மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இன்றைய இந்துத்வா அரசியலும், ஆதிகால சமய சச்சரவுகளும்!


இந்துத்வம் என்பது இந்து வகுப்பு வாதமாகும். இது ஒரு நவீன காலச் சிந்தனையாகும். இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் உலக முதலாளித்துவப் பொருளாதாரம் சந்தித்த பெரும் நெருக்கடியின் பின்புலத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் வகுப்பு வாதம் பிறந்தது. ஜெர்மனியில் பாசிசம் ஹிட்லர் வடிவிலும், இத்தாலியில் முசோலினியின் வடிவிலும் ஆட்சியதிகாரத்தைப் பிடித்தது.

அதே காலப் பகுதியில் ஹிட்லர், முசோலினியிடமிருந்து உத்வேகம் பெற்று இந்தியாவில் 1925 ஆம் ஆண்டு வாக்கில் இந்துத்வம் ஸ்தாபன வடிவம் பெற்றது. இந்தியாவில் முதலாளித்துவ, தேசிய அரசியலும் பாட்டாளி வர்க்க சர்வ தேசியம் பேசும் இடதுசாரி அரசியலும் அதே கால கட்டத்தில் தான் ஒரு முறையான வடிவத்துக்கு வந்திருந்தன. இந்துத்வம், முதலாளித்துவ தேசியம், இடதுசாரி அரசியல் இம்மூன்றும் சமகாலத்தில் பயணப்பட்ட அதே காலப்பகுதியில் தான் இந்தியாவின் பல மொழிகளிலும் நவீன இலக்கியம் தன் ஆரம்ப வரிகளை எழுதத் துவங்கியிருந்தது. மேற்கூறப்பட்ட மூன்று நீரோட்டங்களும் நவீன இலக்கியத்தைப் பாதித்தன – கூடுதலாகவும் குறைவாகவும்.

காலனிய எதிர்ப்புப் போராட்டம் துவங்கியபோது மக்களைத் தட்டி எழுப்புவதற்கான குறிடுகள், அடையாளங்கள் என்று தேடிய தலைவர்கள் பிரிட்டிஷ், கிறிஸ்தவ, வெள்ளை எதிர்ப்பின் ஒரு அடையாளமாக இந்து என்ற சொல்லைப் பயன்படுத்தினர். திலகர் முதல் காந்தி வரை இந்த இந்து அடையாளத்தைப் பயன்படுத்தினர். அது இலக்கியத்திலும் பிரதிபலித்தது.

பங்கிம் சந்திரரின் ஆனந்த மடம் நாவல் ஆங்கிலேயருக்கு எதிரான விவசாயிகளின் ஆயுத எழுச்சியை மையமாகக் கொண்ட நாவல் தான் என்றாலும் இந்து மீட்பு வாதக் கருத்துக்களுக்கும் அதில் இடம் இருந்தது. ஆகவே தான் அந்நாவலில் வரும் வந்தே மாதரம்  பாடலை காங்கிரசும், அதைவிடத் தீவிரமாக இந்துத்வா சக்திகளும் இன்றும் பயன்படுத்த முடிகிறது, அடிப்படையில் அது நிச்சயமாக ஒரு இந்துத்வ நாவல் அல்ல என்ற போதும்.

விபூதிபூஷன் பந்தோபாத்யாயாவின் இலட்சிய இந்து ஓட்டல்  உள்ளிட்ட நாவல்கள் சரத்சந்திரரின் படைப்புகள் அதே கட்டத்தில் வெளியான பல மராட்டிய நாவல்களில் எல்லாம் இந்து அடையாளம் பிரிட்டிஷ் எதிர்ப்பு என்பதன் குறிடாகப் பயன்படுத்தப்பட்டது.

காலனிய ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மாவை அதன் சுய அடையாளங்களைத் தேடும் கலைஞனின் வலி மிகுந்த பயணத்தில் இந்து, ஆரிய போன்ற சொற்கள் பற்றுக் கோடுகளாய் இருந்ததை நாம் தவறாகப் புரிந்து கொள்ள முடியாது. மகாகவி பாரதியின் பல பாடல்களை நாம் இந்தப் பார்வை யினூடாகவே புரிந்து கொள்ள முடியும். பாரதி வாழ்ந்த காலத்தில் இந்துத்வம் இன்றுள்ளது போன்ற தனது பூரண கோர வடிவத்தைப் பெற்றிருக்கவில்லை. தேசியம், சர்வதேசியம் என்கிற இரண்டும் பாரதிக்குள் புகுந்திருந்தது. இந்துத்வ அரசியலுக்கு எதிரான ஏராளமான கூறுகள் பாரதியிடம் துலக்கமாக வெளிப்பட்டு நிற்கின்றன. பெண் விடுதலை, சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை, பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, பொதுவுடமைச் சிந்தனையின் ஆரம்பக் கூறுகள் என இந்துத்வ எதிர்ப்புக் கூறுகள் பாரதியிடம் அடர்த்தியாக இருந்தன. பாரதியை முழுமையாக (காலச்சூழலில் சரியாகப் பொருத்திப்) பார்க்காமல் அவரிடம் இந்துத்வ அரசியல் மறைந்து நிற்பதாக ஒரு சில ஆய்வாளர்கள் இன்று எழுதப் புறப்பட்டுள்ளதை நாம் நிராகரிக்க வேண்டும்.

பிற மத வெறுப்பு – பகையுணர்வை மூட்டி வளர்த்தல் – வர்ணாசிர தர்மத்தை – மனுவை உயர்த்திப் பிடித்தல் – பிற மதத்தாரை அடிமை கொள்ளத் துடித்தல், மக்கள் திரளை வகுப்பு மயமாக்குதல், சகிப்புணர்வை சமூக மனதிலிருந்து துடைத்தெறிதல் போன்றவையே இந்துத்வ அரசியலின் அடிப்படைகளாகும்.

எப்போதும் வகுப்பு வாதம் இரண்டு தளங்களில் வேலை செய்கிறது.

  1. வகுப்பு மோதல்களைத் தூண்டிவிட்டு படுகொலைகளை நடத்தி மக்களை இரு கூறாகப் பிரிப்பது
  2. தத்துவார்த்த தளத்தில் இயங்கி மக்களின் பொதுப்புத்தியில் (Common Sence) இந்துத்வ விஷத்தை ஊசியேற்றுவது.

1947 ல் தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது வகுப்பு வாதத்துக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகும். அதையொட்டி நிகழ்ந்த வன்முறைகள் இலக்கியத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியது. பிரிவினையின் போது பெண்கள் தூக்கிச் செல்லப்பட்டதும், பாலியல் கொடுமை களுக்கு ஆளாக்கப்பட்டதும், மார்பகங்கள் அறுத்து எறியப் பட்டதும், பிறப்பு உறுப்பில் திரிசூலமும், பிறைச்சந்திரனும் சூடு போடப்பட்டதும்,  எதிரிகள் வந்து தூக்கிச் சென்று விடுவார்கள் என்ற அச்சத்தில் பெண்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொண்டதும், பெற்றவர்களாலேயே இளம் பெண்கள் வெட்டிக் கொல்லப்பட்டதும், வன்புணர்ச்சிக்கு ஆளாகிக் கருவுற்ற ஆயிரக்கணக்கான பெண்கள் கருச்சிதைவு செய்து கொண்டதும், பலர் பத்து மாதம் சுமந்து அக்குழந்தைகளைப் பெற்று அனாதை விடுதிகளில் விட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் தங்கள் வீடுகளைத் தேடி ஓடியதையும் எழுதப்பட்ட இருநாட்டு வரலாறுகளிலும் பார்க்க முடியாது. இவையெல்லாம் இலக்கியங்களில் தான் அதே வலியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கே.ஏ.அப்பாஸ் எழுதிய ஒரு கதையில், தேசப் பிரிவினையின் போது தன்மகளைப் பறிகொடுத்த ஒரு இந்து தகப்பன் வருகிறான். எல்லையோர அகதிகள் முகாம்களெங்கும் தன் மகளைத் தேடித் தேடி அலைகிறான். எங்கும் அவளைக் காணவில்லை. கடைசியில் ஒரு தெருவோரப் பிணமாக அவளைக் கண்டெடுக்கிறான். அவளது இரு மார்பகங்களிலும் அறுத்தெறிக்கப்பட்டு மார்பகம் இருந்த இடத்திலிருந்து ரத்தம் இன்னும் கசிந்து கொண்டிருக்கிறது. அவளது மரணத்துக்கு முன் ஆளாக்கப்பட்ட பாலியல் பலாத்கார அடையாளங்களோடு அவள் சடலம் கிடக்கிறது. மகளைப் புதைத்து விட்டுப் பல மாதம் பைத்தியம் போல அலைகிறான். பழிக்குப்பழியாக ஒரு முஸ்லீம் பெண்ணைக் கெடுத்து அவள் மார்பகங்களை அறுத்தெறிய வேண்டுமென ஆவேசம் கொள்கிறான். நல்ல கத்தி ஒன்றை வாங்கித் தீட்டி மறைத்து வைத்துக் கொள்கிறான். பிரிவினையால் அனாதையாகி உடலை விற்றுப் பிழைக்கும் கதிக்கு ஏராளமான பெண்கள் தள்ளப்பட்டிருந்தனர். அப்படி உடலை விற்றுப் பிழைக்கும் ஒரு முஸ்லீம் பெண்ணைத் தேர்வு செய்து இத்தகப்பன் உள்ளே போகிறான். இடுப்பில் கத்தியை மறைத்துக் கொள்கிறான். அவள் அறைக்குள் வருகிறாள் இளம் முஸ்லீம் பெண். பணத்தைக் கொடுக்கிறான். அவளுடைய மேல் சட்டையை கழற்றச் சொல்கிறான். அவள் தயக்கத்துடன் மெல்லக் கழற்றுகிறாள். இவன் மெதுவாக இடுப்பிலிருந்து கத்தியை வெளியே எடுக்கிறான். அவள் முழுதுமாக சட்டையைக் கழற்றிவிட்டாள். அவளுடைய மார்பகங்களைப் பார்க்கிறான். அவன் கையிலிருந்த கத்தி நழுவி விழுகிறது. அந்தக் கட்டிடமே அதிரும் வண்ணம் மகளே …  என்று அலறுகிறான். கதை அத்தோடு முடிந்து விடுகிறது.

இந்துத்வ அரசியலின் ஒரு முகமான நேரடி வன்முறைக்கு எதிராக வாசகரின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் கதைகளை அப்பாஸ், சதத் ஹசன்மாண்ட்டோ போன்ற படைப்பாளிகள் எழுதினர். (மாண்ட்டோவின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நிழல் பதிப்பக வெளிடாக வந்துள்ளது).

காலனி ஆதிக்கத்தின்போதுபிரிட்டிஷ் ஆட்சியின் சூழ்ச்சியால் ஏற்பட்ட மத மோதல்களால் நாடே பிரிய நேர்ந்தது. அதனால், ஏற்பட்ட வலியை உணரும் சூழல் தமிழகத்தல் இல்லை. இந்தியாவின் வடபகுதியில் இவ்வலியை நினைவூட்டி மோதலை வளர்ப்பது என்பது இந்துத்வா மற்றும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் அரசியலாகும். பழங்காலசமயசச்சதரவுகள் பற்றி ஒரு சரியான பார்வை நமக்கு அவசியம். தமிழ் இலக்கியத்தில் சமய சச்சரவுகள் இருந்தன என்பதற்கு சான்றுகள் உள்ளன. இன்றுஇந்துத்வா அரசியல் அந்த சமய சச்சரவின் தொடர்ச்சி என்று இந்துத்வா வாதிகள் பாரம்பரிய மேலான்மை கொண்டாட முனைகின்றனர். இது முற்றிலும் தவறானது. இந்துத்வா என்ற அரசியலுக்கும், பழைய சமய சச்சரவுகளுக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை. இந்துத்வா என்பது முழுக்க முழுக்க இந்தியப்பண்பாட்டை நிராகரிக்கும் ஜெர்மானிய ஆரிய இனக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. ரத்த வெறி கொண்ட சர்வாதிகார ஆட்சி முறையைத் திணிக்கும் பூர்சுவா சுரண்டலைப் பாதுகாக்கும், மக்களைத் துரும்பாக நினைத்து துவம்சம் செய்யும் அரசியலாகும். பழங்கால சமய சச்சரவுகள், அக் காலகட்டத்தின் சூழல் ஆகியவைகளை ஆழ்ந்து பரிசீலித்து சரியான பார்வையை மக்களிடையே பரப்புவது அவசியம். அன்று தமிழகத்தில் வேதங்களையும், பலியிடும் யாக முறைகளையும், பவுத்த, சமண சமயங்கள் வலுவாக எதிர்த்தன, வெற்றி கொண்டன. ஆனால், காலப்போக்கில் பவுத்த, சமண மடங்களின் ஆதிக்கமாகி விடுகின்றன. மடங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து உருவான பக்தி இயக்கங்களும் காலப்போக்கில் மடங்களாகி, பவுத்த, சமணம் உருவாக்கிய தத்துவ அறநெறிகளை ஒழிக்கின்றன. வேதங்களையும், பார்ப்பன ஆதிக்கத்தையும் முன் நிறுத்துகின்றன. பவுத்த, சமண சமயங்கள், உருவாக்கியிருந்த கடவுளற்ற ஆன்மீக சித்தாந்தங்களையும், இகவாழ்வு அறநெறிகளையும், பக்தி இயக்கங்கள் முற்றிலுமாக ஒழிக்கும் பிற்போக்கு  மடங்களாகிவிட்டன.

அந்த தத்துவங்ளை பற்றிக் கூறும் இலக்கியங்களை ஆராய்ந்தால் மதச்சார்பற்ற, இயக்க இயல்பொருள் முதல்வாதக் கூறுகளைக்  கெண்ட ஆரம்ப தத்துவமாக அவைகள் இருந்தன என்பது தெரிகிறது. (பழங்கால ஹெராக்லிட்டஸ், 19ம் நுற்றாண்டு ஹெகல் ஆகியோரின் பார்வைக்கு முன்னேடியாக இருந்தது.) பக்தி இயக்கத்தின் சீரழிவு கட்டத்தில் பிற சமய கருத்துக்களை வேர் அறுக்கும் சகிப்புத்தன்மையற்ற போக்கு விரிந்தது. முடிமன்னர்களின் ஆதரவு இருந்தாலும் அவைகள் சுருங்கின. பிற்காலத்தில் தமிழ் மொழியின் மேலாண்மையை சீரழிக்க சமஸ்கிருத ஆதிக்கம் பரவ இந்த வேத ஆகம பார்வை வழிவகுத்தது. தேவார ஓதுவார்கள், சாமிக்கு அருகே போகக் கூடாது என்றெல்லாம் தடைகள் வந்தன. சமஸ்கிருதம், பார்ப்பனர்களும், தெய்வ அனுக்கிரகம் பெற்றவர்கள் என்று கருத்துபரவி, பக்தி இயக்கம் மடிந்தது. தமிழ் மட்டும் நின்றது.

உண்மையில்…

“பரசமயத் தருக் கழியச்
சைவ முதல் வைதீகம் தழைத்தோங்க”ப் பாடுபட்டவராக பெரியபுராணத்தில் சேக்கிழார் புகழ்ந்து பாடிய திருஞான சம்பந்தர் பாடிவேதங்களை முன்நிறுத்துகிறார்..

புலையறம் பேசும் புத்த சமணர்களின்
தலையறுக்க வேண்டி நின் தாழ் பணிந்தேனே…

என்றும்

சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமணர் குண்டர்
மடங்கொண்ட விரும்பியதாய்

என்றும் பாடும் சம்பந்தரின் வார்த்தைகளிலும்
குண்டரைக் கூறையின்றித் திரியும் சமண சாக்கிப்பேய் என்று திகம்பர சாமிகளாக கூறை (ஆடை) யின்றித் திரியும் சமணத்துறவிகளைக் குண்டர் என்று சொல்லும் சுந்தரரின் சொற்களிலும்

புத்தன் முதலிய புல்லறிவிற் பல சமயம் தத்தம் மதங்களில் தட்டுளும்புப்பட்டு நிற்க எனவும்
விருது பகரும் வெஞ்சொல் சமணர்
வஞ்சகச் சாளுக்கியர்

என்பது மாணிக்க வாசகரின் விஷம் கக்கும் வாசகம். தோடுடைய செவியன் முதல் கல்லூர் என்னும் தொடி முடிவாய் பரசமயத் தொகைகள் மாள பாடினார் பதிகங்கள் என்று திருஞான சம்பந்தரின் சமூகப்பணி பலசமயக் கருத்துக்களை அழித்து ஒழிப்பது தான் என்று அவரைப் பற்றி அவரது சமகாலத்தில் எழுதப்பட்ட திருமுறை கண்ட புராணம் பதிவு செய்கிறது.

(மன்னரின் ஆதரவு இல்லாமேலே, மக்களின் ஆதரவோடு இந்த பவுத்த, சமண இலக்கியங்கள் பாதுகாக்கப் பட்டிருக்கிறது என்பதை பிற்கால வரலாறு சான்று பகர்கின்றன). சீவக சிந்தாமணி எனும் சமண இலக்கியத்தின் ஓலைச் சுவடிகளைத் தேடி தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் கிளம்பிச் சென்று விருஷபதாச முதலியார் வீட்டு வாசலில் நின்ற போது, சைவ மடத்திற் பழகினவருக்கு ஜைன கிரந்தங்களில் அன்பு ஏற்படுவதற்கு நியாயமே இல்லையே  என்று சுவடிகளைத் தர மறுக்கிறார். அந்த வரலாறு வேறு. இந்துத்வாவின் தோற்ற வரலாறு வேறு. மொகலாயர்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஆட்சியின் போது, மக்களை பிளவுபடுத்தி ஆட்சி செய்ய செய்த அரசியல் சூழ்ச்சிகளில் ஒன்று. வேதங்களையும், பார்ப்பண ஆதிக்கத்தையும்  அரசு நிர்வாகப்பணிகளில் திணித்து, மக்களைப் பிளவுபடுத்தி, நிர்வாகம் செய்வது என்பது வேறு வரலாறு. பிரிட்டிஷ் ஆட்சி போனபின் பார்ப்பண ஆதிக்கம் கேள்விக் குறி ஆனதால் அந்த ஆதிக்கத்தை திரும்பப்பெற ஜெர்மானிய நாசிகளிடமிருந்து  காப்பி அடித்து உருவாக்கப்பட்டதே இந்துத்வா அரசியல்.

இந்திய வரலாற்றின் கரும்புள்ளிகளாகத் திகழ்பவை 1947 தேசப்பிரிவினை, 1948 காந்தி படுகொலை, 1984 இந்திராகாந்தி கொலையை ஒட்டி ஆர்.எஸ்.எஸ்ஸூம், காங்கிரசும் இணைந்து நடத்திய சீக்கியர் வேட்டை, 1992 பாபர் மசூதி இடிப்பும் அதைத் தொடர்ந்த பம்பாய் கலவரம், 2002 குஜராத்தில் அரசே திட்டமிட்டு நடத்திய முஸ்லீம் மக்களை அழித்தொழிக்கும் படுகொலை இயக்கம் – இந்த அத்தனை கரும்புள்ளிகளுக்கும் காரணமாக இருந்தது இந்துத்துவா தான்.

இந்த ஒவ்வொரு நிகழ்வும் படைப்பு மனங்களில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தின. எண்ணற்ற கவிதைகளும் கதைகளும் வந்துள்ளன. தமிழில் அசோகமித்திரன் எழுதிய 18-வது அட்சக் கோடு எனும் நாவல் ஹைதராபாத்தில் இந்து – முஸ்லீம் கலவரம் ஏற்பட்டதையும், மத வெறுப்பு சடங்கு பரவி நின்றதையும் வாசகர் மனம் பதறும் வண்ணம் பதிவு செய்துள்ளது. கல்கியின் அலைஓசை யின் இறுதியிலும் இது பதிவாகியுள்ளது. – லேசாக முஸ்லீம்களைக் குற்றம் காட்டும் தொனியுடன்.

விடுதலைக்குப் பிந்திய நவீன தமிழ் இலக்கியம் திராவிடச் சிந்தனைகளையும் பொதுவுடமைச் சிந்தனைகளையும் முதலாளித்துவம் தந்த நவீனச் தாராளவாத சிந்தனைகளையும் உள் வாங்கி நடைபோட்டது.

சமீப காலமாக நவீன தமிழ் இலக்கியச் சூழலில் காவிக் கொடிகள் அசையத் துவங்கியிருக்கும் அடையாளங்கள் தெரிகின்றன. மதவாதம் என்று ஒன்றும் இல்லை. அது இடதுசாரிகள் கிளப்பி விடும் போஃபியோ தான்  என்று குமுதம் பத்திரிகையில் எழுதிய ஜெய மோகனின் முன் முயற்சியால் தொடங்கப்பட்ட ஓர் இலக்கிய இதழ் சொல்புதிது.
அதன் முதல் இதழ் தலையங்கம் தமிழ்க் கருத்துலகில் இடதுசாரிப் பார்வைதான் கொடிகட்டிப் பறப்பதாகவும் ஆகவே அதை மறுத்து பிற சிந்தனைகளை முன்வைப்பதற்காகவே இவ்விதழ் தொடங்கப்படுவதாகவும்  கவலையுடன் பேசியது. அவ்விதழ் அத்வைதக் கருத்துக்களைப் பேசிய சைதன்ய நிதியை விரிவாக அறிமுகம் செய்தது. தொடர்ந்து ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம்  நாவலும் சில சிறுகதைகளும் இந்துத்துவ சார்புக் கருத்துக்களை பரப்புவதாக விமர்சனத்துக்குள்ளாகின.

காலச்சுவடு மாத இதழான பிறகு பெரியாரையும், பாப்லோ நெருடாவையும், அமரர் ஜீவாவையும் அவர்களது பாலியல் சார்ந்த வாழ்வைத் தூக்கலாக முன் வைத்துப் பேசிய கட்டுரைகளை வெளியிட்டது. எந்த ஆளுமையும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒளிவட்டத்தோடு இருக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால் தமிழ்ப் பொதுப்புத்தி என்னவாக இருக்கிறது? பாலியல் தொடர்பான ஒரு செய்தியால் அது எத்தனை பெரிய தியாகத்தையும் ஊதித்தள்ளி விடுமே. இந்தப் பொதுப்புத்தியை மாற்றுவதற்கான எந்தப் போராட்டத்தையும் நடத்தாமல் முற்போக்கான ஆளுமைகள் குறித்த இத்தகைய செய்திகளைப் பரப்புவது என்பது அறியாமல் செய்யும் பிழையல்ல என அனைவரும் விமர்சனம் செய்தனர். பொதுவாக தமிழ்ச் சூழலில் திராவிட இயக்கத்தார் தம் தோள்களில் சுமந்து கொண்டு வந்து இறக்கிய ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் ஒருவித பார்ப்பன மீட்சிக்கு ஆதரவான கருத்துக்களை சமீப ஆண்டுகளாகப் பரப்பி வருவதும், வட இந்தியாவைப் போன்ற கலவரங்களை மண்டைக்காடு, கோவை, திருப்பூர் என வரிசையாக நடத்தி வருவதும் நாம் அறிந்த செய்திகளாகும். இத்தகு இந்துத்வ கருத்து வளர்ச்சியின் பின்னணியில் தான் இரண்டு இலக்கிய ஆளுமைகள் பற்றி நாம் பார்க்க வேண்டி யுள்ளது. ஒருவர் ஜெயகாந்தன், இன்னொருவர் அசோகமித்திரன்.
“பிள்ளை கெடுத்தான் விளை” கதை எழுதி அபகீர்த்தியடைந்த, சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி வாழ்க்கையில் ஒரு மதச்சார்பற்ற மனிதராக வாழ்ந்து தனது படைப்புகளிலும் அதே நிலைபாட்டில் நின்றவர். இக்கதையில் அவர் சறுக்கி விழுந்ததும் சூழலின் பாதிப்புதான் என்றே பார்க்க வேண்டும்.

அசோகமித்திரனின் படைப்புகளில் நாம் ஒரு கீழ் மத்திய தர வாழ்க்கை யதார்த்தமாகச் சொல்லப்படுவதைப் பார்க்கிறோம். இந்துத்வக் கருத்துகளுக்கு அவரது படைப்புகளில் இடமில்லை. ஆனால் அவுட் லுக்  இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் பிராமணர்கள் யூதர்களைப் போல நடத்தப் படுவதாக  ஒரு பிராமணராக நின்று தன் வேதனைகளை வெளிப் படுத்தியிருந்தார். அவரது படைப்புகள் வழியாக அவரைத் தரிசனம் செய்து  மனதில் ஏற்றிக் கொண்ட வாசகர்கள் அவர் இன்னும் பிராமணராகவே பின் தங்கி நின்று போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். அவர் இப்படியெல்லாம் பேசும் தைரியம் பெற்றதற்கு காவிமயமாகி வரும் இலக்கியச் சூழலே காரணம் எனலாம்.

ஒருவர் பிறப்பால் பார்ப்பனர் என்பதற்காக மட்டும் அவர் கூறும் கருத்துக்களை எப்போதும் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதும், அவசர அவசரமாக அவருக்கு முத்திரை குத்துவதும் ஆரோக்கிய மான போக்கு அல்ல. ஆனால் இது போல இத்தனை பெரிய படைப்பாளி கூட இன்னும் விட்டு விடுதலையாகாமல், தலித் மக்கள் வாயில் மலம் திணிக்கப்படும் ஒரு காலத்தில் நின்று கொண்டு பார்ப்பனர்களின் இழந்து போன சொர்க்கத்துக்காக ஏங்கி நிற்பது வேடிக்கையாகவும் விநோதமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

ஜெயகாந்தன் சங்கர மடத்தின் ஊதுகுழலாக மாறிப்போன சோகம் இன்னொரு முக்கிய நிகழ்வாகும். அயோத்திப் பிரச்சனையில் முஸ்லீம்களுக்கு எதிராகப் புறப்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி சாமியார் மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு ஆதரவாக ஊர் ஊராக பொது மாநாடுகள் நடத்திய ஜெயேந்திர சாமியார் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். பிரச்சார பீரங்கியாக பெருவாரியான தமிழ் மக்களால் புரிந்து கொள்ளப்பட்டவர். அவரது லீலா வினோதங்கள் பற்றி ஏராளமான நிகழ்வுகளை தமிழ் மக்கள் அறிவார்கள். ஆனால் அது எதுவுமே மகத்தான படைப்பாளி ஜெயகாந்தனுக்குத் தெரியாமல் போனது.

இந்த லோகத்திலே எது நின்னாலும் அழிந்தாலும் இந்தச் சிவலிங்கமும் இதுக்கு நீரில் அபிஷேகமும் புஷ்பங்களால் அர்ச்சனையும் நடக்கிறது நின்று போயிடாது. எத்தனை யுகங்கள் புரண்டாலும் எங்க சிவலிங்கம் புரண்டுடாது  என்று ஜய ஜய சங்கர  நாவலில் பேசியவர் ஜெயகாந்தன். இப்போது ஏது காரணத்தாலோ  ஆட்சியாளரின் கோபப்பார்வைக்கு ஆளாகி சங்கரராமன் கொலை வழக்கில் கைதானார் ஜெயேந்திரர். தமிழகமே பாராட்டி மகிழ்ந்த அந்த கைது நடவடிக்கையால் வேதனைக் குள்ளான ஜெயகாந்தன் ஜெயேந்திரர் கைதை கண்டித்தும் ஏதேதோ பல தத்துவ வியாக்கியானங்கள் சொல்லி அதை விளக்கவும் ஒரு நாவல் ( ! ) எழுதினார். அதுதான் ஹர ஹர சங்கர.

வெறும் இந்திய ரஞ்சகமான சமாசாரங்களில்தான் ஜனங்களுக்கு அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இவ்விதமே எழுதுவது சரியல்ல. ஜனங்களுக்கு ஆத்மாபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு இருதயபூர்வமாக எழுத்தாளர்கள், பத்திரிக்கை யாளர்கள் முனைந்தால் தானாகவே ஜனங்களுக்கு அதில் ருசி பிறக்கும் என்றார் சந்திரசேகர சரஸ்வதி சாமிகள்.  ஆச்சார்யா ஸ்வாமிகள் ஆக்ஞைக்கு ஏற்ப இயல்பாகவே எழுதுகிறவன் என்கிற முறையில் இந்த மேலான பாக்கியத்தை முழுமையாக அடைந்துள்ளவன் நான் என்று அந்நாவலின் முன்னுரையில் ஜெயகாந்தன் எழுதி வைக்கிறார். நல்ல வேளையாக ஜெயகாந்தனைப் பின்பற்றி செல்ல எந்த ஒரு படைப்பாளியும் தமிழ் நாட்டில் இன்று தயாராக இல்லை.

ஜெயகாந்தனாவது வெளிப்படையாக தன்னை அடையாளங்  காட்டிக் கொண்டு அடி வாங்கிக் கொண்டு கிடக்கிறார். ஆனால் இன்னும் சில படைப்பாளிகள், சில பத்திரிக்கைகள் எழுதுகிற எழுத்தில் பிடி கொடுக்காமல் ஆனால் உள்ளரங்கமாக இந்துத்வ நுண் அரசியலை நடத்திக் கொண்டிருப்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. கவனமுடன் நாம் அவர்களது வழிகளை ஆராய வேண்டியுள்ளது.

அவசரப்பட்டு எந்தப் படைப்பாளியையும் முத்திரை குத்தி இந்துத்வ அரசியலுக்கு முன் நாமே தள்ளி விடவும் கூடாது. நமது விமர்சனங்கள் ஆதாரபூர்வமாகவும் அப்படைப்பாளிகளை மீட்டெடுக்கும் தொனியிலும், நமது வாதங்களை அமைக்க வேண்டியிருக்கிறது. மக்கள் நலனை முதன்மைப்படுத்தும் முற்போக்கு பார்வை கொண்ட வட்டத்தை விரிவாக்க இதுவே வழி.

இன்றைய நவீன தமிழ் இலக்கிய சூழலின் ஒரு ஓரத்தில் காவி படர்ந்து வருகிறது என்கிற எச்சரிக்கை மட்டும் இப்போதைக்குத் தேவை.%d bloggers like this: