கடந்த செப்டம்பர் மாதம் 24 ம் தேதி பன்னாட்டு அணுசக்தி அமைப்பின் (IAEA) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இரானுக்கு எதிராக அமெரிக்க – ஐரோப்பிய வல்லரசுகள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு அளித்தது நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இரான் நாட்டிற்கெதிரான தீர்மானத்தை மறுத்து, எதிர்த்து வாக்கு அளித்து சின்னஞ்சிறு தென் அமெரிக்க நாடான வெனிசுலா, சீனாவும், ரஷ்யாவும் தீர்மானத்தை ஆதரிக்க மறுத்து விட்டன. 35 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பன்னாட்டு அணுசக்தி அமைப்பின் நிவாகக் குழுவில் சில அமெரிக்க அடிவருடி நாடுகளையும் மேலை நாட்டு வல்லரசுகளையும் தவிர வேறுசில வளரும் நாடுகளும் உள்ளன. இவற்றில், நம்நாட்டை விடச் சிறியவையும், வலுக்குறைந்தவையு மான பத்து நாடுகள் – அல்ஜீரியா, பிரேசில், மெக்ஸிகோ, நைஜீரியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, துனிசியா, வியத்நாம் மற்றும் ஏமன் – ஏகாதிபத்திய வல்லரசுகள் கொண்டு வந்த, இரானுக்கெதிரான தீர்மானத்தை ஆதரிக்க மறுத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அணிசேரா இயக்கத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றாக, அதன் ஸ்தாபக நாடுகளில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ள இந்தியா, இரான் எதிர்ப்புத் தீர்மானத்தில் ஏகாதிபத்திய நாடுகள் பக்கமாக நின்று வாக்களித்தது, நமது சர்வதேச அந்தஸ்திற்கு ஊறு விளைவித்துள்ளது மட்டுமின்றி, இதுவரை இந்திய நாட்டில் பொதுவான அங்கீகாரம் பெற்றிருந்த அணிசேரா அயல் நாட்டுக் கொள்கைக்கு முரணானதும் ஆகும்.
சமனற்ற உலக அணு ஆயுத/ அணுசக்திக்களம் :
சர்வதேச அரங்கத்தில் மிகவும் அசமத்துவமான தன்மை கொண்டுள்ள துறைகளில் அணுசக்தி / அணுஆயுதத்துறை முக்கியமான ஒன்றாகும். அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுத அரசுகள் ஐந்து: அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, மக்கள் சீனம். இவை தவிர அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் இஸ்ரேல், பாகிஸ்தான் மற்றும் இந்தியா. இவை அணுஆயுத நாடுகளாக இன்னும் அங்கீகாரம் பெறாதவை.
வலுவான சோசலிச முகாம் இருந்த, 1950 – 1990 கால கட்டத்தில், சோசலிச நாடுகளும், அணிசேரா நாடுகளும் இணைந்து உலகம் தழுவிய அணுஆயுத அகற்றலுக்கு யூனிவர்ஸல் நியூக்ளியர் டிசார்மென்ட்டிற்கு – தொடர்ந்து குரல் எழுப்பி வந்தன. ஆனால், உலகில் அணு குண்டுகளை (1945ல், ஹிரோசிமா, நாகசாகி ஆகிய ஜப்பானிய நகரங்களில்) வீசி லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஒரே நாடான அமெரிக்க ஏகாதிபத்தியம், அணுஆயுதங்க ளைக் குறைப்பததிலோ கைவிடுவதிலோ ஈடுபாடு காட்டவில்லை என்பது மட்டுமல்ல, தொடர்ந்து புதிய புதிய அணு ஆயுதங்களைப் பரிசோதித்து, உற்பத்தி செய்து வந்துள்ளது. இதன் மூலம் முன்னாள் சோவியத் யூனியன் மீது ஆயுதப் போட்டியைத் ணித்து சோசலிசத்தை பலவீனப்படுத்தவும் அதைப்பயன்படுத்தியது. அதே சமயம், அணுஆயுதப் பரவலை அது விரும்பவில்லை.
1960களின் இறுதியில் அணுஆயுதங்கள் தொடர்பாக ஒரு பன்னாட்டு ஒப்பந்தியத்தை சில நாடுகள் செய்து கொண்டன. இந்த ஒப்பந்தம், அணு ஆயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தம் அல்லது சுருக்கமாக என்.பி.டி (NPT – Nuclear Non-Proliferation Treats) என்றழைக்கப்படுகிறது. இதில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் முற்றிலும் சமன் அற்ற தன்மை கொண்டது. இதில் கையெழுத்திட்டுள்ள, அணு ஆயதம் இல்லாத நாடுகள் அமைதியான வகையில் அணுசக்தியைப் பயன்படுத்தலாம். அதற்குத் தேவையான யூரோனியம் உள்ளிட்ட எரிபொருள் மற்றும் தொழில் நுட்பம் பெறவும் அவர்களுக்கு உரிமை உண்டு. அதே சமயம், இந்நாடுகள் தங்களது அணுசக்தி நிலையங்களை பன்னாட்டு அணுசக்தி நிலையங்களை பன்னாட்டு அணுசக்தி அமைப்பின் சோதனைக்கும் உட்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் நோக்கம், இந்த நாடுகள் தங்களது அணுசக்தி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் யூரோனியம் எரிபொருளை மேலும் செழுமைப்படுத்தி அணுகுண்டு உற்பத்திக்குப் பயன்படுத்திவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதாகும்.
என்.பி.டி ஒப்பந்தத்திற்கு இருமைய குறிக்கோள்கள் இருப்பதாக ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஒன்று, அணு ஆயுதப் பரவல் துடப்பு, மற்றொன்று, அணு ஆயுதக் குறைப்பும், இறுதியில் முழுமையான அணு ஆயுத அகற்றலும் தான். ஆனால், நடைமுறையில், என்.பி.டி யின் முழுக்கவனமும் அணு ஆயுதமல்லாத நாடுகள் அவற்றைப் பெற்று விடாமலும், அதற்கான தொழில் நுட்பத்தைப் பெற்றுவிடாமலும் தடுப்பதிலேயே இருந்தது. அதாவது, ஏற்கனவே அணு ஆயுதங்களை வைத்திருந்த நாடுகளின் அணு ஆயுத ஏகபோகத்தைப் பாதுகாப்பதற்கு மட்டுமே ஏகாதிபத்தியம் என்.பி.டி யைப் பயன்படுத்தியது, பயன்படுத்தி வருகிறது. (இதற்கு விதிவிலக்காக தனது செல்ப்பிள்ளையான இஸ்ரேலுக்கு மட்டும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது ஏகாதிபத்தியம்).
இந்த என்.பிடி. ஒப்பந்தம் சமனற்றது என்பதே இதுவரை இந்தியாவின் அதிகார பூர்வநிலைப்பாடு. நாம் என்.பி.டி யில் கையெழுத்திடவில்லை. 1974ல் இந்தியா முதன்முதலில் ஒரு அணுகுண்டு சோதனை நிகழ்த்தியதிருந்து, மேலைநாட்டு வல்லரசுகள் நமது நாட்டு அணுசக்தி உற்பத்திக்கு உதவி செய்ய மறுத்தது மட்டுல்லாமல், ஏற்கனவே நம்முடன் செய்துகொண்டிருந்த அணுசக்தி உற்பத்திக்கான யூரேனியம் அளிப்பு ஒப்பந்தத்தையும் ரத்து செய்துவிட்டார்கள். இருப்பினும், சோவியத் ஒன்றியத்தின் உதவியுடனும், தற்சார்பு அடிப்படையிலான முயற்சிகளின் விளைவாகவும் நாம் இன்று ஏறத்தாழ 4000 மெகாவாட் அணுமின் உற்பத்தித் திறன் பெற்றுள்ளோம். அணுசக்தி தொழில் நுட்பத்தில் தற்காப்பு அடிப்படையில் ஓரளவிற்கு முன்னேறியுள்ளோம்.
என்.பி.டியில் நாம் இடம் பெறாததால் ஏகாதிபத்திய வல்லரசுகள் நமக்கு நவீன தொழில்நுட்பங்கள் பலவற்றையும், அவை இரட்டைப் பயன்பாடு கொண்டவை, அதாவது அவை ஆற்றல் உற்பத்திக்கு மட்டுமின்றி ஆயுத உற்பத்திக்கும் பயன்படக் கூடியவை என்று கூறி, தர மறுத்து வந்துள்ளனர். பிறநாடுகளையும் நமக்குத் தரவிடாமல் தடுத்து வந்துள்ளனர். 1998ல் போக்ரான் குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட பின்னர் இத்தகைய தடைகள் மேலும் இறுக்கமாகின. இன்றைய இந்திய அரசு, இந்த இறுக்கத்தை உடைக்க ஏகாதிபத்திய நிர்பந்தங்களுக்குப் பணிந்து சமரசப்போக்கை கையாளுவது என்ற அபாயகரமான பாதையை தேர்ந்தெடுத்தது. இரான் பிரச்சனையில் அரசு அமெரிக்கா சார்பாக நடந்து கொண்டது.
இரான் அணுசக்தித்துறை பிரச்சனை
தற்பொழுது அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தானையும், இராக்கையும் கைப்பற்றியதோடு, இரான் மீது திரும்பியுள்ளது. எண்ணை வளமே இதற்கு காரணம் என்பது வெளிப்படை. கடந்த செப்டம்பர் 17 அன்று ஐக்கிய நாடுகளின் பொது அவையில் பேசிய இரான் ஜானதிபதி மஹ்மூத் அஹ்மதினே ஜபக், உள்நாட்டில் செழுமைப்படுத்தப்பட்ட யுரேனியம் எரிபொருளைப் பயன்படுத்தி அணுசக்தி உற்பத்தி செய்வது இரான் நாட்டின் இறையாண்மை உரிமையாகும் என்பதைத் தெளிவு படுத்தினார். இது சரியான நிலைபாடு. அணுஆயுதப்பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் 1974ல் இரான் கையொப்பமிட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, அணுசக்தி உற்பத்திக்கான அனைத்துப்படிகளையும் செயல்படுத்தத் தேவையான – உரேனியம் செழுமைப்படுத்துவது உள்ளிட்ட – நடவடிக்கைகளை, ஐ.ஏ.இ.ஏ பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குட்பட்டு, மேற்கொள்ள இரானுக்கு முழு உரிமை உண்டு. இரானின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துறை வளர்ச்சிக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம், நாடு கடந்து செயல்பட முயலும் அமெரிக்க நாடாளு மன்றம் நிறைவேற்றியுள்ள பிப்பா – இரான் எதிர் நடவடிக்கை சட்டம் மூலம் , ஏராளமான முட்டுக்கட்டைகளைப் போட்டுள்ளது. இதனால், அமெரிக்கா உள்ள மேலை நாடுகளின் தயவில் செழுமைப்படுத்தப்பட்ட யூரேனியம் பெறுவது நம்பகமற்றது என்று நியாயமாகவே இரான் கருதுகிறது. ஆகவே, தனது அணுசக்தி உற்பத்தியை உள்நாட்டு மூலப்பொருள் மூலம் வளர்க்க முற்படுகிறது. தனக்கு அணுசக்தி உற்பத்தி உலைகளை உருவாக்கிட முழுஉரிமை இருந்தும்கூட, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றிற்கு நல்லெண்ணச் சலுகையாக தனது அணுசக்தி உற்ப்பத்தியில் உள் மற்றும் வெளிநாட்டு தனியார் மற்றும் பொதுத்துறையினர் பங்கேற்பார்கள் என அறிவித்தது. ஆயினும்கூட, ஐரோப்பிய ஒன்றிய வல்லரசுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் இரான் உரோனியம் எரிபொருளை செழுமைப்படுத்த முயற்சிக்கக் கூடாது என்று கோருகின்றனர். அப்படிப்பட்ட முயற்சியில் இரான் வெற்றி பெற்றால், அதன் மூலம் அணுசக்தி உற்பத்திக்கென குறைவாகச் செழுமைப்படுத்தப்பட்ட யூரோனியம் மட்டுமின்றி, அணு ஆயுத உற்பத்திகுத் தேவையான கூடுதலாக செழுமைப்படுத்தப்பட்ட யூரேனியம் எரிபொருளை இரான் உற்பத்தி செய்ய முடியும் என்றும், இதை அனுமதிக்கக் கூடாது என்றும் ஏகாதிபத்திய நாடுகள் வாதிடுகின்றன. இந்த நோக்கத்துடன், செப்டம்பர் 24 ல் நடைபெற்ற ஐ.ஏ.இ.ஏ ஆட்சிக்குழுக் கூட்டத்தில் இரான் நாட்டின் ராணுவ சார்பற்ற அணுசக்தி உற்பத்தித் துறை உலக அமைதிக்கும், பன்னாட்டுப் பாதுகாப்பும் ஊறு விளைவிக்கலாம் என்றும், எனவே இப்பிரச்சனை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக்குழுவில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் கூறும் தீர்மானம் ஒன்றை அவர்கள் கொண்டு வந்தனர். இத் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு உடனடி முன் காரணமாக இருந்தது, ஏற்கனவே ஒரு நல்லெண்ணச் செய்கையாக யுரேனிய செழுமைப்பாட்டை நிறுத்தி வைத்திருந்த இரான், அதை மீண்டும் துவக்கியது. இந்தத் தீர்மானம் செல்லாது என்பதே உண்மை. காரணம், என்.பி.டி ஒப்பந்தத்தின் கீழ் யுரேனியத்தை செழுமைப்படுத்த இரானுக்கு உரிமை உண்டு. மேலும், கடந்த செப்டம்பர் 2 ம் தேதி ஐ.ஏ.இ.ஏ பொது இயக்குநர் எல்.பரேடி, இரான் நாட்டில் எந்த அணுசக்தி பொருளும் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படவில்லை என்று சான்றிதழ் வழங்கியுள்ளார்.
இந்திய அரசின் தவறான வாக்களிப்பு
செப்டம்பர் 24,2005 அன்று ஐ.ஏ.இ.ஏ ஆட்சிக்குழுவில் ஏகாதிபத்திய நாடுகள் கொண்டு வந்த தீர்மானம் என்.பி.டி யின் கீழான தனது பொறுப்புக்களை இரான் மீறுவதாகவும், இரானின் அணுசக்தி திட்டம் அமைதி சார் நோக்கங்களுக்கு மட்டுமே என்று கூற இயலாது என்றும் கூறுகிறது. உடனடியாக இப்பிரச்சனை ஐ.நா. பாதுகாப்புக்குழுவிற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று தீர்மானம் கூற வில்லை என்றாலும், நவம்பர் ஐ.ஏ.இ.ஏ கூட்டத்தில் இதுபற்றி இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. இரான் நியாயமற்ற முறையில் இத்தீர்மானத்தால் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இத்தீர்மானம் என்.பி.டி ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்டு, இரானின் இறை யாண்மையைப் பாதிக்கும் கோரிக்கைகளைக் கொண்டுள்ளது. ஒன்று, பிற என்.பி.டி ஒப்பந்த நாடுகளிலிருந்து இராங்ன வேறுபட்டது எனவும், அது கூடுதல் நிபந்தனைகளையும் கண்காணிப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் கூறுகிறது. இரண்டாவதாக, யூரேனியத்தை செழுமைப்படுத்தும் முயற்சியை இரான் கைவிட வேண்டும் என்று தீர்மானம் கோருகிறது. இது இரானின் என்.பி.டி ஒப்பந்தப்படியான உரிமைகளைப் பறிப்பதாகும். மூன்றாவதாக, ஏற்கனவே எந்த கூட்டத்திலும் வைக்கப்படாத ஒரு புதிய கோரிக்கையை வைக்கிறது. அதாவது, கன நீர் பயன்படுத்தும் ஆராய்ச்சி அணு உலையை அமைக்கும் முயற்சியை இரான் கைவிட வேண்டும் என்ற நியாயமற்ற, ஐ.ஏ.இ.ஏ ஆட்சிக்குழுவின் ஆகஸ்ட்11,2005 கூட்டத்தில் கூட வைக்கப்படாத புதிய கோரிக்கை தீர்மானத்தில் இடம் பெற்றுள்ளது.
வேண்டுமென்றே, இரானை ஒரு சிக்கலில் மாட்டிவிட்டு, இராக்கில் செய்தது போல ஒரு இன்ஸ்பெக்டர் ராஜ்யத்தை ஐ.ஏ.இ.ஏ கண்காணிப்பு என்ற அடுத்த கட்டமாக, இரானில் அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்ற பீதியையும், புரளியையும் கிளப்பி விட்டு, இரான் மீது அரசியல் மற்றும் ராணுவ தாக்குதல் நடத்துவதே ஏகாதிபத்தியத்தின் நோக்கம். இந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்தது துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல. நமக்கு, நமது நாட்டு நலனுக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கையும் ஆகும்.
அரசு நடவடிக்கையின் தீய விளைவுகள்
இந்தியா ஆதரித்த ஐ.ஏ.இ.ஏ தீர்மானம் ஒரு நாட்டின் இறையாண் மையைக் கேள்விக் குறியாக்குவது என்பதும் தெளிவு. ஆனால், பிரச்சனை இதுமட்டுமல்ல. இத்தீர்மானம், என்.பி.டி ஒப்பந்தத்தை முறைப்படி திருத்தாமலேயே, ஒரு முன்னுதாரணம் மூலமாக ஏகாதி பத்தியத்திற்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வகை செய்கிறது. இன்று இரானைக் குறி வைத்தது போல், நாளை பிற வளரும் நாடுகளின் மீதும் இது ஏவப்படும்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து அமெரிக்க நிர்பந்தங்களை எதிர்கொண்டு, இரானுடன் இந்தியா தனது நட்புறவை வலுப்படுத்தி வந்துள்ளது. இரானும், பல பன்னாட்டு அரங்குகளில் – குறிப்பாக, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடுகளில் – இந்தியாவிற்குச் சாதகமான நிலைபாடுகளை எடுத்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் தலையிடும் முயற்சிகளை எதிர்த்துள்ளது. இரான் நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறைகளில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்பதற்கு நல்வாய்ப்புக்களை அளித்துள்ளது. இதையெல்லாம் புறக்கணித்து, பிற வளரும் அணிசேரா நாடுகளிடமிருந்தும் விலகி, அமெரிக்க ஆதரவு நிலையை இந்திய அரசு எடுத்தது. இரான் – இந்தியா உறவுக்குப் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. வளரும் மற்றும் அணிசேரா நாடுகள் மத்தியில் இந்தியா மீது பெரும் அவநம்பிக்கைகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
பல விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளது போல், இந்தியாவின் ஆதரவு இல்லாமலேயே அமெரிக்கா – ஐரோப்பிய தீர்மானத்திற்குப் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்திருக்கும். ஆனால், ஈக்வெட்டார், பெரு, கானா, சிங்கப்பூர் போன்ற ஏகாதிபத்திய அடிவருடி வளரும் நாடுகளின் ஆதரவு மட்டும் கிடைத்திருந்தால், இந்தப் பிரச்சனை வளர்ந்த ஏகாதிபத்திய நாடுகளுககும், ஏழை வளரும் நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனையாகப் பார்க்கப்பட்டிருக்கும். ஆகவேதான், இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு அமெரிக்கா பெரும் முயற்சி எடுத்துக் கொண்டது. இரானுக்கெதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது அமெரிக்காவிற்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது. அமெரிக்க அரசின் அயல்துறை கீழ்ச் செயலாளர் (அண்டர் செக்ரட்டரி) நிகல்ஸ் பர்ன் இந்தியாவின் ஆதரவை, இப்பிரச்சனையை வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையிலான ஒன்றாகச் சித்தரிக்க இரான் மேற்கொண்ட முயற்சிக்குப் பலத்த அடியாகும் என்று வரவேற்றுள்ளார்.
இந்தியாவின் வாக்களிப்பு ஒரு முக்கிய கேள்வியை எழுப்புகிறது. ஜூலை மாதம் அமெரிக்க ஜனாதிபதி புஷ் – இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் அணுசக்தித்துறையில் ஒத்துழைக்க அமெரிக்க அரசு முன் வந்த பொழுது, இரான் பிரச்சனையில் இந்தியா இரானுக்கு ஆதரவு நிலை எடுக்கும் என்றுதான் கடந்த கால அனுபவத்தில் யூகித்திருக்க முடியும். ஆகவே, அப்படித் தெரிந்துதான், அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தைப் போட்டிருக்க வேண்டும் அல்லது அந்த புஷ் – சிங் ஒப்பந்தம் போடுவதற்கே, இந்தியா இரானுக்கு எதிரான நிலை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை போடப்பட்டு, அதை மன்மோகன் சிங் ஏற்றிருக்க வேண்டும். இந்த இரண்டு ஊகங்களில், முதல் ஊகம் சரி என்றால், ஏற்கனவே ஐ.ஏ.இ.ஏ யில் உள்ள முறைப்படி, அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து உருவாக்கியே முடிவு எடுக்க வேண்டும் என்ற நமது முந்தைய நிலைப்பாட்டையும், ஐ.ஏ.இ.ஏ யின் பொது நடைமுறையையும் இந்தியா வலியுறுத்தியிருக்க வேண்டும். அது நமக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்காது. இரண்டாவது யூகம் சரி என்றால், அமெரிக்காவின் இந்திய அரசு கையொப்ப மிட்டுள்ள அணுசக்தி ஓப்பந்தம் நாம் பெரும் விலை கொடுத்து வாங்கியது என்பது தெளிவாகிறது. இந்தியாவின் வருங்கால வலிமையைப் பற்றி அமெரிக்க அரசு ஒரு அங்கீகாரமான மதிப்பீடு செய்துள்ள நிலையில் மிகவும் பலவீனமான நிலைபாட்டை இரான் பிரச்சனையில் யூ.பி.ஏ அரசு எடுத்துள்ளது. தனது ஏகாதிபத்திய உலக ஆதிக்கத்திற்கு இந்திய -சீன நட்புறவு அபாயகரமானது என்ற துரப்பார்வையோடு அமெரிக்கா இந்தியாவை தன்பக்கம் வளைத்துப்போடும் தந்திரத்திற்கு இன்றைய ஆட்சியாளர்கள் இரையாகி விட்டனர்.
முன் முரணற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புக்குச் சொந்தக் காரர்களாகிய நமக்கும், பிற இடது சாரி சக்திகளுக்கும் இன்று எழும் முக்கிய சவால், இந்திய மக்கள் மத்தியில் நமது சரியான அயல்நாட்டுக் கொள்கைக்கு ஆதரவு திரட்டுவதும், யுபி.ஏ அரசை தனது நிலைபாட்டை மறு பரிசீலனை செய்து மாற்றிக்கொள்ளச் செய்வதும் ஆகும்.
இடதுசாரிகளின் நிலை
இந்தியாவின் அயல்நாடுக் கொள்கை ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை கொண்டதாகவும், அணிசேரா இயக்கத்தை வலுப்படுத்துவதாகவும், அமைதி சார்ந்ததாகவும், பல துருவ உலகை உருவாக்க உதவுவதாகவும் இருக்க வேண்டும். அதுவே நாட்டு நலனையும், மக்கள் நலனையும் காக்கும். இதுதான் இந்தியாவின் அயல்நாட்டுக்கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய இடதுசாரி கண்ணோட்டம்.
இடதுசாரி கட்சிகளின் வலியுறுத்தலால், யூ.பி.ஏ அரசின் தேசிய குறைந்த பட்ச பொதுத்திட்த்தில் கீழ்க்கண்ட வரிகள் இடம் பெற்றன.
உலகு தழுவிய அணு ஆயுத அகற்றலுக்கும் அணுஆயுதங்கள் அற்ற உலகை உருவாக்குவதற்குமான முயற்சிகளில் (இந்தியா) தலைமைப் பாத்திரம் வகிக்கும். மேலும், அந்த திட்டத்தில் இந்தியாவின் அயல் நாட்டுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி காலத்தில் செய்யப்பட்ட தவறுகள் களயப்படும். குறிப்பாக, இந்தியாவை அமெரிக்காவின் தொலைநோக்குப் பங்காளி (Strategic partner) ஆக்க எடுத்த முயற்சிகள் கைவிடப்படும் என்ற புரிதல் இருந்தது. அயல்துறை அமைச்சர் நட்வர்சிங் உலக அணுஆயுத நீக்கலுக்குக்கான ராஜீங் காந்தியின் 1988 திட்டத்தை புதுப்பித்து அமல் செய்வதாகக் கூடக் கூறினார். ஆனால், படிப்படியாக யூ.பி.ஏ அரசின் அயல்நாட்டுக் கொள்கை என்.டி.ஏ யின் நாசப் பாதையிலே செல்வதை நாம் பார்க்கிறோம்
இரான் பிரச்சனையில், ஜூலை 18 சிங் – புஷ் ஒப்பந்தத்திற்கு முன்பு வரை அமெரிக்க நிர்பந்தங்களை சமாளித்து, இரான் ஆதரவு நிலை எடுத்து வந்த இந்திய அரசு படிப்படியாக அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்த விவரங்களை நவம்பர் 18, 2005 தேதியிட்ட ஆங்கில இருவார இதழ் ஃபிரண்ட்லைனில் ஏ.ஜி.நுராணி தொகுத்துக் கொடுத்துள்ளார். ஜூலை 18, ஒப்பந்தத்தின் படி, இந்தியாவிற்கு அணு சக்தி தொழில் நுட்பம் தருவதற்கு, அந்த ஒப்பந்தத்தில் வெளிப்படையாகச் சொல்லப்படாத நிபந்தனையாக இரான் எதிர்ப்பு நிலையை இந்தியா ஐ.ஏ.இ.ஏ யில் எடுக்க வேண்டும் என்பது உள்ளது. இது செப்டம்பர் மாதம் இந்திய – அமெரிக்க ஜூலை ஒப்பந்தம் பற்றிய அமெரிக்க பாராளுமன்ற விசாரணையில் தெளிவாக வெளிவந்தது. செப்டம்பர் 24 ல் இந்தியா எடுத்த மோசமான நிலைபாட்டை தொடர்ந்து நியாயப்படுத்த யூ.பி.ஏ அரசு அமைச்சர் களைப் பயன்படுத்ததாமல் அயல்துறைச் செயலர் ஷியாமா சரணை இறக்கி விட்டுள்ளது. அவர் முன்பின் முரணாக பல கருத்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளார். அக்டோபர் 24 அவர் தில்லியில் ஆற்றிய உரையைப் படித்தால் எந்த அளவுக்கு இந்திய அரசும், ஆளும் வர்க்கங்களும உலகளவில் அணு ஆயுத அகற்றல் என்ற இலக்கைக் கைவிட்டு, அணு ஆயுத வல்லரசுகள் பாணியில் அணு ஆயுதப் பரவலைத் தடை செய்வது என்பது பற்றி மட்டுமே முன்மொழிந்தார்கள் என்பது வெளிப்படும்.
ஆக, இத்தகைய சூழலில், இடதுசாரி அமைப்புகள் இரான் பிரச்சனையில் முன்வைத்துள்ள சரியான நிலைபாட்டை மக்கள் மத்தியில் கொண்ட செல்வது, யூ.பி.ஏ அரசின் தடுமாற்றத்தையும் சரணாகதிப்பாதையையும் எதிர் கொண்டு வரும் நவம்பர் ஐ.ஏ.இ.ஏ கூட்டத்தில் இந்திய அரசை சரியான நிலை எடுக்க வைக்க உதவும்.
இடதுசாரி நிலைபாடு கீழ்வரும் அம்சங்களைக் கொண்டது.
- இரான் – இந்திய நட்புறவு நமக்கு முக்கியமானது. குறிப்பாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற வகையிலும், இந்தியாவின் எதிர் கால எரிபொருள் தேவைகளை நிறைவு செய்வது என்ற நோக்கிலும், இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தான், மத்திய ஆசியா, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சென்றடைய போக்குவரத்து, தகவல் தொடர்பு இணைப்புக்களை வலுப்படுத்தவும், பயங்கர மற்றும் மத தீவிர வாதங்களை எதிர்க்கவும் மிகவும் அவசியம்.
- இரானுக்கெதிரான அமெரிக்க வல்லரசின் சூழ்ச்சிகளுககு இந்தியா துணை போகக் கூடாது. இந்திய – அமெரிக்க அணுத்துறை ஒப்பந்த்திற்கும், மண்டல மற்றும் பன்னாட்டுப்பிரச்சனைகளில் நாம் எடுக்கும் நிலைபாடுகளுக்கும் முடிச்சுப்போடுவதை ஏற்கக் கூடாது, ஏற்க முடியாது. இத்தகைய இணைப்பை நாம் வலுவாகவும் சமரசமின்றியும் நிராகரிக்க வேண்டும்.
- நம்பர் 24 ஐ.ஏ.இ.ஏ கூட்டத்தில் இரான் பிரச்சனை ஓட்டுக்கு வந்தால், இந்தியா கீழ்க்கண்ட கொள்கைகள் சார் நிலைபாட்டை எடுக்க வேண்டும்:
- பிரச்சனை பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
- அமைதிசார் அணு திட்டம் பின்பற்ற இரான் நாட்டிற்கு முழு உரிமை உண்டு.
- இரான், தான் ஏற்றுக்கொண்டுள்ள ஒப்பந்தப் பொறுப்புக்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
- இந்தப் பிரச்சனையை ஐ.ஏ.இ.ஏ யின் வரம்பிற்குட்பட்டே தீர்க்க முடியும்.
- இந்தியா, தனது நிலைபாட்டை ரஷ்யா, சீனா மற்றும் அணிசேரா நாடுகளுடன் நெருக்கமாக விவாதித்து இறுதி செய்ய வேண்டும்.
இன்று சுமூகத் தீர்வு காண ராஜாங்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. ஐ.ஏ.இ.ஏ குழு ஒன்று இரானுக்குச் சென்றுள்ளது. இந்தியா ஒரு பொறுப்பான அணிசேரா நாடு என்ற அடிப்படையில் தனது அந்தஸ்தையும், செல்வக்கையும் பயன்படுத்தி, பிரச்சனையை தீர்த்துவைக்க ஆக்கப்பூர்வமான பங்கு ஆற்ற வேண்டும். பாரம்பர்யமாக, ஐ.ஏ.இ.ஏ முடிவுகள் ஒருமித்த கருத்து அடிப்படையில் எடுக்கப்படுபவை. அதற்கே இந்தியா முயற்சிக்க வேண்டும். வல்லரசுகளின்ள நிர்பந்தங்களுக்கு பணியக் கூடாது. ஒருமித்த கருத்து ஏற்படாவிடின், இந்தியா வாக்கெடுப்பில் தீர்மானத்தை ஆதரிக்கவும் வேண்டாம். எதிர்த்தும் வாக்களிக்க வேண்டாம். வாக்கு மறுப்பு (Abstain) நிலை எடுக்க வேண்டும்.
இரான் பிரச்சனை ஒரு குறிப்பிட்ட பிரச்சனை. வரும் காலங்களில் ஆளும் வர்க்கங்களின் LPG கொள்கைகள், அவர்களை மேலும், மேலும் அரசியல் ரீதியாகவும், ஏகாதிபத்திய நிர்பந்தங்களுக்கு இரையாகும் பாதையில் கொண்டு செல்லும். ஆகவே, இரான் பிரச்சனையில் மட்டுமின்றி, பொதுவாகவே சரியான அயல்நாட்டுக் கொள்கைக்காவும். அதையும் தாண்டி ஏகாதிபத்திய ஆதரவு / சரணாகதி போக்குகளுக்கு அடிப்படையாக உள்ள LPG கொள்கைகளை எதிர்த்தும் மக்களைத் திரட்ட வேண்டிய மாபெரும் பொறுப்பு நம்முன் உள்ளது.