மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


மார்க்சியம் குறித்த பின்நவீனத்துவர்களின் விமர்சனம்


பின்நவீனவாதிகள் ஒழுங்கின்மையை கொண்டாடுகிறார்கள்; கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு என்பதெல்லாம் அதிகாரத்தின் ஆட்சியை பறைசாற்றுவது என்பது அவர்களது எண்ணம். ஒவ்வொரு முனையிலும் ஒழுங்கற்று நின்றுக் கொண்டு, ஒவ்வொரு முனையும் ஒரு அதிகார மையமோ என்ற சந்தேகத்தை சாதாரண மனிதனுக்கு கிளப்பும் வண்ணம், ஒழுங்குத் தன்மையை ஒரு செயல் ஒழுங்கோடு எதிர்பார்கள். கட்டுப்பாடுடன் இருக்கிறது என மார்க்சிய செல்நெறிக்கு எதிராய் குரல் எழுப்புவது என்றால், பின்நவீனதுவ வாதிகளுக்கு எப்போதுமே கொண்டாட்டம்தான். தங்கள் பிறவிக்கடன் நிறைவேறியது போல் பக்தி சிரத்துடன், அந்தக் காரியத்தைச் செய்கிறார்கள்.

ஏன் பின்நவீனத்துவர்கள், மார்க்சியர்களை எதிர்கிறார்கள் என்பதற்கான காரணத்தை அறிய, நாம் பின்நவீனத்தை இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.  ஆனால் இக்கட்டுரையின் நோக்கம் அதுவன்று; மாறாய் எந்த வாதத்தை முன்வைத்து, பின்நவீனத்துவ வாதிகள் மார்க்சியத்திற்கு எதிராய் தங்கள் விமர்சனத்தை வைக்கிறார்கள் என்பதை ஆய்ந்து, அந்த விமர்சனத்தின் பாதக சாதக தன்மையை நோக்குவதுதான் இக்கட்டுரையின் நோக்கம். பின்நவீனத்துவத்தை கருத்துநிலையில் எதிர்கொள்வதுதான், மார்க்சியத்தைப் பற்றிக் கொண்டு கள பணியாற்றும் தோழர்களுக்கிடையே பின்நவீனத்துவம் எழுப்பும் பல குளறுபடியை போக்க உதவக்கூடும். கீழ்கண்டவாறு மார்க்சியத்திற்கு எதிரான விமர்சனத்தை பின்நவீனத்துவ வாதிகள் வைக்கிறார்கள்.

  1. விழிப்புணர்வு இயக்கம் மற்றும் பிரெஞ்ச் புரட்சி குறித்த மார்க்சியர்கள் மதிப்பீடு சரியானதில்லை.
  2. மார்க்சியம் ஹெகலிடம் இருந்து இறக்குமதி செய்த கருத்தையே கொண்டுள்ளது; மார்க்சியம் அசலானதல்ல.
  3. மார்க்சியம், பொருளாதார நியதவாதத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறது
  4. வர்க்கத்தை விட, குழுமத்திற்கு முக்கியப்பங்கு உள்ளது
  5. பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம் மார்க்சியம் கூறுவது போல் எற்றுக் கொள்ளத் தக்கதல்ல

அவர்கள் கருத்தை ஒவ்வொன்றாய் நாம் ஆராய்வோம்.

விழிப்புணர்வு இயக்கம் மற்றும் பிரெஞ்ச் புரட்சி குறித்த மார்க்சியர்கள் மதிப்பீடு சரியானதில்லை: பின்நவீனத்துவ வாதிகளைப் பொறுத்த வரை, விழிப்புணர்வு இயக்கம் என்பது மேற்கத்திய, ஆணாதிக்க, உயர்வர்க்க கோட்பாடாகும். மார்க்சியர்கள் நினைக்கும் அளவுக்கு, விழிப்புணர்வு இயக்கத்தில் முற்போக்கு அம்சம் இல்லை. சொல்லப் போனால், பின்நவீனத்துவ வாதிகள் விழிப்புணர்வு இயக்கத்தை, அதீத இடதுசாரிக் கோணத்தில் இருந்து பார்க்கிறார்கள்.

பின்நவீனத்துவவாதிகள் கூறுவது போல், விழிப்புணர்வு இயக்கம் மேற்கத்திய, ஆணாதிக்க, உயர்வர்க்க கோட்பாடாய் இருந்தாலும், அதற்கு வரலாற்றுப் பூர்வமான முக்கியத்துவமும் உள்ளது. அதை பின்நவீனவாதிகளைப் போல் மார்க்சியர்கள் நிராகரிக்கவில்லை. விழிப்புணர்வு இயக்கம் மதம், இயற்கை விஞ்ஞானம், சமூகம், அரசியல் அமைப்புகள் என்ற அனைத்தையும், அறிவு என்ற உலைகளனுக்குள் போட்டு ஆய்ந்து, அதில் மீறி தேறி வருபவைகளைதான் அங்கீகரித்தது. அதன்படி எதற்கும், காரணம்தான் அடிப்படையானது; காரணத்தின் அடிப்படையில் தான் எதுவுமே, எல்லாமே  அளக்கப்பட வேண்டும். விழிப்புணர்வு இயக்கத்தின் படி, அழிவற்ற உண்மை, அழிவற்ற உரிமை மற்றும் சமத்துவம் போன்றவை மனிதனது மறுக்க முடியாத உரிமைகள் என்ற புதிய தரிசனத்திற்கு சமூகம் வந்தடைந்தது; அந்த புதிய தரிசனத்தின் அடிப்படையில்தான், முதல்முறையாக அதுவரை இருந்து வந்த மூடநம்பிக்கை, நீதியின்மை, ஒடுக்குமுறை, தனிச்சலுகை போன்ற அனைத்துமே கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

இருப்பினும் விழிப்புணர்வு இயக்கத்தின் போதாமையையும் புரிந்தவர்களாகவே மார்க்சியர்கள் இருந்தார்கள். எங்கெல்ஸ் இந்த விழிப்புணர்பு இயக்கம் என்பது பூர்ஷ்வாக்களின் இலட்சியப்பூர்வமான அரசாட்சியே அல்லாமல் வேறல்ல என்பதை தெளிவாக கூறுகிறார். விழிப்புணர்வு இயக்கம் அழிவில்லாத உரிமை என்று கூறுவது முதலாளித்துவவ நியாயத்தை அடைவதற்கு அதற்குள்ள உரிமையே என்றும், அவர்கள் கூறும் சமத்துவம் என்பது முதலாளித்துவ சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே ஆகுமென்றும், முதலாளித்துவ சொத்தை பெறுவதே மனிதனின் உரிமைகள் என்று அது கூறுகிறதென்றும் எங்கெல்ஸ் அப்போதே மிகத்தெளிவாக கூறுகிறார். அதே நேரத்தில், 18ம் நூற்றாண்டில் இருந்த விழிப்புணர்வு இயக்க சிந்தனாவாதிகள், அவர்களது காலகட்டம் அவர்கள் மேல் விதித்திருந்த எல்லைகளை மீறி அவர்களால் போக முடியவில்லை என்ற தெளிவுடனேயே மார்க்சியர்கள் இதைப் பார்த்தார்கள்.

விழிப்புணர்வு இயக்கம்தான், நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கி வந்த மத்திய காலம் முடிவுக்கு வந்ததை தெளிவாக எடுத்துரைத்து, வருங்காலம் காரண காரியத்தோடு செயல்படுபவர்களுக்கான காலம் என்பதை சொன்னது. இதை முற்போக்கானது என ஏற்றுக்கொள்ளவில்லை எனில், வரலாற்றை பின்நோக்கி இழுக்க முயற்சிக்கும் செயலுக்குதான் இது ஈடானதாகும்.

பின்நவீனத்துவர்களில் சிலர், நீட்ஷேயை போல் நவீனகாலத்துக்கு முந்திய மதிப்பீடுகளில் அதிக நம்பிக்கையை வைத்து, முன்-நவீனகாலத்திற்கு பின் நவீனத்துவ தத்துவத்தின் துணை கொண்டு போக நினைக்கிறார்கள். நுகர் முதலாளித்துவத்தை அனுபவித்துக் கொண்டே, அகரீதியில் நிலப்புரவத்துவ சிந்தனைகளை தூக்கிப்பிடிப்பதே இதன் தாத்பரியமாகும். அடுத்து விழிப்புணர்வு இயக்கத்தின் விளைவான பிரெஞ்ச் புரட்சி பற்றி பார்ப்போம். பிரெஞ்ச் புரட்சி முதலாளித்துவ புரட்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். அது நிலபிரபுத்துவம், முடியாட்சி, மத்தியகாலம் என அனைத்தையும் முடிவுக்குக் கொணடு வந்தது. அப்புரட்சியின் போது, முதலாளிகள் தங்கள் புரட்சிப் பாத்திரத்தை நிறை வேற்றினார்கள். முதலாளித்துவ வர்க்கத்தின் நலன் என்பது அப்போது தேசிய நலனாக மாறிப் போயிருந்தது. முதலாளிவர்க்கம் அப்போது பிரெஞ்ச் தேசத்தின் பிரதிநிதிகளாய் ஆகியிருந்தது. பிரெஞ்ச் புரட்சி மூலம் முதலாளிகள் பெற்ற வெற்றி, புதிய சகாப்தத்தின் தொடக்கமாக இருந்தது; அது நிலபிரபுத்துவ மூலதனத்திற்கு எதிராய், முதலாளித்துவ முதலீடு அடைந்த வெற்றி;  மூடநம்பிக்கைக்கு எதிராய் விழிப்புணர்வு இயக்கம் அடைந்த வெற்றி; காவியத் தனமான சோம்பேறித்தனத்தற்கு எதிராக, காரியமாற்றும் திறன் அடைந்த வெற்றி; மத்தியகால தனிச்சலுகைக்கு எதிராக சிவில் சட்டங்கள் அடைந்த வெற்றி. ஆனால் அதே நேரத்தில், பூர்ஷ்வாக்கள் தான் ஆட்சி செய்யும் வரைதான், புரட்சிகரமானவர்களாய் இருப்பார்கள் என்று மார்க்சிய பிதாமகர்கள் சொன்னதையும் மறந்து விடக்கூடாது. ஏனெனில் ஆட்சி புரியும் போது, தங்கள் நலன் சொத்துள்ள வர்க்கத்துடன் சேர்ந்து பின்னிப் பிணைந்துள்ளது என்பதை பூர்ஷ்வாக்கள் தெளிவாக அறிவார்கள். ஆகவே பூர்ஷ்வாக்களின் இன்னொரு பக்கத்தையும் மார்க்சியர்கள் புரிந்து வைத்திருந்தார்கள் என்பது தெரிகிறது. பிரெஞ்ச் புரட்சிக்குப் பிறகு, ஜேகப்பியன்கள் வேலை நிறுத்தத்தை தடை செய்யும் சட்டத்தை இயற்றினார்கள் என்பதுவும், பெண்கள் இயக்கத்தை முடக்க முயன்றார்கள் என்பதுவும் வெளிப்பாடே.

எல்லாம் எப்படி இருப்பினும், மத்தியகாலத்தின் மிச்ச சொச்சங்களை அழித்து ஒழித்த வகையில், பிரெஞ்ச் புரட்சி ஒரு இமாலாய சாதனைதான். பிரெஞ்ச் புரட்சியின் வெற்றி உலகமெங்கும் எதிரொலித்து, அதன் அசைவுகளை நாம் இந்தியாவில் கூட காண முடிந்தது. நிலபிரபுத்துவ மதிப்பீடுகள் அழிவதைத்  தாங்கிக் கொள்ள முடியாத பின்நவீனத்துவ வாதிகளால், இந்த மார்க்சிய அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

மார்க்சியம் ஹெகலிடம் இருந்து இறக்குமதி செய்த கருத்தையே கொண்டுள்ளது; மார்க்சியம் அசலானதல்ல:மார்க்சின் வரலாறு குறித்த கருத்தாக்கம் அசலானதல்ல என்ற விமர்சனத்தை பின்நவீனத்துவ வாதிகள் வைக்கிறார்கள். அது ஹெகலின் வரலாறு குறித்த தத்துவத்தில் இருந்து கடன் வாங்கப்பட்டது என்கிறார்கள். ஹெகலினால், மார்க்ஸ் ஈர்க்கப்பட்டார் என்பது உண்மையே. ஆனால் அவர் ஹெகலின் இயக்கவியலை மிகவும் அசலாகப் பயன்படுத்தி, ஹெகல் வந்தடைந்த முடிவுக்கு மாறான முடிவை வந்தடைந்தார். ஹெகலின் கருத்துப் படி, வரலாறு என்பது தாராளமயமான அரசுடன் முடிந்து விடுகிறது; ஆனால் மார்க்ஸோ, வரலாறு என்பது கம்யூனிஸ்ட் சமூகம் அமைவதுடன் முடிகிறது என்கிறார். அக்கருத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாத பின்நவீனத்துவ வாதிகள், மார்க்சியத்தை எதிர்க்கிறார்கள், அவ்வளவுதான். வரலாற்று பொருள்முதல்வாதம் என்பது மார்க்சின் அசலான கண்டுப்பிடிப்பு. பல வரலாற்று உண்மைக்கான விளக்கம், வரலாற்று பொருள்முதல்வாதத்தை பயன்படுத்தி தான் சரியான விளக்கம் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வர்க்க அரசியல் என்பதை நியாயப்படுத்தும் வகையில், பல பொதுவான வரையறைகள் செய்யப்பட்டு, மார்க்சியத்தை மலினப் படுத்துவதும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. அதற்காக மார்க்ஸையோ அல்லது மார்க்சியத் தையோ யாரும் விமர்சிக்க முடியாது. மார்க்சியம் பொருளாதார நியதவாதத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறது:  வரலாற்றை பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கும் போது, நிஜ வாழ்க்கை எப்படி உற்பத்தியும், மறுஉற்பத்தியும் செய்யப்படுகிறது என்பதே வரலாற்றை தீர்மானிக்கும் அம்சமாக உள்ளது என்று மார்க்ஸிம் எங்கெல்ஸிம் சொன்னார்கள்.

இதற்கு மேல் மார்க்சிய மூலவர்கள் எதுவும் சொல்லவில்லை. இதற்கு அர்த்தம், பொருளாதாரம்தான் அடிப்படை என்றாலும், மேல்கட்டு மானத்திலுள்ள பல அம்சங்களும் தீர்மானகரமான அம்சத் துடன் செயலாற்றுகிறது என்பதுதான். ஆனால் சில மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் மற்ற அம்சங்களை விட, பொருளாதார அடிப்படைக்கு கொடுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம்  பின்நவீனவாதிகள் வைக்கும் இந்த மாதிரியான குற்றச்சாட்டுக்கு காரணமாய் அமைகிறது என்றாலும், மார்க்சியத்தை தவறுதலாக பயன்படுத்தும் இப்படிப்பட்ட வரலாற்றாசிரியர்களின் செயல்களுக்கு பொறுப்பேற்று விளக்கமளிக்க, மார்க்சியத்திற்கு எந்த அவசியமில்லை; இங்கே மார்க்சியத்தை அவர்கள் சரியாக உள்வாங்கிக் கொள்ள வில்லை என்று மட்டுமே சொல்ல முடியும்.  என்ன செய்ய வேண்டும? என்ற தனது கட்டுரையில் லெனின் பொருளாதார அடிமானத்திற்கு கொடுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் என்பது மார்க்சியத்தை மலினப்படுத்துவதற்கு சமமாகும் என்று சொல்கிறார். லெனின் சொல்கிறார் : பொருளாதார நலன் என்பது தீர்மானகரமான பாத்திரத்தை செய்கிறது என்றாலும், அதற்காக பொருளாதாரப் போராட்டம்தான் (தொழிற்சங்கப் போராட்டம்) முக்கியமானது என்று அர்த்தமல்ல. அடிப்படையில் தீர்மானகரமான வர்க்க நலன்கள் விஞ்ஞானப் பூர்வமான அரசியல் மாற்றங்களால்தான் பொதுவாக நிறைவேற்றப்படுகிறது கிராம்ஷியும் பொருளாதார அடிப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கு எதிராய் சமரசமற்ற போராட்டத்தை நடத்தியுள்ளார். உற்பத்தி முறைக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றாலும், மற்ற அம்சங்களுக்கும், குறிப்பாக சொன்னால் கலாச்சார அம்சங்களுக்கு அதற்குரிய  முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும் என கிராம்ஷி வலியுறுத்துகிறார்;  அளவுக்கு அதிகமாக இதை எளிமைப்படுத்துவது, அபத்தமான முடிவுக்கு நம்மைப் போகத் தள்ளிவிடும் என்கிறார் கிராம்ஷி.

ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கேயுரிய அசல்தன்மை, அதற்கேயுரிய விசேசத் தன்மை  உள்ளது. நமது இந்தியாவைப் பொறுத்த வரை, சாதியப் பிரச்சினை கலாச்சாரத் தளத்தில் மிகவும் தீர்மானகரமான பாத்திரத்தைச் செலுத்துகிறது. அதைப் புரிந்து கொள்வதில், இந்தியாவிலுள்ள மார்க்சியவாதிகளுக்கு பிரச்சினை எழுந்தது வாஸ்தவம்தான். ஆரம்ப காலத்தில் தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களிலும், வர்க்க அடிப்படையில் தொழிலாளிகளை திரட்டுவதில் மார்க்சியவாதிகள் பெரும் வெற்றி பெறதான் செய்தார்கள். அவர்களால் வர்க்க அடிப்படையிலான விவசாய இயக்கங்களைக் கூட கட்டமுடிந்தது வாஸ்தவம்தான். ஆனால் பின்தங்கிய உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பிற மாநிலங்களில், கிராமப்புரத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களை திரட்டும் போது சாதிய உணர்வு வர்க்க உணர்வைக் காட்டிலும் மேலோங்கி நின்றதால், அவர்களை வர்க்க ரீதியாக திரட்டுவதில் பெரும் தடையாக அது இருந்தது. வெறும் பொருளாதார அடிப்படையில் ஏதோ முன்னமே தீர்மானிக்கப்பட்ட சூத்திரத்தின் அடிப்படையில் நடக்கும் விசயமாய் மார்க்சியத்தை சுருக்க முடியாது, பின்நவீனத்துவர்கள் மார்க்சிய வாதிகளைப் போலவே பொருளாதார வாதத்தை ஏற்றுக் கொள்ளா விடினும், அவர்கள் மார்க்சியவாதிகள் போல் அல்லாமல், ஒட்டு மொத்தமாக பொருளாதார அடிப்படையையே நிராகரிக்கிறார்கள். பொருளாதார நியதியின் முக்கியப் பங்கை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அளவுக்குக் கூட ஏற்றுக் கொள்ளவதில்லை. அவர்கள் அனைத்தையும் கலாச்சாரத்தின் மூலமே, விளக்கி நிற்க முயல்கிறார்கள். பொருளாதார அடிப்படைக்குப் பதிலாய் அவர்கள் கலாச்சார நியத வாதத்தை முன்வைக்கிறார்கள். அது அவர்களது கோட்பாட்டையே அடிப்படையற்றதாகி விடுகிறது.

வர்க்கத்தை விட, குழுமத்திற்கு முக்கியப்பங்கு உள்ளது : பூக்கோ மார்க்சிய வர்க்கப் போராட்டம் என்பது முக்கியத்துவப் படுத்தப்பட்ட தொன்மம் என்கிறார். அதன் அடிப்படையில் பார்த்தால், உற்பத்தி மற்றும் வர்க்கம் என்ற கோட்பாடுகள் தூக்கிப் பிடிக்கப்பட்டால், பெண்கள், கறுப்பர்கள், தலித்துகள், ஓரினப்புணர்ச்சியாளர்கள் போன்றோரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் என்று அர்த்தம். ஆகவே பொருளாதார அடிப்படையில் எதையும் நிர்ணயிக்க கூடாது என்ற முடிவுக்கு பின்நவீனத்துவவாதிகள் வருகிறார்கள். அறிவின் அடிப் படையில் எதையும் முடிவு செய்யாமல், பாராம்பரிய அறிவைக் கொண்டு அனைத்திற்குமான இறுதிமுடிவு எடுக்க வேண்டும் என இறுதியாக வலியுறுத்துகிறார்கள். மொத்தத்தில் அவர்கள் வர்க்க உணர்வுக்குப் பதிலாய் குழும உணர்வை தூக்கிப்பிடித்து, அதுதான் விடுதலைக்கு வழிசெய்யும் என்று பின்நவீன வாதிகள் சொல்கிறார்கள்.

வர்க்கம் அல்லது வர்க்கப் போராட்டம் என்பது மார்க்சியர்களின் கண்டுப்பிடிப்பு என்று சொல்ல முடியாது. வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில், வர்க்கம் என்பது யதார்த்தமாக ஏற்பட்டதாகும். நிலப்பிரபுத்துவ சமூகத்தில், இந்த முதலாளித்துவத்தில் உள்ள நவீன வர்க்கங்கள் உதயமாவதற்கு முன்னர், சமூகம் என்பது மேல் மற்றும் கீழ் மட்டமாக பிளவுண்டுதான் கிடந்தது. அங்கே கீழ் மட்டத்தினரிடம் வர்க்க உணர்வு ஆரம்பநிலையில் இருந்தது. அது வரலாற்றுப் பூர்வமாய் முதலாளித்துவ கட்டத்தை அடையும் போது, அந்த வர்க்க உணர்வு கூர்மையடைகிறது. போராட்டத்தின் மூலமும், வளர்ச்சியின் மூலமும்தான், வர்க்கம் என்ற கருத்தாக்கம் வளர்ந்து வருகிறது. வர்க்கப் போராட்டம் வர்க்கம் வளர்ச்சி பெறவும், அது முதிர்ச்சி அடையவும் உதவுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை, பிரிட்டிஷார் வருவதற்கு முன்னர், தொழில் அடிப்படையில் சமூகம் சாதியாக பிரிக்கப் பட்டிருந்தது. சாதிக்குள் இருப்பவர்களுக்கு, அந்த சாதிக்கான தொழில் மட்டும்தான் தெரியும். சாதியப் புறக்கணிப்புதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே போராட்ட ஆயுதம். ஆனால் தொழிற்சாலை தொடங்கிய போது, அங்குள்ள தொழிலாளிகள் தங்களுக்குள் ஒரு பொதுவான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான உணர்வுதான் வர்க்க உணர்வாகும். தொழிலாளிகளின் ஆயுதங்களில் ஒன்று வேலை நிறுத்தமும் ஆகும்.

பின்நவீனத்துவ வாதிகள், வர்க்கப் போராட்டம் விளிம்புநிலை மக்களின் போராட்டத்திற்கு எதிராக நிற்கிறது என்று வாதிடுகிறார்கள். மாறாக பின்நவீனத்துவ வாதிகள்தான், குழும உணர்வை முன்நிறுத்தி, வர்க்கப் போராட்டத்தை ஒழித்துக்கட்ட அல்லது பின்னுக்கு தள்ள முயற்சிக்கிறார்கள்.

குழும உணர்வை உயர்ந்தது என்று கொண்டாடி மற்றதை நிராகரிப்பது என்பது, உயர்ந்த கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் உணர்வை உயர்த்தி, முன்னேற்றத்திற்கு செல்வதை தடுப்பதற்கு ஒப்பாகும். குழும உணர்வை வர்க்க உணர்வுக்கு மேல் வைப்பது, நவீனத்தின் மேல் முன்-நவீனத்தை வைத்து அதற்கு பின்-நவீனம் என பெயர் சூட்டும் நகைமுரண் ஆகும்.

பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம் மார்க்சியம் கூறுவது போல் எற்றுக் கொள்ளத் தக்கதல்ல: பின்நவீனவாதிகள் வர்க்கம் என்பது பெரும் மாறதலுக்கு உட்பட்டு வருகிறது என்கிறார்கள். தற்போது ஏற்பட்டு வரும் பெரும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களால், உற்பத்தி முறைகள் தன்னியக்க முறைக்கு மாறிக் கொண்டிருக்கின்றன. ஆகவே மரபு ரீதியான பாட்டாளிகள் என்பவர்கள், தொழில்நுட்பர்கள் என்ற அடிப்படையில் மாறிக் கொண்டிருக் கிறார்கள். உற்பத்தியில் பாட்டாளிகளுக்கு உள்ள பங்கு குறைந்து வருகிறது. இதை மனதில் வைத்துக் கொண்டுதான், நமது கண் முன் பெரும் மாற்றம் நடந்து வருகிறது; வர்க்கம் என்பதே உடைந்து வருகிறது என்று பின்நவீனவாதிகள் வாதிடுகிறார்கள்.

பாட்டாளி  வர்க்கம் முதலாளித்துவ  சமூகத்துடன் மெள்ள ஐக்கியமாகி வருகிறது என்றும், நடப்பது பாட்டாளிகளின் முதலாளித்துவமாதல் என்ற நடைமுறைதான் என்றும் பின்நவீனத்துவர்கள் வாதிடுகிறார்கள். அவர்களைப் பொறுத்த வரை, சோவியத் வீழ்ச்சி என்பது அதையே காட்டுகிறது. அவர்கள் சொன்னது போல், மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளில் வேண்டுமானால் அவர்களது இந்த வாதம் செல்லுபடியாகலாம். ஆனால் உண்மையில் என்ன நடந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்? வளராத நாடுகளில் இருந்து கொள்ளை அடிக்கப்படும் உபரி மதிப்பைக் கொண்டுதான், மிகவும் வளர்ந்த நாடுகள் இன்றும் தனது நாட்டில் பாட்டாளி வர்க்கம் தனக்கு எதிராக கிளர்ந்து விடாதபடி, கட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ளது. உலகம் முழுவதையும் ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தால், பின்நவீனத்துவர்களின் மேற்சொன்ன வாதம் செல்லுபடியாகாது. ஏனெனில் உண்மையான வாழ்க்கை வேறு மாதிரியாக உள்ளது. இன்றைய மூன்றாம் உலகில் புதிய தொழிலக தேசங்கள் உருவாகி, அதில் கோடிக் கணக்கான பாட்டாளிகள் உருவாகி வருகிறார்கள். வரலாற்றின் எந்த காலக் கட்டத்தில் இல்லாத அளவு தற்போதுதான், பாட்டாளிகளின் எண்ணிக்கை அதிகம். சொல்லப் போனால் பாட்டாளிகள் உலக அளவில் திரண்டு வரும் தற்போதைய நிலையில், பின்நவீனத்துவர்கள் பாட்டாளிகள் நிரந்தரமாய் பிரியாவிடை பெற்றுக் செல்வதாய் சொல்வது, பெரும் நகைச்சுவையாகதான் இருக்கும்.

பாட்டாளிகளின் வெற்றி என்பது மூன்று அம்சங்களைப் பொறுத்து உள்ளது:

  1. பாட்டாளிகளின் எண்ணிக்கை
  2. பாட்டாளிகளின் கூட்டு
  3. வர்க்க உணர்வு.

பாட்டாளி வர்க்கம் ஏற்பட்டதும், எல்லாம் முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. முதலில் தன்னிச்சையாக எழும் போராட்டங்கள், பின்னர் தொழிற்சங்கங்களின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டங்கள் மூலம் பாட்டாளி வர்க்கம் முதிர்ச்சி பெறும். அதற்கு பிறகு பாட்டாளிவர்க்க உணர்வை ஏற்படுத்தும் கட்டம். அதாவது வர்க்க கோட்பாட்டின் மூலம், வர்க்க இயக்கத்தை உயர்ந்த தளத்திற்கு கொண்டு போதல் நடந்தேற வேண்டும். எந்த வர்க்கம் ஒடுக்குமுறை, வன்முறை, சர்வாதிகாரம் மற்றும் அவமதிப்பு போன்றவற்றை சொடுக்கி விட்டாலும், அதை லாகவமாய் எதிர்கொள்ள பாட்டாளிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அப்போதுதான் பாட்டாளிகள் நிறைவேற்றுவதற்காக வரலாறு தந்திருக்கும் தங்கள் பணிகளை அவர்கள் செவ்வனே நிறைவேற்ற முடியும்.

பாட்டாளி உணர்வை வர்க்க உணர்வாக உயர்த்துவது அவ்வளவு எளிதான வேலையல்ல. ஏற்கனவே பாட்டாளிகள் தங்களது காவியப்பூர்வமான பாத்திரத்தை பாட்டாளி வர்க்கம் பிரெஞ்ச் புரட்சியின் போதும், அக்டோபர் புரட்சியின் போதும் நிரூபித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் நடக்கும் விளிம்புநிலை மனிதர்களுக்கான போராட்டத்தில், பாட்டாளி வர்க்கம் தனது பங்களிப்பைச் செய்யும் போதுதான், ஆளும் வர்க்கம் நிலை தடுமாறுகிறது. இருப்பினும் மார்க்சியர் விரும்பும் மாற்றம் ஏற்படாததிற்கும், அல்லது ஏற்பட்ட சோசலிசத்தில் பின்னடைவு ஏற்பட்டதற்கும் காரணம் என்ன? முதலாளி வர்க்க உணர்வுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பாட்டாளி வர்க்க உணர்வு தூக்கி நிறுத்தப்படவில்லை. ஏனெனில் பாட்டாளி வர்க்க இயக்கம் சரியான திசைவழி செல்ல முடியாமல் தடம் புரண்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில், பாட்டாளி வர்க்க உணர்வு வளர அனுமதிக்கப் படுவதில்லை; மனிதாபிமானத்துடன் கூடிய முதலாளித்துவத்தை கனவு கண்டு கொண்டு, சமூக ஜனநாயக தொழிலாள இயக்கங்கள் தங்களுக்கு வர்க்க உணர்வை ஏற்படுத்திக் கொள்ள வில்லை. மேலும் மூன்றாம் உலக நாடுகளில் அடித்த உபரி மதிப்பின் சிறு பகுதியினை, மேற்கத்திய முதலாளிகள் மேற்கத்திய பாட்டாளிகளுடன் பகிர்ந்து கொண்டு, மற்றப்பகுதி பாட்டாளிகளுடன் மேற்கத்திய பாட்டாளிகள் சிறந்த நிலையில் இருப்பதாக எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு வர்க்க உணர்வு ஏற்படாதவாறு தடுத்து வருகிறார்கள். தற்போது குறைந்த விலையில் உழைப்பு கிடைப்பதால் மேற்கத்திய உற்பத்தி தொழிலகங்களை மூன்றாம் உலகுக்கு மாற்றி வருவது, மேற்கத்திய நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தி, அவர்களைப் போராடத் தூண்டி வருகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு தற்போது, பிரான்சில் உளள பாரிஸில் நடந்த இனக்கலவரம், மற்றும் நியுயார்க் பேருந்து வேலைநிறுத்தம் போன்றவை அந்த கோணத்தில் அலசப்பட வேண்டியுள்ளது. அடுத்து கிழக்கு ஐரோப்பாவில் நடந்த மாற்றங்களை கணக்கில் கொள்ள வேண்டும். அங்கே ஏற்பட்டிருந்த சோசலிச அரசின் உதவியால், பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம் மிகவும் புகழ்ந்துரைக்கப்பட்டது. பாட்டாளி வர்க்கம் விசேச வர்க்கமென நடத்தப்பட்டது. பாட்டாளி வர்க்கம் பிறந்த உடனே, அது புரட்சிகர வர்க்கமாய் நினைக்கப்பட்டது. அவர்களுக்கு பாட்டாளி வர்க்க உணர்வு இருக்கிறதா என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவேயில்லை. அவர்களை பயிற்றுவிக்கும் முயற்சியும், முறையாய் நடக்கவில்லை. மேலும் தொழிற்சங்கங்களின் தனிப்பட்ட பாத்திரம் நிராகரிக்கப்பட்டு, அது அரசின் பகுதியான் ஆக்கப்பட்டது. மொத்ததில் அரசியலின் பகடைகாய்களாய் தொழிலாளிகள் பயன்படுத்தப் பட்டார்கள். இது அரசையும், கட்சியையும் மக்களிடம் இருந்து அன்னியபடுத்தி விட்டது.

மூன்றாம் உலக நாடுகளில், பாட்டாளி வர்க்கம் வேகமாக வளர்ந்து வந்தாலும், அது இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. பாட்டாளிகள் தங்கள் பொருளாதார கோரிக்கைகளை வென்றெடுப்பதிலேயே ஆர்வமாய் உள்ளனர். அவர்களது அரசியல் உணர்வு மற்றும் வர்க்க உணர்வு, இன்னும் கீழ்நிலையிலேயே உள்ளது. உதாரணத்திற்கு இடதுசாரி தொழிற்சங்கத்தில் இருக்கும்  பாட்டாளி, வலதுசாரி அரசியல் கட்சிக்கு ஓட்டளிப்பதை நாம் பார்க்கவே செய்கிறோம்.

இந்தியா போன்ற நாடுகளில், சாதி என்ற கலாச்சார உணர்வு பின்நவீனத்துவ வாதிகளின் குழும உணர்வுக்குத் தீனிப்போட்டு, வர்க்க உணர்வு வளரத் தடையாய் இருந்து வருகிறது.

இருப்பினும் தற்போது உலகமயமாதல் மூலம், மூலதனம் மற்றும் உழைப்பு இரண்டுக்கும் இடையே பெரும் முரண்பாடு முற்றி வருகிறது. உழைப்பாளிகளுக்கு எதிரான மூலதனத்தின் தாக்குதல், பன்மடங்கு பெருகியுள்ளது. மூன்றாம் உலகில் உள்ள பாட்டாளிகள் பெரும் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். விளிம்புநிலை பாட்டாளிகளான தலித்துகள், பெண்கள் போன்றோர்கள் பலவகையான பன்மடங்கு சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். பெரும் தொழிலகங்கள் மற்றும் சேவை மையங்கள் மேற்கத்திய நாடுகளில் இருந்து மூன்றாம் உலக நாடுகளுக்கு மாறுவதால், மேற்கத்திய நாடுகளில் தொழிலாளிகள் குறைந்து, மூன்றாம் உலக நாடுகள் மேலும் பாட்டாளித்துவம் அடைந்த வண்ணம் உள்ளது. உலகமயமாதலுக்கு எதிராய் மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள போராட்டங்கள் இதையே காட்டுகின்றன. இந்தியா, அர்ஜென்டினா, தென்கொரியா, நைஜிரியா மற்றும் தென் ஆப்ரிக்கா என்று எங்கும் நடந்து வரும் பொதுவேலை நிறுத்தங்கள் இதையே காட்டுகிறது. அமெரிக்காவில் கூட பாட்டாளி வர்க்க புரிதல் அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேற்கத்திய நாடுகளில் உள்ள பாட்டாளிகள் தங்களது வேலையில்லாத திண்டாட்டத்திற்கு, தங்களது முதலாளித்துவத்தைதான் கேள்விக்குறியுடன் பார்க்கிறது.

தற்போது பெண்ணியம், சூழலியம் மற்றும் உலகளாவிய பாட்டாளி வர்க்க போராட்ட சூழல், பாட்டாளிகளின் பல்வகை கூட்டுகள் போன்றவை, பாட்டாளிகள் உலகமயமாதலை எதிர்கொள்ள தயாராகி விட்டார்கள் என்பதையே காட்டுகிறது. தற்போதைய சூழல் பின்நவீனத்துவர்களின் விளக்கம் போதவில்லை என்பதை காட்டினாலும், அவர்கள் மார்க்சியர்கள் மேல் வைக்கும் விமர்சனத்தை அப்படியே புறங்கை கொண்டு தள்ளிவிட முடியாது என்பதையும் காட்டுகிறது. இருப்பினும் பின்நவீனத்துவர்கள் பாட்டாளிவர்க்கம் மறைந்து விட்டது என்று சொல்லும் இவ்வேளையில், நாம் உலகம் முழுவதும் பாட்டாளி வர்க்கம் புதுத் துடிப்புடன் எழுவதையே பார்க்கிறோம். மொத்ததில் பின்நவீனத்துவ வாதிகள் முதலாளித்துவத்தை எதிர்கொள்ள தீர்மானகரமான எந்த திட்டத்தையும் உள்ளவர்கள் இல்லை. அவர்களுக்கு தனிமனித சுதந்திரம் ரொம்ப முக்கியம். ஒரு சில பின்நவீனத்துவ வாதிகள், அதை நுகர்வு முதலாளித்துவம் தருவதாய் வாதிட்டார்கள். ஒரு சில பின்நவீனத்துவ வாதிகள், அது முன்-நவீன சமூகத்தில் கிடைப்பதாய் நினைத்தனர். சோசலிச சமூகம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் அளிப்பது எனக்கருதி அதை அவர்கள் நிராகரித்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு எந்த மாற்று திட்டத்தையோ அல்லது கோட்பாட்டையோ தரவில்லை. வெறுமனே விமர்சனம் மட்டும் செய்து கொண்டிருப்பது, சீக்கிரம் அலுப்பை மட்டும்தான் தெரியும். ஒழுங்கின்மைக்கு ஆதரவாய் இருப்பதாய் தெரிவித்துக் கொண்டு, எந்தக் கோட்பாடும் தெரிவிக்கா முடியாமல் இருப்பதே, பின்நவீனதுவத்தின் போதாமை; மேலும் அதுவே அதன் மர்மமுடிச்சு..%d bloggers like this: