மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை-2


கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை-1

கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை-2

கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை-3

இந்திய சிறைகளில் கஸ்தூரிபா

வட்ட மேஜை மாநாடு (1931) பேச்சு வார்த்தைகள் லண்டனில் முறிந்துவிட்ட பிறகு நாட்டில் ஏற்பட்ட, அதிருப்தி, கோபம், எதிர்ப்புகளை அடக்க பிரிட்டிஷ் இந்திய அரசு சிவில் உரிமைகளை ரத்து செய்து, காட்டு தர்பாரை அவிழ்த்துவிட்டன. கைது செய்யப்பட்டவர்களில் கணிசமானவர்கள் பெண்கள் என்பது ஒரு ஆக்கப்பூர்வமான அம்சம். கஸ்தூர்பா மற்றும் ஆஸ்ரமத்துப் பெண்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது அவருக்கு வயது 62. தென் ஆப்பிரிக்கா சிறை வாசத்திற்கு 18 ஆண்டுகளுக்குப் பின் அவரது முதல் சிறை அனுபவம். ஆறு வார சிறை வாழ்விற்குப்பின் வெளி வந்து பூனாவில் யெரவாடா சிறைக்குச் சென்று பாபுவை பார்க்க வேண்டும் என்று தயாராகிக் கொண்டிருந்தவருக்கு ஒரு அதிர்ச்சி! சிறைவாசம் என்பது உரிமை மறுப்பு என்பதால் தனது பார்வையாளர்களை சந்திக்கப் போவதில்லை என்று காந்தி அறிக்கை விட்டார். அதே சமயம் தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில் “இது ‘பா’விற்குத்தான் மிக்க அதிர்ச்சியை அளிக்கும். ஆனால் அதிர்ச்சிகளைத் தாங்குவதற் கென்றே அல்லவா அவள் பிறந்திருக்கின்றாள். என்னோடு தொடர்பு உள்ளவர்கள் எல்லாம் இத்தொடர்பிற்காக ஒரு மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கிறது. இதில் மிகப்பெரிய விலையைக் கொடுக்கவேண்டியது ‘பா’தான் என்று சொல்லலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காந்தி சிறையில் இருந்தபடியால் சென்னையில் டிசம்பர் 3, 1932ல் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை கஸ்தூரிபா திறந்து வைத்தார். பல பெண்களோடு சேர்ந்து உரிமை பிரசாரத்தை நடத்தினார். கோச்ராப் ஆஸ்ரமத்தில் 16 ஆண்டுகளுக்கு முன் தாழ்த்தப் பட்டவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என்று கோரிய கஸ்தூர்பா பின்னர், தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணியில் நின்றது வரவேற்புக்குரியது. இதற்கு அரசு அளித்த விளக்கம் சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில் அவர் தொடர்ந்து ஈடுபட்டது. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் மீண்டும் சிறைவாசம். இரண்டு ஆண்டுகளில் ஆறு முறை சிறைவாசம்.! ஆறாவது முறை சபர்மதி சிறையில் மற்ற சிறைவாசிகளிடமிருந்து அவர் தனிமைபடுத்தப்பட்டார். அவரை சந்திக்க யாருக்கும் உரிமை கிடையாது. வாரத்திற்கு ஒரு முறை கணவருக்கு கடிதம் எழுதலாம். அல்லது அவரிடமிருந்து கடிதத்தை பெறலாம். இந்த தனிமை சிறையை பற்றி அருண் காந்தி எழுதுகிறார்: “கஸ்தூரிபா தனது 64 வயதுவரை  விழிப்பான நேரங்களில் தனியாகவே இருந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக தனியாக இருந்திருக்கிறார்.  ஆனால் விசித்திரமாக இந்தத் தனிமை அவருக்கு சங்கடத்தை அளிக்கவில்லை. இச் சிறைவாசத்தின் போது ஒரே வாரத்தில் அவருக்கு மூன்று பேரக்குழந்தைகள் பிறந்தது அவருடைய சோர்வை நீக்கி உற்சாகம் அளித்ததாம்!”

ராஜ்கோட்டில் ‘ட்ராம்பா’ தனிமை சிறையில் கஸ்தூர்பா

1938-ல் – தனது 69 ஆவது வயதில் கஸ்தூர்பா தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தின் பின்னணி  சுவாரசியமானது.  இச்சமயம் அரசாட்சியின் கீழ் இருந்த மைசூர், திருவிதாங்கோர், ஜதராபாத், ராஜ்கோட் போன்ற இடங்களில் சமஸ்தான ஆட்சியை எதிர்த்து மக்கள் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. காந்தி தம்பதிகள் முன்பு நன்கறிந்த, தங்கள் சொந்த ஊரான ராஜ்கோட்டின் திவானாக இருந்தவருடைய பேரன் தாகூர் என்பவரின் கொடுங்கோல் ஆட்சி எல்லையை  மீறியது. கிளர்ச்சியின்போது சிறை வைக்கப்பட்ட மக்களை விடுவிக்கவும் அரசியல் சீர்திருத்தக் குழுவை உருவாக்கவும் முதலில் ஏற்றுக்கொண்ட தாக்கூர் பிறகு அதிலிருந்தும் பின் வாங்கி விட்டார். இருப்பினும் துவக்கத்தில் தாகூர் மீது வலுவான மக்கள் இயக்கத்தை திருப்பிவிட காந்தி விரும்பவில்லை. காரணம் தாகூரின் தாத்தா ராஜ்கோட்டில் ஆட்சி செய்தபோது காந்தியின் தந்தை அவருடைய திவானாக பணியாற்றினாராம்.  ஆகவே தாகூர் ஆட்சியில் மக்கள் உரிமைகள் பறிக்கப்பட்டதற்கு காரணம் அந்த சமஸ்தானத்தின் ஆங்கிலேய அரசியல் ஏஜன்ட்தான் என்ற நிலைபாட்டை துவக்கத்தில் எடுத்தார். அச்சமயம் சுதந்திர தினமாக நிர்ணயிக்கப்பட்ட ஜனவரி 1939-ல்  ஒரு அடையாள  பூர்வமான எதிப்பியக்கத்தை தொடர வல்லாபாய் படேல் எடுத்த முடிவை காந்தி ஏற்றார். இவற்றை  சமரசபோக்காகத்தான் இன்று நாம் பார்க்க வேண்டியுள்ளது. இதே சமயம் தாகூர், ராஜ்காட்டின் பெண்களை மிகக் கேவலமாக நடத்துவதும் பலரை பாலியல் பலாத்காரம் செய்வதாகவும்; இதற்காகவே நகரத்திற்கு வெளியே (tramba) ட்ராம்பா என்ற கிராமத்தில் ஒரு கோடை கால பங்களா பயன்படுத்தப்படுவதாகவும் மக்களிடையே பரவலாக பேசப்பட்டது.

இந்தக் கொடுமைகளை எதிர்த்து அவ்வூர் பெண்கள் தாங்களாகவே சத்தியாகிரகத்தில் பங்கேற்று கைதாயினர். முதலில் இந்த எதிர்ப்பு தாகூரை கொஞசமும் பாதித்ததாகத் தெரியவில்லை. மாறாக பெண்களை பயப்படுத்தி வீட்டிற்குள் அடைக்கும் வகையில் வல்லபாய் படேலின் இளம் மகள் மணிபென் சிறை வைக்கப்பட்டார். இச்செய்தியை அறிந்தவுடன் கஸ்தூரிபாய் இப்போராட்டம் அரசியல் உரிமைகளுக்காக மட்டுமல்ல; இது பெண்களின் மானப்பிரச்சினையாகிவிட்டது என அறிவித்து உடனே ராஜ்கோட் சென்று சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். அவரோடு அம்பலால் சாராபாயின் மகள் மிருதுல் சாராபாயும் ராஜ்கோட் சென்றுவிட்டார்.

இதையொட்டி காந்தி ஹரிஜன் பத்திரிகையில் (ஜனவரி 31, 39) எழுதியது: “என் மனைவிக்கும் எனக்கும் ஒரே வயதுதான். என்னால் சிறை வாழ்க்கையை தாக்குப்பிடிக்க முடிவது போல் அவளால் முடியாது. இருப்பினும் அவள் ராஜ்கோட்டிற்கு போவது என்று முடிவு செய்துவிட்டாள். ”  தாகூரின் ஈனத்தனத்தின் சான்றாக இரண்டே நாட்களில்  கஸ்தூர்பா சிறை படுத்தப்பட்டது எங்கே தெரியுமா?  ட்ராம்பா பங்களாவில்!  இவை குறித்த விவரங்கள் காந்திக்கு தெரியாவிட்டாலும் அவர் ஹரிஜனில் (பிப்ரவரி 6, 1939) எழுதியதின் சுருக்கம்: ” ராஜ்காட் போராட்டத்தில் என் மனைவி ஈடுபடுவார் என நான் நினைக்கவில்லை…..இந்திய வரை படத்தில் ராஜ்காட் முக்கியத்துவம் அற்ற இடம்தான். ஆனால் எனக்கும் என் மனைவிக்கும் ராஜ்கோட் அப்படிப்பட்டதல்ல. ராஜ்காட் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு கட்டம் முன்னேறியது. இறுதியில் இப்போராட்டம் வெற்றி பெறும் போது கஸ்தூர்பாவிற்கும் அதில் பங்கு உண்டு. மிக்க வயதானவர்களும் உடல் தளர்ந்தவர்களும்கூட சத்தியாகிரக போராட்டத்தில் பங்கு கொள்ளலாம்;  அவர்களுக்கு உறுதியான இருதயம் இருந்தால். ட்ராம்பா சிறையில் கஸ்தூரிபா தனிமையாக ஒரு வாரம் ஒரு இருட்டு அறையில் வைத்து பூட்டப்பட்டார்! காரணம்? யாருடனும் எந்த தொடர்பும் இன்றி இருட்டில் தன்னந்தனியாக விடப்பட்டால்  பயந்து போராட் டத்தை விட்டுவிடுவார் என்ற நப்பாசை தாகூருக்கு. “காரணம் பட்டத்து இளவரசனுக்கு கஸ்தூர்பாவை பற்றி ஏதும் தெரியாது. அவருக்கு ஊசலாட்டமே கிடையாது; புகார்களும் செய்ய மாட்டார் என்று. இப்படிப்பட்ட  கஷ்டங்களுக்கு பெயர்தானே சிறைவாசம் என்று ஆப்பிரிக்க சிறைகளிலிருந்து பிரிட்டிஷ் அரசின் இந்திய சிறைகள், சமஸ்தானங்களின் சிறைகள் என்று பல வகைகளையும் அனுபவித்து புரிந்து கொண்டவர்.  ஆனால், இதுதான் அவருடைய முதலாவது தனிமை சிறை. அதுவும் நகரத்திற்கு பல மைல்களுக்கு அப்பால் இருந்த இருண்ட சிறையில். இதையெல்லாம் புரிந்த கொள்ளாதவர் மட்டுமல்ல இளவரசர் தாகூர். இச்சிறை தண்டனையை ஒட்டி போர்பந்தர் தெருக்களில் மக்கள் எழுச்சியையும் அவர் சரியாக எடை போடவில்லை. ஆனால் மக்கள் கோபத்தை ஓரளவு தணிக்க தனி சிறைகளில் அடைக்கப்பட்ட  மிருதுளா சாராபாய் (அம்பலால் சாராபாயின் மகள்) மற்றும் வல்லபாய் படேலின் மகள் மணிபென் படேல் இருவரும் கஸ்தூர்பாயின் சிறை தோழர்களாக இருக்க ஏற்பாடு செய்தார்.

ராமபிரான் எப்போதும் உன்னுடன் இருக்கும்போது, உனக்கு தனிமையே இல்லை – காந்தி

தன் மனைவியின் தனிமை சிறைவாசத்தை பற்றி பின்னால் தெரிந்துகொண்ட காந்தி அவருக்கு எழுதிய கடிதத்தில், “தனிமையில் இருப்பது பற்றியும் உனக்கு நல்ல அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நான் ஒன்றை மறந்துவிட்டேன். நீ எப்போது தனியாக இருந்திருக்கிறாய்? ஸ்ரீராமர் எப்போதும் உன்னுடனே இருந்திருக்கிறார் அல்லவா? அவர் உன்னோடு இருக்கும்போது மற்றவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது ஒரு பொருட்டே இல்லை” என்றிருந்தது. ராஜ்காட் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பாத காந்தி இறுதியில் அங்கு செல்ல வேண்டியிருந்தது. காரணம் தனது மனைவி மற்றும் பல பெண்கள்  சிறையில் அடைக்கப்பட்டதல்ல.  மாறாக,  ராஜ்காட்டில் கைதான மக்கள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்ற செய்தியே. சமஸ்தான அரசு எந்த நிர்ப்பந்தத்திற்கும் அசையாததினால்  சாகும் வரை உண்ணாவிரதம் என்ற தனது ராமபாணத்தை உபயோகித்தார்.  இது பற்றிய தகவலை இளவரசன் தாகூர், பிரிடிஷ் அரசின் வைஸ்ராய் ஆகியோருக்கு காந்தி அனுப்பி வைத்தார். இந்தியாவின் ஒரு மூலையில் துவங்கிய ஒரு சிறு சச்சரவு பூதாகரமான தேசீய அரசியல் பிரச்சினையாக மாறியது. உண்ணாவிரதம் குறித்து அவர் சிறையில் இருந்த கஸ்தூர்பாவிற்கு அனுப்பிய குறிப்பில், “இச் செய்தியை கேட்டபின் உன்னால் அமைதியாக இருக்க முடியாதென்றால் நான் இருக்கும் இடத்திற்கு நீ வரலாம்” என்றும்  இதை அனுமதிக்குமாறு அரசு அதிகாரிகளை கேட்க வேண்டும் என்றும் கஸ்தூரிபா  விரும்பினால் தான் அப்படியே கேட்பதாகவும் செய்தி அனுப்பி இருந்தார்.

காந்தியும் சிறைப்பட்டிருக்கிறார் என்று நினைத்த கஸ்தூர் பாவிற்கு அப்போதுதான் உண்ணாவிரதத்தை பற்றித் தெரிய வந்தது. அவருடைய உணர்வுகளை அருண் காந்தி விவரிக்கிறார், “பா அதிர்ச்சியடைந்தார். தனது மனைவி தன்னோடு இருப்பதை விரும்புவார் என்பதற்காக இக்கோரிக்கையை வைப்பது சத்யாகிரகத்தின் கோட்பாடுகளை மீறுகிறது என்று கருதினார். இந்த உண்ணாவிரதம் எவ்வளவு அபாயகரமானது என்றாலும் கூட இச் சூழலில்” நான் ஒருக்காலும் அங்கு வரமாட்டேன், அவரைப் பற்றிய செய்தி எனக்கு தினசரி கிடைத்தால் போதும். நான் இங்கு நிம்மதியாக இருப்பேன். இதற்கு முன் அவர் ஆளான பல்வேறு சோதனைகளிலும் அவரை பாதுகாத்த கடவுள் இப்போதும் அவரை பேணிக்காப்பார் என்றார். மூன்றாம் நாள் உண்ணா விரதத்திற்குப்பின்  அரசு கஸ்தூர்பாவை விடுவித்து காந்தியின் இருப்பிடத்தில் கொண்டு விட்டது. சில நாட்களுக்கு முன் தனது இருப்பிடத்திற்கு வருகிறாயா என்று மனைவிக்கு எழுதிய காந்தி இப்போது கேட்ட முதல் கேள்வி-“நீ எப்படி இங்கு வந்தாய்?” கஸ்தூரிபாவின் பதில், “அரசு என்னை விடுவித்தது” “உன்னுடன் இருந்த மணிபென், மிருதுளா எங்கிருக்கிறார்கள் என்று கணவர் கேட்டவுடன் கஸ்தூர்பா அவ்விளம் பெண்கள் பற்றி கவலைப் படாமல் கனவனோடு இருக்கப்போகிறோம் என்ற  ஆர்வத்தில் இங்கு வந்து விட்டதை  உணர்ந்து, “இன்று மாலையே நான் அங்கு போய் அவர்களோடு இருப்பேன்” என்றார். உன்னை மீண்டும் கைது செய்ய போலீஸ் மறுத்துவிட்டால் என்ன செய்வாய்?” என்ற கணவரின் கேள்விக்கு, ” அரண்மனை வாயிலிலேயே இருப்பேன்” என்று பதிலளித்த கஸ்தூர்பா அன்று மாலையே மீண்டும் அங்கு சென்று அந்த இளம் சகோதரிகளோடு இரவைக் கழித்தாராம். மறுநாள்  இருவரும் விடுவிக்கப்பட்டனர்.  சத்யாகிரஹிகளின் கோரிக்கைகளில் பலவற்றை ஏற்பதாகக் கூறியபின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

“Do or Die” – “செயலில் இறங்குவோம் அல்லது சாவோம்” – காந்தி

இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பான் நுழைந்து  தென் ஆசியாவில் ஒரு பெரும் அபாயம் (threat) ஏற்பட்டபோது பிரிட்டன் இந்திய மக்கள் தலைவர்களை கேட்காமல் இந்திய ராணுவத்தை யுத்தத்தில் ஈடுபடுத்தியது.உடனடியாக இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்காவிட்டால் காந்தியின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் துவக்கப்படும் என அறிவிக்கப்படது. இது பற்றி முடிவெடுக்க ஏ.ஐ.சி.சி. பம்பாயில் கூடியபோது   பொதுக் கூட்டத்தில் பேசிய காந்தி,”..ஒரு சிறிய மந்திரத்தை உங்களுக்கு நான் அளிக்கிறேன்..”Do or die” செயலில் இறங்குவோம் அல்லது சாவோம்” என்றார். மறுநாள் காலை காந்தி கைதானார்.  அன்று மாலை காந்தி சிவாஜி பூங்காவில் உறையாற்றுவதாக இருந்ததால் பூங்காவில் மக்கள் நிரம்பி வழிந்தனர். அவருக்கு பதிலாக யார் பேசுவது என்று தெரியாத, ஒருவரும் எதிர்பாராத நிலையில், “..கஸ்தூரிபா சன்னமான அதே சமயம் உறுதியான குரலில்,   ‘யாரும் மனம் தளர வேண்டாம். நான் பேசுகிறேன் என்றார்.’  அக்குழுவில் அதிர்ச்சி யான நிசப்தம் நிலவியது. அவர் பொதுக்கூட்டத்தில் பேசி யாரும் கேட்டதில்லை. அவர் எப்போதும் காந்தியின் மனைவி என்ற எந்த ஆரவாரமும் இல்லாமல் பலதரப்பட்ட பணிகளை அமைதியாக செய்துகொண்டிருந்தவர். அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் ஏற்பட்டது.

‘இது மிகவும் அபாயகரமானது. உங்களால் இன்னொரு சிறை வாசத்தை தாங்க முடியாது’ என்றெல்லாம் வற்புறுத்தியும், கஸ்தூர்பா:’ சுத்த அபத்தம். நம்  தேசமே சிறையில் அடைக்கப்படும்போது நான் மட்டும் வெளியே உட்கார்ந்திருப்பேன் என எதிர்பார்க்கிறீர்களா’? என தன் நிலைபாட்டை நியாயப்படுத்தி விட்டார். அப்போதுதான் நீண்ட காய்ச்சலிலிருந்து தேறி, காந்தியுடன் பம்பாய் வந்திருந்த கஸ்தூர்பா அவருடைய வெற்றிடத்தை நிரப்ப தன்னால் ஆனதை செய்யத்துவங்கினார்.  மக்களுக்கான தனது செய்தியை மிகச்சுருக்கமாக சொல்லி சுசீலா நய்யாரை எழுத வைத்தார்.

மறுநாள் கூட்டத்திற்கு கிளம்பிய கஸ்தூர்பாவிடம் “செய் அல்லது சாவு” என்றெழுதிய badge-ஐ அளித்தபோது “இம்மந்திரம் என் நெஞ்சில்  பொறிக்கப்பட்டுள்ளபோது இதை நினைவுறுத்த எனக்கு ஒரு காகிதம் தேவையா?” என்று கேட்டாராம் அவர். வண்டியில் ஏறும்போது ஒரு இந்திய போலிஸ் அதிகாரி “அம்மா தயவு செய்து நீங்கள் கூட்டத்திற்குப் போக வேண்டாம். உங்களை கைது செய்யப்போகிறீர்கள்” என தன்னுடைய காக்கி உடுப்பின் நியதிகளை மீறி அவரை வேண்டிக் கொண்டபோதும் “தங்கள் மகன்களும் மகள்களும் பிரிடிஷ் அரசால் துன்புறுத்தப்படும்போது எந்தத்தாயால் வீட்டில் இருக்க முடியும்? என்று கேட்டு  மோட்டர் வண்டியை நோக்கி ஒரு போர் வீரரை போல் நடந்ததாராம்!  சிவாஜி பூங்காவில் காந்தியின் உரையைக் கேட்க மக்கள் நிரம்பி வழிந்தனர். ஆனாலும் காந்தி அங்கு உரையாற்றமாட்டார் என்பதைக் கேட்டு அவர்கள் இடிந்து போய்விடவில்லை.  யாரும் சிறிதும் எதிர்பாராமல் கஸ்தூரிபா ஆற்றிய இரு நிமிட மிகச்சுருக்கமான உரை அமோகமான வரவேற்பை பெற்றதாக அருண் காந்தி எழுதியுள்ளார்.

கஸ்தூரிபாவின் கைது அரசினால் முன்னதாகவே திட்டமிடப் படாததால் அவருக்கான சிறை பற்றி முடிவெடுக்கவில்லை.  அதனால் அவரையும் சுசிலா நயாரையும் விலை மாதர்கள் மற்றும் சிறு திருடர்களுக்குமான, இருட்டும் எருக்கமுமான ஒரு அறையில் அடைத்து வைத்தனர். சாக்கடையிலிருந்து வெளிவரும் கேஸ்-இன் நாற்றம் மூக்கை துளைத்தது. 72 வயது கஸ்தூரிபாவிற்கு  இரவெல்லாம் வயிற்றுப் போக்கு.

சிறை உணவிற்கு பதிலாக பழம் கேட்டு போராடியபின் மாலை இரு ஆப்பிள் பழம் மட்டும் கொடுக்கப்பட்டது. மறு நாள் அந்த ‘டன்ஜன்’ – இங்கு  கொண்டுவரப்பட்ட ஒரு இளம் காங்கிரஸ் பெண் தன்னிடமிருந்த காசையெல்லாம் சிறைகாப்பாளரிடம் அளித்து கஸ்தூர்பாய்க்குத் தேவையான மருந்துகளை வாங்கிக் கொடுக்கும் படி வேண்டினாராம். இதற்குப்பின் பூனாவில் காந்தி சிறை வைக்கப்பட்டிருந்த ஆகாகான் அரண்மனைக்கு கஸ்தூரிபாவும் சுசீலா நயாரும் அனுப்பப்பட்டனர். காந்தி இங்குதான் இருக்கிறார் என்று அறிந்து மிக்க ஆர்வத்துடன் அவர் கணவரிடம் சென்றபோது அவர் கேட்ட முதல் கேள்வி, “உன்னை இங்கு அனுப்பவேண்டும் என்று நீ அதிகாரிகளிடம் கேட்டாயா?” என்பதே. “நிச்சயமாக இல்லை. நான் எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை. நாங்கள் எங்கே அனுப்பப்படுகிறோம் என்பதே எங்களுக்குத் தெரியாது.” உண்மையை அறிந்த பிறகுதான் காந்தியின் முகத்தில் புன்னகை தெரிந்ததாம்!

கஸ்தூர்பாயின் இறுதி நாட்கள்

சிறையில் கஸ்தூர்பா குஜராத்தி பத்திரிகைகளை படிப்பாராம். சிலசமயங்களில் அவர் சோர்வடைந்து கேட்பது,: “இந்த பிரம்மாண்டமான பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து பாபுஜி எப்படி வெற்றி பெற முடியும்?” ஒரு நாள் சுசீலா நயாரை கேட்டாராம்:”ஆண்டவன்கூட நமக்குத் எதிராகத்தான் இருக்கிறார். இல்லையென்றால் மஹாதேவ தேசாய் ஏன் சாக வேண்டும்? பிராமணர் ஒருவர் செத்தார் என்றால் அது மிக மோசமான முன் குறியாகும்.” இந்த சம்பாஷணையை கேட்ட காந்தி, “ஆமாம் மாஹாதேவின் சாவு பிரிட்டிஷ் அரசிற்கு ஒரு மோசமான அறிகுறிதான். ஆனால் நமக்கோ மஹாதேவின் சாவு என்பது சுதந்திரம் பெறுவதற்கு மிகத்தூய்மையான பலிபீடம் ஆகும்”. என்றார். தலித்துகள், தீண்டப்படாதவர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்யிலிருந்து ருமளவு கஸ்தூர்பா விடுபட்டதாக வைத்துக்கொண்டால் கூட, சாதி முறைமையில் அவருக்கு  ஆழமான நம்பிக்கை இருந்தது என்பதை மேற்கண்ட கருத்து நிரூபிக்கிறது. ஆகாகான் சிறையில் வீட்டு வேலைகள் செய்வது, படிப்பது ஆகியவற்றை தவிர பூப்பந்தாடுவது போன்றவைக்கு இடம் தயார் செய்ய சொல்லி இருந்தார் காந்தி. கஸ்தூரிபாவிற்கு கேரம் விளையாட்டு மிகவும் பிடித்தது. சிறை கண்காணிப்பாளர் உட்பட பலரோடு மிகவும் சுவாரசியமாக ஆடுவாராம்.

காந்தி தம்பதிகள் ஒன்றாக வைக்கப்பட்ட இச்சிறைவாசத்தின் போது கஸ்தூர்பா பலமுறை மார்வலியால் பாதிக்கப்பட்டார். ஒரு நாள் கஸ்தூரிபா அவரிடம் கேட்டது,” ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு போகவேண்டும் என்று நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? நம் நாடு மிகப் பெரியது. இங்கே நாம் அனைவரும் வாழலாமே.” இதற்கு காந்தியின் பதில், “ஆங்கிலேயர்கள் இந்நாட்டின் ஆட்சியாளர்கள் என்ற ரீதியில் தான் வெளியேற வேண்டும் என்கிறோம். அவர்கள் ஆட்சியாளர்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டவுடன் அவர்களோடு நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.” மனைவியின் மேற்கண்ட கேள்விக்கு உடனடி பதில் அளித்த கணவரால் அவரது அடுத்த கேள்விக்கும் உடனடியாக பதில் அளிக்க இயலவில்லை. “ஹரிலால் எங்கே இருக்கிறான்? அவனை நான் பார்க்க வேண்டும்” என்றார். உண்மையில் ஹரிலால் வெகு தொலைவில் இல்லை. சிறையில் தன் தாயின் உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டவுடன் பூனா வந்து சிறைக்குப் போனபோது குடிபோதையின் உச்சத்தில் இருந்ததால் அவரை உள்ளே விடவில்லை. மீண்டும் அவர் சிறைக்கு வந்தபோது காச நோயால் பீடிக்கப்பட்டு மிக மோசமாக காணப்பட்டார். தாய் மகன் சந்திப்பு மிகக் குறைவான நேரம்தான் என்றாலும் உள்ளத்தை உருக்குவதாக இருந்ததாம்.  ஹரிலால் தன்னை சந்திக்க ஒரு முறைதான் அனுமதி கொடுக்கப்படும் என்றறிந்த கஸ்தூரிபா தனது மற்ற இரு மகன்களுக்கும் அனுமதி கொடுப்பது போன்று ஹரிலாலுக்கும் வேண்டும் எனக் கோரினார். அனுமதி கொடுக்கப் பட்டது. ஆனால் ஹரிலால் யார் கண்ணிலும் படவில்லை. இரண்டு நாள் கழித்து சாராயவாடை, உடல் புழுதியோடு தள்ளாடிக் கொண்டும் முனகிக்கொண்டும் தன் அறைக்குள் போலிசால் அழைத்துவரப்பட்ட மகனைக் கண்டதும் கஸ்தூரிபா அதிர்ச்சி யடைந்து தலையில் அடித்துக்கொண்டு அழுதாராம். “ஹரிலால் அந்த அறையிலிருந்து, அரண்மனை சிறையிலிருந்து தன் தாயின் வாழ்க்கையிலிருந்து வெளியே தள்ளப்பட்டார்” என்கிறார் அருண் காந்தி.

இந்நிகழ்ச்சி நடந்து ஐந்து நாட்களுக்குள் கஸ்தூர்பா காந்தியின் தோளில் சாய்ந்தபடியே மரணத்தை எதிர்கொண்டார். சிறை வளாகத்திலேயே நடந்த இறுதி சடங்கில் பகவத்கீதை, குரான், பைபிள், பார்சி மக்களின் மத நூல் ஆகியவற்றிலிருந்து சில பகுதிகள் படிக்கப்பட்டன. காந்தியின் 65 ஆண்டு கால வாழ்க்கை துணைவியின் உடல் நெருப்பால் பொசுக்கப்பட்டபோது அவர் கூறியது: என்னுள் இருந்த சிறந்த பாதி இறந்துவிட்டது. நான் இப்போது என்ன செய்யப் போகிறேன்.

I

– தொடரும்%d bloggers like this: