மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மாதர்களை இழிவுபடுத்தும் மனுதர்மம்!


தாய்வழி உரிமை முறை தூக்கி எறியப்பட்டதுதான் பெண்ணினம் எதிர்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோல்வியாகும். வீட்டின் அதிகாரத்தை ஆண்வர்க்கம் கைப்பற்றியது. தரம் தாழ்ந்த நிலையில் பெண் வைக்கப்பட்டாள். மந்திரத்தால் கட்டுப் படுத்தப்பட்டவள் போல ஆக்கப்பட்டாள். மனிதனின் காம உணர்வுகளுக்கு வடிகாலான ஒரு அடிமை ஆக்கப்பட்டாள். பிள்ளைகளைப் பெற்று வளர்க்கும் வெறும் கருவியாக மாற்றப்பட்டாள்.

இவ்வாறு குறிப்பிடுகிறார், காரல் மார்க்சின் தோழரான பிரெடிரிக் ஏங்கல்ஸ். (குடும்பம் – தனிச் சொத்து அரசு என்ற தமது நூலில்)

தாய்வழிச் சமுதாயம்:

புராதனப் பொதுவுடமை சமுதாயத்தில் தாய்வழிச் சமுதாயம் அல்லது தாய் வழி உரிமை முறை நிலவி வந்தது. உணவுக்காக பழங்களை சேகரித்தல், மீன்பிடித்தல் மிருகங்களை வேட்டையாடுதல் போன்ற வேலைகளில் மனித சமூகம் அப்போது ஈடுபட்டு வந்தது. உணவு என்பது அன்றாடம் தேடிக் கண்டு பிடிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது.

அக்காலத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமண முறையும் கணவன் – மனைவி முறையும் இருக்கவில்லை. குழுத் திருமண முறையே பின்பற்றப்பட்டது. ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆண் – பெண் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரித்தால் ஒரு பிரிவு மற்ற பிரிவுடன் கணவன் மனைவி தொடர்பைக் கொண்டிருந்தது. பிள்ளைகளுக்கு தங்களைப் பெற்ற தாய் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆனால் யார்தந்தை என்பதை அறிந்து கொள்ள முடியாது.

அப்போது தனிச் சொத்துக்கள் என்பவை குறைந்த அளவிலேயே இருந்தன. வீட்டு உபயோகப் பொருட்கள் ஆடைகள், நளினமற்ற நகைகள் போன்றவை குடும்பத் தலைவியான பெண்ணின் சொத்தாகக் கருதப்பட்டன. வேட்டையாடுவதற்கும் உணவு சேகரிக்கவும் பயன்படுத்தப்பட்ட கருவிகள் ஆண்களின் உடமைகளாக இருந்தன. தாய்வழி உரிமைக் காலம் நிலவிய போது ஒரு பெண் இறந்துவிட்டால் அவளது உடமைகள் அவளது வயிற்றில் பிறந்த மகள்களுக்கும் மகன்களுக்கும் வழங்கப்பட்டன. ஆண் இறந்து போனால் அவனது சொத்துக்கள் அவனது சகோதர சகோதரிகளுக்கும் அவனது தாய்வழி உறவினர்களுக்கும் வழங்கப்பட்டன. அவனது பிள்ளைகள் என்று நேரடியாக எவரையும் குறிப்பிட முடியாத நிலை நிலவி வந்தது.

உடமைகள் பெருகியது – தந்தைவழிச் சமுதாயம் உருவானது:

வளர்ப்பு விலங்குகள் என்ற புதிய வாழ்க்கைச் சாதனம் மனித சமூகத்திற்குக் கிடைத்ததும் நிலைமைகள் மாறத் தொடங்கின. ஆடுகள், மாடுகள், குதிரைகள், ஒட்டகங்கள், பன்றிகள் போன்றவற்றை மந்தை மந்தையாக வளர்க்கும் முறை பெருமளவில் வளர்ந்தது. மிருகங்களின் பாலும் இறைச்சியும் மனிதர்களுக்கு நல்ல உணவாயிற்று. வளர்ப்புப் பிராணிகளை மேய்ச்சலுக்காக பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பராமரிக்கும் பணி ஆணின் வேலையாததால் அவை ஆணின் சொத்துக்களாக மாறின. பசுக்களை பண்டமாற்று முறையில் விற்பதால் கிடைத்த சொத்துக்களும், இனக்குழுக்களுக்கிடையே நடைபெற்ற போரின் போது கைதிகளாக்கப்பட்டு பின் அடிமைகளாக்கப்பட்டவர்களும் ஆணின் சொத்துக்களாக மாறினார்கள். கால்நடைச் செல்வம் பல்கிப் பெருகி அவை பெரும் உடமைகளாக மாறிய போது ஆணின் அந்தஸ்து சமுதாயத்தில் அதிகரித்தது. தனது பிள்ளைகளுக்கு தனது சொத்துக்கள் சேர வேண்டும்என்று விரும்பிய மனிதன் தனக்கு மட்டுமே மனைவி என்று ஒரு பெண்ணை அடையாளங் காட்டக் கூடிய திருமண முறையை ஏற்படுத்தினான். அதன் தொடர்ச்சியாக தாய்வழி உரிமை முறை தூக்கி எறியப்பட்டு தந்தை வழி உறவு முறை நடைமுறையாக்கப்பட்டது.

பெரிய அளவில் தனிச் சொத்துக்கள் இல்லாதிருந்த நிலையில் சமூகத்தில் பெண் மரியாதையுடன் நடத்தப்பட்டாள். தனிச் சொத்துக்கள் பெருமளவில் பெருகியதுடன் அதன் உடமையாளனாக ஆண் கருதப்பட்ட நிலையில் அந்தச் சொத்துக்கள் தன் மூலம் பிறந்த பிள்ளைகளுக்க மட்டும் சென்றடைய வேண்டுமென்று கருதினான். அதற்காக திருமணம் என்ற பந்தத்தை ஏற்படுத்தி பெண்ணை வீட்டிற்குள் பூட்டி வைத்தான். பிள்ளைகளை பெற்றுத் தரும் கருவியாக அவளை மாற்றி விட்டான். பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டி பெண் குலத்தை முழுவதும் அடிமைப் படுத்தாலாமோ? என்று பாரதி எழுப்பிய கேள்வி மிகப் பொருத்தமானதே.

உலக நாடுகளில் ஆணாதிக்க சமூக அமைப்பு முறை என்பது பொது விதியாகும். ஆண் – பெண் சமத்துவத்திற்கான போராட்டம் இல்லாத நாடுகளே இன்று இல்லை என்பதே இதற்கு சான்று பகரும். நாடுகளில் தோன்றிய விழிப்புணர்ச்சி, கல்வி அறிவு வளர்ச்சி, பெண்கள் சுயமாக வேலை செய்தோ தொழில்களில் ஈடுபட்டோ பொருள் ஈட்டுதல் போன்ற மாற்றங்களுக்கு ஏற்ப சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் ஆணாதிக்க சிந்தனை  என்பதே சமுதாய சிந்தனையாக எல்லா நாடுகளிலும்  இன்றளவும் நீடிக்கிறது.

ஆணாதிக்க சமூகக் கோட்பாட்டை ஒவ்வொரு நாடும் சில பிரத்யோக தன்மைகளுடன் உருவாக்குகிறது. அந்த வகையில் இந்தியாவில் உருவான ஒரு நூல் தான் மனு தர்ம சாத்திரம்.

மனுதர்ம சாத்திரம் உருவான கதை:

மனுதர்ம சாத்திரம் உருவாக்கப்பட்ட கதையை அதன் ஆசிரியரான மனுவே விவரிக்கிறார். படைப்புச் செயலில் ஈடுபட்ட பரம்பொருளின் வாரிசாக தன்னை அவர் அடையாளங்காட்டிக் கொள்கிறார். தாம் பிரம்மனிடமிருந்து விதிகளையும் நியமங்களையும் கற்றுக் கொண்டதாகவும் தான் கற்றுக் கொண்டதை தனது மகனான பிருகுமுனிவருக்குக் கற்றுக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

மனுவை தேவரிஷிகள் பின்வருமாறு கேட்டனராம்! நால் வருணத்தாரும் மற்றோரும் கடைப்பிடிக்கத் தக்க செயல்கள் கடமைகளை எமக்கு உணர்த்துவீராக! என்று கேட்டனராம். உலகின் தோற்றம் உயிர்களின் தோற்றம் ஆகியவற்றை மட்டும் தேவரிஷிகளுக்கு விளக்கிய மனு பின்வரும் கட்டளையை வெளியிட்டார்.

எனது குமாரரான பிருகு இந்த தர்ம சாஸ்திரத்தை சற்றும் பிறழாமல் உங்கட்கு உபதேசிக்கக்கடவர். ஏனெனில் முறையாக என்னிடம் பிருகு முனிவரே இதனைப் பயின்று கைவரப் பெற்றவராகிறார்.

மனுவின் கட்டளையை ஏற்றுக் கொண்ட பிருகு முனிவர் நால்வருணத்தாரின் கடமைகள், ஆண் – பெண்களின் அறம், இல்லறவியல், அரச நீதி, குற்றங்கள் – தண்டனைகள், சொத்துக்களை பாகப்பிரிவினை செய்தல் உள்ளிட்ட சமுதாயத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த சட்டதிட்டங்களை தேவரிஷிகளிடம் விளக்கிக் கூறினார். இவையே 12 அத்தியாயங்களைக் கொண்ட நூலாக – மனுதர்ம சாஸ்திரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

மனு சாஸ்திரம், ஆதிகால வாழ்க்கை முறையிலிருந்து, அரசியலமைப்பை கொண்ட மன்னராட்சி முறைக்கு மாறி வந்த காலத்தில் உருவான சாஸ்திரமாகும். அரசு எனும் அடக்கு முறை கருவியின் அவசியத்தை உணர்த்தவும், மக்களின் திரள் அரசதிகாரத்தை கேள்விக் குறியாக்காமல் இருக்கவும், தேவையான தத்துவ அடிப்படையை விளக்கும் சாஸ்த்திரமாகும். அடக்கி ஆளுதல், பிரித்தாளுதல், எதிர்ப்பை முளையிலேயே கிள்ளல், குடும்ப உறவுகள், சமூக பிரிவினைகள் அனைத்தும் அம் மன்னரின் மேலாதிக்கத்தை தெய்வாம்சமாக உயர்த்தும் நோக்கத்தோடு திணிக்கப்பட வேண்டும் என்று இந்த சாஸ்த்திரம் கூறுகிறது. இன்று இந்த மன்னராட்சி காலத்திய மனுதர்மத்தை  நமது நவீன பூர்சுவாக்கள் அவர்களது தேவைக்கேற்ற மாற்றங்களோடு பாதுகாத்து பிரயோகிக்க முயற்சிக்கிறார்கள். நமது நிலபிரபுத்துவ பண்பாட்டின் மிச்சசொச்சமாகவும், இன்று இந்த வர்ணாஸ்ரம தர்மம் நீடித்திருக்கிறது என்பதை முதலில் ஏற்றுக்கொண்டால் தான் இன்றைய பெண் அடிமைத்தனம் மற்றும் ஆணாதிக்க பண்பாடு மேலாண்மை செலுத்துகிற தத்துவ அடிப்படைகளை புரிந்து கொள்ள முடியும்.

மானுட சமூகத்தில் அனைவரும் சமம், எல்லா ஆண்களுக்கும், பெண்களுக்கும் உயிர் வாழும் உரிமைகள் உண்டு என்பதை நாம் எப்படி புரிந்து கொண்டுள்ளோம் என்பதை ஆண், பெண் சமத்துவம் பற்றி ஒருவர் கொண்டிருக்கிற கருத்துக்களே நிர்ணயிக்கின்றன.

மனுதர்மம், மக்களை அடக்கி ஆளும் தத்துவமாக இருக்கப்போய்த்தான், வேதங்களை நிராகரிக்கும், மன்னர்களும், இந்துமதத்தை நிராகரிக்கும், இஸ்லாமிய, கிறித்துவ ஆட்சியாளர்களும் இந்த தர்மத்தை வழுவாது பின்பற்றினர். மதசார்பற்ற நவீன பூர்சுவாக்களும், இதையே நாடுகின்றனர். பாட்டாளி வர்க்க சமத்துவ கலாச்சாரம் தலையெடுக்க விடாமல் ஊடகங்கள் மூலம் பார்த்துக்கொள்கின்றனர். மக்கள் பங்கெடுக்கும் தத்துவப்போரின் மூலமே மனுதர்ம கண்ணோட்டத்தை விரட்ட முடியும் என்பதை இங்கே வலியுறுத்த விரும்புகிறோம்.

சாதிக்கொரு நீதி சொன்ன சாத்திரம்:

மனுவாதி சாத்திரத்தின் ஒரு சாதிக்கொரு நீதி என்பார் பாரதி. மனிதர்கள் அனைவரையும் சம நிலையில் வைத்துப் பார்க்காத ஒரு அதர்ம சாஸ்திரம் தான் மனு நீதி சாத்திரம். சாதிக்கொரு நீதி சொல்லும் சாத்திரம் அது என்பதை விளக்க ஒரே ஒரு உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரம் என்று நாம் அழைக்கக் கூடிய ஒரு குற்றத்தை ஒருவன் செய்தால் அவன் எந்த வருணத்தைச் (சாதி) சேர்ந்தவன் என்ற அடிப்படையிலேயே அவனுக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனையை மனுதர்ம சாத்திரம் தீர்மானிக்கிறது.

மேல்வருணத்தார் மூவரின் (அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன்) மனைவியையும் ஒருவன் (சூத்திரன்) தனது வலிமையாற் கூடினால் உயிர்போகும் வரை அவனை தண்டிக்கவும். (அத்தியாயம் 8. செய்யுள் 358)

கற்பினளான பிராமணப் பெண்ணைக் கூடும் வைசியனக்கு ஒரு வருட காவலும் ஆஸ்திப் பறிமுதலும் தண்டனைகள். இவ்விதம் குற்றமிழைத்தவன் சத்திரியனாயிருப்பின் ஆயிரம் பணம் தண்டம் விதித்து கழுதை மூத்திரத்தை விட்டு அவன் தலையை மொட்டை இடுக! (8-374)

எந்தப் பாவம் செய்த போதிலும் பிராமணனைக் கொல்லாமல் காயமின்றி அவன் பொருளுடன் ஊரைவிட்டுத் துரத்துக! ஒரே குற்றத்திற்கு சூத்திரனுக்கு மரண தண்டனை, வைசியனுக்கு ஒரு வருடம் சிறையும் ஆஸ்திப் பறிமுதலும், சத்திரியனுக்கு ஆயிரம் பணம் அபராம் மொட்டையடித்தல், பிராமணனை காயமின்றி பொருளுடன் ஊரைவிட்டு துரத்துதல்.

இத்தகைய அநீதியான அணுகுமுறையைக் கண்டு கொதித்துப் போன பாரதி பின்வருமாறு பாடினார்.

சூத்திரனுக்கொரு நீதி தெண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி என்று சாத்திரம் சொல்லுமாயின் அது சாத்திரமல்ல – சதியென்று கண்டோம்

சாதிக் கொரு நீதி சொல்லும் மனுதர்மம் நாலாம் வருணத்தவராகிய சூத்திரரை சமுதாயத்தில் கீழான நிலையில் வைக்கிறது. இழிவுப்படுத்தி அவமானப்படுத்துகிறது.

பெண்களைப் பொருத்தவரை அவர்கள் எந்த வருணத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களை நான்காம் வருணத்தவருக்கு சமமான இடத்திலேயே அது வைத்துள்ளது. இதற்கு ஒரு உதாரணம் – நற் செயல்களை மாதரோ நாலாம் வருணத்தவரோ செய்தாலும் அத்தகைய நற்செயல்களையும் தனது மனதுக்கிசைந்த நற் கருமங்களையும் அறத்திற்கு மாறாது ஒருவன் மேற்கொள்ளலாம்.

பெண்கள் வைசியர்களும் சூத்திரர்களும் பாவயோனியில் இருந்து பிறந்தவர்கள் என்று பகவத் கீதை குறிப்பிடுகிறது. (9வது அத்தியாயம் 32வது ஸ்லோகம்) என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தனி அடையாளம் கிடையாது

பெண்களுக்கு தனி அடையாளங்களையோ சுயேச்சையான செயல்பாடுகளையோ மனு தர்மம் நிராகரிக்கிறது. அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை அது அனுமதிக்கவில்லை.

விதி 9.3: இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்.

5.150: வீட்டு வேலையில் திறமும் மகிழ்வும் பொருள்களைப் பேணுதலும் சிக்கனமும் பொருந்தியிருக்க வேண்டும். 5.147: எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது.

மாதரை நம்பாதே!

பெண்களை ஒழுக்கக் கேடானவர்களாகவும் மயக்கும் குணம் கொண்டவர்களாகவும் மனுதர்மம் சித்தரிக்கிறது. பாலியல் ரீதியில் ஒழுக்கக் கேடுகள் எவையாவது நடந்தால் அதில் ஆணுக்கு பொறுப்பு எதுவுமில்லை என்பது போலவும் அவனை ஒரு அப்பாவியைப் போலவும் கருதி பெண்களை மனுதர்மம் இழிவுபடுத்துகிறது.

2.213. தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.

2.214. புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.

9.15. நிறை பிறழ்தலும் நிலையில்லா மனமும் நற்பண்பின்மையும் மாதர் தம் இயல்பாதலால் கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும் போதம் அவர்கள் கணவனின் காவலை விரும்புவதில்லை.

9.19. பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் குறப்படுவனவற்றையும் கேட்பீராக.

மாதரை இழிவுபடுத்தும் இத்தகைய கருத்துக்கள் பல மனுதர்மத்தில் இடம்பெற்றுள்ளன. அலுவலகத்திற்கு பணி புரியச் செல்லும் பெண்கள் பெரும்பாலனாவர்கள் ஒழுக்கக் கேடானவர்கள் என்று கூறியதன் மூலம் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தன்னை மனுவின் சிறந்த சீடர் என்று உறுதிப்படுத்தியுள்ளார் என்பதே இங்கே குறிப்பிடலாம்.

திருமணம் எதற்காக?:

பெண்களை இவ்வாறு இழிவுப்படுத்தும் மனுதர்மம் மாதரைக் காப்பாற்றுவதற்கான காரணத்தையும் எப்படி விளக்குகிறது என்பதைக் காண்போம்.

9.11 வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும் தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும் வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க!

9.26 மாதரைக் காத்தல் இவ்வளவு தொல்லை நிறைந்ததாயினும் நன்மக்களை ஈன்று நல்லின்பம் தருகிறவர் ஆதலினால் அவர்களை ஆடை அணிகளில் அழகு செய்யவேண்டியது. இல்லத்திற்கு எழில் தரும் பெண்டிரும் லக்ஷ்மியும் ஒருவரே. செல்வமில்லாத வீட்டைப் போல மாதரில்லாத வீடும் விளக்கம் பெறுவதில்லை.

9.27. ஈன்று புரந்து, விருந்தோம்பி இல்லறம் புரிதற்கு மாதரே ஏற்றவர் என்பது காணக் கிடக்கிறது.

பிள்ளைகளைப் பெற்று வளர்த்தல், உணவு தயாரித்தல் குடும்ப நிர்வாகம் போன்ற பணிகளை பெண்களின் தலையில் சுமத்தும் போதே அவள் மனம் வேறிடம் செல்லாமற் காப்பதற்காகத்தான் அவ்வாறு செய்யப்படுகிறது என்ற காரணத்தையும் முன்வைக்கும் மனு தர்மத்தின் வக்கிரமான பார்வை அருவெறுப்பை ஏற்படுத்துகிறது அல்லவா?

பெண்களுக்கு கல்வி அளிக்க வேண்டாமாம்:

பெண்ணுக்குக் கல்வியோ மத ரீதியான சடங்குகளோ கூடாது என்கிறது மனு தர்மம். அக்காலத்தில் கல்வி பெற விரும்புவர் ஆசிரியரின் வீட்டில் தங்கி கல்வி கற்பார்கள். இதற்கு குருகுலவாசம் என்று பெயர். கணவனுக்கு பணிவிடை செய்வது தான் குருகுலவாசம் என்கிறது மனுதர்மம்.

2.67 பெண்களுக்கு விவாகமே உபநயனமாகும். (பூணூல் அணிந்து கொள்ளும் நிகழ்ச்சியின் பெயர் உபநயனம்) கணவனுக்கு பணிபுரிந்திருத்தலே அவர்களது குருகுலவாசமெனப்படும். மதரீதியான சடங்குகள் எவையும் பெண்களுக்கு கிடையாது என்று கூறுகிற மனுதர்மம்.

4.205 வேத கோஷங்களில்லாத வேள்வியிலும் பெண்களோ பேடிகளோ இயற்றும் ஒன்றிலும் அந்தணன் புசித்தலாகாது.

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்:

கணவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் பெண் அவனுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்று விதிக்கிறது மனுதர்மம்.

9.78 கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.

5.154 இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக.

5.156 மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது.

விதவைப் பெண் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது:

9.65 புத்திரனில்லாமற் போனால் மற்றொருவனிடம் பிள்ளை பெறுமாறு எந்த வேதத்தாருக்கும் விவாகமந்திரங்களில் கூறப்பட்டிருக்கவில்லை. திருமண ஏற்பாட்டுச் சூத்திரத்திலும் விதவா விவாகம் விதிக்கவில்லை.

மனைவியை இழந்த கணவன் மறுமணம் செய்து கொள்ள வேண்டுமாம்!

5.167 நன்னடையும் ஒத்த குலமும் உடைய மனைவி முன்னம் இறந்துவிட்டால் துவிஜாதியினர் (பிராமணர் சத்திரியர், வைசியர்) அவளை விதிப்படி எரியூட்டி ஏனைய தென்புலக்கடனம் இறுக்க.

5.168 இப்படி அவளுக்குக் கடனிறுத்த பின்னர் மற்றொரு பெண்ணை மணந்து தீ வளர்த்தலாகிய நற்கருமங்களை இயற்றி வரவேண்டியது.

5.169 மனைவியை இழந்தவன் விதிப்படியே மறுமணம் செய்து கொண்டு அன்றாட ஐம்பெரு வேள்வியை முயன்று தன் வாழ்வின் இரண்டாம் பகுதியை இல்லறமாக்கிக் கழிக்க வேண்டியது.

மனைவியை விவாகரத்து செய்யலாம்:

கணவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டுமென்று விதிக்கின்ற மனுதர்மம் மனைவியை விலக்கி விட்டு மறுமணம் செய்து கொள்ள அனுமதி வழங்குகிறது.

9.81 மலடியான மனைவியை எட்டாண்டுகளின் மேலும் தக்காமல் அடிக்கடி பிள்ளையிறக்கம் வயிற்றினைப் பத்தாண்டுகளின் மேலும் பெண் குழந்தையையே பெறுபவளை பதினோராண்டுகளின் பொல்லாங்கு சொல்கிற பெண்ணை உடனேயும் நீக்கி விட்டு வேறு மணம் செய்து கொள்க. இம்மனைவியர்க்கு மன மகிழ்ச்சிப் பொருள் யாதும் கொடுக்க வேண்டியதில்லை.

9.80 கட்குடியள், தீ நடையுடையவள், கொண்டவனுக்கு இரண்டகம் செய்பவள், தீராப் பிணியள், கொடுமனமுடையவள், ஊதாரி இத்தகைய மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுத்து விலக்கிப் பின் மறுமணம் செய்து கொள்க.

பெண் குழந்தையே பெறுபவளை விவாகரத்து செய்ய அனுமதிக்கும் மனுதர்மம் பெண் குழந்தைகளையே பெற்றவர் வீட்டில் பெண் எடுக்கக் கூடாது என்றும் விதிக்கிறது. பெண்ணின் பாலினத்தை தீர்மானிப்பதில் ஆணின் விந்தணுவில் உள்ள குரோமோசோம்கள் தான் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கிறது என்ற அறிவியல் முடிவு அறியப்பட்ட இக்காலத்திலும் பெண்களைப் பெற்ற தாயை குற்றவாளியாக்கும் மனுதர்ம சிந்தனை நீடிப்பது கொடுமையல்லவா?

இன்று மனுதர்மம் பழமையானது என்று சாடுபவர்களும், மனுதர்மம் என்றால் என்ன என்று கேள்வி கேட்பவர்களும் கூட ஆணாதிக்க, பண்பாட்டுடன் இருக்கின்றனர். உழைப்பில் உயர்வு, தாழ்வு உண்டு என்று கருதுபவர்களும் உள்ளனர். மனு சாஸ்த்திரம் புதைந்து விட்டது. ஆனால் அது விட்டுச்சென்ற பண்பாடு தொடர்கிறது. சோசலிசத்தை நோக்கிய அரசியல் இயக்கங்கள் உருவாகாமல், இந்த பண்பாட்டு ஆதிக்கத்தை அசைக்க முடியாது.%d bloggers like this: