மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர் வர்க்கமும் V


முந்தைய கட்டுரைகள் உண்மையான தொழிற்சங்க இயக்கத்தை வளர்க்கிற போது அரசியல் உணர்வு – குறிப்பாக புரட்சிகரமான வர்க்க உணர்வை ஏற்படுத்தும் மூலாதாரமான நோக்கத்துடன் தான் கம்யூனிஸ்ட்டுகள் இப்பணியை செய்ய வேண்டுவது பற்றி விளக்குகிறது.

அரசியல்மயமாக்குவது என்ற கருத்துக் கூட மிகவும் பொதுப்படையான ஒன்றாகும். சொல்லப்போனால் ஏதாவது ஒரு வகையில் இதர கட்சிகளும் தொழிலாளர் மத்தியில் தங்கள் கட்சியின் அரசியலை போற்றுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக் கிறார்கள். அதனால் தொழிலாளர்களை அரசியல்படுத்துவதில் நாம் தவறியிருக்கிறோம் என்று பல தோழர்கள் விரக்தியுடன் விமர்சிக்கிறார்கள். மறுபக்கத்தில் தொழிற்சங்கப் பணிகளில் நாம் மூழ்கிவிட்டு கம்யூனிஸ்ட் பணிகளை செய்வதே இல்லை என்று பல தோழர்கள் வருத்தத்துடன் சொல்லுகிறார்கள். உண்மை என்னவென்றால் வெறும் தொழிற்சங்கப் பணிகளை – கோரிக்கை களுக்கான முயற்சியில் ஈடுபடுவது, தொழிலாளர்களின் அன்றாட பிரச்சனைகளை மட்டும் தீர்ப்பதற்கான முறையில் தொழிற்சங்கங் கங்களை நடத்தி செல்வது என்ற போக்கானது பரவலாக இருக்கத்தான் செய்கிறது.

அடிப்படையிலேயே பார்க்கும் போது தொழிற்சங்க இயக்கத்தை பலப்படுத்தாமல் கம்யூனிஸ்ட்டுகள் இருக்கவே முடியாது. இது வர்க்கத்தை முழுமையாக திரட்டுவதற்கான ஒரு முன்தேவையாகும். அந்த கடமையை உணர்வுப்பூர்வமாக நிறைவேற்றாமல் தொழிலாளி வர்க்கத்தை ஒருபுரட்சிகரமான வர்க்கமாக உருவாக்கி முன்னெடுத்துச் செல்ல முடியாது. தொழிற்சங்க இயக்கம் உடனடி கோரிக்கைகளுக்கான போராட்டம் போன்றவையெல்லாம் தொழிலாளர்களை வலுவான ஓர் அணியில் திரட்டும் ஆரம்ப நிலை நடவடிக்கைகளாகும். இதைச் செய்யாமல் நேரடியாக புரட்சிகரமான அரசியல் பணிகளை செய்து மட்டும் நமது நோக்கம் நிறைவேறும் என்று நினைப்ப தானது பகற்கனவாகும். மறுபக்கத்தில் இன்று தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றுவது என்றால் கோரிக்கை களுக்கான போராட்டங்களை நடத்தி அதற்கான கருவியாக தொழிற்சங்கத்தை வலுப்படுத்துவது தான் என்ற நடைமுறையும், எண்ணங்களும் ஆழமாக வேரூன்றியுள்ளது.

இவ்விரு போக்குகளும் புரட்சிகரமான கடமையைச் செய்வதில் நமக்குத் தடையாக இருக்கின்றன. புரட்சிகரமான அரசியல் பணி இன்றி தொழிற்சங்கப் பணிகளில் கம்யூனிஸ்ட்டுகள் ஈடுபடுவ தானது லட்சியமில்லாத ஒரு பயணமாக அமையும், அமைந் துள்ளது என்று அறிவோம். மாறாக, புரட்சிகரமான அரசியல் பணிகளும் தீவிரமான அரசியல் பிரச்சாரமும் மட்டும் செய்து தொழிற்சங்கப் பணிகளைப் புறக்கணிப்பதும் (அல்லது) ஏளனமாக பார்ப்பதும் வெறும் வாய்வீச்சு அரசியலாக மாறக்கூடும்.

இந்தப் பார்வையுடன் தான் முதல் பாகத்திலிருந்தே கம்யூனிஸ்ட்டுகளுக்கு தொழிலாளர்கள் மத்தியில் உள்ள பணிகளைப் பற்றி இருக்க வேண்டிய தெளிவான நோக்கங்களை விளக்கியிருக்கிறது.

அரசியல் பணி என்றால் என்ன?

முந்தைய கட்டுரைகளில் விளக்கியிருப்பது போல தொழிற்சங்க இயக்கம் சமுதாயத்திலும், சுற்றுவட்டாரத்திலும், நாட்டிலும், உலகிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நிகழ்ச்சிகள், மோதல்கள் போன்றவை குறித்தும் எதிரி வர்க்கங்களுடைய சூழ்ச்சிகளையும், பித்தலாட்டங்களையும் தெளிவாக – வர்க்க கண்ணோட்டத்துடன் தொழிலாளர்கள் மத்தியில் தெளிவாகவும், தொடர்ச்சியாகவும் விளக்குவது, உண்மையாகவே தொழிலா ளர்கள் மத்தியில் தொழிற்சங்க மேடைகளிலிருந்து செய்யப்படும் அரசியல் கடமைகளாகும். இது இல்லாமல் தொழிற்சங்கப் பணிகள் கூட வெற்றி பெற முடியாது. சில தொழிற்சங்கத் தலைவர்கள் விடாப்பிடியாக பிரச்சாரம் செய்வது போல நமக்கும் (தொழிலாளர்கள்) அரசியலுக்கும் சம்பந்தமே இருக்க வேண்டியது இல்லை. நாம் நமது கோரிக்கைகளை அடைவதற்கு மட்டுமே சங்கத்தை நடத்த வேண்டும். அரசியல் நமக்கு அப்பாற்பட்டது என்ற வாதங்களெல்லாம் உண்மையாகவே தொழிலாளர்கள் போராட் டத்தைப் பலஹீனப்படுத்துவதாகவே அமையும்.

ஆகவே தான், கம்யூனிஸ்ட்டுகளின் பார்வையில் அரசியல் பிரச்சாரம் இன்றியமையாதது என்ற போதிலும் அந்த வட்டத்தை தாண்டிச் சென்று புரட்சிகரமான அரசியல் பிரச்சாரத்தை செய்வதும், பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக தொழிலா ளர்களின் புரட்சிகரமான செயல்பாடுகளை வலுப்படுத்துவதும், அதற்கான வகையில் ஸ்தாபனத்தை கட்டுவதும் தனி முக்கியத்துவம் வாய்ந்த கடமைகளாகும்.

புரட்சிகரமான வர்க்கமாக உயர்த்துவது

நமது வர்க்கத்தை புரட்சிகரமான ஒரு வர்க்கமாக வளர்த்தெடுத்து, அடிப்படையான சமூக மாற்றத்திற்கான புரட்சிக்கடமையை நிறைவேற்றும் தலைமை தாங்கும் சக்தியாக உயர்த்துவதற்கு சில அடிப்படைப் பணிகளை கம்யூனிஸ்ட்டுகள் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

தனித்தன்மை வாய்ந்த இக்கடமைகளில் மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் பெற வேண்டிய காரியங்களில் தொழிலாளர் களுக்கு புரட்சி இயக்கத்தின் தத்துவத்தையும் நடைமுறையையும் போதிப்பதாகும்.

தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியின் காலத்தில்தான் இவ்வர்க்கத்தின் அரசியல் தத்துவார்த்த கருத்துக்கள் உருவாகி படிப்படியாக முன்னேறியுள்ளது.

வர்க்கப் போராட்டம் பற்றிய கண்ணோட்டம்

வர்க்கப் போராட்டத்தின் முக்கிய இலக்காகிய அடிப்படையான சமுதாய மாற்றம் இவற்றை இவ்வர்க்கம் உட்கொண்டது நீண்ட போராட்டத்தின் மூலமாகத்தான். 1848இல் கம்யூனிஸ்ட் அறிக்கை என்னும் மகத்தான நூலில் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகரமான நோக்கங்கள் பறைசாற்றப்பட்டது. அதற்குபின் வெறும் ஒரு தத்துவமாக மட்டும் நிற்காமல், உலக வரலாற்றினையே மாற்றியமைத்த மாபெரும் தத்துவமாக மார்க்சியம் இன்றும் திகழ்கின்றது. ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேலாக பல்வேறு புரட்சிகரமான மாற்றங்களுக்கு வழிகாட்டிய தத்துவமான மார்க்சியத்தைப் பற்றி தொழிலாளர்கள் மத்தியில் தொடர்ச்சி யாகவும், ஆழமாகவும் விளக்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது. வர்க்கப் போராட்டத்தை அதன் உயர்ந்த ஒரு கட்டமான சோசலிச புரட்சிகளுக்கு வழிகாட்டியது மார்க்சியம் என்பதை ஒருக்காலும் மறக்க முடியாது.

அதே போல இன்றும் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள பாட்டாளி மக்களையும், முற்போக்காளர்களையும் தேச விடுதலை விரும்பிகளையும் ஒன்றிணைக்கும் கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சிக்கு மிகப் பெரிய பாத்திரத்தை மார்க்சியம் வகிக்கிறது.

மகத்தான மார்க்சிய தத்துவங்களையும், அவற்றின் மூலம் வெற்றிக் கொடி நாட்டி வரும் சித்தாந்த கண்ணோட்டங்களையும் தொழிலாளருக்கு போதிப்பதன் மூலம் இவ்வர்க்கத்தை படிப்படியாக ஒரு புரட்சிகரமான சக்தியாக வளர்த்தெடுக்க முடியும். தொழிலாளர்களுக்கு தங்களின் வர்க்க போராட்டத்தின் ஜீவாதாரமான நோக்கங்கள் குறித்து புதிய தெளிவும், உணர்வும் ஊட்டுவதற்கு இந்த காரியம் இன்றியமையாதவை.

தத்துவம் மக்களின் மனதை கவ்விப்பிடிக்கும் போது கருத்துக்கள் ஒரு பலம் மிக்க பௌதிக சக்தியாக மாறும் என்ற பொருள்பட காரல் மார்க்ஸ் தீர்க்க தரிசனமாக சுட்டிக் காட்டியதை என்றும் மறக்கலாகாது. ஆகவேதான், தொழிலாளர்களில் சிறந்த ஊழியர்களுக்கு மார்க்சிய தத்துவத்தையும் புரட்சிகரமான அனுபவங்களையும், அரசியல் வகுப்புகள் மூலமும், பிரசுரங்கள் மூலமும் தொடர்ந்து விளக்கமளிப்பது கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஒரு அடிப்படையான கடமை.

இவ்வாறு செய்யும் போது, தொழிலாளி வர்க்கத்தை திசை திருப்பக்கூடிய பல்வேறு தவறான எண்ணப் போக்குகளையும் தத்துவங்களையும் விமர்சித்து மார்க்சிய பார்வையை வலுப் படுத்துவதும் ஒரு கடமையாகும். இதைச் செய்யா விட்டால் பூர்ஷ்வா வர்க்கத்தின் தவறான சித்தாந்தங்கள் தொழிலாளி வர்க்கத்தை திசை தெரியாத ஒரு பகுதியாக மாற்றும் நிலைமை ஏற்படும். ஆக, புரட்சிகரமான சித்தாந்தத்தை போதிப்பதும், எதிரி வர்க்க எண்ணங்களை முறியடிப்பதும் கம்யூனிஸ்ட்டுகளின் கடமையாகும்.

வர்க்கப் போராட்டம் என்பது கருத்துத்துறையில் மட்டும் நிற்பதில்லை. இக்கருத்துக்களெல்லாம் உயிரோட்டமாக வளர வேண்டுமானால், கருத்துப் போராட்டமும் நடைமுறை வர்க்கப் போராட்டங்களும் இணையத்தான் வேண்டும். அதாவது தொழிலாளி வர்க்கம் இதர உழைக்கும் வர்க்கங்களையும் திரட்டி உறுதியாக ஏராளமான போராட்டங்களை நடத்தும் போது அப்பகுதி மக்களுக்கு புரட்சிகரமான எண்ணங்களை ஏற்படுத்து வதும் அவற்றை அவர்களின் மனதில் ஆழமாக ஊன்ற வைப்பதும் இணைந்து நடக்க வேண்டும். தத்துவமும், நடைமுறையும் இணைந்தால்தான் பயனுள்ள புரட்சிகரமான இயக்கத்திற்கு வழிகாட்டியாக அமையும். ஆகவே, வலுவான தொழிற்சங்க இயக்கத்தை அதைச் சார்ந்து நிற்கக்கூடிய தொழிலாளி வர்க்க இயக்கத்தை கட்டுவதும் முன்னெடுத்துச் செல்வதும் கம்யூனிஸ்ட்டு களுக்கு ஒரு ஜீவாதாரமான கடமையாகும். ஆக, அரசியல் தத்துவார்த்த விளக்கங்களை அளிப்பது விரிவான, நேரடியான வர்க்கப் போராட்டங்களை நடத்திச் செல்வது ஆகிய இரண்டு கடமைகளையும் இணைத்தே பார்க்க வேண்டும்.

புரட்சிகரமான வர்க்கமாக உயர்த்துவது என்ற மேலே குறிப்பிட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு வலுவான ஸ்தாபன அமைப்பு இன்றியமையாதது. தத்துவம், நடைமுறை, ஸ்தாபனம் ஆகியவை பிரிக்க முடியாத வகையில் இணைந்து அமைந்திருக்க வேண்டும். வலுவானதொரு ஸ்தாபனம் இல்லாமல், தத்துவார்த்த பிரச்சாரத்தையும் நடத்த முடியாது. வர்க்கப் போராட்டங்களை உயர் மட்டத்திற்கு அழைத்துச் செல்லவும் முடியாது.

அத்தகைய ஒரு ஸ்தாபன அமைப்புதான் கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிஸ்ட் கட்சி என்பது தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் கட்சியாகும் என நாம் வரையறுத்துள்ளோம். தொழிலாளி வர்க்கத்தின், தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் ஏனைய உழைப்பாளி மக்களின் போராட்டங்கள் ஆகியவற்றின் மூலம் முன்னணிக்கு வரக்கூடிய சிறந்த ஊழியர்களைக் கொண்ட கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி கட்ட வேண்டும் என்பது ஸ்தாபன விதிகளில் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இந்த கட்சியை நடைமுறையில் உருவாக்குவதற்கு போராட்டங்களில், போர்க் குணத்தில், செயல்திறனில் தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் இருந்தும் முன்னணி பாத்திரத்தை நிறைவேற்றும் சிறந்த தோழர்களை கட்சியில் சேர்ப்பது இன்றியமையாத ஒரு பணியாகும். ஒரு ஆலையில் அல்லது ஒரு அரங்கத்தில் எவ்வளவு பெரிய போராட்டங்கள் நடந்த போதிலும், அப்பகுதியில் போர்க்குணமிக்க ஊழியர்களை எந்த அளவிற்கு கம்யூனிஸ்ட் டுகளாக மாற்றுகிறமோ, அந்த அளவிற்குத் தான் நாம் நம்முடைய புரட்சிகரமான கடமையை செய்ய முடியும். இப்பணி செய்யாமல், தத்துவார்த்த போதனைகளை தொடர்ச்சியாக வழங்காமல், புரட்சியைத் தலைமை தாங்கும் ஒரு அமைப்பாக கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க முடியாது. ஆக, தத்துவம், போராட்டங்கள், கட்சியை கட்டும் பணிகள் ஆகியவை ஒவ்வொரு கம்யூனிஸ்ட் டுடைய உயிர்மூச்சான கடமைகளாகும். ஒன்றரை நூற்றாண்டு வரலாற்றில் கம்யூனிஸ்ட் இயக்கம் மிகப் பெரிய சாதனைகளை அடைந்துள்ளது. தோல்விகளையும் சந்தித்துள்ளது. உலக சூழ்நிலையில் மிகப் பெரிய மாற்றங்களையும் காணுகிறது. தொழிலாளி வர்க்க இயக்கம் இடதுசாரி இயக்கங்களும் ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சிகளும், இன்றைய உலகில் பரவலாக வளர்ந்து வருவதை நாம் காண்கிறோம். இவ்வெழுச்சிகளில் பல முனைகளில் கம்யூனிஸ்ட்டுகள், மிகப் பாதகமான சூழ்நிலையில்கூட பயனுள்ள முறையில் பணியாற்றுகிறார்கள். ஏகாதிபத்திய நாடுகளானாலும், பின்தங்கிய நாடுகளானாலும், பல்வேறு போராட்ட அலைகள் மோதிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற் கெல்லாம் ஒரு இலக்கை முன்வைத்து முன்னேறுவதற்கு கம்யூனிஸ்ட்டுகள்தான் வழிகாட்டியாவர். இவ்வெழுச்சிகளில் தொழிலாளி வர்க்கம் பல்வேறு முறைகளில் முன்னணியில் நிற்பதை நாம் பார்க்கிறோம். இவ்வெழுச்சிகளெல்லாம் தொழிலாளி வர்க்கத்தின் மிகப்பெரிய செயல்கள் மூலம் மேலும், மேலும் வளர்ந்து வருகின்றது. ஆகவே, தொழிலாளி வர்க்கத்தை போராட்டங்களின் மூலம் ஒரு புரட்சிகரமான  சக்தியாக மாற்றுவதற்கு கம்யூனிஸ்ட்டுகள் முன்பை விட உறுதியுடனும், உணர்வுடனும் செயல்பட வேண்டியுள்ளது.

I, II, III, IV%d bloggers like this: