மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இரண்டு புதை குழிகள் நோம் சாம்ஸ்கியுடன் ஓர் உரையாடல்!


தமிழாக்கம் : பேரா. எ.ஹேமா

20ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர் என்ற புகழ் சோம்கிக்கு உண்டு. 77 வயதான சோம்ஸ்கி இந்தப் பாராட்டைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தெரிந்த, இறுகிப்போன விதிகளிலிருந்து, மாறுபட்ட கருத்துக்களை மக்கள் கேட்க விரும்புகிறார்கள். இத்தகைய புதுமையான கருத்துக்கள் ஊடகங்கள் மூலம் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை – என்கிறார். சோம்ஸ்கி சிறந்த மொழியியல் அறிஞர். பின்னர் அரசியல் சிந்தனையாளராய்ப் புகழ் பெற்றார். 1960 களின் துவக்கத்தில் தோன்றிய யுத்த எதிர்ப்பைக் குறித்த முன்னணிச் சிந்தனையாளர். ஏராளமான கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ஆறு புத்தகங்களை எழுதியுள்ளார். ந்யூ வீக் பத்திரிக்கையைச் சார்ந்த மைக்கேல் ஹேடிங் என்பவருடன் கீழ்க்கண்ட உரையாடலில் தற்போது நிலவும் பூகோள அரசியல் நிலையைப் பற்றித் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஹோடிங் : தற்போது இராக் நிலைமை எந்தத் திசை வழியில் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

சோம்ஸ்கி : தற்போது இதைப்பற்றிய கருத்தைக் கூறுவது, மிகவும் கடினம். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் நிலவும் கருத்துக்கள் மாற்றத்திற்கு இடம் கொடாமல் இறுகியிருக்கின்றன. இதனால், நிலைமையை விருப்பு வெறுப்பில்லாமல் பார்க்க முடியவில்லை. மிக எளிமையாக இந்த நிலையைப்பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், இராக் லெட்டூ கீரை, ஊறுகாய் போன்ற எளிய பொருள்களை உற்பத்தி செய்யும் நாடாயிருந்தாலும் – (அதாவது எண்ணெய் வளமில்லாமல் இருந்தாலும்) உலகுக்குத் தேவையான எரிசக்தி மத்திய ஆப்பிரிக்காவில் இருந்திருந்தாலும், இராக்கை, சதாம் உசேன் ஆட்சியிலிருந்து அமெரிக்கா விடுவித்திருக்கும் என்ற கருத்து சித்தாந்தமாகவே இறுகிப்போய்விட்டது. இதை நாம் நம்ப வேண்டுமென்று நினைக்கிறார்கள். மேற்கூறிய கருத்தை ஏற்க மறுப்பவர்களைப் பைத்தியம் என்றோ, சூழச்சியாளர்கள் – என்றோ கூறி ஒதுக்குகிறார்கள். ஆனால், ஓரளவு சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு, மேற்கூறிய கருத்து உண்மையல்ல என்பது புரியும். இராக்கிய மக்களுக்கும் இது தெரியும். இராக்கின் எண்ணெய் வளம்தான் அமெரிக்கா, அந்த நாட்டை ஆக்கிரமித்ததற்குக் காரணம். இவ்வாறு, இராக்கைக் கைப்பற்றினால் அதன் எண்ணெய் வளம், அமெரிக்காவுக்குப் பலம் சேர்க்கும். அமெரிக்காவோடு போட்டி போடும், ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகளைக் காட்டிலும், அமெரிக்காவுக்குப் பலம் கூடும். இதைத்தான் ப்ரெஸென்கி என்ற சிந்தனையாளரும் குறிப்பிட்டுள்ளார். இராக்கின் மேல் அமெரிக்கா படையெடுத்ததன் அடிப்படைக் காரணமே இதுதான். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால், இராக் பிரச்சனை எந்தத் திசை வழியிலேயே செல்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஓர் உதாரணத்தைப் பார்ப்போம் – அமெரிக்க முயற்சியால், சுதந்திர இராக் உருவாகும் என்ற பேச்சு அடிபடுகிறது. இது நிச்சயம் உண்மையல்ல. இதைப் புரிந்து கொள்ள ஒரே ஒரு கேள்வியை எழுப்புவோம். அந்நியத் தலையீடு எதுவுமே இல்லாத சுதந்திர இறைமாட்சியுடைய (ளுடிஎநசநபை) இராக் உருவாகிறதென்றே வைத்துக் கொள்வோம். அத்தகைய நாட்டின், உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகள் எப்படி இருக்கும்? சுதந்திர ஜனநாயகக் குடியரசான இராக்கில் ஷியா பிரிவைச் சேர்ந்த இலாமியர்கள் தான் பெரும்பான்மையானவர்களாக இருப்பார்கள். அத்தகைய இராக், இரானோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும். அத்தோடு, இராக், சௌதி அரேபியாவின், இந்தப் பகுதியில் ஷியா பிரிவினர் அதிகமாக வசிக்கின்றனர். அமெரிக்காவின் ஆதரவோடு அரசு அதிகாரத்திலிருக்கும் சவுதி அரசு ஒரு மத அடிப்படைவாத அரசு. அந்த அரசு, தன் நாட்டின் எல்லைப் புறத்தில் வசிக்கும் ஷியா மக்கள் மீது, கொடூரமான அடக்குமுறையை ஏவி விடுகிறது. இந்த நிலையில், இராக்கிற்கு ஓரளவு சுதந்திரம் கிடைத்தாலும்சவுதி அரேபியாவின் எல்லைப்புறத்தில் நிச்சயம் அதன் பின் விளைவுகள் அழுத்தமானதாக இருக்கும். இதே எல்லைப் பகுதியில் தான் சவுதி அரேபியாவின் பெரும்பான்மையான எண்ணெய் வளமும் காணப்படுகிறது. இப்படி ஒரு நிலைமை உருவானால், அமெரிக்காவிற்கு அது எப்படிப்பட்ட அச்சத்தை ஏற்படுத்தும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

ஹோடிங் : நீங்கள் 1960 களில் நடைபெற்ற யுத்த எதிர்ப்பு இயக்கங்களில் பங்கேற்றிருக்கிறீர்கள். தற்போது, இராக்கையும், வியட்நாமையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். இதைப்பற்றித் தங்கள் கருத்து என்ன?

சோம்ஸ்கி : என்னைப் பொருத்த வரையில் இரண்டு பிரச்சனைகளும் அடியோடு வேறுபட்டவை. இரண்டும் ஒரே மாதிரியான பிரச்னை என்று நினைப்பதற்குக் காரணம். இந்த இரண்டு பிரச்சனைகளையும் சரியாகப் புரிந்து கொள்ளாதது தான். இராக்கைப் பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன். வியட்நாம் போருக்கான காரணம் அடிப்படையிலேயே வித்தியாசமானது. அடிப்படையில், அமெரிக்க அரசு, வியட்நாமை ஒழித்துவிட வேண்டுமென்று நினைத்தது. சுதந்திர வியட்நாம்  பொருளாதார வளர்ச்சி பெற்றால், அது தெற்காசிய நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கும். வியட்நாமின் முன்னுதாரணம் அந்தப் பகுதியில் (தெற்காசியாவில்) விஷக் காய்ச்சலைப் போலப் பரவும். அதனால் தான், அமெரிக்க அரசு வியட்நாமையே அழிக்க முற்பட்டது. அமெரிக்காவின் லட்சியம், 1967 – வாக்கில் பெரும்பாலும் நிறைவேறிவிட்டது எனலாம். ஆனால், வியட்நாமை, இன்னொரு பிலிப்பைன்ஸாக மாற்ற முடியவில்லை. அதனால் தான் வியட்நாம் போரை ஒரு தோல்வி என்கிறார்கள். ஆனால் வியட்நாமை அழித்துவிட்டு, அங்கிருந்து வெளியேறுவது என்பதைக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.

ஹோடிங் : 1960 களில் நடைபெற்ற யுத்த எதிர்ப்பு, இப்போதிருப்பதைவிட வெற்றிகரமாக நடந்தது என்று நினைக்கிறீர்களா?

சோம்ஸ்கி : இல்லை. பார்க்கப் போனால், நேரெதிராக நடக்கிறது. யுத்த எதிர்ப்பு, முன்னைவிட இப்போது தீவிரமாயிருக்கிறது என்று சொல்ல வேண்டும். அமெரிக்கா, வியட்நாமை 1962 ல் தாக்கத் தொடங்கியது. அதற்குப் பிறகு போர் எதிர்ப்பு தொடங்கப் பல ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் பல நூற்றாண்டு வரலாற்றில் முதன் முறையாக, இராக் கோரின் போது தான், போர் தொடங்குவதற்கு முன்பாகவே போரை எதிர்த்த மாபெரும் இயக்கங்கள் நடைபெற்றன. பிப்ரவரி 2003 ல் ஒரு மிகப்பெரிய போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கத்திய நாடுகளின் வரலாற்றிலேயே இப்படியொரு நிகழ்ச்சி நடந்ததில்லை.

ஹோடிங் : அமெரிக்க ஜனாதிபதிகளின் வரிசையில் ஜார்ஜ்புஷ் ஷூக்கு எப்படிப்பட்ட இடத்தை ஒதுக்குவீர்கள்?

சோம்ஸ்கி : ஜார்ஜ் புஷ் ஒரு சின்னம் தான். ஆனால், அவரைச் சுற்றியிருப்பவர்கள், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் ஆபத்தான நிர்வாகிகள். இந்த உலகத்தையே அழிவுப்பாதையில் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இந்த உலகத்தில் உயிரினங்களையே அழிக்கக் கூடிய அபாயங்கள் இரண்டு உள்ளன. அவை வேடிக்கையான விஷயங்கள் அல்ல. ஒன்று – அணு ஆயுதப் போர், இன்னொன்று சுற்றுச் சூழல் மாசுபட்டு அழிதல், புஷ்ஷைச் சுற்றியுள்ள நிர்வாகம் மேற்கூறிய இரண்டு அம்சங்களிலும், உலகத்தை அழிவுப் பாதையில் தள்ளிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவோடு போட்டியிடும் நாடுகளை – அதாவது ரஷ்யா, சீனா – தற்போது இரான் – இவர்கள் தங்கள் ஆயுதங்களைப் பெருக்கும் முயற்சியில் தள்ளியிருக்கிறார்கள். இதனால், இந்த நாடுகள், தங்கள் அணு ஆயுதங்களைப் போருக்குத் தயார் நிலையில் வைத்திருக்கும் நிலையில் தள்ளப்படுகின்றன.

உலக மக்கள் அமெரிக்காவை அடியோடு வெறுக்கும் நிலைக்கு, அமெரிக்காவை ஓர் அச்சத்தோடு பார்க்க வேண்டிய நாடாக ஆக்கிவிட்டது புஷ் நிர்வாகம். இத்தகைய நிலைக்கு அமெரிக்காவை உள்ளடக்கிய அமெரிக்க நிர்வாகத்தின் திறமை நம்ப முடியாது. கனடாவைப் போன்ற ஒரு நாட்டைக் கூட அமெரிக்காவிடமிருந்து அந்நியப்படுத்திவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! இதற்கு உண்மையிலேயே ஒரு மேதாவித் தனம் தேவை!.

ஆதாரம் – க்யூ வீக்%d bloggers like this: