மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கற்பு-கருத்து சுதந்திரம்-கலாச்சாரம்


“சுதந்திரம் என்றால் நான் எதைக் கூறுகிறேன்? தேக சம்பந்தப்பட்ட சுதந்திரம் என்று சொன்னால் பிறர் சந்தோஷத்திற்குப் பாதகம் ஏற்படாதபடி நான் எதை செய்யவும் எனக்கு உரிமை வேண்டும். அறிவு சம்பந்தப்பட்ட சுதந்திரம் என்று சொன்னால், சரியாக நினைக்கும் சுதந்திரமும், தவறாக நினைக்கும் சுதந்திரமும் எனக்கு வேண்டும். சத்தியத்தை அடைவதற்கு சாதனமாயிருப்பது சிந்தனை. நமக்கு சத்தியம் இன்னதென்று தெரிந்திருந்தால், நாம் சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை”.

– இங்கர்ஸால்

சமீபத்தில், திரைப்படக் கலைஞர் குஷ்பு, பெண்களது பாலியல் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையை உருவாக்கியது. பின்னர் சுகாசினி தெரிவித்த கருத்து மேலும் பிரச்சனையை ஏற்படுத்தியது. எனினும், தற்போது, குஷ்புவும், சுகாசினியும் என்ன சொன்னார்கள்? அது சரியா? தப்பா? என்ற தளத்திலிருந்து, அப்படி செய்ய அவர்களுக்கு உரிமை உண்டா? என்கிற கருத்துரிமை தளத்திற்கு விவாதம், தமிழகத்தில் வந்திருக்கிறது.

நடந்தது என்ன?

இந்தியா டுடே பத்திரிக்கை, பாலியல் வாழ்க்கை குறித்த ஆய்வை, பெருநகரங்களில் உள்ள ஆண்களிடமும், பெண்களிடமும் செய்து, அறிக்கையாய் பிரசுரித்து, அந்தந்த நகரங்களில் உள்ள , பல துறைகளைச் சார்ந்த 10 பேரிடம் கருத்து கேட்டு வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் 10 பேர் கருத்து சொல்லியிருந்தார்கள். அதில் 7 பேர் பெண்கள். அதில் குஷ்புவும் ஒருவர். 10 பேருமே இளைஞர்களின், இளம் பெண்களின் பாலியல் வாழ்க்கை குறித்தும், சிலர் அந்த ஆய்வின் ஒரு பகுதியாக இருந்த, திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ளுதல் குறித்தும் பேசியிருந்தார்கள். ஆய்வின்படி, அனைத்துப் பெருநகரங்களிலும் பெண்களிடயே இவ்வழக்கம் இருக்கிறது என்பதும், மற்ற பல நகரங்களை ஒப்பீடு செய்யும் போது சென்னையில் குறைவு என்பதும் தெரிய வந்தது. ஒரு பக்கம் நிறைய குஷ்பு பேசியிருந்தார். அதைப்படித்துப் பார்க்கும் போது, வரைமுறை யற்ற பாலுறவை அல்லது பாலியல் அராஜகத்தை அவர் ஆதரித்தாகத் தெரியவில்லை என்பதையும், திருமணத்தைப் பற்றி நிச்சயமாக இருந்தால், சேர்ந்து வாழலாம் அல்லது உறவு கொள்ளலாம்; அதிலும் கூட, எய்ட்ஸ் வராமலும், கர்ப்பமடையாமல் பார்த்துக் கொள்ளும் படியும் கூறியிருந்தார் என்பதையும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், தமிழகத்தில் யார் தான் இப்படி செய்யவில்லை என்று குஷ்பு பொதுமைபடுத்திருக்க வேண்டியதில்லை என்பதும் பரவலான கருத்தாக முன் வந்தது. பொதுவாக, எய்ட்ஸ் தடுப்பு விளம்பரங்களின் தொனியும் இப்படியாகவே இருப்பதைக் காண முடியும். அதாவது, பாதுகாப்பான உறவு (Safe Sex) என்பதே, அவ்விளம்பரங்களில் பிரதானமாக முன் வைக்கப்படுகிறது. எப்படியுமே நடந்து கொண்டுள்ள இவ்விஷயத்தை, கூடாது என்பதால் மட்டும் தடுத்து நிறுத்த முடியாது; எனவே கவனமாக இரு என்று சொல்வது ஒன்றுதான் வழி என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.

சரி இந்த வாதத்தை ஏற்றக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. மாற்றுக்கருத்து சொல்லலாம்; எதிர்க்கலாம்; கண்டனமும் தெரிவிக்கலாம். இக்கருத்தை மாபாதகம் என ஒருவர் கருதினால் மக்களின் கருத்தை திரட்டுவதற்கு இயக்கமும் நடத்தலாம்.

கலாச்சார அடிப்படைவாதம்

ஒரு சிவில் சமூகத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஒரு எழுதப்பட்ட நாகரீக எல்லை இருக்கிறது. ஆனால், குஷ்புவின் கருத்துக்களுக்கான எதிர்ப்பு எல்லை தாண்டியதாக இருந்தது. நடத்திய விதத்திலும், முன் வைத்த கோஷங்களிலும், அடிப்படைவாதிகளின் குரலின் சாயம் தெரிந்தது.

உதாரணமாக, இந்துத்துவ வகுப்பு வாதிகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களது நடவடிக்கைகளைப் படிப்படியாகக் கவனித்தால், கீழ்க்கண்டவாறு இருப்பதைக்காண முடியும்.

  1. கருத்துருவாக்கம்
  2. அனைவராலும் அங்கீகரிக்கும் ஒரு விஷயத்தோடு இணைத்தல்
  3. அராஜகமாக நடத்தல்
  4. அதற்கு அப்பாற்பட்டுப் பார்க்கவிடாமல், ஒட்டு மொத்த சமூகத்தை, அந்த வட்டத்துக்குள் நிறுத்தி, ஆம் – இல்லை என்று சொல்ல நிர்பந்தப்படுத்தி, இல்லை என்று சொல்பவர்களை எதிரிகளாக்குதல்.

ராமஜென்ம பூமி விஷயத்தை எடுத்துக் கொள்வோம். அதுதான் ராமர் பிறந்த இடம் என்ற கருத்து முதலில் உருவாக்கப்பட்டது. அது உண்மையல்ல என்றாலும், அந்தக் கருத்து ஆழமாக உருவாக்கப் பட்டது. மத நம்பிக்கை என்கிற அங்கீகரிக்கப்பட்ட விஷயத்துடன் அது இணைக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு, கரசேவை போன்ற அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்தன. மத நம்பிக்கை உளளவராகவும், அதே சமயம் மசூதி இடிப்பதை ஏற்காதவராகவும், ஒருவர் இருப்பது சாத்தியம். ஆனால், அடிப்படை வாதம் அதற்கு இடம் கொடுக்காது. மசூதி இடிப்பை ஆதரிப்பவர்கள் தான் மதநம்பிக்கை உடையவர்கள், இந்துக்கள், தேச பக்தர்கள் என்று குறிப்பான அடையாளங்களை அது உருவாக்கியது.

அதுபோல, இங்கு, குஷ்பு சொல்லாத ஒரு விஷயம் – அதாவது தமிழ் பெண்களுக்கு கற்பு இல்லை என்பது – சொல்லப்பட்டதான கருத்து உருவாக்கப்பட்டது. அது, தமிழ் கலாச்சாரம், பண் பாட்டோடு இணைக்கப்பட்டது. எதிர்ப்பு என்கிற பெயரில், குஷ்பு மும்பைக்குப் போ என்கிற கோஷம் உள்ளிட்ட அராஜக நடவடிக்கைகள் தொடர்ந்தன. ஒரு சகிப்புத் தன்மையற்ற சமூக சூழலுக்கு அடி கோலப்பட்டது. குஷ்பு சொன்னதை எதிர்ப்பவர்கள் தான், தமிழ் கலாச்சார காவலர்கள் என்ற நிலை நம் மீது திணிக்கப்பட்டது.

எது தமிழ் கலாச்சாரம்?

இந்தியக் கலாச்சாரம் மட்டும் பன்முகத் தன்மை கொண்டதல்ல. ஒரே மாநிலத்தில் கூட பன்முகக் கலாச்சாரத்தைப் பார்க்க முடியும். கலாச்சாரம் என்பது மனிதர்கள் வாழும் முறை தானே? உடை, உணவு, பழக்க வழக்கம், திருமண முறை பேச்சு எல்லாமே கலாச்சார அடையாளங்கள் தான். மாவட்டத்துக்கு மாவட்டம், மதத்துக்கு மதம், சாதிக்கு சாதி வேறுபடும். வர்க்க வேறுபாடும் கலாச்சாரத்திற்கு உண்டு. இந்த வேறுபாடுகளைக் கணக்கில் எடுக்காமல், ஒற்றைக் கலாச்சாரத்தை முன்னிறுத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்? பெரியப்பா, சித்தப்பாவை சம்பந்தியாக்கும் கலாச்சாரமும் உண்டு. மாமா, அத்தையை சம்பந்தியாக்கும் கலாச்சாரமும் உண்டு. இதில் எது சரி என்று எப்படி வாதிட முடியும்? (பார்க்கப் போனால், அறிவியல் ரீதியில், இரண்டுமே தவறு) நின்று, கை கூப்பி தொழுவது சரியா? மண்டியிட்டு குனிந்து தொழுவது சரியா என்றால் என்ன சொல்வது? (இல்லாத கடவுளை இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர், எப்படி தொழுதால் என்ன என்றும் சொல்லலாம்) சைவம் நல்லதா? அசைவம் நல்லதா? இதற்கெல்லாம் பதில்கள் இல்லை. இவை அவரவர் வாழ்க்கை முறை, அவரவர் கலாச்சாரம் – அவ்வளவுதான்.

இதிலும் கருத்து வித்தியாசம் எழலாம். ஏன்? எதில் வேண்டுமானாலும் மாற்று கருத்து சொல்லலாம். வால்டேர் அழகாக சொல்லியிருக்கிறார் –

நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் நான் மறுக்கிறேன். ஆனால் அதைச் சொல்ல உனக்குள்ள உரிமைக்காக சாகும் வரை போராடுவேன்.

இங்கர்ஸால் இதே கருத்தை எதிர்மறையாக சற்று காட்டமாகக் கூறுகிறார் – … எவனொருவன் தனக்கென்று சில அறிவு சம்பந்தப்பட்ட உரிமைகள் – அதாவது எண்ண உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன – வேண்டுமென்று பாத்தியங் கொண்டாடிக் கொண்டு அதே சமயத்தில் அதே உரிமைகளை மற்றவர்களுக்கு வழங்க மறுக்கிறானோ அவன் அயோக்கியன்; சுயநலக்காரன்; மிருகத் தன்மை வாய்ந்தவன். அவன், காட்டு மிராண்டியின் நிலைக்கு சமீபத்திலே வசிப்பவனாகிறான்.

ஆக, மாற்றுக் கருத்து சொல்லலாம் என்பது மட்டுமல்ல; சொல்வதற்கு உரிமை வேண்டும் என்பது தான் முக்கியம். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென், சமீபத்தில் எழுதி வெளியிட்டுள்ள The Argumentative Indian (வாதிடும் இந்தியன்) என்ற நூல், தர்க்கம் செய்யும் இந்திய பாரம்பரியத்தை சுட்டிக் காட்டுகிறது. மன்னர்களின் கொலு மண்டபவங்களில் பட்டி மண்டபமும் இருக்கும். அங்கே வல்லுநர்களின் வாத பிரதிவாதங்களும் நடக்கும் என்பதையும் படித்திருக்கிறோம். இன்று வரை பட்டி மன்றங்கள் தொடர்கின்றன.

சீனப் புரட்சியின் தலைவர் மாவோ சொன்ன

“நூறு பூக்கள் மலரட்டும்
நூறு சிந்தனைகள் வளரட்டும்”

என்பதும், பல்வேறு கருத்துக்கள் வெளிப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் தான். பொதுக் கூட்ட மேடைகள் கூட அவரவர் நிலைபாட்டை விளக்கவும், மற்ற கட்சிகளின் / இயக்கங்களின் கருத்துக்களை ஆதரிக்கவும், நிராகரிக்கவும் பயன்படுகின்றன. பத்திரிக்கைகளில் வரும் வாசகர் கடிதங்களும் இந்த வழி இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன. தொலைக்காட்சி அலைவரிசைகளில் வரும் நேருக்கு நேர், விவாத மேடைகளும் இப்படித் தான். எனவே கருத்து சொல்லவும் உரிமை உண்டு; எதிர்க்கவும் உரிமை உண்டு.

அதற்காக, தீண்டாமை நியாயம் என்று மேடை போட்டு பேச முடியாது. பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவதில் தவறேதும் இல்லை என்று வாதிட முடியாது. ஒருவனைக் கொல்ல உரிமை உண்டு என்பது என் கருத்து என்று பகிரங்கமாகக் கூற முடியுமா?  இப்படிப்பட்ட விஷயங்களில் வாதிக்கும் எல்லை முடிந்து, சட்டங்களும் வந்து விட்டன. அதற்குப் பிறகு பேசினால், அது சட்டப்படி குற்றமாகிவிடும்.

இவ்வாறாக, பல கருத்துக்கள் மோதும் போது தான் பல பரிமாணங்களைப் புரிந்து கொள்ள முடியும், ஒரு நிலைபாட்டுக்கும் போக முடியும். ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கொண்டவரை மாற்ற வேண்டும் என்றால், துன்புறுத்தி மாற்ற முடியாது. வாதம் செய்து புரிய வைத்துத் தான் மாற்ற முடியும்.

ஸ்ரீராம் கே ஜெய் என்று இந்து அல்லாதவர்களை கோஷம் போட வைப்பதும், அல்லா ஹோ அக்பர் என்று முலீம் அல்லாதவர்களை சொல்ல வைப்பதும், மிரட்டினாலும் அடித்து உதைத்தாலும் சாத்தியம் தான். ஆனால், மனதில் உள்ளது மாறிவிடுமா? அவரவர் சாகும் வரை, ஆழமாய் அரியணை போட்டு அமர்ந்திருக்காதா? இதைத்தான், என் மனதை நான் மாற்றிக் கொண்டு விட்டேன் என்று ஒரு மனிதனை சொல்லுமாறு நீங்கள் செய்துவிடலாம். ஆனால், அவன் மட்டும் எப்பொழுதும் போல் ஒரே அபிப்பிராயம் உடையவனாகத்தான் இருக்கிறான். அவனை நெருப்பிலிட்டு கொளுத்துங்கள், ஆனால் அவனுடைய சாம்பல், முன்போல் ஒரே அபிப்பிராயத்தை கொண்டிருக்கும் என்கிறார் இங்கர்ஸால்.

கற்பு என்கிற ஆயுதம்

குஷ்பு கூறிய விஷயம் குறித்த விவாதத்தில் கற்பு அதிகம் அடிபட்டது. குஷ்பு சொன்னது, கற்புக்கு எதிரானது என்ற வாதமும், கற்பு பெண்ணை ஒடுக்குவதற்கான ஆயுதம், எனவே அது தேவையில்லை என்று ஓரிரு அமைப்புகள் கூறிய வாதமும் எதிரும் புதிருமாக முன் வைக்கப்பட்டன. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், தனியுடமையைப் பாதுகாக்க, வாரிசு தேடி, தனக்கு மட்டுமே ஒரு பெண் மனைவியாக இருக்க வேண்டும் என்று உடமையாளனாக இருந்த ஆண் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாலியல் சுதந்திரம் இருபாலருக்கும் இருந்த நிலை மாறி, ஒரு சாரார் மீது திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அவை நிறைவேறுவது கடினம். எனவே, தெய்வாம்சம், பத்தினித் தன்மை, கற்பு போன்ற கோட்பாடுகள் உருவாயின. அந்த அர்த்தத்தில் பார்த்தால், கற்பு பெண்ணை ஒடுக்குவதற்காக முன் வைக்கப்பட்ட ஆணாதிக்க ஒழுக்கவியல் சித்தாந்தம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், காலம் மாறி, நாகரீக சமூகத்தில், வாழ்வியல் ஒழுங்கு முறைகள் தேவைப்படும் போது கற்பு என்பது ஒழுக்க நெறி என்ற அடிப்படையில் நீடிப்பது தேவையாக உள்ளது. அது இருபாலருக்கும் பொருந்த வேண்டும் என்று கேட்பது தான் பொருத்தமாக இருக்கும்.

கற்பு பெண்களைப் பொறுத்த வரை புனிதமான எல்லைக் கோடாகவும், ஆண்களைப் பொறுத்த வரை அலட்டிக் கொள்ளத் தேவையற்ற விஷயமாகவும் பார்க்கப்படுவதுதான் பாரபட்சமானது. இந்த இரட்டை அளவுகோல் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். குஷ்புவின் கருத்தை எதிர்த்த இயக்கத்திற்குப் பின்புலமாக இருந்த இயக்குநர் தங்கர் பச்சான், எனது படங்களில் கற்புள்ள தமிழ் பெண்களைத் தான் காட்டுகிறேன் என்று சொல்லுகிறாரே தவிர, கற்புள்ள தமிழ் ஆண்களைத் தான் காட்டுகிறேன் என்று சொல்லவில்லை. அவரால் சொல்லவும் முடியாது. அவரது தென்றல், படக் கதாநாயகன், தினசரி ஒரு பெண்ணோடு உறவு வைப்பவன். அவனைக் காதலிக்கும் கதாநாயகியையும் அனுப்பப்பட்ட பெண்ணாக நினைத்து விட, அவள் கர்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விடுகிறாள். ஆனால் கடைசி வரை, வேறு எவரையும் திருமணம் செய்யாமல் கற்போடு வாழ்கிறாள் என்பது தான் கதை. இப்படியாக இப்படத்தில் தமிழ் பண்பாடு காப்பாற்றப்படுகிறது. பாலியல் அராஜகவாதியான கதாநாயகனால் தமிழ் பண்பாடு எதுவும் ஆகவில்லை!! பரத்தையர் வீதி என்ற தனி வீதியை அனுமதித்த தமிழ் சமூகத்தின் மிச்ச சொச்சம் இன்னும் இருக்கலாம் என்றால் பெண்ணுக்கு மட்டும் தான் எல்லைக்கோடா? பண்பாட்டைக் காக்க வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு மட்டும் தானா? குஷ்புவுக்கு முன்னால் எத்தனையோ ஆண்கள் இது போன்ற கருத்துக்களைக் கூறியதே இல்லையா? இன்றைக்கும் சிவப்பு விளக்குப் பகுதிக்கு ஆண்கள் போகிறார்களே, அவர்களெல்லாம் திருமணத் துக்குப் பின் தான் போகிறார்களா? முன்னால் போகவில்லையா? அப்போது கலாச்சாரம் என்ன ஆனது? சரி, திருமணத்திற்குப் பின்னால் போனால், கலாச்சாரத்துக்கும் கற்புக்கும் பங்கம் ஏற்படாதா? எடுத்தால் கற்பு குறித்த ஒரே நிலைபாடு எடுக்க வேண்டியது தானே? ஆண் செய்தால் தப்பில்லை பெண் பேசினாலே தவறு என்றால் அது அறிவியல் பூர்வ நிலைபாடாக இருக்க முடியாது. பெண்கள் பாலியல் குறித்து பேசவே கூடாது என்பது அடிப்படை வாதமல்லவா?

குஷ்பு ஒன்றும் பெண்ணுரிமைப் போராளி அல்ல! அவர் கூறிய கருத்துக்கள் முற்போக்கும் அல்ல. அதே சமயம் பிற்போக்கும் அல்லவே? எந்த விஷயமும் கறுப்பாகவோ, வெள்ளையாக மட்டுமே இருப்பதல்ல. இரண்டுக்கும் இடையே சாம்பல் நிறமாகவும் இருக்கலாம். சில விஷயங்களைப் பற்றிப் பேசும் போது, ழுசநல ஹசநய என்று கூட சொல்லுவார்கள்.

மெகாத் தொடர்களில், வரிசையாக அத்தனை கதாநாயகர் களுக்கும் இரண்டு மனைவிகள், ஒரு உறவு இருக்கும் போது,  அதற்கு துரோகம் செய்து, மற்றொரு உறவை ஏற்படுத்துபவர் கற்பிழந்தவராக ஏன் ஆவதில்லை? ஆணாதிக்க கலாச்சாரம் தான் இதற்குக் காரணம். தனி உடமை பின்னணியில், உடமையாளர்கள் மத்தியில் தோன்றிய இந்தக் கலாச்சாரம் ஏன் உடமையற்றவர்களையும் கட்டுப்படுத்துகிறது?

மார்க்சியப் பார்வையில், பொருளாதார அதிவாரத்தின் மீது கட்டப்படுவதில் ஒன்று தான் கலாச்சாரம். அதிவாரத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் தான், மேல் கட்டுமானத்தையும் கட்டுப்படுத் துகிறார்கள். ஆளும் வர்க்கம், பெண்ணடிமை தனத்தை, தனது வர்க்கச் சுரண்டலுக்குப் பயன்படுத்துவதால், ஆணாதிக்கக் கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறது. அது தான் மேலாதிக்கம் செலுத்துகிற கலாச்சார மாகிறது. உழைப்பாளி மக்கள் அதைத் தன்வயப்படுத்திக் கொள்கிறார்கள்.

சுகாஸினி, குஷ்பு வை ஆதரித்து பேசியவுடன், அவரது சாதி அலசப்பட்டது. அவர், கைபர் கணவாய்க்குப் போக வேண்டும் என்று பேசப்பட்டது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் பிரச்சனையாக இது மாறக் கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. உண்மையிலேயே, சாதியத்தை தாங்கிப் பிடிக்கிற அதிவாரத்தின் ஒரு முக்கியப் பகுதியாகவும் கற்பு கோட்பாடு உள்ளது. சாதித் தூய்மை கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் கற்பு வலியுறுத்தப்பட்டது. எனவே, பார்ப்பனியத்திற்கும், கற்பு கருத்தியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால் அந்தக் கற்பை கேள்வி கேட்டதாக சொல்லப்பட்ட குஷ்புவை சுகாஸினி ஆதரித்திருக்கிறார். பெரியார் வழி வந்ததாக கூறும் திருமாவளவனோ, அதைப் பெண்ணுக்கு மட்டும் உயர்த்திப் பிடிக்கிறார். தந்தை வழி உரிமை சார்ந்த ஆண் மேலாதிக்க தலைமைப் பண்பால் கட்டமைக்கப்பட்ட கருத்தியல் தான் கற்பு.

கற்பின் உள்ளடக்கம்

கற்பு என்பதன் உள்ளடக்கம் கூட, ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி மாறித் தான் வந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் தலை கற்பு, இடை கற்பு, கடை கற்பு என்கிற கருத்தியல்களைப் பார்க்க முடியும். கணவன் இறந்தவுடனேயே ஆதங்கத்தினால் இயல்பாய் உயிரை விடுதல் தலை கற்பாகவும், உடன்கட்டை ஏறி உயிர் போக்குதல் இடை கற்பாகவும், கைம்மை நோன்பு நோற்பது கடை கற்பாகவும் உருவகப்படுத்தப்படுகிறது. அதே சமயம், கைம்மை நோன்பு என்கிற கொடுமையை அனுபவிப்பதை விட, ஈமத் தீயில் இறப்பது நல்லது என்று பெண்கள் பாடிய வரிகளும் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. மற்றொரு பெண்ணிடம் வாழ்ந்து திரும்பிய கோவலனை வெறுக்காது, அவன் மூலதனத்துக்காக சிலம்பையே எடுத்துக் கொடுத்த கண்ணகியும், தொழுநோயால் பீடிக்கப்பட்ட கணவனை தாசியிடம் கூடையில் சுமந்து சென்ற நளாயினியையும் கற்பரசிகள் என்று தமிழ் சமூகம் புகழ்ந்ததை மறந்து விட முடியாது. கற்புடைய மகளிர் கணவன் உடனுறையும் போது மட்டுமே தலைவாரி பூச்சூடினர். அவனைப் பிரிந்திருந்த பொழுது புனையாத ஓவியமாக இருந்துள்ளனர் என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன.

குழந்தைத் திருமணம் கூட, பெண்ணின் கற்பு நிலையை பாதுகாக்க என்றே கூறப்பட்டது.  அவளுக்கு பாலியல் சுதந்திரம் இருக்கக் கூடாது என்பது தான் இதன் பொருள். ஆணாதிக்க சமூகம், பெண்ணின் பாலியலை கட்டுப்படுத்த எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறது என்பது இக்கோட்பாடுகளைப் பார்த்தால் புரியும். கற்பு என்பதைப் பெண்களின் பெருமையாகவே தொல்காப்பியர் சித்தரிக்கிறார் என்றாலும், பழந்தமிழரின் வாழ்க்கையை களவு, கற்பு என்று இரு நிலைகளாகப் பிரிகிக்கிறார். திருமணத்துக்கு முன் ஆணும் பெண்ணும் உறவு கொள்வதைக் களவு வாழ்க்கை என்றும், கற்பு என்கிற வாழ்வியல் நெறி திருமணம் என்று சடங்கின் மூலம் தொடங்குகிறது என்றும் கூறுகிறார். அதாவது கற்பு நெறி என்பது திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு மட்டுமே சொல்லப்பட்ட ஒன்றாக தொல்காப்பியர் காலத்திலிருந்து, பின்னர் அது மாறி மாறி, மணிமேகலை பிற நெஞ்சு புகாதவர் தான் கற்புடையவர் என்று கூறுகிறது.

பாரதி, பாரதிதாசன், புதுமை பித்தன், ராஜம் கிருஷ்ணன், வாசந்தி என்று பலரும் கற்பு கோட்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கி யிருக்கிறார்கள். புதுமைப்பித்தன், பொருளாதாரத்தில் கற்பு அடிபட்டு போகிறது என்பதையும், அது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதையும் பொன்னகரம் கதையில் கூறுகிறார். மு.வரதராசனார் இதையே “எப்பொழுது எவனுடன் வாழ்கிறாளோ, அவனுக்கு துரோகம் செய்யாமலிருந்தால் போதும் அதுதான் கற்பு” என்கிறார்.

“கற்புநிலை யென்று சொல்ல வந்தார்
இருகட்சிக்கும் அஃது பொதுவில்
வைப்போம்”

(பெண்கள் விடுதலை விரும்பு – பாரதி)

... கற்பென்று பூச்சி காட்டும்
கழுதைகளை நிந்தனை செய்

– ஜீவா

…கற்பு நலந் தருமாயின் அதையிரு
பாலரும் கைக் கொள்வோம் – அது
காளையர்க்கில்லை கன்னியர்க் கென்றிடில்
கட்டுப்படுவோமா

– சாமி சிதம்பரனார்

கற்பு என்ற வார்த்தையும், அதைப்பயன்படுத்தும் முறையும் புரட்டானது. பெண்ணடிமை கொள்ள ஏற்படுத்திய வார்த்தை அது.

– பெரியார்

கற்பு என்பதை உடல் தூய்மையோடு பொருத்திப்பார்ப்பது சரியல்ல, மனத்தூய்மை தான் கற்பு என்கிற விளக்கமே ஏற்புடையதாக உள்ளது. மனதளவில் துரோகம் செய்ய விரும்பாத ஒரு பெண், உடல் அளவில் பலவந்தப்படுத்தப்பட்டால், அதில் அவளுடைய தவறு என்ன இருக்கிறது? அது அவளுடைய கற்பு நெறியை எப்படி பாதிக்கும்? நடந்தது விபத்து, தாக்குதல், பலாத்காரம், வன்முறை! அவள் விரும்பி நடந்ததல்லவே அது?

ஆயினும் பொதுவாகக் கற்பழிப்பு என்கிற வார்த்தை பிடிவாதமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், கற்பு உள்ள பெண்களை, கற்பிழந்தவர்களாக சித்தரிக்கிறோம். இது எப்பேர்ப் பட்ட அநியாயம்? இந்த நடவடிக்கையில் மனதறிந்து ஈடுபட்டதன் மூலம் அந்த ஆணின் கற்பு தானே அழிகிறது? எனவே அவன் தான் கற்பழிந்தவன் ஆகிறான். இதை மாற்றிக் கூறுவதன் மூலம் ஆணாதிக்க சித்தாந்தத்தின் பிரச்சாரகர்களாக நாம் மாறிப்போகிறோம்.

இப்போது குழந்தை திருமணம் சட்டத்தால் தடுக்கப்பட்டு, விதவை மறுமணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விவாகரத்தும் மறுமணமும் சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயமாக மாறிவிட்ட சூழலில், கற்பு என்பதன் பல உள்ளடக்கங்கள் அடிபட்டு போகின்றன. குஷ்பு சொன்னது தவறு என்றால், உச்ச நீதி மன்றம் சொல்வதும் தவறுதான். திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்வதை உச்ச நீதி மன்றம் அங்கீகரிக்கிறது. உச்ச நீதி மன்றம் முன் செருப்பும், துடைப்பமும் காட்டப்படுமா?

திருமாவளவன் ஒரு பேட்டியில் பெண்ணியவாதிகள் தம் வீட்டில் குழந்தைகள் வெளியே போகும் போது ஆணுறையைக் கையில் கொடுத்து எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு வா என்று அனுப்புவார்களா? எனக் கூறியிருக்கிறார். இதைவிட பெண்ணுரிமையைக் கொச்சைப்படுத்த முடியாது. பெரியார் ஒரு பெண்ணியவாதியாக இருந்தார். திருமாவளவனின் கேள்வி அவருக்கும் சேர்த்து தான் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் யாரும் யார் மீதும் திணிக்க முடியாது. அவற்றைக் காக்கிற போலீ வேலையை யாரும் எடுத்துக் கொள்ள வேண்டியதும் இல்லை. அப்படி எடுத்துக் கொள்பவர்கள் கூட, நமது பண்பாட்டின் நல்ல அம்சங்கள் நீர்த்துப் போகும் போது கவலைப்படுவதில்லை. பரிசம் தான் பழக்கமாக இருந்தது. இன்று, அந்த பண்பாடு சிதைந்து, உலகமய நுகர்வு கலாச்சாரத்தின் ஒத்துழைப்போடு வரதட்சணை எங்கும் பரவி நிற்கிறது. ஆனால் இவர்களது சொல்லாடல்களில் கணவன் வழிபாட்டு கருத்தியலுக்கு இடம் இருந்ததில்லை. இன்று அதுவும் சமகிருத மயமாக்கலில் சரிந்து கொண்டு வருகிறது. பழந்தமிழ் சமூகத்தில் பாலியல் வல்லுறவுக்கு குழந்தைகள் ஆளானதில்லை. இன்று ஆகிறார்கள். இவையெல்லாம் கலாச்சார சீரழிவு இல்லையா? வேலைக்கு செல்லும் பெண்களில் 10 சதம் தான் ஒழுக்கமானவர்கள் என்று சொல்லி, 90 சதம் உழைக்கும் பெண்களின் கற்பை விமர்சித்த சங்கராச்சாரியை எதிர்த்து எத்தனை செருப்புகள், துடைப்பங்கள் உயர்ந்தன?எத்தனையோ  வாழ்வியல் பிரச்சனைகள் அழுத்திக் கொண்டிருக்கும் போது முதலாளித்துவ ஊடகங்கள் பாலியல் பிரச்சனைகளை ஏலம் போட்டுக் கொண்டிருப்பதன் நோக்கம், வணிக நோக்கமேயன்றி வேறென்ன? உலகமயம் உருவாக்கும் கலாச்சாரம், நம்மை நுகர்வோராக மட்டுமே பார்க்கிறது. சமூகப் பொறுப்புணர்வு அதற்கு இல்லை. இந்த அம்சமே முக்கிய முன்னிறுத்தப்பட்டு  எதிர்க்கப்பட வேண்டும்.

எனவே, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தில் அகவாழ்விலும், புற வாழ்விலும் இருபாலருக்கும் சில கட்டுப்பாடுகள் தேவை என்பதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால், புறவாழ்வின் விதிமுறைகளை அடிப்படையே அக வாழ்க்கைக்கு பொருத்தி விட முடியாது. குறிப்பாக அகவாழ்வின் ஒரு பகுதியான பாலியல் நடவடிக்கைகளை அரசு எட்டிப்பார்த்துக் கொண்டே இருக்கவும் முடியாது. அதனால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பொருளல்ல. உதாரணமாக ஒருவரின் சம்மதம் அதில் ஈடுபடுத்துவது போன்றவை சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படுகின்றன. இவையெல்லாம் சமூகப் பரிணாம வளர்ச்சியில் வந்த ஒழுங்குமுறைகள். அவை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் தாம்பத்ய உறவில் ஈடுபடுவதையும் பாலியல் வல்லுறவு குற்றமாக்க வேண்டும் என்கிற வாதம், கடந்த 10 ஆண்டுகளாக முன் வந்து கொண்டிருக்கிறது. இதுவும் பரிசீலிக்கப்பட வேண்டும். இப்படியாக, தவிர்க்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை விவாதத்தின் மூலம் தான் நிர்ணயிக்க முடியுமே தவிர கலாச்சார காவலர்களாகிய கும்பல் (ஆடி) சேர்ந்து தடுத்து விட முடியாது. அதுவும் செலக்டீவ் அம்னீஸியா போல் பெண்ணுக்கு மட்டுமே உரித்தான விதிமுறையாக்கவும் கூடாது.

வாழ்வியல் சூழல் ஆரோக்கியமாக, சமத்துவக் கோட்பாடு அடிப்படையில், சகிப்புத் தன்மையோடு இருக்கும் போது மனித வாழ்வின் அகம், புறம் அனைத்துமே ஆரோக்கியமாக இருக்கும். அவற்றை நோக்கிப் போகலாமே?

ஆதாரம்:

கற்பெனும் சிறையினிலே – கவிஞர் குடந்தையான்
பெண்ணியம் – அணுகு முறைகள் – இரா.பிரேமா
தமிழ் இலக்கியமும் பெண்ணியமும் – அரங்க மல்லிகா
மனித ஜாதியின் சுதந்திரம் – இங்கர்ஸால்
வால்டேர் பொன் மொழிகள்
ஆணாதிக்கமும் பெண்ணியமும்

– பி.இரயாகரன்



%d bloggers like this: