளக்கும்.

விவசாயத்துறை 1913 1921
பயிர் செய்த நிலம் 2193.4 (ஏக்கர்) 112.3 (ஏக்கர்)
உணவு உற்பத்தி (பூட்*) 4079 1617

* 1 பூட் = 36.11 பவுண்ட்

தொழில்துறை (1913 உற்பத்தி சதவீதத்தில்)
நிலக்கரி 30.8
எண்ணெய் 42.7
இரும்பு 1.6
பருத்தி 7.5
இயந்திரம் 9.3
சர்க்கரை 6.7

இந்த பொருளாதார வீழ்ச்சியோடு வறுமை, பஞ்சம், பட்டினியால் மக்களின் துயரம் அதிகரித்தது. பாதிக்கப்பட்ட 2.4 கோடி மக்களில் 70 லட்சம் பேர் பஞ்சத்தால் மடிந்து போனார்கள்; இதோடு முதல் உலகப்போரில் மாண்டுபோன 15 லட்சம், உள்நாட்டுப் போரில் மாண்ட 10 லட்சம், தொத்து நோயால் மாண்ட  30 லட்சம் பேரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். 20 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறினார்கள். சோவியத் வீழ்ச்சியினைப் பற்றி பேசுபவர்கள் இந்த பொருளாதார சமூக அழிவின் மீது தான் போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் சோசலிச நிர்மாணம் முயற்சிக்கப்பட்டது என்பதை மறந்து விடுகிறார்கள். மற்ற சில நாடுகளிலும் (ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்ட்ரியா) புரட்சிகரமான இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவைகள் நசுக்கப்பட்டன. ஜெர்மனியில் புரட்சி வெற்றிபெறும் என்று லெனின் எதிர்பார்த்தார்; மூன்று முறை ஜெர்மனியில் முயற்சி நடந்தது, அவையாவும் தோற்றுப் போயின. சோவியத் யூனியன் தனித்து நின்று தான் சோசலிசத்தைக் கட்ட வேண்டுமென்ற நிலை எழுந்தது. அதைச் சுற்றிலும் ஏகாதிபத்திய அரசுகள் தடுப்புச் சுவர் எழுப்பியிருந்தனர். வணிகத்தடை செயல்படுத்தப்பட்டது.

சோவியத் பொருளாதாரத்தை கீழிருந்து மேலே கொண்டுவர வேண்டிய அவசியம் வந்தது. லெனின் புதிய பொருளாதாரக் கொள்கையினை முன்வைத்தார். அதன்படி முதலாளித்துவ அமைப்பின் சில நடைமுறை அம்சங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இது முதலாளித்துவத்திற்கு உயிர் ஊட்டுவதாகாதா? என்ற கேள்வி எழுந்தது. லெனின் சொன்னார் அடிப்படை கேள்வி இது தான் புதிய நிலைமையினை யார் முதலில் பயன்படுத்துவது? விவசாயிகள் யாரை பின் தொடர்ந்து வருவார்கள் என்பதுதான் கேள்வி. சோசலிச சமூகத்தை கட்ட முயற்சிக்கும் தொழிலாளி வர்க்கத்தையா? முதலாளி வர்க்கத்தையா? தொழிலாளி வர்க்கத் தலைமையின் கீழ் அரசு செயல்படும் போது, அதன் நடைமுறை தந்திரங்கள், செயல்பாடுகள் யாவும் தொழலாளி – விவசாயி நலன்களை பாதுகாக்கும் வகையில் தான் செயல்படுத்தப்படும். சோசலிசத்திற்கு மாறும் காலத்தில் அந்த கொள்கை செயல்படுத்தப்பட்டது. 1926 ஆம் ஆண்டில் 1913ஆம் ஆண்டில் நிலவிய பொருளாதார நிலைமைக்கு அது உயர்த்தப்பட்டது என்பதே லெனின் கடைப்பிடித்த வழி சரியானது என்று உறுதி செய்யப்பட்டது.

தேர்ந்தெடுத்த வழி :

இதற்கிடையில் சோவியத் யூனியன் ஒரு விவாத மேடையினை துவக்கியிருந்தது. நாட்டை வேகமாக விரிந்த அளவில் தொழில்மயமாக்குவது தேவையா? லெனின் மறைந்த பிறகு இது சூடுபிடித்தது. 1927ஆம் ஆண்டு சோவியத் கட்சியின் 15வது கட்சி காங்கிரஸ் முதலாளித்து சக்திகள் நமது தொழிலாளி வர்க்க அரசின் மீது தாக்குதல் தொடுக்கும் ஆபத்தினை கருத்தில் கொண்டு, 5 ஆண்டு திட்டத்தில், பொருளாதாரத்தில் பொதுவான வளர்ச்சியினையும் நாட்டின் பாதுகாப்புக்கு உதவிடும் தொழில் துறையின் வளர்ச்சியினையும் வேகப்படுத்த வேண்டும், போர்க்கால பொருளாதாரம் நிலையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று எச்சரித்தது. அன்று எழுந்த கேள்வி இது தான் முதல் 5 ஆண்டு திட்டம் (1928ல் துவங்கியது) எதில் கவனம் செலுத்த வேண்டும்? பஞ்சாலை வழியா (நுகர்வும் பொருள்களுக்கான)? அல்லது உலோக வழியா (கனகர இயந்திரங்கள் தயாரிப்புக்கான)? அன்றைக்கு இருந்த அச்சுறுத்தும் சூழ்நிலையில் உலோக வழி தான் சிறந்தது என்று கட்சி முடிவு செய்தது. 4 ஆண்டுகளில் திட்டத்தின் இலக்கு பூர்த்தியானது. பல ஆண்டுகளில் முதலாளித்துவ நாடுகள் சாதித்ததை சோசலிச நாடு 4 ஆண்டுகளில் செய்து முடித்தது.

தொழிலாளி – விவசாயி ஒற்றுமையும், உறுதியும் இல்லாமல் இதை சாதித்திருக்க முடியாது. ஸ்டாலின் 1933ம் ஆண்டு கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் பெருமையோடு சொன்னார்… இதற்கு முன்பு இரும்பு எஃகு தொழிற்சாலை ஏதும் இல்லை. இப்போது இருக்கிறது; முன்பு ட்ராக்டர் தயாரிக்கும் ஆலை இல்லை, இப்போது இருக்கிறது; முன்பு, கார் தயாரிக்கும் தொழிற்சாலை இல்லை, இப்போது இருக்கிறது; முன்பு ரசாயன தொழிற்சாலை இல்லை, இப்போது இருக்கிறது…………. இந்த பொருளாதார அடிப்படை தான் பின்னர் பாசிசம் தொடுத்த தாக்குதலை எதிர்கொள்ளும் பலத்தினை சோவியத் யூனியனுக்கு கொடுத்தது. மார்ஷல் ஜூகோவ் எழுதுகிறார். வரலாறு ரீதியாக சரி என்று நிரூபிக்கப்பட்ட கட்சியின் விவேகம், மதிக்கூர்மை, வளர்ச்சிக்காக தேர்ந்தெடுத்த பாதை, பணியிடத்தில் தொழிலாளிகளும் மற்ற பகுதி மக்களும் காட்டிய வீரம், தியாகம் – இவைகள் தான்இரண்டாம் உலகப் போரில் நமது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தன.

கூட்டு விவசாயம் – அனுபவங்கள் :

தொழில்மயமாக்கலும் விவசாயத்தில் கூட்டுப் பண்ணை முறையும் ஒன்றோடொன்று இணைந்த பொருளாதார வளர்ச்சியினை சோவியத் யூனியன் கண்டது. கூட்டுப் பண்ணை தொழில்மய மாக்குதலுக்கு தேவையான மூலதனத்தை கொடுத்தது புதிய பொருளாதார கொள்கையிலிருந்து வேகமாக தொழில்துறை வளர்ச்சிக்கு போக வேண்டுமென்ற முடிவு, பெரிய அளவில் கூட்டுப் பண்ணை விவசாயத்தின் அடிப்படையில் தான் எடுக்க வேண்டிய நிலை எழுந்தது. இங்கே தான் சோவியத் பொருளாதாரத்தில் முதன் முதலாக கோணல் விழுந்தது. குலாக் என்றழைக்கப்பட்ட பெரும் நிலப்பிரபுக்கள் தான் தாக்குதல் இலக்காக வைக்கப்பட்டனர்; ஆனால் நடுத்தர விவசாயிகளை வென்றெடுக்க வேண்டுமென்ற முடிவு சரியாக செயல்படுத்தப்படவில்லை. குலாக்குகளின் செல்வாக்கு கணிசமாக நடுத்தர விவசாயிகள் மீது இருந்தது. ஏழை விவசாயிகளும், விவசாயத் தொழிலாளிகளும் விரும்பிய கூட்டுப் பண்ணை விவசாயம் வேகமாக செயல்படுத்தப்பட்ட பொழுது, நடுத்தர விவசாயிகளை வென்றெடுப்பதில் மெத்தனம் இருந்தது. கட்சியின் மத்திய கமிட்டி கொடுத்த எச்சரிக்கைகளும் வழிமுறைகளும் கடைப்பிடிக்கப் படவில்லை. ஜார் காலத்தில் வேரூன்றிய அதிகார வர்க்கத்தின் போக்கு புரட்சிக்கு சாதகமாக இல்லை. ஸ்டாலின், கூட்டு விவசாயத்திற்கு வருமாறு யாரையும் நிர்ப்பந்திக்கக் கூடாது என்று எச்சரித்தும் அந்தப் பணி மிகவும் கடுமையான முறையில் தான் நிறைவேற்றப்பட்டது. குலாக்குகள் வன்முறையில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பினைக் காட்டினர்; நடுத்தர விவசாயிகளும் அவர்களோடு சேர்ந்தனர். ஆனால் கிராமப்புற பகுதிகளில் கூட்டு விவசாயப் பண்ணைகளை உருவாக்குவதில் கட்டுக்கடங்காத வேகம் இருந்தது.

1934ல் மொத்த விவசாயக் குடும்பங்களில் 71.4 சதம் கூட்டுப் பண்ணைக்குள்  வந்தார்கள்; பல இடங்களில் கொண்டு வரப்பட்டார்கள் என்பதும் உண்மை. குலாக் என்ற வர்க்கம் துடைத்தெறியப்படவேண்டும் என்று ஸ்டாலின் சொன்னதற்கு சட்ட வழிமுறை உருவாக்குவதில் அதிகார வர்க்கம் தாமதப் படுத்தியது. எந்த சட்ட வழிகாட்டுதலும் இல்லாத நிலையில் தங்களுக்கு எது சரி என்று பட்டதோ அதை செய்யும் தீவிரத்தன்மை பல இடங்களில் நிலவியது. கூட்டுப் பண்ணை அமைப்பின் துரித வளர்ச்சி அந்த மன நிலையை உருவாக்கியது. ஸ்டாலின், 1930ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்த திசை மாறுதல்கள், விவசாய பண்ணை குறித்த அதிகார வர்க்க ஆணைகள் விவசாயிகளுக்கு எதிராக காட்டப்பட்ட கருணையற்ற அவசரம் யாவும் வெற்றியில் விளைந்த மயக்கம் என்று குறிப்பிட்டார். விவசாயிகளுக்கு எதிராக ஸ்டாலின் யுத்தம் என்று வெளிநாட்டுப் பத்திரிகைகள் வருணித்தன. ஆனால் அமோக விளைச்சல் வேண்டி நடக்கும் யுத்தம் என்று சோவியத் பதிலடி கொடுத்தது. ஆனாலும் போராட்டத் தழும்புகள் இருக்கத்தான் செய்தன. அப்படி ஒரு நிதானமிழந்த போக்கிற்கு மற்றொரு காரணமும் இருந்தது. திட்டமிட்ட பொருளாதாரத் துக்கான அடிப்படைகள் என்ற புத்தகத்தில் இ.ஹெச். கார் குறிப்பிடுகிறார்.

1926ம் ஆண்டு மக்கள் தொகை கணிப்பின் படி சோவியத் யூனியனின் 82 சதம் மக்கள் கிராமப்புறத்தில் வாழ்ந்தார்கள். 1927இல் துவக்க மாதங்களில் கட்சி நடத்திய ஆய்வின் படி மொத்த மக்கள் தொகையில் 1.78 சதம் தான் கட்சி உறுப்பினர்கள், கிராமப்புற மக்கள் தொகையில் 0.52 சதம்தான். கட்சியின் முடிவை செயல்படுத்தும் தோழர்கள் மிகக் குறைவாகவே இருந்தனர் என்பதும் இந்த தவறுகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது. தொழில்மயமாக்கலின் வேகம் 1928லிருந்து 1939க்குள் சுமார் 25 லட்சம் மக்களை கிராமத்திலிருந்து தூக்கி நகரங்களில் வைத்தது. தொழில்மய மாக்கலும் விவசாய கூட்டுப் பண்ணை முறையும் பதிவு செய்த அளப்பரிய வெற்றியினூடே இவைகளெல்லாம் புதைக்கப்பட்டன; பூட்டி வைக்கப்பட்டன, பிற்கால சந்ததியினர் திறந்து பார்க்க இவையனைத்துமே (அன்றைய நடைமுறை பற்றிய இன்றைய விமர்சனங்கள்)  ஒரு பிரதான கேள்வியின் முன் செயலற்று நின்றுவிடுகின்றன. அன்று சோவியத் சந்தித்த சவால்களை எதிர்கொள்ள கூட்டு விவசயாமே துணை கொண்டு நிறைவேற்றப் பட்ட தொழில்மயமாக்கலுக்கு மாற்று வழி ஏதேனும் இருந்ததா? ஐரோப்பாவிலேயே மிகவும் பின் தங்கிய நாடு, திரட்டப்பட்ட மூலதனம் ஏதுமில்லாத நாடு, முன் அனுபவம் ஏதுமின்றி ஒரு புதிய அமைப்பை உருவாக்க முனைந்த நாடு, பூகோள ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஏகாதிபத்தியம் விரித்த சதி வலையினை எதிர்நோக்கும் நாடு – எந்த வழியினை தேர்ந்தெடுத்திருக்க முடியும்? 1929லிருந்து முதலாளித்துவ உலகம் பெரும் வீழ்ச்சியினை சந்தித்துக் கொண்டிருந்த காலம் அது; 2 1/2 கோடி தொழிலாளர்கள் வேலையினை இழந்து வீதிக்கு வந்தனர்.

தொழில்துறை நெருக்கடி விவசாயத்துறை நெருக்கடியாகவும் மாறியது; தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல் மூலமாகவும் மற்றொரு உலகப் போருக்கான தயாரிப்புகள் மூலமும் அந்த நெருக்கடியினை சமாளிக்க முதலாளித்துவ உலகம் தயாரானது. சோவியத் பரிசோதனை உலக மக்களை கவ்விப் பிடிக்கத் துவங்கியது. போல்ஷ்விசம் நாகரீகத்திற்கு எதிரி என்ற பிரச்சாரம் கட்டாய உழைப்பு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை சந்தையில் மலிவான விலைக்கு சோவியத் யூனியன் தள்ளுகிறது என்ற பிரச்சாரமும் கட்டவிழ்த்து விடப்பட்டன. சோவியத் ஏற்றுமதிகளுக்கு தடை விதிக்கப்பட்டன. சீனாவின் சியாங்கெய்தேஷக்கின் ஆட்சி சோவியத் யூனியனின் கிழக்குப் பகுதியில் ராணுவத்தை அனுப்பியது (பின்பு அது முறியடிக்கப்பட்டது). சோவியத் யூனியனை தாக்குதல் மையமாக வைத்து மீண்டும் ஒரு உலகப் போர் நிகழும் என்றுசோவியத் கம்யூனிஸ்ட் கட்சி சரியாகவே கணித்தது. ஆகவே ஒரு சுதந்திரமான சோசலிஸ்ட் அரசை தக்க வைத்துக் கொள்ள எந்த சூழ்நிலையிலும் நிலைத்து நிற்க வேகமான தொழில்மயமாக்கம் தேவைப்பட்டது. சோசலிசம் என்ற மாற்று வழி அதற்கான அடிப்படையினை வகுத்துக் கொடுத்தது. முதலாளித்துவ உலகம் பல்வேறு வகையிலான மூலதன திரட்டலுக்கு வாய்ப்பு இருந்த நிலையிலும் தொழில் முன்னேற்றத்தை காண பல ஆண்டுகள் பிடித்தன; ஆனால் ஒரு சில ஆண்டுகளிலேயே வெளிநாட்டு மூலதனம் கடன் உதவி ஏதுமில்லாமல் 1930ம் ஆண்டிலேயே தொழில் வளர்ச்சியில் ஐரோப்பாவின் முதல் இடத்திலும் உலகின் இரண்டாவது இடத்திலும் சோவியத் யூனியனை கொண்டு வந்து நிறுத்தியது அந்த நாடு ஏற்றுக் கொண்ட வழிமுறைதான். கோர்பசேவின் வார்த்தைகளிலேயே சொல்வ தென்றால் அன்று கட்சி குறிப்பிட்டதைத் தவிர, அந்த சூழ்நிலைகளில் வேறு வகையான முடிவை எடுத்திருக்க முடியுமா? நாம் வரலாற்றுக்கு நம்பிக்கையுடையவர்களாக, வாழ்வுக்கு உண்மையானவர்களாக இருக்க விரும்பினால், ஒரே ஒரு பதில் தான் உண்டு. வேறு எந்த வழியும் கிடையாது.

பாசிசத்தை முறியடித்த சாதனை :

அந்த சோசலிச அடிப்படை தான் சோதனை மிகுந்த கால கட்டங்களில் சோவியத் யூனியனை தலை நிமிர வைத்தது. 1934க்குப் பிறகு ஹிட்லர் ஜெர்மனியில் ஆட்சியதிகாரத்தை முழுமையாக கைவசப்படுத்தினான். தன்னுடைய மெய்ன்காம்ஃப் (எனது போராட்டம்) என்ற நூலில் தன் நோக்கத்தை தெளிவாகவே எழுதி வைத்தான். ஜெர்மனியர்களுக்கு வாழும் பகுதி விரிவாக்கப்பட வேண்டும். அது கிழக்கில் தான் உள்ளது. ஜெர்மனிக்கு கிழக்கே உள்ள பெரிய நிலப்பகுதி சோவியத் யூனியன் தான்; பறிக்க வேண்டிய பழுத்த கனி என்று அதை குறிப்பிட்டான். 1939ல் இத்தாலி அல்பேனியாவை கைப்பற்றியது; ஜப்பான் வடக்கு மற்றும் மத்திய சீனாவை ஆக்கிரமித்தது. ஹிட்லரும் அவன் பங்கிற்கு ஆஸ்ட்ரியாவை பிடித்தான். பிரிட்டன் சரணாகதி அடைந்து கையெழுத்திட்ட முனிச் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1938ல் செக்கோஸ்லோவேகியாவை விழுங்கினான்.

ஜூன் 22, 1941, சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் படைகள் தாக்குதலை துவக்கிய நாள். உலக வரலாற்றில் நடந்த மிகப் பெரிய ராணுவ நடவடிக்கை என்று ஹிட்லர் பெருமையோடு கூறினான். ஆனால் சோவியத் எதிர்ப்பு ஒரு வரலாற்றை உருவாக்கியது. ரேமண்ட் கிளாப்பர் என்ற யுத்தகால நிருபர் லண்டனிலிருந்து கேபிள் செய்தி அனுப்பினார். ரஷ்யா வெற்றிக் கான புதிய வாய்ப்பினை திறந்து விட்டிருக்கிறது. விருப்பத்தோடு செயல்படும் இவ்வளவு பெரிய மனித சக்தியினை ஹிட்லருக்கு எதிராக இதற்கு முன் யாரும் நிறுத்தியதில்லை. அந்த கொடிய யுத்தம் நடந்து முடிந்தது. பாசிசம் மிகப் பெரிய தோல்வியினை சோவியத் மண்ணில் சந்தித்தது. சோவியத் போரை சந்தித்த விதம், எடுக்கப்பட்ட தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் உலகம் இதற்கு முன் பார்த்ததில்லை. ஸ்டாலின் கிராட் முற்றுகை 182 நாட்கள், லெனின் கிராட் முற்றுகை 2 1/2 ஆண்டுகள் – என சோவியத் மக்கள் காட்டிய மனஉறுதி, தியாகம் உலகை வியக்க வைத்தது. பாசிச அபாயத் திலிருந்து இந்த பூவுலகைக் காப்பாற்ற அவர்கள் கொடுத்த விலை? 2 கோடி மக்களை அந்த நாடு இழந்தது; 5 கோடி மக்கள் படுகாயமடைந்தனர்; போர்க் கைதிகளாக இறந்துபோனவர் மட்டும் 33 லட்சம்; 1700 நகரங்கள், 27000 கிராமங்கள் அழிக்கப்பட்டன; 38500  மைல் ரயில்வே பாதை தகர்க்கப்பட்டது; மிகப்பெரிய டெனிபர் அணை சுவடு தெரியாமல் அழிந்தது – இப்படி அழிவுப்பட்டியல் முடிவில்லாமல் நீண்டது. இருந்தும் எப்படி இந்த வெற்றி சாத்தியமானது? புரட்சியின் முதல் பிரகடனமாக அமைதி வேண்டும் என்று அறிவித்த சோவியத் போர் முனையில் வெற்றி பெற்றது எவ்வாறு முடிந்தது? உலக அமைதியினை விரும்பிய சோவியத் யூனியனை அமைதியாக வளர்ச்சியடைய ஏகாதிபத்தியம் அனுமதிக்கவில்லை.

எல்லாவகையான தாக்குதலுக்கும் தயார் நிலையில் இருக்க வேண்டிய தேவை இருந்தது. புரட்சி முடிந்து துவக்க காலத்தில் நெளிவு – சுளிவோடு எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள், வேகமான தொழில்மயமாக்கல், கூட்டு விவசாய நடைமுறை, தொழிலாளி – விவசாயி ஒற்றுமை மக்களின் பேராதரவுடன் இலக்கினை எட்டிப்பிடித்த 5 ஆண்டுத் திட்டங்கள், நிலைமைகளை சரியாகக் கணித்து அதற்கேற்ப வழிகாட்டிய கட்சித்தலைமை, செஞ்சேனையின் தியாகம், வீரம், கடைபிடித்த ராணுவ தந்திரங்கள், எல்லாவற்றிகும் மேலாக, விரிந்த பரிமாணத்தில் ஒரு சோசலிச அரசின் செயல்முறை- அனைத்தும் ஒருங்கிணைந்து தான் இந்த வெற்றியினைக் கொண்டு வந்தது. இந்த வரலாறு சிலரால் மறக்கப்படலாம், ஆனால், மறைக்க முடியாத ஒன்று.

சோசலிசத்தின் தாக்கம் :

இந்த வெற்றியினை தொடர்ந்துதான்  உலகில் மூன்றில் ஒரு பகுதியில் சோசலிச அரசுகள் தோன்றின. பால்டிக் கடலின் ஸ்டெட்டின் துறைமுகத்திலிருந்து, அட்ரியாடிக் கடலின் டியஸ்டே துறைமுகத்திற்கு இடையே ஒரு இரும்புத்திரை விழுந்தது என சர்ச்சில் பனிப்போர் நிலைமையினை துவக்கி வைத்தார். ஆனாலும், இரண்டாம் உலகப்போரின் திசை வழியினை மாற்றிய சோவியத்தின் ஆற்றல், சோசலிச கோட்பாடுகளின் அடிப்படையில் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய எடுத்த நடவடிக்கைகள் உலகத்தின் குணாம்ச ரீதியான மாற்றங்களைக் கொண்டு வந்தன. உலகம் முழுமையும் கம்யூனிச சிந்தனைகள் முன்பே பரவத் தொடங்கி இருந்தாலும், சோவியத் யூனியனின் செயல்பாடுகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக அவைகளின் ஆற்றலை விரிவுபடுத்துவதற்கான சூழ்நிலை எழுந்தது. சோசலிசம் எதை சாதிக்க முடியும் என்றும் உலகுக்கு எடுத்துச் சொல்ல முடிந்தது.

நவம்பர் புரட்சிக்குப்பின் ஒரு உலகம் தழுவிய கலாச்சாரம் உருவானது. கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிற்சங்க அமைப்புகள், மாணவர் மற்றும் பெண்களுக்கான அமைப்புகள், கலை இலக்கிய அமைப்புகள் என பல்வேறு முனைகளில் அந்த கலாச்சாரம் – சோசலிச கலாச்சாரம் – முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அடக்குமுறைகள், உள்ளிருந்தே சீர்குலைக்கும் நடவடிக்கைகள், தத்துவார்த்த ரீதியான தாக்குதல்கள் – இவையாவற்றையும் சந்தித்து முன்னேறுகிற உறுதியினை அனுபவத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் பெற்றது. கல்வி, நல்வாழ்வு, வேலைவாய்ப்பு ஆகிய பிரச்சனைகளுக்கான தீர்வு சோசலிச சமூகத்தில் திட்டமிட்டு மக்களைச் சென்றடை வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதை உலகம் கண்டு வியந்தது.

சோசலிச அரசின் செயல்பாடுகள் மற்ற நாடுகளில் குறிப்பாக வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.  தொழிலாளர் வர்க்க அமைப்புகளும், இதை முன்னிலைப்படுத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்தார்கள். மாக்ஸ் சொன்ன கம்யூனிச பூதம் அந்த நாட்டு ஆட்சியாளர்களை மிகவும் ஆட்டியது. அதிலிருந்து மக்களை தடுக்க பல மக்கள் நல திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சோசலிச சிந்தனையிலிருந்து தொழிலாளி வர்க்கத்தை வெளியே கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. யுத்தத்தால் சீர்குலைந்து போன ஐரோப்பிய நாடுகளை கம்யூனிச வலையில் விழாமல் பாதகாக்க மார்ஷல் திட்டம் அமெரிக்காவால் அளிக்கப்பட்டது. சமூக ரீதியான செலவினங்கள் அனுமதிக்கப் பட்டன. கெய்ன்ஸ் போன்ற முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் கூட இதில் அரசின் பங்கை வற்புறுத்த வேண்டிய நிலை உருவானது. அடிப்படையில் விவசாய நாடாக இருந்த ரஷ்யாவில் ஏற்பட்ட மாற்றங்கள், நில உறவுகளை மாற்றுவதற்கான உத்வேகத்தை உலகநாடுகளுக்கு கொடுத்தன. நிலச்சீர்திருத்தங்கள் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் (இந்தியா போன்ற நாடுகளில் அரை குறையாக இருந்தாலும்) அமுலாக்கப்பட்டன. விவசாயிகளின் புரட்சிகரமான வர்க்கத்தன்மையினை அங்கீகரிக்க வேண்டி வந்தது.

தொடர்ந்து வந்த சோசலிச புரட்சிகள் :

கிழக்கு ஐரோப்பா பாசிசத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு சோசலிச வாழ்க்கை முறையினை தோந்தெடுத்தது குறித்து நாம் முன்பே பார்த்தோம். சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் புரட்சிக்கான தயாரிப்புகள் முழு அளவில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஏகாதிபத்திய அரசுகளின் துணை கொண்டு சியாங்கே ஷேக் படைகள் கம்யூனிஸ்டுகளை அழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதை உலகம் அறியும். மார்க்சிய – லெனினிசத்தின் அடிப்படையிலும், மாவோ போன்ற தலைவர்களின் தத்துவார்த்த மாற்றம் போர்தந்திர வழிகாட்டுதலின் அடிப் படையிலும், சீனப்புரட்சி வெற்றி பெற்றது. பாசிசத்தை எதிர்த்து சோவியத் பெற்ற வெற்றியும் அதைத் தொடர்ந்த சோசலிச விரிவாக்கமும் சீனப்புரட்சி வெற்றிக்கு துணைபுரிந்தது. உலகின் அதிகமான மக்கள் தொகை கொண்ட, விவசாயத்தை அடிப்படை வாழ்வாகக்கொண்ட சீனாவில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றம் சோசலிசத்திற்கு வலுவூட்டியதோடு, முதலாளிவர்க்கத்தை பேரிடியாகத் தாக்கியது என்பதும் வரலாற்று உண்மை. அது தொடர்ந்தது வியட்நாம் மக்களின் வீரச்சமர் அங்கே ஒரு சோசலிச அரசை உருவாக்கியது.

1975ல் அமெரிக்க படைகள் விரட்டி அடிக்கப்பட்ட பிறகு வியட்நாம் ஒரே நாடாக ஹோசிமின் தலைமையில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலோடு தொழிலாளி வர்க்க ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. ஜப்பான் ஏகாதிபத்திய பிடிப்பினையும் பின்பு அமெரிக்க ஏகாதிபத்திய தாக்குதலையும் உடைத்துக்கொண்டு கொரிய ஜனநாயக குடியரசு (வடகொரியா) மலர்ந்தது. தென்கொரியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் காலுன்றி வடகொரியா சோசலிச அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்தபோதும், அது நிமிர்ந்து நின்றது, இன்றும் நின்று கொண்டிருக்கிறது. இந்த புரட்சிகள் யாவும் ஆசியப் பகுதிகளில் நடந்து முடிந்தவைகள். ஆனால், மார்க்சிய – லெனினிய கோட்பாடுகள் எந்த ஒரு நிலப்பகுதிக்கும் சொந்தமானதல்ல. நவம்பர் புரட்சியின் பிரதான வெற்றியே சோசலிசம் என்ற கோட்பாடினை உலகம் தழுவிய ஒன்றாக மாற்றியதுதான். அமெரிக்காவின் காலடியில் பாடிஸ்டா என்ற கொடுங்கோலன் ஆட்சியில் தவித்துக் கொண்டிருந்த கியூபா மக்கள் விடிவு காண சோசலிச வழியினை தேர்ந்தெடுத்து காஸ்ட்ரோ தலைமையில் வீறு கொண்டு எழுந்தார்கள். கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சோசலிஸ்ட் கியூபா அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்த அனைத்து சதிகளையும் முறியடித்து நிமிர்ந்து நின்றது. நிமிர்ந்து நிற்கிறது. சீனா, கொரியா, வியட்நாம், கியூபா – சோசலிசம் என்பது வளர்ந்து வரும் கோட்பாடு, முதலாளித்துவ அமைப்புக்கு சரியான மாற்று என்பதை எடுத்துக்காட்டும் நாடுகள்.

காலனியாதிக்க முறிவு :

நவம்பர் புரட்சியின் மற்றொரு சாதகமான விளைவினையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏகாதிபத்திய நாடுகள் உலகத்தை பங்கு போட்டுக் கொண்டு காலனியாதிக்கத்தை மேற்கொண்டிருந்தன. இரண்டாம் உலகப் போரில் சோசலிச நாடான சோவியத் யூனியன் (எந்த காலனி நாட்டையும் தன்னகத்தே வைத்துக்கொள்ளாத) அடைந்த வெற்றி காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த சக்திகளுக்கு உற்சாகத்தையும் வலுவினையும் ஊட்டியது. சோவியத் யூனியனும் அந்த போராட்டங்களுக்கு முழு ஆதரவினை நல்கியது. ஏற்கனவே சோசலிச நடைமுறைகளைக் கண்டு கதிகலங்கிப் போயிருந்த காலனியாதிக்க சக்திகள், தங்கள் நாட்டிலேயே அதன் வீச்சால் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய சூழ்நிலையில், காலனி நாடுகளைத் தொடர்ந்து அவர்கள் ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள இயலாமல் போனது. ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள நாடுகள் (இந்தியா உட்பட) விடுதலை பெற்றன. உலக அரசியல் பொருளாதார வரைபடித்தின் முகமே மாறிப்போனது. சுரண்டலற்ற சமூகம் ஒன்றினை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையினை உலக மக்களுக்கு தந்தது நவம்பர் புரட்சி.

மனித குல வரலாற்றில் சோவியத் யூனியன் உதயமானது என்பது ஒரு திருப்பு முனையாக இருந்தது. சோசலிசம் கொண்டு வந்த வேகமான முன்னேற்றம், அனைத்து அம்சங்களிலும் பின்தங்கிய நாட்டை பொருளாதார, ராணுவ ரீதியில் பலம் பொருந்திய நாடாக மாற்றி, ஏகாதிபத்திய தாக்குதலை எதிர்த்து நிற்கும் அரணாக நின்று, சோசலிச அமைப்பு முதலாளித்துவத்தைக்காட்டிலும் உயர்ந்த அமைப்புதான் என்பதை சோவியத் யூனியனும் மற்ற சோசலிச நாடுகளும் காட்டின. வறுமை ஒழிப்பு, ஏற்றத்தாழ்வின்மை, அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் என்று சோசலிச அமைப்பு தன் முத்திரைகளை பதித்தது. உலகம் பூராவும் உள்ள தொழிலாளி வர்க்கப்போராட்டங்களுக்கு உத்வேகம் கொடுத்தது. முதலாளித்துவ நாடுகளிலும் பல மக்கள் நல நடவடிக்கைகளை எடுத்து இதுவரை  கொடுக்கப்படாத உரிமைகளையும் கொடுக்க வேண்டிய சூழ்நிலையினை சோசலிச கோட்பாட்டின் தாக்கம் உருவாக்கியது என்று பார்த்தோம். மனித நாகரீகத்தின் உச்சகட்ட வளர்ச்சி நோக்கி அறிவியல் முன்னேற்றங்களின் துணை கொண்டு சோசலிசம் நடைபோட்டது. இரண்டு காரணங்களுக்காக சோவியத் யூனியனை நான் மதிக்கிறேன். ஒன்று பெண்களையும் குழந்தைகளையும் அந்த சமூகம் பேணிக் காக்கும் பண்பு; இரண்டாவது உலகின் மிகச் சிறந்த ஓவியங்களை தன்னகத்தே கொண்டிருப்பது என்று உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ரோமெய்ன் ரோலண்ட் எழுதினார். ஸ்புட்னிக் விட்ட பொழுதும், யூரிகாகரின் வான்வெளியில் பறந்த போதும் அந்த நாட்டின் அறிவியல் வளர்ச்சி கண்டு – சோசலிசத்தின் கீழ் வந்த வளர்ச்சி – உலகம் வியந்தது.

சிதைவு ஏன் :

இவ்வளவு போற்றத்தக்க பெருமைகளையும், சாதனைகளையும் கொண்ட சோவியத் யூனியன் ஏன் சிதைந்து போனது? சோசலிச அமைப்பை ஏன் தக்க வைத்துக் கொள்ளாமல் போனது? எங்கே தவறுகள் நடந்தன? இப்படியெல்லாம் கேள்விகள் எழுந்தன: இன்றும் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. நமது கட்சியின் 14வது கட்சி காங்கிரஸ் நிறைவேற்றிய தத்துவார்த்த பிரச்சனைகள் பற்றிய தீர்மானம் அதற்கான காரணங்களை விளக்கியது. பிரதானமாக இரண்டு தவறான கணிப்புகளை தீர்மானம் சுட்டிக் காட்டியது. முதலாவது, நிலவி வரும் அரசியல் உலக நிலைமைகளை புரிந்து கொள்வதிலும், சோசலிசம் என்ற கோட்பாட்டினை விளக்கிக் கொள்வதிலும் தவறுகள் நிகழ்ந்தன.

இரண்டவதாக, சோசலிச கட்டுமானத்தில் ஏற்பட்ட நடைமுறை பிரச்சனைகளை எதிர் நோக்கிய தன்மை. இவைகளைப் பற்றி விரிவாகச் சொல்வது என்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல, அடிப்படையான சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உலகின் மூன்றில் ஒரு பகுதியினை சோசலிச அமைப்பில் கொண்டு வந்தாலும், அந்த நாடுகளில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் இருந்த முதலாளித்துவ பிடிப்பினை அது தகர்க்கவில்லை; அறிவியல் தொழில் நுணுக்க முன்னேற்றங்களை பயன்படுத்தி, முதலாளித்துவம் தன்னுடைய பிடிப்பை தக்க வைத்துக் கொண்டது. குறுகிய காலத்தில் சோசலிசம் காட்டிய முன்னேற்றம், அதை பின்தள்ள முடியாது என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. தோற்கடிக்கப்பட்ட முதலாளித்துவம் பல மடங்கு வேகத்துடன் திருப்பித் தாக்கும் என்று லெனின் எச்சரித்தது முழுமையாக உள்வாங்கப்படவில்லை. இது முதலாளித்துவத்தைப் பற்றிய குறைத்து மதிப்பீடு செய்வதிலும்  சோசலிச கட்டுமானம் பற்றி அதீத மதிப்பீடு செய்வதிலும் போய் முடிந்தது.

முதலாளித்துவம் தவிர்க்க முடியாமல் தானே மடிந்து போகும் என்ற சித்தாந்தப் பிழை ஏற்பட்டது; அது தோற்கடிக்கப்பட வேண்டுமென்ற முக்கியமான ஸ்தாபனக் கடமை பின்னுக்குத் தள்ளப்பட்டது. சோசலிசம் என்பது தடையின்றி போகும் நேர்கோட்டு பயணம் என்று புரிந்து கொள்ளப்பட்டது. உண்மை நிலைமைகளை சரியாக கணித்து அதற்கேற்ப மாற்றங்களை கொண்டு வருவதில் கவனம் இல்லை. அப்படிக் கணிக்காமல் போனதில் ஈரான், சூடான், ஈராக், எகிப்து, இந்தோனிசியா போன்ற நாடுகளில் இருந்த வலுவான கம்யூனிஸ்ட் இயக்கம் வலுவிழந்து போன வரலாறு உண்டு.

இதற்கு முன் போட்ட பாதையில் சோசலிசம் பயணம் செய்யவில்லை. சோதித்துப் பார்க்காத ஒரு புதிய பாதையினை அது தேர்ந்தெடுத்தது. சோசலிச கட்டுமானத்திற்கு என்று முன்பே தயாரிக்கப்பட்ட செயல் வடிவம் ஏதும் கிடையாது. ஆகவே, சில சறுக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. எந்த கால கட்டத்தில் எந்த வடிவத்தில் அரசு செயலாற்ற வேண்டுமென்பதை தீர்மானிப்பதில் மயக்கம் இருந்தது. ஏகாதிபத்தியம் சுற்றி வளைத்த போதும், உள்நாட்டு யுத்தத்தை சந்தித்த போதும் இருந்த தேர்ந்தெடுத்த வடிவினை போர் முடிந்து சோசலிச கட்டுமான காலத்தில் பயன்படுத்த தேவையில்லை. முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறும் காலம், லெனின் குறிப்பிட்டது போல் நிரம்ப பல்வேறு வடிவங்களை முன்வைக்கும் சோவியத் ஏற்றுக் கொண்ட வடிவத்தையே கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருத்தியது, எதிர்விளைவுகளை கொண்டு வந்தது.

முதலாளித்துவ ஜனநாயகத்தைக் காட்டிலும் பரவலான, ஆழமான உண்மையான ஜனநாயகத்தை சோசலிசம் கொடுக்கும். கட்சிக்குள்ளும் வெளியேயும் இதை கடைப்பிடிப்பதில் குறைபாடுகள் எழுந்தன. கோர்ப்பசேவ் பொறுப்பேற்ற காலத்தில் சந்தைப் பொருளாதாரத்தின் பசிக்கு சோசலிச பொருளாதார அடிப்படைகள் (திட்டமிடுதல் உட்பட) உணவாக்கப்பட்டன. முடிவில் சோசலிசம் கீழே இறக்கப்பட்டது. தத்துவார்த்த உணர்வும் நீர்த்துப் போனது. சுருக்கமாகச் சொன்னால், நவம்பர் புரட்சிக்கு அடிப்படையாக இருந்த புரட்சிகரமான அறிவியல் ரீதியான மார்க்சிச – லெனினிச கோட்பாடுகளிலிருந்து தடம் மாறிய காரணத்தினால் நிகழ்ந்தது தான் அந்த வீழ்ச்சி.

சோசலிசம் தான் மாற்று :

ஆனால் கம்யூனிஸ்டுகள் விரக்தியில் முடங்கிப் போகிற மனிதர்கள் அல்ல. தேடிச் சோறு நிதந்தின்று, சின்னஞ்சிறு கதைகள் பேசி…… கூற்றுக்கிரையென பின் மாயும் வேடிக்கை மனிதர்களும் அல்ல. உலக நிலைமைகளை சரியாக கணித்து அதற்கேற்ப செயல்திட்டங்களை உருவாக்க முடியும். சோசலிச அடிப்படையினை விட்டுக் கொடுக்காமல், வளர்ச்சிக்காக சீனா மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் புதிய சிந்தனைகளை தோற்றுவித்திருக்கின்றன; வியட்நாம் அதற்கேற்ற வழியினை, சோசலிச அடிப்படைக்கு சேதம் ஏதும் இல்லாமல், தேர்ந்தெடுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. கியூபா எல்லா வகையிலும்  ஏகாதிபத்திய தாக்குதல்களை சமாளித்து மக்களின் பேராதரவுடன் சோசலிச கட்டுமானத்தை உயர்த்திப் பிடிக்கிறது; வட கொரியாவும் உலக அரங்கில் அதன் நிலையை உறுதி செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறது.

உலகமயம் சூழ்நிலையில் முதலாளித்துவத்துக்கு மாற்று ஏதுமில்லை என்ற பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுவதை ஏற்கனவே குறிப்பிட்டோம். ஆனால் சோசலிசம் தான் மாற்று என்று உலகில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் உறுதி செய்கின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் உலகமய எதிர்ப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் வெடித்துக் கிளம்புகின்றன. வெனிசுலாவின் சாவேஸ் தெளிவாக அறிவித்தார், முதலாளித்துவ அமைப்பில் பெரும்பான்மை மக்களின்  வறுமைக்கான தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதைத் தாண்டி நாம் செல்ல வேண்டும். சோசலிசம் என்று கோட்பாட்டினை மறுபடியும் மீண்டும் கைக்கொள்ள வேண்டும் – ஒரு செயல் திட்டமாக, ஒரு பாதையாக…… இந்த கருத்துக்காக அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தொடர்ந்து வேட்டையாடப்படுகிறார்.

இடதுசாரி கருத்து கொண்டவர்கள் பிரேசில், அர்ஜெயிண்டினா, சிலி, ஈக்வடார், டொமினிகன் குடியரசு, உருக்வே ஆகிய நாடுகளில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளார்கள். பொலிவியாவில் எதிரணியில் இருக்கும் சோசலிச அமைப்பு அனைத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. மெக்சிகோவும் பெரு நாடும் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் இடதுசாரிகளின் வெற்றியினை உறுதி செய்வார்கள் என்ற செய்திகள் வெளிவருகின்றன. உலகமய மாக்கலுக்கு எதிரான இயக்கங்கள் வலுப்பெறுகின்றன. அது முதலாளித்துவ நாடுகளில் நடந்த சில தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கின்றன.

இத்தாலியில் நடந்த பிரதேச தேர்தலில் 13 பிரதேசங்களில் 11ல் இடதுசாரி அணி வெற்றி பெற்றது; கம்யூனிஸ்டுகள் 10 சதம் வாக்குகளை பெற்றனர். ஜெர்மனியில் நடந்த தேர்தலில் இடதுசாரிகள் பெரும் வெற்றியினை பெற்றனர். ஐரோப்ப யூனியன் அமைப்பிற்கான சட்டத்தை பிரான்சு, நெதர்லாந்து மக்கள் நிராகரித்தனர்; அது அவர்களின் வாழ்வை ஏகாதிபத்திய உலகமய மாக்கல் பறித்து விடும் என்று உணர்ந்ததன் விளைவுதான் அந்த மக்கள் தீர்ப்பு. நார்வே நாட்டில் நடந்த தேர்தலில் இடதுசாரி ஆதரவு நிலை வெளிப்பட்டது.

உலகம் முழுமையும் பல்வேறு நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மையோடு போராட்டங்கள் வெடிக் கின்றன. இந்திய மக்களில் 5 கோடி பேர் செப்டம்பர் 29, 2005 உலகமயக் கொள்கைகளை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தனர்.

பிரான்ஸ் நாடு சில தினங்களுக்கு முன்பு நடந்த வேலை நிறுத்தத்தால் ஸ்தம்பித்தது. இவையாவும் ஒரு மாற்றத்தை தேடி நடைபெறுகின்ற இயக்கங்கள். இவைகள் அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்கப்பட வேண்டியவை. உலக சமூக மாமன்றம் போன்ற  அமைப்புகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் பங்கு கொள்வது என்பது அதிகரித்திருக்கிறது. அமெரிக்க கண்டத்தில் உள்ள கம்யூனிஸ்ட், இடதுசாரி மற்றும் முற்போக்கு இயக்கங்கள் பங்கு பெறும் சாவ்பெளலோ அமைப்பு போன்றவைகள் வலுவடைந்து வருகின்றன.

நவம்பர் புரட்சி சொல்லும் செய்தி சோசலிசம் வெல்லும்; இன்று ஏகாதி பத்தியத்திற்கு எதிரான போராட்டங்கள் சொல்லும் செய்தி; சோசலிசம் தான் மாற்று வழி.



%d bloggers like this: