மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர் வர்க்கமும் – IV


தொழிற்சங்க இயக்கத்தை பயனுள்ள முறையில் உருவாக்குவதற்கும், வளர்ப்பதற்கும், புரட்சிகரமான வர்க்கமாக படிப்படியாக அதன் தன்மையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கும், இவ்வியக்கத்தில் பணியாற்றும் கம்யூனிஸ்ட்டுகள் குறிப்பிட்ட திசை வழியை வர்க்கத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டிய அவசியத்தை முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தோம்.

இவற்றை தொகுத்து சொல்வது அவசியம்.

  1. தொழிற்சங்கத்தை அனைத்து தொழிலாளர்களுடைய போராடும் அமைப்பாக நடத்திச் செல்ல வேண்டும்.
  2. தன்னுடைய ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக மட்டும் செயல்படும் அமைப்பாக இல்லாமல், இதர தொழிலாளி வர்க்கப் பிரிவுகளின் நலன்களை பாதுகாக்கும் அமைப்பாக உருவாக்க வேண்டும். பல பகுதி தொழிலாளர்கள் போராடும்போது, அவர்களுக்கு உதவி செய்வதும், சகோதர ஆதரவு இயக்கங்கள் நடத்துவதும் வர்க்க உணர்வை கெட்டிப்படுத்தும்.
  3. பணியாற்றும் ஆலையைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளை மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு உதவி செய்யும் நடை முறையை வளர்த்தெடுக்க வேண்டும். இதைச் செய்யாவிட்டால் ஆலைத் தொழிலாளர்கள் தங்களுடைய சுயநலத்திற்காக மட்டும் பாடு படுவார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும். அனைத்து பகுதி ஒடுக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்திற்காக போராடும் அமைப்பாக தொழிற்சங்கத்தை மக்கள் பார்க்கும் நிலை உருவாக வேண்டும். அநீதியும், அக்கிரமும் எங்கு தலை தூக்கினாலும், நீதிக்காகவும், நியாயத்திற்காகவும் போராடும் வர்க்கமாக தொழிலாளி வர்க்கம் இருக்க வேண்டும் என்று தோழர் லெனின் அழுத்தமாக குறிப்பிட்டார். வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் என்பது இத்தகைய நடவடிக்கைகள் மூலம் உருவாகவேண்டிய ஒரு அம்சமாகும்.
  4. குறிப்பாக சமூதாயத்தில் மிகக் கொடுரமான சுரண்டலுக்கு பல நூற்றாண்டுகளாக உள்ளாக்கப்பட்டிருக்கும் பொழுது, விவசாயிகளுக்கு உதவி செய்வது தொழிற்சங்கங்கள் ஒரு முக்கிய கடமையாகவே மேற்கொள்ள வேண்டும். விவசாயத் தொழிலாளர் ஒற்றுமை என்பது புரட்சிக்கு மூலாதாரமான காரியமாகும்.
  5. இன்றைய சமுதாயத்தில் பெரிதும் இம்சிக்கப்பட்டு வரும் பெண்களுக்கு மனிதாபிமான கோரிக்கைகளுக்கு கூட போராடும் போதும், பாலினத் தாக்குதல்களுக்கும் எதிராக போராடும் போதும், தொழிற்சங்க இயக்கம் அவர்களுக்காக குரலெழுப்பி ஆதரவை திரட்ட வேண்டும்.
  6. ஜாதி கொடுமைகள், பாகுபாடுகள், தீண்டாமை போன்ற எண்ணற்ற சிக்கல்களை ஒரு பகுதி மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் நிலையில், இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக சங்கத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்களையும், இதர மக்களையும் நீதிக்கான போராட்டத்தில் திரட்டும் பணியை தொழிற்சங்கங்கள் செய்ய வேண்டும்.
  7. முன்பு குறிப்பிட்டதுபோல, நாட்டின் அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி தொழிலாளர்களுக்கு போதனையூட்டி அரசியல் என்பது பணக்கார வர்க்கத்தினுடைய ஏகபோகமல்ல என்றும், தொழிலாளி வர்க்கத்திற்கு அரசியல் நிகழ்வுகளைப் பற்றி தெளிவான கண்ணோட்டம் உண்டு என்பதையும் நிரூபிக்க வேண்டும். ஜனநாயக அரசியல் இயக்கங்களை உருவாக்கும் அல்லது உதவி செய்யும் கடமையை தொழிற்சங்கங்கள் நிறைவேற்ற வேண்டும்.

இதானது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சார்பாக செய்யப்படுவதாக சிலர் கருதி வர்க்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகள் பற்றி எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக சங்கங்கள் பிளவுபடக்கூடாது என்பது கம்யூனிஸ்ட்டுகளின் அடிப்படைப் பார்வையாகும்.

இதுபோன்ற கண்ணோட்டங்களுடன் தொழிற்சங்கத்தை நடத்திச் செல்வது கம்யூனிஸ்ட்டுகளுக்கு விசேஷமான கடமையாகும்.

தொழிற்சங்க ஜனநாயகம்

தொழிற்சங்கங்களை தொழிலாளர்கள் உருவாக்கி நடத்திச் செல்லும் அமைப்பாக வளர்த்தெடுப்பதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு விசேசமான அக்கறை உண்டு. தன் வர்க்கத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், சமுதாயரீதியான கடமைகளை சிறந்தமுறையில் நிறைவேற்றுவதற்கும் தொழிற்சங்க அமைப்புகளை முற்றிலும் ஜனநாயக முறையில் வழிநடத்திச் செல்வது கம்யூனிஸ்ட்டுகளின் கடமையாகும். தொழிற்சங்க இயக்கமானது, தொழிலாளர்கள் தாங்களாகவே நடத்திச் செல்லும் இயக்கமாகவேண்டும். சில தலைவர்கள் அல்லது பொதுஜன சேவகர்கள் தொழிலாளர்களுக்கு உதவி புரிந்து அதன் மூலம் பல்வேறு காரியங்களுக்கு தொழிலாளர்களை பயன் படுத்துவதை நாம் எதிர்க்கிறோம்.

தொழிலாளி வர்க்கத்திற்கு வெளியில் இருந்து வரும் ரட்சகர்கள் தேவையில்லை. தன் வர்க்கத்தின் விடுதலையை தொழிலாளி வர்க்கமே அடையவேண்டும். என்று பொருள்பட காரல் மார்க்ஸூம் – எங்கெல்சும் துவக்க நாள்களிலேயே அழுத்தமாகப் போதித்தார்கள்.

தொழிலாளி வர்க்கம் தன் வர்க்க நலனுக்காகவும், சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் புரட்சிகரமான இயக்கத்தின் தலைவர் களாகவும் வளர்வதற்கு, தொழிற்சங்கத்தை முற்றிலும் ஜனநாயக முறையில் நடத்த வேண்டும் என்பது கம்யூனிஸ்ட்டுகளின் முக்கிய கோட்பாடாகும்.

இந்த கோட்பாட்டின்படி, சங்கத்தின் அனைத்து நடவடிக் கைகளையும் தொழிலாளர்களே நேரடியாக நடத்திச் செல்லும் நிலைமை ஏற்பட வேண்டும். (ஒரு தலைவருடைய திறமையினால் சங்கம் நன்றாகச் செயல்படுகிறது என்ற நிலைக்கு மாறாக, நாம் சங்கத்தை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை ஏற்படுவதற்கு தொழிற்சங்க ஜனநாயக கோட்பாடுகளை உறுதியாக உயர்த்திப் பிடிக்க வேண்டும்.)

வர்க்கத்தில் இருந்தே தலைவர்கள் தோன்ற வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் கம்யூனிஸ்ட்டுகள் தொழிற்சங்கத்தில் பணி யாற்றுகிறார்கள். தொழிற்சங்க போராட்டங்கள் மூலம் ஆயிரக் கணக்கில் சிறந்த ஊழியர்களை உருவாக்குவதற்கு, வளர்ப்பதற்கு தொழிற்சங்க ஜனநாயகம் இன்றியமையாதது. எந்த அளவிற்கு சிறந்த, போர்க்குணமிக்க, தெளிவான கண்ணோட்டமுடைய ஊழியர்கள் உருவாகிறர்கள் என்பதை ஆதாரமாகக் கொண்டுதான் தொழிற் சங்கத்தின் வலுவை நிர்ணயிக்க முடியும். இவ்வாறு வளரும் தொழிலாளிவர்க்க ஊழியர்களில் மிகச் சிறந்தவர்களை கட்சி உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் உருவாக்குவது கம்யூனிஸ்ட்டுகளின் கடமையாகும்.

இதுபோன்ற பல்வேறு கடமைகளை தொழிற்சங்கப் பணியின் பகுதியாக கம்யூனிஸ்ட்டுகள் நிறைவேற்றும் போதும்கூட இவையெல்லாம் தொழிற்சங்க கோட்பாடுகளுக்கு உட்பட்டுதான் அமைகின்றன என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில், இத்தகைய வலுவான தொழிற்சங்கத்தை இயக்கினால் மட்டும் புரட்சிகரமான இயக்கம் உருவாகாது.

உலகத்தில் அநேகமாக எல்லா நாடுகளிலும் தொழிற்சங்க இயக்கம் பரவியிருக்கிறது, வலுவாக இருக்கிறது. வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில்கூட, உதாரணத்திறக்காக அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான் போன்ற… நாடுகளில் எல்லாம் மிகவும் வல்லமைவாய்ந்த தொழிற்சங்கங்கள் நூற்றாண்டுகளாக இயங்கி வருகின்றன. ஆயினும் இந்நாடுகளில்கூட தொழிலாளி வர்க்கம் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுக்கவில்லை.

ஜீவாதாரமான சமூக பாத்திரத்தை பூர்த்தி செய்யும் ஒரு வர்க்கமாக இந்த வர்க்கத்தை முன்னுக்கு எடுத்துச் செல்ல இன்னும் பல கடமைகளை கம்யூனிஸ்ட்டுகள் இவ்வரங்கத்தில் செய்ய வேண்டியுள்ளது. வெறும் தொழிற்சங்க பணிகளை மட்டும் செய்து கொண்டு போனால், வர்க்கம் ஒரு புரட்சிகர வர்க்கமாகாது என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் ஆழமாக உணர வேண்டும். அவற்றை பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

I, II, III



%d bloggers like this: