குமார் ஷிராங்கர்
கே. வரதராஜன்
வரவிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், காலனியாதிக்கக் காலத்திலிருந்தே கோடிக்கணக்கான பழங்குடியின மக்களுக்கு இழைக்கப் பட்டிருக்கிற, அநீதியைக் களைந்திட வகை செய்யும் விதத்தில் பழங்குடியினர் (வன உரிமைகள் அங்கீகார)ச் சட்ட முன்வடிவினை உரிய திருத்தங்களுடன் கொண்டுவந்து, நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, வரும் நவம்பர் 18 அன்று நாடு முழுதும் அகில இந்திய பழங்குடியினர் தினம் அனுசரிக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியும் மற்ற இடதுசாரிக் கட்சிகளும் பழங்குடியினர் (வன உரிமைகள் அங்கீகார) சட்ட முன்வடிவினை மேலும் காலதாமதம் எதுவும் செய்திடாமல் நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கமானது தனது குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தில், பழங்குடியினரின் வளமான வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கக்கூடிய வகையில், பழங்குடியினர் பகுதிகளின் வளர்ச்சித் திட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, அவற்றில் உள்ள ஓட்டைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. பிரதமர் தனது சுதந்திர தின உரையில் கூட இந்த உறுதிமொழி அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். ஆயினும்கூட, வனப்பகுதிகளில் உள்ள நிலப்பிரபுக்களின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து, நாடாளுமன்றத்தின் சென்ற மாரிக்காலக் கூட்டத் தொடரில் இச்சட்ட முன்வடிவு கொண்டுவரப்படவில்லை. சமீபத்தில், பிரதமர் இச்சட்டமுன்வடிவு குறித்து ஆலோசனை செய்வதற்காக ஒரு கூட்டத்தைக் கூட்டியபோது, சுற்றச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் ஒரு புதிய வரைவைத் தாக்கல் செய்தது. அதில் பழங்குடியினருக்கான உரிமைகள் அனைத்தையும் நீர்த்துப்போகச் செய்யக்கூடிய அளவிற்குப் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் அவற்றை ஏற்க மறுத்துவிட்டன. சட்டமுன்வடிவில் செய்யப்பட வேண்டிய திருத்தங்களைத் தெளிவாக்கியுள்ளன.
பழங்குடியினர் நிலை
நாட்டில் உள்ள 26 மாநிலங்களிலும் மொத்தம் 187 பழங்குடியினர் மாவட்டங்கள் உள்ளன. இதில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பழங்குடியினக் குடும்பங்களைச் சேர்ந்த 8 கோடியே 50 லட்சம் பழங்குடியினர் வசிக்கிறார்கள். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.20 சதவீதமாகும். இவர்களில் ஆண்கள் 4 கோடியே 31 லட்சம் பேர். பெண்கள் 4 கோடியே 19 லட்சம் பேர்களாவர். தற்சமயம், ஆந்திரா, ஜார்கண்ட், குஜராத், இமாசலப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கார், ஒரிசா, ராஜஸ்தான் ஆகிய ஒன்பது மாநிலங்களில் மட்டுமே பழங்குடியினர் பகுதிகள் என்று குறிப்பிட்ட சில பகுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் உள்ள 8 கோடியே 50 லட்சம் பழங்குடியினரில் 5 கோடி பேர் இந்தப் பகுதிகளில் வசிக்கின்றனர்.
அரசாங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட தேசிய மாதிரி சர்வேயின் மதிப்பீட்டின்படி இவர்களில் 47 சதவீதத்தினர் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் ஆவார்கள். சுய வேலை வாய்ப்பில் ஈடுபட்டிருப்போர் 46 சதவீதத்தினர் என்றும் இவர்களில் 44 சதவீதத்தினர் விவசாய வேலைகளைச் செய்வதன் மூலமாகவும், மீதமுள்ள 2 சதவீதத்தினர் மட்டுமே விவசாயமற்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் இந்த மாதிரி சர்வே மேலும் தெரிவிக்கிறது.
இவ்வாறு இவர்களின் வாழ்க்கைக்கு முக்கிய ஆதாரப் பொருளாக இருப்பது நிலமேயாகும். பழங்குடியினருக்கு நிலம் கிடைக்க வேண்டும் என்றால், நிலச்சீர்திருத்தம் வலுவாக அமல்படுத்தப்பட வேண்டும். மேற்கு வங்கத்தில் இடதுமுன்னணி அரசாங்கமானது சுமார் 5 லட்சம் பழங்குடியினக் குடும்பத்தினருக்கு நிலச்சீர்திருத்தத்தின் மூலம் கையகப்படுத்திய உபரி நிலத்தை விநியோகம் செய்திருக்கிறது. அதேபோன்று, திரிபுரா மாநிலத்திலும், இடதுமுன்னணி அரசாங்கம் பழங்குடியினருக்கு கையகப்படுத்திய நிலமனைத்தையும் விநியோகித்திருக்கிறது.
பழங்குடியினரிடமிருந்து நிலம் பறிக்கப்படுதல்
அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஐந்து மற்றும் ஆறாவது அட்டவணைகள், பழங்குடியினர் நிலங்களை, பழங்குடியினரல்லாதார் வாங்குவதற்குத் தடை விதித்திருக்கிறது. உச்சநீதிமன்றமும் இதுபோன்ற மாற்றல்களுக்குத் தடை விதித்திருக்கிறது. ஆயினும் கூட ஏராளமான இடங்களில் பழங்குடியினர் நிலங்களை பழங்குடியினரல்லாதோர் வாங்குவதென்பது நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. மேலும் மத்திய அரசும் மற்றும் பல்வேறு மாநில அரசுகளும் தாராளமயக் கொள்கைகளின் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் பலவற்றிற்கு சேவகம் செய்ய விரும்புவதால், வன நிலங்களை அவற்றிற்குத் தாரை வார்க்க முன்வந்திருக்கின்றன. இதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணைக்குத் திருத்தத்தைக் கொண்டுவரவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. ஆந்திராவில் இந்தியன் புகையிலை கம்பெனிக்கு (Indian Tobacco Company) இவ்வாறு வழங்கப்பட்டிருக்கிறது.
சட்டீஸ்கரில் ஜிண்டால்ஸ் நிறுவனமானது, தன்னுடைய உருக்காலைக்காக பல்வேறு பினாமி பரிவர்த்தனைகள் மூலமாக பழங்குடியினர் நிலங்களை அபகரித்திருக்கிறது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ரூனேயில் சுற்றுலாத் திட்ட வளர்ச்சிக்கென்று கூறி 3760 ஏக்கர் பழங்குடியினருக்குச் சொந்தமான வன நிலங்கள், சஹாரா ஹவுசிங் லிமிடெட்டிற்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது.
பழங்குடியினரிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் அவர்களிடமே அளிக்கப்பட வேண்டும் என்று சட்டம் இருந்தாலும், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் சுணக்கம், சட்டரீதியான ஓட்டைகள், கிராமப்புற பணமுதலைகளுக்கும் அதிகாரவர்க்கத்திற்கும் இடையில் வஞ்சகமான லஞ்சக் கூட்டணி ஆகியவை காரணமாக இவ்வாறு வனநிலங்கள் பழங்குடியினரிடமிருந்து பழங்குடியினரல் லாதார் கைகளுக்கு சட்டவிரோதமாக மாறுவதென்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்தியாவில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் ஆதிவாசிகளின் நிலங்கள் – சுமார் 8 லட்சத்து 55 ஆயிரத்து 282 ஏக்கர் அபகரிக்கப்பட்டது தொடர்பாக 3 லட்சத்து 75 ஆயிரத்து 164 வழக்குகள் நடைபெற்றன. அவற்றில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 643 வழக்குகள் முடிவுற்றுவிட்டன. இதில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 297 வழக்குகளில் மட்டுமே பழங்குடியினருக்குப் பயன் அளிக்கும் விதத்தில் தீர்ப்பளிக்கப்பட்டிருக் கிறது. பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் கிராமப்புற பணக்கார, பழங்குடியினரல்லாதாருக்கு ஆதரவாகவே வெளிவந்திருக்கிறது. இத்தகைய பழங்குடியினரல்லாத பண முதலைகள் இன்றும் 5 லட்சத்து 7 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்களைத் தங்கள் வசம் வைத்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ராஞ்சியில் நடைபெற்ற அகில இந்திய பழங்குடியினர் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அதில் வெளியிடப்பட்ட பிரகடனம் வருமாறு:
‘‘ஆதிவாசிகள் நம் நாட்டின் காடுகளுடனும் அவற்றில் விளையும் உற்பத்திப் பொருட்களுடனும் காலம் காலமாக ஜீவனுள்ள தொடர்பை வைத்துக் கொண்டிருப்பவர்கள். அவற்றின் ஓர் அங்கமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஆனால் வனச் சட்டமும் தற்போது வந்திருக்கிற 1988ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புத் (திருத்தச்) சட்டமும் (Forest Conservation (Amendment) Act, 1988) ஆதிவாசிகளை வனங்களில் அத்துமீறி நுழைந்தவர்கள் போலவும், உரிமையற்ற முறையில் தலையிடுபவர்கள் போலவும் சித்தரிக்கின்றன. காட்டுப் பகுதிகள் திடீரென்று காணாமல் போவதற்கும், அவற்றின் பசுமை குறைந்துகொண்டே செல்வதற்கும் பழங்குடியினர் எவ்விதத்திலும் காரணமல்ல. மாறாக, ஒப்பந்தக்காரர்கள் -மஃபியா கும்பல்கள் – வனத்துறை அதிகாரிகள் – ஆளும் வர்க்க அரசியல்வாதிகள் ஆகியோரின் கூட்டுக் கொள்ளையும், முதலாளித்துவ வளர்ச்சியின் சமூகச் சூழல் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாத போக்குமே காரணங்களாகும்.’’
பழங்குடியினர், வனங்களில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகிறார்கள். காடுகளுடன், காடுகளில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களுடனும் தங்கள் வாழ்வைப் பிணைத்துக்கொண்டவர்கள். ஆனால், இவர்கள் காடுகளை ஆக்கிரமித்தவர்கள் என்று அரசாங்கத்தால் முத்திரை குத்தப்படுகிறார்கள். நமது நாட்டின் வனச்சட்டங்கள் மற்றும் காட்டுவிலங்குகள் பாதுகாப்புச் சட்டங்கள் அனைத்துமே இவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், விலங்குகளை வேட்டையாடுபவர்கள் என்றும் முத்திரை குத்துகின்றன. அவர்களை காடுகளிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆயினும், சில மாநில அரசுகள் பழங்குடியினரைப் பாதுகாப்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டன. 1980 அக்டோபரில் வனப் (பாதுகாப்புச்) சட்டம் கொண்டுவரப்பட்ட போது, அது பழங்குடியினரை வனங்களிலிருந்து அப்புறப்படுத்துவதென்பது சற்றே குறைந்தது. பல தலைமுறைகளாக காடுகளில் வசித்து வரும் பழங்குடியினருக்கு வன நிலங்களை ஒதுக்குவதற்கு இச்சட்டம் வகை செய்தது. ஆயினும் பலருடைய குடும்பத்தினர் காடுகளில் வசித்து வருவதைச் சரியாகத் தெரிவிக்க இயலாததால் அவர்கள் காடுகளில் தொடர்ந்து இருந்து வருவது தொடர்பாக இன்றும் பிரச்சனை நீடிக்கிறது. 1995இல் உச்சநீதிமன்றம், அனைத்து மாநில அரசுகளுக்கும் பழங்குடியினரின் உரிமைகள் குறித்து விரைந்து முடிவு காணுமாறு கட்டளையிட்டிருந்தது. ஆயினும் பல மாநில அரசுகளால் அதனை செய்திட முடியவில்லை. இதற்குள் பல பணமுதலைகள் காடுகளை வளைத்துப்போட்டுக் கொண்டு விட்டனர். இப்போது மீண்டும் உச்சநீதிமன்றம், காடுகளில் உள்ள அனைத்து ‘‘ஆக்கிரமிப்பாளர்களையும்’’ அப்புறப்படுத்துமாறு ஆணை பிறப்பித் திருக்கிறது. இதிலும் அப்பாவி பழங்குடியின மக்கள்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காலங்காலமாய் அவர்கள் காடுகளிலேயே வாழ்ந்து வந்தபோதிலும்கூட, ஆவணங்கள் எதையும் அவர்களால் தாக்கல் செய்ய முடியாத காரணத்தால், அதிகார வர்க்கத்தால் மிக எளிதாக அவர்கள் இம்ஷிக்கப்படுகிறார்கள். அப்பாவிகளான அவர்களால் எதுவுமே செய்ய முடியாமல் மிகவும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமானது, புதிய 1980ஆம் ஆண்டு வனப் (பாதுகாப்புச்) சட்டத்தின்கீழ், வனப் பகுதிகளில் உள்ள பழங்குடியின ‘‘ஆக்கிரமிப்பாளர்கள்’’ வீடுகள் அனைத்தையும் அவர்களது உடைமைகளையும், அவர்கள் விளைவித்திருக்கும் பயிர்கள் உட்பட அனைத்தையும் அழித்திடுமாறு ஆணை பிறப்பித்தது. மேற்கு வங்கத்திலும், திரிபுராவிலும் உள்ள இடது முன்னணி அரசாங்கங்கள் மத்திய அரசின் இந்தச் சுற்றறிக்கையை ஏற்க முடியாது என்று உடனேயே மறுத்துவிட்டன. ஆனால் மற்ற மாநில அரசுகள் அதனை அப்படியே சிரமேற்கொண்டு, பழங்குடியின மக்கள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தன. அவர்களது வீடுகளையும், பயிர்களையும் அழித்தொழித்தன. பல மாநிலங்களில் பாதிப்புக்குள்ளான பழங்குடியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கீழ் அணிதிரண்டு, போராடி, தங்கள் வீடுகளையும், பயிர்களையும் காப்பாற்றி வெற்றி பெற்றனர். 2004 பிப்ரவரி 5 அன்று, அரசாங்கம் ஓர் ஆணை பிறப்பித்தது. அதன்படி ‘‘1993 டிசம்பர் 31 வரை இருந்து வரும் பழங்குடியினர்களின் உரிமைகள்’’ அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆயினும் 2004 பிப்ரவரி 23 அன்று உச்சநீதிமன்றம் இந்த அரசாணையை நிறுத்தி வைத்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்தத் தடையாணையை நீக்கறவு செய்திட நீதிமன்றத்தில் விண்ணப்பித் திருந்தாலும், வழக்கு நீதிமன்றத்தில் இன்றளவும் நிலுவையில் உள்ளது.
மனிதாபிமானமற்ற செயல்கள்
நாடு சுதந்திரம் பெற்றபின், காடுகளைச் சார்ந்த பகுதிகளில் தொழில்மயம் மற்றும் வளர்ச்சித்திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று கூறி சுமார் 15 சதவீத பழங்குடியினர் அவர்களது நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு இதுநாள்வரை எவ்விதமான மாற்று ஏற்பாடுகளோ, இழப்பீடுகளோ அல்லது வேலையோ வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப் படாமலிருப்பதற்கு என்ன என்ன இழிநடவடிக்கைகள் உண்டோ அவை அத்தனையும் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு மற்றும் இந்திய முதலாளிகள் கனிம வளங்கள் நிறைந்த காட்டு நிலங்களை மிகப் பெருமளவில் அபகரித்திருக்கிறார்கள். அந்த இடங்களில் காவல்துறையினரின் உதவியுடன் பழங்குடியினர் விரட்டியடிக்கப் பட்டிருக்கிறார்கள். அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணை தொடர்பாக சம்தா தீர்ப்புப் பின்பற்றப்படவில்லை. தாராளமயக் கொள்கைகளின் காரணமாக பழங்குடியினர் சுரண்டப் படுதலின் சில அம்சங்கள் இவைகளாகும்.
தாராயமயக் கொள்கைகளின் காரணமாக அரசுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் குறைந்தது மட்டுமல்ல, பழங்குடியினரும் தங்கள் நிலங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்டில் உள்ள 187 பழங்குடியினர் வசிக்கும் மாவட்டங்களின் மொத்த பூகோளப் பரப்பு 33.6 சதவீதமாகும். நாட்டின் மொத்த வனப் பகுதியில் 60 சதவீதம் இப்பகுதியில் இருக்கின்றன. வனத்தின் வளத்திற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் பழங்குடியினராவார்கள். இவர்களை வனங்களிலிருந்து வெளியேற்றுவ தென்பது, மனிதாபிமானமற்ற செயல்மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத் திற்கும் கேடு பயக்கும் நடவடிக்கையாகும்.
நாட்டில் மொத்தம் உள்ள வனப் பகுதி என்பது 6 கோடியே 80 லட்சம் ஹெக்டேர்களாகும். இதில் பழங்குடியினர் வசிப்பதென்பது வெறும் 2 சதவீத இடத்திலேயே. இவர்கள் அங்கு இருப்பதால் வனங்களின் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பங்கமும் வந்து விடாது. மாறாக, இவர்களை அங்கிருந்து அகற்ற மேற்கொள்ளும் எந்தவித நடவடிக்கையும் பழங்குடியினர் வாழ்க்கையிலும் மற்றும் அப்பகுதிகளிலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை
மத்திய அரசு, ஏகாதிபத்திய உலகமயக் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதன் காரணமாக, வன நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்திட மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. பழங்குடியினரை வெளியேற்ற கருணையற்றமுறையில் காட்டுமிராண்டித்தனமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் ஒரிசா மாநிலத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் சுமார் 1224 ஹெக்டேர் நிலங்களை 17 சுரங்க நிறுவனங்கள் எடுத்துக்கொண்டிருப்பதை முறைப்படுத்தி இருக்கிறது. மாறாக, அதே ஒரிசா மாநிலத்தில் பழங்குடியினர் ‘‘ஆக்கிரமித்ததாகக்’’ கூறப்படும் மொத்த நிலப்பகுதியில் அவர்களுக்காக முறைப்படுத்தியிருப்பது வெறும் 29 ஹெக்டேர்கள் மட்டுமே.
இவ்வாறாக, பழங்குடியினருக்கு எதிரான அநீதி தொடர்கிறது. இதனைச் சரி செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி, 2005ஆம் ஆண்டு பழங்குடியினர் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து, அதனை உரிய திருத்தங்களுடன் நிறைவேற்றுவதுதான்.
2005ஆம் ஆண்டு பழங்குடியினர் சட்டமுன்வடிவை நாடாளு மன்றத்தில் கொண்டு வரவிருப்பதாக அரசு அறிவித்திருப்பதை வரவேற்கும் அதே சமயத்தில், கீழ்க்கண்ட திருத்தங்களையும் செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
செய்யப்பட வேண்டிய திருத்தங்கள்
- பழங்குடியினரின் உரிமைகளை அங்கீகரிப்பதற்காக 1980 அக்டோபர் 25 வரை ‘வனத்தில் இருந்தவர்களுக்கு மட்டும்’ என்கிற முறையில் கெடு தேதி (cut-off date) சட்ட முன்வடிவில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது அச்சட்ட முன்வடிவின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறிக்கோளுக்கே நேர் விரோதமானது. இவ்வாறு கெடு தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கு எந்தவிதமான அடிப்படையும் கிடையாது. இச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படும் தேதி வரை காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் அனைவருக்கும் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையிலேயே கெடு தேதி நிர்ணயிக்கப்பட வேண்டும். 1980ஆம் ஆண்டு கெடு தேதி நீக்கப்படாவிட்டால், பழங்குடியினர் பெருவாரியான முறையில் வெளியேற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும். இது பழங்குடியினர் வாழ்க்கையில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, 1980ஆம் ஆண்டு வனப் (பாதுகாப்புச் சட்டம்) அதற்கேற்ற முறையில் திருத்தப்பட வேண்டும். அதே சமயத்தில், வனப்பகுதிகளில் பழங்குடியினரல்லாதார் பல்வேறு பினாமி பெயர்களில் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கெடு தேதி நிர்ணயிப்பதை அரசு ஜனநாயகமுறையில் முடிவு செய்ய வேண்டும். 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பைக் (சென்சஸ்) கூட கெடு தேதியாக எடுத்துக் கொள்ளலாம்.
அநீதியான உச்சவரம்பு
- மேலும் இச்சட்ட முன்வடிவில், ஒவ்வொரு பழங்குடியின குடும்பத்திற்கும் ஒதுக்கப்பட்டிருக்கிற நிலத்தின் அளவு 2.5 ஹெக்டேராக வரையறுக்கப் பட்டிருக்கிறது. இது அறிவியல்பூர்வமற்றது, அநீதியானது, பாகுபாடுமிக்கது. இது நிலத்தின் தன்மையையோ (quality of the land), அந்தப் பகுதியில் பெய்திடும் மழையின் அளவையோ, பயிர் முறையையோ (crop pattern), சுற்றுச்சூழல் நிலைமைகளையோ அல்லது மண்ணியல் நிலைமைகளையோ (geological conditions) கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பழங்குடியினரல்லாதோருக்கு நில உச்சவரம்பின் அளவு அதிகமான அளவில் இருக்கும் அதே சமயத்தில், பழங்குடியினருக்கு மட்டும் இப்படி 2.5 ஹெக்டேர் என்று நிர்ணயிப்பதற்கான அவசியம் என்ன? பழங்குடியினர் குடும்பங்களில் பல குடும்பங்கள் இன்றும் கூட்டுக் குடும்பமாகவே, தங்கள் நிலங்களில் கூட்டாகவே உழுதுண்டு வாழ்ந்து வருகிறார்கள். சில கூட்டுக்குடும்பத்தில் 15க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். எனவே, 2.5 ஹெக்டேர் நிலஉச்சவரம்பை நீக்கிட வேண்டும், தற்சமயம் வனங்களில் உள்ள பழங்குடியினக் குடும்பத்தினர் அனைவருக்கும் நிலம் வழங்கப்பட்டு, முறைப்படுத்தப்பட வேண்டும்.
- இந்தச் சட்டமுன்வடிவானது, பழங்குடியினருக்கு உரிமைகளை நிலைநாட்டுவதற்கு, கிராம சபைகளுக்கு அதிகாரம் வழங்கி அங்கீகரித்திருக்கிறது. அத்தியாயம் 4ல் உள்ள வரைவு விதிகள் (Draft Rules in Chapter IV), ‘‘கிராம சபை, கிராமப் பேரவையாக, கிராம மட்டத்தில் (Grama Sabha shall be the village assembly … at the village level) என்று கூறுகிறது. ஆனால், மலைகளில் மிகவும் உள்ளடங்கிய பகுதிகளில் வாழும் பழங்குடியினர் அங்குமிங்குமாக சிதறிக் கிடக்கின்றனர். அவர்களுடைய கிராம சபைகளும் கூட பல கிராமங்களை உள்ளடக்கிய கூட்டு கிராம சபைகளாக இருந்து வருகின்றன. பலரால் எளிதில் செல்லமுடியாத குக்கிராமங்களைக் (padas – hamlets) கூட அவைதான் அதிகாரவரம்பெல்லையைப் பெற்றிருக் கின்றன. எனவே, கிராமம் என்பதற்குப் பதிலாக குக்கிராமம் என்று மாற்ற வேண்டும்.
- தற்போது வனத்துறையின் கீழ் இருந்து வரும் நிலம் குறித்த எழுத்துபூர்வமான பதிவேடுகள் தவறுகள் நிறைந்தவை, சரியானவை என்று சொல்வதற்கில்லை, போதுமானவையுமல்ல. பழங்குடியினர் குடும்பங்கள் பல எவ்விதமான ஆவணச் சான்றுகளையும் தங்களுடன் வைத்திருக்கவில்லை. அட்டவணைப் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் ஆணையமானது, மகாராஷ்ட்ரா மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போல அனைத்து அரசுகளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் எனப் பரிந்துரைத்திருக்கிறது. மகாராஷ்ட்ர அரசு, வன நிலங்களை முறைப்படுத்துவதற்காக, உரிமைகோரும் பழங்குடியினக் குடும்பத்தினரிடமிருந்து ஓர் உறுதிவாக்குமூலம் (அபிடேவிட்) பெற்றுக் கொண்டு, நிலங்களை முறைப்படுத்தி வழங்கியிருக்கிறது. இதைப்போல் இச்சட்ட முன்வடிவிலும் செய்திட வேண்டும்.
- பழங்குடியினர் வைத்திருக்கும் நிலங்கள் அல்லது வனத்துறையால் இதற்குமுன் ஒதுக்கீடு செய்யப்பட்டு பின்னர் வலுக்கட்டாயமாக வனத்துறையால் அல்லது வன வளர்ச்சி கார்ப்பரேஷனால் பிடுங்கிக் கொள்ளப்பட்ட நிலங்கள், அனைத்தும் இச்சட்டமுன்வடிவின் வரம்பிற்குள் வரவேண்டும்.
பழங்குடியின சமூகத்திற்கான சொத்துரிமைகள்
- இச்சட்டமுன்வடிவில் 2(1)ஆவது பிரிவானது, வனப்பகுதிகளில் உள்ள ‘‘பழங்குடியின சமூகத்திற்கான சொத்துரிமைகள்’’ குறித்து வரையறை செய்கிறது.
- இச்சட்டமுன்வடிவின் 15 ஆவது பிரிவானது, இச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு சட்டமாகிவிட்டால், மற்ற சட்டங்களுடன் மோதல் இல்லாதபடி, திருத்தப்பட வேண்டியிருக்கிறது.
- ‘‘ஒரு நபருக்கு அளிக்கப்படும் வன உரிமையானது, அவர் ஏதேனும் குற்றம் புரிந்தார் என்றால் ரத்து செய்யப்படும்’’ என்று ஒரு தண்டனைப் பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் கடுமையான ஒன்றாகும். நம் நாட்டில் இந்தியத் தண்டனைச் சட்டம் உட்பட எந்தச் சட்டமும், அதிகாரிகள் எவருக்கும், குற்றம் புரிந்தவர்களின் உரிமைகளைப் பறித்திட, அதிகாரம் அளித்திடவில்லை. அப்படியிருக்கும்போது, பழங்குடியினர் மட்டும் இப்படி ஏன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்? எனவே, இந்த ஷரத்து முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்களைத் தண்டிக்க நம் நாட்டில் ஏராளமான சட்டங்கள் ஏற்கனவே உண்டு.
- காடுகளில் வசிப்பவர்கள் தொடர்பாக, மாநில அரசுகளின் பொறுப்புகளையும் வரையறுத்து புதிய சட்டப் பிரிவுகள் கீழ்க்கண்ட ஷரத்துக்களுடன் இயற்றப்பட வேண்டும். வனங்களில் வசிக்கும் பழங்குடியினரை, பன்னாட்டு நிறுவனங்களின் பினாமி பரிவர்த்தனைகளிலிருந்தும், பெரும் நிலப்பிரபுக்களிடமிருந்தும், நிலங்களை அபகரிக்கும் அதிகாரம் படைத்தவர்களிடமிருந்தும் காப்பாற்றும் பொறுப்பு மத்திய அரசையே சாரும். காடுகளில் மேற்கொள்ளப்படும் பெரிய வளர்ச்சித் திட்டங்களுக்கு, அவை அமையப்படவுள்ள கிராமத்தின், கிராம சபைகளிடமிருந்து முன் அனுமதி பெற்று, மத்திய அரசின் ஆலோசனைக் குழுவிற்கு அனுப்பிட வேண்டும். அதனால் பழங்குடியினர் எவரேனும் அப்புறப்படுத்தப்பட்டால் உரிய இழப்பீடு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
- இச்சட்டமுன்வடிவில், கிராம சபைகளின் அதிகாரங்கள் தெளிவாக்கப்பட வேண்டும். 1927ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டத்தின்படி காடுகள் அரசு சொத்துக்களாகும். எனவே சட்டத்தில் அதற்கான திருத்தத்தைக் கொண்டு வராமல், ஒரு கிராம சபை எப்படி வனப் பகுதிகளில் அதிகாரம் செலுத்த முடியும்? அதேபோல் எதிர்வரும் காலங்களில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையை அரசு எப்படிக் கருத இருக்கிறது என்பதையும் தெளிவாக்கிட வேண்டும். ஆறாவது அட்டவணையின் ஷரத்துக்களை மறு ஆய்வு செய்து, மாவட்டக் கவுன்சில்களின் அதிகாரங்களைத் தெளிவாக வரையறுத்து புதிய பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்.
- இச்சட்ட முன்வடிவில், பழங்குடியின மக்கள், காடுகளில் விளையும் சிறிய உற்பத்திப் பொருள்களை (னீவீஸீஷீக்ஷீ யீஷீக்ஷீமீst ஜீக்ஷீஷீபீuநீமீ) சேகரித்துப் பயன்படுத்திக் கொள்ள அல்லது மாற்றிக்கொள்ள உரிமை அளிக்கிறது. பழங்குடியின மக்களை வர்த்தகர்கள், ஒப்பந்தக்காரர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் நில மஃபியா கும்பல்களிடமிருந்து பாதுகாத்திடக் கூடிய வகையில் உரிய ஷரத்துக்கள் சேர்க்கப்பட வேண்டும்.
- கொண்டுவரப்படவுள்ள சட்டமுன்வடிவானது காடுகளில் வசிக்கும் பழங்குடியினர் குறித்து மட்டுமே கூறியுள்ளது. வன உற்பத்திப் பொருள்களைச் சார்ந்து, வனத்திற்கு வெளியேயுள்ள பழங்குடியினர் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. பழங்குடியின மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் வாழ்விற்கு காடுகளையே சார்ந்துள்ளனர். காடுகளும் அவர்களுக்கு முக்கியமான வேலைகளை அளித்துக்கொண்டிருக்கின்றன. இப்போது கொண்டுவரப்படவுள்ள சட்டமுன்வடிவானது இப்போதுள்ள ஷரத்துக்களில் மாற்றம் எதுவும் கொண்டுவரப்படாமல் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேறினால், அது வன உரிமைகளுக்குத் தகுதி படைத்தவர்களுக்கும், தகுதி இல்லாதவர்களுக்கும் இடையே பினாமி பரிவர்த்தனைகளை மேற்கொண்டிட வழிவகுக்கக்கூடிய ஆபத்திருக்கிறது. இதனைத் தவிர்த்திடக்கூடிய வகையில் புதிதாக சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட வேண்டும். காலம் காலமாக காடுகளில் இருந்துவரும் பழங்குடியினரையும் காப்பாற்றிட வேண்டும். அதே சமயத்தில் வணிக நோக்கங்களுக்காக காடுகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள நபர்களிடமிருந்து, பழங்குடியினரல்லாத ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தக் கூடிய வகையிலும் ஷரத்துக்கள் சேர்க்கப்பட வேண்டும்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பிரச்சாரம்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின், குறைந்தபட்ச பொது செயல் திட்டமானது, ‘‘அனைவருக்கும் முழுமையான சம வாய்ப்புகள் – அதிலும் குறிப்பாக பழங்குடியின மக்களுக்கும், தலித்துகளுக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கிடைத்திட – நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்று உறுதிபூண்டிருக்கிறது. பழங்குடியினமக்கள் அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளை அளித்திட அரசு உறுதிபூண்டிருப்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற வேண்டியிருக்கிறது. அரசாங்கம் தன் பொறுப்பினைத் தட்டிக்கழித்திட முடியாது. பழங்குடியினருக்கு, கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் வசதிகளைச் செய்துதரப் போதுமான நிதி ஒதுக்கீட்டைச் செய்திட வேண்டும்.
சமீபத்தில் ராஞ்சி உயர்நீதிமன்றமானது, தலித்துகள் மற்றும் தலித் அல்லாதார் பகுதிகளுக்கு வேறுபடுத்திக் காட்டுவதை நிராகரித்து தீர்ப்பளித்திருப்பது மிகவும் ஆபத்தானது, பழங்குடியின மக்களுக்கு எதிரானது, அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது. இந்தத் தீர்ப்பிற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேல்முறையீடு தாக்கல் செய்திருக்கிறது.
இன்றைய முதலாளித்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ சமூகமானது பெண்களை மிகவும் தரம் தாழ்த்தியே வைத்திருக்கிறது. நிலப்பிரபுக்கள், மஃபியா கும்பல்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் வன அலுவலர்கள் பழங்குடியினப் பெண்களைப் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் செய்வதென்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி இதற்கெதிராகப் போராடி வருகிறது. வலுவான இயக்கம் நடத்திட எல்லா மட்டங்களிலும் திட்டமிட்டு செயல்பட கட்சித்தலைமை பணித்துள்ளது,
பழங்குடியின மக்கள் தங்கள் அடையாளங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து வந்த அரசுகள் பழங்குடியினரின் மொழிகளை உதாசீனம் செய்து வந்தன. பழங்குடியினர் கலாச்சாரத்தை (tribal culture) வெறும் பண்படாத கொச்சை கலாச்சாரம் என்ற முறையிலேயே அதிகார வர்க்கம் சித்தரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. பழங்குடியினர் கலாச்சாரத்தில் உள்ள நல்ல அம்சங்களை – குறிப்பாக அவர்களது கூட்டுச் செயல்பாடு மற்றும் சமத்துவ மாண்பினை உயர்த்திப் பிடித்தல் ஆகியவற்றைப் – பாதுகாத்து, வளர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆயினும், அதே சமயத்தில், பில்லி சூனியம் வைத்தல், பேயோட்டுதல், பெண்களுக்கு நிலவுரிமை மறுத்தல், பலதார மணத்தை ஆதரித்தல் போன்ற படு பிற்போக்கான நடைமுறைகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி கொள்ள வேண்டும்.
இன்றைய சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வான நிலையை ஏகாதிபத்தியவாதிகள் நன்கு பயன்படுத்திக்கொண்டு, பழங்குடியின மக்களிடையே பிரிவினை வெறியை உருவாக்கி, மோதல்களை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மை இன மக்களுக்கு உரிய சுயாட்சியை அளித்து, ஒரு கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்துவதன் மூலமாகவே பழங்குடியின மக்களைப் பாதுகாத்திட முடியும், அவர்களது அடையாளம், மொழி மற்றும் கலாச்சாரத்தையும் வளர்த்திட முடியும்.
ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் பல்வேறு அக்டோபஸ் அமைப்புகளும் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கக் கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றன. பழங்குடியினரிடையே அவர்களை கிறித்துவர்கள் என்றும், கிறித்துவர்கள் அல்லாதவர்கள் என்றும் பிரித்து, பிராமண சாதீய அமைப்பைத் திணிப்பதற்கும் முயற்சித்து வருகின்றன. அவை, பழங்குடியின மக்களை ஆதிவாசிகள் என்று அங்கீகரிப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை பழங்குடியினர் வெறும் ’வனவாசிகள்’தான். இதன்மூலம் அவர்களது வரலாற்றையே மறுதலிக்கக்கூடிய வேலையில் அவை இறங்கியுள்ளன. இவ்வாறாக ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் அக்டோபஸ் அமைப்புகளும் நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக மாண்புகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன.
அனைத்துப் பழங்குடியினரின் ஒற்றுமையையும் பாதுகாத்து, பழங்குடியினர் – பழங்குடியினரல்லாதோருக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, முன்னேற வேண்டியிருக்கிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான போராட்டங்களை பழங்குடியினர் மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் போராட்டங்களுடனும் இணைத்திட வேண்டும். அதன் மூலமாகத்தான் அனைத்து மக்களுக்கிடையிலேயும் ஓர் உண்மையான ஒற்றுமையைக் கட்டிட முடியும். அதன் மூலமாகவே நாட்டை ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி முன்னேற்றிக் கொண்டு செல்ல முடியும்.