கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை-1
கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை-2
கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை-3
மகாத்மாவின் மனைவி கஸ்தூர்பா ஓர் அசாதாரணமான பெண்மணி. எதையும் மன்னிக்கும் குணம் உடையவர், மிக தைரியமானவர். நம்பமுடியாத அளவுக்கு விசுவாச குணமுடையவர். காந்தியின் மிக விசுவாசமுடைய சிஷயை மட்டும் அல்ல; அவரை கூர்மையாக விமர்சிக்கும் செல்வாக் குடைய விமர்சகரும் கூட. கஸ்தூர்பா வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பு மட்டுமல்ல. – – லார்ட் அட்டென்பரோ
சொர்க்கத்தில் உள்ள மகான்களோடு வாழ்வது பேரின்பமும் மகிமையும் ஆகும். ஆனால் இப்புவியில் ஒரு மகானோடு வாழ்வதோ? அது வேறு ஒரு விஷயமாகும்! – – காந்தியின் செயலாளர் மஹாதேவதேசாய்
முன்னுரை
காந்தி – கஸ்தூர்பா வாழ்க்கையின் சில அடிப்படை விவரங்களை மிகச் சுருக்கமாக இங்கு நினைவுபடுத்திக் கொள்வது வரலாற்றில் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட கஸ்தூர்பாவின் சமூக, அரசியல் செயல்பாடுகள், சாதனைகள், குணாம்சங்கள், குறைபாடுகள், குடும்ப வாழ்க்கை, பழைமையிலிருந்து வெளியே வருவதற்கான முயற்சிகள், வெற்றி, தோல்விகள் ஆகியவற்றை புரிந்துகொள்ள பெரும் உதவியாகும். அவரை இக்கட்டுரையில் மையப்படுத்து வதற்குமுன் காந்தி, கஸ்தூர்பா குடும்பங்களை பற்றிய சில தகவல்களை பின்னணியாக இங்கு பார்ப்போம். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் கஸ்தூர்பா கபாடியாவும் ஒரே ஆண்டில் -1869- குஜராத்தின் கடலோர ஊரான போர்பந்தரில் பிறந்தவர்கள். கஸ்தூர்பாவின் தந்தை கோகல்தாஸ் கபாடியா ஆப்பிரிக்க, அரேபிய மார்கெட்டுகளில் துணி, தானியம், பஞ்சு ஆகியவற்றில் வியாபாரம் செய்தவர். காந்தியின் தந்தை கரம்சந்த் காந்தி போர்பந்தர் ஆட்சியாளர் ராணாவிற்கு திவானாக செயல்பட்டவர். மோகன்தாசுக்கும் கஸ்தூர்பாவுக்கும் 7 வயதில் நிச்சயதார்த்தமும் 13 வயதில் திருமணமும் நடந்தது. காந்தியின் பேரனும் மோதிலால் காந்தியின் மகனுமான அருண் காந்தி – எல்லோருடைய கருத்துப்படி கஸ்தூர்பா அனைவரையும் தன்வயப்படுத்தும் பெண் ஆக இருந்தார் என்றும் அவள் புத்திசாலி, சுதந்திரமாக செயல் படுபவள்; பயமற்றவள்; மிகவும் அழகானவள் என்றும் தனது கஸ்தூர்பா-ஒரு வாழ்க்கை என்னும் நூலில் குறிப்பிடுகிறார்.
13 வயது மாப்பிள்ளை மோகன்தாஸ் கணவன் என்ற முறையில் சமவயதான மனைவி மீது அதிகாரம் செலுத்தத் தயங்கவில்லை.! இந்த அதிகாரத்தின் ஒரு முக்கிய மற்றும் சிறந்த அம்சமாக மனைவிக்கு ரகசியமாக எழுதப்படிக்கக் கற்றுக்கொடுக்கத் துவங்கினார். ஆனால் 120 ஆண்டுகளுக்கு முன்பு மாப்பிள்ளை சிறுவன் மனைவி என்ற சிறுமிக்கு கல்வி கற்பிப்பது ஊரே சிரிக்கக்கூடியது அல்லது பயனற்றது என்று கருதக்கூடிய விஷயம். இரவு நேரத்தில் படுக்கையில் மட்டுமே இதை ஓரளவு செய்ய முடிந்தது. தம்பதிகளின் இளமையின் விளைவாக உடலுறவுகள் தான் பெரும்பாலும் நடந்தது என காந்தி தனது சுய சரிதையில் பிற்காலத்தில் எழுதினார்! தனக்கு கல்வி பயிற்சி தேவையில்லை எனக் கணவரிடம் கூறுவதற்கு பதிலாக கஸ்தூர்பா இரவு கற்றுக்கொண்டதை காலையில் எந்த முயற்சியும் இன்றி மறந்துவிடுவாராம்! இதனால் குடும்பப் பெரியவர்களிடம் பொய் சொல்லத் தேவையும் இல்லை. காந்தி தம்பதிகளுக்கு 15 -லிருந்து 31வயதுவரை ஐந்து மகன்கள் பிறந்து முதல் குழந்தை மட்டும் ஓரிரு நாட்களில் இறந்துவிட்டது. இதற்கிடையில் காந்தி லண்டன் சென்று பாரிஸ்டராகத் திரும்பினார். பின் தென் ஆப்பிரிக்காவில் வழக்கறிஞராகவும் சத்யாகிரக போராளியாகவும் இருந்து 1915-இல் இந்தியா திரும்பி மகாத்மாவாகி 1948-இல் கோரச்சாவிற்கு ஆளானார். காந்தியின் நூல்களும் அவரைப் பற்றி உலகெங்கும் எழுதப்பட்டவையும் எண்ணற்றவை. இந்நூல்களில் கஸ்தூர்பா விற்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தைக் கண்டுபிடிக்க பூதக் கண்ணாடி தேவை. காந்தியின் சுயசரிதையில்கூட அவருடைய மனைவிக்கு இடஒதுக்கீடு 33 சதத்துக்கும் மிகக்குறைவே!!
தென் ஆப்பிரிக்காவில் கஸ்தூர்பா
இச்சிறு கட்டுரையின் அழுத்தம் கஸ்தூரிபா மீது இருக்க வேண்டும் என்பதே நோக்கம். (கஸ்தூர் என்பது அவர் பெயர். குஜராத்தியில் பா என்றால் தாய்) ஆனால் காந்தியின் ஆரசியல் தலைமை, தார்மீகக் கோட்பாடுகள், ஆன்மீகம் போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த பூதாகாரமான சர்வதேச தோற்றத்தின் நிழலில் நடமாடிய மனைவியின் வாழ்க்கை மீது காந்தியின் தாக்கம், அதை அவர் எதிர்கொண்ட விதம் போன்றவை பற்றி இன்னமும் ஆய்வுகளும் விவாதங்களும் தேவை. இக்கட்டுரையின் நோக்கம் மேற்கண்ட கேள்விகளுக்குள் மிக ஆழமாகப் போவதல்ல. அதே சமயம் கஸ்தூரிபாவின் சில தென்னாப்பிரிக்க, இந்திய, அரசியல், சமூக, பண்பாட்டு அனுபவங்கள்; மற்றும் கணவரின் சாகும் வரை உண்ணாவிரதங்கள், சத்தியாகிரகம், தனியாகவும், பெரும் திரளாகவும் மக்கள் முன்வந்து கைதாவது போன்ற அன்றைய புதிய போராட்ட வடிவங்களையும், பாகுபாடற்ற ஆஸ்ரம வாழ்வு போன்ற ஜனநாயக போக்குகளையும் அவர் எப்படி எதிர் கொண்டார்? மத பேதம், சாதீயம், தீண்டாமை போன்ற இந்துமத முள் வேலிகளிலிருந்து அவர் எந்த அளவுக்கு, எப்படி விடுபட்டார்? இவற்றை சுருக்கமாக அலசுவதே இங்கு சாத்தியம்.
காந்திக்கும் கஸ்தூர்பாவிற்கும் உதவியாளராக இருந்த ப்யாரேலால் நயார், அவரது சகோதரி, மருத்துவர் சுஷீலா நயார் எழுதிய காந்தியின் கண்ணாடியில் (In Gandhi’s Mirror) என்ற நூல் மற்றும் சுஷீலா நயாரின் படைப்பு கஸ்தூர்பா ஆகியவை இக்கட்டுரைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கஸ்தூர்பாவின் பேரன் அருண் காந்தி – மணிலால் காந்தியின் மகன் – கஸ்தூர்பா ஒரு வாழ்க்கை என்ற நூலை இந்தியாவில் 2000-இல் வெளியிட்டார். மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட 50வது ஆண்டின் நினைவாக. தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்த இவர் தனது மனைவி சுனந்தாவுடன் அமெரிக்காவில் வன்முறைக்கு எதிரான எம்.கே. காந்தி ஸ்தாபனம் – டெனெசி (M.K.Institute for Nonviolence in Tennessee) என்பதை 1991-ல் நிறுவினார். காந்தியின் கைதி – காந்தியின் மகன் மணிலால்-இன் வாழ்க்கை என்ற மிக விரிவான, மிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்ட நூல், மணிலால் காந்தியின் பேத்தியும், தென் ஆப்பிரிக்க குடி மகளுமான உமா துபேலியா மெஸ்த்ரியால் 2005-இல் வெளியிடப்பட்டது. கஸ்தூரிபா பற்றி எழுதப்பட்ட நூல்களில் திருப்தி பெறாத சமூக அறிவியலாளர் ராமச்சந்திர குஹா, கஸ்தூரிபா பற்றி முறையான சரித்திரம் இதுவரை எழுதப்படவில்லை என்று குறைபட்டுக் கொண்டு தான் இதை சரி செய்யப்போவதாக சமீபத்தில் இந்து பத்திரிகையில் கிட்டத்தட்ட சவால் விட்டிருக்கிறார்! சவாலின் விளைவை எதிர் நோக்குவோம்!!.
கஸ்தூர்பா காந்தி
காந்தியின் மனைவி அவருக்கு அருகாமையில் உட்கார்ந்திருந்த தோல் சுருங்கிப்போன ஒரு சிறிய, பரிதாபமான உருவம். அவர் மிகவும் நோய் வாய்ப்பட்டிருந்தார் என்றும் வெகு நாட்களுக்குப் பின் அவர் மற்றவர்களோடு அமர்ந்து சாப்பிடுவது இதுதான் முதல் முறை என்றும் அறிந்தேன். நான் பார்த்த முகங்களிலேயே பக்தி, ஈடுபாடு, இரக்கம் ஆகியவை நிரம்பிய அவர் முகம்தான் மிக அழகாக இருந்தது. அவர் முகச் சுருக்கங்களில்கூட அவருடைய மென்மையான, எதையும் தாங்கும் ஆன்மா (gentle and enduring spirit) பிரகாசித்தது.
1940களில் மிகப் பிரபலமான Life magazine என்னும் பத்திரிகையின் எழுத்தாளர் வில்லியம் இ. பிஷ்ஷர் (William E.Fisher) கஸ்தூர்பாவின் சாவிற்கு மூன்றாண்டுகளுக்கு முன் காந்தியை சந்திக்க வந்தவர், எழுதியது. (அருண் காந்தி நூலிலிருந்து)
The Story of my experiments with Truth – சத்தியத்தோடு எனது பரிசோதனைகள் பற்றிய கதை – என்ற காந்தியின் நூல் அவரை பற்றி ஏராளமான விஷயங்களைக் கூறுகிறது. ஆனால் அவர் மனைவியை பற்றி மிகக் குறைவாகவே உள்ளது. இந்நூல் எதேச்சையாக ஆனால் மிகத்தெளிவாக வெளிப்படுத்துவது இதுதான்: மோகன்தாஸ் பலவிதமான சத்திய சோதனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கஸ்தூர்பா அவற்றை அன்றாட வாழ்க்கையில் அனுபவித்துக்கொண்டிருந்தார், கஸ்தூர்பா சிறுவயதிலேயே பயத்தை அறியாதவர் என்கிறார் அருண் காந்தி. தன்னைப்போல் பயந்தாங் கொள்ளி அல்ல என்பதை பிற்காலத்தில் எழுதத் தயங்கவில்லை. சில எடுத்துக்காட்டுகள்.
நான் கோழையாக இருந்தேன் கொள்ளைக்காரர்கள், பிசாசுகள். பாம்புகள் பற்றியெல்லாம் நினைத்து பயந்து கொண்டிருந்தேன். இரவில் வெளியே போகவே மாட்டேன், இருட்டு எனக்கு உதறல் கொடுக்கும், இருட்டில் என்னால் தூங்கவே முடியாது. பேய்கள் ஒரு பக்கத்திலிருந்தும், திருடர்கள் ஒரு பக்கத்திலிருந்தும் வருவதாக கற்பனை செய்து கொள்வேன். ஆகவே, அறையில் வெளிச்சம் இல்லாமல் என்னால் தூங்கவே முடியாது. அவர் மேலும் எழுதியிருப்பதாவது:
என் பக்கத்தில் இருக்கும் மனைவியிடம் – அவள் ஒன்றும் குழந்தையல்ல, வாலிபத்தின் வாயிலில் இருந்தாள் – என்னுடைய பீதிகளைப் பற்றி எப்படி சொல்ல முடியும்? என்னைவிட அவளுக்கு அதிக தைரியம் உண்டு என்று எனக்குத் தெரியும். ஆகவே, எனக்கு வெட்கம். அவளுக்கு பாம்புகள், பேய் பிசாசு பற்றி பயம் கிடையாது. இருளில் எங்கேயும் போக முடியும். இந்த துணிச்சல்தான் குஜராத்தி மொழி மட்டும் தெரிந்த, பிராமணர் அல்லாத, ஆனால், பிராமயணீயத்தை முழுமையாக நம்பி கடைபிடித்த கஸ்தூர்பா கடல் கடந்து புதிய நாடான தென் ஆப்பிரிக்காவிற்குச் சென்று தனது கணவரின் பரிசோதனை கூடங்களான டால்ஸ்டாய் பண்ணைக் குடியிருப்பு, பீனிக்ஸ் குடியிருப்பு ஆகியவற்றில் பலதரப்பு, பல சாதிகளை சார்ந்தவர்களோடு ஒன்றாக வாழச் செய்தது, பல பழைய முடநம்பிக்கைகளை தகர்த்தது. ஆனால், தென் ஆப்பிரிக்காவில் பெரிய அளவிற்கு மறந்து போன தீண்டாமை உணர்வு, இந்தியாவிற்கு திரும்பிய பின் அகமதாபாத் கோச்ரப் ஆஸ்ரமத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட தம்பதியோடு சேர்ந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் உருவான போது, மீண்டும் அவர் மீது தொத்திக் கொண்டது. ஆனால், தன்னை திருத்திக்கொள்ள முயன்று வெற்றியும் கண்டார்.
காந்தியின் முட்கள் நிறைந்த பாதை- தீண்டாமை ஒழிப்பு நான் மிகவும் தைரியசாலிபோல் முகத்தை வைத்துக் கொண்டேன். உண்மையில் மிகவும் வெட்கத்தோடு வீட்டுக்கதவை மூடினேன். என்னை விட்டுவிட்டு என் மனைவியால் போக இயலாது என்றால் என்னாலும் அவளை விட்டு விட்டு போக முடியாது. எங்கள் இருவரிடையே ஏராளமான சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. என் மனைவியின் நிகரற்ற சகிப்புத்தன்மையால் இறுதியில் சமாதானமே நிலைத்திருக்கிறது. எப்போதும் அவளே வெற்றி பெற்றிருக்கிறாள் – காந்தி. காந்தி வகுத்துக்கொண்ட பாதை அவருக்கு சுலபமானதல்ல. கஸ்தூர்பாவைப் போல 13 வயதிலிருந்து அவரோடு நடந்து வந்தவரின் கதியைப்பற்றி கேட்க வேண்டாம்! ஆனால், இது முட்கள் நிறைந்த பாதை எனப்பட்டது. தீண்டாமைப் பிரச்சனையில் தம்பதிகளின் முரண்பட்ட நிலையை இதில் பார்க்கலாம்.
மேல் குறிப்பிட்ட நிகழ்ச்சி காந்தி பற்றி மிகவும் பிரசித்தியானது என்றாலும் சாதி வெறி இன்றும் தலை விரித்தாடும் சூழலில் மீண்டும் நினைவுபடுத்திக்கொள்வது பயனுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் அவர்கள் வீட்டில் தங்கிய கிருத்துவ, தலித் விருந்தாளி ஒருவர் தனது கட்டிலின் கீழ் வைக்கப்பட்டிருந்த மலத்துக்கான மண் பாண்டத்தை கழுவி வைக்கவேண்டும் என்று தெரியாமல் போய்விடவே அப்பணியை முகத்தை சுளித்துக்கொண்டே செய்ய முற்பட்டார் கஸ்தூர்பா. அவர் கண்களில் நீர் வழிந்துகொண்டே வீட்டு வாசலை தாண்டும்போது காந்தி பார்த்துவிட்டார். அதன்பின் என்ன நடந்தது என்பதை சத்தியத்துடன் எனது பரிசோதனைகள் என்ற அவர் நூலில் பார்க்கலாம். அவள் பாண்டத்தை முனகிக்கொண்டே எடுத்துப் போனது மட்டும் என்னை திருப்திப்படுத்தவில்லை. அவள் அதை மகிழ்ச்சியோடு செய்யவேண்டும் என எதிர்பார்த்தேன். என் வீட்டில் இத்தகைய-நான்சென்ஸை அனுமதிக்கமாட்டேன் என உரத்த குரலில் கூறினேன். என் வார்த்தைகள் அம்பைப்போல் அவளை குத்தின. உங்கள் வீட்டை நீங்களே வைத்துக்கொண்டு என்னை இங்கிருந்து போக விடுங்கள் என்றார். பரிதாபம் என்பது என்னுள்ளே உலர்ந்துவிட்டது. அவள் கையை பிடித்து தர தர என இழுத்துச் சென்று அவளை வெளியே தள்ள வாசல் கதவை திறந்தேன். கண்ணீர் வெள்ளமாய் பெருக அவள் கேட்டாள், உங்களுக்கு வெட்கம் இல்லையா? உங்களையே மறந்து இப்படி நடந்து கொள்வதா? நான் எஙகே செல்ல முடியும்? இங்கு எனக்கு உதவ யார் இருக்கிறார்கள்? உங்கள் மனைவி என்பதால் உங்கள் அடியையும், உதையையும் நான் பொறுத்துக்கொள்ள வேண்டுமா? முறையாக நடந்துகொண்டு கதவை மூடுங்கள். நாம் இருவரும் இப்படி நடந்து கொள்வதை யாரும் பார்க்காமல் இருக்கட்டும். நான் மிகவும் தைரியசாலி போல் முகத்தை வைத்துக்கொண்டாலும் மிகவும் அவமானப்பட்டு கதவை மூடினேன். பல சண்டை சச்சரவுகள் நடந்தாலும் இறுதியில் சமாதானமே நிலவியது. என் மனைவியின் நிகரற்ற சகிப்புத்தன்மையால் அவளே இறுதியில் வெற்றி பெறுகிறாள்.
பின்னால் கஸ்தூர்பா இந்நிகழ்ச்சி பற்றி மகன் மோதிலாலிடம் கூறியபோது இந்த வேலை தன்னை மிகவும் புண்படுத்தியது என்றும் ஆயிரமாயிரம் தலை முறைகளாக இந்து மதத் தலைவர்கள் என்ன போதித்தார்களோ அதை தான் மகிழ்ச்சியோடு புறக்கணிக்க வேண்டும் என்று தன் கணவர் எதிர்பார்த்ததை கடுமையாக நிராகரித்ததாகக் கூறினார். இத்தகைய ஒரு சிறு சம்பவம் காரணமாக தனது மனைவியை ஒரு கண்காணாத ஊரிலிருந்து விரட்டுவதை தன்னால் புரிந்துகொள்ள இயலவில்லை; பிற்காலத்தில் கூட இது அதிசயமாகவே இருந்தது என்றார். இந்நிகழ்ச்சி புரிய வைத்த ஒரு விஷயம், காந்தி தன்னுடைய நம்பிக்கைகளை எவ்வளவு ஆழமான மிகப் பெரிய விஷயமாக பார்த்தார் என்பது. தனது கணவரின் விசித்திரமான புதிய கருத்துக்கள் பலவற்றை தன்னால் எற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவருடைய சிந்தனை போக்குகளை புரிந்துகொள்ள முழு முயற்சி செய்ததாகவும் எப்போது சாத்தியமோ அப்போது அவருடைய விருப்பத்திற்கு இணங்கிப் போவேன் என்றும் கூறினார். மணிலால் இந்நிகழ்ச்சியை மிகத் தெளிவாக நினைவில் வைத்திருந்ததற்குக் காரணம் அவர் தந்தையின் கட்டுப்பாட்டைவிட அவர் தாயின் உறுதியான, அன்பான வழிகாட்டுதலே என்கிறார் அருண் காந்தி.
கோச்ரப் ஆஸ்ரம அனுபவம் – தீண்டாமை
காந்தி தம்பதிகள் இந்தியாவிற்கு திரும்பியபின் அஹமதாபாத்தில் வசித்த சில செல்வந்தர்களின் நிதி உதவியோடு கோச்ராப் என்னும் இடத்தில் ஆஸ்ரமத்தை கட்டி 25 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளோடு குடியேறினர். தென்னாப்பிரிக்காவில் பீனிக்ஸ் மற்றும் டால்ஸ்டாய் என்ற பெயரில் காந்தி உருவாக்கிய குடியிருப்பு களில் குடியிருப்புவாசிகள் ஏற்றுக்கொண்ட கடுமையான நிபந்தனைகள் இங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தியாவின் நிலைமையை கருத்தில் கொண்டு விசேஷமாக விதிக்கப்பட்டவை: அன்னிய நாட்டுத் துணிகளை அணிந்து கொள்ளக்கூடாது; எதற்கும் பயப்படக்கூடாது (காலனி ஆட்சியின் அநீதிகளை எதிர்ப்பதற்கு துணிச்சல் தேவையானதால்); தாழ்த்தப்பட்ட மக்களை தீண்டப்படாதவர்களாக நடத்தக்கூடாது. சில மாதங்களுக்குப் பிறகு ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பமான பள்ளி ஆசிரியர் துதாப், மனைவி தானிபென் , சிறு மகள் லட்சுமி- அங்கு குடியேறினர். யாரையும் தீண்டப்படாதவர்களாக நடத்த மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொண்ட ஆஸ்ரமவாசிகள் பலருக்கு – கஸ்தூர்பா உட்பட இது பெரும் பிரச்சினையை உருவாக்கியது. அக்குடும்பம் அங்கு வந்தது முதல் முறையாக உணவு அருந்தியபின் காந்தி தனது மகனை அழைத்து அவர்கள் தட்டுகளை கழுவும்படி கூறினார். இது ஆஸ்ரமவாசிகள் உட்பட அந்தப் பகுதி மக்களிடையே பெரும் ஆத்திரத்தை உருவாக்கியது. ஆசிரமத்திற்கு நிதி உதவியவர்கள் தங்கள் பங்கை திரும்பி பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் ஆஸ்ரமத்தை நடத்த நிதி இல்லை. ஆஸ்ரமத்தையே தீண்டப்படாதவர்கள் குடியிருப்பிற்கு மாற்றிவிடலாம் என்ற காந்தியின் ஆலோசனையும் நடை முறைக்கு கொண்டுவரப்பட வில்லை. அச்சமயம் குஜராத்தின் செல்வந்தர் அம்பலால் சாராபாய் நிதி அளித்து ஆஸ்ரமத்தை தொடர்ந்து நடத்த உதவினார். ஆனாலும் ஆஸ்ரமவாசிகள் தலித் தம்பதிகளை கீழ்த்தரமாகவே நடத்தினார்கள். இக் குடும்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஆஸ்ரமத்தை எப்போது வேண்டுமானால் விட்டுச்செல்லலாம் என்று காந்தி பிரார்த்தனை போது அறிவித்தார். பலர் வெளி யேறினர். காந்தி இவர்களுக்கு அளித்த ஹரிஜன் என்ற பெயரை கஸ்தூர்பா மற்றும் காந்தியின் நெருங்கிய உறவினர் தம்பதி – மதன்லால் காந்தியும் மனைவியும்- கூட ஏற்கவில்லை. ஆஸ்ரமத்தை விட்டுச் சென்ற இத்தம்பதிகள் நெசவு கற்றுக்கொள்ள மதராஸ் சென்று, மனம் திருந்திய பின் திரும்பினராம்.
காந்தியோடு எந்த தொடர்பும் கொள்ளாமல் இச்சூழலில் கஸ்தூர்பா அமைதியாக தனது வேலையை பார்த்தார். தனது நடத்தையால் காந்தியின் மனது எவ்வளவு ஆழமாகக் காயப் பட்டிருக்கும் என்பதை கஸ்தூர்பா உணராமல் இல்லை. பல வருடங்கள் வெளிநாட்டில் வாழ்ந்ததால் தனது கண்ணோட்டம் விரிவடைந்திருக்கும் என்று காந்தி நம்பியிருப்பார் என்றும் இதனால், மற்றவர்களின் நடத்தையைவிட, தனது நடத்தையால் அவர் நொந்து போயிருப்பார் என்றும் உணர்ந்தார். இவ்விசயத்தில் மனைவியின் நடத்தையை வெறுத்த காந்தி, அவர்கள் இருவரும் பிரிந்து விட வேண்டும் என்று கூட வலியுறுத்தினராம். இந்த சச்சரவு ஆஸ்ரமவாசிகளை மிகவும் பாதித்தது. அங்கு வசித்து வந்த காந்தியின் மகன்கள் தந்தையின் நிலைபாட்டில் உறுதியாக நின்றார்கள், இறுதியில் கஸ்தூர்பா தனது கருத்தை மாற்றிக் கொண்டார் என்று, உமா மெஸ்த்ரி குறிப்பிட்டுள்ளார். கஸ்தூர்பாவின் உணர்வு எப்படி மாறியது என்பதற்கு காரணமாக சிறுமி லட்சுமியை குறிப்பிடுகிறார் அருண்காந்தி.
தான் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை காந்தி தீர்மானிப்பதை அவர் விரும்பவில்லை. தனது கேள்விகளுக்கு பதில் கிடைக்க ஆண்டவனையே நம்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் என்கிறார் அருண் காந்தி. ஒரு நாள் காலை அரிஜன தம்பதியின் பெண் லட்சுமி விளையாடிக்கொண்டிருப்பதை நீண்ட நேரம் கவனித்த கஸ்தூர்பா, இக்குழந்தை எவ்வளவு வசீகரமானது; எப்போதும் சிரித்த முகத்தோடு உள்ளது என்று நினைத்தார். கஸ்தூர்பாவின் நினைவு பின் நோக்கிசென்றது. தென்னாப் பிரிக்காவில் டால்ஸ்டாய் பண்ணைவாசிகள் சத்தியாகிரகிகள் என்பதால் சிறையில் இருந்தபோது அவர்களுடைய குழந்தைகள் தனது கவனிப்பிலும் அரவணைப்பிலும் இருந்ததும் அம்மா என்று அழைத்ததும் நினைவிற்கு வந்தது. அக்குழந்தைகளை போற்றி வளர்க்கும் அம்மாவாக நடந்துகொள்ள தனக்கு கற்றுக் கொடுத்ததாக அவர் எண்ணினார். அச் சமயம் அச்சிறார்களில் பலர் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களைத் தான் அன்று சாதி ரீதியாக பார்க்கவில்லை என்பதும் அவர் நினைவில் வந்தது. அவர் வேறு விதமாக நினைக்கத் துவங்கினார்.:
டால்ஸ்டாய் பண்ணை குழந்தைகள் அனைவரும் ஆண்டவனின் குழந்தைகளாக இருந்ததால் துதாப், தானிபென் இருவரும் எப்போதும் இறைவனின் குழந்தைகள் தான். சிறுமி லட்சுமி நிச்சயமாக ஆண்டவனின் குழந்தைதான். அதோடு மட்டுமல்ல. தெய்வீக உண்மைகளை அளிக்கும் தூதர். மோகன்தாஸ் கூறியது சரிதான். நாம் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். ஏனென்றால் நாம் அனைவரும் ஆண்டவனின் குழந்தைகள்தான்.
பூரி ஜகன்நாதர் கோவில் தரிசனம் இமாலயத் தவறு
வயோதிக காலத்தில் காந்தி தம்பதிகள் அனைத்து விஷயங்களிலும் ஒன்றுபட்ட கருத்தை கொண்டதாகவே தெரிந்தது என்றும் அதற்கு மாறுபட்ட சம்பவம் ஒன்று பற்றி காந்தியின் முட்கள் நிறைந்த பாதை-யிலிருந்து கஸ்தூரிபா விலகிய ஒன்றாக இதை அருண் காந்தி குறிப்பிடுகிறார். ஒரிசாவில் காந்தி பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு கஸ்தூரிபா, தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த மருமகள் சுசீலாகாந்தி (அருண் காந்தியின் தாய்), காந்தியின் உதவியாளார் மஹாதேவ தேசாயின் மனைவி துர்காபென் ஆகியோர் காலையில் ஊரை சுற்றிப்பார்க்கச் சென்றனர். இந்தியாவில் உள்ள நான்கு மிகப் புனிதமான கோவில்களில் ஒன்று எனப்பட்ட பூரி ஜகன்நாதர் கோவில் அங்கு இருந்ததால் கஸ்தூரிபாவும் துர்காபென்னும் மட்டும் சாமி தரிசனத்திற்கு உள்ளே சென்றனர். ஹரிஜனங்களை உள்ளே விடாத கோவில்களுக்கு எந்த சுய மரியாதையுள்ள இந்துவும் போகக்கூடாதென்ற காந்தியின் அறைகூவலை சுசீலா தன் மாமியாருக்கு நினைவுறுத்தியும் அவர் அதை பொருட்படுத்தவில்லை. எல்லா கோவில்களும் அனைத்து இந்துக்களுக்கும் திறந்திருக்க வேண்டும் என்ற தேசிய இயக்கத்தில் கலந்து கொண்டவர்தான் கஸ்தூர்பா என்றாலும் கோவில் வாசல்வரை வந்துவிட்டு சாமி தரிசனம் செய்யாமல் வரமுடியவில்லை.
இளமையில் தான் வளர்க்கப்பட்ட தீவிர வழிபாட்டு சூழலை அவரால் எதிர்க்க முடியவில்லை. அன்று மாலை இச்செய்தியை கேட்ட காந்தியின் கோபம் உச்ச கட்டத்தை அடைந்தது. மஹாதேவதேசாயும் தனது மனைவிக்கு தீண்டாமை பற்றி சரியாக படிப்பித்திருந்தால் அவராவது கஸ்தூர்பாவை தடுத்திருப்பார் என்று காந்தி கூறியது தேசாயை தனது பணியிலிருந்து விலகும் அளவுக்கு உறுத்தியது. ஆனால் காந்தி அதை அனுமதிக்கவில்லை. சம்பந்தப்பட்ட நபர்கள் எல்லோரும் – சம்பந்தப்படாத நபர் காந்தி உட்பட – வழக்கமான மருந்தான உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் கஸ்தூர்பா இமாலயத் தவறு செய்ததாக அவர் மருமகள் சுசீலா கூறினாராம்.
தென்னாப்பிரிக்காவில் கஸ்தூரிபாயின் அரசியல் அரங்கேற்றம்
காலப்போக்கில் காந்தியின் சத்தியாகிரக போராட்டத்தின் அவசியத்தை கஸ்தூர்பா உணர்ந்து கொண்ட பின்னும் அதில் தான் பங்கெடுக்கும் நாள் வரும் என்பதை உணர்ந்திருக்கமாட்டார். அப்படிப்பட்ட நாள் வந்ததோடல்லாமல் அதில் காந்தியின் வற்புறுத்தல் எதுவும் இல்லை!
1913 ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் பீனிக்ஸ்-இல் ஒரு நாள் மாலை காந்தி தம்பதிகள் சமையல் அறையில் பேசிக் கொண்டிருந்தனர். காந்தி வெட்டிக்கொடுத்த காய்கறிகளை கஸ்தூர்பா வறுத்து எடுத்து கொண்டிருக்கும்போது, நீ இன்னும் சிறிது காலத்தில் என்னுடைய மனைவி என்னும் அந்தஸ்தை இழந்துவிடுவாய் என்று தெரியுமா உனக்கு? என்று மிக சாவதானமாகக் கேட்டாராம்! அடுப்பில் இருந்த பண்டத்தை கிளறிக்கொண்டிருந்த கஸ்தூர்பா, அதை அப்படியே விட்டு விட்டு தன்னை முழித்துப் பார்த்த மனைவிக்கு மேலும் விளக்கினார் காந்தி: தென்னாப்பிரிக்க அதிபர் ஜெனரல் ஸ்மட்ஸ் தான் இப்படி பேசியிருக்கிறார். தற்சமயம் நீ எனது சட்டப்பூர்வமான மனைவி அல்ல; வைப்பாட்டியாம். கிருத்துவ சடங்குகள்படி மனம் செய்துகொண்டவர்கள்தான் அங்கீகரிக்கப்படுவார்களாம். அய்யய்யோ! இதற்கு நாம் செய்ய முடியும்? என்ற மனைவியின் பதற்றமான கேள்விக்கு கணவரின் அமைதியான பதில்: நீயும் மற்ற பெண்களும் போராட்டத்தில் இறங்கி சிறைக்கு போகவேண்டும். இதை கஸ்தூரிபா வேடிக்கையாக எடுத்துக்கொண்டபோது ஏன் பெண்கள் சிறைக்குப் போனால் என்ன? என்று காந்தி புராணங்களிலிருந்து பெண்களின் வீரத்திற்கு சான்றுகள் ஆளித்தாலும் கஸ்தூர்பாவின் கவலை தீரவில்லை. சிறை உணவை எப்படி சாப்பிடுவது? என்ற மனைவியின் கவலைக்கு, நீ பழங்கள் மட்டும் கேட்டு வாங்கி சாப்பிடலாம் என்ற கணவரின் பதில் மேலும் எரிச்சலூட்டியது. முதலில் எனக்கு சிறை செல்ல வழி சொன்னீர்கள். பின் உணவின்றி சாகச் சொல்கிறீர்கள். நீங்கள் எத்தகைய மனுஷன் என்று ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தார் கஸ்தூரிபா. காந்தியோ தனது வாதத்தை மாற்றிக்கொள்ளாமல் நீ சிறையில் மரணமடைந்தால் நான் உன்னை தெய்வமாக வழிபடுவேன் என்றார் விடாப்பிடியாக. இதை கேட்டு கஸ்தூர்பா வாய்விட்டு சிரித்து அப்போது நிச்சயம் சிறை செல்வேன் என்றாராம். இந்து திருமணங்கள் செல்லாது என்ற அரசின் நிலைபாடு தென் ஆப்பிரிக்கா முழுவதிலும் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடில்லாமல் இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. இப்பிரச்சினையில் மிகுந்த ஆர்வம் காட்டிய பீனிக்ஸ் இந்துப் பெண்களை வன்முறையற்ற சத்தியாகிரகத்தில் ஈடுபடுத்த காந்தி முடிவெடுத்து அவர்களை தயார் செய்து கொண்டிருந்தபோது கஸ்தூர்பாவிடம் இது பற்றி பேசவில்லை.
கஸ்தூரிபாவின் முதல் சிறைவாசம்
செப்டெம்பர் 23, 1913. 16 குஜராத்தி பேசும் இந்தியர்கள். காந்தியின் 15 வயது மகன் ராம்தாஸ் உட்பாட12 ஆண்கள், கஸ்தூரிபா உட்பட 4 பெண்கள். இக்குழு பீனிக்ஸிலிருந்து ட்ரான்ஸ்வால் பயணித்த போது அதற்குத் தலைமை தாங்கியவர் கஸ்தூர்பா போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டாமென்று முடிவெடுக்கப்பட்டவர்களில் ஒருவரான 13 வயதான தேவதாஸ் காந்திக்கு இந்தியன் ஒபினியன் பத்திரிகை வேலைகள், மற்றும் வீட்டில் விடப்பட்ட குழந்தைகளை பராமரிப்பது போன்ற பணிகள் ஒதுக்கப்பட்டன.
துவக்கத்தில் பீனிக்ஸ்வாசிகளின் படையெடுப்பு பட்டியலில் தான் இல்லை என்று அறிந்த கஸ்தூரிபா கணவரை அழைத்து, நான் சிறை செல்ல தகுதியற்றவள் என்பதற்கு என்னிடம் என்ன குறைகள் உள்ளது? என்றார். எனக்கு உன்மீது எந்த சந்தேகமும் இல்லை. உன்னை நான் சிறைக்கு போகச்சொன்னால் நீ எனக்காக வேண்டி போகலாம். சிறையில் உடல் நலமின்றி போய்விட்டால் நான் உன்னை குறைகூற முடியாது. ஆனால், என்னால் என்னை மன்னிக்கவே முடியாது என்றார் காந்தி. கஸ்தூர்பா தன் நிலையிலேயே நின்று, சிறைக்கஷ்டங்களை உங்களாலும் என் மகன்களாலும் தாக்குப் பிடிக்க முடியும் என்றால் என்னால் மட்டும் ஏன் முடியாது? என்றார். நீ சற்று ஆழமாக சிந்தித்து முடிவெடு என்று கணவர் மீண்டும் வேண்டியபோது இதில் சிந்திப்பதற்கு ஒன்றுமில்லை. போராட்டத்தில் கலந்துகொள்ள நான் முழுமையாக தயாராகிவிட்டேன் என்ற பதிலே மனைவியிடமிருந்து கிடைத்தது.
பீனிக்ஸ் குழுவின் போராட்டம் பரம ரகசியமாக வைக்கப் பட்டது. இச்சிறு சத்தியாகிரகப் படை பீனிக்ஸ் எல்லையை கடந்து நேடால் போக முயற்சி செய்தபோது தங்கள் பெயர், மற்ற அடையாளங்கள் எதையும் போலிசிடம் தர மறுத்தனர். உடனே அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின் குற்றவாளிகள் என மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அரசால் கைது செய்யப்பட்ட முதல் பெண் சத்யாகிரகிகள் என்ற பட்டத்தை இப்பெண்கள் பெற்றுவிட்டனர்! முதல் சிறை வாழ்வின் கடுமையான சூழலை சமாளிப்பாதற்கான மன உறுதியை இவ்விளம் பெண்கள் பெற கஸ்தூர்பா உதவினார். ஏராளமான துனிகளை துவைப்பது, தைப்பது போன்ற கடினமான சிறை வேலைகளை முடிப்பதற்கு அவர் ஊக்கமளித்தார். சிறையில் அளிக்கப்படும் அசைவ உணவை பெண்களால் உண்ண முடியாது என்று பலமுறை அவர் கேட்டுப் பார்த்தும் பயனில்லை. மாலையில் பஜனை பிரார்த்தனைகள நடத்தினார்.
இதே சமயம் காந்தியால் அமைக்கப்பட்ட டால்ஸ்டாய் பண்ணை பெண்களில் 11 பேர் அவருடைய ஆலோசனை பேரில் நேடாலில் நுழைய முயற்சித்தனர். ஆனால் ஏமாற்றமே மிச்சம். போலிஸ் அவர்களை கைது செய்ய மறுத்து பெண்கள் கிளர்ச்சியை பலவீனப்படுத்தியது. திட்டமிட்டபடி நேடால் சிறை பெண்களுக்கு டால்ஸ்டாய் பண்ணை பெண்களால் உதவமுடியவில்லை. அதே சமயம் நேடால் சிறை பெண்கள் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. அழுகிப்போன பண்டங்களே சைவ உணவாக கொடுக்கப்பட்டன. நாங்கள் பணம் கொடுக்கிறோம். வெளியிலிருந்து உணவு வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டதற்கு, இது உணவு விடுதியா, சிறைச்சாலையா? என்ற பதிலே கிடைத்தது. மூன்று மாதக் குழந்தையோடு கைது செய்யப்பட்ட இளம் தாய் ஒருவர், மருத்துவ பராமரிப்பின்மையால் சிறையிலிருந்து வெளிவந்தவுடன் இறந்தார். உடலை உருக்கும் காய்ச்சலில் பலர் சிகிச்சையின்றி தவித்தனர். தனது 44 வயதில் கஸ்தூர்பாவிற்குக் கிடைத்த சிறைவாசம் அவர் எதிர்பார்ப்பிற்கு மேலாக உடலையும் உள்ளத்தையும் உருக்கிற்று. தானும் தனது கணவர், மகன்கள் மோதிலால், ராம்தாஸ் ஆகியோரும் ஒரே சமயம் வெவ்வேறு சிறைகளில் இருப்பதை எண்ணி உருகினார். ஆனால் தான் சிறைபட்டது தவறு என்று மட்டும் நினைக்கவில்லை. பீனிக்ஸ்-இல் காந்தி-யின் பத்திரிகையை நடத்திவந்தவர்கள் கைதான பிறகு சிறுவன் தேவதாஸ் மற்றும் அங்கு விடப்பட்ட சிறுவர்களும் சேர்ந்து அப்பத்திரிகையின் ஒரு இதழை கொண்டு வந்தது வரலாற்று புகழ் பெற்றது! காந்தி மற்றும் பெண்கள் சிறிய விஷயத்திற்காக சிறை படுத்தப்பட்டது பிரிட்டிஷ் இந்திய அரசு மற்றும் லண்டன் அரசு ஆகியவற்றில் விவாதிக் கப்பட்டு தென் ஆப்பிரிக்க அரசு கடுமையாக சாடப் பட்டது. இச்சூழலில்தான் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
கஸ்தூர்பா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்ததை அருண் காந்தி வர்ணிக்கிறார்:
கைதிகளை வெளியே விட்ட போது ஒரு மிகச் சிறிய, மெலிந்த, கவலை தோய்ந்த முகத்துடன் கூடிய ஒரு உருவம் முதலில் வெளிவந்த போது அவரை காந்தியும் மற்றவர்களும் மிக மென்மையான மரியாதையோடு வாழ்த்தி வரவேற்றனர். இதை பார்த்துக்கொண்டிருந்த பொது மக்கள் அவரை காந்தியின் தாயார் என்றே நினைத்தார்கள். காந்தியின் மகன்களுக்கும் இது மிக ஆச்சரியமாக இருந்ததாம். இந்த அனுபவத்திற்குப்பின் கஸ்தூர்பா மிகவும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடலாம் என்ற நிலையில் இருந்தபோது காந்தி பீனிக்ஸ்-இல் ஒன்றரை மாதம் தங்கி பணிவிடை செய்து அவர் குணமானபின்தான் இந்தியர்களின் பல பிரச்சனைகளை அரசோடு விவாதிக்க டர்பன் சென்றார்.
தொடரும்…