கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர் வர்க்கமும் VI


இத்தொடரின் முந்தைய கட்டுரைகளில் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பாத்திரத்தை பற்றி சற்று விளக்கமாக எழுதியிருந்தோம். இக்கட்டுரைகள் மூலம் தொழிற்சங்க பணிகள் செய்வதன் மூலம் மட்டும் தொழிலாளி வர்க்கத்தை ஒரு புரட்சிகரமான வர்க்கமாக வார்த்தெடுக்க முடியாது என்பதற்கான காரணங்களை அழுத்தம், திருத்தமாக விளக்கியிருந்தோம்.

இக்கட்டுரையில் இது சம்மந்தமாக சில முக்கியமான அம்சங்களை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது. முன்பு குறிப் பிட்டதுபோல புரட்சிகரமான தத்துவத்தை – மார்க்சிய கோட்பாடுகளை – தொழிலாளி வர்க்கத்திற்கு போதிப்பது ஒரு முக்கிய கடமை என்பதை பற்றி விளக்கியிருந்தோம். அதேபோல, இக்கடமையை நிறைவேற்றுவதற்கு தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் வலுவான, புரட்சிகரமான கட்சியை கட்ட வேண்டிய அவசியத்தையும் கோடிட்டு காட்டியிருந்தோம். இக்கடமைகள் ஏதோ ஒரு கட்டத்தில் – சில வருடங்களில் செய்து முடிக்க வேண்டிய காரியமல்ல என்பதை வலியுறுத்தி சொல்ல விரும்புகிறோம்.

தோழர் பி.டி.ஆர். அவர்கள் அவருக்கே உரிய நகைச்சுவையுடன் ஒரு சில விஷயங்களை முன்வைப்பதுண்டு. உதாரணமாக, ஒரு தொழிற்சாலையில், ஒரு தொழிற்சங்கம் அங்கீகாரத்திற்கான வாக்கெடுப்பில் அல்லது கூட்டுறவு வங்கி டைரக்டர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நம்முடைய தோழர்கள் பலரும் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனையை அடைந்து விட்டதாக பெருமிதத்துடன் கூறுவார்கள். அத்துடன் கட்சிப்பணி செய்து முடித்ததாக சில தோழர்கள் நினைப்பதுவும் உண்டு. இது தவறான ஒரு போக்கு என்று அவர் குறிப்பிடுவார்.

தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் நாம் செய்ய வேண்டிய பணி இந்த தேர்தல் வெற்றி என்பது ஒரு சிறு பகுதி மட்டும்தான். வர்க்கத்தை புரட்சிகரமான வர்க்கமாகவும் மாற்றியமைக்கும் பணிகள் நீண்ட காலமாகவும், தொடர்ச்சியாகவும் நடைபெற வேண்டியுள்ளது. அதற்கு மாறாக ஒரு சிறு வெற்றியின் மூலம் பெரிய கடமைகள் செய்து முடித்ததாக நினைப்பது நமது பணிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என்று தோழர் பி.டி.ஆர். குறிப்பிடுவார்.

இதேபோல ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஐந்து அல்லது பத்து வருட காலத்தில் வலுவான ஒரு தொழிற்சங்க இயக்கத்தை கட்டியவுடன் அத்தொழிற்சங்கம் நமது கோட்டையாக மாறியிருப்பதாக நினைப்பதும் முட்டாள்தனமாகும் என்றும் அவர் ஆணித்தரமாக சுட்டிக்காட்டுவார்.

தொழிலாளி வர்க்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் பணி என்பது தொடர்ச்சியாகவும் நீண்ட கால பார்வையுடனும் செய்து முடிக்க வேண்டிய ஒரு காரியம். அவ்வாறு இல்லாமல் போனால், வரலாற்று கடமைகளை செய்து முடிக்கும் ஒரு வர்க்கமாக நீடித்து செயல்படும் வர்க்கமாக இவ்வர்க்கத்தை உருவாக்க முடியாது என்பதை நாம் என்றும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதற்கொரு முக்கிய காரணம், நிகழ்வுகளில் வரக்கூடிய மாற்றங்கள் அவற்றின் தாக்கத்தை வர்க்கத்தின் உணர்வுகளிலும், பதிவு செய்யும் என்பதை மறக்கலாகாது. நாட்டில், உலகில் நிகழும் மாற்றங்களின் காரணமாக நாம் வென்றெடுத்த தொழிலாளர்கள் மத்தியில் கூட, பாதகமான எண்ணப் போக்குகளை படிப்படியாக ஏற்படுததும் என்பதுதான் உண்மை. சோவியத் யூனியனுடைய வீழ்ச்சி, உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பல மாற்றங்கள் முதலாளித்துவ சமுதாயத்தில் தற்சமயம் காணப்படும் காரியங்கள் எவ்வாறு நம்முடைய ஊழியர்கள் மத்தியில் கூட பல சந்தர்ப்பங்களில் தெளிவின்மையையும், கொள்கை மனப்பான்மையையும் வளர்த் துள்ளது என்பதை நாம் நேரடியாக பார்ப்போம்.

ஒருமுறை புரட்சிகரமான வர்க்க உணர்வு எந்த சூழ்நிலையிலும் அதே உணர்வுகளின் நீடித்து நிற்பார்கள் என்பதை நினைப்பதானது மிகப் பெரிய தவறாகும். ஒரு கட்டத்தில் உற்சாக மிகுதியில் தோல்விகளை சந்திக்கும் போது, சோர்வின் பாதாளத்திற்கு சென்று விடுவதும் நாம் பார்க்கிறோம். ஆகவேதான் கம்யூனிஸ்ட்டுகளின் பணி நீடித்தும், தொடர்ந்தும் நடைபெற வேண்டும் என்பது நம்முடைய அடிப்படை கடமையின் ஒரு முக்கிய தன்மையாக பார்க்கிறோம்.
சில வகுப்புகள் நடத்தி, மார்க்சிய சூத்திரங்கள் போதிப்பதின் மூலமாகவும் புரட்சிகரமான நம்பிக்கையை கெட்டியாக வளர்த்து விட்டதாக நினைப்பது தவறு. புரட்சிகரமான வர்க்கமாக்குவது என்ற கடமை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதை தெளிவாக உணர வேண்டும்.

அன்றாட நிகழ்ச்சிகள் பற்றி நமது வர்க்கத்திற்கு மார்க்சிய பார்வையுடன் விளக்கங்களை அளிப்பது ஒரு இன்றியமையாத கடமையாகும்.

புரட்சிகரமான உணர்வுகள், பலவிதமான தாக்கங்களுக்கு உட்பட வேண்டிய நிலைமை இருப்பதையும் நாம் என்றும் மனதில் கொள்ள வேண்டும். உதாரணமாக, வலுவான தொழிற்சங்கங்கள் மூலமாக அல்லது மாறி வரும் புறச் சூழ்நிலைகளில் ஒரு பகுதி தொழிலாளர்கள் மத்தியில் ஒரு திருப்தி மனப்பான்மை வளர்ந்து புரட்சிகரமான எண்ணங்கள் மங்கலாகப் போவதை நாம் நேரடியாக பார்க்கிறோம். முதலாளித்துவ சமுதாயத்தை வீழ்த்தி, புதிய ஒரு சமுதாயத்தை அமைப்பதன் மூலம் மட்டுமே வர்க்கத்திற்கு விமோசனம் கிடைக்கும் என்பதை மறந்து இன்றுள்ள அமைப்பின் மீது பிரம்மைகள் வளருவதை நாம் பார்க்கிறோம். சீர்திருத்தவாத தொழிற்சங்க தலைவர்கள் வேண்டுமென்றே பிரம்மைகள் வளர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம். அதன் காரணமாக போராட்ட உணர்வுகள் மழுங்கி விடுவதையும் நாம் நேரில் பார்த்தோம்.

சொல்லப்போனால், ஒரு சராசரி தொழிற்சங்கவாதிக்கு தொழிற்சங்கம் மூலம் மட்டும் வாழ்க்கைப் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்த்து விட்டு, ஒரு நல்ல வாழ்க்கை அமைக்க முடியும் என்ற தவறான எண்ணப் போக்குகள் இயல்பாகவே ஏற்படுகின்றன.

முதலாளி வர்க்க அமைப்பின் கட்டுக்கோப்புக்குள் நமது பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வு காண முடியாது என்றும், ஒரு புதிய சமுதாயத்தை அமைப்பதன் மூலம் மட்டுமே மனித குலம் முன்னேற முடியும் என்று தானாகவே தொழிலாளர்கள் மத்தியில் எண்ணங்கள் உருவாகவில்லை என்பதுதான் உண்மை.

ஆகவேதான் கம்யூனிஸ்ட்டுகளின் பணிகளில் புரட்சிகரமான கண்ணோட்டத்தை வளர்ப்பது என்பது நீடித்து நடக்க வேண்டி யுள்ளன. மார்க்ஸூம், லெனினும் மற்ற தலைவர்களும் போதித்திருப் பதைபோல் புரட்சிகரமான எண்ணப் போக்குகள் தானாக – தன்னெ ழுச்சியாக உருவாவதில்லை. அவற்றை உணர்வு பூர்வமாக போதிப்பதன் மூலம் மட்டும் வர்க்கத்தை புரட்சிகரமான வர்க்கமாக மாற்ற முடியாது. தொழிற்சங்க இயக்கம் இயல்பாகவே இன்றுள்ள அமைப்பினுள் முன்னேற்றம் காண்பது என்ற உணர்வு மட்டத்தி லேயே நிற்கும் போக்கு இருக்கிறது என்று என்ன செய்ய வேண்டும் என்ற நூலில் லெனின் விளக்கியுள்ளார் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இக்கடமையைச் செய்யாமல் நமது பணிகள் நீடித்து பலனளிக்கும் தன்மை வாய்ந்ததாக அமையாது.

இதேபோல், புரட்சிகரமான எண்ணத்திற்கு மாறாக சீர்திருத்தவாத போக்குகள் வெறும் தொழிற்சங்க இயக்கத்தில் வளர்வதற்கான சூழல்கள் என்றுமிருக்கும். குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தின் முன்னணியில் இருக்கக்கூடிய சில பகுதியினருக்கு முதலாளித்துவ அமைப்பை பற்றிய பிரமைகள் இயல்பாகவே வளருகின்றன. இத்தகைய சீர்திருத்தவாத எண்ணங்களை எதிர்த்து, தொடர்ந்து பிரச்சாரம் நமது வர்க்கத்தின் மத்தியில் செய்வதானது நமது கடமையாகும்.

இதேபோல், இயக்கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு கூட தான் வாழும் சுற்றுச் சார்புகளின் விளைவாக சிந்தனைகளில் பல தவறான போக்குகள் உருவாகின்றன. ஜாதி எண்ணங்கள் மூட நம்பிக்கைகள் பெண்களுக்கு எதிரான தவறான பார்வைகள் இவற்றிற்கெல்லாம் நமது இயக்கத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு கூட சில பாதிப்பு களை உருவாக்குகின்றன. இவற்றிற்கு இரையாகி புரட்சிகரமான வர்க்க பார்வை பலகீனமாவது குறித்தும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தப் போராட்டமும், நீடித்து தொடர்ந்து நடக்க வேண்டியுள்ளது. இது கம்யூனிஸ்ட்டுகள் ஆழமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கை சூழ்நிலைகளின் காரணமாக, புரட்சிகரமான எண்ணங்கள் மீது அவநம்பிக்கை ஏற்பட்டு புரட்சி இயக்கத்தையே எதிர்க்கும் நிலைகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களை இன்னும் நாம் பார்க்க முடிகிறது. இத்தகைய நிலைமைகள் தொடர்ந்து உருவாகும் என்பதனால்தான் கம்யூனிஸ்ட்டுகள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டியுள்ளது.

தற்சமயம் உள்ள உலக நிலைமைகள் காரணமாகவும், இந்திய சமுதாயத்தில் வளர்ந்து காணப்படும் நுகர்வு கலாச்சாரத்தின் தாக்கமும் வர்க்கத்தின் புரட்சிகரமான தன்மையை பெருமளவில் பாதிக்கச் செய்கிறது. இச்சூழலிலும், அடிப்படையான புரட்சிக் கடமையை நாம் தொடர்ந்து செய்ய வேண்டியவராக இருக்கிறோம். ஆக, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் புரட்சிகரமான சமூதாய – அரசியல் மாற்றங்களுக்கு வழி கோலக்கூடிய வர்க்கமாக, முன்னனிப் படையாக மனித சமுதாயத்துக்கு வழிகாட்டியாக இவ்வர்க்கத்தை வளர்த்தெடுக்கும் மாபெரும் வரலாற்று கடமையின் ஒரு பகுதியாகத்தான் கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றுகிறார்கள். 20ஆம் நூற்றாண்டு மிகப் பெரிய புரட்சிகளை தலைமை தாங்கி வெற்றி பெற்ற வர்க்கம் தொழிலாளி வர்க்கம். இந்த நூற்றாண்டிலும் அதைவிட பெரிய வெற்றிகளை ஈட்டுவது சாத்தியம் என்ற நம்பிக்கையுடன் நாம் செயல்பட வேண்டும்.

I, II, III, IV, V